புதிய சட்ட மூலம் நிறைவேற்றப்பட்ட பின்னரே மாகாண சபை தேர்தல் – உதய கம்மன்பில

மாகாணசபை தொடர்பான புதிய சட்ட மூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர் தேர்தல் நடத்தப்படும். அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலம் குறித்து அமைச்சர்களால் வேறுபட்ட நிலைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளமையால், கட்சி தலைவர் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்தாலோசித்து இறுதி தீர்மானத்தை எடுக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று செவ்வாய்கிழமை இணையவழியூடாக நடைபெற்ற போது இதனைத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறுகையில் ,

மாகாணசபைத் தேர்தல் முறைமையில் திருத்தங்களை முன்னெடுப்பதற்கான சட்டமூலம் நேற்று (திங்கட்கிழமை) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. இது வரையில் மாகாணத்தில் அதிக வாக்குகளைப் பெற்றுக் கொண்ட கட்சிக்கு இரு போனஸ் ஆசனங்கள் வழங்கப்படும். எனினும் ஸ்திரமான மாகாணசபைகளை உருவாக்குவதை நோக்காகக் கொண்டு , ஒரு மாகாணத்தில் மாவட்டமொன்றுக்கு வழங்கப்படும் போனஸ் ஆசனங்களை இரண்டாக அதிகரிப்பதற்கு புதிய சட்டமூலத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதற்மைய 3 மாவட்டங்கள் காணப்படுகின்ற மாகாணங்களுக்கு , உதாரணமாக மேல் மாகாணத்தை எடுத்துக் கொண்டால் இரு போனஸ் ஆசனங்களுக்கு பதிலாக 6 ஆசனங்கள் கிடைக்கப் பெறும். அதே போன்று இரு மாவட்டங்களைக் கொண்ட வடமத்திய மாகாணத்திற்கு இரு போனஸ் ஆசனங்களுக்கு பதிலாக 4 ஆசனங்கள் கிடைக்கப் பெறும். இதன் மூலம் ஸ்திரமானதொரு மாகாணசபையை உருவாக்குவதற்கான வாய்ப்பு கிடைக்கப் பெறும்.

அதேபோன்று ஸ்திரமான மாகாணசபையை ஸ்தாபித்தல் , பிரதேசத்திற்கு பொறுப்பு கூறக்கூடிய உறுப்பினர்களை நியமித்தல் ஆகிய இரு காரணிகளையும் அடிப்படையாகக் கொண்டு , 70 வீதம் தொகுதிவாரி முறைமையினடிப்படையிலும் 30 வீதம் விகிதாசார முறைமையினடிப்படையிலும் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கு குறித்த சட்ட மூலத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அத்தோடு ஒரு தொகுதியில் ஒரு கட்சியிலிருந்து 3 வேட்பாளர்களை நியமிப்பதற்கும் இந்த சட்ட மூலத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த காரணி தொடர்பில் அமைச்சர்கள் மத்தியில் வெவ்வேறு நிலைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன. இவ்வாறு வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டமையால் இது தொடர்பில் கட்சி தலைவர் கூட்டத்தில் கலந்தாலோசித்து இறுதி தீர்மானம் எடுப்பதற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவால் தீர்மானிக்கப்பட்டது.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படும் பல கட்சிகள் அமைச்சரவையை பிரதிநிதித்துவப்படுத்துபவையல்ல. எனவே தான் கட்சி தலைவர் கூட்டத்தில் இது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுப்பதற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கினார் என்றார்.

Posted in Uncategorized

நுண்கடன் நிதி நிறுவனங்களுக்கு எதிர்ப்பு; நாட்டின் சில பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு

நுண்கடன் நிதி நிறுவனங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாட்டின் சில பகுதிகளில் இன்று ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

முல்லைத்தீவு , புதுக்குடியிருப்பில் நுண்கடன் நிதி நிறுவனங்களைக் கண்டித்து கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வட மாகாண மக்கள் திட்ட ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி முன்பாக ஆரம்பமான கவனயீர்ப்புப் பேரணி, புதுக்குடியிருப்பு நகரினை சென்றடைந்ததுடன்,
நுண்கடன் தொடர்பிலான விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களும் பகிரப்பட்டன.

இதேவேளை, நுண்கடன்களால் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் நுண்கடனுக்கு எதிராக கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

முழங்காவில் சந்தியில் இன்று காலை ஆரம்பமான போராட்டம் ஒரு மணித்தியாலம் வரை முன்னெடுக்கப்பட்டதுடன், முழங்காவில் பாடசாலை வரை பேரணியொன்றும் இடம்பெற்றது.

நுண்கடனால் அல்லலுறும் பெண்களின் கடன்களை அரசே தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

நாடளாவிய ரீதியில் நுண்கடன் நெருக்கடிக்குள்ளாகியுள்ள சுமார் 28 இலட்சம் பெண்களை அதிலிருந்து மீட்க வேண்டுமென இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

மட்டக்களப்பு , செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கித்துள் பகுதியிலும் நுண்கடனுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பில் அரசசார்பற்ற நுண்கடன் நிதி நிறுவனங்கள் அதிக வட்டியுடன் வழங்கும் நுண்கடன் திட்டங்களால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும் இதன்போது கோஷம் எழுப்பப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்களையே அச்சுறுத்தும் அளவிற்கு இந்த மண் மாபியாக்கள் செயற்படுகின்றன -ரெலோ செயலாளர் நாயகம் கோ.கருணாகரம்

சட்டவிரோத மண் அகழ்வு செயற்பாடுகள் எதிர்காலத்திலும் தொடர்ந்து நடக்குமாக இருந்தால் எமது மாவட்டம் நிர்க்கத்தியான நிலைக்குள் தள்ளப்படும் என தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். கோவிந்தன் கருணாகரம் ஜனா, நாடாளுமன்ற உறுப்பினர்களையே அச்சுறுத்தும் வகையில் மண் மாபியாக்கள் நடந்து கொள்கின்றார்கள் என்று தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத மண் அகழ்வு தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாங்கள் வேப்பவெட்டுவான் பிரதேசத்தில் மீண்டும் இராஜாங்க அமைச்சருடன் களவிஜயமொன்றை மேற்கொண்டிருந்தோம். அன்று குளம் போல் காட்சியளித்த பகுதி இன்று நிரப்பப்பட்டிருக்கின்றது.

அதற்கு மண் எங்கிருந்து வந்ததென்றால் அதனைச் சொல்ல முடியாமல் இருக்கின்றார்கள். பாராளுமன்ற உறுப்பினர்களையே அச்சுறத்தும் முகமாக மீண்டும் மீண்டும் இந்த மண் மாபியாக்கள் நடந்து கொண்டிருக்கின்றார்கள்.

மேற்படி பிரதேசங்களில் தான் கொடுத்த அனுமதியை மீறி மண் அகழ்வு சட்டத்திற்கு விரோதமாக இடம்பெற்றிருப்பதாக புவிச்சரிதவியல் திணக்கள அதிகாரி கூடச் சொல்லுகிறார். இங்கு களவிஜயம் மேற்கொண்ட எந்த அதிகாரியும் விரும்பத்தக்கதான செயலாக இச்செயல் பார்க்கப்படவில்லை.

அதுமாத்திரமல்லாமல் இந்தப் பிரசேத்து விவசாயிகள் கூட மிகவும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் இதற்கு ஒரு தீர்க்கமான முடிவு இராஜாங்க அமைச்சரின் தலைமையிலே எடுக்கப்படும் என்று நான் நினைக்கின்றேன்.

அத்துடன் மட்டக்களப்பிற்கு சில அமைச்சர்கள் வருகை தந்து கூட்டம் நடாத்த இருக்கின்றார்கள். அதிலும்கூட நாங்கள் இந்த விடயங்கள் தொடர்பில் பேச இருக்கின்றோம்.

எதிர்காலத்திலே இவ்வாறான வேலைகள் தொடர்ந்து நடக்குமாக இருந்தால் எமது மாவட்டம் நிர்க்கத்தியான நிலைக்குள் தள்ளப்படும் என்பதே உண்மை. எனவே இதனை அனைவரும் இணைந்து இதற்கான நிரந்தர முடிவினை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

Posted in Uncategorized

மன்னாரில் வீட்டு திட்டங்களுக்கு வழங்கப்படவேண்டிய நிலுவைப் பணத்தை வழங்குமாறு கண்டன ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது

மன்னாரில் வீட்டு திட்டங்களுக்கு வழங்கப்படவேண்டிய நிலுவைப் பணத்தை வழங்குமாறு கண்டன ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் சஜித் பிரேமதாசவினால் தேசிய வீடமைப்பு அதிகார சபை ஊடாக வழங்கப்பட்டிருந்த வீட்டு திட்டங்களுக்கு ஆரம்ப கட்ட நிதி மாத்திரம் வழங்கப்பட்டிருந்தது.

கடந்த அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நம்பி வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மக்கள் கடன்பட்டு தங்களுடைய நகைகளை அடகு வைத்தும் வீடுகளை கட்டி முடித்திருந்தார்கள்.

சில வீடுகள் கட்டி முடிக்கப்படாமல் இருக்கின்றது ஆட்சி மாற்றத்தின் பின் அந்த மக்களுக்கான மீதி பணம் வழங்கப்படவில்லை.

அதனால் நிலுவையில் உள்ள பணத்தை வழங்க கோரி பாதிக்கப்பட்ட மக்களால் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

நேற்று (30-03-21)காலை 9.30. மணி அளவில் மன்னார் நகர சபை மைதானத்தில் ஆரம்பமாகிய இந்த ஆர்ப்பாட்ட பேரணியானது மன்னார் பொது வைத்தியசாலை ஊடாக மன்னார் மாவட்டச் செயலகத்தை வந்தடைந்து.

மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவபாலன் குணபாலன் அவர்களிடம் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்களுக்கான மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கெளரவ செல்வம் அடைக்கலநாதன் மற்றும் ,தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமை குழு உறுப்பினரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கெளரவ வினோ நோகராதலிங்கம் அவர்களும் , நகரசபை பிரதேச சபை உறுப்பினர்கள், மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ, மற்றும் பணியாளர்கள் சமூக அமைப்புகள் வீட்டுத் திட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் என்று பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

Posted in Uncategorized

போர்க் குற்றவாளிகள் மீது பயணத் தடை – சர்வதேச விசாரணை! கனடாவின் பிரதான எதிர்க்கட்சி

கனடாவின் உத்தியோகபூர்வ எதிர் கட்சியான கன்சவேட்டிவ் கட்சி சிறீலங்காவில் பாரிய மனித உரிமைக் குற்றங்களுக்கு காரணமானவர்கள் மீதான பயணத்தடையை விதிக்குமாறு கனேடிய லிபரல் அரசைக் கோரியுள்ளது.

கனடாவில் நடைமுறையில் உள்ள மக்கன்சி சட்டவிதிகளின் பிரகாரம் அதனை உடன் செய்யுமாறு வலியுறுத்துகின்றது.

இச்சட்டவிதிகள் சம்மந்தப்பட்டவர்கள் மீதான மேலும் பல நடவடிக்கைகளுக்கும் வலிகோலும் என்பதுவும், இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.

கன்சவேட்டிவ் கட்சியின் வெளிவிவகாரங்களுக்கான நிழல் அமைச்சர் மைக்கல் சொங்கும்,சர்வதேச அபிவிருத்தி மற்றும் மனித உரிமைகளுக்கான நிழல் அமைச்சர் கார்னட் ஜீனியசும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த அறிக்கையில்,

தாம் இனப்படுகொலை குறித்த சுயாதீன சர்வதேச விசாரணையை தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதை நினைவு கூர்ந்துள்ள அவர்கள் ரூடோ தலைமையிலான லிபரல் அரசு அது குறித்து அமைதி காப்பது குறித்து தமது விசனத்தையும் வெளியிட்டுள்ளனர்.

2019 இல் இறுதியாக நடைபெற்ற கனேடிய பொதுத்தேர்தலுக்கு முன்னர் கனேடியப் பாராளுமன்றத்தில் ஐக்கிய நாடுகள் சபை இலங்கையில் நடைபெற்றதாகச் சொல்லப்படும் தமிழர் இனப்படுகொலை குறித்து சுயாதீன சர்வதேச விசாரணையை நடாத்த வேண்டும் என ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட பாராளுமன்ற தீர்மானத்தை சுட்டிக்காட்டியுள்ள எதிர்க்கட்சி, அது குறித்து மேலதிக நடவடிக்கைகள் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

சமீபத்தில் ஜெனீவாவில் சிறீலங்கா குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கடந்த காலங்களை விட முன்னேற்றகரமாக அமைந்தாலும் இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகள் மீதான சுயாதீன சர்வதேச விசாரணையையோ அல்லது ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பல விடயங்களையோ அது உள்ளடக்கவில்லை எனவும் கனேடிய எதிர்கட்சி கரிசனை வெளியிட்டுள்ளது.

சிறீலங்கா அரசாங்கம் உள்நாட்டில் பொறுப்புக்கூறல் விடயத்தில் எவ்வித முன்னெடுப்புக்களை செய்வதற்கான முறைமைகளையோ, விருப்பையோ கொண்டிருக்கவில்லை என்ற ஆணையாளரின் கூற்றை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில் , கோரிக்கைகளுக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கைகளை கனேடிய அரசு முன்னெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

சிறீலங்கா அரசு புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மற்றும் தமிழர்கள் மீது சமீபத்தில் விதித்துள்ள தடைகள் குறித்து தமது ஆழ்ந்த கரிசனையை வெளியிட்டுள்ள அறிக்கை மனித உரிமையை முன்னேற்ற தொழிற்படும் கனேடிய தமிழர் அமைப்புக்களின் நியாயபூர்வமான விமர்சனங்களை தடைகள் மூலம் எதிர்கொள்வது முறையல்ல எனவும் கடிந்துள்ளது.

சிறீலங்காவில் தற்போது நிலவும் பல நிலைமைகளை தனது அறிக்கையில் குறிப்பிட்டு அவை குறித்து தனது ஆழ்ந்த கரிசனையையும் கனேடிய எதிர்கட்சி வெளியிட்டுள்ளது.

அதில் சமீபத்தில் இடித்தொழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுத்தூபி விடயத்தையும் நினைவு கூர்ந்து, போரில் கொல்லப்பட்டவர்களுக்கான பொதுமக்கள் நினைவு ஒன்றுகூடல்கள் தடுக்கப்படுவது குறித்த கரிசனையையும் வெளியிட்டுள்ளது.

ஐ.நா தீர்மானத்தை கடந்து கனடா உட்பட சர்வதேச சமூகம் தமது அடுத்த கட்ட நடிவடிக்கைகளை முன்னெடுப்பது காலத்தின் கட்டாயம் என்பதை வலியுறுத்தும் வகையிலான முதல்க் குரலாக கனேடிய எதிர்கட்சியான கன்சவேட்டிவ் கட்சியின் அறிக்கையை கொள்ளலாம் என்கின்றனர் ஈழத்தமிழர் நலனில் அக்கறை கொண்டவர்கள்.

Posted in Uncategorized

ஐ.நா தீர்மானமும் போக்கிரித்தன கணக்கு வழிகொண்ட அரசாங்கத்தின் போக்கும் – பி.மாணிக்கவாசகம்

பொறுப்பு கூறும் விடயத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46-1 பிரேணை தமிழ் மக்களை ஏமாற்றியிருப்பதாகக் கூறப்படுகின்ற அதேவேளை, அரசாங்கமும் அதனை தேவையற்ற ஒன்று என நிராகரித்திருக்கின்றது.

மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களுக்குப் பொறுப்புகூற வேண்டும். இறுதிக்கட்ட யுத்தத்தின்போது தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உறுதியான கோரிக்கை.

தமிழ் மக்களின் நீதிக்கான இந்த கோரிக்கை – ஏக்கம் – 12 வருடங்களாக தொடர்கின்றது. சிறீலங்காவைப் பொறுப்புகூறச் செய்வதற்காக ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இதுவரை 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. 2012 மார்ச் மாதம் 22 ஆம் திகதிய 19-2 ஆம் இலக்கம் கொண்ட தீர்மானம், 2013 மார்ச் மாதம் 21 ஆம் திகதிய 22-1 ஆம் இலக்கத்தைக் கொண்ட தீர்மானம், 2014 மார்ச் மாதம் 27 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட 25-1 ஆம் இலக்கத் தீர்மானம், 2015 ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி கொண்டு வரப்பட்டட 30-1 ஆம் இலக்கத் தீர்மானம், 2017 மார்ச் மாதம் 23 ஆம் திகதி கொண்டு வரப்பட்ட 34-1 ஆம் இலக்கத் தீர்மானம், அதன் பின்னர் 2019 மார்ச் 21 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட 40-1 ஆம் இலக்கத் தீர்மானம் ஆகிய இந்த 6 தீர்மானங்களினாலும் சிறீலங்காவைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

ஏழாவதாக வந்துள்ள 46-1 பிரேரணை முன்னையவற்றைப் போலவே பொறுப்பு கூறுகின்ற கடப்பாட்டை அரசாங்கத்திடமே விட்டுள்ளது. அதனை நிறைவேற்றுவதற்கு வழமைபோலவே கால அவகாசமும் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த இரண்டு அம்சங்களுமே தமிழ்த்தரப்பினருடைய அதிருப்திக்குக் காரணமானவையாக இருக்கின்றன.

அதேவேளை தமிழ்த்தரப்பினால் கோரப்பட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை அல்லது சர்வதேச தீர்ப்பாயம் என்ற விசாரணை பொறி முறையின் கீழ் அரசாங்கம் பொறுப்புக் கூறலை நிறைவேற்ற வேண்டும். அதன் ஊடாக போர்க் குற்றங்களை இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். தங்களுக்கு நியாயமும் நீதியும் வழங்கப்பட வேண்டும் என்பதும் தமிழ்த்தரப்பின் முக்கிய கோரிக்கையாகும்.

ஐ.நாவின் பொறுப்பில் இருந்து அரசாங்கத்தின் பொறுப்பு கூறுகின்ற கடப்பாடு சர்வதேச பொது நிலையில் – பொதுப் பொறிமுறைக்கு மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை பிரேரணையில் உள்ளடக்கப்படவில்லை.

இது தமிழ்த்தரப்பை மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி இருக்கின்றது. அதனால் தமிழ்தரப்பில் சிலர் இந்தப் பிரேரணையை ஏற்க முடியாது என்று நிராகரித்திருப்பதைக் காண முடிகின்றது. அது மட்டுமல்லாமல் ஐ.நா மனித உரிமைப் பேரவையின் தன்னியல்பு சார்ந்த பிரேரணையின் உள்ளடக்கம் குறித்து தமது கண்டனங்களையும் கடுந்தொனியில் வெளியிட்டிருப்பதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

அரசாங்கமும் இந்தப் பிரேரணை குறித்து கடும் வார்த்தைப் பிரயோகத்தில் தனது அதிருப்தியையும் சீற்றத்தையும் வெளிப்படுத்தி இருக்கின்றது. மனித உரிமைகள் எதுவுமே மீறப்பட வில்லை. போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை. மனிதாபிமான இராணுவ நடவடிக்கையே மேற்கொள்ளப்பட்டது. படைத்தரப்பின் இந்த நடவடிக்கைகளில் விடுதலைப்புலிகளே கொல்லப்பட்டனர். பொதுமக்கள் எவரையும் இராணுவத்தினர் கொல்லவில்லை என்று அரசாங்கம் மறுத்துரைத்திருக்கின்றது. அத்துடன் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் வர முயன்ற பொது மக்களை விடுதலைப்புலிகளே சுட்டுக்கொன்றார்கள் என்றும் அரசு குற்றம் சாட்டியிருக்கின்றது.

அரசாங்கம் மனித உரிமைகளை மீறியிருக்கின்றது என குற்றம் சுமத்துபவர்கள் ஏன் விடுதலப்புலிகளின் அத்துமீறல் நடவடிக்கைகள் குறித்து பேசவில்லை? அது விடயத்தில் அவர்கள் ஏன் மௌனம் சாதித்திருக்கின்றார்கள்? என்று எரிச்சலுடன் அரசு கேள்விகளை எழுப்பி இருக்கின்றது.

“சர்வதேச விசாரணைகளுக்கு இடமில்லை. உள்ளகப் பொறிமுறையின் ஊடாகவே விசாரணைகளை மேற்கொள்வோம். விடுதலைப்புலிகளின் பயங்கரவாதப் பிடியில் இருந்து மூன்று லட்சம் பொதுமக்களை மனிதாபிமான ரீதியில் பாதுகாத்து உயிர்வாழச் செய்த இராணுவத்தின் சேவையை மறந்துவிடக் கூடாது” என அரசு கூறியிருக்கின்றது.

“இராணுவ ரீதியாக விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதை சிலர் விரும்பவில்லை. அந்த விருப்பமின்னையின் வெளிப்பாடே 2012, 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் மனித உரிமைப் பேரவையின் பிரேரணைகளாக வெளி வந்திருந்தன” என சுட்டிக்காட்டியுள்ள சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, “ரணில் – மைத்திரிபால கூட்டு அரசாங்கத்தினால் இணை அனுசரணை வழங்கப்பட்ட 2015 ஆம் ஆண்டு பிரேரணையில் இருந்து நாங்கள் விலகிவிட்டோம்” என கூறியுள்ளார்.

“அந்தப் பிரேரணை நாட்டின் இறையாண்மைக்கு முரணானது. நல்லிணக்கத்திற்கு விரோதமானது. அரசியல் அமைப்புக்கு மாறானது. அது பல்வேறு நாடுகளிடமிருந்து சிறீலங்காவை துருவப்படுத்தும் செயற்பாட்டைக் கொண்டது. நாட்டில் மோசமான விளைவுகளை ஏற்படுத்த வல்லது. இராணுவத்துக்கு எதிரான நகர்வுகளை முன்னெடுக்கக் கூடியது. சிறீலங்காவின் நீதிப்பொறிமுறை சுயாதீனமானது. அதில் தலையிடவல்ல எந்தவொரு வெளிநாட்டு நீதிப்பொறிமுறையையும் அனுமதிக்க முடியாது” என்ற காரணங்களுக்காகவே அந்தப் பிரேரணையை கோத்தாபாய அரசு அந்தப் பிரேரணையின் இணை அனுசரணையில் இருந்து விலகியதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன விளக்கமளித்துள்ளார்.

ஐநா மனித உரிமைப் பேரவையின் பிரேரணைக்கான இணை அனுசரணையில் இருந்து விலகியமைக்காக அவர் வெளியிட்டுள்ள காரணங்கள் உப்புச்சப்பற்றவையாகவே காணப்படுகின்றன. உள்ளக நீதிப்பொறிமுறையின் ஊடாக சர்வதேசமும், தமிழ் மக்களும் நம்பிக்கை கொள்ளத்தக்க வகையிலான விசாரணைகளை நடத்துவதற்கு அரசாங்கம் ஒருபோதும் தயாரில்லை என்பதையே இந்தக் காரணங்கள் துல்லியமாக வெளிப்படுத்தி இருக்கின்றன.

தற்போது ஐநா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள 46-1 பிரேரணைக்கு 22 நாடுகள் ஆதரவளித்திருக்கின்றன. 11 நாடுகள் எதிர்த்திருக்கின்றன. இது பிரேரணைக்குக் கிடைத்துள்ள பெரும்பான்மை ஆதரவு என்பதை வெளிவிவகார அமைச்சர் என்ற ரீதியில் தினேஷ் குணவர்தன நிராகரித்திருக்கின்றார்.

பேரவையின் மொத்த உறுப்பினர்களாகிய 47 நாடுகளில் பிரேரணைக்கு ஆதரவாகவும் எதிராகவும் வாக்களித்த நாடுகளைவிட 14 நாடுகள் நடுநிலை வகித்திருந்தன. இவ்வாறு வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் விலகியிருந்த நாடுகளும் சிறீலங்காவிற்கு ஆதரவளித்திருப்பதாகவே தினேஷ் குணவர்தன சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

“ஒட்டுமொத்தமாக இந்தப் பிரேரணைக்கு பெரும்பான்மை ஆதரவில்லை” என்று அவர் அறதியிட்டுக் கூறியிருக்கின்றார். அவருடைய இந்தப் பெரும்பான்மை பற்றிய கணக்கு நாட்டு மக்களை ஏளனச் சிரிப்புக்கு உள்ளாக்கி இருக்கின்றது.

“இந்தப் பிரேரணை பக்கச்சார்பானது. இதன் பின்னணியில் அரசியல் நகர்வுகள் இருக்கின்றன. ஆகவே நாங்கள் இந்தப் பிரேரணையை முற்றாக நிராகரிக்கின்றோம்” என்று அவர் அறுதியிட்டுக் கூறியுள்ளார்.

உண்மையில் இந்தப் பிரேரணையின்மூலம் சிறீலங்கா அரசாங்கத்திற்கு நேர்மையான சர்வதேச தரத்துக்கு அமைவான விசாரணைகளை நடத்தி அதன் ஊடாகத் தனது பொறுப்பு கூறுகின்ற கடப்பாட்டை நிறைவேற்றிக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தை ஐ.நா மனித உரிமைப் பேரவை வழங்கி இருக்கின்றது.

இந்தச் சந்தர்ப்பத்தை அரசு தவறவிடுமேயானால், பொறுப்பு கூறலுக்கான விசாரணைகளும், போர்க்குற்றங்களுக்கான நீதி விசாரணைகளும் சிறீலங்காவிடமிருந்து கைநழுவிப் போய்விடும் என்ற இந்தப் பிரேரணையின் உட்கிடக்கையை – யதார்த்தத்தை அரசு உணர மறுத்திருக்கின்றது. போக்கிரித்தனமான தனது கணக்கு வழியில் இந்தப் பிரேரணைக்குப் பெரும்பான்மை ஆதரவு கிட்டவில்லை எனக் கூறியுள்ள தினேஷ் குணவர்தனவுக்கு வெளிவிவகார அமைச்சர் என்ற ரீதியில் நாட்டுக்கு ஏற்படவுள்ள ஆபத்தான நிலைமைகளை உணர முடியாமல் போயிருப்பதில் வியப்பில்லை.

போர்க்குற்றச் செயற்பாடுகள், மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான ஆவணங்களையும், ஆதாரங்களையும் திரட்டி, பாதுகாப்பாகக் களஞ்சியப்படுத்த வேண்டும் என்பது இந்தப் பிரேரணையின் மிக முக்கியமான உள்ளடக்க அம்சமாகும். இந்தப் பொறுப்பை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் பொறுப்பேற்றுச் செயற்படுத்த வேண்டும் எனத் தீர்மானித்து, அதற்கான ஆளணி மற்றும் இதர செலவுகளுக்கான நிதி ஒதுக்கீடும் வசதிகளும் செய்யப்பட வேண்டும் என இந்தத் தீர்மானம் கூறியிருக்கின்றது.

இவ்வாறு உரிமை மீறல்கள் போர்க்குற்றச் செயற்பாடுகள் தொடர்பிலான ஆவணங்களை ஐ.நா மன்றத்தின் பிரதான பிரிவுப் பொறிமுறையின் ஊடாகத் திரட்டி பாதுகாத்தல் என்பது சிறீலங்கா அரசாங்கத்தின் கழுத்தைச் சுற்றிய பாம்பாகும்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினால் திரட்டிப் பாதுகாக்கப்படுகின்ற ஆதாரங்கள், ஆவணங்கள் என்பவற்றை சிறீலங்காவிற்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுக்களை அல்லது மனித உரிமை மீறல்களை முன்வைத்து, பேரவையின் எந்தவொரு உறுப்பு நாடும் வழக்குத் தாக்கல் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் பிரேரணையில் கூறப்பட்டிருக்கின்றது.

இது உடனடியாகவோ அல்லது காலம் கடந்த நிலையிலோ சிறீலங்கா அரசின் தலைமீது தொங்கிக் கொண்டிருக்கின்ற கூரிய கத்தியாகவே அமையும். அந்தக் கத்தியை எந்த வேளையிலும் எத்தகையதொரு தருணத்திலும் மனித உரிமைகள் மீது பற்றுகொண்டுள்ள எந்த நாடும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது இந்தப் பிரேரணையின் அடிநாதமாகும்.

சுருக்கமாகக் கூறுவதானால், சிறீலங்கா அரசு உள்ளக விசாரணைகளையோ, கலப்புப் பொறிமுறை சார்ந்த விசாரணைகளையோ அல்லது ஐ.நாவின் உதவியுடனான சர்வதேச விசாரணைகளையோ – ஏதேனும் விசாரணைகளின் மூலம் பொறுப்பு கூறலுக்கான தனது கடப்பாட்டை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். இல்லையேல் விசாரணைப் பொறிமுறையும் விசாரணைகளை நடத்துகின்ற பொறுப்பும் அரசாங்கத்தின் கைகளில் இருந்து சர்வதேச வெளியரங்கில் கைமாறிவிடும்.

அதன் பின்னர் எந்த விசாரணைகளையும் சிறீலங்கா அரசினால் நடத்த முடியாத நிலைமை உருவாகிவிடும். சர்வதேச அரங்கில் பேரவையின் எந்தவோர் உறுப்பு நாடும் தான் விரும்பிய வகையில் தனது உள்ளக விசாரணைகளையோ அல்லது சர்வதேச விசாரணைகளையோ நடத்துவதற்கு அது வழிவகுத்துவிடும்.

இந்த விடயத்தைப் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பிலான தமிழ்த்தரப்பு சரியாகப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அத்தகைய புரிதலின் அடிப்படையில் உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றச் செயற்பாடுகளில் பாதிக்கப்பட்டவர்களை சரியாக இனம் கண்டு, அவர்களை சாட்சியங்களாகத் தாயர்ப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினால் சேகரிக்கப்படுகின்ற ஆதாரங்களைப் பயன்டுத்த வல்ல நாடுகளைக் கண்டறிந்து அவற்றின் ஊடாக உரிமை மீறல்களுக்கு எதிராக வழக்காடுவதற்குத் தூண்ட வேண்டும்.

எனவே 46-1 பிரேரணை தொடர்பில், முரண்பாடானதும், பல்வேறு வகைப்பட்டதாகவும் கிளர்ந்து எழுந்துள்ள கருத்துக்கள் எதிர்வினைகளுக்கு மத்தியில் சிறீலங்காவின் மனித உரிமை மீறல்களினாலும் போர்க்குற்றச் செயல்களினாலும் பாதிக்கப்பட்ட தரப்பாகிய தமிழ்த்தரப்பின் அரசியல் கட்சிகளும் பொது அமைப்புக்களும் சமூக அமைப்புக்களும் இந்தப் பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள சாதகமான அம்சங்களைத் தகுந்த முறையில் பயன்படுத்தி, தமது நீதிக்கான ஏக்கத்தைப் போக்கிக் கொள்ள முன்வர வேண்டும்.

மாகாண சபை அதிகாரங்களை குறைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்குவது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வழங்கிய யோசனை

மாகாண சபைகளின் அதிகாரங்களை குறைத்து அவ்வதிகாரங்களை உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்குவது தொடர்பில் புதிய அரசியலமைப்பில் விசேட பொறிமுறை வகுக்கப்பட வேண்டும்.

சோல்பரி அரசியமைப்பில் சிறுபான்மையின மக்களுக்கு காப்பீடாக அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாம் சபையான செனட் சபையை உத்தேச புதிய அரசியமைப்பில் மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், தொழில் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

உத்தேச அரசியலமைப்பு தொடர்பில் சுதந்திர கட்சியின் யோசனைகளை மகாநாயக்க தேரர்களுக்கு நேற்று கையளித்ததன் பின்னர் கண்டியில் இடம்பெற்ற சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஒரு நாடு – ஒரு சட்டம்

பல்லின சமூகம் வாழும் நாட்டில் பல பிரச்சினைகள் காணப்படுவது இயல்பானதொன்றாகும். ஒரு நாடு- ஒர சட்டம் என்ற கொள்கையினை அனைத்து இன மக்களும் எவ்வித வேறுப்பாடுமின்றி பின்பற்ற வேண்டும்.

சட்டத்தின் முன் எத்தரப்பினருக்கும் சலுகை வழங்க கூடாது. இனத்தை அடிப்படையாக கொண்டு அரச வரப்பிரசாதங்கள் வழங்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.

பொது சட்டத்தை அனைத்து இன மக்களும் மதித்து ஏற்றுக்கொள்ளும் சூழலை புதிய அரசிலமைப்பின் ஊடாக ஏற்படுத்த வேண்டும்.

சட்டம் சிறந்த முறையில் தெளிவானதாக காணப்பட வேண்டும். இவ்விடயம் தொடர்பில் ஆராய நீதிமன்ற கட்டமைப்பிற்குள் விசேட பொறிமுறை வகுக்கப்பட வேண்டும்.

செனட் சபை முறைமை

மாகாண சபை முறைமையின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு உள்ளூராட்சி மன்றங்களுக்கு அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும்.

புதிய அரசியலமைப்பில் செனட் சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட வேண்டும். பல அடிப்படை பிரச்சினைகளுக்கு செனட் சபை ஊடாக தீர்வை பெற்றுக் கொள்ள முடியும்.

சோல்பரி அரசியலமைப்பில் சிறுபான்மையின மக்களின் நல காப்பீடாக பாராளுமன்றின் இரண்டாம் மன்றமாக செனட் சபை அறிமுகப்படுத்தப்பட்டது.

1972 ஆம் ஆண்டு முதலாம் குடியரசு யாப்பில் இம்மன்றம் நீக்கப்பட்டது. ஆகவே மீண்டும் புதிய அரசியலமைப்பில் செனட் சபை முறைமையினை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற யோசகையை முன்வைத்துள்ளோம்.

தேர்தல் முறைமை

தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறைமை அரசியல் கட்சிகளுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் காணப்படுகிறது.

விருப்பு வாக்கு முறைமை அரசிய்ல களத்தில் முரண்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது. ஆகவே நாட்டுக்கு பொருந்தும் வகையிலான தேர்தல் முறைமை அறிமுகம் செய்யப்பட வேண்டும்.

70 வீதம் தொகுதி ரீதியிலான முறைமையும், 30 வீதம் விகிதாசார முறைமையும் புதிய தேர்தல் முறைமை கொண்டிருக்க வேண்டும். தேர்தல் முறைமையில் முழுமையாக மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பதை அரனத்து அரசியல் கட்சிகளும் ஏற்றுக் கொண்டுள்ளன.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த்தில் தேர்தல் முறைமையில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என வாக்குறுதி வழங்கியே அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டடது.

தேர்தல் முறைமை குறித்து வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. ஆகையால் இம்முறையும் ஏமாறா தயாரில்லை. புதிய அரசியலமைப்பில் தேர்தல் முறைமை குறித்து அதிக அவதானம் செலுத்தப்பட வேண்டும்.

Posted in Uncategorized

தேவையேற்பட்டால் இலங்கைக்குள் களமிறங்கும் இந்திய இராணுவம்! – கேர்ணல் ஹரிஹரன் விசேட செவ்வி

இலங்கைக்கு பாதிப்பான சூழ்நிலைகள் ஏற்பட்டால், தேவையேற்பட்டால் இலங்கைக்குள் இந்திய இராணுவம் களமிறங்கும் என இந்தியாவில் இருக்கக்கூடிய மூத்த இராணுவ கேர்ணல் தர அதிகாரி, அதனோடு பாதுகாப்புத் துறை தெற்காசிய விவகாரங்கள் தொடர்பில் மிகவும் ஆழமான பார்வையோடு இலங்கை விடயங்களை மிகவும் கவனமாக அவதானித்துக் கொண்டிருக்க கூடிய மூத்த இராணுவ அதிகாரி ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

லங்காசிறி செய்தி செவைக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது இந்தியாவின் இராணுவ பிரசன்னம் அல்லது இராணுவ ரீதியான ஒரு நிலைப்பாடு இலங்கைக்குள் ஆழமாக இருக்கிறது. அதனால், எந்த நாடு அதற்குள் நுழைந்தாலும் எந்த பாதிப்பும் இல்லை என்று எடுத்துக் கொள்ளலாமா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,

அப்படியில்லை பாதிப்பு இருக்கும். ஆனால் அந்த பாதிப்பை இந்தியா உடனடியாக பதிலடி கொடுத்து தகர்க்க முடியும். இந்தியாவிடம் அத்தகைய வலிமை உள்ளது.

அதனால் தான் இலங்கையை சீனா எவ்வளவு பயமுறுத்தினாலும் இந்தியா அதன் பின்னணியில் எப்போதும் இருக்கும். ஏனெனில் இலங்கையை சீனா தாக்கினால் அது இந்தியாவிற்கு பேராபத்து.

அதேபோல் இந்தியாவின் மீது தாக்குதல் நடந்தால் இலங்கையின் மீதும் ஓரளவு பாதிப்பு இருக்கும் என கூறியுள்ளார்.

அதேவேளை, ஒரு போர் கால சூழ்நிலை அல்லது ஒரு பேராபத்து சூழ்நிலை போன்ற இலங்கைக்கு பாதிப்பான சூழ்நிலைகள் ஏற்பட்டால், இலங்கை கேட்டுக் கொண்டால் கட்டாயம் இந்திய இராணுவத்தை இந்தியா இலங்கைக்கு அனுப்பும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நபர்களை தாக்குவதற்கு பொலிஸாருக்கு அனுமதியில்லை : அவ்வாறு செயற்பட்டால் சட்ட நடவடிக்கை – பொலிஸ் பேச்சாளர்

பன்னிப்பிட்டிய பகுதியில் லொறியில் மோதுண்டு காயமடைந்த மஹரகம பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரியான உபபொலிஸ் பரிசோதகர் மைத்திரிபால, கலுபோவில வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

எனினும் , லொறியின் சாரதியை தாக்கியமை சட்டவிரோதமானது. அதனால் , சம்பந்தப்பட்ட பொலிஸ் போக்குவரத்து பிரிவின் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவரது பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொட்பில் அவர் மேலும் கூறியாவது ,

பன்னிபிட்டிய பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த , போக்குவரத்து பொலிஸ் பிரிவின் உத்தியோகத்தர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை லொறி சாரதியொருவரை தாக்கும் காட்சி இணையத்தளத்தில் வெளியாகியிருந்தது.

இது தொடர்பில் கவனம் செலுத்திய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரால் சரத்வீரசேகர, இது தொடர்பில் உடனே விசாரணைகளை முன்னெடுத்த , சம்பந்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கரமரத்னவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்நிலையில் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் , விசேட பொலிஸ் குழுவொன்று சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வந்தனர். அதற்கமைய சந்தேக நபரான பொலிஸ் உத்தியேகத்தர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவரது பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவத்தின் போது , கடமையில் ஈடுபட்டிருந்த மஹரகம போக்குவரத்து பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரியான உபபொலிஸ் பரிசோதகரை குறித்த லொறி மோதியுள்ளதுடன் , இதன்போது படுகாயமடைந்த அவர் தற்போது கலுபோவிலை வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

லொறியின் சாரதியின் கவனக்குறைப்பாடின் காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளது. எனினும் , சம்பந்தப்பட்ட சாரதியை தாக்கியமை சட்டத்திற்கு புறம்பான செயற்பாடாகும்.

குற்றச் செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களை தாக்குவதற்கு பொலிஸாருக்கு அனுமதிவழங்கப்பட்டில்லை.

அவர் குற்றம் செய்துள்ளதாக தெரியவந்தால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளையே எடுத்திருக்க வேண்டும். அதனால் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக பொலிஸ் ஒழுங்காற்று விதிமுறைகளுக்கு கீழ் சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட பொலிஸ் உத்தியேகத்தர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவருக்கு எதிராக பொலிஸ் ஒழுங்காற்று சட்டவிதிகளுக்கமையவும் , குற்றவியல் சட்டவிதிகளுக்கு கீழும் சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

உள்ளகப் பொறிமுறை தமிழருக்கான நீதியையோ தீர்வையோ பெற்றுத் தராது!ரெலோ ஊடகப் பேச்சாளர்- குருசுவாமி சுரேந்திரன்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியாகிய தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளரும், சர்வதேச விடயங்களுக்கான பொறுப்பாளரும், தேசிய அமைப்பாளருமாகிய குருசுவாமி சுரேந்திரனுடன் ஒரு நேர்காணல்..

கேள்வி: கடந்த மனித உரிமை பேரவையில் நடந்து முடிந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பற்றிய உங்களுடைய கருத்துக்கள்.

பதில்: நடந்து முடிந்த மனித உரிமை பேரவை கூட்டத்தொடரிலே இலங்கைக்கான பொறுப்புக் கூறலை, நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிக்கு முகமாக சமர்ப்பிக்கப்பட்ட இந்த பிரேரணை இருபத்திரெண்டு நாடுகளினுடைய ஆதரவோடு வெற்றி பெற்றது. இது தமிழர்களுக்கான பரிகார நீதியை பெற்றுக் கொள்ளுவதற்கு உறுதியாக வழியமைக்கும் என்ற பாரிய நம்பிக்கை, எதிர்பார்ப்பு எம்மக்களிடம் இருந்தது. ஆனாலும் இப்பிரேரணை தன்னுடைய நோக்கத்தை அல்லது இலக்கை எட்ட தவறி உள்ளது என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு, சர்வதேச குற்றவியல் நீதி பொறிமுறை ஒன்றையும், சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்றையும் கோரியே, தமிழ் தேசிய கட்சிகள், பொது அமைப்புக்கள், சமய மத அமைப்புக்கள் எல்லோரும் ஒன்றிணைந்து தமிழ் மக்கள் சார்பிலே மனித உரிமைப் பேரவையில் உள்ள அங்கத்துவ நாடுகளுக்கும் மனித உரிமை உயர்ஸ்தானிகருக்கும் கோரிக்கையை முன்வைத்திருந்தோம். எங்களுடைய கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், மனித உரிமை உயர்ஸ்தானிகர் அவர்களுடைய அறிக்கையில், பரிந்துரைக்கப்பட்ட இந்த மேற்கூறிய விடயங்களும், இந்த பிரேரணையில் உள்வாங்கப்படாமை மிகவும் கவலை அளிக்கிறது. ஆகவே, இது தமிழ் மக்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்திருக்கும் பரிகார நீதியை பெற்றுத்தரும் ஒரு பிரேரணையாக நாங்கள் பார்க்கவில்லை.

கேள்வி – தாங்கள் அங்கம் வைக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் தலைமை வகிக்கும் திரு சம்பந்தன் அவர்களும், பாராளு மன்ற உறுப்பினர் திரு சுமந்திரன் அவர்களும், சர்வதேச விசாரணை ஒருமுறை பூடகமாக உள்ளது என்று தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், நீங்கள் இந்த நிலைப்பாட்டை எடுத்திருப்பது எதன் அடிப்படையில்.?

பதில்: சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அல்லது சர்வதேச விசாரணை பொறிமுறைக்கு செல்ல முடியாது. அதை மனித உரிமை பேரவையில் வலியுறுத்த முடியாது என்று பல தடவைகளில் அவர்கள் கூறி வந்த விடயம் தான் இது. ஐநா பாதுகாப்பு சபை இடமளிக்காது என்பது பிரதி வாதமாக இருந்தது. ஆனால் திடீரென்று இன்று அது பூடகமாக இருக்கிறது என்று சொல்வது எதன் அடிப்படையில் என்ற கேள்வி எழுகிறது. பிரேரணையில் புதிய ஆதாரங்களையும் சேகரிப்பதற்கான வசனங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அதே போன்று இதில் அனுசரணை வழங்கிய நாடுகள் உள்ளடங்கலாக அவர்களுடைய அதிகார வரம்புகளுக்கமைய அந்த நாட்டிலே இருக்கக்கூடிய நீதிமன்றங்களின் முன்னால், குற்றவாளிகள் மீது வழக்கு தாக்கல் செய்ய முடியும். என்ற ஒரு பரிந்துரை, உள்வாங்கப்பட்டிருக்கிறது. ஆனால், இது நாங்கள் கூறிய சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறையை ஒத்தது அல்ல. இதனால் பாரிய ஒரு பயனை அதாவது தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் பரிகார நீதியை, பெற்றுக்கொள்வதற்கான அமைப்பாக இருக்க முடியாது என்பதுதான் எமது நிலைப்பாடு. நாம் மட்டுமல்ல பல அரசியல் தலைவர்கள், அவதானிகள், ஆய்வாளர்கள், நாடுகள், சர்வதேச சட்ட வல்லுனர்கள் மற்றும் ஐநா மனித உரிமைக்கான உயர் ஸ்தானிகர் உட்பட இதே கருத்தை வலுயுறுத்துவதை அவதானிக்க முடியும்.

கேள்வி: சர்வதேச குற்றவியல் விசாரணை சாத்தியமில்லை என்று சில தரப்புகள் கூறி வருகிறார்கள். அதற்கான இடைவெளியும் இல்லை. ஆகவே ஏதாவது ஒரு பொறிமுறையை நிறைவேற்றுவதுதான் சரி என்ற நிலைப்பாடு இருக்கிறது, உங்களுடைய கருத்து வித்தியாசமாக இருக்கின்றதே?

பதில்: சர்வதேச குற்றவியல் விசாரணை பொறிமுறை என்பது கோர முடியாது என்ற ஒரு கருத்தை சிலர் முன்வைத்தார்கள், பின்னர் மனித உரிமை பேரவையிலே அது முடியாது என்று கூறினார்கள். இப்போது பூடகமாக உள்ளது, அல்லது அரசு நீதிவழங்காவிடின் சர்வதேச விசாரணையை கோருவோம் என்ற நிலைப்பாடை முன்வைக்கிறார்கள். இப்படி பல்வேறு பட்ட கருத்தை, காலத்திற்கு காலம் முன்வைத்து கொண்டிருக்கிறார்கள். உண்மையிலே இந்த மனித உரிமை பேரபவயிலே பொறுப்புக் கூறல் விடயம் ஐக்கிய நாடுகள் சபையினுடைய செயலாளர் நாயகம் அவர்கள் மனித உரிமை உயர்ஸ்தானிகரிடம் வழங்கிய பணிபுரையால் தான் அல்லது கோரிக்கையின் அடிப்படையில்தான் இந்த பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டு கொண்டிருக்கின்றன.

பொறுப்புக் கூறலையோ நீதிப் பொறிமுறையையோ வலியுறுத்தாத பிரேரணைகளை தொடர்ந்தும் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றுவதன் மூலம் எங்களுக்கான நீதியை பெற்றுக் கொள்ள முடியாது. இம்முறை ஐநா மனித உரிமை உயர்ஸ்தானிகரின் அறிக்கைப்படி ஐநா செயலாளர் நாயகத்திடம் நீதி மற்றும் விசாரணைப் பொறிமுறைகளை நடைமுறைப்படுத்த கையளிப்பதே எமக்கான கதவுகளை திறக்க வழிகோலும்.

கேள்வி: சர்வதேச நாடுகள் தங்களுடைய பூகோள அரசியல் நலன் சார்ந்த விடயங்களை கொண்டுதான் இதை நோக்குகிறார்கள் என்ற ஒரு கருத்து நிலவுகிறது, அப்படியாயின் எப்படி தமிழ் மக்களுக்கான நீதி பொறிமுறையை அதையும் தாண்டி பெற்று கொள்ள முடியும் எனக் கருதுகிறீர்கள்?

பதில் : மனித உரிமைப் பேரவையில் இருக்கக்கூடிய நாடுகள், தங்களுடைய பூகோள அரசியல் நலன் சார்ந்த விடயங்களையும், தமிழ் மக்களுக்கு, பரிகார நீதியைப் பெற்றுத் தருகிறோம் என்ற போர்வையில், முன்னெடுப்பது, தெள்ளத் தெளிவாக, அவதானிக்கக் கூடியதாகவேதான் இருக்கிறது. சர்வதேச, நாடுகளுடைய பூகோள நலன்களை தாண்டி இதை ஐ.நா செயலாளர் நாயகத்திடம் கையளிப்பதன் மூலம் இந்த பூகோள அரசியல் நலன்களை தாண்டி நாங்கள் நீதிப் பொறிமுறையை உருவாக்க முடியும், எம் மக்களுக்கான நீதியை பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம். ஆகவே மனித உரிமை பேரவையில் இருக்கும் வரைக்கும், இது பூகோள நலன் சார்ந்த விடயங்களை தான் முன்னெடுக்கும் என்பதில், மாற்று கருத்து இல்லை.

கேள்வி : இந்தியா, இதில் நடுநிலைமை வகித்திருப்பது எந்த நிலைப்பாட்டை எடுத்துக் காட்டுகிறது? தமிழ் மக்களுக்கு சாதகமான நிலைப்பாடுதான் என கருதலாமா?

பதில்: இந்தியா, எங்களுடைய அண்டை நாடு என்ற வகையிலும், தமிழ் மக்களின் நலன் சார்ந்த நாடு என்ற வகையிலும், எங்கள் மீது அக்கறை கொண்ட நாடு என்ற வகையிலும், எங்களுக்கான அரசியல் தீர்வு, சமாதானம், சமத்துவம், நீதி என்பவற்றில் அக்கறை கொண்டுள்ளதாகவும், இந்திய பிரதமருடைய வருகையிலும், இந்திய வெளிநாட்டு அமைச்சருடைய வருகையிலும், வெளிநாட்டு செயலாளருடைய வருகையிலும், இந்தியாவில் பல்வேறு தளங்களிலும், அவர்கள் அதை தெரிவித்து வந்திருக்கிறார்கள். ஆகவே, தமிழ் மக்கள் மனித உரிமை பேரவையிலே கொண்டுவரப்பட்ட பிரேரணையால் எங்களுக்கு நீதி ஒருவகையிலும் கிட்டாதென்று தெரிந்திருந்தாலும் கூட இந்தியா எங்களுடைய ஆதரவு சக்தியாக இருக்கும் என்று இலங்கை அரசுக்கும் சர்வதேசத்துக்கும் உணர்த்த பெரிய நம்பிக்கையோடு நாங்கள் காத்திருந்தோம். ஆகவே, இந்த நடுநிலைமை போக்கானது, தமிழ் மக்களை பொறுத்தளவிலே, பாரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த நடுநிலைமைப்போக்கு எங்களுக்கு ஒரு சாதகமானதாக நாங்கள் கருத முடியாது. ஆனால் இந்தியாவின் ஆதரவு எம்மக்கள் விடயத்தில் அவசியமானது.

கேள்வி: ஆனால், பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின் ஊடாக, ஒரு அரசியல் தீர்வு, தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டும் அல்லது மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று, இந்தியாவின் வலியுறுத்தலால்தான், இதில் உள்வாங்கப்பட்டு இருக்கிறது என்ற ஒரு கருத்து நிலவுகிறது. ஆகவே, இந்தியா அக்கறை கொண்டுள்ளது தானே?

பதில்:அப்படியாயின் ஏன் பிரேரணை சார்பாக வாக்களிக்கவில்லை என்ற கேள்வியும் எழுகிறது. பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் என்பது, முப்பத்தி மூன்று வருடங்களுக்கு முன்னர், இலங்கையினுடைய அரசியல் யாப்பிலே உள்வாங்கப்பட்ட ஒரு மாகாண சபை அதிகாரப் பரவலாக்கல் முறையாகும். இதை முற்றும் முழுதாக நடைமுறைப் படுத்துவதற்கு, இந்தியாவினுடைய நேரடித் தலையீடு அல்லது நேரடி அழுத்தங்களே, இலங்கை அரசாங்கத்தை, அதை நிறைவேற்றுவதற்கு, சாதகமாக அமையும். ஆகவே, அந்த அரசியல் விடயத்தை, இந்தியா கையாள முடியாது என கொண்டு போய், நீதி பொறிமுறை, அல்லது பொறுப்பு கூறலுக்கு உருவாக்கப்பட்ட பிரேரணைக்குள்ளே, பதிமூன்றாவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்த கோரி உள்வாங்கச் சொல்லி இருப்பது, நேரடியாக இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தி அதை நடைமுறைப்படுத்த முடியாத நிலைமையில் இந்தியா இருக்கிறதா என்று எங்களை சிந்திக்க தூண்டுகிறது.

கேள்வி: அப்படி என்றால் இந்த பிரேரணையால் எந்தவித நன்மையும் இல்லை என்று கருதுகிறீர்களா?

பதில்: அப்படி நான் சொல்லவில்லை. இந்த பிரேரணை வந்து பல சிறப்பான அம்சங்களை உள்வாங்கி இருக்கிறது, குறிப்பாக இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டதன் மூலம் இலங்கைக்கான பொறுப்பு கூறல் அல்லது குற்றவியல் விசாரணை என்பதை இலங்கையினுடைய அரசின் கரங்களில் இருந்து நகர்த்தி, இலங்கைக்கு வெளியிலே இந்த பிரேரணை கொண்டு செல்ல வைத்திருக்கிறது. ஆனால், அது எங்களுடைய பரிகார நீதியை பெற்றுத்தரக்கூடிய அதிகாரம் மிக்கதாக, அல்லது வலு உள்ளதாக இல்லை என்பதுதான் எங்களுடைய மனக்குறை. உதாரணமாக, இந்த குற்றவியல் விசாரணை பொறிமுறை என்பது, ஐ.நா செயலாளர் நாயகத்தினுடைய நேரடி கண்காணிப்பின் கீழ், அவருடைய பணிப்புரையின் கீழ், அவருடைய கட்டுப்பாட்டின்கீழ் வருகின்ற பொழுதுதான், அது ஒரு வலுவானதாக, பலம் மிக்கதாக அமையும். மனித உரிமைப் பேரவையினால் சட்ட ரீதியான நெருக்கடிகளை உருவாக்கவோ அல்லது நீதிப் பொறிமுறையையோ இப்போது நிறைவேற்றிய பிரேரணை மூலம் பெற்று கொடுக்க முடியாது. இலங்கை அரசை நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களை இணை அனுசரணை வழங்கி, நடைமுறைப்படுத்த தூண்டுகிற அல்லது கட்டுப்படுத்த வல்ல சரத்துக்கள் எதுவும் இப்பிரேரணையில் இல்லை.

கேள்வி: எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல் நகர்வு எப்படி இருக்க வேண்டும், உங்களுடைய கருத்தை கூற முடியுமா?

பதில்: உரிமைப் போராட்டத்தை ஆரம்பித்த பொழுது உரிமையைப் பெற்றுக் கொள்ளுகின்ற பிரச்சனை மாத்திரம் அதாவது அதிகார பரவலாக்கள் மூலம் எங்களுக்கான ஒரு சுயாட்சி அலகு முறைய பெற்றுக் கொள்வதற்கான தேவையே எங்கள் மக்களிடம் இருந்தது. ஆனால் இன்று, அது பல பரிமாணங்களை எட்டிய, ஒரு விரிவடைந்த அரசியல் போராட்டமாக காணப்படுகிறது. உள்ளகத்திலேயே தீர்த்துக் கொள்ளக்கூடிய இந்த விடயம், இன்று சர்வதேச நாடுகளுடைய தலையீடு உட்பட பல கோணங்களை நோக்கி, எங்களுடைய அரசியல் நகர்வு அமைந்திருக்கிறது.

முதலாவதாக, எங்களுடைய மக்களினுடைய நீதியை, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குற்றங்களுக்கான, பரிகார நீதியைப் பெற்றுக் கொள்ளுகின்ற முயற்சி, இரண்டாவதாக, எங்களுடைய நீண்ட கால கோரிக்கையான அரசியல் தீர்வை பெற்றுக் கொள்ள வேண்டியது . மூன்றாவதாக எங்களுடைய இனப் பரம்பலை செழுமைப் படுத்த எங்களுடைய மக்களை பொருளாதார ரீதியாக கட்டி வளர்த்தெடுக்க வேண்டிய நகர்வினையும் மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. ஆகவே எங்கள் மக்களுக்கான நீதி, அரசியல் தீர்வு, பொருளாதார கட்டமைப்பு என்ற மூன்று விடயங்களை, இன்று தமிழ் தேசிய அரசியல், முகம் கொடுத்து நிற்கின்றது.

ஆகவே, மிகவும் காத்திரமான முறையிலே, மிக திட்டமிட்ட வகையிலே, சர்வதேச நாடுகளின் உதவியின் அடிப்படையிலேயும், அவர்களுடைய ஆதரவோடும்தான், இந்த விடயத்தை நாங்கள், வெற்றிகரமாக முன்னெடுத்து, எங்களுடைய இனம் முகம் கொடுத்து கொண்டிருக்கின்ற, மூன்று பிரச்சனைகளுக்கும், முடிவு காண எதிர்காலத்தில் நாங்கள், எதிர்கொள்ள வேண்டிய, அரசியல் நகர்வு.

கேள்வி: இன்று பதவியில் இருக்கும் அரசாங்கம், உள்ளகப் பொறிமுறை ஊடாக, தாங்கள் இந்த விடயங்களை முன்னெடுப்பதாக, கூறியிருக்கிறார்கள். இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்.

பதில்: இன்று இந்த அரசு நல்லிணக்கம் பொறுப்பு கூறல் அல்லது அரசியல் தீர்வு, அபிவிருத்தி என்ற பல விடயங்களை தாங்கள் உள்ளகப் பொறி முறைய முலம் முன்னெடுப்போம் என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் அரசை அரியணையில் ஏற்றிய உடனே சிங்கள பௌத்த பெரும்பான்மை நலன்களைத்தான் முன்னெடுப்போம் என்று அவர்கள் உறுதி பூண்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுகிறார்கள். அரசில் நம்பிக்கை வைப்பதற்கு பதிலாக, அதை நீர்த்துப் போகின்ற செயல் திட்டங்களே முன்னெடுக்கப்பட்டிருக்கிறன.

உதாரணமாக குற்றம் சாட்டப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட ராணுவ வீரர்களை அல்லது பாதுகாப்பு படையினரை ஜனாதிபதியினுடைய சிறப்பு ஆணையின் கீழ் விடுதலை செய்து நல்லிணக்கத்திற்கான அல்லது பொறுப்பு கூறலுக்கு தாங்கள் தயார் இல்லை என்பதை தெரிவித்திருக்கிறார்கள்.

அதே போன்று தொல்லியலின் ஊடாக எங்களுடைய கலாச்சார மையங்கள், நிலம், காணி அபகரிப்பு என்ற விடயங்களை, வேறு வடிவத்தில், மாற்று வடிவத்தில் முன்னெடுப்பதை, நாங்கள் காணக்கூடியதாக இருக்கிறது. அதே போன்று, பொருளாதார கட்டமைப்பை, வளர்த்தெடுப்பதற்கான , சர்வதேச முதலீட்டாளர்களையோ அல்லது வேறு வடிவத்திலோ, முதலீடுகளை நாட்டுக்குள் கொண்டு வரக்கூடிய சூழ்நிலை இன்று அருகி வருகின்றதை காணுகிறோம். தமிழ் மக்களுடைய பிரச்சனை ஒருபுறமிருக்க, முஸ்லிம் மக்களுடைய பிரச்சனைக்கு உக்கிரமடைந்து இப்பொழுது சிங்கள கிறிஸ்தவர்களுடைய பிரச்சனையும் விசுவரூபம் எடுத்துள்ளது. அவர்களும் சர்வதேச நீதியை கோரும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலைமையிலே இந்த நாட்டிலே பல்வேறுபட்ட இனங்கள், மதங்களுக்கு இடையிலான ஒரு பிரச்சனைய அரசு வளர்த்து இருக்கிறது என்றே கூற வேண்டும். இந்த சூழ்நிலையிலே உள்ளகப் பொறிமுறை என்பது ஒருபோதும் வெற்றி தரக்கூடியதாக அமையாது.

Samugammedia.com