ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவர் இராஜாங்க அமைச்சர் சமலுடன் சந்திப்பு

அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவர் சாரா ஹல்டனுக்கும் இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

May be an image of 2 people, people sitting and indoor

சந்திப்பானது இராஜாங்க அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்யை தினம் நடைபெற்றது.

நவம்பரில் ஸ்காட்லாந்தில் நடந்த கோப் 26 காலநிலை மாற்ற மாநாட்டில் விவாதிக்கப்பட்ட பல விடயங்கள் குறித்து இந்த சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இது தவிர எக்ஸ்பிரஸ் பேர்ல் பேரழிவை அடுத்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளில் சாத்தியமான சர்வதேச ஒத்துழைப்புகள், புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றம் தணிப்பு தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆசிய திட்டங்களை உருவாக்குதல், தாழ்நில ஈரநிலங்கள் மற்றும் அவற்றின் தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் விலங்கினங்களின் பாதுகாப்பு, எதிர்கால சுற்றுச்சூழல் பேரழிவுகளைத் தடுக்க நீண்ட கால காலநிலை மாற்ற முன்னறிவிப்புகள் மற்றும் உருவகப்படுத்துதல்களை செயல்படுத்துதல், விவசாயம், கட்டுமானம் மற்றும் வளர்ச்சி குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரு நாடுகளும் எதிர்கால இருதரப்பு பணிகளுக்காக உத்தியோகபூர்வ மட்டத்தில் முன்னேறுவது என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.

இக் கலந்துரையாடலில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் விவகாரங்களின் தலைவர் மேத்யூ டெத், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி திருமதி தர்ஷனி லஹந்தபுர ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Posted in Uncategorized

இலங்கையில் மலையகத் தமிழர்களின் வாழ்க்கை நிலை இழிவாக இருப்பதாக ஐ.நா அலுவலர் கவலை

இலங்கையின் மலையக பெருந்தோட்ட பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் மனிதாபிமானமற்ற, இழிவான சூழ்நிலையில் வாழ்ந்து வருவதாக ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் ரோமோயா ஒபோகாடா தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஐநா அலுவலகத்தில் வெள்ளியன்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

எனினும், இலங்கை மலையகத் தமிழர்களுக்கு இலங்கை மற்றும் இந்திய அரசுகள் உதவி செய்துவருவதாகவும், சர்வதேச அமைப்புகள் இம்மக்களைக் கண்டுகொள்வதில்லை என்றும் ஆளும் தரப்பு கூறுகிறது .

ரோமோயா ஒபோகாடா உரையில் பேசியவை இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

இலங்கையிலுள்ள மலையக பெருந்தோட்ட மக்கள், தேயிலை தொழில்துறையின் ஊடாக நாட்டிற்கு பாரியளவிலான அந்நிய செலாவணியை ஈட்டித் தருகின்றனர்.

ஆண்டொன்றிற்கு சுமார் 1.3 பில்லியன் டொலருக்கும் அதிகமான வருமானத்தை இலங்கை இந்த பெருந்தோட்ட துறை மூலம் வருகின்றது.

இந்தியாவிலிருந்து சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர், மலையகத்திலுள்ள இந்திய வம்சாவளித் தமிழர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.

இவ்வாறு அழைத்து வரப்பட்ட தமிழ் மக்கள், நாட்டின் மலையக பகுதிகளில் குடியமர்த்தப்பட்டு, தேயிலை, ரப்பர் போன்ற பெருந்தோட்ட தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

மலையகத்தில் சுமார் 10 லட்சம் வரையான இந்திய வம்சாவளித் தமிழர்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில், அவர்களில் சுமார் 2 லட்சம் பேர் தேயிலை மற்றும் ரப்பர் தொழில்துறைகளில் நேரடியாக பணியாற்றி வருகின்றனர்.

தேயிலை மற்றும் ரப்பர் தொழில்துறைகளில் அதிகளவில் பெண் தொழிலாளர்களே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த மக்கள் பல ஆண்டுகளாக நடத்திய போராட்டங்களின் வெற்றியாக நாள் ஒன்றுக்கு 1000 ரூபாய் சம்பளம் வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்ட போதிலும், அந்த சம்பளம் கூட இன்று வரை உரிய வகையில் கிடைக்காத நிலையை எதிர்நோக்கி வருகின்றனர்.

அதேவேளை, 200 வருட காலமாக லைன்-வீடுகள் என்று அழைக்கப்படும் சிறிய, நெரிசல் மிகுந்த வீடுகளிலேயே இந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

மிக மோசமான சுகாதார மற்றும் சமூக பிரச்னைகளை எதிர்நோக்கி வருவதுடன், காணி உரிமைகள் மலையக மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதாக ரோமோயா ஒபோகாடா தனது உரையில் கூறியுள்ளார்.

வீட்டுத் திட்டங்களை இந்தியா அமைத்து கொடுக்கும் நிலையிலும், மலையக மக்கள் லைன் வீடுகளில் மனிதாபிமானமற்ற இழிவான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்களின் வாழ்க்கையை கண்டு தான் அதிர்ச்சி அடைந்ததாக ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் ரோமோயா ஒபோகாடா தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கத்தினால் 14,000 வீடுகள் கட்டிக் கொடுக்க முன்வந்துள்ள போதிலும், பெருந்தோட்ட நிறுவனங்கள் அந்த வீடுகளை நிர்மாணிக்க காணிகளை பிரிந்து வழங்க வெளிப்படையாகவே தயக்கம் காட்டி வருவதாக அவர் கூறுகின்றார்.

பெருந்தோட்ட நிறுவனங்கள் காணிகளை பிரித்து வழங்குவதில் தயக்கம் காட்டுகின்றமையினால், வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் தாமதமடைந்து வருவதாக ரோமோயா ஒபோகாடா குறிப்பிடுகின்றார்.

சாதி என்ற அடிப்படையிலும் இந்த சமூகத்தின் மீதான பாகுபாடு தொடர்ந்தும் அதிகரிக்கப்பட்டு வருவதை அவர் உரையில் முன்னிலைப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அதிக வட்டியில் நுண்கடன்களை வழங்கி, அவர்களை நிர்கதி நிலைக்கு கொண்டு செல்லும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

பணத்தை திருப்பி செலுத்தாத சந்தர்ப்பங்களில், குழந்தை தொழிலாளர்களை தொழிலுக்கு ஈடுபடுத்தும் நடைமுறையொன்றும் உருவாகியுள்ளதையும் அவர் தனது உரையில் முன்னிலைப்படுத்தியுள்ளார்.

நுண்கடன் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் கூறிய போதிலும், இன்று வரை உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என ரோமோயா ஒபோகாடா தெரிவிக்கின்றார்.

மலையக மக்களுக்கு காணி உரிமை

ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் ரோமோயா ஒபோகாடாவின் இலங்கை விஜயத்தின் போது, அவரை சந்தித்து, மலையக மக்களின் பிரச்னை தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்திய இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சர்வதேச விவகாரங்கள் மற்றும் தொழிலுறவுகளுக்கு பொறுப்பான பரத் அருள்சாமி பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பங்காளி கட்சியாகும்.

ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் ரோமோயா ஒபோகாடா, கடந்த மாதம் 28ம் தேதி மலையகத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சர்வதேச விவகாரங்கள் மற்றும் தொழிலுறவுகளுக்கு பொறுப்பான பரத் அருள்சாமியையும் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு, சர்வதேச நாடுகள், சர்வதேச அமைப்புக்கள் பாரிய உதவிகளை வழங்கி வருகின்ற நிலையில், மலையக தமிழர்கள் எந்த விதத்திலும் அவர்களினால் கண்டுக்கொள்ளப்படுவதில்லை என்பதை தான் வலியுறுத்தியதாக அவர் கூறினார்.

மலையக மக்களுக்கான வீட்டுத்திட்டங்களை தாம், தொழிற்சங்கம் என்ற ரீதியில், இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களிடம் பல்வேறு போராட்டங்களை நடத்தி, பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பெற்றுக்கொள்வதையும் தான் கூறியதாக அவர் குறிப்பிடுகின்றார்.

அத்துடன், தொழிற்சங்கங்கள் சந்தா பணம் பெற்றுக்கொள்வது குறித்து ரோமோயா ஒபோகாடா, பரத் அருள்சாமியிடம் கேட்டறிந்து கொண்டுள்ளார்.

தொழிலாளர் நலன்களை பேணும் வகையில், மலையகம் முழுவதும் தமது தொழிற்சங்க அலுவலகங்கள் உள்ளதாகவும், அவ்வாறான அலுவலகங்கள் உள்ளிட்ட இதர தொழிலாளர் நலனுக்காக சந்தா பணம் பயன்படுத்தப்படுவதாகவும் தெளிவூட்டப்பட்டுள்ளது.

சந்தா பணம் பெற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை ரோமோயா ஒபோகாடா உணர்ந்துகொண்டதாக அவர் தெரிவித்தார்.

மேலும் அவர்கள் நீதிமன்றத்தை அணுகவும் வழக்குகளில் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த தொகைகள் பயன்படுத்தப்படுகிறதே தவிர, தனிப்பட்ட தேவைகளுக்காக அல்ல என்பதை ஐநா அதிகாரியிடம் தெரிவித்தார்.

சந்தா பணம் பெற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை ரோமோயா ஒபோகாடா உணர்ந்துகொண்டதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், காணி உரிமைகளை மலையக மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதே, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமானின் கொள்கை என்பதை தான் கூறியதாகவும் பரத் அருள்சாமி குறிப்பிட்டார்.

பெருந்தோட்ட முகாமைத்துவத்துக்கு வருகின்ற உயர் அதிகாரிகள் ராணுவ அதிகாரிகள் என கூறி, ராணுவ மயப்படுத்தப்படுத்த முயற்சிக்கின்றதையும் தாம், ஐநா அதிகாரியிடம் தெரிவித்ததாக குறிப்பிட்ட அவர், அதனை தொழிற்சங்கம் என்ற விதத்தில் எதிர்ப்பதாகவும் கூறினார்.

மலையக மக்களுக்கான உரிமைகள் குறித்தே, ஐநா அதிகாரி அதிக கவனம் செலுத்தியிருந்ததாகவும் பரத் அருள்சாமி கூறுகின்றார்.

இதேவேளை, மலையகத்திலுள்ள கட்சிகள், தொழிற்சங்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் (NGO) ஆகியவற்றின் பிரதிநிதிகளை சந்தித்த ரோமோயா ஒபோகாடா, மலையக தமிழர்களையும் நேரடியாக சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்.

இவ்வாறான பின்னணியிலேயே, ரோமோயா ஒபோகாடா, இந்திய வம்சாவளி தமிழர்களின் அவல நிலைமை குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

Posted in Uncategorized

சவேந்திர சில்வாவிற்கு எதிராக பிரித்தானியா ‘மெக்னிற்ஸ்கி’ முறையிலான தடையை விதிக்கவேண்டும்!

இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவால் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவர் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவேண்டும் என்பதுடன், அவர் பிரிட்டனுக்குள் நுழைவதற்குத் தடைவிதிக்கப்படவேண்டும் என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் பொப் பிளக்மான் (Bob Blackman)பிரித்தானிய வெளிவிவகாரச்செயலாளரிடம் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுடன் சவேந்திர சில்வா தொடர்புபட்டிருப்பதாக நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் சவேந்திர சில்வாவிற்கு எதிராக பிரித்தானியா ‘மெக்னிற்ஸ்கி’ முறையிலான தடையை விதிக்கவேண்டும் என அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிவிவகாரச்செயலாளரிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

அதேவேளை அமெரிக்காவில் நடைமுறையிலுள்ள மெக்னிற்ஸ்கி சட்டத்தின் ஊடாக மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் பாரிய ஊழல் மோசடிகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு எதிராகத் தடைவிதிக்கமுடியும் என்பதுடன் அவர்களின் சொத்துக்களையும் முடக்கமுடியும்.

அந்தவகையில் ஏற்கனவே பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களான சாரா ஜோன்ஸ், எலியற் கெல்பேர்ன் மற்றும் தெரேஸா வில்லியர்ஸ் ஆகிய மூவரும் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு எதிராக தடைவிதிக்கவேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில் நான்காவதாக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் பொப் பிளக்மானும் (Bob Blackman) சவேந்திர சில்வாவிற்கு எதிராக தடைக்கோரிக்கையை முன்வைத்து காணொளியொன்றை வெளியிட்டுள்ளார். அக்காணொளியில் அவர் கூறுகையில்,

பிரித்தானியாவின் சர்வதேச தடை வழிகாட்டல்களுக்கு அமைவாக இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு எதிராகத் தடைவிதிக்கப்படவேண்டும் என்று சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் வெளிவிவகாரச் செயலாளரிடம் கோரியுள்ளது.

கடந்த 2009ம் ஆண்டில் இலங்கையில் முடிவிற்குக்கொண்டுவரப்பட்ட போரின்போது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்த ‘யுத்த சூனிய வலயங்களில்’ ஷெல் தாக்குதல்களை நடாத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இலங்கை இராணுவத்தின் 58வது படைப்பிரிவின் கட்டளைத்தளபதியாக ஜெனரல் சவேந்திர சில்வா செயற்பட்டுள்ளார்.

அதுமாத்திரமன்றி இறுதிக்கட்டப்போரின்போது பல நூற்றுக்கணக்கானோர் படையினரிடம் சரணடைந்தபோது அந்த இடத்தில் சவேந்திர சில்வாவும் இருந்ததை உறுதிப்படுத்திய கண்கண்ட சாட்சியங்களின் வாக்குமூலங்களையும் சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் சமர்ப்பித்துள்ளது.

அவர்களில் பலர் காணாமலாக்கப்பட்டிருக்கின்றார்கள். அவ்வாறு காணாமலாக்கப்பட்டவர்களின் தாய்மார் அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துகொள்வதற்காக பலவருடங்களாக அவர்களின் புகைப்படங்களுடன் வீதிகளில் இறங்கிப்போராடிவருகின்றார்கள்.

இருப்பினும் அவர்களுக்கான பதில் இதுவரை கிட்டவில்லை. போரின்போது சவேந்திர சில்வா தலைமையிலான 58 ஆவது படைப்பிரிவினால் நிகழ்த்தப்பட்ட சட்டவிரோதமான படுகொலைகள் உள்ளடங்கலாக மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் நோக்கில் கடந்த 2020 ஆம் ஆண்டில் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களம் சவேந்திர சில்வாவிற்கு எதிராகப் பயணத்தடை விதித்தது.

அவ்வாறானதொரு பின்னணியில் நாம் அவருக்கெதிராகத் தடைவிதிக்கவேண்டிய தருணம் இதுவாகும். எனவே சவேந்திர சில்வா பிரித்தானியாவிற்குள் நுழைவதை அனுமதிக்கக்கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் சவேந்திர சில்வா கட்டளைத்தளபதியாக இருந்தபோது நிகழ்த்தப்பட்ட மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் , அவரால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் குறித்தும் பொறுப்புக்கூறலுக்குட்படுத்தப்படவேண்டும் என்றும் பிளக்மான் (Bob Blackman) வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீன சேதன பசளைக்கான கட்டணம் மீதான தடை உத்தரவு நீடிப்பு

சீனாவின் சேதன பசளைக்கான கட்டணத்தை செலுத்துவதை இடைநிறுத்தி மக்கள் வங்கிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு எதிர்வரும் 23 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தால் இன்று (03) தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தின் நீதிபதிகளான பிரதீப் ஹெட்டியாராச்சி, பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையில் குறித்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

லங்கா உர நிறுவனம் மற்றும் கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனத்தினால் சீனாவின் சேதன பசளை கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் விவகாரம் : வசந்த கரன்னாகொட உள்ளிட்ட 14 பேருக்கு எதிரான வழக்கு ஜனவரி 7 ஆம் திகதி விசாரணை

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமலாக்கிய சம்பவத்தில், பிரதிவாதிகளான முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்ட 14 கடற்படையினருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஜனவரி 7 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் நேற்று (3) தீர்மானித்தது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போதே நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

இந்த கடத்தல், காணாமலாக்கல் குறித்த வழக்கு விசாரணைகள் பிரதம நீதியரசரால் நியமிக்கப்பட்ட மேல் நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்னத்தின் தலைமையின் கீழ் மேல் நீதிமன்ற நீதிபதிகளான அமல் ராஜகருணா, நவரத்ன மாரசிங்க ஆகியோர் உள்ளடங்கிய சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் முன்னிலையில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

இந்த கடத்தல், காணாமலாக்கிய விவகாரத்தில், கடற்படை சிறப்பு புலனாய்வு பிரிவின் பொறுப்பாளராக கடமையாற்றியிருந்த லெப்டினன் கொமான்டர் சம்பத் முனசிங்க, கன்சைட் நிலத்தடி இரகசிய வதை முகாமின் பொறுப்பாளராக அப்போது இருந்த லெப்டினன் கொமாண்டர் தரத்தினை உடைய தற்போது கொமான்டராக பதவி உயர்த்தப்பட்டுள்ள சுமித் ரணசிங்க, கடற்படை புலனாய்வுப் பிரிவின் நலின் பிரசன்ன விக்ரமசூரிய,கித்சிரி மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவின் பணிப்பாளராகவும் கடற்படை ஊடகப் பேச்சாளராகவும் அப்போது பதவி வகித்த கொமாண்டர் டி.கே.பி. தஸநாயக்க, கடற்படை வீரர்களான கஸ்தூரிகே காமினி, அருணதுஷார மெண்டிஸ் மற்றும் நேவி சம்பத் எனும் லெப்.கொமாண்டர் ஹெட்டி ஆரச்சி,சஞ்ஜீவ பிரசாத் திலங்க சேனராத்ன, அண்ணச்சி எனப்படும் உபுல் சமிந்த, ஹெட்டி ஹெந்தி, என்டன் பெர்ணான்டோ, சம்பத் ஜனக குமார, முன்னாள் கடற்படை தளபதி அத்மிரல் ஒப் தெ ப்ளீட் வசந்த கரன்னாகொட ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டு, அவர்களுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந் நிலையில் நேற்று இந்த வழக்கு சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்ரில் விசாரணைக்கு வந்த போது, முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள ரிட் மனு தொடர்பில் விடயங்கள் முன் வைக்கப்ப்ட்டன.

இவ்வழக்கில் வசந்த கரண்ணாகொட பிரதிவாதியாக பெயரிடப்ப்ட்டமைக்கு எதிராக அவர் தாக்கல் செய்துள்ள ரிட் மனு மேன் முறையீட்டு நீதிமன்றில் நிலுவையில் உள்ளது. அம்மனு எதிர்வரும் 8 ஆம் திகதி ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.

அந்த ரிட் மனுவின் தீர்பு வரும் வரை, இந்த விவகாரத்தில் கரன்னாகொடவுக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுப்பது சாத்தியமற்றது என்பதால் வழக்கானது ஜனவரி 7ஆம் திகதிவரை ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டது.

கொழும்பு, கொட்­டாஞ்­சேனை, தெஹி­வளை, வத்­தளை மற்றும் கட்­டு­நா­யக்க உள்­ளிட்ட பல பிர­தே­சங்­களில் பல்­வேறு உத்­தி­களை கையாண்டு இந்த கடத்­தல்கள் அரங்­கேற்­றப்­பட்­டுள்­ளன.

குறிப்­பாக தெஹி­வ­ளையில் 2008.09.17 அன்று பெர்­னாண்டோ மாவத்­தையில் உள்ள அலி ஹாஜியார் அன்வர் என்­ப­வ­ரது வீட்டில் வைத்து அவரும் ரஜீவ நாக­நாதன், பிரதீப் விஸ்­வ­நாதன், தில­கேஸ்­வரன் ராம­லிங்கம், மொஹம்மட் திலான், மொஹம்மட் சாஜித் ஆகிய ஐந்து மாண­வர்­களும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர்.

இத­னை­விட கொட்­டாஞ்­சே­னையைச் சேர்ந்த கஸ்­தூரி ஆரச்­சி­லாகே ஜோன் ரீட், அரிப்பு பிர­தே­சத்தைச் சேர்ந்த அமலன் லியோன் மற்றும் ரொஷான் லியோன், கொட்­டாஞ்­சே­னையை சேர்ந்த அன்­டனி கஸ்­தூரி ஆராச்சி, திரு­கோ­ண­ம­லையை சேர்ந்த தியாக­ராஜா ஜெகன் உள்­ளிட்­டோரும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர்.

இவ்வாறு கடத்தப்பட்ட அனைவரும் திருகோணமலை கடற்படை தளத்தில் உள்ள இரகசிய வதை முகாமான கன்சைட் எனும் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்ப்ட்டிருந்தமையை குற்றப் புலனயவாளர்கள் கண்டுபிடித்தனர்.

இந்த விடயம் சர்வதேச அளவில் அவதானிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், முன்னாள் கடற்­படை தள­பதி வசந்த கரண்­ணா­கொட உள்ளிட்ட 17 பேர் இந்த விவகாரத்தில் சந்தேக நபர்களாக சி.ஐ.டி. மன்றுக்கு அறிவித்துள்ளது.

அதில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்ட 14 பேருக்கு எதிராக சட்ட மா அதிபர் 667 குற்றச் சாட்டுக்களின் கீழ் மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். அந்த குற்றச்சாட்டுக்களை விசாரிக்கவே மூவர் கொன்ட ட்ரயல் அட் பார் சிறப்பு நீதிமன்றம் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன் ஏற்கனவே 17 ஆவது சந்தேக நபரான உபுல் மூன்றாவது சந்தேக நபர் லக்ஷ்மன் உதயகுமார, 5 ஆவது சந்தேக நபர் தம்மிக தர்மதாஸ ஆகியோருக்கு நிபந்தனை மன்னிப்பளிக்க சட்ட மா அதிபர் தீர்மானித்து அவர்கள் மூவரும் அரச சாட்சியாக பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வரை சபை அமர்வுகளில் கலந்துகொள்ளாதிருக்க எதிர்க்கட்சி தீர்மானம்

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை சபை அமர்வுகளில் கலந்துகொள்ளாதிருக்க ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார மற்றும் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆகியோருக்கிடையில் இன்று (04) ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

பாராளுமன்ற சபை அமர்வின் போது, எதிர்க்கட்சியின் பிரதம கொறடா, பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல இன்று இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

நேற்றைய விவாதத்தின் போது மேலதிக நேரத்தை வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார கோரிக்கை விடுத்த சந்தர்ப்பத்தில் , ஆளும் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் குழுவொன்று தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறினார்.

இந்த விடயத்தையும் பொருட்படுத்தாது இன்றைய தினம் சபைக்கு வருகை தந்த போது, ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் மீண்டும் தாக்குதல் நடத்த முயற்சித்ததாக அவர் தெரிவித்தார்.

இதனால், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வரை சபை அமர்வுகளில் கலந்துகொள்ளாதிருக்க தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா, பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று அறிவித்தார்.

கட்சித் தலைவர்களுக்கிடையிலான கூட்டத்தின் போது ஏற்பட்ட பிரச்சினை குறித்து கலந்துரையாட ஆலோசிக்கப்பட்ட போதும் நேற்றைய பிரச்சினைக்கு காரணமான இரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்றும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனையடுத்து, சபை நடவடிக்கையை புறக்கணித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வௌிநடப்பு செய்தனர்.

Posted in Uncategorized

சம்பிக்க அரசிடம் விடுத்துள்ள கோரிக்கை

யாழ்ப்பாணத்தின் தடைப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் கொழும்பு காலி போன்ற நகரங்களினை போல யாழ்ப்பாண நகரத்தினையும் அபிவிருத்தி செய்யும் முகமாக நல்லாட்சி அரசாங்கத்தினால் பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்கள் வடபகுதியில் முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் பல மில்லியன் ரூபா செலவில் பல்வேறு பட்டஅபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன குறிப்பாக தூர இடங்களுக்கான பேருந்து தரிப்பு நிலையம் யாழ்ப்பாண மாநகர சபைக்கான புதிய கட்டடத் தொகுதி மேலும் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

எனினும் தற்போது அவ்வாறான திட்டங்களை தொடர்வதற்கான நிதி ஒதுக்கீடுகள் அனைத்தும் இந்த அரசினால் நிறுத்தப்பட்டுள்ளன. ஏன் அவ்வாறு செய்கின்றார்களென தெரியவில்லை. அரசியல் பழிவாங்கலுக்காகவே இவ்வாறு செய்கின்றார்கள் என நினைக்கின்றேன் ராஜபக்சாக்கள் தமது பெயர் குறிப்பிடப்படும் அபிவிருத்தி திட்டங்களை மாத்திரமே செயற்படுத்துவார்கள் மக்கள் நலன் சார்ந்து செய்யப்பட மாட்டார்கள் என்பதே உண்மை.

நான் யாழ்ப்பாணத்திலிருந்து இந்த அரசாங்கத்திற்கு ஒரு கோரிக்கையை முன் வைக்கின்றேன் தடைப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதியை ஒதுக்கி மக்கள் சார்ந்த திட்டங்களை முன்னெடுங்கள் என்றார்.

அரசாங்கத்தை எதிர்த்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு

பாராளுமன்றத்தில் நேற்று பாதுகாப்பு அமைச்சு,பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மீதான விவாதம் இடம்பெற்ற வேளையில், அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீது தமிழ் பாராளுமன்ற தரப்பு வாக்கெடுப்பு கோரியும் அதனை சபாநாயகர் மற்றும் ஆளும் கட்சியினர் நிராகரித்தனர். இதனால் ஆளும் தரப்புக்கும் தமிழர் பாராளுமன்ற தரப்புக்கும் இடையில் சபையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதை எடுத்து தாம் வெளிநடப்பு செய்வதாகக்கூறி தமிழ் பாரளுமன்ற உறுப்பினர்கள் சபையை விட்டு வெளியேறினர்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை, பாதுகாப்பு அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு, அரச பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சுக்கள் மீதான விவாதம் இடம்பெற்ற வேளையில், தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் சபையில் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து உரையாற்றியிருந்தனர்.

இனப்படுகொலை விவகாரங்கள், வடக்கு கிழக்கின் நில ஆக்கிரமிப்பு மற்றும் இராணுவ ஆக்கிரமிப்பு உள்ளிட்ட விடயங்களை சபையில் முன்வைத்த வேளையில் அதற்கு ஆளுந்தரப்பு அமைச்சர்கள் மற்றும் பின்வரிசை உறுப்பினர்களினால் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியதுடன் விமர்சனத்தையும் முன்வைத்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று பிற்பகல் வேளையில் அமைச்சின் சகல விவாதங்களும் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டு நிதி ஒதுக்கீட்டை நிறைவேற்ற அரசாங்கம் தயாராக இருந்த வேளையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீடுகள் மீது வாக்கெடுப்பு நடத்த கோரிக்கை விடுத்தார்.

எனினும் இதற்கு ஆளும்கட்சியும், சபாநாயகரும் இணக்கம் தெரிவிக்கவில்லை, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அமைச்சின் மீதான வாக்கெடுப்பை கேட்க 24 மணிநேரத்திற்கு முன்னர் அதனை சபைக்கு அறிவிக்க வேண்டும். ஆனால் நீங்கள் அறிவிக்கவில்லை, எனவே இதனை கருத்தில் கொள்ள முடியாது. ஆனால் உங்களின் எதிர்ப்பை பதிவுசெய்துகொள்கின்றோம் என சபாநாயகர் தெரிவித்தார்.

எனினும் இதற்கு இணக்கம் தெரிவிக்காத கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தான் இது குறித்து ஏற்கனவே எதிர்க்கட்சி பிரதம கொறடாவிற்கு அறிவித்துள்ளதாகவும், ஆனால் அவர்கள் அறிவிக்காதது எனது தவறு அல்ல என்பதை சுட்டிக்காட்டியதுடன், தனது பாராளுமன்ற சிறப்புரிமையை பறிக்கும் செயலாக இது அமைந்துள்ளது என்றார்.

இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் ,

கட்சி தலைவர்கள் கூட்டத்தின் எவ்வாறான இணக்கத்திற்கு வந்தாலும் கூட, பாராளுமன்றத்தில் ஒரு உறுப்பினர் தனது சிறப்புரிமையை பயன்படுத்தி வாக்கெடுப்பை கேட்கும் வேளையில் அதனை எக்காரணம் கொண்டும் நிராகரிக்க முடியாது. வாக்கெடுப்பு கேட்கும் வேளையில் அதற்கு அனுமதிக்க வேண்டும். அதனை நிராகரிப்பது தவறானது என்றார்.

இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய சபை முதல்வர் தினேஷ் குணவர்தன,

கட்சி தலைவர்கள் கூட்டத்திலும், பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய கூட்டத்திலும் இவர்கள் உள்ளனர். இதன்போது நாம் வாக்கெடுப்பை கேட்பதில்லை என நீண்ட நேர கலந்துரையாடலின் பின்னர் இணங்கியுள்ளோம். ஆகவே அதனை இப்போது மீறமுடியாது என்றார். அதே நிலைப்பாட்டில் இருந்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவும் தாம் வாக்கெடுப்பை வழங்க முடியாது. கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுத்த தீர்மானமே நடைமுறைப்படுத்தப்படும். எனவே இதுவே எனது இறுதி முடிவும் என கூறி தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமையை நிராகரித்தார்.

இதன்போது ஆவேசமடைந்த தமிழர் பாராளுமன்ற பிரதிநிதிகள், தமக்கான சிறப்புரிமை இவ்வாறு ஆளுந்தரப்பின் தன்னிச்சையான செயற்பாடுகள் காரணமாக நிராகரிக்கப்படுகின்ற காரணத்தினால் தாம் சபையை விட்டு வெளிநடப்பு செய்வதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சபைக்கு அறிவித்தார்.

அதற்கமைய சபையில் இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் மற்றும் கஜேந்திரகுமார் எம்.பியும் கஜேந்திரன் எம்.பியும் சபையை விட்டு வெளியேறினர்.

சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் திட்டத்துக்கு சவாலாக ஐரோப்பிய ஒன்றியத்தின் குளோபல் கேட்வே திட்டம்!

சீனா முன்னெடுத்து வரும் பெல்ட் அண்ட் ரோட் திட்டத்துக்கு கச்சிதமான மாற்றாக, 300 பில்லியன் யூரோ மதிப்பிலான உலகலாவிய முதலீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது ஐரோப்பிய ஒன்றியம். அத்திட்டத்துக்கு ‘குளோபல் கேட்வே’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

குளோபல் கேட்வே திட்டம் நம்பகமான திட்டமாக உருவெடுக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வோன் டெர் லெயன் தெரிவித்துள்ளார்.

பல்வேறு ரயில், சாலை, துறைமுகத் திட்டங்களுக்கு சீனா நிதியுதவி வழங்கியது. அது அவர்களை கடனில் மூழ்கடிக்கச் செய்யும் திட்டமென குறை கூறப்பட்டு வருகிறது.

நீண்ட காலத்துக்கு நிலைத்து நிற்கக் கூடிய திட்டங்களை வடிவமைக்க உலக நாடுகளுக்கு நம்பகமான கூட்டாளிகள் தேவை என உர்சுலா வோன் டெர் லெயன் தெரிவித்தார்.

உறுப்பு நாடுகள், நிதி நிறுவனங்கள், தனியார் துறையினரிடமிருந்து திரட்டும் நிதியை எப்படி எங்கு பயன்படுத்துவது என ஐரோப்பிய ஒன்றியம் ஆலோசித்து வருகிறது. இத்தொகையில் பெரும்பகுதி மானியங்களாக வழங்கப்படுவதற்கு பதிலாக, உத்தரவாதங்களாகவோ கடன்களாகவோ வழங்கப்பட உள்ளது.

மாறுபட்ட, ஜனநாயக ரீதியிலான அணுகுமுறை வளரும் நாடுகளின் காலநிலை மாற்றம், உலகப் பொதுசுகாதார பாதுகாப்பு, நீடித்த நிலைத்தன்மை கொண்ட மேம்பாட்டு இலக்கை அடைய உதவும் என்பதை நிரூபித்துக் காட்ட விரும்புகிறது என உர்சுலா வோன் டெர் லெயன் கூரினார்.

நல்ல உயர்தரமான திட்டங்கள், அதிக வெளிப்படைத்தன்மையோடும், நல்ல நிர்வாகத்தோடும், திட்டத்தில் பங்கெடுக்கும் நாடுகளுக்கு நல்ல முன்னேற்றத்தைக் காட்டக் கூடியதாக இருக்க வேண்டும் என்று விளக்கினார். இத்திட்டத்தில் ஆப்பிரிக்க நாடுகள் குவிமையமாக இருக்கும் என ஒரு ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

ஆட்கள்

சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் தந்திரம் ஆப்பிரிக்கா, ஆசியா, இந்தோ பசிபிக், ஐரோப்பிய ஒன்றியம் வரை பரவிவிட்டது. சீனாவின் காஸ்கோ நிறுவனம், மிகப்பெரிய கிரேக்க கன்டெயினர் துறைமுகமான பிராஸின் (Piraeus) மூன்றில் இரு பங்கை தன் வசம் வைத்துள்ளது. அதே போல க்ரோஷியா நாட்டில் சீனா ரோட் அண்ட் பிரிட்ஜ் கார்ப்பரேஷன் ஒரு முக்கிய பாலத்தைக் கட்டியுள்ளது.

நிதி சார் பிரச்னைகளை எதிர்கொள்ள ஐரோப்பிய ஒன்றிய தரப்பிலிருந்து முன்னெடுக்கப்பட்டிருக்கும் முதல் தீவிர நடவடிக்கையைக் குறிக்கிறது இது, எனவே சீனாவிடமிருந்து கடன் வாங்கும் நாடுகளுக்கு வேறொரு வாய்ப்பும் உள்ளது என ஜெர்மன் மார்ஷல் ஃபண்டில் சீனியர் டிரான்ஸ் அட்லான்டிக் ஃபெல்லோவாக இருக்கும் ஆண்ட்ரூவ் ஸ்மால் பிபிசியிடம் தெரிவித்தார்.

வளரும் நாடுகளுக்கு உதவிகரமாக இருக்கும் என்றால் குளோபல் கேட்வே திட்டத்தை சீனா வரவேற்கிறது என ஐரோப்பிய ஒன்றியத்துக்கான சீன தூதர் ஷாங் மிங் கடந்த மாதம் ஒரு சந்திப்பில் கூறியது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் உட்கட்டமைப்புத் திட்டங்களை பூகோள அரசியல் பிரச்னைகளாக மாற்றினால், அது சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்பை தோல்வியடையச் செய்வதாக இருக்கும் மற்றும் தங்கள் சொந்த நலனையே பாதிப்பதாக இருக்கும் என கூறியதும் இங்கு நினைவுகூரத்தக்கது.

சீனாவில் வெளியுறவுக் கொள்கையில் பெல்ட் அண்ட் ரோட் திட்டம் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது.

புதிய சாலைகள், துறைமுகங்கள், ரயில் தடங்கள், பாலங்களில் பணத்தை முதலீடு செய்வதன் மூலம், சீனா பல்வேறு வர்த்தக தொடர்புகளை மேம்படுத்திக் கொண்டது. மேலும் தன் கடன்கள் மூலம் நாடுகளை வளைத்துப் போடுவதாகவும் விமர்சிக்கப்பட்டது.

சீனாவின் இந்த கடன் கொடுக்கும் திட்டம் மிகவும் சிக்கலானது என்று வாதிடுபவர்களும் உள்ளனர். இத்தனை பெரிய தொகையை கடனாகப் பெறுவது என்பது கிட்டத்தட்ட எந்தவித ஆபத்தும் இல்லாதது என்கிறார்கள் அவர்கள்.

எப்படிப் பார்த்தாலும் சீனா பொருளாதார மற்றும் பூகோள அரசியல் மூலம் கால்தடம் பதித்து வளர்வது, மேற்குலகில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இப்போது நம் முன்னிருக்கும் கேள்வி என்னவெனில், ஐரோப்பிய ஒன்றியத்தால் பூகோள அரசியல் தளத்தில் செயல்பட முடியுமா என்பது தான் என்கிறார் ஆண்ட்ரூவ் ஸ்மால்.

“அல்லது வளைந்து கொடுக்கும் தன்மையற்று, தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொள்ளுமா? ஒருவேளை இதில் அவர்கள் தோற்றால், அது மிகப்பெரிய வாய்ப்பை தவறவிட்டதாகப் பொருள்” என்கிறார் ஸ்மால்.

“ஐரோப்பா இந்த தளத்தில் தங்கள் ஆதிக்கத்தை உறுதி செய்வது ஒரு நல்ல சமிக்ஞை” என ஒரு ராஜரீக ரீதியிலான பணியில் உள்ள அதிகாரி என்னிடம் தெரிவித்தார்.

“அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் உள்ள டிரான்ஸ் அட்லான்டிக் நண்பர்களோடு நாங்கள் பகிர்ந்து கொள்ளும் பொதுவான விஷயம் இது” என்றார் அவர்.

பொதுவான விஷயங்கள் நாடுகளுக்கு மத்தியில் பெரும் போட்டியை உருவாக்கலாம் என்கிறார் சென்டர் ஃபார் குளோபல் டெவலெப்மென்ட்டில் மூத்த உறுப்பினராக இருக்கும் ஸ்காட் மோரிஸ்.

இதெல்லாம் போக கடந்த ஜூன் மாதம் ஜி7 மாநாட்டில், அமெரிக்கா ‘பில்ட் பேக் பெட்டர் வேர்ல்ட்’ என்கிற திட்டத்தைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. “இந்த விஷயத்தில் ஏகப்பட்ட திட்டங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்கின்றன” என்கிறார் மோரிஸ்.

இருப்பினும் ஐரோப்பிய ஒன்றியத்தின் குளோபல் கேட்வே திட்டம் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் மோரிஸ். இத்திட்டம் சீனாவின் முன்னெடுப்புகளுக்கு எதிராக ஒரு போட்டியாக இருப்பதை விட, வளரும் நாடுகளில் சில நல்ல விஷயங்களைச் செய்யத் தேவையான பணத்தைக ஐரோப்பிய ஒன்றியம் கொடுத்து உதவியதாக இருக்கும்.

மதிப்பு அடிப்படையிலான மற்றும் வெளிப்படைத்தன்மை மிகுந்த திட்டங்கள் மற்றும் அணுகுமுறையை வலியுறுத்துவதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியம், சார்பு நிலையின்றி, தொடர்புகளை மேம்படுத்த விரும்புவதை வலியுறுத்தியுள்ளது.

இருப்பினும் இதுவும் ஒரு விதமான ஆதிக்கம் தான். பூகோள அரசியல் விவகாரங்களில் ஐரோப்பிய ஒன்றியம் தன் ஆதிக்கத்தைச் செலுத்தவே முயல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

கிடுக்குப் பிடியில் சீனா! பின்வாங்குகிறதா இலங்கை அரசாங்கம்?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ஆட்சிப் பீடம் ஏறும் போது பல்வேறு விதமான புதுமைகளை படைக்கப்போவதாக கூறியிருந்தது.

அந்தக் கூற்றுக்களை நம்பியே, 69இலட்சம் வாக்காளர்கள் தமது ஆணையை பெரும்பான்மையாக வழங்கியிருந்தார்கள். குறிப்பாக கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது ஆட்சிச் சகபாடிகள் வழங்கிய வாக்குறுதிகளில் மிகவும் முக்கியமான விடயம் விவசாயத்துறை சார்ந்தது.

நாட்டின் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் இரசாயன உரங்கள் நிறுத்தப்பட்டு இயற்கை உரங்களே பயன்படுத்தப்பட்டும் என்பதாகும். இந்தக் கொள்கையை அமுலாக்கும் செயற்பாட்டை ஜனாதிபதி கையிலெடுத்தார்.

எனினும், கொரோனாவால் மிகமோசமாக பாதிக்கப்பட்டிருந்த இலங்கை பொருளாதாரத்தினை வைத்து அக்கொள்கையை அமுலாக்குவதில் அவருக்கு பெரும் தடைகள் ஏற்பட்டன.

விவசாயிகள் போராட்டங்களை நடத்தினார்கள். ஒரே இரவில் இவ்விதமான கொள்கைகளை அமுலாக்க முடியாது என்று எதிர்ப்புக்களை வெளியிட்டனர்.

இவ்விதமான நிலைமையை சமாளிப்பதற்காக ராஜபக்ஷ தரப்பினர் உடனடியாக சீனாவிடம் ஓடிச் சென்றனர். ஏற்கனவே பல்வேறு கடன்களையும், இலங்கையின் கேந்திர நிலையங்களையும் தன்னகப்படுத்தியுள்ள சீனா இந்த விடயத்தினையும் கையிலெடுத்தது.

இலங்கைக்கு தேவையான உரத்தினை வழங்குவதற்கு சம்மதித்து ‘சூட்சுமமாக’ உடன்படிக்கையையும் கைச்சாத்திட்டுக்கொண்டது. உடன்படிக்கையின் பிரகாரம், முதற்கட்டமாக உரங்களை இலங்கைக்கு அனுப்பியது.

முதலில் 20 ஆயிரம் மெட்றிக் தொன் சேதன உரத்துடன் சீன நிறுவனம் அனுப்பி வைத்த ஹிப்போ ஸ்பிரிட் கப்பலை களுத்துறைக் கடலில் பல வாரங்களாக தரித்து நிற்கச் செய்துள்ளது.

எனினும், குறித்த கப்பலில் உள்ள குயிங்டாவோ சீனாவின் பயோரெக் என்ற சீன நிறுவனத்தின் சேதன உரத்தைக் கொள்முதல் செய்வதில்லை என இலங்கை அரசாங்கம் முடிவு எடுத்துவிட்டது.

அதில் பங்கமளிக்கும் பற்றீரியாக இருப்பதாக இலங்கை அரசாங்கம் மாதிரிகளைப் பரிசோதித்து விட்டு வெளிப்படையாகவே அறிவித்தும் விட்டது.

ஆனால் குறித்த நிறுவனம் அதனை ஏற்றுக்கொள்வதாக இல்லை. அந் நிறுவனத்தின் சார்பில் களமிறங்கியிருக்கும் இலங்கைக்கான சீன தூதரகம் இலங்கை அரசாங்கத்தின் காரணத்தினைக் கேட்டு விட்டுக்கொடுப்பதற்கு தயாரில்லை.

உரத்துடன் வந்த கப்பல் தரித்து நிற்கச் செய்யப்பட்டுள்ள போதும் இலங்கை அரசாங்கம் அதனை கொழும்புத் துறைமுகத்திற்குள் அனுமதிக்க தயாரில்லை. இதனால் சினமடைந்த சீனா, மக்கள் வங்கியை ‘கறுப்பு பட்டியலில்’ சேர்ப்பதாக பகிரங்கமாக அறிவித்தது.

மக்கள் வங்கியினால் வெளியிடப்பட்ட கடன் தவணைக் கடிதத்திற்குரிய கொடுப்பனவு செலுத்தப்படாமையினால் இலங்கையிலுள்ள சீனத்தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக அலுவலகம் மக்கள் வங்கியை கறுப்புப்பட்டியலில் சேர்த்திருப்பதாக அறிகின்றோம்.

இவ்விவகாரம் தொடர்பான கொடுக்கல், வாங்கல் குறித்து கொழும்பு வர்த்தக மேல்நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடையுத்தரவிற்கு அமைவாகவே மேற்படி கடன் தவணைக் கடிதத்திற்குரிய கொடுப்பனவைச் செலுத்துவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என மக்கள் வங்கி நியாயமான காரணத்தினை வெளிப்படுத்தியபோதும் சீனா இசையவே இல்லை.

அதுமன்றி, இலங்கை தேசிய தாவரவியல் பரிசோதனை மையத்தின் பரிசோதனைக்கு அமைவாக, குறித்த உரத்தில் ‘எர்வீனியா’ என்ற தீங்கேற்படுத்தும் பற்றீரியா அடங்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதும், அந்த பரிசோதனை அறிக்கையை சீனா ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இல்லை.

மாறாக, மூன்றாவது தரப்பு ஆய்வு கூடத்தில் குறித்த உரத்தில் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு சீனா வலியுறுத்தியுள்ளது. அனை இலங்கை ஏற்றுக்கொள்வதற்று மறுதலிக்கவும், தேசிய தாவரவியல் தனிமைப்படுத்தல் சேவையின் ஆய்வுகூடப் பரிசோதனை தவறு என்றும், அதனால் சீன நிறுவனத்திற்கு ஏற்பட்ட இழப்பிற்காக 8 பில்லியன் டொலர்களை அளிக்குமாறும் கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

குறித்த கடிதம் சட்டமா அதிபரின் பரிசோதனைக்காக இலங்கை அரசாங்கம் அனுப்பி வைத்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக, உலக உணவுத்திட்டத்திடத்தில் முறையிடப்போவதாக இலங்கை அரசாங்கத்தினை அச்சமூட்டியிருக்கின்றது சீனா.

இதனைவிடவும், இலங்கையில் உள்ள சீன தூதுவர் தரித்து நிற்கும் கப்பலில் இருந்து உரத்தினை இலங்கைக்குள் இறக்கிவிட வேண்டும் என்ற விடயத்தில் மிகத்தீவிரமாக இருக்கின்றார்.

அவர் ஏற்கனவே உரத்தின் தன்மையை நியாயப்படுத்தும் டுவிட்டர் பதிவுகளை செய்தவர் பின்னர் பகிரங்க அறிக்கைகளையும் வெளியிட்டார்.

அதன்பின்னர், கடந்தவாரம் கண்டியில் மகாநாயக்கர்களை சென்று சந்தித்தார். பிரதமர் மஹிந்தரவைச் சந்தித்தார். அதுமட்டுமன்றி உர விடயத்தினை இராஜதந்திர மற்றும் அரசியல் பிரச்சினையாக மாற்றுவதற்கு முயற்சிப்பதாகவும் மூன்றாவது தரப்பு பரிசோதனை அவசியம் என்றும் அதற்கு இலங்கை அரசாங்கம் இணங்கியுள்ளதாகவும் கூறினார்.

ஆனால், விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித் ஜயசிங்க, அவ்விதமான எந்தவொரு இணக்கப்பாட்டையும் சீனாவுக்கு தாங்கள் வழங்கவே இல்லை என்று அடித்துக் கூறினார்.

அதேநேரம், விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே, மூன்றாவது தரப்பு சோதனைக்கு இடமில்லை என பிரதமர் திட்டவட்டமாக சீனத் தூதுவரிடம் தெரிவித்து விட்டார் எனக்கூறினார்.

அதற்கு பிரதமர் மஹிந்தவின் தரப்பினால், அமைச்சர் மகிந்தானந்த தெரிவித்த கருத்துக்களுக்கு நேர் எதிரான பதிலும் கடுமையாக கண்டக் கருத்துக்களும் வெளியாகியிருந்தன.

மறுபக்கத்தில் தேசிய தனிமைப்படுத்தல் சட்டத்தின்படி, ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட மாதிரிகளை மீள்பரிசோதனை செய்ய முடியாது என்கிறார் விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி அஜந்த டி சில்வா.

இலங்கைக்கென தாவரவியல் தனிமைப்படுத்தல் ஆய்வு கட்டமைப்புகள் உள்ள நிலையில், அதனை மீறி மூன்றாவது தரப்பிடம் சோதனைக்குச் செல்வது பொருத்தமற்றதொரு விடயம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், தமது உரத்தில் பற்றீரியாக்களே இருக்காது, என்று கூறிய சீன நிறுவனத்தின் பொது முகாமையாளரும், தலைமை தொழில்நுட்ப அதிகாரியுமான அனா சோங், தமது உரத்தில் பற்றீரியாக்கள் உள்ளது என்பதை நிராகரிக்கவில்லை. ‘எர்வீனியா’ என்ற ஆபத்தான பக்டீரியாக்கள் தான் இல்லை என்றும், மண்ணுக்கு நன்மை தரக் கூடிய பற்றீரியாக்கள் இருக்கும் என்றும் கூறியிருக்கிறார்.

இந்தக் கருத்து மிகவும் சிக்கலானதாக இருக்கின்றது. ஆகவே தான் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் இவ்விடயங்களை கையாண்டு வரும் விவசாய அமைச்சின் அதிகாரிகள் பற்றீரியாக்கள் உள்ள உரத்தினை நாட்டுக்குள் அனுமதிக்க முடியாது என்பதில் கிடுக்குப்பிடியாக இருக்கின்றனர்.

ஆனால், சீன உர நிறுவத்தினால் நட்ட ஈடு கோரப்பட்ட விடயத்திற்கான நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னமும் வெளியாகவில்லை. இவ்வாறான நிலையில், களுத்துறையில் உரக்கப்பலும், சீனத்தூதரகமும் அப்படியே அமைதியாகிவிட்டன.

நீதிமன்றம் நட்ட ஈட்டை வழங்கத் தேவையில்லை என அறிவித்தால் சீனா பிறிதொரு வழியில் இலங்கைக்கு அழுத்தங்களை வழங்கி உரத்தினை இறக்குமதி செய்வதற்கே முயற்சிக்கும்.

ஆனால், தற்போது உரத்தினால் உள்நாட்டில் ஏற்பட்ட நெருக்கடிகளைச் சமாளிப்பதற்கு அரசாங்கம் தனியார் உரத்தினை இறக்குமதி செய்ய முடியும் என அனுமதி அளித்துள்ளது. தற்போது தனது இயற்கை உர பாவனை என்ற கொள்கையையும் கைவிட்டுள்ளது.

ஆனால் நாட்டின் தன்னிறைவைப் பூர்த்தி செய்யும் வகையில் உர இறக்குமதி இன்னமும் இடம்பெற்றிருக்கவில்லை. இது உள்நாட்டில் மிகப்பெரும் பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தும் அபாயத்தினை தோற்றுவித்துள்ளது.

-பெனிற்லஸ்-