மக்களிடத்தில் ஆதரவு அற்ற கட்சிகளை ஒன்றிணைத்துக் கொண்டு நாங்கள் தொடர்ந்தும் பயணிப்பதா?  மன்னார் மாவட்ட ரெலோ கட்சியின் மாவட்ட அமைப்பாளர் டானியல் வசந்தன் கேள்வி?

மக்களிடத்தில் ஆதரவு அற்ற கட்சிகளை ஒன்றிணைத்து கொண்டு நாங்கள் தொடர்ந்தும் பயணிப்பதா?அல்லது தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ இனி வருகின்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதா?என்பது குறித்து கட்சியின் உறுப்பினர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள வேண்டியுள்ளது என மன்னார் மாவட்ட ரெலோ கட்சியின் மாவட்ட அமைப்பாளரும்,பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் செயலாளருமான டானியல் வசந்தன் தெரிவித்தார்.

பாராளுமன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் ரெலோ கட்சிக்காக பல்வேறு வகையிலும் உதவி புரிந்த கட்சியின் உறுப்பினர்களுடன் சந்திப்பும் மற்றும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை(24) மதியம் மன்னார் தனியார் விருந்தினர் விடுதியில் இடம் பெற்றது.

இதன் போது தலைமை தாங்கி உரையாற்றுகையிலே மன்னார் மாவட்ட ரெலோ கட்சியின் மாவட்ட அமைப்பாளரும்,பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் செயலாளருமான டானியல் வசந்தன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

எமது கட்சியின் தலைமைத்துவத்திற்கு எவ்வித பாதிப்புகளும் இன்றி மீண்டும் பாராளுமன்றம் அனுப்ப பல வழிகளிலும் உதவி புரிந்த தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் மன்னார் மாவட்ட உறுப்பினர்களுக்கு தலைவர் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஐந்து கட்சிகள் ஒன்றிணைந்து ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியில் போட்டியிட்டது.அந்த 5 கட்சிகளில் 4 கட்சி வேட்பாளர்கள் தோல்வியடைந்தனர்.தமிழீழ விடுதலை இயக்கம் மட்டும் இத் தேர்தலில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை பெற்றுக் கொண்டுள்ளது.

மக்களிடத்தில் ஆதரவு அற்ற கட்சிகளை ஒன்றிணைத்துக் கொண்டு நாங்கள் பயணிப்பதா?அல்லது தமிழீழ விடுதலை இயக்கம் இனி வருகின்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதா?,போன்ற விடயங்கள் குறித்து ஆலோசனைகளை உங்களிடம் முன் வைக்கின்றோம்.

நாங்கள் எதை நினைத்தாலும் மக்கள் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளனர்.ஐந்து கட்சிகளை ஒன்றிணைத்து பலத்துடன் போட்டி யிடுகின்றோம் என நாங்கள் நினைத்துக் கொண்டு இருக்கின்றோம்.

மக்கள் எமது கூட்டிற்கு ஆதரவு வழங்குவார்கள்.நாங்கள் தான் ஒற்றுமையாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.ஐந்து போராட்ட குழுக்கள் ஒன்றாக நிற்கின்றோம் ,நாங்கள் கடந்த காலங்களில் மக்களுக்காக ஆயுதம் ஏந்தி போராடியவர்கள்.எனவே எங்களுக்குத்தான் மக்களின் ஆதரவு இருக்கிறது என்று நாங்கள் எண்ணி இருந்தோம்.

அந்த எண்ணத்தில் மண்ணை போடுவது போல இலங்கை தமிழரசு கட்சி எவ்வாறு எம்மை விட்டு வெளியே சென்றார்களோ அவர்கள் நினைத்தது நடந்து விட்டது.

நாங்கள் தவறானவர்களாகவும்,அவர்கள் சரியான வர்களாகவும் காண்பித்து இத் தேர்தலில் வடக்கு கிழக்கில் அவர்கள் 8 ஆசனத்தை பெற்றுள்ளனர்.

உண்மையில் இது எமது அரசியல் இருப்பிற்கு ஒரு கேள்விக்குறியாகி உள்ளது.எனவே இனி வருகின்ற தேர்தல்களில் நாங்கள் தோற்போமாக இருந்தால் எமது கட்சியின் நிலை கேள்விக்குறியாகிவிடும்.

கடந்த காலங்களில் தமிழீழ விடுதலை இயக்கம் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளது.எனவே உங்களின் ஒத்துழைப்பை நாங்கள் தொடர்ந்தும் எதிர் பார்க்கிறோம்.எமது கட்சியின் உறுப்பினர்களை நம்பியே நாங்கள் அரசியலை முன்னெடுக்க உள்ளோம் என அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து உரை நிகழ்த்திய பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இத்தேர்தலில் தனது வெற்றிக்காக பாடுபட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றிகளை தெரிவித்ததோடு,கட்சி எதிர் காலத்தில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது

நாம்பல விலைகளை கொடுத்திருக்கிறோம் இனப்பிரச்சனை விடயத்தில் அரசாங்கம் என்ன நிலைப்பாட்டில் உள்ளது ரெலோ தலைவர் செல்வம்

நாங்கள் ஒன்றிணைந்தால் மக்கள் எங்களோடு நிற்பார்கள் என்பதை தேர்தல்மூலம் சொல்லியிருக்கிறார்கள். எனவே இனியாவது ஒன்றுபடவேண்டும் என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியாவில் அவரது அலுவலகத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்……

தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது தேசியமக்கள் சக்தி மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்திருப்பதாக தெரிகிறது.வடகிழக்கிலும் அந்த அலை பாதிப்பை ஏற்ப்படுத்தியிருக்கும் நிலமை உள்ளது. மக்களின் எதிர்பார்பை இந்த அரசாங்கம் தீர்க்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்ப்பட்டுள்ளது. அதற்கு காலம் தான் பதில் சொல்லவேண்டும்

ஜனாதிபதியின் அக்கிராசன உரையில் தேசியஇனப் பிரச்சனை தொடர்பாக பேசாமை வருத்தமளிக்கிறது.
விவசாயிகள் கடற்தொழிலாளிகள் ஏழைமக்களின் பொருளாதாரம் தொடர்பாக அவரால் சொல்லப்பட்ட கருத்தை வரவேற்கின்றேன்.அனைவரும் இலங்கையர்கள் என்ற அடிப்படையிலேயே அவரது செயற்பாடு இருக்கிறது.

எங்களை பொறுத்த வரை நாம்பல விலைகளை கொடுத்திருக்கிறோம். எனவே இனப்பிரச்சனை விடயத்தில் அரசாங்கம் என்ன நிலைப்பாட்டில் உள்ளது என்பதை தெளிவாக கூறவேண்டும்.

புதிஅரசியலமைப்பு உருவாக்கப்படும் போது 13வது திருத்தமும் இல்லாமல் செய்யப்படும் என்ற நிலைவரலாம் என கூறப்படுகின்றது.எனவே நல்லவிடயங்களை ஆதரிப்போம் மக்களுக்கு அநீதி இழைக்கப்படும் நிலை தொடர்ந்தால் அதனை நாம் கடுமையாக எதிர்ப்போம்.

நாங்கள் ஒற்றுமையாக இருந்திருந்தால் இந்த ஆசனங்கள் தேசியமக்கள் சக்திக்கு சென்றிருக்காது.
தமிழ்க்கட்சிகளுக்கு விழுந்த வாக்குகளை பார்த்தால் அது புலப்படும்.

பாராளுமன்றத்தில் தனித்தனியாக நாங்கள் செயற்ப்பட முடியாது என்பது எனது கருத்து. பொதுவானவிடயத்தில் ஏனைய தமிழ்க்கட்சிகளுடன் இணைந்து ஒற்றுமையாக செயற்ப்படவேண்டும். அதன் மூலமே பலவிடயங்களை நாம் சாதிக்கமுடியும்.

நாங்கள் ஒன்றிணைந்தால் மக்கள் எங்களோடு நிற்பார்கள் என்பதை தேர்தல்மூலம் சொல்லியிருக்கிறார்கள்.யாழில் டக்ளஸ் மற்றும் அங்கயன் ஆகியோரது வாக்குகளே தேசியமக்கள் சக்திக்கு சென்றுள்ளது. தேசியத்தை நேசிக்கின்ற மக்களின் வாக்குகள் அவர்களுக்கு செல்லவில்லை.

எனவே இனிவரும் காலங்களிலும் நாங்கள் ஒன்றிணையவில்லை என்றால். வடகிழக்கில் அரசாங்கம் ஆளும் சந்தர்ப்பத்தை உருவாக்கிய தவறை நாங்கள் விட்டவர்களாக இருக்கபோகிறோம்.

அந்த நிலையைமாற்றி இனியாவது ஒன்றாக செயற்படவேண்டும். நான் அதில் முனைப்புகாட்டுகின்ற ஒருவன் மக்களும் அதையே எதிர்பார்க்கின்றனர் என்றார்.

Posted in Uncategorized

எமது இலக்கை நோக்கிய இலட்சிய பயணம் இலக்கை எட்டும் வரை தொடரும் ரெலோ செயலாளர் கோவிந்தன் கருணாகரம் ஜனா

இனி வரும் காலங்களில் எந்த ஒரு தேர்தலிலும் நான் போட்டியிட மாட்டேன் புதிய அமைச்சரவையில் வீண் விரயங்களை குறைப்பதற்காக அவை மட்டுப்படுத்தப்பட்டு இருப்பது நாட்டிற்கு நல்லது இது ஒரு வரவேற்கத்தக்கது எனரெலோ செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார்.

இன்று (19) மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

கடந்த பாராளுமன்ற தேர்தலிலே ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட எனக்கும் என்னுடைய குழுவினருக்கும் ஆதரவு நல்கிய மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியத்தை நேசிக்கும் மக்கள் அனைவருக்கும் என்னுடைய இதயபூர்வமான நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இது நமது தோல்வி அல்ல நமக்கு ஏற்பட்ட ஒரு சிறிய சறுக்கலே ஆகும் இந்த சறுக்கலில் இருந்து பாடம் கற்று மீள் எழுச்சி வருவதே எங்களுடைய நோக்கமாகும். ஒரு காலத்தில் இலங்கையில் ஆட்சி செய்த தேசிய கட்சிகளே அடுத்த தேர்தலில் படு தோல்வி கண்ட வரலாறுகள் உண்டு 1970 ஆம் ஆண்டு தேர்தலில் ஆட்சி செய்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 1977 ஆம் ஆண்டு வரும் 8 ஆசனங்களுடன் பாராளுமன்றத்திற்கு வந்த வரலாறுகள் இருக்கின்றது.

அதேபோன்று 2020 ஆம் ஆண்டு மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இருந்த தேசிய மக்கள் சக்தி இன்று 159 ஆசனங்கள் 3/2 பெரும்பான்மைக்கு மேலாக ஆட்சி அமைத்த வரலாறு இருக்கின்றது எனவே எமக்கு இது பெரும் தோல்வி அல்ல அடுத்த வெற்றிக்கான பலமான அத்திவாரத்தை இடும் ஒரு வாய்ப்பாகத்தான் நாங்கள் இதனை பார்க்கின்றோம்.

எமது இலக்கை நோக்கி லட்சிய பயணம் இலக்கை எட்டும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும் மீண்டும் எம்மை ஆதரித்த எம்மை விமர்சித்த எம்மை அள்ளி நகையாடினோர் அனைவருக்கும் எங்களுடைய இதயபூர்வமான நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம் தோல்வியில் துவள்வது போன்ற வரலாறு எம் போன்ற போராளிகளுக்கு எப்போதும் இருந்தது இல்லை தோல்வியை வெற்றியாக்குவது தான் எங்களுடைய லட்சியம்.

வடக்கு கிழக்கிலே ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிட்டது திருவோணமலை மாவட்டத்தில் மாத்திரம் அங்கு தமிழ் பிரதிநிதித்துவத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக இணைந்து போட்டியிட்டோம் அந்த வகையில் கணிசமான அளவு எங்களுடைய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு வடகிழக்கு மக்கள் ஆதரவை வழங்கி இருக்கிறார்கள்.

அந்த வகையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தேசிய அமைப்பாளர் என்கின்ற ரீதியில் அனைத்து தமிழ் மக்களுக்கும் எங்களுடைய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன் எதிர்காலத்திலே நாங்கள் தமிழ் மக்கள் இணைந்து செயல்படாவிட்டால் தமிழ் தேசியம் கெட்டுப் போகும் என்பதனை சிந்தித்து அனைவரும் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.

கடந்த காலங்களில் ஆட்சி செய்த அரசாங்கங்கள் தமிழ் தேசியத்துடன் தமிழ் மக்களுடனும் தமிழ் தேசிய கட்சிகளுடனும் நேரடியான மோதலிலே ஈடுபட்டார்கள் அதே போன்று அவர்களது ஆட்சி வேறு விதமாக இருந்தது ஆனால் தற்போது ஆட்சிக்கு வந்திருக்கும் அரசாங்கம் அதனுடைய ஜனாதிபதி அந்த கட்சி தமிழ் தேசியத்தையும் தமிழ் மக்களது பிரச்சினைகளையும் கரையான் அரிப்பது போன்று உள்ளுக்குள் அறுத்துக் கொண்டு செல்கின்றது.

அந்த வகையில் எங்களுடைய மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டுமானால் நாங்கள் எதிர்காலத்தில் எங்களுக்குள்ளே இருக்கின்ற விருப்பு வெறுப்புகளை துறந்து அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் இல்லாவிட்டால் எங்களின் எதிர்காலம் சூனியம் ஆகும் எந்த மாற்று கருத்தும் இல்லை.

எதிர்வரும் தேர்தல்களில் நான் போட்டியிடும் சந்தர்ப்பம் எக்காரணம் கொண்டும் இருக்காது. கடந்த தேர்தலில் கூட நான் அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டேன் என தெரிவித்திருந்தேன்.

ஆனாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்பட்ட பிளவு தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து தமிழரசு கட்சி வெளியேறியதன் காரணமாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி கட்சிகளின் அழுத்தமும் அந்த கட்சிகளின் மட்டக்களப்பு மாவட்டத்தில் தலைமை தாங்கி வழிநடத்தக் கூடிய ஒரு தேவையும் ஏற்பட்டதன் காரணத்தினால் தான் நான் இந்த தேர்தலில் போட்டியிட்டேன்.

இனிவரும் காலங்களில் எந்த ஒரு தேர்தலிலும் நான் போட்டியிட மாட்டேன். ஆனால் அரசியலில் இருந்து ஒதுங்கவும் மாட்டேன். அரசியலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் தமிழ் மக்களுக்கும் சேவையாற்றுவதற்கு எப்போதும் தயாராக இருப்பேன்.

வட மாகாணத்தில் மாத்திரமல்ல கிழக்கு மாகாணத்திலும் ஜனாதிபதி தேர்தலிலே அதிகளவான வாக்குகள் கிடைக்கப் பெற்றது குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் கலந்து ஜனாதிபதி தேர்தலில் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் சங்கு சின்னத்திற்கு கிடைக்கப்பெற்றது இந்த பாராளுமன்ற தேர்தலில் 15ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் தான் அண்ணளவாக கிடைக்கப்பெற்று இருந்தது.

இதற்கு பல காரணங்கள் இருக்கின்றது சங்கு சின்னத்தில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட அரியநேத்திரன் சங்கு சின்னத்துக்கு எதிராக சங்கு சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டாம் என எதிராக பிரச்சாரங்களில் முன்முருமாக ஈடுபட்டிருந்தார்.

அவ்வாறான பல காரணங்களினால் சங்கு சின்னத்திற்கு கிடைக்க வேண்டிய ஆதரவு கணிசமான அளவு குறைந்திருக்கின்றது.

மாற்றம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரமில்ல நாடு பூராகவும் ஏற்பட்டு இருக்கின்றது. நான் முன்னர் கூறியது போன்று மூன்று ஆசனங்களுடன் இருந்த தேசிய மக்கள் சக்தி இன்று 159 ஆசனங்களை பெற்றிருக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கூட 50,000 இற்கு மேற்பட்ட வாக்குகளை அமைதியான முறையிலே மக்கள் இந்த தேசிய மக்கள் சக்திக்கு வழங்கி இருக்கின்றார்கள் எதுவிதமான பெரிய அளவிலான பிரச்சாரங்களோ அல்லது கூட்டங்களோ அல்லது வேறு கருத்தரங்குகளோ எதுவுமே செய்யாமல் அதிக அளவு செலவுகள் கூட செய்யாமல் தேசிய மக்கள் சக்திக்கு மட்டக்களப்பு மாவட்ட மக்கள் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகளை வழங்கி இருக்கின்றார்கள்.

அந்த வகையில் மக்கள் ஒரு மாற்றத்தை வேண்டி இந்த தேர்தலிலே வாக்களித்து இருக்கின்றார்கள் அந்த மக்களுடைய தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்.

அமைச்சர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருக்கின்றது. நான் நினைக்கின்றேன் வீண் விரயங்கள் இல்லாமல் போயிருக்கின்றது அதை நாட்டிற்கு நல்லது அந்த வகையில் இரண்டு தமிழ் அமைச்சர்களும் மந்திரி சபையிலே உள்வாங்கப்பட்டிருக்கின்றார்கள் இது ஒரு வரவேற்கத்தக்க துறை சார்ந்த நிபுணர்களைக் கொண்ட ஒரு மந்திரி சபையாக நான் பார்க்கின்றேன்.

இருந்தாலும் அவர்களது நடவடிக்கைகளை போகப்போகத்தான் புரிந்து கொள்ள முடியும். அவர் கூறியதில் உண்மை இருக்கின்றதே ஏனென்றால் வடக்கிலே 5 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்திக்கு முதல் முறையாக ஒரு தேசிய கட்சிக்கு 5 பாராளுமன்ற உறுப்பினர்கள் கிடைத்து இருக்கிறது.

மாத்திரமில்லாமல் வடக்கிலே இரண்டு தேர்தல் மாவட்டங்களிலும் அவர்கள் முன்னிலை வைத்திருக்கின்றார்கள் அதே போன்று கிழக்கில் மூன்று மாவட்டங்களில் இரண்டு மாவட்டங்களில் அவர்கள் முன்னிலை வகித்திருக்கின்றார்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி முன்னிலை வைத்திருக்கின்றது.

அந்த வகையில் நான் நினைக்கின்றேன் 12 பாராளுமன்ற உறுப்பினர்கள் வடகிழக்கில் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்திருக்கின்றது என்பது அவர்களது ஒரு பெரிய வெற்றி அந்த வெற்றியை அவர்கள் வடகிழக்கு மக்களது இன பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வை கொடுப்பதற்காக வெற்றியை பயன்படுத்துவார்களாகியிருந்தால் அது நன்றாக இருக்கும்.

நான் நினைக்கின்றேன் அவர் நிச்சயமாக நினைவேந்தல்களுக்கு தடை விதிக்க கூடிய ஒரு நபராகவோ அல்லது கட்சியாகவோ இருக்காது ஏனென்றால் அவர்களும் கடந்த காலங்களிலே 71 ஆம் ஆண்டும் 89 ஆம் ஆண்டு கால கட்டங்களில் பாரிய ஆயுத கிளர்ச்சியை நடாத்தி அரசாங்கத்தை கைப்பற்றுவதற்கு முயற்சி செய்து நான் நினைக்கின்றேன் 60,000 இற்கு மேற்பட்ட அவர்களுடைய போராளிகளையும் அவர்களுடைய தலைவர் ரோகன விஜயவீரர் அவர்களையும் இழந்தவர்கள் அவர்களை ஒவ்வொரு வருடமும் நினைவு கூர்ந்து கொண்டிருப்பவர்கள் அதே போன்று வடகிழக்கிலும் இறந்தவர்களை நினைவு கூறுவதற்கு தடையாக இருக்க மாட்டார்கள் என நான் நினைக்கின்றேன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரம் அல்ல என்னுடைய எண்ணம் தமிழ் தேசிய பரப்பில் இருக்கும் அனைத்து காட்சிகளும் அது கஜேந்திரகுமார் அவர்களுடைய கட்சியாக இருக்கலாம் விக்னேஸ்வரன் உடைய கட்சியாக இருக்கலாம் ஏனைய கட்சிகளாக இருந்தாலும் சரி தமிழ் தேசியத்தை நேசிக்கும் தமிழர்களது உரிமையை பெறவேண்டும் என நினைக்கும் அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்தாலே தவிர தமிழர்களின் எதிர்காலத்தை பற்றி சிந்திப்பது கடினமானது என தெரிவித்தார்.

நடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் பரந்துபட்ட அளவில் சிந்திப்பதை காட்டுகிறது – இலங்கைக்கான சீன தூதுவர்

அண்மையில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் சமூகம் சரியான முடிவை எடுத்திருக்கின்றது. யாழ் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றிருப்பது தமிழ் மக்கள் பரந்துபட்ட அளவில் சிந்திப்பதை காட்டுகிறது. இது இனங்களிடையே ஒற்றுமையும் பன்மைத்துவத்தையும் ஏற்படுத்தும் ஒரு குறியீடு என இலங்கைக்கான சீன தூதுவர் கீ.ஷென்ஹொங் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் செவ்வாய்க்கிழமை (19) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை சீனாவின் நீண்டகால நண்பனாக இருக்கிறது. இலங்கை அரசாங்கம் எடுக்கும் சகல முடிவுகளையும் இலங்கை மதிக்கிறது. இந்தியா இலங்கையின் மிக நெருக்கமான அயல் நாடாக இருக்கிறது. அதனால் இந்தியா மற்றும் இலங்கை பொருளாதார ரீதியான உறவு வலுப்படுவதை நாம் விரும்புகிறோம். டிசம்பர் மாத இறுதியில் அனுர குமார திஸாநாயக்க இந்தியா பயணிக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இது மிகவும் சந்தோசமான விடயம். அதன் பின்னர் பொருத்தமான தருணத்தில் இலங்கை ஜனாதிபதி சீனாவுக்கு வருகை தரலாம். சீனா மற்றும் இலங்கை இடையே பொருளாதார ரீதியான உறவு வலுப்படுவதையே நாம் விரும்புகிறோம்.

வடபகுதியில் பல்வேறு வகையான வேலைத்திட்டங்களை நாம் கொரோனா காலத்தில் இருந்து மேற்கொண்டு வருகிறோம். சினோபாம் தடுப்பூசி, உலர் உணவு பொருட்கள், மீன் வலை என பல உதவிகள் செய்யப்பட்டது. வடபகுதி மக்களுடன் நல் உறவை மேம்படுத்தவே விரும்புகிறோம் என்றார்.

Posted in Uncategorized

சசிகலா ரவிராஜ் எதிராக யாழில் விசமபிரச்சாரம்

அன்புசால் யாழ்- கிளிநொச்சி மாவட்ட வாக்காளர் பெருமக்களே,

படுகொலை செய்யப்பட்ட முன்னைநாள் நாடளுமன்ற உறுப்பினர் மாமனிதர் சட்டத்தரணி நடராஜா ரவிராஜ் அவர்களின் துணைவியராகிய திருமதி ரவிராஜ் சசிகலா ஆகிய நான் 2024ம் ஆண்டு பாரளுமன்ற பொதுத்தேர்தலில், யாழ் – கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் சங்குச் சின்னத்தில் இலக்கம் 7இல் போட்டியிடுகிறேன்.

அண்மையில் சில நாட்களாக எனது பேராதரவாளர்களாகிய வாக்காளப் பெருமக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் சில வக்குரோத்து அரசியல் கட்சிகளால் எனது சின்னம்-கட்சி தொடர்பாக தவறான தகவல்களை பரப்பி சில சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதாக, எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளேன் என்பதனையும், எனது சின்னமாகிய சங்குச் சின்னத்திற்கும், விருப்பு இலக்கமாகிய 7க்கும் வாக்களிப்பதன் மூலம், என்னை நீங்கள் பாரளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யலாம் என்பதனை மீண்டும் உங்களுக்கு அன்புரிமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்கும் செல்வோம்! எதிலும் வெல்வோம்!
நன்றி

இவ்வண்ணம்,
மக்கள் சேவையில்

திருமதி ரவிராஜ் சசிகலா
சின்னம் – சங்கு
விருப்பிலக்கம் – 7

Posted in Uncategorized

பொய்களை திரிபு படுத்தி கட்சியின் வளர்ச்சியை கண்டு அஞ்சும் தரப்புக்களின் கைப்பிள்ளையாக மாறி உணர்ச்சிவசப்பட்டு எல்லை மீறி உழறியுள்ளார்

தமிழ் ஈழ விடுதலை இயக்க (ரெலோ) தலைவர் மற்றும் பொருளாளர் தொடர்பில் கட்சியின் யாழ் மாவட்ட உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் ஊடகங்களுக்கு வழங்கிய செய்தியில் உண்மைத் தன்மைகள் எதுவும் இல்லை என்பதுடன் அவர் முன் வைத்த குற்றச்சாட்டுக்கள் ஆதாரங்கள் அற்றவை என்பதையும் விந்தனின் ஊடக அறிக்கைக்கு பின்னால் எம்து கட்சிக்கு எதிரான தரப்பு ஒன்றின் நிகழ்ச்சி இருப்பதையும் கடந்த காலங்களில் விந்தன் போன்று வேறு பல கட்சிகளிலும் தேர்தல் காலங்களில் ஒரு சிலர் இப்படியான மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர். அத்தேடு இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களை பொது மக்கள் இனங்கண்டு தக்க பதிலடியும் வழங்கியுள்ளனர்.

கட்சியின் தலைமைக்குழு கூட்டம் மற்றும் அதன் தீர்மானத்தின் உண்மைகளை மறைத்து பொய்களை திரிபு படுத்தியதுடன் கட்சியின் வளர்ச்சியை கண்டு அஞ்சும் தரப்புக்களின் கைப்பிள்ளையாக மாறி உணர்ச்சிவசப்பட்டு எல்லை மீறி உழறியுள்ளார்.

கடந்த காலங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் கட்சிக்கு மாறாக செயற்பட்ட போது தலைக்குழு ஒழுக்காற்று நடவடிக்கை கோரிய போது கட்சியின் பொதுக் குழுவில் பகிரங்க மன்னிப்பு கோரி உள்வாங்கப்பட்ட விந்தன் மீண்டும் ஆதாரம் அற்ற குற்றச்சாட்டை கட்சியின் மாவட்ட அல்லது தலைமைக்குழுவிலோ முன்வைக்காமல் ஊடகங்களில் முன் பேசியிருப்பது பிரிதொரு தரப்பின் தூண்டலுடன் ரெலோவைப் பலவீனப்படுத்த வேண்டும் என்ற நிகழ்ச்சி நிரலில் இருப்பதை உணர முடிகிறது.

கட்சியில் நீண்டகாலமாக பயனிப்பதாக கூறும் விந்தன் கட்சியின் தலைமைக்குழுவில் ஆதாரத்துடன் தன்னுடைய குற்றச்சாட்டை முன்வைக்காது தேர்தல் அறிவிக்கப்பட்டு ஒரு மாதம் கடந்த நிலையில் தேர்தலுக்கான வாக்களிப்பு நெருங்கும் நேரத்தில் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்ட உறுப்பினர் விந்தனுக்கு கட்சியின் நடைமுறைக்கு அமைவாக தலைக்குழு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும்.

எமது தாயக மக்களே தருணத்திற்கு ஏற்ப கதை மாறிப் பேசும் விந்தன் பழக்க தோஷத்தால் பிதற்ரி திரிவது வழக்கம். சுய ஒழுக்கமற்றவர்களின் பொய்யான கருத்துக்களுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்காமல் மனக் குழப்பம் அடையாமல் தொடர்ந்து உங்கள் மாறாத ஆதரவை வழங்குமாறு வேண்டுகிறோம்

சபா குகதாஸ்
தலைமைக்குழு உறுப்பினர்
யாழ் மாவட்ட அமைப்பாளர்
தமிழ் ஈழ விடுதலை இயக்கம்
(ரெலோ)

Posted in Uncategorized

வன்னி தேர்தல் தொகுதியின் முதன்மை வேட்பாளர் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் ஆதரவு!

வன்னி தேர்தல் தொகுதியில் சுயேட்சை குழு 4 இலாம்பு சின்னத்தில் போட்டியிடும் கட்சியின் முதன்மை வேட்பாளர் சிறிபாலன் ஜென்சி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் வேட்பாளர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக இன்றைய தினம் மன்னாரில் வைத்து அறிவித்துள்ளார்.

இன்றைய தினம் மன்னார் ரெலோ அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .

அதன்படி இந்த நாடாளுமன்ற தேர்தலில் பல சுயேட்சை குழுக்கள் போட்டியிடுகின்றன. அந்த சுயேட்சை குழுக்களின் நோக்கம் தமிழ் மக்களின் வாக்குகளை பிரித்து தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதாகும் என்பதை கடந்த சில நாட்களாக நான் அறிந்து கொண்டேன்.

இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருக்கும் சக்திகள் நிறைய பணத்தை கொட்டியுள்ளார்கள்.

அந்த அடிப்படையில் சுயேட்சை குழு 4 இலாம்பு சின்னத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளராகிய நான் தமிழ் மக்களின் பிரதி நிதிகளாக செயல்படும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு தெரிவிக்கிறேன்.

தான் போட்டியிட இருந்த சுயேட்சை குழு மாற்றத்தை தேடி ஓடிக்கொண்டிருக்கும் மாவீரர்களுக்கும் ,மாவீரர் குடும்பங்களுக்கும் மாற்றாற்றல் உள்ளவர்களுக்கும் பொய்யான வாக்குறுதியை வழங்கியதை நான் இனம் கண்டு கொண்டு உள்ளமையினால் அவர்களுக்கு என்னால் எந்த துரோகமும் இழைக்கப் படக்கூடாது என்பதற்காகவே நான் இந்த சுயேட்சை குழுவில் இருந்து வெளியேறி உள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் சுயேட்சையாக போட்டியிடும் கட்சிகள் தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடித்து தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் ஆக்காது சங்கு சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள் என கோரிக்கையும் விடுத்துள்ளார்.

இதில் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கட்சியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் டானியல் வசந்த் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்

Posted in Uncategorized

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் கிளிநொச்சி மாவட்ட காரியாலயம் கிளி நகரில் திறந்து வைக்கப் பட்டது

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் ( தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) வெற்றி வேட்பாளர் சுரேந்திரனால் கிளிநொச்சி மாவட்ட காரியாலயம் கிளி நகரில் திறந்து வைக்கப் பட்டது.

மக்களோடு சுரேந்திரன்
சுரேந்திரனோடு மக்கள்

சுமந்திரன் உண்மைக்கு புறம்பான அவதூறு பரப்பியதாக குற்றச்சாட்டு; சாள்ஸ் நிர்மலநாதன் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் உண்மைக்கு புறம்பாக தனக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் வெளியிட்டமை தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (3) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

நேற்று மன்னார் தமிழ் அரசு கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே சாள்ஸ் நிர்மலநாதன் இதனை தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

தான் மதுபானசாலைக்கு சிபாரிசு கடிதம் வழங்கியதாகவும் அதை நான் வெளிப்படையாக ஒப்புக்கொண்டதாகவும் உண்மைக்கு புறம்பான கருத்தை எனக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் சுமந்திரன் அவர்கள் கூறியிருந்தார்.

இந்த கருத்தை அவர் கூறியபோது நான் இந்தியாவில் இருந்தமையினால் மன்னார் வந்தவுடன் உண்மைக்கு புறம்பான கருத்து வெளியிட்டமை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் நிலையத்தில் அவருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளேன்.

புலம்பெயர் தமிழர்கள் பலர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் சந்திப்பை மேற்கொள்வதற்கான உதவிகளை கோரியபோது அவர்களின் தேவைகள் நிமித்தம் நான் அந்த சந்திப்புக்களை மேற்கொள்வதற்கான உதவிகளை செய்து கொடுத்தேன். அவ்வாறு சந்தித்தவர்களில் தனிப்பட்ட பழக்கத்தின் காரணமாக யாரும் அந்த வாய்ப்பை பயன்படுத்தி மதுபானசாலைகள் அமைப்பதற்கான அனுமதியை பெற்றிருந்தால் நான் அதற்கு பொறுப்பாக முடியாது.

நான் அண்மையில் ஒரு ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலாக வழங்கியிருந்தேன். ஆனால் சுமந்திரன் அவர்கள் உண்மைக்கு புறம்பாக நான் எழுத்து மூல சிபாரிசு வழங்கியதாகவும் அதை ஒத்துக்கொண்டதாகவும் சொன்ன கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.

பொலிஸார் இந்த விடயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன்.

அதனால்தான் தனக்கு இம்முறை ஆசனம் வழங்கவில்லை என சுமந்திரன் குறிப்பிடுவதாகும். அது முற்றிலும் பொய் என்றும் 2020ஆம் ஆண்டில் இருந்தே கட்சியின் செயற்பாடுகளில் இருந்த அதிருப்தி காரணமாக உளவியல் ரீதியாக கட்சியோடு பயணிப்பதா, இல்லையா? என்ற மனநிலை இருந்து வந்ததாகவும், அதேவேளை எனது சுயவிருப்பத்தினாலும் உடல் நல பிரச்சினைகளாலும் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதாலும் நானாக மேற்கொண்ட முடிவே அது என அவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக சுமந்திரன், 2020ஆம் ஆண்டுக்கு பிறகு விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வந்த நிலையில், அவருக்கு எதிராக தான் சம்பந்தன் அவர்களுக்கு கடிதம் எழுதியதாகவும் சுமந்திரன் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு இவ்வாறான கருத்துக்களை தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவருக்கு எக்காரணம் கொண்டும் கட்சியின் பதவி நிலைகள் வழங்கக்கூடாது எனவும் எழுத்து மூலமாக சம்பந்தன் ஐயாவுக்கு எழுதியிருந்தேன்.

அத்துடன் கடந்த 2020ஆம் ஆண்டு தேர்தலின் போது வன்னியில் சுமந்திரன் ஏறும் எந்த அரசியல் மேடையிலும் நான் ஏற மாட்டேன் என தெரிவித்திருந்தேன். அதே போன்று எந்த அரசியல் மேடையிலும் நான் ஏறவில்லை. அதன் காரணம் என்னவென்றால், சுமந்திரன் பிரசாரம் செய்து அதில் ஒரு வாக்கு விழுந்து நான் வெற்றி பெறக்கூடாது என்பதற்காகவே.

அவ்வாறான நிலையில், அவர் எனக்கு எதிராக பல வேலைகள் செய்திருந்தார். இருந்தாலும், வன்னி தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி சார்பாக அதிக வாக்குகளை பெற்று நான் வெற்றி பெற்றேன்.

அதேவேளை அண்மையில் கட்சியின் தலைமைத்துவம் சம்பந்தப்பட்ட விடயத்தில் சுமந்திரன் தலைவராக வந்துவிடக்கூடாது என்பதற்காக நான் நேரடியாகவே சிறிதரனுக்கு ஆதரவாக செயற்பட்டதுடன் சுமந்திரன் தலைவராக வர முடியாமைக்கு நான் பெறும் பங்காற்றியிருந்தேன். அதுவும் அவருக்கு நன்றாக தெரியும்.

இப்படியாக கட்சியில் இருந்த அதிருப்தியான நிலைமை காரணமாக இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க தேர்தலில் போட்டியிட வேண்டாம் என தீர்மானித்திருந்தேன்.

சுமந்திரனுடன் 2020ஆம் ஆண்டில் இருந்தே முரண்பாடுகளோடுதான் பயணித்தேன். இவ்வாறிருக்க, இந்த தேர்தலில் சுமந்திரனுக்கு அடிமையாக வாக்கு கேட்க முடியாது.

என்னை பொறுத்தவரையில், வன்னி மாவட்டம், திருகோணமலை மாவட்டம், அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும். ஏனென்றால், இந்த பகுதிகளில் சிங்கள, முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. ஆனால், சுமந்திரனின் இவ்வாறான தொடர்ச்சியான செயற்பாடுகளால் கட்சி அங்கத்தவர்களும் மக்களும் புலம்பெயர் அமைப்புகளும் மன விரக்தியில் இருக்கிறார்கள் என்பதை பதிவு செய்கின்றேன்.

அதேவேளை சுமந்திரனுக்கும் அவரை சார்ந்தவர்களுக்கும் ஒன்றை தெரிவித்துக்கொள்கிறேன். நான் எந்த ஒரு மதுபானசாலைக்கும் அனுமதி பெறவும் இல்லை. யாருக்கும் சிபாரிசு செய்யவுமில்லை. எனக்கு அறிமுகமானவர்கள் அதை பெற்றிருந்தால், அது அவர்களின் தனிப்பட்ட விடயம். அதற்கு நான் எந்த சிபாரிசு கடிதமும் கொடுக்கவில்லை.

சுமந்திரனின் கருத்து தொடர்பில் நான் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன்.

தேர்தல் நியமனத்துக்காக நான் வாக்கு கேட்பதாக விண்ணப்பிக்கவில்லை. அதேநேரம் தற்போது இருக்கும் தமிழரசு கட்சி நிர்வாகத்தோடு பயணிக்க முடியாது என்பதுடன் சுமந்திரன் சொல்லும் எல்லாவற்றுக்கும் தலையாட்டிக்கொண்டு இருக்க முடியாது என்பதால் தேர்தலில் இருந்து நானாகத்தான் விலகினேன்.

சுமந்திரன் தலைவராவதில் ஏற்பட்ட பிரச்சினை மற்றும் பல்வேறு வன்மத்தை மனதில் வைத்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் அவர் சார்ந்தவர்களும் தொடர்ந்து சேறு பூசும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.

அதே நேரம் சுமந்திரனுக்கு நான் பகிரங்க சவால் விடுக்கின்றேன்… நான் வழங்கிய சிபாரிசு கடிதத்தை அவர் கொண்டுவந்தால் நான் அவர் சொல்வதை செய்கிறேன் என்றார்.

பொதுத் தேர்தல் திகதிக்கு எதிரான மனு தள்ளுபடி!

நாடாளுமன்றத் தேர்தலை நவம்பர் 14ஆம் திகதி நடத்துவது அரசியலமைப்புக்கு முரணானது எனத் தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்து உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

பொதுத் தேர்தலை எதிர்வரும் 14ஆம் திகதி நடத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை அரசியலமைப்புக்கு முரணானது எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு விசாரணைகளுக்காக இன்று உயர்நீதிமன்றில் இன்று கொள்ளப்பட்டிருந்தது

சிவில் அமைப்பு ஒன்றினால் இந்த அடிப்படை உரிமை மனு உயர்நீதிமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது

அத்துடன் பொதுத் தேர்தல் திகதி தொடர்பில் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் சட்டத்திற்கு முரணானது என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்து

இந்நிலையில் இந்த மனு பிரிதி பத்மன் சூரசேன, ஷிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.

தேர்தல் சட்டத்தின் பிரகாரம் பொதுத் தேர்தலுக்கான திகதி சரியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தலுக்கான நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ளதாகவும் சட்டமா அதிபர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணியின் கருத்தை ஆராய்ந்த நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.