இலங்கை அமைச்சரவை முடிவை வரவேற்றுள்ள சீன நிறுவனம்!

கொழும்பு போர்ட் சிட்டி திட்டத்தை முன்னெடுக்கும் சீன நிறுவனம், கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு வரைபை வர்த்தமானியில் வெளியிடுவதற்கான இலங்கையின் அமைச்சரவை முடிவை வரவேற்றுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்த இந்த திட்டத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கொழும்பு துறைமுக நகர சிறப்பு பொருளாதார மண்டலத்தை நிறுவுவதற்கான திட்டத்திற்கு ஏற்கனவே ஜனவரி மாதம் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இதன்படி கொழும்பு துறைமுக நகரம் சிறப்பு உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய சர்வதேச வணிக மற்றும் சேவை மையமாக மாற்றியமைக்கப்படும்.

இந்தநிலையில் குறித்த யோசனையை வர்த்தமானியில் வெளியிட்டு விரைவில் அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்த திட்டத்திற்கு இந்த வாரம் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

அரசாங்கத்தின் நடவடிக்கையை வரவேற்கத்தக்கது. அத்துடன் இந்த முயற்சி இலங்கைக்கு அதிக நேரடியான வெளிநாட்டு முதலீடுகளை கொண்டு வரும் என்று தாம் எதிர்பார்ப்பதாக போர்ட் சிட்டி முதலீட்டாளர் நிறுவனமான ஊர்நுஊ போர்ட் சிட்டி கொழும்பு (பிரைவேட்) லிமிடெட் தெரிவித்துள்ளது.

சீனாவின் பொறிக்குள் சிக்கி வரும் இலங்கை

நீருக்காக தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளை பணயக் கைதிகளாக சீனா வைத்துள்ளதாக Harvard சர்வதேச கல்வி நிறுவனம் தமது இணையத்தளத்தில் பதிவிட்டுள்ளது.

போராசிரியர் பெட்ரிக் மென்டிஸ் மற்றும் கலாநிதி அன்டோனியா லுஷிகிவிக்ஸ் ஆகியோரினால் இந்த ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

திபெத்திய பள்ளத்தாக்கிலிருந்து தொடங்கி பிரம்மபுத்ரா, இரவாடி மற்றும் மீகோம் நதிகளுக்கு குறுக்கே அணைகளைக் கட்டுவதன் மூலம் சீனா ஏற்கனவே தண்ணீரை சேகரித்து வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்கள் விரும்பும் அளவுக்கு நீரை சேகரித்து, தேவைப்படும் போது நீரை கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு விடுவிக்க முடியும் எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சீனாவின் இந்த திட்டத்தினால் குறித்த கங்கைகளின் கீழ் பகுதியில் உள்ள மக்களுக்கு நீர் இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு நீர் தேவைப்பட்டால் அதனை சீனாவில் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்த செயற்பாட்டினால் உலக சனத்தொகையில் அரைவாசி மக்கள் வாழும் தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளின் மக்கள் சீனாவின் பிடிக்குள் சிக்கியுள்ளதாக Harvard சர்வதேச கல்வி நிறுவனம் வௌியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செயன்முறை சீனாவின் ‘அச்சுறுத்தி நீரைப் பறிக்கும் பொறிமுறை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கம்போடியா, வியட்னாம், லாவோஸ், மியன்மார் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் தற்போதும் இந்த நிலைக்கு ஆளாகியுள்ளதுடன், இந்தியாவும் படிப்படியாக அந்தப் பொறிக்குள் சிக்கி வருகிறது.

இலங்கையும் படிப்படியாக சீனாவின் பொறிக்குள் சிக்கி வருகிறதா?

சிங்கராஜ வனம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் சுத்தமான நீர் நிலைகள் காணப்படுகின்மை அனைவருக்கும் தெரிந்த விடயம்.

சிங்கராஜ வனத்திலிருந்து ஊற்றெடுக்கும் பிரதான மூன்று கங்கைகளை மறித்து இரண்டு நீர்த்தேக்கங்களை அமைப்பதன் மூலம் சீனா சுத்தமான குடிநீரை தமது காட்டுப்பாட்டிற்குள் வைத்தருக்க முயற்சிக்கின்றதா எனும் சந்தேகம் எழுகின்றது.

சிங்கராஜ வனத்தின் நீரேந்து பகுதி எமக்கு இல்லாமல் போனால், அதன் மூலம் அந்தப் பகுதியில் மாத்திரம் அல்ல, முழு நாட்டடிலும் நீர் மூலங்களுக்கு பாதிப்பு ஏற்படும்.

நாம் தற்போது சீனாவின் மின்சாரப் பொறிக்கும் சிக்கியுள்ளோம்.

நாட்டில் மின்சார விநியோகத்தில் அதிகளவிலான பங்கை வகிக்கும் நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தை சீனாவின் நிறுவனம் ஒன்றே அமைத்தது.

இன்றும் அதன் திருத்தப் பணிகள் மற்றும் செயற்படுத்தும் நடவடிக்கைகளை சீனாவே மேற்கொண்டு வருகின்றது.

பல சந்தர்ப்பங்களில் இந்த மின் உற்பத்தி நிலையத்தின் மின் விநியோகம் தடைப்பட்டதுடன், நிலக்கரி மூலம் சுற்றாடலுக்கு ஏற்படும் பாதிப்புகளும் அதிகமாகும்.

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தினால் நாட்டின் பொருளாதாரத்திற்கு விடுக்கும் அழுத்தம் தற்போது எம்மால் தடுக்க முடியாத நிலைமைக்கு வலுவடைந்துள்ளது

நீர் தொடர்பிலும் இந்த நிலை ஏற்படப் போகிறது.

நாட்டின் தேசிய அபிலாஷைகளை அடிப்படையாக வைத்தே நியூஸ்ஃபெஸ்ட் செய்தி அறிக்கையிடுகிறது.

சர்வதேச உறவுகள் தேவையென்ற போதிலும், அமெரிக்கா, சீனா, இந்தியா அல்லது வேறு நாடுகளிடமிருந்து இத்தகைய அழுத்தங்கள் வரும்போது, எமது நாட்டின் நலனை அடிப்படையாக வைத்து அறிக்கையிட நாம் எவ்வேளையிலும் கடமைப்பட்டுள்ளோம்!

Posted in Uncategorized

யாழ். மாநகரின் மத்திய பகுதி முடங்குகிறது- விசேட கலந்துரையாடலில் தீர்மானம்!

யாழ்ப்பாணம் மாநகரின் மத்திய பகுதியை முடக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் இதுகுறித்த அவசர கலந்துரையாடல் இன்று (வியாழக்கிழமை) மாலை யாழ். அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது, சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி, யாழ். மத்திய பேருந்து நிலையம் கோட்டைப் பகுதிக்கு தற்காலிகமாக மாற்றப்படுகிறது.

அத்துடன், யாழ்ப்பாணம் மாநகரின் வேம்படிச் சந்தியில் இருந்து மின்சார நிலையம் அமைந்துள்ள பகுதியும், மின்சார நிலைய வீதியில் கே.கே.எஸ்.வீதியிலிருந்து வைத்தியசாலை வரையும் மூடப்படவுள்ளது.

மேலும், கே.கே.எஸ். வீதி சத்திரச் சந்தியிலிருந்து முட்டாஸ் கடைச் சந்தி வரையும் மூடப்படவுள்ளதுடன் குறித்த பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களும் மூடப்படுகின்றன.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாநகரில் பாடசாலைகளில் தொற்று அடையாளம் காணப்பட்ட மாணவர்கள் பயிலும் வகுப்புகள் மாத்திரம் 10 நாட்களுக்கு இடைநிறுத்தப்படுகின்றன.

மேலும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மண்டபங்களில் திருமண நிகழ்வுகள், ஏனைய நிகழ்வுகள், கூட்டங்கள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படுவதுடன் சுகாதார மருத்துவ அதிகாரியின் அனுமதியுடன் வீடுகளில் நிகழ்வுகளை நடத்த அனுமதிக்கப்படுகிறது.

அத்துடன், உயிரிழந்தோரின் இறுதிக் கிரியைகளுக்கு 25 பேர் மாத்திரம் அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா தீர்மானம் நிறைவேற்றத்தால் இலங்கையில் நிலைமை மாறுமா?

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், உண்மையிலேயே அந்த நடவடிக்கை அந்நாட்டில் மனித உரிமைகள் பாதுகாப்புக்கு உதவுமா என பரவலாக பேசப்பட்டு வருகிறது.

அந்த தீர்மானத்தால் இலங்கை எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதனிடம் பிபிசி தமிழ் பேசியது.

“ஐ.நா தீர்மானமானது, இலங்கையில் மனித உரிமை பாதுகாப்பை மேலும் முன்னோக்கி கொண்டு செல்வதற்கான யோசனையாகவே பார்க்கிறேன். இது இலங்கைக்கு எதிரான தீர்மானம் கிடையாது. அதற்கான வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

“அந்த தீர்மானத்தில், உள்நாட்டு பொறுப்புக்கூறல் வழிமுறைகள் இல்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு ஆதாரங்களை சேகரித்து மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான பொறுப்பை இந்த தீர்மானம், ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் தலைமை அதிகாரிக்கு வழங்கியுள்ளது,” என்றும் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை உயர்ஸ்தானிகர் அலுவலகம் ஆதாரங்களை சேகரித்தல், பகுப்பாய்வு செய்தல், பாதுகாத்தல், எதிர்கால பொறுப்புக்கூறல் செயல்முறைகளுக்கான உத்திகளை முன்வைத்தல் மற்றும் உறுப்பு நாடுகள் முன்னெடுக்கும் நீதி சார்ந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தல் ஆகியவற்றை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

ராணுவமயமாக்கல், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களை ஒதுக்குதல், ஊடக சுதந்திரத்தை முடக்குதல் மற்றும் சிவில் சமூக அச்சுறுத்தல் ஆகியவை நடப்பதாக சுட்டிக்காட்டும் அந்த தீர்மானம், இலங்கையில் மனித உரிமை நிலவரம் மோசமடைந்து வருவதாக மேற்கோள்காட்டியிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்வதற்கும், மனித உரிமை ஆணைக்குழு உள்ளிட்ட அமைப்புகளின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துமாறும் ஐ.நா தீர்மானம் கோருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், பயங்கரவாத தடுப்பு சட்டத்தை மறு பரிசீலனை செய்யவும் இலங்கை அரசாங்கத்தை சர்வதேச மற்றும் தேசிய மனித உரிமைகள் கடமைகளுக்கு இணங்கச் செய்யும் வகையில் சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் அந்த தீர்மானம் கோருகிறது என்று அம்பிகா சற்குணநாதன் கூறினார்.

எதிர்காலத்தில் மாற்றம் நிகழுமா?

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் ஊடாக, எதிர்காலத்தில் என்ன நேரும் என அம்பிகா சற்குணநாதனிடம் கேட்டோம்.

அதற்கு அவர், “இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதால், குறுகிய காலத்திற்கு இலங்கையை, மனித உரிமைகள் கவுன்சிலின் நிகழ்ச்சி நிரலில் வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த 6 மாதங்களில் (செப்டம்பர் 2021) சபைக்கு வாய் மூலமான அறிக்கையை உயர்ஸ்தானிகர் முன்வைப்பார் எனவும், அதன் பின்னரான 3 மாதங்களில் எழுத்துப்பூர்வ அறிக்கையை அவர் முன்வைப்பார்,” என்றும் கூறினார்.

இலங்கையில் மனித உரிமைகள் பராமரிப்பு நிலையை அவதானித்து, வரும் செப்டம்பர் மாதம் முழு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என கூறப்படுகிறது. இதனூடாக இலங்கையின் மனித உரிமைகளின் நிலவரம், ஒரு சர்வதேச அமைப்பில் பகிரங்கப்படுத்தப்படும் நிலை ஏற்படும் என்று அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார்.

மனித உரிமை மீறல்களுக்கான ஆதாரங்களை சேகரித்து, ஆவணப்படுத்துதல் பணியை தொடங்க மனித உரிமை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பிரிவு இலங்கையில் நிறுவப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், பொறுப்புக்கூறலை தொடரக்கூடிய வழி முறைகளை உயர்ஸ்தானிகரின் அலுவலகம் முன்மொழியும். இதன் பிறகு, எதிர்காலத்தில் இந்த விடயம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பரிந்துரைகள் அல்லது சிறப்பு நீதிமன்றத்தில் ஏனைய பொறுப்புக்கூறல் வழிமுறைகளுக்கு வழிவகுக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையின்படி, தனது உலகளாவிய அதிகாரத்தை பயன்படுத்தி, உறுப்பு நாடுகள், குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுள்ள நபர்களுக்கு எதிராக தமது நாட்டிலேயே சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

இது ஒருவேளை நடந்தால், குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர்கள், அந்தந்த உறுப்பு நாடுகளுக்கு செல்லும் போது கைது செய்யப்படுவதற்கான சாத்தியம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்தகைய நபர்களுக்கு எதிராக தனி நபர் பயணத் தடைகள் மற்றும் சொத்து முடக்கங்கள் போன்ற நடவடிக்கைகளை உறுப்பு நாடுகள் மேற்கொள்ளவும் இந்த தொடர்ச்சியான செயல்முறைகள் வழிவகுக்கலாம் என்று அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார்.

இதற்கான சட்ட நடவடிக்கைகளுக்கு உதவி வழங்க உறுப்பு நாடுகள், இந்த தீர்மானத்தின் ஊடாக கேட்டுக் கொள்ளப்படும். இதேவேளை, ஐ,நாவின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற முயற்சிக்குமா? என அவரிடம் கேட்டதறகு, இலங்கையின் தற்போதைய நடவடிக்கைகளின் அடிப்படையில் பார்த்தால், தீர்மானத்தில் முன்மொழியப்பட்ட பரிந்துரைகளை இலங்கை செயல்படுத்த முயற்சிக்காது என்றே தோன்றுகிறது என அவர் பதிலளித்துள்ளார்.

அவ்வாறு முயற்சிக்காத பட்சத்தில், எதிர்காலத்தில் எவ்வாறான பிரச்னைகளை இலங்கை எதிர்நோக்கும் என அம்பிகாவிடம் கேட்டோம்.

அதற்கு அவர், மனித உரிமை மீறல்களால் குற்றம்சாட்டப்பட்ட தனி நபர்கள் மீது தனிப்பட்ட நாடுகள் நடவடிக்கை எடுக்க இந்த தீர்மானத்தின் ஊடாக முடியும். என்று அவர் பதிலளித்தார்.

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காமல் தவிர்த்தது பற்றி கேட்டதற்கும் அம்பிகா சற்குணநாதன் பதில் அளித்தார்.

’இந்தியா விலகுவது ஆச்சரியமான விஷயமல்ல’

சர்வதேச மனித உரிமை பொறிமுறை மற்றும் தேசிய மனித உரிமை பிரச்னைகள் தொடர்பில் ஐ.நாவின் தலையீடு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை என கருதி இந்தியா வாக்களிப்பதில் இருந்து விலகியிருக்கலாம் என்று அவர் கூறினார்.

இந்தியா விலகுவது ஆச்சரியமான விடயமல்ல என கூறிய அவர், தீர்மானத்திற்கு இந்தியா வாக்களித்திருந்தால் மாத்திரமே அது ஆச்சரியமளித்திருக்கும் என்று குறிப்பிட்டார்.

இந்தியா வாக்களிக்காமல் தவிர்த்தது, இலங்கை அரசாங்கத்தின் மீது அதன் அதிருப்தியின் வெளிப்பாடாக இருக்கலாம். மேலும், தமிழக தேர்தல்கள் மற்றும் சீன சார்பு விடயங்கள் காரணமாகவும் இது இருக்கலாம் என அம்பிகா கருத்து தெரிவித்தார்.

தீர்மானத்திற்கு எதிராக சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் எதிர்த்து வாக்களித்தது குறித்துப் பேசிய அவர், “இலங்கை மட்டுமின்றி பல நாடுகளில் நடக்கும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பான தீர்மானங்கள் மீதும் சீனா தொடர்ந்து எதிராகவே வாக்களித்து வருகிறது. பாகிஸ்தானின் வாக்குகள், சீனாவின் செயலால் ஏற்பட்ட தாக்கமாகக் கூட இருக்கலாம்” என்று தெரிவித்தார்.

இலங்கையில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் மீறல்களை கண்டு கொள்ளாமல், ஐ.நாவில் முன்வைக்கப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் பாகிஸ்தான் வாக்களித்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

உலக அளவில் நாடுகள் தற்போது எதிர்கொள்ளும் சூழ்நிலை, புவிசார் அரசியல் காரணங்கள் போன்றவற்றால் இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகள் அல்லது பிற கட்டுப்பாடுகள் உடனடியாக வராது என்றும் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார்.

பிபிசி தமிழ்

Posted in Uncategorized

இலங்கை மீதான தீர்மானம் நிறைவேற்றம் குறித்து பிரிட்டன், கனடா மற்றும் ஜேர்மனி தெரிவித்துள்ளது என்ன ?

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்பட்ட 46/1 பிரேரணை நேற்று முன்தினம் 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இது போரின் பின்னரான காலப்பகுதியில் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் என்பவற்றை வலுப்படுத்துவதற்கு சர்வதேச சமூகம் வழங்கிவரும் தொடர்ச்சியான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது என்று பிரிட்டன், கனடா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன.

கனடா

அந்தவகையில் இதுகுறித்து கனடாவின் வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை வரவேற்கும் அதேவேளை, அவற்றை உறுதிசெய்வதில் சர்வதேச சமூகம் தொடர்ச்சியாக வழங்கிவரும் ஆதரவை வெளிப்படுத்துவதாக இது அமைந்துள்ளது. கடந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணைகளை முன்னெடுத்தல் மற்றும் எதிர்காலத்தில் மீறல்கள் இடம்பெறுவதைத் தடுத்தல் ஆகியவை தொடர்பில் செயலாற்றுவதில் மனித உரிமைகள் பேரவை முக்கிய பங்கை வகிக்கின்றது.

அதேவேளை இந்தத் தீர்மானம் மனித உரிமை மீறல்கள் தொடர்பான தகவல்களையும் ஆதாரங்களையும் சேகரிக்கும் ஆணையை மனித உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் ஆணையாளர் அலுவலகத்திற்கு வழங்கியிருக்கிறது. இது இலங்கையில் பொறுப்புக்கூறல் பொறிமுறையை மேலும் வலுப்படுத்துவதாக அமையும். அத்தோடு இது எதிர்கால பொறுப்புக்கூறல் செயன்முறையிலும் முக்கியமானதாக அமையும். இந்நிலையில் மனித உரிமைகளைப் பாதுகாக்குமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவதுடன் ஏற்கனவே இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கு ஆக்கபூர்வமான செயன்முறையொன்றை முன்னெடுக்கவேண்டும் என்றும் கோருகின்றோம். இலங்கையில் வருங்காலத்தில் பாதுகாப்பையும் சமாதானத்தையும் வலுப்படுத்துவதை நோக்கிய முக்கிய படிக்கல்லாக இந்தத் தீர்மானத்தைக் கருதுகின்றோம். அதேவேளை அந்த இலக்கை அடைந்துகொள்வதற்குரிய செயன்முறைக்கு முழுமையான ஆதரவை வழங்கத் தயாராக இருக்கின்றோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜேர்மனி

அடுத்ததாக இதுகுறித்து இலங்கைக்கான ஜேர்மனிய தூதுவர் ஹொல்கர் சோபேர்ட் அவரது டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டிருக்கிறார்:

போரின் பின்னரான காலப்பகுதியில் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் என்பவற்றை வலுப்படுத்துவதற்கு சர்வதேச சமூகம் வழங்கிவரும் தொடர்ச்சியான ஆதரவையே மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய தீர்மானம் வெளிக்காட்டியுள்ளது. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக 22 நாடுகளும் எதிராக 11 நாடுகளும் வாக்களித்திருப்பதுடன் 14 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.

பிரிட்டன்

மேலும் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் பிரிட்டனின் பொதுநலவாய நாடுகளுக்கான வெளிவிவகார அமைச்சர் தாரிக் அஹமட் அவரது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டிருக்கிறார்:

இலங்கை தொடர்பில் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளினால் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்தத் தீர்மானம் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுத்தல், மனித உரிமைகளை மேம்படுத்தல், நிலைபேறான அமைதியை உறுதிசெய்தல் ஆகியவற்றை முன்னெடுப்பதற்கு வாய்ப்பை வழங்கும் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இலங்கையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது பொருளாதாரத் தடை- மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து

இலங்கையில் கடுமையான குற்றச்செயல்களுக்கு காரணமானவர்கள் எனத் தெரிவிக்கப்படுபவர்கள் மீது பொருளாதார தடைகளை விதிக்குமாறு ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடுகளுக்கு மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிக்கிடைக்கவேண்டும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் போரினால்;பாதிக்கப்பட்டவர்களுக்கு தகவல், பொறுப்புக்கூறல் மற்றும் நீதி ஆகியவற்றைப் பெற உதவக்கூடிய வெற்றியாகும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

தீர்மானத்திற்காக பிரசாரம் செய்த செயற்பாட்டாளர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தின் எந்தவொரு பழிவாங்கலும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஐக்கிய நாடுகள் பேரவை,மற்றும் உறுப்புநாடுகள் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வலியுறுத்த வேண்டும் என்றும் கண்காணிப்பகம் கோரியுள்ளது.

பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 46-1, எதிர்காலத்தில் இலங்கையில் சர்வதேச குற்றங்களின் ஆதாரங்களை சேகரிக்கவும், பகுப்பாய்வு செய்யவும், பாதுகாக்கவும் ஒரு புதிய பொறுப்புக்கூறல் செயல்முறையை நிறுவுகிறது.

இந்தநிலையில் இலங்கை தொடர்பான மனித உரிமைகள் பேரவையின் முக்கிய தீர்மானமானது,உலகில் நீதி மறுக்கப்பட்டால், கொடுமைகளுக்கு பொறுப்புக்கூற ஐக்கிய நாடுகள் சபை செயற்படும் என்பதைக் காட்டுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜெனீவா இயக்குனர் ஜோன்பிஷர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் போரினால் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் தங்களது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியவும்,பொறுப்புள்ளவர்கள் மீது நடவடிக்கைகளை எடுக்கவும் பல ஆண்டுகளாக போராடி வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இலங்கையின் பொறுப்புக்கூறலில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லாத பல ஆண்டுகளுக்குப் பின்னர், இந்த நடவடிக்கை குற்றங்களுக்கு நீதியை நெருக்கமாகக் கொண்டுவந்துள்ளது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

30 வருடகாலப் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி வழங்கப்படும்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டிருக்கும் புதிய தீர்மானம் 30 வருடகாலப் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி வழங்கப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், புதிய தீர்மானத்தில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் முன்வரவேண்டும் என்றும் அந்தச் சபை வலியுறுத்தியுள்ளது.

அதேவேளை, அதிலிருந்து தவறும் பட்சத்தில் மனித உரிமைகள் பேரவையினால் சுயாதீனமான பொறுப்புக்கூறல் பொறிமுறையொன்று நிறுவப்படக்கூடும் என்றும் அந்தச் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட 46/1 தீர்மானம் நேற்று முன்தினம் 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இந்த விடயம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள சர்வதேச மன்னிப்புச்சபை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டிருக்கும் புதிய தீர்மானம் மிக முக்கியமான முன்நகர்வு என தெரிவித்துள்ளது.

இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் இந்தத் தீர்மானத்தின் ஊடாக சர்வதேசத்தின் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படுவதாகவுவும் அந்தச் சபை தெரிவித்துள்ளது.

அதுமாத்திரமன்றி, நீதியையும் பொறுப்புக்கூறலையும் நிலைநாட்டுவதற்கான ஆதாரங்களை ஐ. நா. மனித உரிமைகள் அலுவலகம் திரட்டுவதற்கும் வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த காலத்தில் இடம்பெற்ற மற்றும் தற்போது இடம்பெறும் மீறல்களுக்குப் பொறுப்பானவர்கள் தொடர்ந்தும் தண்டனைகளில் இருந்து தப்பிக்கும் நிலை தொடர்வதற்கு அனுமதிக்க முடியாது என்ற சமிக்ஞை இந்தத் தீர்மானத்தின் ஊடாக தெளிவாக வெளிப்படுத்தப்பட வேண்டும் என அந்தச் சபை வலியுறுத்தியுள்ளது.

இந்தத் தீர்மானத்தின் ஊடாக இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் கண்காணிக்கப்படுவதுடன், கடந்தகால மீறல்கள் தொடர்பான ஆதாரங்களும் திரட்டப்படும் என்றும் சர்வதேச மன்னிப்புச்சபை அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை: பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை, ‘தொலைநோக்குப் பத்திரம்’ என்ற பெயரில் வௌியிடப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தலைமையில், பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர்கள் தேர்தல் அறிக்கையை உத்தியோகபூர்வமாக வௌியிட்டு வைத்தனர்.

இந்த தேர்தல் அறிக்கையின் 12 ஆவது விடயம் இலங்கை தமிழர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அகதிகள் முகாமில் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க பரிந்துரை செய்யப்படும் என பாரதிய ஜனதா கட்சி வாக்குறுதியளித்துள்ளது.

இம்முறை சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஆளும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணியமைத்து பாரதிய ஜனதா கட்சி போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஐ.நா தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கத்தின் பலவீனமே காரணம் என ஐக்கிய மக்கள் சக்தி அறிக்கை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பிலான தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறித்து ஐக்கிய மக்கள் சக்தி இன்று அறிக்கையொன்றை விடுத்திருந்தது.

இலங்கை அரசாங்கத்தின் பலவீனமே இத்தகைய தீர்மானம் நிறைவேற்றப்பட காரணம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உரிய வௌிநாட்டுக் கொள்கை இல்லாமை, அரசாங்கம் மனித உரிமைகளை மீறுகின்றமை மற்றும் ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்காமையே இதற்கு காரணமாக அமைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குறிப்பிட்டுள்ளது.

ஐ.நாவில் இந்தியா நடுநிலை வகித்தமை ஈழத்தமிழர்களை வேதனைக் குட்படுத்தியுள்ளது ரெலோ செயலாளர் நாயகம் ஜனா எம்.பி

ஐநா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவேண்டும் என்ற நிலையில், பல நாடுகளை திரைமறைவிலிருந்து இயக்கிய இந்தியா நடுநிலை வகித்தமை ஈழத்தமிழர்களை வேதனைக்குட்படுத்திய விடயம் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பானது இந்த நாட்டுக்கோ,பௌத்த மதத்திற்கோ,நாட்டின் ஒன்றுமைக்கோ எதிரானது அல்ல. இந்த நாட்டினையும் நாட்டு மக்களையும் நேசிக்கும் கட்சியாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பில் உள்ள அவரது அவலுகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ ஒரு தடைவ மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகைதந்து நிலமைகுறித்து பார்வையிடவேண்டும். இலங்கைக்கு எதிராக ஐநாவில் கொண்டுவரப்பட்ட பிரேரணை அமோக வரவேற்புடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

22நாடுகள் பிரேரணைக்கு ஆதரவாகவும் 11நாடுகள் எதிராகவும் 14 நாடுகள் நடுநிலையாகவும் வாக்களித்துள்ளது.இந்த நிலையில் இலங்கையின் வெளியிறவுதுறை அமைச்சர் மீசையில் மண் ஒட்டவில்லையென்ற வகையில் கருத்துகளை தெரிவித்துவருகின்றார்.

22நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ள நிலையில் ஏனைய நாடுகள் எதிராகவுள்ளதாக காட்டமுற்படுகின்றார். இலங்கை அரசாங்கமும் அவர்களின் அமைச்சர்களும் யாதார்த்ததினை புரிந்துகொள்ளாத நிலையிலேயே செயற்பட்டுவருகின்றனர்.

இந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவேண்டும் என்ற நிலையில் பல நாடுகளை திரைமறைவிலிருந்து இயக்கிய இந்தியா,இந்த பிரேரணை வெற்றிபெறவேண்டும் இலங்கையில் சிறுபான்மையினத்தவர்கள் துன்புறுத்தப்படுகின்றனர்,அவர்களுக்கு பூரண அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் என்றுகூறிய இந்தியா இந்த பிரேரணையில் நடுநிலைவகித்தது ஈழத்தமிழர்களை வேதனைக்குள்ளாக்கிய விடயமாகவே தமிழர்கள் பார்க்கின்றனர்.

ஐநா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகிய காலம் தொடக்கம் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் இந்த பிரேரணையை கொண்டுவந்த நாடுகளை கடுமையாக இனவாத ரீதியில் விமர்சனம் செய்துவந்தனர்.

ஆனால் இறுதி நேரத்தில் இவர்கள் வாய்கள் அடைக்கப்பட்டு மௌனிகளாக்கப் பட்டார்கள். இலங்கையினை பிரதிநிதித்துவப்படுத்தி ஐநா மனித உரிமைகள்பேரவையின் கூட்டத்தொடரில் பங்குபற்றியவர்கள் இங்குள்ள அமைச்சர்களை அடக்கிவாசிக்குமாறு கூறியதாகவும் அறிகின்றோம்.

அந்த பிரேரணையின் கனதியை,அதனை ஆதரிக்கும் நாடுகளின் கனதியை, அடக்கிவாசிக்காவிட்டால் எதிர்காலத்தில் இலங்கையில் ஏற்படப்போகும் துரதிர்ஸ்டவசமான சம்பவங்களை நிறுத்துவதற்காக குறித்த வேசங்களை கக்கிய அமைச்சர்களை அடக்கிவாசிக்குமாறு கூறப்பட்டதும் அவர்கள் அடக்கிவாசித்ததும் எமக்கு சாதகமானதாகவே இருந்தது.

இன்றுகூட வெளியிறவுதுறை அமைச்சர் மாகாணசபை தேர்தல் தொடர்பாகவும் 13வது திருத்தம் தொடர்பாகவும் அதிகார பரவலாக்கல் தொடர்பாகவும் பேசுகின்றார் என்றால் ஐநா தீர்மானத்தின் கனதியின் விளைவே அதுவாகும்.

மனித உரிமைகள்பேரவையின் கூட்டத்தொடர் முடிந்ததன் பின்னர் சிலவேளைகளில் இந்த அமைச்சர்கள் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது போன்று செயற்படுவார்கள் என்பது நாங்கள் யாவரும் அறிந்த விடயமாகும்.இருந்தபோதிலும் இலங்கை தொடர்பில் சர்வதேசம் கொண்டுள்ள நிலைப்பாட்டினை இலங்கை புரிந்து நடக்கும் என்று நாங்கள் கருதுகின்றோம்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி தொடர்பில் அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கையானது அப்பட்டமான மனித உரிமை மீறலாகவே இருக்கின்றது. ஜனநாயக போராட்டத்தில் பங்குபற்றியவர்களை அச்சுறுத்துவதும்,சட்டத்தின் முன்பாக அவர்களை நிறுத்துவதற்காக பொலிஸ் நிலையங்கள் ஊடாக நடவடிக்கைகள் முன்னெடுத்து நீதிமன்றத்தில் நிறுத்த முயற்சிகள்முன்னெடுப்பது எல்லாம் அராஜகமான செயற்பாடாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

இலங்கையின் பல பாகங்களிலும் அரசியல் ரீதியான ஜனநாயக போராட்டங்கள்,பேரணிகள்,ஆர்ப்பாட்டங்கள் ஜனாதிபதிக்கு முன்பாகவே நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் இந்தவேளையில் தமிழ் மக்கள் தங்களது உரிமைகளை வலியுறுத்தி பேரணியை நடாத்தியதை விரும்பாமல் அவர்களை அச்சுறுத்துவது என்பது இந்த நாடு ஒரே நாடு ஒரே சட்டத்தின் கீழா இருக்கின்றது என்ற கேள்வி எழுகின்றது.

நாட்டின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தான் ஒரு சுற்றாடல்காப்பான் வனவளத்தையும் நாட்டையும் பாதுகாப்பவன் என்று கூறுகின்றார். நான் உண்மையிலையே அந்த வார்த்தைகளை விரும்புகிறேன். ஆனால் செயல்வடிவத்தில் இந்த நாட்டின் ஜனாதிபதி அவர்கள் மட்டக்களப்பிற்கு ஒருதடவை வரவேண்டும் என்பதை நான் விரும்புகிறேன் வேண்டுகோள்விடுகின்றேன்.

மட்டக்களப்பின் வனவளம் எப்படி பாதுகாக்கப்படுகிறது, அத்துமீறப்படுகின்றது, சேனைப்பயிர்ச்செய்கை என்ற ரீதியிலே வனவளம் காவுகொள்ளப்படுகின்றது. இந்த மாவட்டத்தின் கனியவளங்களான இல்மனைட், மண் எப்படி அழிக்கப்படுகின்றன.

எதிர்காலத்திலே மட்டக்களப்பு மாவட்டம் மீண்டும் ஓர் அத்திப்பட்டி கிராமமாக மாறும் சூழ்நிலையில் இருப்பதை எமது ஜனாதிபதி இந்த நாட்டின் ஜனாதிபதி மட்டக்களப்பு மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனாதிபதி இங்குவந்து மண்கொள்ளையர்கள் செய்யும் அநியாயத்தை பார்க்கவேண்டும்.

இந்த அரசின் அடி வருடிகளாக சில அரச அதிகாரி;கள் செயற்பட்டு இந்த மாவட்ட வளங்களை அழிப்பதை நேரடியாக பார்க்கவேண்டும். அவற்றை தடுத்து நிறுத்த வேண்டும். அப்போதுதான் இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருப்பாரே ஒழிய இரு பிரதேசத்திங்கோ, ஒரு இனத்திற்கோ ஜனாதிபதியாக இருக்க கூடாது என்பது என்னுடைய வேண்டுகோளாக இருக்கின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பானது இந்த நாட்டிற்கோ,நாட்டின் ஒற்றுமைக்கோ பௌத்த மக்களுக்கோ எதிரானது அல்ல.இந்த நாட்டினையும் நாட்டு மக்களையும் நேசிக்கும் நேசிக்கும் கட்சிதான் தமிழ் தேசிய கூட்டமைப்பாகும்.

தமிழ்தேசிய கூட்டமைப்பானது பிரிவுபடாத இந்த நாட்டிற்குள் தமிழ் மக்கள் சிறுபான்மை மக்கள் சுதந்திரமாகவும் சுயநிர்ணயத்துடனும் வாழ்வதற்கு ஆசைப்படுகின்றார்கள்.முழுமையான அதிகார பரவலாக்கலை வேண்டி நிற்கின்றார்கள்.தமிழ் மக்கள் இந்த நாட்டில் இரண்டாம் தர பிரஜைகளாக வாழக்கூடாது,சமத்துவத்துடன் வாழவேண்டும் என்று நேசிக்கின்றவர்களேதவிர இந்த நாட்டிற்கோ,நாட்டு மக்களுக்கோ பௌத்ததிற்கோ எதிரானவர்கள் அல்ல என்பதை இந்த அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும்.

தமிழ்தேசிய கூட்டமைப்பானது அரசியல் ரீதியான ஒரு தீர்வினையே வேண்டி நிற்கின்றது.மாறிமாறி வந்து அரசுகள்தான் இந்த நாட்டினை சீரழிவுக்குள் கொண்டுசென்றுள்ளது.யானை தனது தலையில் மண்ணை அள்ளிக்கொட்டுவதுபோன்று அரசாங்கங்கள் மாறிமாறி விடும் பிழைகளினால் சர்வதேசத்திற்கு முன்பாக இன்று அவமானச்சின்னமாக அவமானப்பட்டு நிற்கின்றது.

இந்த நிலைமாறவேண்டும்.இந்த நிலைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்போ,தமிழ் மக்களோ காரணம் இல்லை.இதற்கு முற்று முழுதான காரணம் இந்த அரசாங்கமும் அதனை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனாதிபதியும் அமைச்சர்களுமாகும்.

பந்து இன்று அரசாங்கத்தின் பக்கத்தில் நிற்கின்றது.அந்த பந்தினை தடுத்து ஆட முற்பட்டால் விபரீதமான விளைவுகளை சந்திக்கும் நிலையேற்படும்.அந்த பந்தினை நன்றாக அடித்து விளையாடினால் இந்த நாடு சுபீட்சமான,வளமிக்க நாடாக எதிர்காலத்தில் மிளிரும் என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும்.

Posted in Uncategorized