ஜனாதிபதியின் சுதந்திர தின உரை;மனோ வெளியிட்டுள்ள அறிவிப்பு

” அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை நாம் முழுமையான தீர்வாக ஏற்கவில்லை. அதனை வைத்துக்கொண்டு முன்னோக்கி நகர வேண்டும். மாறாக இருப்பதையும் இழக்கும் விதத்தில் செயற்படக்கூடாது.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகியவற்றின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

நாவலப்பிட்டி கெட்டபுலா உச்சிமலை கீழ்பிரிவு தோட்டத்தில் இன்று (05) இடம்பெற்ற ஆலய நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

” இந்த நாட்டிலே விஷயம் புரியாத நபர்கள் பலர் தெற்கிலும் உள்ளனர். வடக்கிலும் வாழ்கின்றனர். தெற்கில் உள்ள நபர்களில் ஜனாதிபதி முதன்மையானவர். அவரின் சுதந்திர தின உரையை செவிமடுக்கையில் சிரிப்புதான் வந்தது. வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு, முதலீடுகளை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றார். ஆனால் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் வேறு நாடுகளுக்குச் சென்று விட்டனர். புலம்பெயர் தமிழர்களிடம் பணம் உள்ளது. கோட்டா ஆட்சியில் அவர்கள் இங்கு வருவார்களா? வரமாட்டார்கள்.

எனவே, சஜித் தலைமையில் அமையும் ஆட்சியில் நாம் நிச்சயம் வெளிநாட்டு முதலீடுகளை உள்ளீர்ப்போம்.

இலங்கை பல்லின மக்கள் வாழும் நாடு. அனைவரும் ஒன்றிணைந்தால்தான் நாடு முழுமைப்படும். அதுவரைக்கும் இந்த நாடு உருப்படாது. நாம் அனைவரும் இலங்கையர்கள். அதற்கு பிறகுதான் இனம் எல்லாம் வரும்.

13ஆவது திருத்தச்சட்டத்தை நாம் முழு தீர்வாக ஏற்கவில்லை. அதேபோல சிங்கள மக்களின் ஆசியின்றி தீர்வை பெற முடியாது. இது எனக்கு மட்டுமல்ல அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டவர்களுக்கும் தெரியும். எனவே, இருப்பதையும் இழக்காமல், முன்னோக்கி செல்வோம் என்பதை விஷயம் புரியாதவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.” – என்றார்.

Posted in Uncategorized

யாழ்ப்பாண அரசாங்க அதிபரின் அறிவிப்பு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிருப்தி

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவில் பங்கேற்க தமிழக மீனவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டமை குறித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

கொவிட் பரவலைக் கருத்திற்கொண்டு யாழ்.அரசாங்க அதிபரின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில், கச்சத்தீவு திருவிழாவில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இலங்கை அடியார்களுக்கு மாத்திரம்
அனுமதி வழங்குவது என்று முடிவு எடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த முடிவு குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள தமிழக முதல்வர் இந்த நிகழ்வில் தமிழக மீனவர்களும் பங்கேற்பதற்கான வழிவகைகளை மேற்கொள்ளுமாறு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்
ஜெய்சங்கரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக மீனவர்கள் மற்றும் யாத்ரீகர்கள் கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்துடன் ஆன்மீக மற்றும் உணர்வு ரீதியான தொடர்பை கொண்டு, பல தசாப்தங்களாக இந்த பாரம்பரிய நிகழ்வில் பங்கேற்று
வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கை அதிகாரிகளின் இந்த செயற்பாடு, மீனவர் சமூகத்தினரிடையே ஆழ்ந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

Posted in Uncategorized

மூன்றாம் தரப்பொன்று குளிர்காய முற்படுகின்றது

தமிழக மீனவர்களுக்கும், வடக்கு மீனவர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையைப் பயன்படுத்தி மூன்றாம் தரப்பொன்று குளிர்காய முற்படுகின்றது. இதற்கு இரு நாட்டு அரசுகளும் இடமளிக்கக்கூடாது. இப்பிரச்சினையை விரைவில் சுமூகமாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நுவரெலியாவில் இன்று (05) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

இலங்கையில் வடபகுதி மற்றும் இந்தியாவில் தமிழகம் ஆகிய பகுதிகளில் வாழும் மீனவ சமுதாயத்துக்கிடையிலான பிரச்சினை பூதாகரமாகியுள்ளது. இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்கள், எமது நாட்டு கடல் வளத்தையும், மீனவர்களின் உபகரணங்களையும் அழிப்பதாக வடபகுதி மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.

தமிழகத்திலும் தமிழர்கள்தான் வாழ்கின்றனர். வடக்கிலும் தமிழர்கள்தான் வாழ்கின்றனர். எனவே, இதனை தமிழர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள முரண்பாடாக சிலர் பார்க்கின்றனர். எனவே, இவ்விவகாரத்தை நாம் மிகவும் அவதானத்துடன் அணுக வேண்டும். இப்பிரச்சினையைப் பயன்படுத்தி மூன்றாம் தரப்பொன்று குளிர்காய முற்பட்டால் அது பெரும் பிரச்சினையாக அமைந்துவிடும். எனவே, இரு நாடுகளினதும் அரசும், அமைச்சர்களும் இணக்கப்பாட்டு அடிப்படையில் இப்பிரச்சினையை தீர்த்துக்கொள்ள முன்வரவேண்டும்.

அதேவேளை, எமது கட்சியின் பதுளை பிரதேச சபை உறுப்பினர் சிவநேசன் மீது, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இச்சம்பவத்தை நாம் கண்டிக்கின்றோம். தோட்டப்பகுதியில் உள்ள காணியை பாதுகாக்க முற்பட்டதால் தான் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கில் காணிகள் அபகரிக்கப்பட்டதுபோல, மலையக பகுதிகளில் உள்ள காணிகளையும் கையகப்படுத்தும் முயற்சி எடுக்கப்படுகின்றது. இதனை தடுத்து நிறுத்த நாம் ஒன்றுபட வேண்டும்.” – என்றார்.

ஜே.வி.பி அரசுக்கு மில்லியன் டொலர்களை கடனாக வழங்க இணங்கிய கனேடிய இலங்கையர்

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையில் ஆட்சியமைக்கும் அரசாங்கத்திற்கு ஒரு மில்லியன் டொலர்களை கனடாவில் வசிக்கும் இலங்கையர் வழங்குவதாக உறுதியளித்துள்ளார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி  தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வழங்கப்படும் டொலரை நான்கு வருடங்கள் வரை திருப்பி செலுத்த தேவையில்லை. நான்கு வருடங்களின் பின்னர் செலுத்தும் வட்டி எதிர்பார்க்கப்பட மாட்டாது.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான அரசாங்கத்திற்கு இவ்விதமாக டொலர்களை வழங்கி உதவி செய்ய உலகம் முழுவதும் பல இலங்கையர்கள் இருக்கின்றனர்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால், வெளிநாடுகளில் இருக்கும் இலங்கையர்கள் ஊடாக நிதியுதவிகளை பெற்றுக்கொள்ள போவதாகவும் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் மாத்தறை மாவட்ட மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணி நாட்டில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினால், அந்த அரசாங்கத்தின் நிதியமைச்சர் பொறுப்பு சுனில் ஹந்துன்நெத்தி வழங்கப்படும் என அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஒரு கூட்டத்தில் உரையாற்றும் போது குறிப்பிட்டிருந்தார்.

இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையை கண்டித்து மன்னாரில் கண்டன போராட்டம்

இந்திய இழுவைப்படகுகளின் அத்து மீறிய வருகையினால் இடம் பெற்ற அனர்த்தத்தின் போது யாழ் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் உயிரிழந்த 2 மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகையை கண்டித்து கண்டன போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில், மாவட்ட இணைப்பாளர் எ.பெனடிற் குரூஸ் தலைமையில் இன்று (5) மன்னார் புதிய பஸ் நிலையத்திற்கு முன் குறித்த போராட்டம் அமைதியான முறையில் இடம்பெற்றது.

இதன் போது யாழ்ப்பாணத்தில் இந்திய இழுவைப் படகுகளின் அத்து மீறிய வருகையின் போது ஏற்பட்ட அனர்த்தத்தின் போது உயிரிழந்த மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் இதன்போது யாழ்ப்பாணத்தில் இடம் பெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததோடு, இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகையையும் மன்னார் மாவட்ட மீனவர்கள் சார்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்டித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மீனவர்களை உடனடியாக தாயகம் திருப்பி அனுப்ப வலியுறுத்தி போராட்டம்

இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்டு 43 ராமேஸ்வரம் மீனவர்களை உடனடியாக தாயகம் திருப்பி அனுப்ப வலியுறுத்தி சிறையில் உள்ள மீனவர்களின் உறவினர்கள் ராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கடந்த டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 43 மீனவர்களையும் அவர்களது 6 விசைப்படகுகளையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

கடந்த 26ஆம் தேதி ராமேஸ்வரம் மீனவர் 43 பேர் மற்றும் புதுகோட்டை மாவட்டம் ஜெகதாபட்டிணம் மீனவர்கள் 12 போ் என மொத்தமாக 55 மீனவர்களின் வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது வழக்கை விசாரித்த நீதிபதி கஜநிதிபாலன் மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

விடுதலை செய்யப்பட்ட ராமேஸ்வரம் மற்றும் ஜெகதீபட்டிணம் மீனவர்கள் 55 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் 46 மீனவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் 46 மீனவர்களை சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்டம் இயக்கச்சியில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு இலங்கையில் தங்க வைக்கப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக தாயகம் திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்யும்படி இலங்கையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்களின் உறவினர்கள் இன்று ராமேஸ்வரம் வட்டாச்சியார் அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்தாருப்பு போராட்டம் நடத்தினர்.

பின்னா் வட்டாச்சியா், ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடல் பேச்சுவார்த்தை நடத்த வரும் திங்கட்கிழமைக்குள் இலஙலகையில் உள்ள மீனவர்கள் தாயகம் திருப்பி அனுப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

இதனையடுத்து திங்கட்கிழமை மீனவர்கள் தாயகம் திரும்பி வரவட்டால் திங்கள்கிழமை முதல் தொடர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறி கலைந்து சென்றனர்.

Posted in Uncategorized

மனித உரிமைகள் தொடர்பான அம்பிகா சற்குணநாதனது கருத்துக்கள் கவலை அளிக்கின்றது – வெளிநாட்டு அமைச்சு

ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் மனித உரிமைகளுக்கான உபகுழுவில் நீலன் திருச்செல்வம் அறக்கட்டளையின் தலைவி அம்பிகா சற்குணநாதன் வெளியிட்ட கருத்துக்கள், இலங்கை அரசாங்கம் பல முனைகளில் அடைந்துள்ள முன்னேற்றத்தை முற்றாகப் புறக்கணிக்கும் வகையில் அமைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் மனித உரிமைகளுக்கான உபகுழுவில் கடந்த 2022 ஜனவரி 27ஆம் திகதி இடம்பெற்ற கருத்து பரிமாற்றத்தின்போது, நீலன் திருச்செல்வம் அறக்கட்டளையின் தலைவி அம்பிகா சற்குணநாதன், இலங்கையின் மனித மற்றும் தொழிலாளர் உரிமைகளின் நிலைமை குறித்த பல்வேறு விடயங்களை வெளிப்படுத்தினார்.

“ஐ.நா. மனித உரிமைகள் பொறிமுறைகள் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆகியவற்றுடன் நீண்டகால ஒத்துழைப்பில் ஈடுபட்டு, உள்நாட்டு செயன்முறைகள் மற்றும் நிறுவனங்களின் மூலம் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை நிவர்த்தி செய்வதற்கான தனது உறுதிப்பாட்டை வழங்கும் நேரத்தில், அரசாங்கத்தின் நோக்கங்கள் மற்றும் நேர்மை குறித்த சந்தேகங்களை உருவாக்குகின்றது.

மனித உரிமைகள் தொடர்பாக அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம் தனது ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையைப் பயன்படுத்த வேண்டும்” என அம்பிகா சற்குணநாதன் வழங்கிய பரிந்துரைகளில் அமைச்சு ஏமாற்றம் அடைந்துள்ளது.

இந்த நிலையில், அம்பிகா சற்குணநாதனின் கருத்துகளுக்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சு, அம்பிகா சற்குணநாதனது கருத்துக்கள் கவலை அளிப்பதாகத் தெரிவித்துள்ளது.

நிதியமைச்சர் பஸிலை அமெரிக்கா விசாரணைகள் செய்தல் வேண்டும்! வலியுறுத்துகிறார் சுரேஷ்

கள்ளச் சந்தையில் டொலர்கள் வாங்கி வடகொரியாவிடம் ஆயுத கொள்வனவு செய்த தமது நாட்டு பிரஜையான நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சசவை அமெரிக்கா விசாரணை செய்து உண்மையைத் தெளிவுபடுத்த வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப் பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப் பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் ,

கறுப்பு சந்தையில் டொலர்களை வாங்கி வடகொரி யாவிடம் ஆயுதங்களைக் கொள்வனவு செய்ததாக இலங்கையின் நிதி அமைச்சரும் அமெரிக்கப் பிரஜையுமான பஸில் ராஐபக்ச கூறியிருக்கின்றமை தற் போது சர்ச்சையாகியுள்ளது.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் என்பது சுயநிர்ணய உரிமை, சுயாட்சி போன்றவற்றை மையமா கக் கொண்டு நடைபெற்றது. விடுதலைப் போராட்டம் என்பது பேச்சு மூலம் பேசித் தீர்க்கப்பட்டிருக்க வேண் டிய விடயம். ஆனால் 2005 ஆம் ஆண்டுக்குப் பிற்பாடு இந்த அரசாங்கம் மூர்க்கத்தனமாகப் போராட்டத்தை முன் னெடுத்தமை எல்லோருக்கும் தெரிந்த விடயம். யுத் தத்தை முன்னெடுத்துச் செல்வதற்காகப் பல கோடிக ளைச் செலவிட்டு ஆயுதங்களைக் கொள்வனவு செய் தது. முக்கியமாக சீனாவிலிருந்தும் பாகிஸ்தானில் இருந்தும் தற்போது வடகொரியாவில் இருந்துத் ஆயு தங்களை வேண்டியதாகக் கூறுகின்றார்கள்.

வட கொரியாவில் இருந்து பல மில்லியன் டொலர்களுக்குக் கடன்களாக இராணுவத் தளவாடங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. இந்த இராணுவத் தளவாடங்களின் கொள்வனவு மற்றும் கடன் என்பன தற்போது எங்கு கொண்டு வந்து விட்டுள்ளது என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆனால், பஸில் ராஜபக்rவின் இத்தகைய விடயம் அன்றைய பாதுகாப்புச் செயலாளராக இருந்தவரும் அமெரிக்கப் பிரஜையாக இருக்கின்ற இன்றைய இலங்கை ஐனாதிபதி கோட்டாபய ராஜபக்rவுக்கும் தெரியும். அன்றைய பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இன்றைய நிதியமைச்சர் ஆகியோர் அமெரிக்கப் பிர ஜையாக இருந்தவர்கள். அமெரிக்காவால் பொருளாதாரத் தடை விதிக்கப் பட்ட நாட்டுடன் இவர்கள் கள்ளச்சந்தை மூலம் டொலர் களைக் கடத்தி அங்கிருந்து ஆயுதங்களைக் கொள் வனவு செய்தோம் என ஏற்றுக்கொள்கின்றார்.

நிச்சய மாக அமெரிக்க அரசு பஸில் ராஜபக்சவை மாத்திர மன்றி அன்றைய காலகட்டத்தில் இலங்கையை வழி நடத்திய தலைவர்களும் விசாரிக்கப்படவேண்டும். அன்று கொள்வனவு செய்யப்பட்ட ஆயுதங்கள் ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவிப்பதற்கு உதவியாக இருந்தது. யுத்தத் துக்காகக் கள்ளச் சந்தை ஊடாக வடகொரியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆயுதங்கள் என்பது ஒரு மனிதப் படுகொலைக்கும், மனித உரிமை மீறலுக்கு மாக இலங்கை அரசாங்கத்தால் அப்போது பாவிக்கப் பட்டது என்பதுதான் முக்கியமான விடயம். ஆகவே, இத்தகைய விடயம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் எந்தவொரு விசாரணைகளையும் நடத்தப் போகின்றமை கிடையாது.

ஆனால், இவற்றை மேற் கொண்டது அமெரிக்க பிரைஜைகள் என்ற அடிப்படை யிலும் இலங்கை நாடு என்பது இவர்களுடன் சம்பந் தப்பட்டது என்பதாலும் தங்கள் பிரஜைகளான பஸில் ராஜபக்rவை விசாரிப்பதும் இலங்கை அரசு இதற்கு ஊக்கமளித்தது சம்பந்தமாகவும் விசாரிப்பது அமெ ரிக்காவின் கடமையென நாம் கருதுகிறோம். ஆகவே, இவ்வாறான நடவடிக்கைகளைக் கடந்த காலங்களில் இரகசியமாக தாங்கள் நிறைவேற்றி யதாகவும் தற்போதும் கூட நாடு வங்குரோத்து நிலை யில் டொலர்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகிறது, எதுவும் இறக்குமதி செய்ய முடியாத நிலைமை இருக் கிறது நாளாந்தம் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற் பட்டுக் கொண்டிருக்கிறது,

அரசாங்கம் எந்தவொரு பொருளுக்கும் விலை நிர்ணயிக்க முடியாது இருக்கி றது. ஆகவே, இவ்வாறான சூழ்நிலையில் மீண்டும் கள் ளச்சந்தையில் டொலர் வாங்கலாம் என்ற சாரப்பட நிதி அமைச்சரின் கூற்று இருக்கிறது. ஆகவே, இது தொடர் பில் முழுமையான விசாரணை தேவை. ஒரு பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட நாட்டில் அமெரிக்கப் பிரஜையை இவ்வாறான நடவடிக்கை களை மேற்கொள்ள முடியுமா என்பதை உரிய விசா ரணை செய்து அமெரிக்க அரசு உண்மைகளை தெளிவுபடுத்த வேண்டும் என்பதை கேட்டுக்கொள் கிறோம். – எனக் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

‘மரண சான்றிதழ் வழங்குவோம்’ என்ற வார்த்தையை தவிர்க்குமாறு காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கம் கோரிக்கை

இலங்கையின் 74வது சுதந்திர தினம், தமிழர்களுக்கு ஒரு கறுப்பு நாள் எனவும் அரசாங்கம் இனிமேல் மரண சான்றிதழ் வழங்குவோம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை முற்றாக தவிர்க்க வேண்டும் எனவும் கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

திருகோணமலை அன்புவெளிபுரம் கையளிக்கப்பட்டு,கடத்தப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் அலுவலகத்தில் இன்று (4) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவி ஜே.நாகேந்திரன் ஆஷா,

“இன்றைய தினம் நாட்டின் 74வது சுதந்திர தினத்தினை வெகு விமர்சையாக கொண்டாடி கொண்டிருக்கிறார்கள் ஆட்சியாளர்கள். ஆனால் இன்றைய நாள், தமிழர்களுக்கான கறுப்பு நாள். இத்தனை வருடங்கள் கடந்தும் கையளிக்கப்பட்டு,கடத்தப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரரின் தரவுகள் சரியாக வழங்கப்படவில்லை. இந்த நாட்டில் எமக்கு எந்த ஒரு சுதந்திரமும் இல்லை.

தாங்கள் இன்றுவரை நிம்மதியாக இந்த நாட்டில் வாழ வில்லை. அரசாங்கத்தின் அழுத்தங்களின் காரணமாக அரச புலனாய்வு துறையினர்களின் கேள்விகளுக்கு உள்ளாக்கப்பட்டு,பின் தொடரப்பட்டு மற்றும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றோம்.

தமது உறவுகளுக்கு நீதி விசாரணை இல்லாமல் எவ்வாறு மரண சான்றிதழ் வழங்க முடியும். எமக்கு மரண சான்றிதழ் தேவையில்லை. அவர்களுக்கான சரியான ஒரு நீதி மாத்திரமே வேண்டும்” என்றார்.

”கடினமான காலங்கள் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை”: ஜனாதிபதியின் சுதந்திர தின உரை!

பெற்றுக்கொண்ட சுதந்திரத்தின் உயர்ந்தபட்ச பலனை அடைவதற்கு, அனைவரும் நாட்டுக்கான தமது பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டுமென்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தினார்.

சுதந்திரமானதும் ஜனநாயகமானதுமான நாட்டின் மக்களுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளன. அது போன்றே, பொறுப்புகளும் உள்ளன என்றும் எடுத்துரைத்த ஜனாதிபதி , அந்தப் பொறுப்புகளை மறந்து உரிமைகள் பற்றி மாத்திரம் பேசுவது உகந்ததல்ல என்றும் குறிப்பிட்டார்.

இன்று (04) முற்பகல், கொழும்பு சுதந்திரச் சதுக்கத்தில் இடம்பெற்ற 74ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்டு தேசத்துக்காக உரையாற்றும் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் அயோமா ராஜபக்ஷ ஆகியோர் கொண்டாட்ட இடத்துக்கு வருகை தருவதை அறிவிக்கும் வகையில் இசைக்கருவிகள் இசைக்கப்பட்டன. அதன் பின்னர், ஜனாதிபதி அவர்களினால் தேசிய கொடி ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து,

பாடசாலை மாணவ, மாணவியரினால் தேசிய கீதம் பாடப்பட்டது.

பாதுகாப்புப் படைகளின் பிரதானி, கடற்படை, விமானப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர், ஜனாதிபதி அவர்களை விசேட மேடைக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து, பாடசாலை மாணவிகளால் “ஜயமங்கள கீதம்” மற்றும் “தேவோ வஸ்ஸது காலேன” கீதம் ஆகியன பாடப்பட்டன. தொடர்ந்து, இலங்கையின் சுதந்திரம், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த அனைத்து இலங்கையர்களையும் நினைவேந்தும் வகையில் 02 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனையடுத்து, ஜனாதிபதிக்கு மரியாதை செலுத்தும் முகமாக, 21 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி தேசத்துக்கான உரையை ஆரம்பித்தார்.

“நாட்டுக்கு முன்னால் காணப்படும் சவால்களை வெற்றிகொள்ள வேண்டுமாயின், அர்ப்பணிப்புகளின் ஊடாகவே அவை சாத்தியப்படும். கடினமான காலங்கள் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அவ்வாறான கடினமான காலங்களை எதிர்கொள்வதற்கு, பலமிக்க மனிதர்கள் அவசியம். நாம் தற்காலத்தில் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள் அனைத்தும் நீண்டகாலப் பிரச்சினைகள் அல்ல. நேர்மறையான அணுகுமுறைகளுடன் அவ்வாறான பிரச்சினைகளுக்கு பதிலளிக்க முடியும்” என்று, ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

“நாடு தற்போது முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான காரணங்களைக் கண்டுபிடித்துக்கொண்டு பல வருடங்கள் பின்னோக்கிச் செல்வதை விட, அவற்றுக்கான நீண்டகால மற்றும் குறுகியகாலத் தீர்வுகளைக் காண்பதே காலோசிதமானது. அரசாங்கம் தற்போது அதற்கான அவதானத்தையே செலுத்தியுள்ளது” என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
நாட்டுக்கு எடுத்துக்காட்டாக எப்போதும் செயற்படுமாறு அனைத்து அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து அரசியல்வாதிகளிடமும் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி அவர்கள், நாட்டு மக்களுக்கு அந்த முன்னுதாரணத்தைக் காட்டும் போதே, பெரும்பாலான மக்கள் உங்களைப் பின்பற்றுவார்கள் என்றும் குறிப்பிட்டார்.

வெற்றிகொள்ளப்பட்டுள்ள சுதந்திரத்தை எதிர்காலச் சந்ததியினருக்காகப் பாதுகாப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் ஒற்றுமை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை நிலைநாட்டுவதாக வழங்கிய உறுதிமொழியை எப்போதும் காப்பதாகவும் குறிப்பிட்டார்.

சுதந்திரத்தின் உண்மையான அர்த்தத்தை அடைந்த பெருமைமிக்க தேசத்தை உருவாக்குவதற்காக இணையுங்கள் என்று, தேசபக்தியுள்ள மக்கள் அனைவருக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

74ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம், கொவிட் தொற்றொழிப்புக்கான சுகாதார வழிகாட்டுதல்களுடன், நாட்டின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இராணுவ, கடற்படை, விமானப்படை, பொலிஸ், சிவில் பாதுகாப்பு மற்றும் தேசிய மாணவப் படையினர், இதற்கான அணிவகுப்பு மரியாதைகளில் ஈடுபட்டிருந்ததோடு, இலங்கையின் அனைத்துச் சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அழகிய கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

மஹா சங்கத்தினர், அனைத்து மதத் தலைவர்கள், நிறைவேற்று அதிகாரமுள்ள ஐந்தாவது ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச , பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், மத்திய வங்கியின் ஆளுநர், இராஜாங்க அமைச்சர்கள், ஆளுநர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் செயலாளர்கள், முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பு பிரதானிகள், அரச அதிகாரிகள் மற்றும் படையினர் உள்ளிட்ட பலரும் இந்தக் கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

Posted in Uncategorized