கோட்டா கோகமவிலிருந்து யாழ் பொதுநூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு!! நூலகம் எரிக்கப்பட்டதையும் நினைவு கூர்ந்தனர்

கோட்டாகோகம நூலகத்தில் இருந்து யாழ்ப்பாண பொதுசன நூலகத்திற்கு இன்றைய தினம் நூல்கள் அன்பளிப்பு செய்யப்பட்டது.

யாழ் பொதுசன நூலகத்துக்கு மதியம் ஒரு மணியளவில் வந்த கோட்டாகம போராட்டக்குழுவினர் ஒரு தொகுதி நூல்களை யாழ்ப்பாண பொதுசன நூலக நிர்வாகத்தினரிடம் கையளித்தனர்.

அத்துடன் யாழ் பொதுசன நூலகம் எரிக்கப்பட்டமையை நினைவு கூறும் வகையில் நூலக வாயிலில் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவு கூரலில் ஈடுபட்டனர்.

கோட்டாகம போராட்டக்குழுவினர் யாழ் பொதுசன நூலகத்திற்கும் மேலும் யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்திற்கும் கிளிநொச்சியில் இருக்கின்ற மாணவர்களுக்கும் நூல்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோட்டா பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! கோட்டா கோகம போராட்ட குழுவினர் யாழில் தெரிவிப்பு

நாட்டில் பொருளாதார பிரச்சனையும் வாழ்வாதாரத்துக்கான தேவைகருதிய போராட்டங்களும் இடம்பெற்று வருவதால் கோட்டாகம போராட்டம் தொய்வடைந்து காணப்படுகிறது. ஆனாலும் கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகும் வரை எமது போராட்டம் ஓயாது என கோட்டாகம போராட்டகாரர்கள் தெரிவித்தனர்.

யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேய கோட்டாகம போராட்டகாரர்கள் இதனை தெரிவித்தனர்.

மேலும் தெரிவிக்கையில், கோட்டாகம நூலகத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு நூல்களை கொண்டு வந்திருக்கின்றோம்.

நாட்டை ஆட்சி செய்த மோசமான ஆட்சியாளர்களின் செயற்பாடுகள் காரணமாகவும் தவறான வழிநடத்தல் காரணமாகவும் எமது நாட்டிற்கு இந்த நிலைமை ஏற்பட்டது.

தவறான ஆட்சியால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன் பாடசாலை மாணவர்களும் பல்கலைக்கழக மாணவர்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்

இலங்கையில் இரண்டு வருடங்களாக பாடசாலை மாணவர்கள் கல்வி கற்க முடியாத நிலைமை காணப்படுகிறது.

எமது கோட்டாகம நூலகத்திற்கு கிடைத்த நூல்களை நாம் நாடளாவிய ரீதியில் கஷ்டப்படுகிற மாணவர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானித்தோம்.அந்த வகையில் மகிந்த ராஜபக்சவின் வீட்டுக்கு அருகில் உள்ள மிகவும் கஷ்டப்பட்ட ஒரு பகுதியில் ஒரு நூல்களை வழங்கினோம். இரண்டாவதாக நாம் யாழ்ப்பாணத்துக்கு வந்திருக்கின்றோம்

யாழ்ப்பாணப் பொதுசன நூலகம் எரிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்பொழுது நாம் பிறக்கவும் இல்லை. எங்கள் கண்முன்னே நாங்கள் அமைத்த போராட்ட களத்தை நெருப்பில் எரித்தார்கள் அதனை நாம் பார்த்துக் கொண்டிருந்தோம்.

எமது கோட்டாகம நூலகம் எரிக்கப்படுமோ என அஞ்சியிருந்தோம். நூலகத்தை எரிப்பது என்பது சமூகத்தினை வீழ்த்துவதற்கு முக்கியமானதாகும்.

அந்த வகையில் யாழ் பொதுசன நூலகத்திற்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்திற்கும் கிளிநொச்சியில் இருக்கின்ற மாணவர்களுக்கும் நூல்களை வழங்கவிருக்கிறோம். அத்துடன் காலிமுகத்திடல் கோட்டாகமவில் இணைய வழியிலான பாடசாலை ஒன்றை ஆரம்பிக்கவிருக்கின்றோம் என்றனர்.

நல்லூரில் நாளை கவனயீர்ப்புப் போராட்டம்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரியும் நாளை ஞாயிற்றுக்கிழமை(19.6.2022) முற்பகல்-10 மணிக்கு நல்லூர் கைலாசபிள்ளையார் ஆலய முன்றலில் வடக்கு- கிழக்கு சிவில் அமைப்புக்கள், அரசியல் கைதிகளின் உறவுகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இணைந்து கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர்.

மேற்படி போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணையுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Posted in Uncategorized

பலாலி – திருச்சி விமான சேவை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானம்

யாழ், பலாலியிலிருந்து இந்தியாவின் திருச்சி வரையிலான விமான சேவை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த விமான சேவையை ஆரம்பிப்பதற்கான ஆலோசனைகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதக்க தெரிய வருகிறது.

மேலும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக, பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் திருச்சி விமான நிலையம் வரையிலான விமான சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, ; யாழ்ப்பாணம் முதல் பாண்டிச்சேரி வரையிலான பயணிகளுக்கான மற்றும் சரக்குகளுக்கான கப்பல் போக்குவரத்து சேவையை விரைவில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.

அரசாங்கம் காங்கேசன்துறையூடாக கப்பல் போக்குவரத்துக்கு சேவையை ஆரம்பிக்க அனுமதித்தால் ஒரே இரவில் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

முல்லைத்தீவு விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்ப நிலை – இராணுவம் துப்பாக்கி சூடு !

முல்லைத்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பதட்டம்-படையினர் துப்பாக்கி சூடு!
முல்லைத்தீவில் விசுவமடு பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வழங்கும்நடவடிக்கையின் போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளது

இதனை தொடர்ந்து அங்கு கூடிய இளைஞர்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் முறுகல் நிலைஏற்பட்டுள்ளது.

இந்த சம்பத்தினை தொடர்ந்து இரு தரப்பிற்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளநிலையில் அங்கு பதட்டமான ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.இளைஞர்கள் மீது அங்கு கடமையில் நின்ற இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாகவும் இளைஞர்கள் இராணுவத்தினர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்கள் இரு தரப்பிற்கும் இடையில் கைகலப்பாக மாறியதில் இராணுவத்தினரின் வாகனம் ஒன்றின் கண்ணாடி உடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் தாக்குதலில் இராணுவத்தினர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் சம்பவத்தின் போது பொதுமகன்ஒருவரும் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்போது ஆத்திரமடைந்த இளைஞர்கள் அங்குள்ள இராணுவ காவலரண் மீது கண்ணாடி போத்தில்கள்,கற்கள் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.

இந்த சம்பவத்தினை தொடர்ந்து நிலமையினை கட்டுக்குள் கொண்டுவர இராணுவத்தினர் வானத்தினை நோக்கி துப்பாக்கிசூடு நடத்தி கட்டுக்குள் கொண்டுவந்துள்ளார்கள்.

இரவு சம்பவ இடத்திற்கு விரைந்த புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் சிலமணிநேரங்கள் பரந்தன்- புதுக்குடியிருப்பு வீதியில் விசுவமடு பகுதியில் எவரும் பயணிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும அங்கு அதிகளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன
இந்த சம்பவம் தொடர்பில் இருவரை பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்இதேவேளை முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் முரண்பாடான பதட்ட நிலை ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து அங்கு இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளார்.

முள்ளியவளையில் அமைந்துள்ள லங்கா ஜ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொது பயன்பாட்டிற்கு எரிபொருள் இல்லை என இன்று எவருக்கும் வழங்கப்படாத நிலையில் மாலை வேளை தனியார் பேருந்து ஒன்றுக்கு எரிபொருள் வழங்கியதால் அங்கு கூடிநின்ற வாகன சாரதிகளுக்கும் எரிபொருள் நிரப்பு நிலையத்தினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தினை தொடர்ந்து பொலீசார் அங்கு வரவளைக்கப்பட்டார்கள்.அரசாங்க அதிபரின் அனுமதியுடன் போக்குவரத்து சேவைக்காக வந்த பேருந்துக்கு எரிபொருள் வழங்கப்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் அதற்கான அனுமதி கடிதத்தினை பொலீசாரிடம் காட்டியுள்ளார்கள்.

வீதியில் நின்ற சாரதி ஒருவர் தனது டிப்பரினை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் கொண்டுவந்து தனக்கும் எரிபொருள் வழங்குமாறு கூறியதை தொடர்ந்து அங்கு பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.வெளியில் நின்ற சாரதிகள் எரிபொருள் நிரப்பிய தனியார் பேருந்தினை எடுக்கவிடாது சூழ்ந்துகொண்டுள்ளார்கள்.

இன்னிலையில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு இராணுவத்தினர் மேலதிகமாக கொண்டுவரப்பட்டு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வீதியில் நின்ற சாரதிகள் தமது வாகனங்களுக்கும் டீசல் வழங்கவேண்டும் என்று கோரி தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

இராணுவத்தினரின் பிரசன்னத்தினை தொடர்ந்து எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் சென்ற டிப்பர் ஒன்றிற்கு மாத்திரம் எரிபொருள் வழங்க வெளியில் நின்ற ஏனைய சாரதிகளின் கோரிக்கைக்கு அமைய டீசல்வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் நின்ற பேருந்தினை வெளியில் எடுத்துள்ளார்கள்.

முரண்பாட்டினை ஏற்படுத்திய சாரதிகளும் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளார்கள் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு டீசல் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் அது அத்தியஅவசிய தேவைக்காகவும் விவசாயிகளுக்கு வழங்குவதற்காகவும் அரச அதிகாரிகளின் அனுமதியுடன் கொண்டுவரப்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளார்கள்.

Posted in Uncategorized

50 இலட்சம் பேருக்கு உணவு நெருக்கடியால் நேரடி பாதிப்பு

உணவு நெருக்கடியில் எவரையும் பட்டினியில் வைத்திருக்காமல் இருப்பதே தமது கொள்கை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் இன்று (17) காலை நடைபெற்ற உணவுப் பாதுகாப்பு தொடர்பான குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உணவு நெருக்கடியானது எதிர்வரும் காலங்களில் நாட்டில் 4 மில்லியனிலிருந்து 5 மில்லியன் மக்களை நேரடியாகப் பாதிக்கக்கூடிய போதிலும் அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மீது அதிக கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தினார்.

உணவு நெருக்கடியை வெற்றிகரமாகக் கையாள்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தலைமையில் குழுவொன்றை நியமிக்குமாறும் அதில் அமைச்சர் நிமல் சிறிபால, கலாநிதி ஹர்ஷ டி சில்வா மற்றும் ஜனாதிபதி அலுவலகம், நிதி அமைச்சு, விவசாய அமைச்சு, இராணுவம், தனியார் பிரிவு உள்ளிட்ட குறித்த நிறுவனங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்குமாறும் பிரதமர் பணிப்புரை விடுத்தார்.

இந்தக் குழுவினால் தயாரிக்கப்பட்ட திட்டத்தை இரண்டு வாரங்களுக்குள் தனக்கு பெற்றுத் தருமாறு பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

Posted in Uncategorized

இலங்கை வரலாற்றில் மிக நீண்ட எரிபொருள் வரிசை!

வரலாற்றில் மிக நீண்ட எரிபொருள் வரிசையை இலங்கை இன்று (வெள்ளிக்கிழமை) எதிர்கொண்டுள்ளது.

SUTUஇன் ஊடகப் பேச்சாளர் ஆனந்த பாலித, நாட்டில் உள்ள 85 சதவீத எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் தீர்ந்துவிட்டதாக ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.

ஜூன் 24 ஆம் திகதி எரிபொருள் விலை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் இருப்பதால் லங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருளை விநியோகிக்கவில்லை என்று அவர் கூறினார்.

இன்று 50 மெட்ரிக் டன் பெட்ரோல் மட்டுமே வழங்கப்பட்டதென்றும் பாலித கூறினார்.

Posted in Uncategorized

கோட்டாவுக்கும் ரணிலுக்கும் இடையில் பகைமை அதிகரித்து வருகிறது – மைத்திரி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் ஒரு போட்டி போன்று பகைமை அதிகரித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அப்போது ஜனாதிபதியாக இருந்த தமக்கும் பிரதமராக இருந்த ரணிலுக்கும் இடையில் இருந்த போட்டியைப் போன்றே இதுவும் உள்ளதாகஅவர் கூறியுள்ளார்.

கட்சி அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இருவருக்குமிடையில் ஒருங்கிணைப்பு, பரஸ்பர புரிந்துணர்வு அல்லது ஒற்றுமை இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறதென்றும் அதனால்தான் கோட்டாபய ராஜபக்ஷ – ரணில் விக்ரமசிங்க ஆட்சி முழுத் தோல்வியடைந்து நாட்டையும் அதன் 22 மில்லியன் மக்களையும் ஆழமற்ற படுகுழிக்குள் இழுத்துச் சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளர்.

அரச அதிகாரிகள், தனியார் துறை மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளை தனித்தனியாக கூட்டி ஆலோசனைகளை வழங்குவதை ஜனாதிபதியும் பிரதமரும் தற்போது வழக்கமாக கொண்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சில சமயங்களில் இருவரும் ஒருவரையொருவர் தோற்கடிக்கும் போட்டியில் ஈடுபடுவது போல் தெரிகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

Posted in Uncategorized

யாழ்ப்பாணம் கொழும்பு விசேட புகையிரத சேவை ஆரம்பிக்க நடவடிக்கை!!

தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியினை கருத்திற்கொண்டு யாழ்ப்பாணம் கொழும்பு விசேட புகையிரத சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய பிரதம அதிபர் தி.பிரதீபன் தெரிவித்தார்

இன்று யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், நாளை 17ம் திகதி வெள்ளிக்கிழமையிலிருந்து கல்கிசையில் இருந்து காங்கேசன்துறைக்கு இரவு நகர்சேர் கடுகதி புகையிரதமொன்று சேவையில் ஈடுபட உள்ளது .இது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் கல்கிசையில் இரவு 10 மணிக்கு புறப்பட்டு அங்கிருந்து வெள்ளவத்தை பம்பலப்பிட்டி ஆகிய புகையிரத நிலையங்களில் நிறுத்தப்பட்டு அம்பலங்கோட பொல்காவலை குருநாகல் அனுராதபுரம் வவுனியா கிளிநொச்சி ஊடாக யாழ்ப்பாணத்தை 5.25க்கு வந்தடைந்து அங்கிருந்து 5.30 க்கு புறப்பட்டு காங்கேசந்துறையை சென்றடையும்

ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரம் காங்கேசன்துறையில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு சுன்னாகம் கோண்டாவில் ஊடாக 10.25க்கு யாழ்ப்பாணத்தை வந்தடைந்து 10.30மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு கிளிநொச்சி வவுனியா அநுராதபுரம் குருநாகல் கொழும்பு கம்பகா மருதானை சென்றடைந்து அங்கிருந்து பம்பலப்பிட்டி வெள்ளவத்தை தெஹிவளையை சென்றடையவுள்ளது.

நகர்சேர் கடுகதிக்குரிய ஒரு வழி கட்டணமாக 2,800 ரூபா அறவிடப்ப்படவுள்ளது. இதற்கான முன்பதிவுகள் யாழ்ப்பாண புகையிரத நிலையத்திலும் ஏனைய முன்பதிவுகளை மேற்கொள்ளக்கூடிய புகையிரத நிலையங்களிலும் மேற்கொள்ளலாம் . இன்றைய காலகட்டத்தில் யாழ்ப்பாண மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இது அமையும் என எதிர்பார்க்கின்றோம் என்றார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க பாகிஸ்தான் உதவி செய்வதாக தெரிவிப்பு

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண இலங்கைக்கு தமது அரசாங்கமும் பூரண ஆதரவை வழங்கும் என பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) உமர் பாரூக் புர்க்கி (Umar Farooq Burki) தெரிவித்துள்ளார்.

இன்று (17) பிற்பகல் கொழும்பு, கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்த போதே உமர் பாரூக் புர்கி இதனைத் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய மற்றும் பலதரப்பு உறவுகள், அரசியல், வர்த்தகம், கலாசாரம், பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.

மனிதாபிமான உதவியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மருந்துகளை இந்நாட்டுக்கு வழங்குதல், பாகிஸ்தானில் உயர் கல்விக்காக இலங்கை மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்கியமை தொடர்பில் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து ஜனாதிபதி அவர்கள் உயர்ஸ்தானிகரிடம் விளக்கினார்.

தற்போதைய சூழ்நிலையில் இருந்து மீள பாகிஸ்தான் அரசாங்கம் உதவிகளை வழங்கும் என்றும், இலங்கை விரைவில் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு தாம் பிரார்த்திப்பதாகவும் உமர் பாரூக் புர்கி மேலும் தெரிவித்தார்.

Share