சிங்களப் பேரினவாதம் தமிழர்களின் நிலங்களை திட்டமிட்டுக் கூறு போடுகின்றது-தவராசா கலையரசன்

திருகோணமலை மாவட்டத்தைக் குறிவைத்து சிங்களப் பேரினவாதம் தமது பணிகளை மிக வேகமாக ஆரம்பித்துள்ளது. தொல்லியல், வனபரிபாலனம் எனத் தமிழர்களின் பாரம்பரிய நிலங்கள் திட்டமிட்டு கூறு போடுகின்ற நிலைமையே நடந்து கொண்டிருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

திருகோணமலையில் இடம்பெற்ற இந்திய துாதுவருடனான நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை இந்தியா என்கின்ற நட்புறவோடு நீணட காலமாக இலங்கைக்குப் பல உதவிகளை வழங்கிய நாடாக அண்மையில் உள்ள நாடு என்ற அடிப்படையில் இந்தியா அமைந்துள்ளது.

இந்த நாட்டிலே தமிழர்களாகிய நாங்கள் எங்களுடைய கலை கலாசார அம்சங்களோடு வாழ வேண்டும் என்று நினைக்கின்றோம் ஆனால் திட்டமிட்டு எம்மினத்தின மீது சிங்களப் போனவாதம் திணிப்புகளைச் செய்து கொண்டிருக்கின்றது.

குறிப்பாக திருகோணமலை மாவட்டத்திலே திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் தொல்லியல் திணைக்களம் என்பவற்றின் மூலம் எமது புனிதத்தலத்தின் புனிதத்தைக் கெடுப்பதற்குரிய நடடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் இந்திய உயர்ஸ்தானிகரின் திருகோணமலை மாவட்ட வருகை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.

அது மாத்திரமல்லாமல் திரியாய் என்று சொல்லப்படுகின்ற கிராமத்தை மையமாக வைத்து தொல்லியல் திணைக்களம், வனபரிபாலன இலாகா போன்ற திணைக்களங்களுடாகத் தமிழர்களின் பாரம்பரிய நிலங்கள் திட்டமிட்டு கூறு போடுகின்ற நிலைமையே நடந்து கொண்டிருக்கின்றது. மிக வேகமாக இந்த மாவட்டத்தைக் குறி வைத்து சிங்களப் பேரினவாதம் தமது பணிகளை ஆரம்பித்துள்ளது. இதனை இந்த நாட்டின் நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கின்ற செயற்பாடாகவே நாங்கள் கருதுகின்றோம். இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்து இந்த நாட்டிலே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது.

நாட்டின் புதிய ஜனாதியாக ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தெரிவு செய்யப்பட்ட போதும் ராஜபக்ச காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அந்த சிங்கள அரச தீவிரவாத செயற்பாடு மிகவும் மோசமாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவர் பதவிக்கு வந்தபோது இந்த நாட்டில் சமாதானம், சமத்துவம், சகோதரத்துவத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற அடிப்படையில் பேசியிருந்தாலும் அதற்கு மாறான செயற்பாடுகளே எமது தமிழர் பிரதேசத்திலே நடந்து கொண்டிருக்கின்றன.

எனவே இந்த நாட்டில் சமாதானம் சமத்துவம், சகோதரத்துவம் நிலைநாட்டப்பட வேண்டுமானால் தமிழர் பிரதேசங்களிலே இடம்பெறுகின்ற நில ஆக்கிரமிப்புகள், மத ரீதியான அடக்குமுறை என்பன நிறுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

Posted in Uncategorized

பொருளாதார நெருக்கடிக்கான காரணங்களை ஆராய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானம் !

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கான காரணங்கள் குறித்து விசாரணைகளை ஆரம்பிக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.

மாறிவரும் அரசியல் காரணங்களால் பொருளாதாரத்தில் கொள்கை மாற்றங்கள் ஏற்படுத்திய தாக்கம் குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.

மேலும் பொருளாதாரச் சரிவை ஏற்படுத்திய கொள்கை முடிவுகளை எடுப்பதில் அதிகாரிகள் நடந்துகொண்ட விதம் குறித்தும் கவனம் செலுத்த ஆணைக்குழு எதிர்பார்க்கிறது.

பொருளாதார நெருக்கடியின் ஊடாக மக்களின் வாழ்வுரிமை மீறப்பட்டதன் காரணமாகவே இந்த விசாரணை நடத்தப்படுவதாக மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு நாட்டில் வேரூன்றி இருக்கும் ஊழல்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென மனித உரிமைகள் ஆணையாளர் அண்மையில் மனித உரிமைகள் பேரவை அமர்வில் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கையில் கடந்த கால மற்றும் அண்மைக்கால மனித உரிமை மீறல்கள் மற்றும் பொருளாதார குற்றங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் மனித உரிமைகள் ஆணையாளர் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

டேவிட் மைக்கினன் உள்ளிட்டோரை சந்தித்தார் அலி சப்ரி !

அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் ஜுலி சங், பிரித்தானியாவின் உயர்ஸ்தானிகர் ஷாரா ஹல்டன், கனடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மைக்கினன் ஆகியோரை வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இலங்கையின் மனித உரிமைகள் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவித்தல் எனும் தலைப்பில் புதிய தீர்மானத்திற்கான வரைவு இறுதிக் கட்டத்தினை எட்டியிருக்கும் நிலையிலேயே இந்தச் சந்திப்பு நேற்று நடைபெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பின்போது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையை ஏற்றுக்கொள்ள முடியாமைக்கான காரணங்களை அவர் தெளிவு படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, இலங்கை குறித்த புதிய தீர்மானது, நாட்டின் அரசியலமைப்பினை மீறுவதாக அமைந்திருப்பதாக இராஜதந்திரிகளிடத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், புதிய தீர்மானத்தில் இறுதி உள்ளடக்கத்தில் நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற செயற்பாடுகளையும் சுட்டிக்காட்ட வேண்டும் என்றும் வெளிவிவகார அமைச்சர் கேரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், பொருளாதார மீட்சிக்கான செயற்பாடுகளில் அமெரிக்கா, பிரித்தானிய,கனடா உள்ளிட்ட நாடுகளின் கரிசனைகளும் ஒத்துழைப்புக்களும் தொடரவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Posted in Uncategorized

புதிய அமைச்சரவை நியமனம் இவ்வாரம் இடம்பெறலாம்?

புதிய அமைச்சரவை நியமனம் இவ்வாரம் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று(சனிக்கிழமை) அதிகாலை நாடு திரும்பியுள்ளார்.

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் ஜனாதிபதி கலந்துகொண்டிருந்தார்.

அத்துடன், ஜப்பானிய பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களையும் அவர் சந்தித்து பேசியிருந்தார்.

அதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர்களின் கூட்டத்திற்கு தலைமை தாங்குவதற்காக பிலிப்பைன்ஸிற்கு சென்றிருந்தார்.

இந்நிலையில் புதிய அமைச்சரவை நியமனம் இவ்வாரம் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Posted in Uncategorized

கடந்த 8 வருடங்களில் ஜனாதிபதி ஆணைக்குழுக்களிற்காக ரூ.504 மில்லியன் செலவு

கடந்த எட்டு வருடங்களில் நாட்டை ஆட்சி செய்த அரசாங்கங்கள் நியமித்த, ஜனாதிபதி ஆணைக் குழுக்களுக்கு 504 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பப்பட்ட விண்ணப்பத்தின் மூலம், இந்த தகவல் தெரியவந்துள்ளது.

கோட்டாபய தலைமையிலான அரசின் ஆட்சிக்காலத்திலேல் அதிகபட்சமாக 120 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளமை இதில் தெரியவந்துள்ளது.

இதேவேளை நல்லாட்சி அரசாங்கத்தின் ஐந்து ஆண்டுகளில், ஐந்துஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு அதற்காக 254 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை வெளியிடும் இந்த விசேட ஜனாதிபதி ஆணைக் குழுக்களின் முடிவுகள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

எனவே, இந்தச் செலவினங்களிற்கு பலன் கிடைத்துள்ளதா என்பதை அளவிட முடியவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது

Posted in Uncategorized

ஐ.நாவில் இலங்கைக்கு ஏற்படப்போகும் நிலை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட உள்ள 51/1 தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்திருந்தாலும், இதில் இலங்கைக்கு தோல்வியே கிட்டும் என  ஐக்கிய மக்கள் சக்தி ​தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ​இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு  உரையாற்றும்போதே அக்கட்சி எம்.பி ஹர்ஷ டி சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உயர் பாதுகாப்பு வலயங்களை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணர்தவனவே கொண்டுவந்துள்ளார். அன்று செய்த அதே சண்டித்தனங்களையே கமல் குணர்தன செய்து வருகிறார் எனவும் கூறினார்.

ரதுபஸ்வலயில் மக்கள் தண்ணீருக்காகப் போராடியபோது அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டது யார்? கோட்டாபய ராஜபக்ஷ இல்லையா? அப்படி என்றால் நாளை மக்கள் உணவுக்காக வீதிக்கு இறங்கினால் அவர்கள் மீது அரசாங்கம் துப்பாக்கிச் சூடு நடத்துமா? எனவும் வினவினார்.

அமெரிக்காவிலிருந்து மீண்டும் உதவிகள்

அமெரிக்காவிடமிருந்து 12 மில்லியன் டொலர் பெறுமதியான வைத்திய நிவாரண உதவிகள் இலங்கைக்கு கிடைத்துள்ளன.

அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் தலையீட்டுடன் இந்த வைத்திய நிவாரணப் பொருள்கள் கிடைத்துள்ளது என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதரகம், அமெரிக்க மனிதாபிமான உதவி அமைப்புகள் என்பன இணைந்து இந்த மருத்துவ உதவிகளை வழங்க முன்வந்துள்ளதுடன், 3 கட்டங்களின் கீழ் சுகாதார அமைச்சிடம் இந்த மருத்துவப் பொருள்கள் கையளிக்கப்பட்டுள்ளது.

அதன் இறுதி கட்ட உதவிப் பொருள்கள் இன்று இலங்கையிடம் கையளிக்கப்படவுள்ளது.

Posted in Uncategorized

சுதந்திரக் கட்சியினருக்கு இந்த நோய் இருக்கிறது

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள சிலருக்கு ஆளுங்கட்சி பதவிகள் இல்லாது இருக்க முடியாதென அக்கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 1994ஆம் ஆண்டிலிருந்து 25 வருடங்களுக்கு மேலாக நாம் நாட்டை ஆட்சி செய்துள்ளோம். சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்களே நாட்டின் ஜனாதிபதியாக இருந்திருக்கிறார்கள்.

இதனால் சுதந்திரக் கட்சியில் உள்ள சிலருக்கு நோய் ஒன்று இருக்கிறது.  ஆட்சியதிகாரத்தில் தொடர்ந்து இருந்ததால், பதவிகள் இல்லாது இருக்க முடியாது. இதுவொரு நோய் எனவும்​ தெரிவித்தார்.

”போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய இளைஞர்களை சமூகமயப்படுத்த வேண்டும்”

கடந்த மாதங்களில் போராட்டக்களத்தை வழிநடத்தியவர்களை கைது செய்து, அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய இளைஞர்களை சமூகமயப்படுத்தும் வேலைத்திட்டமொன்று அவசியம் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இந்நாட்களில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மறுசீரமைப்பு கூட்டங்களில்  கலந்துகொள்வதுடன், வெலிமடை நுகதலாவையில் இன்று நடைபெற்ற செயற்றிட்டத்திலும் பங்கேற்றிருந்தார்.

நிகழ்வை பதிவு செய்வதற்கு ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன், கூட்டத்தின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.

இதன்போது, போராட்டக்காரர்களுக்காக புனர்வாழ்வு பணியகங்களை அமைக்கும் திட்டம் உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது.

அதன்போது பதிலளித்த அவர், அவ்வாறானதொரு யோசனை அரசாங்க தரப்பிலிருந்து முன்வைக்கப்படவில்லை. போராட்டக்களத்துடன் தொடர்புடைய அப்பாவி இளைஞர்களும் இருக்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும்.

அவர்களை சிறையில் அடைத்து , தடுத்து வைத்து குறைந்தபட்சம் வேலையொன்றையேனும் பெற்றுக்கொள்ள முடியாதவாறான சூழலை ஏற்படுத்துவது பிழையான விடயமாகும். எனது மனைவியின் வீட்டிற்கும் தீ வைத்தனர். எனது வீட்டிற்கும் தீ ​வைத்தனர். இதனை வழிநடத்தியவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்.

எனினும், வழிநடத்தியவர்கள் வெளியில் சுதந்திரமாக இருக்கும்போது, அதற்கு ஆதரவு வழங்கிய இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைப்பதும் தடுத்து வைப்பதும் பயனற்றது. வழிநடத்தியவர்களை கைது செய்ய வேண்டும். போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியவர்களை ஏதேனுமொரு வேலைத்திட்டத்தின் மூலம் சமூயமயப்படுத்த வேண்டும் என்றார்.

உயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வாபஸ்!

கொழும்பின் பல பகுதிகளை உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (01) அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளார்.