வடக்கு, கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டுமெனக்கோரி போராட்டம்

100 நாட்கள் செயல்முனைவின் 91 ஆவது நாள் மக்கள் குரல் திருகோணமலை மாவட்டத்தில் தம்பலகாமம் பாரதிபுர கிராமத்தில் இன்று (30) மக்களின் கௌரவமான அரசியல் தீர்வுக்கான கோரிக்கையை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஊர்வலமாக பதாகைகளை ஏந்தியவாறு தங்களது கோரிக்கைகளை எழுப்பினர். இந் 100 நாட்கள் செயல்முனைவின் 91ம் நாள் போராட்டத்தில் திருமலை பிரதேசத்தில் உள்ள பிரதேச பெண்கள், இளைஞர்கள்,விவசாயிகள்,பெண்கள் வலையமைப்பு உறுப்பினர்கள், சிறுகுழுக்களின் உங்கத்துவர்கள், ஆண்கள் மற்றும் சிவில் அமைப்புப் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

“வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்” “ நாங்கள் நாட்டை துண்டாடவோ, தனியரசோ கேட்கவில்லை. இலங்கை நாட்டுக்குள் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வையே கேட்கிறோம் ” “ வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் என்பது ஒரு ஜனநாயக உரிமையாகும் ” “ 13 வது திருத்தச்சட்டமானது அரசியலமைப்பு ரீதியாக அதிகாரப் பரவலாக்கத்துக்கான உரிமையை உறுதிப்படுத்துகிறது ” பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்போம்” எங்கள் நிலம் எமக்கு வேண்டும், நடமாடுவது எங்கள் உரிமை, பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை, ஒன்று கூடுவது எங்கள் உரிமை, மத வழிபாடு எங்கள் சுதந்திரம், எமது மத தளங்களின் புனிதத்தினை கொச்சைப்படுத்தாதே, இந்து மத ஆலயங்களின் இடங்களை திட்டமிட்டு சுபீகரிக்காதே என பல கோரிக்கைகளை இதன் போது முன்வைத்து ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.

எமது வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் வடக்கு கிழக்கு பிரதேசங்களிலுள்ள மக்களுக்கு நீதியுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டி முன்னெடுக்கப்படும் ஜனநாயகப் போராட்டங்களுக்கு பெரும் சவாலாக இலங்கை அரச படைப்பிரிவினரும், இலங்கை படைப்பிரிவுகளின் புலனாய்வினர்களும் செயற்படுவது ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் செயலாகவே நாம் கருதுவதுடன், பாதிக்கப்பட்ட மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களின் உரிமைக்கான குரல் வளையை நசிக்கும் செயலாகவே நாம் இதனை கருதுவதுடன், இவ்வாறான செயல்களை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

அத்துடன் எமது “வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்” எனும் ஜனநாயக ரீதியான மக்கள் குரலுக்கு மேன்மை தங்கிய இலங்கை சனாதிபதி அவர்கள் உதவ வேண்டும் எனவும் கோருகின்றோம் எனவும் இதன் போது மேலும் கருத்து தெரிவித்தனர்.

வெறுப்பையும், எதிர்ப்பையும் வைத்து அரசியல் செய்ய முடியாது – ஜீவன்

மலையக மறுமலர்ச்சிக்கு ஒன்றிணைந்த வேலைத்திட்டமே அவசியம். அதற்கான ஆரம்பமே இது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எனக்கு சிறந்த வழிகாட்டியாக உள்ளார். திகாம்பரம் எனது மூத்த சகோதரன் போன்றவர் என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையக திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, என்னை அன்புடன் வரவேற்ற சகோதர அரசியல் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களுக்கு நன்றிகள். நான் விருந்தாளி அல்லன. உங்களில் ஒருவன். நாம் அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகள். நான் இங்கு வந்தது குறித்து பலருக்கு பலவித உணர்வுகள் இருக்கலாம். ஆனால் எமது சமூகத்தை முன்னேற்றுவதற்கு ஒன்றிணைந்த வேலைத்திட்டம் அவசியம். அதற்கான ஆரம்பமே இது.

வெறுப்பையும், எதிர்ப்பையும் வைத்து அரசியல் செய்ய முடியாது. நீடிக்கவும் முடியாது என்பது எனது சிரிய அரசியல் வாழ்வில் நான் படித்த அனுபவம். அன்பாலும், ஒன்றிணைவாலுமே எல்லாம் சாத்தியப்படும்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எனக்கு சிறந்த வழிகாட்டி. தந்தை ஸ்தானத்தில் இருந்து என்னை வழிநடத்துகின்றார். திகாம்பரமும் எனது மூத்த சகோதரன் போன்றவர் என்றார்.

மலையகத்தில் இனி வன்முறை அரசியலுக்கு இடமில்லை – திகாம்பரம்

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களை, சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதற்கான வேலைத்திட்டத்தின்போது தமிழ் முற்போக்கு கூட்டணியும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் இணைந்து செயற்படும்.

மலையகத்தில் இனி வன்முறை அரசியலுக்கு இடமில்லை. புதிய அரசியல் கலாச்சாரம் பிறந்துள்ளது.” – என்று தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின தலைமையக திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நான் நான்கு வருடங்களாக அமைச்சராக இருந்தேன், அக்காலப்பகுதியில் மக்களுக்கு சிறந்த சேவை ஆற்றினேன். மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்கும் திட்டம் வெற்றியளிக்க பிரதான இரு தொழிற்சங்கங்களும் ஒன்றிணைய வேண்டும். கடந்த காலங்களில் தொண்டர்களை, தலைவர்கள் தூண்டிவிட்டனர். இதனால் வன்முறை அரசியல் உருவானது. சிறைச்சாலைகளுக்குகூட செல்ல வேண்டி ஏற்பட்டது.

ஆனால் இனி அவ்வாறு நடக்காது, அவர்கள் அரசியலை அவர்கள் செய்வார்கள், எங்கள் அரசியலை நாம் செய்வோம். இணைய வேண்டிய நேரத்தில் இணைவோம். ஒரு கையால் மட்டும் ஓசை எழுப்ப முடியாது. ஒரு கைகளும் அவசியம். நுவரெலியா மாவட்டத்துக்கு ஆங்கில மொழிமூல பாடசாலையொன்று அவசியம். அதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பும் அவசியம்.” – என்றார்.

தேர்தலை பிற்போட இடமளிக்கமாட்டோம்

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கிலேயே தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பில் ஆராய்வதற்கு தெரிவுக்குழுவொன்றை அமைக்குமாறு நீதி அமைச்சர் கோரியுள்ளார். இதனை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம். தேர்தலை பிற்போட இடமளிக்கமாட்டோம் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையக திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, தமிழ் முற்போக்கு கூட்டணிக்கான மக்கள் ஆதரவு அலை இன்னமும் குறையவில்லை. இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களின்போது இது நிரூபனமானது. மக்கள்தான் கூட்டணியின் ஆலமரம். அந்த சக்தி எமது பக்கம் உள்ளது.

எந்தவொரு தேர்தலையும் சந்திக்க தயார் என ராஜபக்சக்கள் கூறுகின்றனர். ஆனால் தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் ஆராய்வதற்கு தெரிவுக்குழுவொன்றை அமைக்குமாறு நீதி அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். தேர்தலை ஒத்திவைப்பதே இதன் நோக்கம். ஜனாதிபதியின் ஆலோசனையின் பிரகாரமே விஜயதாச ராஜபக்ச இவ்வாறு செயற்பட்டிருப்பார். எனவே, தேர்தல் தொடர்பில் ஆளுங்கட்சிக்குள் இரட்டை நிலைப்பாடு உள்ளது.

எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள நாம் தயார். உள்ளூராட்சி தேர்தலை பிற்போட இடமளிக்கமாட்டோம்.” – என்றார்.

பங்களாதேஷ் வங்கியின் அறிவிப்பால் இலங்கையின் மத்திய வங்கியின் வெளிநாட்டு கையிருப்புக்கு மேலும் ஒரு அடி

பங்களாதேஷின் மத்திய வங்கியான பங்களாதேஷ் வங்கி, அந்த நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளையும் பணக் கொடுப்பனவுகளை மட்டுமே மேற்கொள்ளுமாறும், சர்வதேச கொடுப்பனவுக்கு தீர்வு நுழைவாயிலின் கீழ் இலங்கை வங்கிகளுடன் கடன்களை வழங்கலை மேற்கொள்ளவேண்டாம் என்றும் உத்தரவிட்டதை அடுத்து, இந்த வாரம் இலங்கையின் ஆபத்தான குறைந்த வெளிநாட்டு கையிருப்பை சந்தித்துள்ளது.

இலங்கையின் குறைந்த அந்நிய செலாவணி கையிருப்பு மற்றும் இலங்கையின் மத்திய வங்கி, பங்களாதேஷ் வாடிக்கையாளர்களுக்கு தங்கள் வங்கிகள் மூலம் பணம் செலுத்துவதற்கு கூடுதல் அவகாசம் கோரியதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று உள்ளூர் வங்கியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆசிய கிளியரிங் யூனியன் அமைப்பு மூலம் இலங்கை வங்கிகளுடன் பரிவர்த்தனை செய்வதைத் தவிர்க்குமாறு பங்களாதேஷ் வங்கி, கடந்த புதன்கிழமை சுற்றறிக்கை மூலம் நாட்டின் வங்கிகளுக்கு உத்தரவிட்டது.

இந்த நடவடிக்கை குறித்து இலங்கை வங்கிகளுக்கு இன்னும் அதிகாரப்பூர்வமாக இலங்கை மத்திய வங்கி அறிவிக்கவில்லை. அத்துடன், இது தொடர்பில் மத்திய வங்கி அதிகாரிகளும் எந்த கருத்தையும் இதுவரை வெளியிடவில்லை. ஆசிய கிளியரிங் யூனியன் என்பது ஒரு கொடுப்பனவைச் செய்வதற்கு மூன்று மாத கால அவகாசம் அல்லது கடன் வழங்கப்படும் ஒரு தளமாக உள்ளது. எனினும் வெளிநாட்டு நாணய கையிருப்பு குறைவு காரணமாக, தமது நிலுவைக் கொடுப்பனவுகளை தீர்ப்பதற்கு இலங்கைக்கு அதன் அதிக கால அவகாசம் தேவைப்பட்ட நிலையில், இலங்கை மத்திய வங்கி அதிக காலத்தை கோரியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்த கொடுப்பனவுகளை உடனடியாக செலுத்தினால், இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டு ஒதுக்க கையிருப்பில் குறைவு ஏற்படும் என்ற நிலையும் உள்ளது என்பது இலங்கை மத்திய வங்கியின் நியாயமாக இருக்கக்கூடும். இதேவேளை ஆசிய கிளியரிங் யூனியனில் பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, ஈரான், மாலத்தீவு, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

இந்தநிலையில் இந்த திட்டத்தின் ஊடாக இலங்கையுடன் கொடுப்பனவுகளை கையாள்வதை இந்தியா ஏற்கனவே நிறுத்திவிட்டதாக நம்பப்படுவதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தின் அளவைப் பொறுத்தவரை இது மிகப் பெரிய அடியாகும் என்றும் வங்கியாளர் ஒருவர் கூறியுள்ளார்.

தேராவில் மாவீரர் துயிலும் இல்லம் பொதுமக்களால் துப்புரவு

முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தினுடைய சிரமதான பணிகள் இன்று (30) காலை ஆரம்பிகப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி இடம்பெற உள்ள நிலையில் விசுவமடு தேராவில் மாவீரர் துயிலுமில்ல பணி குழுவினரால் துயிலும் இல்ல வளாகம் சிரமதானம் செய்கின்ற வேலைகள் இன்று (30) ஆரம்பிக்கப்பட்டது.

 

இன்று காலை ஒன்பது முப்பது மணி அளவில் தேராவில் துயிலும் இல்ல வளாகத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்திய பின்னர் மக்கள் சிரமதான பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழு மற்றும் மாவீரர்களுடைய பெற்றோர் நலம் விரும்பிகள் சமூக செயற்பாட்டாளர்கள் சிவில் சமூக அமைப்பு பிரதிநிதிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் இணைந்து கொண்டு இந்த சிரமதான பணியை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

சிரமதானம் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நேரத்தில் புலனாய்வாளர்கள் அப்பகுதிக்கு வருகைதந்து புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டுள்ளனர்.

 

தேராவில் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த பெரும் பகுதியை இராணுவம் அபகரித்து வைத்துள்ள நிலையில் எஞ்சிய சிறு நிலப்பரப்பிலேயே மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடதக்கது.

காணாமல்போனோர் அலுவலக தவிசாளரின் கருத்து கோட்டாவின் கருத்தை ஒத்திருக்கிறது – சர்வதேச ஜூரர்கள் ஆணைக்குழு

வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் மகேஷ் கட்டுலந்தவினால் வெளியிடப்பட்டுள்ள கருத்து கடந்த 2020 ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்ட கருத்தை ஒத்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு, இதுகுறித்துத் தமது கரிசனையையும் வெளிப்படுத்தியுள்ளது.

படையினரிடம் சரணடைந்தவர்கள் காணாமல்போனமைக்கான ஆதாரங்கள் இல்லை என்றும், காணாமல்போனோரில் பெரும்பான்மையானோர் விடுதலைப்புலிகள் இயக்கத்தினால் அல்லது அதற்கு எதிரான குழுக்களாலேயே கடத்தப்பட்டார்கள் என்றும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் மகேஷ் கட்டுலந்த தெரிவித்திருப்பதாக ராய்ட்டர் செய்திச்சேவையில் கடந்த வியாழக்கிழமை வெளியான செய்தி பல்வேறு சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளது.

இறுதிக்கட்டப்போரின்போது தமது உறவினர்களைப் படையினரிடம் கையளித்ததாகவும், அவர்கள் காணாமல்போயிருப்பதாகவும், அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்துமாறும் வலியுறுத்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் பல வருடங்களாகத் தொடர்ச்சியாகக் கவனயீர்ப்புப்போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.

அதேபோன்று படையினரிடம் கையளிக்கப்பட்டதன் பின்னரும் சரணடைந்ததன் பின்னரும் காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை, சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்றிட்டம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூகக்கட்டமைப்புக்கள் ஆவணப்படுத்தியுள்ளன. அவைகுறித்து காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் அறியவில்லையா? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் இவ்விவகாரம் தொடர்பில் தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு, காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் மகேஷ் கட்டுலந்தவினால் வெளியிடப்பட்டுள்ள கருத்து தொடர்பில் தாம் கரிசனையடைவதாகத் தெரிவித்துள்ளது.

அதுமாத்திரமன்றி மகேஷ் கட்டுலந்தவின் கருத்து கடந்த 2020 ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்ட கருத்தை ஒத்ததாகக் காணப்படுவதாகவும் சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் சர்வதேச மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முன்வைக்கப்படும் தம்மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கான பிரதிபலிப்பாக இலங்கை தமது உள்ளகப்பொறிமுறையை ‘விளம்பரப்படுத்திவரும்’ வேளையிலேயே இவ்வாறானதொரு கருத்து வெளியிடப்பட்டிருக்கின்றது என்றும் அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய சட்டத்தை சமர்ப்பிக்காவிட்டால் தேர்தல் இடம்பெறாது – தேர்தல் ஆணையாளர்

மாகாணசபைகளுக்கான புதிய சட்ட திருத்தத்தினை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து , அதனை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறில்லை எனில் மாகாணசபை தேர்தல் இடம்பெறாது. தேர்தல் இடம்பெறாவிட்டால் மாகாணசபைகள் மக்கள் பிரதிநிதிகளால் அன்றி, அதிகாரிகளினாலேயே தொடர்ந்தும் நிர்வகிக்கப்படும் நிலைமை ஏற்படும் என்று சுயாதீன தேர்தர்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

மாகாணசபைகளுக்காக ஒதுக்கப்படும் நிதி, அவற்றின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகள் , பாடசாலைகள் உள்ளிட்டவற்றின் புனர்நிர்மாணம் உட்பட பல்வேறு பணிகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. எனவே மாகாணசபைகளை வெள்ளை யானை என்று விமர்சிப்பது பொருத்தமற்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மாகாணசபை தேர்தல் தொடர்ந்தும் காலம் தாழ்த்தப்பட்டு வரும் நிலையில் , அது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் நிலைப்பாட்டை தெரிவிக்கும் போதே ஆணையாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொதுத் தேர்தலின் போது பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும். எமது நாட்டில் நடைமுறையிலுள்ள அரசியலமைப்பிற்கமைய அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை ஜனாதிபதிக்கு கூட பாராளுமன்றத்தைக் கலைக்க முடியாது. ஜனாதிபதி விரும்பினாலும் அவரால் அதனை செய்ய முடியாது. மாறாக அதற்கு முன்னர் கலைக்க வேண்டுமெனில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் அதற்கான யோசனையை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறான யோசனை நிறைவேற்றப்பட்டாலும் அதனை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்பதை ஜனாதிபதி தீர்மானிக்க வேண்டும்.

2018 இல் 7 பேர் கொண்ட உயர்நீதிமன்ற நீதியரசர் குழாமினால் தெளிவாக இவ்விடயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டது. அதற்கமைய சட்ட ரீதியாக தற்போதைய காலத்தில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் ஆணைக்குழுவிற்குக் கிடையாது.  தற்போது மாகாணசபைகள் இல்லை என்று சிலர் கூறுகின்றனர். மாகாணசபைகள் காணப்படுகின்றன. அதற்குரிய அமைச்சு காணப்படுகிறது. அமைச்சின் கீழ் இதனுடன் தொடர்புடைய பல நிறுவனங்கள் இயங்குகின்றன. மாகாண சேவை ஆணைக்குழு உள்ளிட்டவை அவற்றில் உள்ளடங்குகின்றன. அரசாங்கத்தினால் இதற்கு நிதியும் ஒதுக்கப்படுகிறது. எனவே மாகாணசபைகளுக்கான பிரதிநிதிகள் மாத்திரமே தற்போது இல்லை.

மக்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் எந்தவொரு நிறுவனமும் மக்கள் பிரதிநிதிகள் இன்றி நிர்வகிக்கப்படக் கூடாது என்பதையே தேர்தல்கள் ஆணைக்குழு ஆரம்பம் முதல் வலியுறுத்தி வருகிறது.எனவே இவற்றுக்கு நிச்சயம் மக்கள் பிரதிநிதிகள் நியமிக்கப்பட வேண்டும். மாகாணசபைகளை வெள்ளை யானைகள் என்றும் சிலர் விமர்ச்சிக்கின்றனர். மாகாணசபைகளுக்கான நிதி தொடர்பில் ஆராய்ந்த போது , அதில் சுமார் 90 சதவீத நிதி புனர்நிர்மாணப்பணிகளுக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது. மாகாணசபைகளுக்கு உட்பட்ட பாடசாலைகள் , வைத்தியசாலைகளில் அதற்கான செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இது மாகாணசபைகளை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களுக்காகவே நிதி ஒதுக்கப்படுவதாக சிலர் குறிப்பிடுகின்றனர்.மாகாணசபை வரவு – செலவு திட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளுக்காக 0.03 சதவீதமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையா வெள்ளை யானை என்கின்றனர்?

எது எவ்வாறிருப்பினும் மக்கள் பிரதிநிதிகள் இன்றி மாகாணசபைகளை நிர்வகித்துச் செல்கின்றமையை தேர்தல் ஆணைக்குழு கடுமையாக எதிர்க்கின்றது. இதனை நாம் தெரிவுக்குழுவிலும் தெரிவித்திருக்கின்றோம். மாகாணசபை சட்டங்கள் இரண்டு காணப்படுகின்றன. 88 (2) மற்றும் 2017 (17) ஆகிய இரு சட்டங்கள் காணப்படுகின்றன.  2017 (17) சட்டத்திலுள்ள எல்லை நிர்ணய அறிக்கை தோல்வியடைந்துள்ளது. குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்ட போதிலும் , அதிலுள்ள முக்கிய விடயமான எல்லை நிர்ணய அறிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதனை முன்வைத்த அமைச்சரும் கூட அதற்கு எதிராகவே வாக்களித்தார்.

குறித்த யோசனை தோல்வியடைந்ததனால் , பிரதமர் தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் , அந்தக் குழு இரு மாதங்களுக்குள் அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. அதற்கமைய நியமிக்கப்பட்ட குழு ஒரு தடவை மாத்திரமே கூடியது. அதன் பின்னர் எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.எனவே தான் புதிய சட்ட நடைமுறைப்படுத்தப்படாமையின் காரணமாக , பழைய சட்டத்தின் கீழ் தேர்தலை நடத்த முடியும் என்று நாம் குறிப்பிட்டோம்.

எவ்வாறிருப்பினும் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டமையின் காரணமாக , பழைய சட்டத்தின் கீழ் நடத்த முடியாது என்றும் , மாறாக புதிய சட்டத்தில் ஒரு சிறிய திருத்தத்தினை மேற்கொண்டு அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே சட்டமா அதிபரின் நிலைப்பாடாகக் காணப்பட்டது. அதற்கமைய புதிய திருத்தத்தில் சிறிய திருத்தத்தினை மேற்கொண்டு , மாகாணசபைகளை பழைய முறைமையின் கீழ் நடத்திச் செல்வதற்கும் , அதன் பின்னர் எல்லை நிர்ணயத்துடன் அடுத்தடுத்த மாகாணசபைகளை நடத்திச் செல்வதற்கும் தெரிவு தீர்மானித்தது.

எனவே இதனை நடைமுறைப்படுத்துவதற்கு மாகாணசபைகளுக்கான புதிய சட்ட திருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அதனை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறில்லை எனில் மாகாணசபை தேர்தல்கள் நடைபெறாது. மக்கள் பிரதிநிதிகள் இன்றி தொடர்ந்தும் அதிகாரிகளால் மாகாணசபைகள் நிர்வகிக்கப்படும். மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் இதுவே தேர்தல் ஆணைக்குழுவின் நிலைப்பாடாகும்.

கௌரி நீதியின் குரல் : அஞ்சலி நிகழ்வில் ரெலோ தலைவர் பங்கேற்பு

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா எழுதிய கௌரி நீதியின் குரல் புத்தகமும் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் என்.சிறிகாந்தா, பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், புளொட் தலைவர் த.சித்தார்த்தன், தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.சிசிறிதரன், செ.கஜேந்திரன், முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர்கள் பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், முன்னாள் மாகாணசபை முன்னாள் உறுப்பினர்பா.கஜதீபன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா, இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளை தலைவரான சிரேஷ்ட சட்டத்தரணி வி.எஸ். தவராசாவின் பாரியாராவார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதான பலருக்காக நீதிமன்றங்களில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கத்தோலிக்க ஆயர்கள் விடுத்துள்ள கோரிக்கை

இலங்கை நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இவ்வேளையில், தேவையுடையோருக்கு மருந்துகள் மற்றும் உலர் உணவுகளை வழங்குமாறு கத்தோலிக்க ஆயர்கள் பொது மக்களை வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை, நாட்டில் துன்பப்படுவோரிடம் மக்கள் இரக்கத்துடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

“உலர் உணவுகள், குழந்தைகளுக்கான பால்மா மற்றும் ஏழை மக்களுக்கு மருந்துகள் வழங்குவதற்கு அனைத்து செலவுகளும் ஒதுக்கப்பட வேண்டும்” என பேரவையின் தலைவர் அருட்தந்தை ஹரோல்ட் அன்ரனி பெரேரா மற்றும் செயலாளர் நாயகம் ஆயர் ஜே.டி. அன்ரனி ஜெயக்கொடி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நத்தார் பண்டிகையை வெளிப்புறக் கொண்டாட்டங்களுக்கான ஒரு சந்தர்ப்பமாக மாற்றுவதைத் தவிர்க்குமாறு பக்தர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என ஆயர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை 1948 இல் சுதந்திரம் பெற்ற பின்னர் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. கடந்த ஜூன் மாதம் முதல் மருந்து தட்டுப்பாட்டுடன் போராடி வருகிறது. ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் மற்றும் உணவு விவசாய அமைப்பு ஆகியவை, நாட்டில் 6.3 மில்லியன் மக்கள் மிதமான மற்றும் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்வதாக எச்சரித்துள்ளனர்.

“நத்தார் என்பது எமது நாட்டைக் குணப்படுத்தவும், ஏழைகள் மற்றும் துன்பப்படும் மக்களுக்கு ஆறுதல் அளிக்கவும் ஒரு நேரம்” என ஆயர்கள் தெரிவித்துள்ளனர்.