“ஐ.எம்.எப் உடனான பேச்சுவார்த்தைகள் முடிவடையும் தருவாயில் உள்ளது”

சரியான ஈஸ்டர் ஞாயிறு விசாரணைகள் இன்மையால் இந்த பிரச்சினை இன்னும் முழுமையாக தீர்க்கப்படவில்லை என பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மே 13ஆம் திகதி தாம் பிரதமராகப் பதவியேற்ற போது, ​​நாளொன்றுக்கு 5 மணித்தியாலங்கள் மின்வெட்டு ஏற்பட்டதன் மூலம் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருந்ததாக பதில் ஜனாதிபதி விக்கிரமசிங்க விசேட அறிக்கையில் விளக்கமளித்துள்ளார். அதன் பின்னர் இரண்டு மாதங்களில் மின்சாரம் 3 மணித்தியாலமாக குறைக்கப்பட்டு விவசாயிகளுக்கு உரம் வழங்கப்பட்டு நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு தீர்க்கப்பட்டுள்ளதாக பதில் ஜனாதிபதி விளக்கமளித்துள்ளார்.

ஜூலை மாதம் எரிபொருள் விநியோகத்திற்கு கடினமான காலமாக இருக்கும் என்று அவர் விளக்கினார். எவ்வாறாயினும், டீசல் இருப்புக்கள் பாதுகாக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன, அதே நேரத்தில் ஜூலை 21 முதல் பெட்ரோல் விநியோகிக்கப்படும்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நாட்டின் குடிமக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் விளக்கினார். 2 ஏக்கருக்கும் குறைவான வயல்களை பயிரிட்ட நெற்செய்கையாளர்களின் கடன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பதில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில், நாட்டிலும் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை எடுத்துரைத்த பதில் ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) பேச்சுவார்த்தைகள் முடிவடையும் தருவாயில் இருப்பதாகவும், வெளிநாடுகளுடனான உதவிக்கான கலந்துரையாடல்களும் முன்னேறி வருவதாகவும் விளக்கமளித்தார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் முழுமையற்ற தன்மை காரணமாக இங்கிலாந்து அரசாங்கம் மற்றும் அவர்களின் புலனாய்வு சேவைகளின் உதவியை கோருவதாகவும் பதில் ஜனாதிபதி விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையே காரணம் என விளக்கமளித்த அவர், பொதுமக்களின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் 19வது திருத்தச் சட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் எனவும் தெரிவித்தார்.

நாட்டின் அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும் சக்திகள் சமூகத்திற்குள் இருப்பதாக பதில் ஜனாதிபதி விளக்கமளித்தார். இந்த கூறுகள் நாட்டின் முன்னேற்றத்தை சீர்குலைப்பதில் இருந்து தடை செய்யப்படும் என்று அவர் விளக்கினார்.

நியாயமான கவலைகளைக் கொண்ட அமைதியான போராட்டக்காரர்கள் பிரசினைகள் அவர்களுக்கான தீர்வுகள் கண்டுபிடிக்கப்படும் என்று விக்கிரமசிங்க மேலும் கூறினார்.

நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, தனிநபரின் கருத்து வேறுபாடுகளால் நாடு பாதிக்கப்படுவதற்கு இடமளிக்க வேண்டாம் என பதில் ஜனாதிபதி விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் வகையில் அனைத்துக் கட்சி ஆட்சியை அமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Posted in Uncategorized

நடுநிலை வகிப்பது ஒரு தரப்பை வெல்ல வைக்கும் முயற்சி. யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவிப்பு.

யாரிடமும் பேரம் பேசாமல் நடுநிலை வகிப்பதென்பது யாரையோ வெல்ல வைப்பதற்கான நிகழ்ச்சி நிரலாகும். அவ்வாறு செயற்படும் தமிழ் தரப்புகளை இனம் கண்டு தமிழ் அரசியல் தரப்பில் இருந்த அகற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமென
யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்தார்.

சமகால நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் யாழ் மாநகர முதல்வர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்கக்கூடிய சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டிருக்கின்றது.
தென்னிலங்கையிலே போராடுகின்ற சக்திகள் கூட தமிழ் மக்கள் தொடர்பான விடயங்கள் மீது மெல்ல மெல்ல அக்கறை செலுத்துவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

இலங்கையின் இனப் பிரச்சினைக்கு முற்று முழுதாக ஒரு தீர்வை காண்பதே தற்போதைய பொருளாதார பிரச்சினைக்கு தீர்வாக இருக்கும்.

தற்போது உருவாகியுள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கட்சிகள் முடிவு எடுக்க வேண்டும். தமிழ் கட்சிகள் குறுகிய நோக்கங்களை கைவிட்டு தமிழ் மக்களுக்காக சிந்திக்க வேண்டும். தமிழ் தேசியம் என்று சொல்கின்ற நபர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ் மக்களுடைய நன்மைக்காக ஒரு முடிவை எடுத்து ஒரணியாக செயலாற்றுவது கட்டாயம். இந்த ஜனாதிபதி தேர்தலிலே என்ன நிலைப்பாட்டை தமிழ் மக்கள் சார்பாக எடுக்க வேண்டும் என்பதை நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் பொது அமைப்புக்களுடன் இணைந்து ஆலோசனை செய்ய வேண்டியது கட்டாயமாகும்.

தமிழ் சிவில் சமூகத்தில் அரசியல் சார்ந்து சிந்திக்கக்கூடிய கல்வியலாளர்களுடன் ஆலோசனைகளை மேற்கொண்டு கட்டாயம் இதனை செய்ய வேண்டும். அவ்வாறு ஆலோசனையை
செய்யமாட்டோம் என சொன்னால் தனிப்பட்ட நிகழ்ச்சிநிரலே அவர்களுக்கு இருக்கக்கூடும்.
தமிழர்களின் தலைவிதியை தீர்மானிக்கும் விடயத்துக்காக ஒற்றுமைப்பட மாட்டோம் ஒன்றாக முடிவெடுக்க மாட்டோம் என்று யாராவது சொன்னால் கூட அவர்கள் மீது சந்தேகப்பட வேண்டிய நிலையே காணப்படுகின்றது.

பேரம் பேசுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து இருக்கின்றது. ஜனாதிபதியாக வரக்கூடியவர்களிடமிருந்து தமிழ் மக்களுக்கான குறுகிய கால பிரச்சினைகள் மற்றும் நீண்ட கால பிரச்சினைகள் என்ற அடிப்படையிலே வாக்குறுதிகளை பெற்றுக்கொள்ள வேண்டியது கட்டாயம். ஆக குறைந்தது அரசியல் கைதிகளினுடைய விடுதலை, ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்ற காணிகளை விடுவித்தல்,
காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கான தீர்வை வழங்குவதற்கான உத்தரவாதம் போன்றவற்றுக்கு வாக்குறுதியை பெற வேண்டும்.

பாதிக்கப்பட்ட வடகிழக்கை அபிவிருத்தி செய்வதற்காக வட கிழக்கு மையப்படுத்திய பொருளாதார அதிகார சபையை நிறுவுவதற்கு வரப்போகும் ஆட்சியாளர்களுடன் சம்மதித்து அதை நிறுவ வலியுறுத்த வேண்டும்
அரசியல் தீர்வு தொடர்பாக காத்திரமான ஒரு உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்த வேண்டும்.

இதை எங்கள் கட்சிகள் செய்ய தவறி வார்த்தை ஜாலங்களை அள்ளி வீசினால் அந்த அரசியல் கட்சிகளுக்கு தென்னிலங்கையில் ஏற்பட்டது போன்ற சூறாவளியை வடகிழக்கில் தமிழ் மக்கள் ஏற்படுத்துவார்கள் என்பதை நாம் கூறிக் கொள்ள விரும்புகிறோம்.

எதிர்வரும் காலங்களில் தென்னிலங்கை அரசியல் பரப்பில் மாத்திரமல்ல தமிழ் அரசியல் தலைவர்களுக்கும் மறக்க முடியாத அனுபவங்களை கொடுக்கக்கூடிய காலமாக மாறிவிடும். இந்த சந்தர்ப்பத்தை வெறுமென கைவிடுவார்களாக இருந்தால் தமிழ் மக்கள் தகுந்த பாடத்தை கொடுப்பார்கள்.

யாரிடமும் பேரம் பேசாமல் நடுநிலை வகிப்பதென்பது யாரையோ வெல்ல வைப்பதற்கான நிகழ்ச்சி நிரலாகும். அவ்வாறு செயற்படும் தமிழ் தரப்புகளை இனம் கண்டு தமிழ் அரசியல் தரப்பில் இருந்த அகற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றார்.

Posted in Uncategorized

மனசாட்சிக்கு இணங்க செயற்பட வேண்டும் – பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

கட்சி அரசியல் அதிகார திட்டங்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்குவது போன்ற மோசடிகளை புறந்தள்ளி விட்டு, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றக்கூடிய தலைமைத்துவத்தை தெரிவு செய்ய மனசாட்சிக்கு இணங்க செயற்பட வேண்டும் என கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ள பகிரங்க கடிதத்தில் அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்காக கூடிய பங்களிப்பை வழங்க கிடைத்துள்ள வரலாற்று சிறப்புமிக்க சந்தர்ப்பத்தை தவறவிட வேண்டாம்.

அனைத்து அதிகாரங்களுடன் கூடிய ஜனாதிபதி ஒருவர் அதிகாரத்தை கைவிட்டு செல்ல நேரிட்ட அரிய சந்தர்ப்பத்தில், தாய் நாட்டின் எதிர்காலத்திற்காக எடுக்க வேண்டிய மிக தீர்மானகரமான முடிவை நோக்கி நாட்டின் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

நாடாளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் கூடி மக்களின் நிலைப்பாட்டுக்கு முரணான முடிவை எடுப்பார்களோ என்ற மிகப்பெரிய அச்சம் மக்களுக்குள் காணப்படுகிறது.

குறுகிய காலத்திற்கு கிடைக்கும் அரசியல் அதிகாரத்தை விட ஆத்ம கௌரவமும் தாய் நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளும் முக்கியமானவை எனவும் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

Posted in Uncategorized

நெருக்கடியான தருணத்தில் இலங்கைக்கு உதவுவதற்கு பிரிட்டன் நடவடிக்கை எடுக்கவில்லை- முன்னாள் இராஜதந்திரி பீட்டர் ஹீப் கவலை

இலங்கைக்கு சர்வதேச சமூகம் உதவி வழங்கும் நடவடிக்கைகளிற்கு பிரிட்டன் தலைமை தாங்க வேண்டும் என பிரிட்டனின் ஓய்வு பெற்ற இராஜதந்திரி பீட்டர் ஹீப் கோரிக்கை விடுத்துள்ளார்.

கார்டியன் ஊடகத்தில் வெளிவந்துள்ள இது தொடர்பான செய்தியில்,

இலங்கை நெருக்கடிக்கான பிரிட்டன் அரசாங்கத்தின் பதில் நடவடிக்கை வெக்கக்கேடானது. மக்கள் பட்டினியால் அவதியுறுகின்றனர், மருந்துகள் இன்மையால் உயிரிழக்கின்றனர். போதியளவு எரிபொருள் இல்லாததால் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனர் மக்கள். மின்சாரத் தட்டுப்பாடு காணப்படுகின்றது என அவர் சுட்டிகாட்டியுள்ளார்.

இந்த மக்கள் இந்த நிலைமைக்கு ஏன் தள்ளப்பட்டனர் என்பதற்கு அப்பால் நெருக்கடிநிலையில் உள்ள நாட்டிற்கு உதவுவதற்கு பிரிட்டன் தலைமை வகிக்க வேண்டும். நாங்கள் அந்த மக்களின் விரும்பமின்றி 150 ஆண்டுகள் அந்நாட்டை ஆட்சி செய்ததைக் கருத்தில் கொண்டு மிக வேகமாக சர்வதேச நிவாரண முயற்சிக்கு தலைமை தாங்க வேண்டும். பொதுநலவாயத்தின் ஊடாக அதனை செய்யலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அவசரகால நிலை பிரகடனத்தை நீக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தல்

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலை பிரகடனத்தை உடனடியாக நீக்க வேண்டுமென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்துமாறும் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.கருத்து வௌியிடும் உரிமை, பேச்சுச் சுதந்திரம், சுதந்திரமாக ஒன்றுகூடுவதற்கான உரிமை உள்ளிட்ட வௌிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை உறுதிப்படுத்துமாறும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பதில் ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளது.

இவை மக்களின் இறைமை எனவும் அதனை அரசாங்கமோ, முகவர்களோ மீறுவதற்கு இடமளிக்க வேண்டாமெனவும் சங்கத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காலி முகத்திடல் போராட்டத்தின் பிரதிநிதிகள் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து கலந்துரையாடல்

காலி முகத்திடல் போராட்டத்தின் பிரதிநிதிகள் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை சந்தித்தனர்.காலிமுகத்திடல் போராட்டத்தின் பிரதிநிதிகள் முன்வைக்கும் ‘செயற்திட்டத்தை’ எதிர்காலத்தில் எந்த அரசாங்கமும் கடைப்பிடிக்க வேண்டும் என அவர்கள் எதிர்க்கட்சி தலைவருக்கு வலியுறுத்தியதாக தெரிவித்தனர்.

இதேவேளை கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என்பதே காலி முகத்திடல் போராட்டக்கார்களின் முக்கிய கோரிக்கையாக இருப்பதாக பிரதிநிதிகள் தெரிவித்தனர்.இது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காகவே இன்று எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்ததாகவும் போராட்டக்கார்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.(

Posted in Uncategorized

நாடு முழுவதும் அவசரகால நிலை பிரகடனம்!

நாடு முழுவதும் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தி பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்தப் பிரகடனம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுதினம் பாராளுமன்றத்தில் ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ள நிலையிலேயே பதில் ஜனாதிபதி இந்தப் பிரகடனத்தை செய்துள்ளார்.

Posted in Uncategorized

‘மக்கள் போராட்ட பிரஜைகள்’ கட்சி; போராட்டக்காரர்கள் தொடங்கும் புதிய கட்சி

‘மக்கள் போராட்ட பிரஜைகள்’ என்ற புதிய அரசியல் கட்சியை பதிவு செய்வதற்கான ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கட்சி சார்பற்ற செயற்பாட்டாளர்கள் சமர்ப்பித்துள்ளனர்.

தேர்தல் ஆணையத்துக்கு இன்று திங்கட்கிழமை சென்று அதன் தலைவரிடம் ஆவணங்களை ஒப்படைத்துள்ளதாக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அடுத்து வரப்போகும் தேர்தல்களில் இவர்கள் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Posted in Uncategorized

ருவாண்டாவில் அகதிகளை சிறைப்படுத்தும் இங்கிலாந்தின் திட்டம் குறித்து அச்சம் தெரிவிக்கும் முன்னாள் அவுஸ்திரேலிய தடுப்பு முகாம் அகதி

இங்கிலாந்தில் தஞ்சமடையும் அகதிகளை அச்சுறுத்துவதற்காகவே ருவாண்டாவில் அகதிகளை சிறைப்படுத்தும் திட்டத்தை இங்கிலாந்து உள்துறை அமைச்சர் பிரீத்தி பட்டேல் நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறார் என முன்னாள் அவுஸ்திரேலிய தடுப்பு முகாம் அகதி குற்றம் சாட்டியிருக்கிறார்.

நவுருத்தீவில் அவுஸ்திரேலியா அகதிகளை சிறைப்படுத்தி வைத்திருந்தது போலவே இங்கிலாந்தும் முயற்சித்திருக்கிறது என அந்த அகதி தெரிவித்திருக்கிறார்.

எல்லி ஷகிபா முதன் முதலில் நவுருத்தீவுக்கு கொண்டு செல்லப்பட்ட போது இங்கு சிறிது காலமே இருப்போம் என எண்ணியிருக்கிறார். ஆனால், ஈரானிலிருந்து வெளியேறி இந்தோனேசியா வழியாக அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த அவர் அத்தீவில் 6 ஆண்டுகள் ஆஸ்திரேலிய அரசால் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

“எங்களை உதாரணமாக காட்டுவதற்காகவே அவுஸ்திரேலியா நவுருத்தீவு முகாம் உருவாக்கியது. அவுஸ்திரேலியாவுக்கு படகு வழியாக வரும் அகதிகளுக்கு என்னவாகும் என்னாகும் என்பதை சொல்லும் விதமாக இம்முகாம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது,” எனக் கூறுகிறார் அமெரிக்காவில் தற்போது வசித்து வரும் முன்னாள் அகதியான எல்லி ஷகிபா.

“அவுஸ்திரேலியா செய்ததை தான், தற்போது இங்கிலாந்து உள்துறை அமைச்சர் பீரித்தி பட்டேல் செய்கிறார்,” என ஷகிபா கூறியிருக்கிறார்.

ஐரோப்பியாவிலிருந்து இங்கிலாந்தை படகு வழியாக சென்றடையும் தஞ்சக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு அனுப்பும் புதியதொரு ஒப்பந்தம் இங்கிலாந்து- ருவாண்டா இடையே சமீபத்தில் கையெழுத்தானது. கடந்த ஆண்டு மட்டும் சிறிய படகுகள் வழியாக சுமார் 28 ஆயிரம் இங்கிலாந்தில் தஞ்சமடைந்திருக்கின்றனர், இந்த எண்ணிக்கை கடந்த 2020ல் 8500 ஆக இருந்தது.

தற்போதைய புதிய ஒப்பந்தத்தின் படி, இங்கிலாந்தில் சிறிய படகுகள் வழியாக தஞ்சமடைபவர்களை அந்நாட்டிலிருந்து 6400 கிலோ மீட்டர் அப்பால் உள்ள ருவாண்டாவுக்கு இங்கிலாந்து அரசு அனுப்பயிருக்கிறது. சட்டவிரோத புலம்பெயர்வை தடுப்பதற்கான நடவடிக்கையாக சொல்லப்படும் இதை இங்கிலாந்து எதிர்க்கட்சியினரும் அகதிகள் நல செயல்பாட்டாளர்களும் ‘மனிதாபிமானமற்றது, மக்கள் பணத்தை வீணடிப்பது’ என கடுமையாக விமர்சித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பொருளாதார வீழ்ச்சியை நோக்கி ஐரோப்பிய ஒன்றியம் – அனைத்துலக நாணய நிதியம்

எரிபொருள் நெருக்கடி ஐரோப்பிய ஒன்றியத்தை மிகப்பெரும் பொருளாதார வீழ்ச்சியை நோக்கி தள்ளிவருவதாக அனைத்துலக நாணய நிதியத்தின் தலைவர் Kristalina Georgieva தெரிவித்துள்ளார்.

உக்ரைன் போர் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்து வருகின்றது. இது 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளின் பொருளாதார வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும்.

பணவீக்கத்தை குறைப்பதற்கு நாடுகள் பல வழிமுறைகளை நாடுகின்றன. பணவீக்கம் பொருளாதார மீட்சியை பாதிப்பதுடன், மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் பாதிக்கும். எரிபொருள் மற்றும் உணவுப் பற்றக்குறையே பிரதான கராணமாக உள்ளது.

இதனை தடுக்கவேண்டுமெனில் நாடுகள் பொருளாதார மற்றும் ஏற்றுமதித் தடைகளை நீக்க வேண்டும் என்பதுடன் ஏனைய நாடுகளுக்கு உதவிகளையும் வழங்கவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.