ஜே.வி.பி கார்த்திகை வீரர்களை நினைவுகூர முடியுமெனில், நாம் ஏன் மாவீரர்களை நினைவுகூரமுடியாது? ரவிகரன்

ஜே.வி.பி கட்சியினர் யாழில் கடந்த 13ஆம் திகதியன்று கார்த்திகை வீரர்களின் ஞாபகார்த்தம் என்னும் பெயரில் நினைவேந்தல் நிகழ்வொன்றினை மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு ஜே.வி.பி கட்சியினர் கார்த்திகை வீரர்களை நினைவேந்த முடியுமெனில், நாம் ஏன் மாவீர்களை நினைவேந்த முடியாது என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேவேளை மாவீரர் நாளினைத் தடுப்பதற்காக நீதிமன்றிலே வழக்குத்தாக்கல் செய்யும் காவல்துறையினர், ஏன் கார்த்திகை வீரர்களின் நினைவேந்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனவும்  கேள்வி எழுப்பியதுடன், காவல்துறையினரின் இந்த பாரபட்சமான செயற்பாட்டினை வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிக்குள் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை செய்யக்கோரி, முல்லைத்தீவு  காவல்துறையினர் 17.11.2021அன்று மாங்குளம் நீதிமன்றில் AR/868/21 என்னும் வழக்கிலக்கத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

அதற்மைய வழக்கினை ஆராய்ந்த முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா, முல்லைத்தீவு காவல் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட பன்னிரெண்டு பேருக்கு மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.

இவ்வாறு நீதிமன்றால் பிறப்பிக்கப்பட்ட தடைக்கட்டளையினை 19.11.2021இன்று முல்லைத்தீவு காவல்துறையினர் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனின் இல்லத்திற்கு சென்று கையளித்திருந்தனர்.

குறித்த தடைக்கட்டளையினைப் பெற்றுக்கொண்ட பின்னர் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று (19)  முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு காவல்துறையினரால் தடை உத்தரவு எனக்கு வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் நீதிமன்றத்தின் தீர்ப்புக்களை மதிக்கின்றோம்.

காவல்துறையினர் இந்த விடயத்தில் ஒரு பாரபட்சமாக நடக்கின்றார்கள் .மாவீரர் நாள் நிகழ்வினை தமிழ் மக்கள் அனுஸ்டிக்கக் கூடாது என்ற நிலையில் பல நீதிமன்றங்கள் ஊடாக தடை  உத்தரவினை பெற்று எல்லோருக்கும் வழங்கி வருகின்றார்கள்.

கடந்த 13 ஆம் திகதி மக்கள் விடுதலை முன்னணி கட்சியினர் யாழ்ப்பாணத்தில் கார்த்திகை வீரர்கள் தினம் என்று நினைவு கூர்ந்துள்ளார்கள். இதற்கு நாங்கள் எதிர்ப்பல்ல.

கார்த்திகை வீரர்கள் நினைவுதினம் என யாழில் வந்து நினைவுகூர முடியுமானால் எங்கள் மக்கள் ஏன் தங்கள் மாவீரர்களை நினைவு கூரமுடியாது என்பது தான் என்னுடைய கேள்வி? என்றார்.

“மஞ்சள் கோட்டில் மாணவரை பாதுகாப்போம்”விழிப்புணர்வு செயற்திட்டம் ஆரம்பம்

“மஞ்சள் கோட்டில் மாணவரை பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளில் வவுனியா முதல் வட்டுக்கோட்டை வரை விழிப்புணர்வு செயற்திட்டம் இன்று ஆரம்பமானது.

குறித்த வேலைத்திட்டம் இன்று கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம் முன்பாக ஆரம்பமானது.

கிளி பீப்பிள் எனும் புலம்பெயர் அமைப்பின் நிதி பங்களிப்புடன் கல்வி கலாசார அபிவிருத்தி அமையத்தின் ஒழுங்கமைப்பினால் இந்த விழிப்புணர்வு செயற்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

கல்வி கலாசார அபிவிருத்தி அமையத்தின் ஒழுங்கமைப்பில் கிளி பீப்பிளின் செயற்திட்டமான “வவுனியா தொடக்கம் வட்டுக்கோட்டை வரை” (ஏ2ஏ) வீதி விபத்துக்களை குறைக்கும் விழிப்புணர்வு பதாதைகளை பாடசாலை முன்பாக மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களில் நிறுவும் செயற்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாக இடம்பெற்றது.

ஆரம்ப நிகழ்வில் வைத்தியர்கள்இ அதிபர்கள்இ ஆசிரியர்கள்இ சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள்இ பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

அண்மையில் விபத்தில் உயிரிழந்த பாடசாலை மாணவிக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் விழிப்புணர்வு பதாதைகள் நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஓ.எம்.பி.அலுவலக செயற்பாடுகளுக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எதிர்ப்பு

ஓ.எம்.பி.அலுவலக செயற்பாடுகளுக்கு  முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.  

முல்லைத்தீவு மாவட்ட  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி முல்லைத்தீவு ஊடக அமையத்தில்  நடைபெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில்,

இன்று 1718 ஆவது நாளாக நாங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இந்த நேரத்திலே நாங்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  உறவினர்களுக்கும் சர்வதேசத்துக்கும் அவசரமும் அவசியமானதுமான ஒரு தகவலை தெரிவிக்கவே இந்த ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்தோம்.

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் அதாவது ஓ எம் பி அலுவலகத்தால் நாங்கள் ஏற்றுக்கொள்ளாத அலுவலகம் எங்களை பதிவு செய்ததாக கூறி, அதாவது காணாமல் போனோர் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் தகவல் அடிப்படையில் தங்களுக்கு மிகுதி தகவல்களையும் வழங்குமாறு காணாமல் போன உறவுகளுக்கு கடிதங்கள் அனுப்பி வருகின்றனர்.

இது தொடர்பாக முல்லைத்தீவு மாவட்டத்திலே கடிதங்கள் வந்து கொண்டிருக்கிறது. நாங்கள் இந்த ஓ எம் பி அலுவலகத்திலே எந்த ஒரு தகவலையும் பதிவு செய்யவில்லை.  ஒரு பொய்யான  தகவலை வைத்துக்கொண்டு மக்களிடம் இருந்து தகவலை பெற்று எமக்கான மரணச்சான்றிதழ் இழப்பீடுகளை வழங்குவதற்கான ஆரம்பகட்ட வேலைகள் செய்வதற்கு முனைகின்றனர்.

இதில் மக்கள் மிகவும் அக்கறையாக இருக்க வேண்டும்.  வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களாகிய நாங்கள் இந்த முறைப்பாடுகளை செய்யவில்லை.

நாங்கள் இதில் கவனமாக இருப்பதோடு ஓ எம் பி அலுவலகத்திடம் நாங்கள் பலதடவைகள் கூறினோம். இந்த அலுவலகம் எங்களுக்கு தேவையில்லை. நீங்கள் எந்த பதிவுகளையும் செய்ய வேண்டாம் என்று. இருப்பினும் அவர்கள் காணாமல் போனவருடைய   புகைப்படம்,   அடையாள அட்டை, பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட சகல தகவல்களையும் கோருகின்றனர். ஆனால் நாம் கொடுக்கப்போவதில்லை.

எனவே நாங்கள் இப்போதும் ஆணித்தரமாக கூறுகிறோம் எமக்கு இந்த ஓ எம் பி அலுவலகம் தேவையில்லை. ஜனாதிபதி ஏற்கனவே கூறியிருக்கிறார் காணாமல் போனோருக்கு தான் மரணச்சான்றிதழ் வழங்க தயாராகவுள்ளதாக. இந்த நிலையில் அதை சந்தர்ப்பமாக வைத்து ஓ எம் பி அலுவலகம் பாதிக்கப்பட்ட எம்மிடமிருந்து தகவலை பெற்று எமக்கு மரணச்சான்றிதழ் தருவதற்கு முனைகின்றார்கள். இதனை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Posted in Uncategorized

எச்சரிக்கை – எல்லை தாண்டும் மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை – ராமேஸ்வரம் மீன்வளத்துறை

எல்லை தாண்டி மீன்பிடிக்கும் மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ராமேஸ்வரம் மீன்வளத்துறை எச்சரிக்கை: சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட மாட்டோம் என தமிழக மீனவர்கள் உறுதி

எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் மீன்பிடிக்கும் மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ராமேஸ்வரம் மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட மாட்டோம் என ராமேஸ்வரம் மீனவர்கள் உறுதி அளித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் சுமார் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். சமீப காலமாக தடை செய்யப்பட்ட வலைகளளை பயன்படுத்தி மீனவர்கள் மீன் பிடிப்பதால் கடல் வளம் குறைந்து வருகிறது.

அதே போல் எல்லை தாண்டி மீனவர்கள் மீன் பிடிப்பதால் இலங்கை இந்திய மீனவர்கள்; இடையே பிரச்சனை ஏற்படுகிறது. எனவே, இவ்வாறான பிரச்சைகளை தடுக்கும் வகையில் இன்று காலை ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகம் அருகே உள்ள மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் மீனவர்கள் மற்றும் மீன்வளத்துறையினர், மெரைன் போலீசார் உள்ளிட்ட அதிகாரிகள் மட்டத்திலான ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள் எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தடை செய்யப்பட்ட மீன்பிடி முறையினை பயன்படுத்தி மீன் பிடிக்கும் மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்ததுடன், கடற்கரையிலிருந்து 5 நாட்டிகலுக்குள் கரையோரம் மீன்பிடிக்கும் விசைப்படகுகள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து கூட்டத்தில் கலந்து கொண்ட மீனவ சங்க தலைவர்கள மற்றும் விசைப்படகு உரிமையாளர்கள் அரசால் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீனவர்கள் மீன் பிடிக்க மாட்டோம் எனவும், அப்படி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கலாம் எனவும் உறுதியளித்தனர்.

மேலும், இலங்கை இந்திய மீனவர்கள் பிரச்சினையை தீர்க்க இலங்கை அரசுடன் இந்திய அரசு உடனடியாக பேசி நடுக்கடலில் பிரச்சினையின்றி மீனவர்கள் மீன் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமேஸ்வரம் துறைமுகம் மிகவும் பழமையான துறைமுகம் என்பதால் சேதமடைந்துள்ளது. இதனால் பேரிடர் காலங்களில்; மீனவர்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்த முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே தூண்டில் வளைவுகளுடன் கூடிய புதிய மீன் பிடி துறைமுகம் அமைத்து தர வேண்டும் என மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

Posted in Uncategorized

மஹிந்த ராஜபக்ஷவே எமது காலத்து அரசர்- பேராசிரியர் இந்துருகாரே தம்மரதன தேரர்

யுத்தம் என்பது பயங்கரவாதத்திற்கு அறிந்த மொழியில் பதிலளிப்பதே ஆகும். யுத்தம் என்பது இரு நாடுகளுக்கு இடையே நடப்பதாகும். அதனால் இலங்கையில் யுத்தம் நடக்கவில்லை என்று பேராசிரியர் வணக்கத்திற்குரிய தம்மரதன தேரர் தெரிவித்தள்ளார்.

அனுராதபுரத்தில் குறைந்த வருமானம் பெறும் 100 குடும்பங்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் குழாய் மூலமான குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தார்.

இந் நிகழ்வு அநுராதபுரம் மிரிசவெட்டிய ரஜமஹா விகாரையில் இடம்பெற்ற போது அனுசாசனம் நிகழ்த்திய பேராசிரியர் வணக்கத்திற்குரிய இந்துருகாரே தம்மரதன தேரர்,

சிங்கள துட்டகைமுனு தமிழ் எல்லாளனுக்கு எதிராகப் போரிட்டார். எல்லாள மன்னருக்கும் துட்டகைமுனு மன்னனுக்கும் இடையே நடந்த போரை வரையறுக்க முடியாது. காரணம் எல்லாளன் தமிழன் அல்ல. துட்டகைமுனு மன்னன் தமிழர் படைக்கு எதிராகப் போரிடவில்லை, படையெடுத்து வந்த சோலிப் படைக்கு எதிராகப் போரிட்டான். எனவே, சோழப் பேரரசின் படையெடுப்பாளர் மீது மன்னர் துட்டகைமுனு நடவடிக்கை எடுத்தார்.
எனவே யுத்தம் என்பது பயங்கரவாதத்திற்கு அறிந்த மொழியில் பதிலளிப்பதே ஆகும். யுத்தம் என்பது இரு நாடுகளுக்கு இடையே நடப்பதாகும். அதனால் இலங்கையில் யுத்தம் நடக்கவில்லை.
ஐரோப்பிய முகவர்கள் மற்றும் உள்ளூர் முகவர்களின் சலசலப்பை இறுதி நொடியில் நிறுத்துவதற்கு ஹெலிகொப்டரில் எம்பிலிபிட்டியவிற்கு சென்று முயற்சித்தார். அப்போது படையெடுப்பாளருக்கு எதிராக செயற்பட்ட மஹிந்த ராஜபக்ஷவே எமது காலத்து அரசர்.
எமக்கு அதுவே முக்கியமானது. உருளைக்கிழங்கு, வெங்காய அரசியல் அல்ல. உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் குறைவடையும், அதிகரிக்கும். ஆனால், இந்நாட்டின் சுதந்திரம் என்ற விடயத்தை ஒருவர் தமிழ் மக்களுக்கு எதிரான தமிழ் இனப்படுகொலை என்று வரையறுத்தார். அது அப்படியல்ல, அது ஆக்கிரமிப்பிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகும். தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தம் நடத்தப்பட்டிருந்தால் முதலில் வெள்ளவத்தை மீதே தாக்குதல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். முதலில் கோவில்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை.
எனவே இன்று இந்த யுத்தத்தினால் பயனடைவது யார், சிங்களவர்களா இல்லை. சாதாரண மக்களா? அதுவும் இல்லை. வர்த்தகர்கள் அனைவருமே ஆவர். எனவே, உருளைக்கிழங்கைக் குறைக்கவோ, எரிவாயுவை அதிகரிக்கவோ இந்நாட்டு மக்கள் கேட்கவில்லை. அப்போது நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் கோரிக்கை. அதனால்தான் நாட்டு மக்கள் இன்னும் உங்களை நேசிக்கிறார்கள்.
எனவே, இந்நாட்டில் உள்ள இலட்சக்கணக்கான மக்கள் உங்களுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.
இலங்கை வரலாற்றில் மன்னர்களின் வம்சத்திற்குப் பின்னர் மீண்டும் ஒருமுறை அண்மைக்கால வரலாற்றில் பெரும் தூபியான சந்தஹிரு சேயாவை அமைக்க சந்தர்ப்பம் ஏற்பட்டது. இந்த நாட்டில் எந்த அரசனுக்கும் இப்படி ஒரு ஆணை கிடைத்ததில்லை. இவ்வாறான பிறந்தநாள் பரிசுகள் வேறு எவருக்கும் கிடைக்கவில்லை என பேராசிரியர் இந்துராகாரே தம்மரதன தேரர் தெரிவித்தார்.
இந் நிகழ்வில், ரஜரட்ட பல்கலைக்கழக வேந்தர், மிரிசவெட்டிய சைத்தியாராமாதிகாரி வணக்கத்திற்குரிய ஈதல வெடுணு வெவே ஞானதிலக தேரர், பேராசிரியர் வணக்கத்திற்குரிய இந்துருகாரே தம்மரதன தேரர், கங்காராம விகாராதிகாரி கலாநிதி வணக்கத்திற்குரிய கிரிந்தே அஸ்ஸஜி தேரர், கலாநிதி வணக்கத்திற்குரிய அக்ரஹார கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மஹாசங்கத்தினர் பங்கேற்றனர்.

Posted in Uncategorized

லண்டனில் தீ விபத்தில் இலங்கையர்கள் நால்வர் பலி

லண்டனின் தென்கிழக்கு பகுதியில் Bexleyheath நகரில் ஹெமில்டன் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் பரவிய தீயில் கருகி ஒரே குடும்பத்தை சேர்ந்த இலங்கையர்கள் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

அவர்கள் நால்வரும் திருகோணமலை – உவர்மலையை சேர்ந்தவர்களென தெரியவந்துள்ளது.

ஹெமில்டன் வீதியில் அமைந்துள்ள குறித்த வீட்டில் கடந்த வியாழக்கிழமை இரவு 8.30 அளவில் தீ பரவியுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு படையினர், அனர்த்தத்தை எதிர்நோக்கிய ஐவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

எவ்வாறாயினும், அவர்களில் நால்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒன்றரை வயதான ஷஸ்னா, 4 வயதான தபிஷ், இவர்களின் தாயார் நிரூபா மற்றும் அவரது மாமியார் ஆகியோரே தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.

நிரூபாவின் மாமி, தனது பேரப்பிள்ளைகளை பார்ப்பதற்காக இலங்கையிலிருந்து சென்றுள்ளதுடன் அன்றைய தினம் மீண்டும் நாடு திரும்பவிருந்த நிலையில் இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், நிரூபாவின் கணவர் தீ பரவிய போது வீட்டில் இருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Metropolitan பொலிஸாரும் தடயவியல் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

நிரூபாவின் குடும்பத்தினர் சுமார் 15 வருடங்களாக பிரித்தானியாவில் வசித்து வருவதுடன் 03 மாதங்களுக்கு முன்னரே குறித்த வீட்டில் குடியேறியதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Posted in Uncategorized

வடக்கில் உக்கிரமடையும் தொழிலின்மை பிரச்சினை

இலங்கையில் 25 மற்றும் 29 வயதிற்குட்பட்டவர்களில் 9.2 வீதமானவர்கள் தொழில் வாய்ப்பின்றி இருப்பதாக புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.

சாதாரண தரம் கல்வி கற்றவர்களில் 7.2 வீதமானவர்கள் தொழில் வாய்ப்பின்றி உள்ளனர்.

ஒட்டுமொத்தமாக இலங்கையில் உயர் தரம் மற்றும் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்களில் 9.1 வீதமானவர்கள் தொழில் வாய்ப்பு இன்றி பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

அரசாங்கத்தின் புள்ளிவிபரங்களின் படி நான்கு பேரைக் கொண்ட ஒரு குடும்பத்தின் உணவு தேவைகளுக்காக மாத்திரம் மாதத்திற்கு 44இ020 ரூபா தேவைப்படுகிறது.

இந்நிலையில்இ வடக்கு மாகாணத்தில் தொழில்வாய்ப்பின்மை பிரச்சினை மேலும் உக்கிரமடைந்துள்ளது.

ஆயிரக்கணக்கான இளைஞர்இ யுவதிகள் தொழில்வாய்ப்புகளை எதிர்பார்த்துள்ளனர்.

அடுத்த வருடம் அரசாங்க ஊழியர்கள் இணைத்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என அரசாங்கம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்இ ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புகளை வழங்க முடியுமான பல தொழிற்சாலைகள் வடக்கில் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறைஇ சீமெந்து தொழிற்சாலை 1990 ஆம் ஆண்டு நடைபெற்ற யுத்தம் காரணமாக முற்றாக செயலிழந்தது.

சுமார் 29 வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் காணப்படும் இந்த தொழிற்சாலை சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது.

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை மூடப்பட்டதையடுத்துஇ சுமார் 1500 ஊழியர்கள் வேலை இழந்து நிர்க்கதியாகினர்.

நாட்டின் ஓடுகளின் கேள்வியை நிவர்த்தி செய்வதற்காக 1968 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதி முல்லைத்தீவு – ஒட்டுச்சுட்டான்இ பண்டாரவன்னியன் ஓட்டுத்தொழிற்சாலை திறந்து வைக்கப்பட்டது.

அப்போதுஇ 74 நிரந்தர ஊழியர்களும் 100-க்கு மேற்பட்ட தற்காலிக ஊழியர்களும் தொழிற்சாலையில் பணிபுரிந்தனர்.

பலரின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாகவிருந்த ஓட்டுத்தொழிற்சாலை யுத்தம் காரணமாக 1990 ஆம் ஆண்டு முற்றாக செயலிழந்தது.

தீவகம் அல்லைப்பிட்டி அலுமினிய தொழிற்சாலைஇ வலிகாமம் வடக்கு மாவிட்டபுரத்தில் உள்ள அலுமினிய தொழிற்சாலைகள் யுத்தத்தின் பின்னர் கைவிடப்பட்ட நிலையில் உள்ளன. இந்த தொழிற்சாலைகளிலும் நூற்றுக்கணக்கானவர்கள் தொழில்புரிந்து வந்தனர்.

  • Newsfirst-
Posted in Uncategorized

சர்வதேச தலையீட்டுக்கு இடமளித்திருந்தால், நாட்டில் இன்னும் இரத்த வெள்ளம் பாய்ந்திருக்கும் – பிரதமர்

சர்வதேச தலையீட்டுக்கு இடமளித்திருந்தால், எமது நாட்டில் இன்னும் இரத்த வெள்ளம் பாய்ந்திருக்கும் என்று பிதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் நிர்மாணிக்கப்பட்ட “சந்தஹிரு சேய” தூபியை திறந்துவைக்கும் புண்ணிய நிகழ்வில் நேற்று பிற்பகல் கலந்து கொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

போர் வீரர்களின் கரங்களினால் நிர்மாணிக்கப்பட்ட இந்த மஹாசேயவினை, இராணுவத்தினருக்காக உலகுக்கு அர்ப்பணிக்கும் இந்நிகழ்வில் கலந்துகொள்ள கிடைத்தமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.

நாட்டுக்காக மிகத் தீவிரமான முடிவுகளை எடுத்து அவற்றை வெற்றியடையச் செய்ததில் நான் அளவற்ற மகிழ்ச்சியை அனுபவித்துள்ளேன்.

அந்த சமயங்களில் நான் பெற்ற மகிழ்ச்சியை விட, இந்த மாபெரும் செயலை முடித்த தருணத்தை நான் அதிகம் அனுபவிக்கிறேன் என்றுதான் சொல்லவேண்டும்.

யாழ்ப்பாணம் மேயர் துரையப்பா கொலையுடன் தொடர்புடைய கொலையாளிகளை கைது செய்ய சென்ற பொலிஸ் அதிகாரி பெஸ்தியன்பிள்ளை,

1981ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வைத்து பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட கோப்ரல் ஹேவாவசம் முதல் நந்திக்கடலில் இறுதி யுத்தத்தில் வீரமரணம்அடைந்த சிப்பாய் வரை எமது நாட்டிற்குச் சமாதானத்தை ஏற்படுத்துவதற்குப் பாடுபட்ட சகல போர் வீரர்களுக்கும், அதேபோன்று யுத்தத்தில் உயிர்நீத்த சகலதரப்பினருக்கும் – இந்த தூபியை வணங்கும் ஒவ்வொரு நொடியிலும், நன்றி கலந்த அஞ்சலி செலுத்தப்படும்.

உயிரிழந்த அனைவரும் எமது நாட்டின் எமது மக்கள். வரலாறு முழுவதும் நாம் போர்க்களத்தில் வென்றது திறமை மற்றும் துணிச்சலால் மட்டுமல்ல; இந்தநாட்டை ஒன்றிணைத்த துட்டகைமுனு மன்னர் வரலாற்று ரீதியாக எமக்கு அறிமுகப்படுத்திய – உன்னதமான மனிதாபிமான மரபுகளை நாம் இன்றும்பின்பற்றுவதே இதற்குக் காரணமாகும்.

போர் முடிந்ததும் நாம் கோட்டைகளை கட்டவில்லை, பாரிய குளங்களும், பாரிய தாதுகோபுரங்களுமே கட்டப்பட்டன. நாங்களும் அப்படியே செய்தோம்.

யுத்தம் நிறைவடைந்தவுடன் போர்வீரர்களுக்கான மஹாசேய தூபி ஒன்றை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினோம். இந்த தூபியினை திறந்து வைக்கும்இச்சந்தர்ப்பத்தில் அன்று காணப்பட்ட மரண அச்சம் குறித்து நான் நினைவுபடுத்த வேண்டும்.

1984ஆம் ஆண்டு,  டொலர் ஃபாம், கென்ட் ஃபாம், கொக்கிளாய் மீது தாக்குதல் நடத்தி, 91 பேரை கொன்று, எமது வரலாற்று இராசதானிகளின்கிராமங்களுக்கு மரண அச்சத்தை ஏற்படுத்தினர். அதன் பிறகு இலங்கை வரைபடத்தில் ‘எல்லை கிராமங்கள்’ என்ற தேசம் சேர்க்கப்பட்டது. நீண்ட காலம்செல்வதற்கு முன்னர் ஜய ஸ்ரீ மஹா போதிக்கும் மரண பயம்  ஏற்படுத்தப்பட்டது.

ஸ்ரீ மஹா போதிக்கு அருகில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த 81 பேரை பயங்கரவாதிகள் கொன்றதுடன் வில்பத்து கிராமங்களில் 81 பேரை கொன்றனர்.

அடுத்து திருகோணமலை, மொரவேவ, மஹதிவுல்வௌ, மெதிரிகிரிய, பள்ளிய கொடல்ல, ஹொரவ்பத்தானை, ஜனகபுர, ஜயந்திபுர, வெலிஓயா, அம்பாறை, உஹன, கல்முனை, சியம்பலாண்டுவ, மொரவௌ மற்றும் மொனராகலை எல்லையில் உள்ள அத்திமலே வரையில் கிராம மக்கள் வெட்டிக் கொல்லப்பட்டனர்.

கொழும்பு பேருந்து நிலையத்தில் இருந்து ஆரம்பமாகி மத்திய வங்கி, தெஹிவளை புகையிரத நிலையத்தில் குண்டுவெடிப்புடன் ஆரம்பமான பயணம் – 2009 ஆம் ஆண்டு தெற்கில் மாத்தறை அக்குரஸ்ஸவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ஒரு குழுவினர் கொல்லப்பட்டது நினைவிருக்கலாம்.

ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தனவை போன்று ஒவ்வொரு ஜனாதிபதியும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முயற்சித்துள்ளனர்.

ஜே. ஆர். ஜெயவர்த்தன திம்புவில் வட்டமேசை விவாதங்களை நடத்தியது எனக்கு நினைவிருக்கிறது. அது பலனலிக்காதமையால், ஜே.ஆர். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை மேற்கொண்டு இந்திய இராணுவம் வரவழைக்கப்பட்டு வடக்கு ஒப்படைக்கப்பட்டது. எங்கள் படையினர் முகாம்களில்மட்டுப்படுத்தப்பட்டனர். இராணுவம் முகாமை விட்டு வெளியேறுவதாயின் இந்திய இராணுவத்திடம் அனுமதி கோர வேண்டியிருந்தது. இவர்களில் எவரும்அன்றைய நமது முப்படை மீதும் அவர்களின் பலம் மீதும் நம்பிக்கை கொள்ளவில்லை.

அதன் பின்னர் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவின் காலத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் விமானம் மூலம் கொழும்புக்கு அழைத்துச் வரப்பட்டுகலந்துரையாடியமை நினைவிருக்கலாம். 800 பொலிஸாரை அடிமையாக்கி காட்டிக்கொடுத்தனர். அது மாத்திரமன்றி விடுதலைப் புலிகளுக்குஆயுதங்களையும் கொடுத்தார்கள். அந்த ஆயுதங்கள் இறுதியாக நமது வீரர்களுக்கு எதிராகவே ஓங்கப்பட்டன. திரு.கமல் குணரத்ன அவர்கள் இதனைஅறிந்திருப்பார். இறுதியில் அவரும் கொல்லப்பட்டார்.

அடுத்ததாக திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஒஸ்லோவில் ‘சுது நெலும’, ‘தவலம’ போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு கலந்துரையாடல்களும் இடம்பெற்றன. போர்வீரர்கள் என்ற வார்த்தை அப்போது கைவிடப்பட்டிருந்ததாக எனக்குஞாபகம். போர் வீரர்களுக்கு ‘அரசாங்க பாதுகாப்புப் படைகள்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. போர் வீரர்களுக்கு மரியாதை கொடுப்பது அமைதிக்குத்தடையாகக் கருதப்பட்டது. ஆனால் அவர் மீதும் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

அதன்பிறகு ரணில் விக்கிரமசிங்க அவர்களின் காலப்பகுதியில் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தினார். புலிகளின் கட்டுப்பாட்டிற்கு தனியான பகுதிகள் ஒதுக்கப்பட்டன. போர் நிறுத்த உடன்படிக்கைக்கு நோர்வே அரசாங்கம் கண்காணிப்பாளர்களை நியமித்தது. எங்கள் இராணுவம் முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டது. இவர்கள் யாருக்கும் நமது பாதுகாப்புப் படை மீது நம்பிக்கை இல்லை.

நான் பிரதமர் என்ற ரீதியில் வடக்கிற்குச் செல்லவிருந்தபோது, வடக்கிற்குச் செல்வதற்கு விடுதலைப் புலிகளிடம் அனுமதி பெற வேண்டும் என்று நோர்வேயின்போர் நிறுத்தக் கண்காணிப்பாளர்கள் என்னிடம் கூறியது எனக்கு நினைவிருக்கிறது. பிரதமரும் ஒரு நாட்டை சுற்றி வர அனுமதி பெற வேண்டும் என்றால் அதுஒரு தனியான நாடு.

எனது நாட்டிற்கு செல்ல நான் யாரிடமும் அனுமதி பெற தேவையில்லை என்று நினைத்தேன், நான் சுதந்திரமாக எப்போதாவது வடக்கிற்கு செல்வேன் என்றுகூறினேன்.

நமது நாட்டு மக்களின் பிள்ளைகளினால் உருவாக்கப்பட்ட பாதுகாப்புப் படை மீது நாங்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தோம். அதிமேதகு ஜனாதிபதிகோட்டாபய ராஜபக்ஷ அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்தார். அவர், பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரிகளின் உதவியுடன், நாட்டிற்குஅமைதியை உரிமையாக்கும் பொறுப்பை நிறைவேற்ற பாதுகாப்புப் படைகளை வழிநடத்தினார்.

ஒரு நாட்டின் பாதுகாப்புப் படை மீது நம்பிக்கை இன்றேல், அந்நாட்டின் தேசிய பாதுகாப்பை இழக்க நேரிடும் என்றே அனைவரும் நம்புகிறார்கள். அதேபோன்று, எமது இராணுவத்தை மறந்துவிட்டு, வெளிநாட்டுப் படைகளையும், வெளிநாட்டுத் தலையீடுகளையும் அனுமதித்தால், எமது நாட்டில் இரத்தவெள்ளமே பாயும்.

இந்த சந்தஹிரு சேயாவின் மூலம் நினைவுகூரப்படும் போர்வீரர்களின் மனிதாபிமானப் பணியானது எமது வரலாற்றில் சுதந்திரத்திற்காக நடத்தப்பட்ட மிகக்கடினமான போர்களில் ஒன்றாக நான் கருதுகிறேன். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் தொடங்கும் முன் அப்போதைய இங்கிலாந்து பிரதமரைசந்தித்தது எனக்கு நினைவிருக்கிறது.

விடுதலைப் புலிகளை நிராயுதபாணியாக்கி நாட்டில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்று நான் கூறியபோது, அது சாத்தியம் என்று நான் நினைக்கவில்லைஎன்று கூறினார். அதைப் பற்றி சில விடயங்களைச் கூறினார். இந்த விவகாரம் ஏற்கனவே சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அப்போதுஅவர் கூறினார்.

சர்வதேச அளவில் பல நாடுகளின் பங்களிப்புடன் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இப்போது அதிலிருந்து விடுபட முடியாது என்று கூறினார்.  இரண்டாவது விடயம் புலிகளுக்கு ஏற்கனவே தனியான கட்டுப்பாட்டு பகுதிகள், தனி வங்கிகள் மற்றும் தனியான நிதிகள் உள்ளன. தனியான நிர்வாகஅமைப்பு இருக்கிறது, அதுவரை நம் அரசாங்கங்கள் பார்த்துக் கொண்டிருந்துள்ளன. தற்போது எதுவும் செய்வதற்கில்லை என்று தெரிவித்தார்.

மேலும் புலிகளுக்கு தற்கொலை குண்டுதாரிகளும் உள்ளனர். ஏவுகணைகள், பீரங்கிகள் உள்ளன. கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் விமானங்கள்உள்ளன. உங்களால் அவர்களை எதிர்கொள்ள முடியுமா என்று இங்கிலாந்து பிரதமர் அன்று என்னிடம் கேட்டார்.

உலகமே அவ்வாறு கூறிய போதும் எமது சொந்த மக்களின் பிள்ளைகளான எமது போர்வீரர்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்தி ருந்தோம்.எமதுபோர்வீரர்கள் ஈடு இணையற்ற தியாகத்தை செய்தனர். உலக வல்லரசுகள் கையெழுத்திட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தையும் கிழித்தெறிந்தோம். எமதுபோர்வீரர்களுக்கு எதிரான ஐ.நா தீர்மானத்தின் இணை அனுசரணையிலிருந்து நாம் தற்போது விலகியுள்ளோம். இவற்றின் தாக்கம் இப்போது நமக்கு எதிராகவருவதை நாம் அறிவோம். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக நமது சுதந்திரத்தை நமக்கு முக்கியம்.

இரத்த வெள்ளத்தை தடுத்து, மரண பயத்தை ஒழித்து, எமது நாட்டை புகலிடமாக்கிய போர் வீரர்களுக்காக இந்த சந்தஹிரு சேய தூபியை அமைத்துபிரார்த்திப்பது எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதிருக்கட்டும் என்ற பிரார்த்தனையிலாகும்.

நம் நாடு எவ்வளவு சிறியதாக இருந்தாலும், நமக்கு நம் நாட்டில் வாழ சுதந்திரம் இருக்க வேண்டும். நமது நாட்டின் சுதந்திரத்திற்காக அர்ப்பணிப்புடன்செயற்பட்ட இராணுவ வீரர்களின் பாதுகாப்பையும், உயிர் தியாகத்தின் மூலம் இராணுவ வீரர்கள் எமக்கு உரிமையாக்கிய சுதந்திரத்தை பாதுகாப்பதனையும்எமது தலைவர்களும் எதிர்காலத்தில் உருவாகும் தலைவர்களும் பொறுப்பேற்க வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன் என்றும் அவர் இதன்போதுகூறினார்.

Posted in Uncategorized

சர்ச்சைக்குள்ளான 3 புதிய வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்பட்டன

குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு பல்வேறு விவகாரங்கள் குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர சிங் மோடி சர்ச்சைக்குள்ளான 3 புதிய வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என தெரிவித்துள்ளார்.

அதே நேரம், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வரும் விவசாயிகள் வீடுகளுக்கு திரும்பிச் செல்லும்படி பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறித்த அறிவிப்பை அடுத்து இந்தியாவின் பல தலைவர்கள் மோடி அரசுக்கு தமது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

அவர் தனது உரையில்…

2014-ம் ஆண்டு முதல் விவசாயிகளுக்கு சேவை செய்வதையே முக்கிய நோக்கமாக கொண்டிருக்கிறோம். விவசாயிகளின் வேதனைகளை அறிந்தவன் என்பதால்தான், அவர்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன். விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

சரியான விதைகள், உரம், பயிர்க் காப்பீடு என சிறு விவசாயிகளுக்கான திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசின் திட்டங்களால் வேளாண் பொருட்களின் உற்பத்தி பல மடங்கு உயர்ந்துள்ளது. பயிர் சேதத்திற்காக விவசாயிகளுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீடு 5 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற சந்தைகளையும் வலுப்படுத்தி உள்ளோம். விளை பொருட்களுக்கான நியாயமான விலையை தற்போது விவசாயிகள் பெற்று வருகின்றனர்.

விவசாயிகளின் நலனுக்காகவே 3 வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. 3 வேளாண் சட்டங்கள் குறித்து பாராளுமன்றத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

வேளாண் சட்டங்களின் நலனை ஒரு தரப்பு விவசாயிகளுக்கு எங்களால் புரிய வைக்க முடியவில்லை. எனவே, மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற முடிவு செய்துள்ளோம். இந்த மாதம் தொடங்கும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவதற்கான நடைமுறையை தொடங்குவோம்.

விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்துவதற்காக கூடியுள்ள விவசாயிகள் வீடுகளுக்கு திரும்ப வேண்டும். வேளாண் சட்டங்களுக்கு ஆதரவளித்த விவசாய சங்கங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு பிணையளிக்க முடியாது – புத்தளம் மேல் நீதிமன்றம்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு பிணையளிக்க முடியாது என புத்தளம் மேல் நீதிமன்றம் இன்று அறிவித்தது.

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தமது நீதிமன்றுக்கு பிணையளிக்கும் அதிகாரம் இல்லை என இவ்வழக்கை விசாரிக்கவென நியமிக்கப்பட்ட சிலாபம் மேல் நீதிமன்றின் நீதிபதி குமாரி அபேரத்ன, புத்தளம் மேல் நீதிமன்றுக்கு வருகை தந்து பிணை குறித்த தனது தீர்மானத்தை அறிவித்தார்.

அதன்படி இந்த வழக்கானது எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் திகதி சாட்சி விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளதுடன், அன்றைய தினம் வழக்கின் முதல் சாட்சியாளரை மன்றில் ஆஜராக நீதிமன்றம் அறிவித்தல் அனுப்பியது.

அத்துடன் அன்றைய தினத்தில் பிரதிவாதிகளான ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட இருவரையும் மன்றில் கண்டிப்பாக ஆஜர் செய்யுமாறு நீதிபதி குமாரி அபேரத்ன, நீர்கொழும்பு சிறைச்சாலை அத்தியட்சருக்கு விஷேட உத்தரவினைப் பிறப்பித்தார்.

சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட இருவருக்கு எதிராக சதி செய்தமை, சமூகங்களிடையே வெறுப்புணர்வை தூண்டிய குற்றச்சாட்டுக்களின் கீழ் புத்தளம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பகிர்வுப் பத்திரம் மீதான வழக்கு விசாரணை இன்று மீளவும் விசாரணைக்கு வந்தது.

இவ்வழக்கை விசாரிக்கவென விஷேடமாக நியமிக்கப்பட்டுள்ள சிலாபம் மேல் நீதிமன்றின் நீதிபதி குமாரி அபேரத்ன, புத்தளம் மேல் நீதிமன்றுக்கு வருகை தந்த நிலையில், அவர் முன்னிலையிலேயே இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.

வழக்கு விசாரணைக்கு வந்தவுடன், முதலில் கடந்த தவணையின் போது அறிவித்ததர்கு அமைய, நீதிபதி குமாரி அபேரத்ன, பிரதிவாதிகளின் பிணைக் கோரிக்கை தொடர்பிலான தனது தீர்மானத்தை அறிவித்தார்.

பிரதிவாதிகளுக்கு பிணையளிக்க இந்த நீதிமன்றுக்கு பிணையளிக்கும் அதிகாரம் இல்லை என்பதால், அவர்கலின் பிணைக் கோரிக்கை நிராகரிக்கபப்டுகிறது.´ என மேல் நீதிமன்ற நீதிபதி தனது பிணை குறித்த தீர்ப்பில் அறிவித்தார்.