‘நாடு முடக்கப்படலாம்’ – இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க

நிலையான அரசாங்கம் விரைவில் அமைக்கப்படாவிட்டால் நாடு விரைவில் மூடப்படலாம் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நியூஸ்நைட் நிகழ்ச்சிக்கே இக்கருத்தை வீரசிங்க கூறியுள்ளார்.

அத்தியாவசியமான பெற்றோலியத்துக்குச் செலுத்துவதற்கு போதுமான வெளிநாட்டு நாணயமாற்றானது கண்டுபிடிக்கப்படலாமா என நிறைய நிச்சயமில்லாத தன்மை நிலவுவதாக வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச மீட்புப் பொதியொன்றைப் பெறுவதற்கான முன்னேற்றமானது, நிலையான நிர்வாகமொன்றைக் கொண்டிருப்பதிலேயே தங்கியுள்ளதாக வீரசிங்க தெரிவித்துள்ளார்.

தங்களால் இம்மாத இறுதி வரையில் குறைந்தது மூன்று தொகுதி டீசல்களுக்கும், ஒன்று அல்லது இரண்டு தொகுதி பெற்றோலுக்கும் நிதியளிக்க முடிந்ததாகவும், அதற்கப்பால் நாட்டுக்குத் தேவையான அத்தியாவசிய பெற்றோலியத்துக்கு தேவையான வெளிநாட்டு நாணயப் பரிமாற்றத்தை தங்களால் வழங்க முடியுமா என நிறைய நிச்சயமில்லாத தன்மை காணப்படுவதாக வீரசிங்க கூறியுள்ளார்.

அதானேலேயே தனக்கு பிரதமொருவர், ஜனாதிபதி, முடிவுகளை எடுக்கக் கூடிய அமைச்சரவை தேவைப்படுவதாகவும், அதில்லாமல் அனைத்து மக்களும் பாதிக்கப்படப் போவதாக வீரசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நிலையான அரசாங்கமொன்று அமையுமானால் நெருக்கடியிலிருந்து மூன்று அல்லது நான்கு அல்லது ஐந்து மாதங்களில் இலங்கை வெளிவருமென வீரசிங்க தெரிவித்துள்ளார்.

’சட்டத்தின் ஆட்சி பாதுகாக்கப்பட வேண்டும்’

பொதுநலவாய சாசனத்தின் விழுமியங்கள் மற்றும் கோட்பாடுகளுக்கு இணங்கி ஜனநாயக ஆட்சி சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றைப் பாதுகாக்குமாறு இலங்கையில் உள்ள அரசியல் தலைவர்களுக்கு பொதுநலவாய செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லாண்ட் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தநிலையில் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கு பொதுநலவாய செயலகத்தின் அர்ப்பணிப்பையும் செயலாளர் நாயகம் மீண்டும் வலியுறுத்தினார்.

எனவே அமைதியான மாற்றத்தை நோக்கி இலங்கையிலுள்ள அனைவரையும் நிதானத்துடன் செயற்படுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

சிறுபான்மை மக்கள் வழங்கியிருக்கும் ஆணைக்கு விசுவாசமாக செயற்படுமாறு மக்கள் பிரதிநிதிகளிடம் வேண்டுகோள் 

வடக்கு கிழக்கு சிறுபான்மை மக்களுக்கு கௌரவமான, உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வை உறுதிப்படுத்தும் அரசியல் கட்சிக்கே பாராளுமன்றத்தில் வாக்களிக்குமாறு கேட்கிறோம்.  வடக்கு கிழக்கு மக்கள் தங்களுக்கு வழங்கியிருக்கும் மக்கள் ஆணைக்கு விசுவாசமாக செயற்படுமாறு அறைகூவல் விடுக்கிறோம் என்று வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
மக்கள் புரட்சியால் இலங்கையில் ஏற்படுத்தப்;பட்டிருக்கும் ஆட்சி மாற்றம் மற்றும் வடக்கு கிழக்கு சிறுபான்மையினரின் அரசியல் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் என்ற தலைப்பிட்டு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளினதும் கவனத்திற்குமாக  வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைத்துள்ள அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கைத் தீவின் அதிகாரங்களற்ற சாதாரண பொதுமக்கள், ஜனநாயகமான மக்கள் போராட்டத்தின் (ஜன அரகலய) மூலம் சர்வாதிகார ராஜபக்ச ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளனர். இலங்கைத் தீவின் மக்கள் எனும் வகையில், நாம் பெருமிதமடைகிறோம். தமிழின அழிப்புக்கும், போர்க்குற்றங்களுக்கும் பொறுப்பான பேரினவாதப் பாதுகாவலர்களான ராஜபக்சர்களை மண்டியிடச் செய்த மக்கள் போராட்டத்துக்கு தலை வணங்குகிறோம்.
ஏதிர்வரும் நாட்கள் இலங்கைத் தீவின் மக்கள் அனைவரினதும் எதிர்கால அரசியல் மற்றும் உரிமைகள் சார்ந்து தீர்மானகரமான முடிவுகளை எட்டும் நாட்களாகும். இந்நிலையில், தமிழ் அரசியல் கட்சிகள் அனைவரும் இலங்கை மக்களினதும் குறிப்பாக சிறுபான்மை மக்களின் உரிமைகள் பாதுகாப்பு குறித்து காத்திரமான நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும்.
இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சார்ந்த தமிழ் மக்களான நாங்கள் எழுபது ஆண்டுகளுக்கு மேலாக சிங்கள பேரினவாதத்தினால் அரசியல் ரீதியான அடக்குமுறைக்கும்  வன்முறைகளுக்கும் தொடர்ந்தும் உள்ளாகி வருகிறோம். போர் முடிவுற்று பதின்மூன்று ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட வடக்கு கிழக்கு மக்கள் சாhந்து எந்தவொரு அரசியல் தீர்வும் எட்டப்படவில்லை. 2015இல் ஆட்சிக்கு வந்த விக்கிரமசிங்க – சிறிசேன “நல்லாட்சி” அரசாங்கமும் “நிலைமாறு கால நீதி” எனும் பெயரில் சர்வதேசத்தை நம்பச்செய்யும் வகையில் அர்த்தமற்ற திட்டங்களை முன்வைத்தது.
இன்றுவரையில்,
– வடக்கு கிழக்கில் இராணுவமயமாக்கத்தின் காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் மக்கள் காணிகளும் பொதுக்காணிகளும் இராணுவத்தின் வசம் உள்ளன. மக்களின் வளங்களை கட்டுக்படுத்துவதோடு சுரண்டிவருகிறது.
– இராணுவம் சிவில் நிர்வாகத்தில் தலையீடுசெய்வதோடு சிவில் நிர்வாக அதிகாரிகளையும் கட்டுப்படுத்துகிறது. வடக்கு கிழக்கில் நிழல் இராணுவ ஆட்சி காணப்படுகிறது
– மக்கள் மீதான அச்சுறுத்தல்கள், வன்முறைகள், கண்காணிப்புகள் தொடர்ந்த வண்ணமேயுள்ளன
– பேச்சு மற்றும் எழுத்து சுதந்திரம், கூட்டம் கூடும் சுதந்திரம் மறுக்கபட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் மூலம் ஏதேச்சையான கைதுகள் நடைபெறுகின்றன. அதனால் நாம் தொடர்ந்தும் அச்ச வாழ்வே வாழ நேர்ந்துள்ளது.
அடிப்படையில் உரிமைகள் மறுக்கப்பட்ட ஒரு இனமாக வடக்கு கிழக்கு சிறுபான்மை மக்களான நாம் வாழ்ந்து வருகின்றோம்.
அரசியலமைப்பின் 13வது திருத்தச்சட்டமானது வடக்கு கிழக்கு சிறுபான்மை மக்களுக்கான அரசியல் அதிகாரப்பரவாலாக்கத்தை உறுதிப்படுத்துகிறது. எனினும், இலங்கையில் ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பெரும்பான்மை அரசாங்கங்கள் அனைத்துமே அதிகாரத்துக்கு வரும் வரையில் வாக்குறுதிகளை வழங்கின. ஆட்சிக்கு வந்தபின்னர், அதிகாரப்பரவலாக்கத்தை புறந்தள்ளியதோடு மட்டும்லாது, சிறுபான்மை அரசியல் உரிமைகள் பற்றி கதைப்பதை “பயங்கரவாதமாக” சித்தரித்து சிங்கள மக்களை சிறுபான்மைக்கு எதிராக தூண்டிவிட்டே வந்தன.
நாங்கள் நாட்டை துண்டாடவோ, தனியரசோ கேட்கவில்லை. இலங்கை நாட்டுக்குள் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வையே கேட்கிறோம்.
வடக்கு கிழக்கு மக்களின் பிரதிநிதிகளாக செயற்பட்டுவரும் தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரே குரலில், ஒரே நிலைப்பாட்டில் செயற்பட வேண்டிய தருணமிது.
அவ்வகையில், வடக்கு கிழக்கு சிறுபான்மை மக்களுக்கு கௌரவமான, உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வை உறுதிப்படுத்தும் அரசியல் கட்சிக்கே பாராளுமன்றத்தில் வாக்களிக்குமாறு கேட்கிறோம்.
வடக்கு கிழக்கு மக்கள் தங்களுக்கு வழங்கியிருக்கும் மக்கள் ஆணைக்கு விசுவாசமாக செயற்படுமாறு அறைகூவல் விடுக்கிறோம்.
Posted in Uncategorized

இலங்கை மீது ஐநா விசேட அவதானம்!

இலங்கையில் ஏற்பட்டு வருகின்ற நிலைமை தொடர்பில் உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களுடன் தாம் ஒன்றிணைந்து இருப்பதாகவும் அரசாங்கத்தின் சுமூகமான மாற்றத்தை உறுதி செய்வதற்கும் பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வுகளைக் காண்பதற்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு அனைத்து தரப்பினருக்கும் ஐ.நா செயலாளர் நாயகம் அழைப்பு விடுத்துள்ளார்.

அனைத்து வன்முறைச் சம்பவங்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் கண்டனம் வௌியிட்டுள்ளார்.

வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், அமைதியைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் ஐ.நா செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி பதவி விலகலை அறிவிப்பதில் தாமதம்?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தான் எங்கே போவதற்காக மாலைதீவு சென்றாரோ அங்கே சென்ற பின்னரே தனது இராஜினாமா கடிதத்தை அனுப்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி இலங்கை நேரப்படி இரவு 8 மணியளவில் கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதம் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு அனுப்பப்படும் என தெரியவருகின்றது.

ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என சபாநாயகர் அலுவலகம் இன்று காலை உறுதிப்படுத்தியுள்ளது.

Posted in Uncategorized

”ரணில் பதவியில் இருந்து விலக வேண்டும்”: மைத்திரி கோரிக்கை!

தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது பதவியை இராஜினாமா செய்வதே பொருத்தமானது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்​டை தொடர்ந்து அராஜகம் செய்யாமல் பிரதமர் பதவியை விட்டு விலக வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கங்காராம விகாரையில் இடம்பெற்ற சமய நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார்.

Posted in Uncategorized

பிரதமர் அதிரடி உத்தரவு! ஊரடங்கு சட்டம் பிறப்பிப்பு

மேல்மாகாணத்திற்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

குறித்த ஊரடங்கு உத்தரவானது மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாடு முழுவதும் அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்துமாறும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அத்தோடு, வன்முறையை தூண்டும் வகையில் சட்டம் ஒழுங்கை மீறுவோரை கைதுசெய்ய படையினர் மற்றும் பொலிஸாருக்கு பிரதமர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Posted in Uncategorized

அமெரிக்கா தனது தூதரகத்தை மூடியது.

இலங்கையில் இடம்பெறும் நிலைமையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது சேவைகளை நிறுத்தியுள்ளது.

இதற்கமைய அடுத்த இரண்டு நாட்களுக்கு தனது சேவையை  ரத்து செய்துள்ளது என தூதரகம் இன்று அறிவித்துள்ளது.

Posted in Uncategorized

காலிமுகத்திடல் போராட்டக்காரர்களின் 13 கோரிக்கைகள்.

காலிமுகத்திடல்  போராட்டக்காரர்கள் 13   கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

இதற்கமைய தற்போது ஜனாதிபதி மாளிகை, பிரதமர் அலுவலகத்தை கையகப்படுத்தியுள்ள நிலையில் அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளாக

கோரிக்கைகள்

  1. ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ,ராஜினாமா செய்வதுடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட அமைச்சரவை, பதவி விலக வேண்டும்.
  2. கோட்டா- ரணில் அரசாங்கம் பதவி விலகியவுடன், மக்களின் போராட்டத்துடன், பொருளாதாரம், சமூக, அரசியல் நோக்கங்கள் ஆகியவற்றை கருத்திற்கொண்டு, இடைக்கால அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட வேண்டும்.
  3. இடைக்கால அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்காணிக்கும் வகையில், மக்கள் கவுன்சில் ஸ்தாபிக்கப்பட வேண்டும்.
  4. பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், குறுகிய மற்றும் நீண்ட கால திட்டத்தை செயற்படுத்த வேண்டும். எரிபொருள், எரிவாயு மற்றும் கல்வி, பொது போக்குவரத்து சேவை வினைத்திறனாக்கல், நுண் கடன் மற்றும் விவசாய கடன்களை ,ரத்து செய்யப்படுவதுடன், லீசிங், சிறு வியாபார கடன்களை ,இரத்து செய்தல் அல்லது மீள் செலுத்தலுக்கான கால அவகாசம் வழங்கல்.
  5. தற்போது கைது செய்யப்பட்டுள்ள போராட்டகாரர்கள் உட்பட, சகல அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும். அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாகி உள்ளவர்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.
  6. கொலை, காணாமல் ஆக்கபட்ட விடயங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க, விசேட பொறிமுறை தயாரிக்கப்பட வேண்டும்.
  7. கடந்த இரண்டு தசாப்தங்களாக, ராஜபக்ஷர்களால் மோசடி செய்யப்பட்ட அரச நிதி, முறையான விசாரணைகளுடன் அரசு உடமையாக்கப்படுவதுடன், மோசடியாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அரசியல்வாதிகள் முறைகேடான முறையில் சேகரித்துள்ள சொத்துக்கள் கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
  8. தற்போதைய வரி முறைமை மாற்றி அமைக்கப்பட்டு, நேர் வரியை அதிகரித்து, மறைமுக வரியை குறைக்க வேண்டும். நாட்டு மக்களுக்கு சாதகமான முறையில், வரி கொள்கை மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
  9. கோட்டாபய ராஜபக்ஷ பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து, மக்கள் அதிகாரத்தை உறுதிப்படுத்தும் வகையில், புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை, முழுமையாக இரத்துச் செய்யப்பட வேண்டும்.
  10. மக்கள் வாக்கெடுப்புடன், புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். உயிர் வாழும் உரிமை அடிப்படை உரிமையாகவும், நிறைவேற்று அதிகாரம் இரத்துச் செய்தல், நீதியான தேர்தல் இடம்பெறும் முறையான பொறிமுறை ஸ்தாபிக்கப்பட வேண்டும்.
  11. மக்களுக்கு பொறுப்புக் கூறாத அரசியல்வாதிகளை மீளழைக்கும் உரிமை உறுதிப்படுத்தும் பொறிமுறை வகுக்கப்பட வேண்டும். சட்டவாக்கத்தில் மக்கள், மக்கள் பிரதிநிதிகளை தவிர்த்து பங்குபற்றும் சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும். கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.
  12. இனவாதம், தேசிய ரீதியான அழுத்தங்களை முழுமையாக இல்லாதொழித்து, சமத்துவத்தை உறுதிப்படுத்துவதற்கும், சகல இ னங்களினதும், மதம், மொழி, பால் மற்றும் ஏனைய கலாசார தனித்துவ அடையாளங்களை உறுதிப்படுத்துவதற்கும் ஏற்புடைய வகையில், அடிப்படை சட்டம் பலப்படுத்தப்பட வேண்டும்.
  13. இடைக்கால அரசாங்கத்தின் அடிப்படை நோக்கங்களாக, மேற்குறிப்பிட்ட விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், ஸ்தாபிக்கப்படும் இடைக்கால அரசாங்கம், 12 மாத காலப்பகுதியில், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதுடன் நிறைவடைய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.
Posted in Uncategorized

கோத்தா மாலைதீவிற்கு தப்பிச் சென்றார்; மாலைதீவில் எதிர்ப்பு

இலங்கையின் ஜனாதிபதி கோட்டபாய ராயபக்சா இன்று அதிகாலை விமானப்படை விமானத்தில் நாட்டில் இருந்து தப்பிச் சென்றதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் அதனை இலங்கை விமானப்படை உறுதி செய்துள்ளது.

நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதி என்ற வகையில் தற்போதைய அரசின் ஒப்புதலுடனேயே அதனை வழங்கியதாகவும் விமானப்படை தெரிவித்துள்ளது.

இதேநேரம் நாட்டின் குடிவரவு குடியகல்வுச் சட்டத்திற்கு அமைய ஜனாதிபதியும் அவரது மனைவியும் இரு பாதுகாப்பு உத்தியோகத்நர்கள் மட்டுமே அந்த விமானத்தில் பயணித்துள்ளதாகவும் விமானப்படையினர் தெரிவிக்கின்றனர்.

விமானப்படைக்குச் சொந்தமான அன்ரனோவ் 32 ரக விமானத்தில் அதிகாலை 1.45 மணிக்கு மாலை தீவுக்குப் புறப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்காவின் விமானப்படைக்குச் சொந்தமான ஓடு தளத்தில் இருந்தே இந்த விமானம் புறப்பட்டுள்ளது. இதேநேரம் கோட்டபாயவுடன் அவரது சகோதரன் பசில் ராயபக்சாவும் தப்பிச் சென்றதாக கூறப்படுகின்றபோதும் உறுப்படுத்த முடியவில்லை.

இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டில் இருந்து வெளியேறிய நிலையில் மாலைதீவின் தலைநகரான மாலேவை உள்ளூர் நேரப்படி 03:00 மணியளவில் சென்றடைந்துள்ளார்.

இதன்போது விமான நிலையத்தில் இருந்து இலங்கை மக்கள் கோட்டபாயவுக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டனர். எனினும் பலத்த பாதுகாப்புடன் அவர் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

இதே நேரம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை மாலைத்தீவில் இருநது வெளியேறுமாறு மாலைத்தீவு சுற்றுலா அமைச்சகத்தின் நிர்வாக இயக்குனர் தைய்யிப் ஷாஹிம் கோரிக்கை விடுத்துள்ளார். மாலைத்தீவில் கோட்டாபயவுக்கு புகலிடம் அல்லது அகதி அந்தஸ்த்து வழங்கக்கூடாது என அவர் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மக்கள் முன்னெடுத்துள்ள புரட்சிக்கு மாலைதீவு மக்களும் ஆதரவு தெரிவிக்கின்றனர். இந்நிலையில் கோட்டாபயவை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு எச்சரிக்குமாறு தைய்யிப் கோரியுள்ளார்.

இவ்வாறான நிலையில் மாலைதீவின் சுற்றுலாத்துறை சார் அதிகாரியின் அழுத்தமும் வெளியாகி உள்ளது.