‘நரேந்திர மோதி போலவே எனக்கும் உலகின் உன்னதமான மூத்த தமிழில் பேச ஆசை’ – அமித் ஷா

புதுச்சேரி ஒன்றிய பிரதேசத்துக்கு உள்பட்ட காரைக்காலில், பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் இந்திய உள்துறை அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான அமித்ஷா பங்கேற்றார். முன்னதாக தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறும் பாஜக மாநில மைய குழுக் கூட்டத்தில் பங்கேற்றார்.

அப்போது காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார், என்‌.ஆர்‌.காங்கிரஸைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்த் மற்றும் கல்யாணசுந்தரம், திமுகவைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் உள்ளிட பலர் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

“2014ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோதி பதவியேற்ற போது இந்தியாவில் சிறிய மாநிலமான புதுச்சேரியை இந்தியாவிற்கு முன் மாதிரியான மாநிலமாக உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்தார். அதற்காக 115 திட்டங்களை இந்த மாநிலத்திற்கு அனுப்பி வைத்தார். ஆனால் அந்த திட்டங்களை எல்லாம் தடுக்கும் வேலையை நாராயணசாமி செய்தார். ஒரே ஒரு முறை பாஜகவை ஆட்சியில் அமரவைத்துப் பாருங்கள். இந்தியாவின் மிகச் சிறந்த மாநிலமாக புதுச்சேரியை மாற்றிக் காட்டுகிறோம்,” என்று உரையாற்றினார் அமித் ஷா.

“இங்கிருக்கும் காங்கிரஸ் ஆட்சி தானாக கவிந்துவிட்டது. அதிலிருந்த காங்கிரஸ் தலைவர்கள் ஒவ்வொருவராக பாஜகவில் இணைகின்றனர். நாராயணசாமியுடன் இருப்பவர்களை அவர் புரிந்துகொள்ளாத காரணத்தினால் தான் இது போன்ற நிகழ்வுகள் நடந்துள்ளது. அவருடைய தலைவரிடமே பொய் கூறியவர் நாராயணசாமி, அதே போன்று அவருடன் இருப்பவர்களிடமும் அதே பொய்யைக் கூறி வந்ததால், அனைவரும் பிரிந்து பாஜகவில் இணைந்துள்ளனர்,” என்றார் அமித் ஷா.

தொடர்ந்து பேசிய அவர், “காங்கிரஸ் கட்சியில் குடும்ப ஆட்சி நடப்பதால் தான் அனைவரும் பாஜகவில் இணைகின்றனர். புதுச்சேரி மட்டுமின்றி மொத்த இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி இல்லாமல் போய்விடும்,” எனத் தெரிவித்தார்.

“மிக முக்கியமான உள்ளாட்சித் தேர்தலை நடத்தினார்களா? நீதிமன்றம் உத்தரவைக் கூட மதிக்காமல் பாஜகவிற்குப் பயந்து இந்த தேர்தலை நடத்தவில்லை. நாராயணசாமி அவர்களே வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் பாஜகதான் ஆட்சி அமைக்கப் போகிறது. உங்களால் எங்கும் தப்பிக்க முடியாது,” என்றார்.

புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்த ஹைதராபாத் மற்றும் பெங்களூரிலிருந்து பறக்கும் பாதை திட்டம் அமைக்கப்போவதாக அமித் ஷா பேசினார்.

“உலகின் உன்னதமான மூத்த தமிழில் மொழியில் பேச முடியாமல் என்பது வருத்தமாக இருக்கிறது‌. நான் தமிழ் மொழியில் பேசி இருந்தால் அதிக அளவில் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். குஜராத்தில் நரேந்திர மோதி முதல்வராக இருக்கும் போது தமிழ் பேச ஆசைப் பட்டேன், வேலை பளு காரணமாக கற்றுக்கொள்ள முடியவில்லை என்று ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் மோதி கூறியிருந்தார்.”

“தற்போது பிரதமரான பிறகும் தமிழ் கற்றுக்கொள்ளும் ஆசையை விடவில்லை. விரைவில் கற்றுக்கொண்டு தமிழில் பேசுவேன்‌ என்று மோதி கூறுகிறார். அப்படிப்பட்ட உன்னதமான மொழியில் பேச நானும் விரும்புகிறேன்,” என உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.

Posted in Uncategorized

லண்டனில் தமிழ் பெண் சாகும் வரை உண்ணாவிரதப்போராட்டம் : ஆதரவு தெரிவித்து யாழ். நல்லூரில் போராட்டம்

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நீதி வேண்டி பிரிட்டனில் வாழும் அம்பிகை செல்வகுமார், சாகும் வரை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை லண்டனில் நேற்று ஆரம்பித்த நிலையில் அவருக்கு வலுச் சேர்க்கும் வகையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் நல்லூரில் உணவுதவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர்கள் இருவருடன் வேலன் சுவாமிகள், அருட்தந்தையர்கள் இருவர் என ஐந்து பேர் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளமையும் குறிப்பிடதக்கது.

இலங்கையை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தவேண்டும், உள்பட 4 கோரிக்கைகளை முதன்மையாக முன்வைத்து அம்பிகை செல்வகுமார் சாகும்வரை உணவு தவிர்ப்புப் போராட்டத்தை லண்டனில் நேற்று ஆரம்பித்தார்.

மேலும், உலகத்தமிழர்கள் அனைவரும் வேற்றுமைகளின்றி ஆதரவு அளிக்க வேண்டு என அம்பிகை செல்வகுமார் கோரிக்கை விடுத்திருந்தார்.

குறித்த போராட்டம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நல்லூரில் உணவுதவிர்ப்புப் போராட்டம் இன்று முற்பகல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்தவேண்டும் உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை முன்வைத்து லண்டனில் தமிழ் பெண்ணொருவர் சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

புலம்பெயர் லண்டனில் வசிக்கும் அம்பிகா செல்வகுமார் என்ற பெண்மணியே சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வில் பிரிட்டன் சமர்பித்துள்ள தீர்மானத்தில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு பரிந்துரைத்தல் சர்வதேச சுயாதீன புலனாய்வுப் பொறிமுறையை உருவாக்குதல் மற்றும் இலங்கைக்கான ஐ.நா. நிரந்தர சிறப்புப் பிரதிநிதியை நியமித்தல் போன்றவற்றை உள்ளடக்க வேண்டும் என பிரிட்டன் அரசிடம் வேண்டுகோள் விடுத்து சாகும் வரை உணவு தவிர்ப்புப் போராட்டம் ஒன்றை அம்பிகா செல்வகுமார் ஆரம்பித்துள்ளார்.

அம்பிகா செல்வகுமார் சர்வதேச இனப்படுகொலையைத் தடுத்தல் மற்றும் வழக்காடு மையத்தின் பணிப்பாளராக பணியாற்றுகின்றார். அத்துடன் தொடர்ச்சியாக தமிழர்களின் பிரச்சினையை சர்வதேச மயப்படுத்தும் நோக்கத்துடன் செயற்பட்டு வருகிறார்.

இந்நிலையிலேயே இவரது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ். நல்லூர் பகுதியில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.

Posted in Uncategorized

முன்னாள் ஜனாதிபதிக்கு அருகில் இருந்த சிறுமிகளை காட்டினால் ஜனாதிபதியுடன் பேசத் தயார் – காணாமல் போனோரின் உறவுகள்

துண்டுப்பிரசுரம் ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேனாவிற்கு அருகில் இருந்த நான்கு தமிழ் சிறுமிகளை எங்களுக்குக் காட்டினால் ஜனாதிபதி கோத்தாபயவுடன் பேசுவது தொடர்பாக சிந்திப்போம் என்று வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

ஜனாதிபதி கோத்தாபாய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் தொடர்பாக பதிலளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்,

குறைந்த பட்சம் கடந்த ஏழு தசாப்தங்களாக இலங்கை அரசாங்கத்துடன் பேசி ஏமாற்றமடைந்த வரலாறு எங்களுக்கு இருக்கிறது. கடைசியாக 2017 ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கத்துடன் அலரி மாளிகையில் சந்தித்தோம். அப்போதும் நாங்கள் ஏமாற்றப்பட்டோம்.

குறித்த நான்கு சிறுமிகளில் ஒருவர் ஜெயவனிதாவின் மகள்.ஜனாதிபதி அந்தபிள்ளைகளை காட்டினால், எங்களுடன் பேசுவதற்கான அவரது அழைப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ளுவோம் . அவரது மகளைக் காண்பிப்பதன் மூலம் ஜனாதிபதி எங்களுக்கு உண்மையான முன்னேற்றத்தைக் காட்ட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் செயலாளர் லீலாவதி அம்மாவின் அறிக்கைகள் ஆட்சி மாற்றத்தின் தேவையை உருவாக்கிறது.

ஆட்சி மாற்றம் என்பது தமிழர்களுக்கு ஒரு தீர்வு அல்ல. அத்துடன் காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளிற்கு இராணுவம் பொறுப்பல்ல என்று அவர் ஒரு ஊடகத்திற்கு கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த நேரத்தில் அவரது இப்படியான கருத்துக்கள் வருத்தமளிக்கின்றது. எமது குழந்தைகளை இராணுவம் அழைத்து சென்றதுதான் உண்மை. எனவே எமது பிள்ளைகளை அழைத்துச்சென்ற இராணுவம் விசாரிக்கப்பட வேண்டும்.

இலங்கையுடன் புதிய அரசியலமைப்பு பற்றி பேச வேண்டாம் என்று தமிழ் அரசியல்வாதியிடம் கேட்க விரும்புகிறோம். கனடா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த வல்லுநர்கள் இங்கு வந்து தமிழர்களை ஒடுக்கு முறையிலிருந்து பாதுகாக்ககூடிய அரசியலமைப்பு எது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். என்றனர்.

சர்வதேசம் மீண்டும் தோல்வியடைந்துவிடக் கூடாது – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

இலங்கைத் தமிழர் விடயத்தில் சர்வதேசம், முன்னர் தோல்வி அடைந்ததைப்போல மீண்டும் தோல்வியடைந்துவிடக்கூடாது என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது மாநாட்டில் தமது நிலைப்பாட்டை வெளியிட்ட மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பிரதிநிதி இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்-

“யுத்தம் நிறைவடைந்து 11 ஆண்டுகள் கடந்துவிட்டன. யுத்தத்தில் ஈடுபட்டிருந்த இரண்டு தரப்பினரும் மேற்கொண்ட யுத்தக் குற்றங்களுக்கு இன்னும் பொறுப்பு கூறப்படவில்லை. இலங்கை அரசாங்கம், தம்மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ச்சியாக மறுதலித்து வருகிறது.

பல்வேறு ஆணைக்குழுக்களை அரசாங்கம் நியமித்தாலும் அவை அதிகாரம் குறைந்தனவாகவும், உறுதி மொழிகளை நிறைவேற்றுவதற்கான மனத்திடம் இல்லாத நிலைமையும் காணப்படுகின்றன. போர்க்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளவர்கள் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்படுகிறார்கள்.

படுகொலைகள் தொடர்பாக இலங்கையில் தண்டனை விதிக்கப்பட்ட ஒரேயொரு நபரும் பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்டுள்ளார். தற்போது மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் நீதி கோரி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் கூட அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

இந்தநிலையில் மனித உரிமைகள் ஆணையாளர் தமது அறிக்கையில் பரிந்துரைத்தபடி, இலங்கையை மாற்று சர்வதேச பொறிமுறைக்கு பாரப்படுத்த, மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.

இலங்கையில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரம் – ஐரோப்பிய ஒன்றியம் கவலை

இலங்கையில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதலை முடிவிற்கு கொண்டுவருவதற்காக ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் முன்வைத்துள்ள வழிவகைகளிற்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே ஐரோப்பிய ஒன்றியம் இதனை தெரிவித்துள்ளது.

சமீப காலங்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட சாதகமான விடயங்களில் பின்னடைவு ஏற்படுவது குறித்து கரிசனை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம் காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகம் இழப்பீட்டிற்கான அலுவலகம் போன்றவற்றை பாதுகாப்பதும் அவர்களுக்கான சுதந்திரத்தையும் நிதிவளங்களையும் வழங்குவதும் அவசியம் என தெரிவித்துள்ளது.

இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமைநிலவரத்திற்கான எச்சரிக்கை அறிகுறிகள் குறித்த மனித உரிமை ஆணையாளரின் கரிசனையை பகிர்ந்துகொள்வதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.சிவில் சமூகத்தினர் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கண்காணிக்கப்படுவது அதிகரித்துள்ளமை குறித்தும் ஐரோப்பிய ஒன்றியம் கவலை வெளியிட்டுள்ளது.

Posted in Uncategorized

வழிகாட்டல்கள் வௌியிடப்பட்டதன் பின்னரே நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படும்

கொரோனாவினால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்குரிய வழிகாட்டல்கள் வௌியிடப்பட்டதன் பின்னரே, அனுமதி வழங்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

உடல்களை அடக்கம் செய்வதற்கான இடங்களை எதிர்வரும் நாட்களில் தெரிவு செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

நீர் நிலைகள் உள்ளிட்ட பல விடயங்களை ஆராய்ந்து இடங்களை தெரிவு செய்ததன் பின்னர் அதனை சுகாதார அமைச்சர், செயலாளர் மற்றும் ஜனாதிபதி தலைமையிலான COVID செயலணிக்கு சமர்ப்பித்து, அதற்கு அனுமதி பெற வேண்டும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயம் கூறினார்.

இதற்கான வழிகாட்டியை வௌியிடும் வரை COVID-இனால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியாது எனவும், இடத்தை தெரிவு செய்ய வேண்டியிருப்பதே அதற்கான பிரதான காரணம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதுவரை உடல்களை வைத்தியசாலைகளின் குளிரூட்டிகளில் வைத்திருக்க முடியும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

இஸ்லாமிய நாடுகளின் நிலைப்பாடு மாறாதென நம்புகிறோம், கட்டாய ஜனாஸா எரிப்பை நீக்கியது, முஸ்லிம் நாடுகளின் ஆதரவுக்காகவே – சுமந்திரன்

தமிழ் தேசிய பரப்பில் இருக்க கூடிய அனைத்து கட்சிகளும் ஒன்றாக செயற்படவேண்டும் என்ற தன்மையை வலியுறுத்துவதாக பாராளுமன்ற உறுப்பினர் எம.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் காலம் கடந்து ஞானம் வந்தது போல் ஸ்ரீலங்கா அரசாங்கம் ஓடித்திரிகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ்தேசியப் பரப்பில் இருக்கக்கூடிய தமிழ் கட்சிகள்,வட கிழக்கில் இருக்கக்கூடிய கிறிஸ்தவ ஆயர்கள், ஆதினமுதல்வர்கள், மற்றும் சிவில் அமைப்புக்கள் ஆகியவற்றின் ஒன்றிணைந்த கலந்துரையாடல் ஒன்று வவுனியாவில் இன்று -26- இடம்பெற்றது.

இதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

இன்றைய கால கட்டத்தில் தமிழ் மக்களின் அரசியல் ஒற்றுமை இன்றியமையாதது என்ற கருத்தை நாங்கள் எல்லாருமே ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.

அதனை மத தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர். அந்த அரசியல் ஒற்றுமையை எவ்வாறு வேகமாகவும், தீவிரமாகவும் நகர்த்துவது என்பது பற்றி ஒவ்வொரு கட்சிகளும் தமது தீர்மானம் எடுக்கும் கூட்டங்களிலே பேசி தீர்மானங்களை எடுத்த பின்னர் வெகு விரைவில் ஒரு கட்டமைப்பாக முன்னேறுவது குறித்த நடவடிக்கையை எடுப்போம்.

இக்கலந்துரையாடலில் எந்தவித முரண்பாடு இல்லாத நிலையிலும் அழைப்பு விடுக்கப்பட்ட அனைத்து கட்சிகளும் கலந்துகொள்ளவில்லை. அத்துடன் இது ஒரு தேர்தல் கட்டமைப்பே கிடையாது. இது இன்று தமிழர்களிற்கு ஒரு அத்தியவசிய தேவை அதனை பொறுப்போடு நாம் அணுக வேண்டுமாக இருந்தால் தமிழ்த் தேசிய பரப்பில் இருக்க கூடிய அனைத்து கட்சிகளும் ஒன்றாக செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்படுவதற்கு தேவையான ஒரு கட்டமைப்பை உருவாக்குவோம்.

ஜெனிவா அமர்வில் இலங்கை தொடர்பாக பலநாடுகள் நடுநிலமையை பேணும் என்ற ஒரு நிலைப்பாடு காணப்படுகின்றது. இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக இணை அனுசரணை வழங்கும் நாடுகள் பெரும் முயற்சி எடுத்திருக்கிறார்கள்.

அதை நீர்த்துப்போகச் செய்வதற்காகவே இலங்கை அரசு கட்டாய ஜனாஸா எரிப்பு என்ற விடயத்தை நீக்கியிருக்கிறது. முஸ்லிம் நாடுகள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கலாம் என்ற எண்ணத்தில் இதனை செய்திருக்கிறார்கள்.

எனினும் இஸ்லாமிய நாடுகள் தங்களது நிலைப்பாட்டை மாற்ற மாட்டார்கள் என்று நம்புகிறோம். அதேபோல சில நாடுகளின் ஆதரவை பெறுவதற்காக காணாமல் போனவர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்படும் தெரிவித்துள்ளார்.

ஜெனீவா அறிக்கையை நடைமுறைப்படுத்துமாறு கோருகிறது சுவிஸ்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துமாறு இலங்கையிடம் சுவிட்ஸர்லாந்து வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் முன்னைய தீர்மானங்களின் உள்ளடக்கங்களையும் நடைமுறைப்படுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மனித உரிமை பேரவை இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவதற்காக மேலதிக நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும் சுவிட்ஸர்லாந்து வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் தீர்மானத்திலிருந்து விலகுவது குறித்து இலங்கை அறிவித்தவேளை தேசிய அளவில் உருவாக்கப்பட்ட நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் நடைமுறையை தொடரவுள்ளதாக இலங்கை தெரிவித்திருந்தது.

எனினும் இந்த அறிக்கையில் உள்ளுர் முயற்சிகள் எவையும் பலன்களை அளிக்கவில்லை, தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுவது தொடர்கின்றது.

இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் அமைப்பின மீதான நம்பிக்கை மேலும் குறைவடைந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் சிறுபான்மையினர் ஓரங்கட்டப்படுகிறார்கள் ஜெனீவா அமர்வில் நோர்வே

ஐ.நாவுக்கான நோர்வேயின் நிரந்தர பிரதிநிதி, தூதர் டைன் மார்ச் ஸ்மித், ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகருடன் முழுமையாக ஒத்துழைக்கவும், மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் (OHCHR) அறிக்கையின் பரிந்துரைகளை அமல்படுத்தவும் இலங்கையை இன்று வலியுறுத்தியுள்ளார்.

46 வது அமர்வு மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான உயர் ஸ்தானிகர் அறிக்கை குறித்து உரை நிகழ்த்திய அவர், இலங்கை தொடர்பான மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அறிக்கையை நோர்வே வரவேற்பதாகவும், எழுப்பப்பட்ட கவலைகளைப் பகிர்ந்து கொள்வதாகவும் கூறினார்.
“2015 முதல், இலங்கை ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துவதில் முக்கியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது, ஆனால் சமீபத்திய எதிர்மறை முன்னேற்றங்கள் அடைந்த லாபங்களைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும். இடைக்கால நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தில் முன்னேற்றம் குறைவு
“நாட்டின் சிறுபான்மையினர் ஓரங்கட்டப்படுகிறார்கள். நிலையான மனித அபிவிருத்தி என்பது மனித உரிமைகளின் அடிப்படையில் மற்றும் ஒரு உள்ளடக்கிய செயல்முறையின் மூலம் மட்டுமே அடையப்படும்.

“இலங்கையின் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டக் கடமைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்கும், மனித உரிமை பாதுகாவலர்கள், ஊடகவியலாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மீதான அனைத்து வகையான கண்காணிப்பு மற்றும் துன்புறுத்தல்களையும் முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென இலங்கையை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்று அவர் தெரிவித்தார்.

Posted in Uncategorized

அரச வெசாக் விழாவை யாழ்ப்பாணம் – நாகதீப ரஜ மகா விகாரையில் நடத்துமாறு பிரதமர் ஆலோசனை

அரச வெசாக் விழாவை யாழ்ப்பாணம் – நாகதீப ரஜ மகா விகாரையில் நடத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார்.

இம்முறை அரச வெசாக் விழாவை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை அடிப்படையாகக் கொண்டு நாகதீப ரஜ மகா விகாரையை மையமாகக் கொண்டு நடத்த புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஸ அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய வடக்கு, கிழக்கு மாகாணங்களின் 65 விகாரைகள் மற்றும் 35 அறநெறி பாடசாலைகளை ஒன்றிணைத்து இம்முறை அரச வெசாக் விழாவை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தனவிற்கு பிரதமரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய வெசாக் விழாவிலிருந்து மாறுபட்டதாக, பிற மதங்களுடன் இணைந்து அரச வெசாக் விழாவை ஏற்பாடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளமை இம்முறை அரச வெசாக் விழாவின் விசேட அம்சமாகும்.

இதற்கான செயற்பாட்டை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழுள்ள இந்து, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் விவகார திணைக்களங்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்குமென பிரதமரின் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.