நாட்டின் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துதல் மாகாணசபைத்தேர்தல்களை உடன் நடத்துமாறு பேரவையில் இந்தியா இலங்கையிடம் வலியுறுத்தல்

நாட்டின் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துதல், மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடாத்துதல் மற்றும் அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை மேற்கொள்ளல் என்பவற்றுக்கு நடவடிக்கை எடுக்குமாறு பேரவையில் இலங்கையை வலியுறுத்திய இந்தியா, சகலரையும் உள்ளடக்கிய அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு மற்றும் நியாயமான நல்லிணக்க செயன்முறை என்பன நிலையான அமைதிக்கு வழிகோலும் எனச் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்தோடு சகல தரப்பினரையும் உள்ளடக்கிய அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு மற்றும் நியாயமான நல்லிணக்க செயன்முறை என்பன நிலையான அமைதிக்கு வழிகோலும் எனவும்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் நேற்று திங்கட்கிழமை ஜெனீவாவில் ஆரம்பமானது. நேற்றைய தொடக்க அமர்வில் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கினால் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான அறிக்கை மீதான விவாதத்தில் கருத்துரைத்த இந்தியப் பிரதிநிதி, 2009 ஆம் ஆண்டு இலங்கையில் யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னர் நாட்டைக் மீளக்கட்டியெழுப்புவதற்கும், மக்களை மீள்குடியமர்த்துவதற்கும் இந்தியா தொடர்ந்து ஆதரவு வழங்கிவந்ததாக சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று 2022 ஆம் ஆண்டு இலங்கை மிகத்தீவிர பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த வேளையில் இந்தியாவினால் வழங்கப்பட்ட உதவிகள் தொடர்பில் நினைவுகூர்ந்த அவர், 2024 இல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டமையும், 2025 ஏப்ரலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டமையும் இருநாடுகளுக்கும் இடையிலான வலுவான இருதரப்பு நல்லுறவைக் காண்பிப்பதாகக் குறிப்பிட்டார்.

அதேவேளை இலங்கையின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையுடன் தமிழ்மக்களின் அபிலாஷைகளான சமத்துவம், நீதி மற்றும் கௌரவத்தை இந்தியா எப்போதும் வலியுறுத்திவருவதாகத் தெரிவித்த அவர், நாட்டின் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும், மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடாத்துமாறும், அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்துவதாகக் கூறினார்.

அத்தோடு சகல தரப்பினரையும் உள்ளடக்கிய அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு மற்றும் நியாயமான நல்லிணக்க செயன்முறை என்பன நிலையான அமைதிக்கு வழிகோலும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மீட்கப்படும் எழும்புக்கூடுகள் மீதான உள்நாட்டு விசாரணைகள் அரசைக் காப்பாற்றும் உத்திகள் – கிரிசாந்தி நினைவேந்தலில் தவிசாளர் நிரோஷ்

தமிழ் மக்கள் மீதான அரச பயங்கரவாதமும் இனப்படுகொலையும் இலங்கையில் அரச கொள்கையாகவே முன்னெடுக்கப்பட்டது. அவ்விடயத்தில் உள்நாட்டு விசாரணைகளே அல்லது பொறிமுறைகளோ தீர்வைத்தராது. எமக்கு சர்வதேசத்தின் நீதியே தேவை என ரெலோ வின் தலைமை குழு உறுப்பினரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

செம்மணியில் கிரிசாந்தி குமாரசுவாமி படுகொலையின் 29 ஆவது நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. இந் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும்,எமது மண்ணில் சிறுவர்கள் பொண்கள் பெரியவர்கள் என்ற வகை தொகையின்றி இலட்சக்கணக்கானவர்கள் அரச படைகளால் கொன்றழிக்கப்பட்டுள்ளனர். அவை சிவிலியன்கள் மீது போரினவாத அரச கொள்கைகளின் வாயிலாக முன்னெடுக்கப்பட்ட அரச பயங்கரவாதமும் இனப்படுகொலையுமாகும். அவ்வகையில் கிரிசாந்தி குமாரசுவாமி உள்ளிட்ட நுற்றுக்கணக்கானவர்கள் முழுமையான அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் தினம் தினமாக கொன்றழிக்கப்பட்டு புதைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறாக புதைக்கப்பட்டவர்களின் ஆன்மாக்கள் நீதிகோரி மீண்டெழுந்து நிற்கின்றன.

இப்போது கூட நூற்றுக்கணக்கான எழும்புக்கூடுகள் மீட்கப்படுகின்றன. இலங்கை அரசோ அல்லது அரசாங்கமோ மேற்கொள்ளும் எந்த விசாரணையும் சர்வதேசத்தினை ஏமாற்றுவதையும் நீதி விசாரணைகளை காலதாமதத்திற்கு உட்படுத்தி சாட்சியங்களை வலுவற்றதாக்கும் உத்திகளுமாகும். தற்போதும் ஜெனிவாவில் அதற்கான நகர்வு ஒன்றையே அரசாங்கம் மேற்கொள்கின்றது.

நாங்கள் எமது இனத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி ஒன்றே தீர்வு என்பதில் உறுதியாகச் செயற்பட வேண்டிய பொறுப்புடையவர்கள். எமது தேசத்தில் எங்களது பெண் பிள்ளை ஒன்று பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு புதைக்கப்பட்டிருக்கின்றாள். இது போன்று இராணுவ வளங்கள் உள்ளிட்ட அரச வளங்களைப் பயன்படுத்தி நாங்கள் கொன்றழிக்கப்பட்ட மிகக் கொடுரமான மனித உரிமைகள் மீறல்களுக்கு இன்றும் தீர்வுகள் வழங்கப்படவில்லை.

மாறாக ஆட்சியில் இருக்கின்ற அரசாங்கம் சிற்சில ஜனநாயக இடைவெளிகளை ஏற்படுத்திவிட்டு அவற்றினை தமிழ் மக்களுக்கான அசியல் தீர்வுகள் போல காட்டிக்கொள்ள எத்தனிக்கின்றது. இந்த இடத்தில் நாம் இனமாகத் திரட்சி பெற வேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

Posted in Uncategorized

ஐ.நா சபையினுடைய கதவை தட்டியது மக்களினதும், போராளிகளினதும் தியாகம்.!

எமது இனத்தை அழித்தவர்கள், உறவுகளை காணாமல் ஆக்கியவர்கள், இனத்தை இல்லாது செய்கின்ற சிந்தனையுடன் உள்ளவர்கள் அதற்கு எதிரான விசாரணையை முன்னெடுக்க அருகதையற்றவர்கள் என்பதை நாங்கள் உணர்ந்தவர்களாக இருக்கிறோம் என வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ தலைவருமான கெளரவ செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

செம்மணி உள்ளடங்களாக இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழிகளுக்கும், நடைபெற்ற இனப் படுகொலைகளுக்கும் சர்வதேச நீதி கோரி கையெழுத்துப் போராட்டம் தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை(29-8-25) காலை மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்தில் இடம்பெற்றது.

இதன் போது தலைமை தாங்கி உரை நிகழ்த்துகையில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐ.நா சபையினுடைய கதவை தட்டியது மக்களினதும், போராளிகளினதும் தியாகம் என்பதை நாம் ஒருபோதும் மறந்து விட முடியாது. இன்று வடக்கு கிழக்கில் எங்கு தோண்டினாலும் தமிழர்களுடைய மனித எலும்புக்கூடுகள் வெளிவருகிறது. வடக்கு கிழக்கில் பல்வேறு இடங்களில் மனிதப் புதைகுழிகள் காணப்படுகின்றது.

முதல் முறையாக மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டது மன்னாரிலே. அதனை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் மனிதப் புதைகுழி கண்டு பிடிக்கப்பட்டது. தற்போது யாழ்ப்பாணத்தில் கூடுதலான மனித எலும்புக்கூடுகள் உள்ள மனிதப் புதைகுழி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தாயை தனது பிள்ளை கட்டிப்பிடித்துக் கொண்டு காணப்படுகின்ற எலும்புக்கூட்டு தொகுதியும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இவ் மனித எலும்புக்கூடுகளை பார்க்கின்ற போது வேதனையை ஏற்படுத்துகிறது.

மனித உரிமை மீறல் சம்மந்தமாக செயற்பட்டவர்கள் தண்டிக்கும் வகையில் சர்வதேச நீதிமன்றத்தில் அவர்களுக்கு தண்டனை வழங்குகின்ற நிலைப்பாட்டை கொண்டு வருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துகின்ற வகையில் குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது.

மன்னார் மறைமாவட்டத்தின் முன்னைநாள் ஆயர் அமரர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை ஏற்கனவே கூறியது இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களின் உண்மை தொகையை ஐ.நா.சபை வரை சென்றுள்ளது.

இன்று வரை அவரது எண்ணிக்கையே அங்கும் உள்ளது. அவ்வாறான ஒரு சூழலில் ஆயர் அவர்கள் கூறிய வார்த்தை கள்ளர்கள் கள்ளர்களை விசாரணை செய்ய முடியாது என்றது போல எங்களுடைய இனத்தை அழித்தவர்கள், எமது உறவுகளை காணாமல் ஆக்கியவர்கள், இனத்தை இல்லாது செய்கின்ற சிந்தனையுடன் உள்ளவர்கள் அதற்கு எதிரான விசாரனையை முன்னெடுக்க அருகதையற்றவர்கள் என்பதை நாங்கள் உணர்ந்தவர்களாக இருக்கிறோம்.

இந்த கையெழுத்து வேட்டை ஐ.நா.வரைக்கும் சென்று எமக்கு நீதியாக மாற வேண்டும். எம் உறவுகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த கையெழுத்து வேட்டையை ஆரம்பித்துள்ளோம். வடக்கில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (29) குறித்த கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கிழக்கில் பிறிதொரு தினத்தில் இடம்பெறும் பல ஆயிரக்கணக்கான கையெழுத்துக்களை பெற்றுக் கொள்வதன் மூலம் எமது இலக்கை அடைய முடியும். இதனூடாகவே எமது கோரிக்கையை சர்வதேசத்திற்கு தெரிவிக்க முடியும்.என அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த கையெழுத்து போராட்டத்தில் அருட் தந்தையர்கள், உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள், பொது மக்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டு கையெழுத்திட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்களுக்கான சர்வதேச நீதி: அடுத்தடுத்து அநுரவிற்கு கிளம்பும் எதிர்ப்பு

அநுர அரசாங்கம் கடந்தகால அரசுகளைப் போல பாதிக்கப்பட்ட மக்களுக்கான சர்வதேச நீதிப் பொறிமுறையை நிராகரிக்கிறது என்றால் அது பச்சை இனவாதம் என ரெலோ வின் யாழ் மாவட்ட தலைவரும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரியவருகையில், இனவாதம் அற்ற நாட்டை உருவாக்கிறோம் என மேடைப் பேச்சுப் பேசும் அநுர அரசாங்கம் சக பாதிக்கப்பட்ட இனத்திற்கான உள்நாட்டு நீதி 16 ஆண்டுகளாக ஏன் கானல் நீராகியது என்ற உண்மையை அறிந்தும் கடந்தகால ஆட்சியாளர்கள் போன்று நாம் இராணுவத்தை காட்டிக் கொடுக்கமாட்டோம் பாதுகாப்போம் என கூறிக் கொண்டு உள் நாட்டில் நீதி வழங்குவோம் என்பது ஏமாற்று நாடகம்.

மனிதப் புதைகுழிகள் வலிந்து காணாமல் ஆக்கப்டோருக்கான மிகப் பெரும் ஆதாரமும் சாட்சியமும் இதற்கு உள் நாட்டில் நீதி என்பது அநுர அரசின் பித்தலாட்டம்.

பொருளாதார நெருக்கடி

1996 ஆம் ஆண்டு வடக்கில் 90 வீதம் மின்சாரம் இல்லை யுத்தம் நடந்து கொண்டு இருக்கின்றது.

பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் இராணுவ மற்றும் விமானப்படைகளின் கண்மூடித்தனமான தாக்குதல்கள் இதற்குள் கிரிக்கட் பார்த்தனர் என புதிய உருட்டு.

அடிப்படை உரிமை

பாண் கேட்டவனுக்கு கேக் சாப்பிடு என்பது போல சொந்த நிலத்திற்கு குடியேற முடியாது இராணுவ ஆக்கிரமிப்பில் இருக்கும் நிலங்களை விடுவிக்குமாறு போராடிய மக்களை விரட்டிவிட்டு அடிப்படை உரிமையை கோரி போராடும் மக்களுக்கு தீர்வு வழங்காது விளையாட்டு மைதானத்திற்கு அடிக்கல்லு நாட்டுவது அவசியமா ?

அடிப்படைப் பிரச்சினைகளுக்கும் தேசிய இனப்பிரச்சினைக்கும் தீர்வு காண அநுர அரசாங்கம் தயார் இல்லை என்றால் கடந்த கால ஆட்சியாளர்களின் இனவாத ஆட்சியாக தோல்வியில் தான் முடிவடையும் வாக்களித்த மக்களுக்கு மீண்டும் ஒரு ஏமாற்றம் காத்திருக்கத்தான் செய்யும்” என தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

ஜனாதிபதியினால் திறந்துவைக்கும் திறப்புவிழா கற்களில் நிதி தொடர்பான வெளிப்படைத்தன்மை இல்லை – வலி கிழக்கு தவிசாளர் நிரோஷ்

ஜனாதிபதியினால் யாழில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான திறப்புவிழா கற்களில் நல்லாட்சிக்கு அவசியமான வெளிப்படைத்தன்மையும் தகவல் அறிவதற்கான சுதந்திரமும் மீறப்பட்டுள்ளது. ஆகவே அக் கற்கலில் காணப்படும் தவறுகள் உரியவாறு மறுசீரமைக்கப்படுவது மக்களின் தகவல் அறிந்து கொள்வதற்கான உரிமையினை உறுதிப்படுத்தும் என்பதுடன் அரச நிதி செலவிடப்படுவதன் வெளிப்படைத் தன்மையினையும் அதிகாரிக்கும் என ரெலோ வின் தலைமை குழு உறுப்பினரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

1ஆம் திகதி திங்கட்கிழமை யாழிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி கடவுச்சீட்டு அலுவலகம் மற்றும் விளையாட்டுத்திடல்இ துறைமுகம் என்பவற்றின் ஆரம்பப் பணிகளை மேற்கொண்டார். அவரினால் கடந்த ஆட்சியாளர்களைப் போல் ஆரம்ப நிகழ்வுகளுக்கு பெரும் பணம் செலவிடப்படாமைஇ எளிமையான முறையில் மேற்படி நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டமையை நாம் வரவேற்கின்றோம். எனினும் நல்லாட்சித்தத்துவம் மீறப்பட்டுள்ளது.

இவ்விடத்தில் திறப்பு விழாக் கற்களில் மக்களின் பணம் என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. அரச நிதி என்பது மக்களின் பணம் ஆகும். அதனை தொகைகளைக் குறிப்பிடாது குறிப்பிட்டதனை நாம் அறிவார்ந்த பார்வையில் விசேடமான மாற்றம் என்று கூற முடியாது. அரச நிதியில் எவ்வளவு தொகை திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டது என்பது கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படாமல் விடப்பட்டமை அரசின் நிதி தொடர்பான வெளிப்படைத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகின்றது.

நிதி செலவிடலில் தொகைகள் வெளியிடப்படும் போதே மக்களின் நிதி காத்திரமாகப் பயன்படுத்தப்ப்ட்டதா என பொதுமக்களால் விளங்கிக் கொள்ள முடியும். ஆகவே மக்கள் தகவல்களை பெறுவதற்கான வழிமுறையை இலகுபடுத்தவதில் அரசாங்கம் தோல்விகண்டுள்ளது கவலையளிக்கின்றது. பொது நிதி தொடர்பில் பொறுப்புச் சொல்வதற்கான அரசியல் பொருளாதார ரீதியானதும் நல்லாட்சியின் அளவு கோலுக்கான கல்விசார் அடிப்படையுமாகும்.

இலங்கை போன்ற நாடுகளில் அரசாங்கங்கள் திட்டங்களை ஆரம்பிப்பதும் பின்னர் கைவிடுவதும் சகஜமாகும். அவ்வாறான நிலைக்கு போதுமான நிதித்திட்டமிடல் இன்றி அபிவிருத்திகளை அரசியல் ரீதியில் ஆரம்பிப்பதும் ஒருகாரணமாகும். அடுத்து மேலதிக நிதியின்றியும் திட்டங்கள் தடைப்படுகின்றன. சில திட்டங்கள் சரியான ஆய்வுகள் மேற்கொள்ளப்படாமையினால் தோல்வி அடைகின்றன.

அவ்வாறான நிலையில் அப்படியாக தோல்வியடையும் கட்டுமாணங்கள் பற்றி கணக்காய்வு மேற்கொள்ளப்படும் அதேவேளை மக்களின் தீர்ப்பிற்கு அரசியல் தலைவர்கள் முகங்கொடுக்க வேண்டும் என்பது சனநாயக சம்புரதாயம். ஆகவே ஜனாதிபதின் பெயர் குறிப்பிடப்பிட்டால் திட்டத்தின் வெற்றி தோல்விகள் பற்றி மக்கள் மதிப்பிடுவது இலகுபடுத்தப்படும்.

திட்டங்களின் வெற்றி தொல்விகளின் பொறுப்புக்கூறலை வரலாற்று ரீதியில் தலைவர்கள் பெறுவர்கள் என்ற நியதியை உணர்த்தும். ஆகவே தலைவர்கள் சரியான நிபுணத்துவத்துடன் செயற்படுவதற்கு அது வழிநடத்தும். ஆகவே இவைகள் ஜனாதிபதியினால் யாழில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்ட கற்களில் மீறப்பட்டுள்ளன. எனவே இதுபற்றி அரசாங்கம் கவனத்தில் எடுத்து அவ் திறப்புவிழக்கற்களின் அருகில் நிதி செலவு அல்லது ஒதுக்கம் பற்றி வெளிப்படுத்தி உதவவேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

Posted in Uncategorized

உள்ளூராட்சிக்கான அதிகாரப்பகிர்வு அபிவிருத்திக்குத்தேவை என்பதை உணர்ந்து சபைகளை அரசு வலுப்படுத்தவேண்டும் – உள்ளூராட்சி அமைச்சரிடம் தவிசாளர் நிரோஷ் எடுத்துரைப்பு

கிளின் சிறிலங்கா திட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் மீறப்படுகின்றன. அதிகாரப்பகிர்வு மற்றும் மனித உரிமைகள் பேணப்படுவது கூட அபிவிருத்தியின் ஓர் அங்கமாகும். எனவே அரசாங்கம் உள்ளூராட்சி மன்றங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்களை மத்திய அரசாங்கத்தின் திட்டங்கள் வாயிலாக மீறக்கூடாது. மாறாக அபிவிருத்தியைக் காத்திரமாக்க வேண்டும் என ரெலோ வின் தலைமை குழு உறுப்பினரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

பொது நிர்வாக மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி ஏ.எச்.எம்.எச். அபேயரட்ண மற்றும் பிரதி அமைச்சர் பி. ரூவான் செனரத் ஆளுநர் என்.வேதநாயகன் உள்ளிட்டவர்கள் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதானிகளை வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையர் அலுவலக கேடபோர் கூடத்தில் இன்று (27.08.2025) புதன்கிழமை மாலை சந்தித்து கலந்துரையாடினர். இச் சந்திப்பில் கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும்,

உள்ளூராட்சி மன்றங்களிள் ஆளணி வெற்றிடம் நாட்டின் பிறபாகங்களைக் காட்டிலும் வடக்கு மாகாணத்தில் அதிகரித்துக் காணப்படுகின்றது. ஆளணி வெற்றிடத்தினை நாட்டின் ஏனைய மாகாணங்கள் தேர்தல் காலத்திற்கு முன்னரான விசேட சுற்று நிருபங்களுக்கு அமைய நியமித்துக்கொண்ட போதும் எமது மாகாணத்தில் வெளிவாரிப்பணியாளர்களாக சனசமூக நிலையங்கள் ஊடாக நியமிக்கப்பட்டிருந்தமையினால் துரதிஸ்டவசமாக எம்மால் இந் நியமனங்களுள் பயனடைய முடியவில்லை. தசாப்தக் கனக்கில் பல தொழிலாளிகள் நியமனத்திற்காக ஏங்குகின்றார்கள். இவ்விடயத்தில் அமைச்சர் அவர்கள் அமைச்சரவைப் பத்திரம் ஒன்றைத்தாக்கல் செய்து பாதிக்கப்பட்ட தரப்புக்கு நியமனத்தினை விரைவு படுத்தக்கோருகின்றோம். தொழிலாளர்களின் பிரச்சினை என்ற வகையில் இந்த அரசாங்கம் கூடிய கவனம் எடுக்கும் என நம்புகின்றோம்.

மேலும் அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பளத்தில் எதிர்வரும் ஆண்டில் இருந்து தற்போது உள்ளூராட்சி மன்றங்கள் செலுத்திவரும் இருபது விகித பணத்தினை நாற்பது விகிதமாக அதிகரிக்க வேண்டிய அறிவுறுத்தல் உள்ளது. இதனை எமது சபைகள் தாங்கிக்கொள்வதில் பாரிய பிரச்சினை உள்ளது. எனவே அரசின் இக் கொள்கையில் மாற்றத்தினைக் கோருகின்றோம். அதேவேளை சபைகளின் வருமானம் பற்றிய மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படுகையில் சபையின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்ட அளவீட்டு முறைமை ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. காரணம் சபைகளின் நிலப்பரப்பு மற்றும் சனத்தொகை என்பன வேறுபட்டுள்ளன. ஆகவே சபைகளின் வருமானம் கணக்கிடப்படும் போது நிலப்பரப்பு மற்றும் சனத்தொகைக்குமான சூத்திரம் பின்பற்றப்படவேண்டும். அதுவே சரியான புள்ளிவிபரத்தரவுகளை வழங்கும். அபிவிருத்திக்கு அது அவசியமாகும்.

மேலும் உள்ளூராட்சி சேவை மூடப்பட்ட சேவையாக அமைகளில் உள்ளூராட்சி மன்ற உத்தியோகத்தர்களால் மக்களுக்கு ஆற்றப்படும் அரச சேவையினை வினைத்திறனாக்க முடியும். உள்ளூராட்சி மன்ற தாய்ச் சட்டங்கள், நியமத்துணைவிதிகள், துணைவிதிகளை கற்றுள்ள மற்றும் அனுபவப்பட்ட உத்தியோகத்தர் குழாம் மீளவும் உள்ளூராட்சி சேவைக்குள் ஈடுபடுத்தப்படுவது சிறந்தது. அவர்களை எழுந்தமானமாக மத்திய அரசாங்கத்தின் திணைக்களங்களுக்கு இடமாற்றக் கொள்கைகளுக்குள்ளாக இடம்hற்றுவதைத் தடைசெய்யும் தேசிய கொள்கை நாட்டில் ஏற்படுத்தப்படவேண்டும். புதிது புதிதாக உத்தியோகத்தர்கள் திணைக்களங்களில் இருந்து இடமாற்றலாகி வருவது மத்திய அரசாங்கத்தின் ஓர் திணைக்களம் போலவே உள்ளூராட்சி மன்றங்களை உருவாக்குகின்றது.

அத்துடன் இப்போது மத்திய அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்படுகின்றது. இவ் வரவு செலவுத்திட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் சேவைப்பரப்பில் வருகின்ற விடயங்களுக்கான செயற்பாடுகளுக்கு ஏனைய அமைச்சுக்களுக்கு நிதியை ஒதுக்கி அதன் வாயிலாக மத்திய அரசாங்கத்தின் நிர்வாக அலுவலகமான பிரதேச செயலக வாயிலாக நிதிகள் ஒதுக்கப்பட்டு திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதை நாம் எதிர்க்கின்றோம்.

உள்ளுராட்சி மன்றங்களின் பகிரப்பட்ட அதிகாரங்களை மீறப்படாது மாகாண சபை முறைமை ஊடாக உள்ளுராட்சி மன்றங்கள் ஊடாக நிதியை ஒதுக்க வேண்டும். கிள்னி சிறிலங்கா திட்டத்தின் வாயிலாக உள்ளூராட்சி மன்றங்கள் முகாமை செய்யும் பஸ்தரிப்பிடங்களின் முடிவுகளைக் கூட மத்திய அரசாங்கத்தின் நிர்வாகத்தினர் முன்னெடுக்க முயற்சிக்கின்றனர். என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

Posted in Uncategorized

சட்டம் எல்லோருக்கும் சமம் என்றால் தையிட்டி விகாரையில் ஏன் ஜனாதிபதி நிலை நாட்டவில்லை – சபா குகதாஸ் கேள்வி

நாட்டில் சட்டம் எல்லோருக்கும் சமம் எனக் கூறும் ஜனாதிபதி அநுர ஏன் தையிட்டி சட்டவிரோத விகாரை விவகாரத்தில் சட்டம் எல்லோருக்கும் சமம் என்பதை நிலை நாட்டவில்லை அப்படி என்றால் நாட்டில் இரண்டு சட்டமா? வடக்குக்கு ஒரு சட்டம் தெற்கிற்கு பிறிதொரு சட்டமா என ரெலோ வின் யாழ் மாவட்ட தலைவரும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் கேள்வி எழுப்பினார்.

இது குறித்து மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

தனியார் காணியில் அத்துமீறி கட்டிய விகாரை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் சட்டரீதியாக கோரி நிற்கும் விடையத்தை தட்டிக்கழித்து மீண்டும் அந்த மக்களின் காணியில் மேலதிக கட்டங்களை கட்டிக் கொண்டு நாட்டில் எல்லோருக்கும் சட்டம் சமம் என்று கூறுவது ஜனாதிபதியின் பெரும் பித்தலாட்டம்.

தெற்கில் நாட்டில் சட்டம் எல்லோருக்கும் சமம் என்று பேசிக் கொண்டு வடக்கில் சட்டத்தை அரச திணைக்களம் மற்றும் இராணுவ முகாம்கங்கள் போன்ற வற்றின் செயற்பாடுகள் மூலம் வடக்கு மக்களின் அடிப்படை உரிமைகளை தடுப்பது எந்தவகையில் சட்டம் எல்லோருக்கும் சமம் என்பதை உறுதி செய்கிறது ஆகவே ஜனாதிபதி கடந்த கால ஆட்சியாளர்கள் போன்ற சாத்தான் வேதம் ஓதுகின்றார் என தெரிவித்தார்.

Posted in Uncategorized

இராணுவ பிடியிலுள்ள நிலத்தினை விடுவிப்பதற்கு அரசாங்கம் ஆக்கபூர்வமாக செயற்படவில்லை – வலி கிழக்கு தவிசாளர் நிரோஷ குற்றச்சாட்டு

மக்களின் காணிகள் மக்களுக்கே சொந்தம் என்று கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தமிழ் மக்களின் காணிகளை இராணுவத்திடமிருந்து விடுவிப்பதில் போதிய ஆர்வம் கொள்ளவில்லை என ரெலோ வின் தலைமை குழு உறுப்பினரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ; குற்றச்சாட்டினார்.

பருத்தித்துறை நகரசபையின் தவிசாளர் போல் டக்கிளஸின் அழைப்பில், இராணுவத்தினரை பொது இடங்களில் இருந்து அகற்றுவதற்கான போராட்டம் பருத்தித்துறை நகரில் இடம்பெற்றது. இப் போராட்டத்தில் கலந்து nhண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும், யுத்தம் நிறைவுறுத்தப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டன. மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் எம்மை மீண்டும் மீண்டும் ஏமாற்றி வருகின்றன. மக்களின் நிலம் மக்களுக்குச் சொந்தமானது என்ற தேர்தல் பிரச்சாரத்;துடன் ஆட்சிக்கு வந்த அநுர அரசாங்கமும் தமிழ் மக்கள் விடயத்தில் எந்த உத்தரவாதத்தினையும் நிறைவேற்றவில்லை. பலாலியில் வீதியை விடுவித்துவிட்டு நடமாடும் சுதந்திரத்திற்கு தடை போடுகின்றனர். அங்கு மக்களின் நடமாடும் சுதத்திரத்தின் மீது மட்டுப்பாடுகளை விதித்து அறிவித்தல் செய்தவர்கள் இராணுவத்தினர். ஆகவே இராணுவத்திற்கு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதற்கான சட்டங்களை இயற்றுவதற்கான உத்தியோகப்பற்றற்ற அதிகாரம் கையளிக்கப்பட்டுள்ளது. வடக்குக் கிழக்கிற்கு வெளியே உரிய வர்த்தமானி அறிவித்தல்கள் வாயிலாகவே உயர்பாதுகாப்பு வலய மட்டுப்பாடுகள் உள்ளன.

எனினும் வடக்குக் கிழக்கில் தமிழர் பூர்வீக நிலங்களில் இராணுவச் சட்டங்களும் அணுகுமுறைகளும் காணப்படுகின்றன. நாங்கள் வெளிப்படையாகவே எமது நிலம் எமக்கு வேண்டும் இராணுவமே வெளியேறு என்கின்றோம். எவ்வித நியாயப்பாடுகளும் இன்றி தமிழ் மக்களின் தனியார் காணிகளிலும் நிர்வாகம் சார்ந்த மற்றும் பொதுத் தேவைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களிலும் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர்.

தையிட்டி உள்ளிட்ட காணிகளின் மக்கள் வீதியில் போராடுகின்றபோதும் அவற்றுக்கு தீர்வு வழங்கப்படவில்லை. எனவே தாமதம் இன்றி இராணுவத்தினரை வெளியேற்றி தமிழ் மக்களின் வாழ்வுரிமையை உறுப்படுத்த வேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ; தெரிவித்தார்.

இராணுவ பிரசன்னத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ரெலோ ஆதரவு

இராணுவ பிரசன்னத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ரெலோ ஆதரவு.

தமிழினத்தின் மீது தொடர்ச்சியாக சிங்கள பேரினவாத அரசுகளின் முப்படைகளாலும், அரங்கேற்றப்பட்டுவரும் அடக்குமுறை, ஒடுக்குமுறை, இன அழிப்பு படுகொலைகளை வெறுமனே நாம் வேடிக்கைபார்த்துக் கொண்டிருக்க முடியாது.

முப்படையினரின் இனவாத செயற்பாடுகள் நடைபெற வடக்கு கிழக்கிலே காணப்படும் அதிகூடிய தோவையற்ற இராணுவ முகாம்களும் முப்படையினரின் பிரசன்னமுமே காரணமாகும்.-2009 ம் ஆண்டு போர் மெளனிப்பிற்கு பிறகும் கூட தமிழினத்தை நிம்மதியாக வாழவிடக்கூடாதென்கின்ற நிகழ்ச்சி நிரலில் படையினர் செயற்படுவதாகவே நாம் கருதுகின்றோம்.

அன்றைய காலத்திலே எம்மினத்தின் மீது பேரினவாதிகளால் நிகழ்த்தப்பட்ட அடக்குமுறைகளுக்கு முகம் கொடுத்துவந்த எமது மக்களை பாதுகாப்பதற்காக வடக்கு கிழக்கிலிருந்து இராணுவம் உள்ளிட்ட முப்படைகளின் பிரசன்னத்தையும் முற்றாக அகற்றவேண்டும் என்ற நோக்கோடும். எமது மக்களின் சுதந்திர வாழ்வியல் இராணுவ பிரசன்னத்தை அகற்றுவதன் ஊடாக உறுதிப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையிலும் மக்களையும் மண்ணையும் காத்திட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தினராகிய நாம் ஆயுதம் ஏந்தினோம்.

இன்றைய சூழ்நிலையில் மக்களை அச்சுறுத்தும் அதித இராணுவ பிரசன்னமும் அதன் அடக்கு முறை இன அழிப்பு வடிவங்களும் எமது இனத்தின் எதிர்கால இருப்பை கேள்விக்குரிய தாக்குகின்றது. அந்தவகையிலே 18/08/2025 ம் ‘திகதி நாளைய தினம் இலங்கை தமிழரசுக் கட்சியால் முன்னெடுக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு தழுவிய இராணுவ பிரசன்னத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் “ரெலோ” ஆதரவளிக்கின்றது.

இதவேளை இலங்கை தமிழரசுக்கட்சி சகல தமிழ்தேசிய அரசியல் கட்சிகளையும் கலந்தாலோசித்து இந்த போராட்டத்தை முன்னெடுத்திருக்க வேண்டும் மாறாக தன்னிச்சையாக எடுத்த முடிவு தவறானதாகும் .

இருந்த போதிலும் இனத்தின் அடிமை விலங்கொடிக்க இராணுவம் உள்ளிட்ட முப்படைகளின் பிரசன்னத்தை எமது தாயக பூமியான வடக்கு கிழக்கிலிருந்து முற்றாக அகற்ற வேண்டும் அதன் ஊடாக தமிழினத்தை சுதந்திரமாக வாழவிட வேண்டும் என்ற உயரிய நோக்கில் முப்படைகளுக்கும் எதிராக ஆயுதம் ஏந்தியவர்கள் என்ற வகையில் இராணுவ பிரசன்னத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் “ரெலோ” ஆகிய நாம் ஆதிரவளிக்கின்றோம்.

அ. அடைக்கலநாதன்
வன்னி பாராளுமன்ற உறுப்பினர்.
தலைவர் .
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ).

மன்னார் காற்றாலை கனிய வளம் தொடர்பில் இன்று அவசரமாக தமிழ் எம்.பிக்களை சந்திக்கிறார் ஜனாதிபதி

வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ தலைவருமான கெளரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்களது கோரிக்கைக்கு அமைவாக பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்பேசும் சுமார் 15க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்து இட்டு இலங்கை ஜனாதிபதி அவர்களுக்கு அவசர கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்படும் காற்றாலை மின் கோபுரங்கள் தொடர்பில் தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர் ஒப்பமிட்டு ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

மன்னாரில் மக்களுடைய எதிர்ப்புகளையும் மீறிய வகையில் அவர்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் அரசாங்கத்தால் அமைக்கப்படும் காற்றாலை மின்சார கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மண் அகழ்வு போன்ற சூழலை பாதிக்கக்கூடிய திட்டங்களை நிறுத்த கோரிக்கை அடங்கிய கடிதம் ஜனாதிபதி அவர்களுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன் இவ் நடவடிக்க்களை ஆராய்ந்து மக்களுக்கான தீர்வை எட்டும் வகையிலான கலந்துரையாடல் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று மதியம் 2 மணிக்கு நடைபெறவுள்ள இந்த அவசர சந்திப்புக்குக் கடிதத்தில் ஒப்பமிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கடித்ததில் ஒப்பமிடாத வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சந்திப்புக்கு மன்னார் காற்றாலையுடன் தொடர்புடைய திணைக்கள அதிகாரிகளும் அழைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களது கையெழுத்திடப்பட்ட கடிதம் ஜனாதிபதி அவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

May be an image of ticket stub and text

May be an image of ticket stub and text

Posted in Uncategorized