மத்திய வங்கியின் ஆளுநருக்கு எதிராக மேலும் இரண்டு மனுக்கள் தாக்கல்

புதிதாக நியமிக்கப்பட்ட மத்திய வங்கியின் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ராலுக்கு எதிராக, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரால் அடிப்படை உரிமை மனுக்கள் இரண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார மற்றும் மனுஷ நாணயக்கார ஆகிய இரண்டு எம்.பிக்களால் இந்த அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டுள்ளன.

அவரை அப்பதவிக்க நியமித்தமையை சவாலுக்கு உட்படுத்தியும், அப்பதவியிலிருந்து உடனடியாக நீக்குமா​றே இவ்விரு மனுக்களின் ஊடாக
கோரப்பட்டுள்ளன.

இதே வேளை ஏற்கனவே மத்தியமாகாணத்தின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மீண்டும் இலங்கை மத்திய வங்கி ஆளுநராக கடமையாற்றுவதை தடுத்து ஆணையீட்டு எழுத்தாணையை பிறப்பிக்குமாறு கோரி மத்திய மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோனால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை அடுத்த மாதம் 7 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இந்த நிழலயில் மேலும் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்த்கது

நியூயோர்க்கில் ஜீ.எல். பீரிஸ் – ஜெய்சங்கர் சந்திப்பு

கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் இலங்கை அரசாங்கம் செயற்படுத்தும் வெற்றிகரமான நடவடிக்கைகள் தொடர்பான நிலைமை குறித்து பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இந்திய வெளியுறவு அமைச்சருக்கு விளக்கினார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மறுபரிசீலனை செய்தல், கைதிகளாகவுள்ள விடுதலைப் புலிகளை விடுதலை செய்தல் மற்றும் காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்குகள் சபை போன்ற சுயாதீன நிறுவனங்களுக்கு அதிகாரமளித்தல் போன்ற முக்கிய பிரச்சனைகள் தொடர்பில் வெளிநாட்டு அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் நீதி அமைச்சு ஆகியன ஒத்துழைப்புடன் செயற்படுவதனை சுட்டிக்காட்டி, 2009 மே மாதத்தில் மோதல் முடிவுக்கு வந்ததன் பின்னர், எஞ்சிய விடயங்களைத் தீர்ப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடைமுறைகள் மற்றும் உறுதியான நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் பீரிஸ் வெளியுறவு அமைச்சருக்கு விளக்கினார்.

பல முனைகளில் கணிசமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் முயற்சிகள் தொடர்வதாகவும் அமைச்சர் பீரிஸ் மேலும் குறிப்பிட்டார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் பல்வேறு பகுதிகளில் முன்னேறுதற்காக வலுவான அரசியல் விருப்பம் இருப்பதாக வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் மேலும் சுட்டிக்காட்டினார்.

நாடுகளுக்கு எதிரான தீர்மானங்கள் அந்த நாடுகளின் அனுமதியின்றி செயற்படுத்தப்பட முடியாது என்ற அடிப்படையில் இலங்கை எடுத்த கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக நின்று, பல நாடுகளை பெரிதும் ஊக்குவித்தன என்பதை சுட்டிக்காட்டி, வலுவான உள்நாட்டுப் பொறிமுறைகளினூடாக முன்னோக்கிச் செல்லும் போது, வேறு எந்த வெளிப்புறப் பொறிமுறைகளையும் இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியாது என வெளிநாட்டு அமைச்சர் வலியுறுத்தினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மிக முக்கியமானவை என்பதை இரு அமைச்சர்களும் ஒப்புக் கொண்டனர்.

இரு நாடுகளினதும் நலன் கருதி, இனப்பிரச்சினைகளுக்குப் பின்னர் எஞ்சியிருக்கும் பிரச்சினைகளுக்கு நியாயமான மற்றும் நீதியான தீர்வுகள் அவசியம் என அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டார். எமது உறவுகள் ஒரு பிரச்சினைக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படக்கூடாது என இந்திய வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டார்.

செயற்படுத்தப்பட வேண்டிய திட்டங்களின் நடைமுறை ரீதியான நிறைவானது உறவுகளை மேம்படுத்துவதில் புதுடெல்லிக்கு அதிக நம்பிக்கையை அளிக்கும் என்பதனை சுட்டிக்காட்டி, அதனை நிறைவு செய்ய வேண்டியதன் அவசியத்தை அவர் மேலும் வலியுறுத்தினார்.

மக்களுக்கிடையிலான தொடர்புகளை அதிகரித்தல் உட்பட பல்வேறு வழிகளில் இலங்கையுடன் இணைந்து பணியாற்றுவதற்கு இந்தியா தயாராக இருப்பதாக அமைச்சர் ஜெய்சங்கர் உறுதிப்படுத்தினார். பல்வேறு அரசியல் கட்சிகள் உட்பட அனைத்து பங்குதாரர்களுடன் ஈடுபட வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் எடுத்துரைத்தார்.

இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை விரைவுபடுத்தும் முகமாக, நிலுவையில் உள்ள ஒப்பந்தங்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு இரு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர்.

Posted in Uncategorized

வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு 3 மணித்தியாலங்களில் பிசிஆர் முடிவு!

வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு 3 மணித்தியாலங்களில் பிசிஆர் பெறுபேற்றை வழங்கக்கூடிய வசதிகளைக் கொண்ட ஆய்வுகூட கட்டமைப்பு வியாழக்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் சனிக்கிழமை முதல் இதனூடாக பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பிசிஆர் பெறுபேறுகள் கிடைக்கப்பெறும் வரையில் கட்டாயமாக விடுதிகளில் தனிமைப்படுத்தப்படுவோரிடம் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

திலீபனின் நினைவுத் தூபியைச் சுற்றி பொலிஸார்!

நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத் தூபியைச் சுற்றி பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த நினைவுத் தூபியில் அஞ்சலி நிகழ்வு நடத்தும் நபர்களை கைது செய்யும் வகையில் பொலிஸார் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள கோவிட்-19 தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு அமைய  இந்த நடவடிக்கையை முன்னெடுக்குமாறு பொலிஸாருக்கு உயர் மட்டத்திலிருந்து பணிக்கப்பட்டுள்ளது என அறிய முடிகிறது.

அதற்கு அமைய யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட மூவர் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்திய – இலங்கை அரசுகளிடம் நீதி கோரி – 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து  1987 செப்ரெம்பர் 15ஆம் திகதி நல்லூர் கந்தசுவாமி ஆலய வடக்கு வீதியில், உணவு ஒறுப்பை ஆரம்பித்த தியாக தீபம் திலீபன், 11ஆவது நாளான, செப்ரெம்பர் 26ஆம் திகதி உயிர்நீத்தார்.

நல்லூர் நினைவேந்தல் தூபிக்கு சென்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஈகச்சுடர் ஏற்றி, திலீபனின் உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவித்து வணக்கம் செலுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Posted in Uncategorized

அத்தியாவசியமென்றால் இலங்கை செல்லுங்கள் – பிரித்தானியா

இலங்கையை சிவப்பு பட்டியலில் இருந்து நீக்குவதாக நேற்று முன்தினம்  பிரித்தானியா அறிவித்திருந்தது. இருந்தாலும் அத்தியாவசிய காரணங்களுக்காக மாத்திரம் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளுமாறு தமது நாட்டு மக்களுக்கு பிரித்தானியா அறிவித்துள்ளது.

இந்த நிலையிலேயே, பிரித்தானியர்கள் இலங்கைக்கு அத்தியாவசியக் காரணங்களுக்காக மட்டும் பயணிக்குமாறு பிரித்தானியாவின் வெளியுறவு மற்றும் பொது நலவாயச் செயலகம் அறிவுறுத்தியுள்ளது.

குறுகிய அறிவிப்பின் பேரில் இலங்கையில் பயணத்தடைகள், ஊரடங்கு சட்டம் என்பன ஏற்படுத்தப்படும் என்பதோடுஇ விமானப் பயணங்களிலும் மாற்றம் ஏற்படக்கூடும் எனவும் பிரித்தானியா தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

லொஹான் விவகார விசாரணை : ஓய்வுப்பெற்ற நீதிபதி நியமனம்

சிறைச்சாலைகள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையின் விவகாரம் தொடர்பில் சுயாதீன விசாரணையை முன்னெடுப்பதற்கு ஓய்வுப் பெற்ற நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஓய்வுப் பெற்ற நீதிபதி குஷலா சரோஜினி வீரவர்தனவே, நீதியமைச்சினால் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் சிறைச்சாலைக்கு தன்னுடைய சகாக்களுடன் போதையில் சென்றிருந்த சிறைச்சாலைகள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, அங்கிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளிடச் செய்து, அதிலொரு கைதியின் தலையில் கைத்துப்பாக்கிய வைத்து சுட்டுப் பொசுக்கிவிடுவேன் என எச்சரித்துள்ளார்.

அத்துடன், வெலிக்கடைச் சிறைச்சாலைக்குள் நள்ளிரவுவேளையில் சென்றிருந்த அவர், தூக்குமேடையை பார்வையிட்டுள்ளார். இதன்போது, அவருடைய சகாக்கள் இருந்துள்ளனர்.

இவ்விரு சம்பவங்கள் தொடர்பிலும் சுயாதீன விசாரணைகளை முன்னெடுப்பதற்காக, ஓய்வுப்பெற்ற நீதிபதி நியமிக்கப்படுவார் என அரசாங்கமும் நீதியமைச்சும் நேற்று (22) அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

காணாமற்போனவர்கள் தொடர்பில் எதனையும் மறைப்பதற்கில்லை – டலஸ் அழகப்பெரும

காணாமற்போனவர்கள் தொடர்பில் எதனையும் மறைப்பதற்கில்லை. இதுதொடர்பில் ஒன்றிணைந்த செயற்பாடுகளே அவசியம். இலங்கையர் என்ற ரீதியில் இவ்வாறான துர்ப்பாக்கிய சம்பவம் மீண்டும் ஏற்படாத வகையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதே இறுதியான பதிலாகும் என்று அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று புதன் கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது, ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு அமைச்சர் பதிலளிககையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

மோதல் இடம்பெற்ற காலப்பகுதியில் காணாமற்போனவர்களுக்கு விரைவாக மரணச்சான்றிதல் வழங்கப்படும் என்று ஜனாதபதி தெரிவித்துள்ளார். ஆனால் காணாமல் போனவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், காணாமற்போனவர்களுக்கு என்ன நடந்தது என்று கேட்கின்றனர்.

அமைச்சர் அவர்களே உண்மையிலேயே இவர்களுக்கு என்ன நடந்தது என்று ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்?

இதற்கு தொடர்ந்து பதிலளித்த அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான டலஸ் அழகப்பெரும, காணாமற் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதை என்னால் திட்டவட்டமாக கூறமுடியாது. இதனைக் கண்டறிவதற்காக இலங்கையில் அலுவலகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஜக்கிய நாடுகள் சபை கூட்டத்தொடரில் சபையின் செயலாளர் நாயகத்தை சந்தித்த போது வெளி நாடுகளிலுள்ள புலம்பெயர் டயஸ்போராக்களுக்கு – நாட்டை நேசிப்பவர்களுக்கு பகீரங்க அழைப்பொன்றை விடுத்தார். அதாவது நாம் ஒன்றிணைந்து இதுகுறித்து பேச்சுவாரத்தை நடத்துவோம். தீர்மானங்களை மேற்கொள்வோம் இவர்கள் எமது நாட்டு பிரஜைகள் என்று குறிப்பிட்டிருந்தார்.

இது தொலை நோக்குடனான சாதகமான நிலைப்பாடாகும். நேற்றும் பாராளுமன்றத்தில் இது குறித்து பேசப்படடது. வடக்கை பிரதிநிதித்தும் செய்யும் எமது சகோதர உறுப்பினர்கள் இதுகுறித்து சாதகமாக கருத்து தெரிவித்தனர். திட்டவட்டமாக உதாரணத்திற்கு X என்ற நபர் காணாமற்போனார் என்று வைத்துக்கொள்வோம். இவருக்கு என்னநடந்தது என்ற கேள்விக்கு பதிலளிக்கக்கூடிய அளவுக்கு எமக்கு தெளிவில்லை என்பதை எனது சகோதரர் ஹொமட் (ஊடகவியலாளர்) புரிந்துகொள்வார்.

இதனை எந்தவகையிலும் மறைக்கக்கூடிய விடயமல்ல.எந்த சந்தர்ப்பத்திலாது சரியான தகவல் வெளிப்படலாம். நாம் அதனை அறிந்துகொள்ள முடியும் சில சந்தர்ப்பத்தில் காணாமற் போனவர்கள் சிலர் வெளிநாடுகளில் அரசியல் புகழிடம்பெற்று வாழுகின்றனர். இது அனைத்து சந்தர்ப்பங்களிலும் அல்ல.

தமது பிள்ளைகள் காணமற்போயிருப்பதாகக் பெற்றோர் கண்ணீர் விடும் காட்சியை ஒவ்வொருவருடமும் நாம் காணுக்கின்றோம். இவர்கள் அனைவரும் இலங்கை பிரஜைகள் அதனால் ,நாம் இதுதொடர்பில் பொறுப்புடன் செயல்படவேண்டியுள்ளது. அதனால் அதில் எதனையும் மறைப்பதற்கில்லை. இதுதொடர்பில் ஒன்றிணைந்த செயற்பாடுகளே அவசியம். இலங்கையர் என்ற ரீதியில் இவ்வாறான துர்பாக்கிய சம்பவம் மீண்டும் ஏற்படாத வகையில் செயல்படுவதே இறுதியான பதிலாகும் என்று அமைச்சர் கூறினார்.

 

Posted in Uncategorized

´குடி மக்களை´ உருவாக்கும், மிக மோசமான செயலில் அரசாங்கம் – பாராளுமன்ற உறுப்பினர் உதய குமார்

ஒழுக்கம் – நன்னடத்தை என்பவற்றை பேணி நல்ல ‘குடி மக்களை’ உருவாக்க வேண்டியதற்கு பதிலாக நாட்டில் கொரோனா தொற்று பரவும் காலத்திலும், பார்களை- மதுபானசாலைகளை திறந்து போதையுடனான ´குடி மக்களை´ உருவாக்கும், மிக மோசமான செயலில் இந்த அரசாங்கம் ஈடுபட்டுள்ளதை காண முடிவதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய குமார் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

கொரோனா தொற்று மற்றும் மரணங்கள் சற்று குறைவடைந்து வரும் நிலையில் அரசாங்கத்தின் இந்த பார் திறப்பு தீர்மானம் கொரோனா பார்- மதுபான கொத்தணி ஒன்று உருவாக இடமளித்துள்ளது.

முழு நாடும் முடக்கப்பட்ட நிலையில், வருமானத்தை ஈட்ட பார்களை திறக்க அரசாங்கம் எடுத்த முடிவு மிகவும் கேவலமானது.

இந்த லட்சனத்தில், இன்று மதுவரி கட்டளைச் சட்டத்தின் கீழான கட்டளைகளை திருத்த யோசனை முன்வைத்துள்ளது.

இந்த அரசாங்கத்தின், இராஜாங்க அமைச்சர் ஒருவர் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு குடிபோதையில் சென்று அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை, துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி உள்ளதுடன், செய்தி வௌியில் வந்ததும், குறித்த இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து மட்டும் விலகியுள்ளார்.

ஆனாலும், இராஜாங்க அமைச்சரின் இந்த செயற்பாடு குறித்து பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். குற்றம் செய்திருந்தால், தக்க நடவடிக்கை எடுத்து, தண்டனை வழங்க வேண்டும்.

அத்துடன், உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், சிறைச்சாலைகளில் எவ்வித வழக்கு விசாரணைகளும் இன்றி பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள மலையகம் மற்றும், வடக்கு கிழக்கு உள்ளிட்ட அனைத்து தமிழ் அரசியல் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

இன்று நாட்டின் நிலைமையை எடுத்துக் கொண்டால் மூன்று முக்கிய வார்த்தைகள் பிரபல்யம் அடைந்துள்ளன. அதுதான், ´இல்லை´, ´விலை உயர்வு´ ´தட்டுப்பாடு´,

அரிசி இல்லை அல்லது ´விலை உயர்வு´ அல்லது தட்டுப்பாடு
சீனி இல்லை, விலை உயர்வு, தட்டுப்பாடு,
பருப்பு இல்லை விலை உயர்வு, தட்டுப்பாடு,
பால்மா இல்லை, விலை உயர்வு, தட்டுப்பாடு,
கோதுமை மாவு இல்லை, விலை உயர்வு, தட்டுப்பாடு,
கேஸ் இல்லை, விலை உயர்வு தட்டுப்பாடு,
இப்படியாக வரிசை நீண்டு கொண்டே செல்கிறது.

அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய மக்கள் திண்டாட்டம் – மதுபானசாலைகளை திறந்து அரசாங்கம் கொண்டாட்டம்.

அத்தியாவசிய பொருட்கள் பின்கதவு வழியாகவும், மதுபானம் முன்கதவு வழியாகவும் வழங்கப்படுகிறது.

அதாவது, அத்தியாவசிய பொருட்கள் மறைமுகமாகவும், மதுபானம் நேரடியாகவும் விற்க்கப்படுகிறது.

இதுதான் நாட்டின் தற்போதய நிலைமை.

நமது நாட்டுக்கு அந்நிய செலாவணி ஈட்டித்தரும் தேயிலை உற்பத்தி துறை இன்று மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதுடன், இரசாயன உர இறக்குமதி தடையால் தேயிலை உற்பத்தி பாரிய அளவு குறைவடைந்துள்ளது.

இந்த உற்பத்தி குறைவை சமாளிப்பதற்காக சிலோன் டி என்ற தேயிலை தரத்தில் கை வைத்துள்ள அரசாங்கம், கடந்த ஆகஸ்ட் மாதம் 1ம் திகதியில் இருந்து அமுலாகும் வகையில் வௌிநாடுகளில் இருந்து கருப்புத் தேயிலையை இறக்குமதி செய்து அதில் 30% இலங்கை தேயிலையை கலந்து மீள தேயிலை ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பான தேயிலை சபையின் சுற்றறிக்கை இங்கு உள்ளது.

இத்திட்டத்தின் மூலம், தரமற்ற சிலோன் டீ சர்வதேச சந்தைக்குள் செல்ல வாய்ப்புக்கள் உள்ளது. இதனால் ‘சிலோன் டீ யின்’ தரம் கேள்விக்குறியாக்கப்படும். சர்வதேச சந்தையில் ஒருமுறை நாம் வாய்ப்பை இழந்தால் அதனை மீளப் பெறுவது கடினம்.

உதாரணமாக, 2015ம் ஆண்டு சுமார் 700 மில்லியன் கிலோ தேயிலை கொள்வனவு செய்த ஜப்பான் இன்று படிப்படியாக குறைந்து 200 தொடக்கம் 300 மில்லியன் தேயிலை மாத்திரமே கொள்வனவு செய்கிறது.

சேதன உர முறையில் ஒரு கிலோகிராம் தேயிலையின் உற்பத்தி செலவு 1,900 ரூபா. இது வழக்கமான தேயிலையின் உற்பத்தி செலவை விட மூன்று மடங்கு அதிகமாகும். எனவே, அரசாங்கம் எடுத்துள்ள இந்த நடவடிக்கையால் நாட்டின் தேயிலை உற்பத்தியின் எதிர்காலம் பாதிக்கப்படும், தோட்டத் தொழிலாளர்களுக்கு தொழில் வாய்ப்புகள் இழக்கப்படும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இரசாயன உர இறக்குமதிக்கு தடை விதித்து அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது. இந்நிலையில், சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் வந்தது போதாது என்று, தற்போது உர இறக்குமதி மூலம் புதிய பக்டீரியா வைரஸை கொண்டு வந்துள்ளனர். அதில், பாரதூரமான நோய்களை ஏற்படுத்தக்கூடிய அபாயகரமான இரு பக்டீரியாக்கள் உள்ளடங்கியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அரசாங்கம் நாட்டு மக்களின் உயிர்களுடன் விளையாடி மேலும் மேலும், அவர்களை ஆபத்தில் தள்ளிவிடப் பார்க்கிறது.

இன்று, நாட்டை பொருளாதார சிக்கலில் இருந்து மீட்க இருக்கும் ஒரே வழி சர்வதேச நாணய நிதியமும் – GSP+ வரிச் சலுகையுமாகும். இந்த இரண்டையும் பெறுவதற்கு நமது நாடு தகுதி உடையதாக இருக்க வேண்டும். இது பெரும் சவாலான விடயமாகும். இந்த சலுகைகளை பெறுவதில் பயங்கரவாத தடை சட்டம் பெரும் தாக்கத்தை செலுத்துகிறது.

நாட்டை பொருளாதார சிக்கலில் இருந்து மீட்க அஜித் நிவாட் கப்ரால் பொறுத்தமானவர் என்று அவரிடம் மத்திய வங்கி ஆளுநர் பதவியை கொடுத்தால், பதவி ஏற்று மறுநாளே, அதாவது கடந்த வௌ்ளிக்கிழமை 45.95 பில்லியன் ரூபா நாணயத்தாள்களை புதிதாக அச்சிட்டுள்ளார். பணம் அச்சிட்டு பொருளாதார பிரச்சினையை தீர்க்க முடியாது என்று பொருளாதார நிபுணர்கள் கூறியும் அதனை மீறி செயற்பட்டுள்ளனர்.

புதிய நிதி அமைச்சர் வந்த பின்பு ‘ தேனும் பாலும் ஓடும்’ என்று நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டது போலவே, புதிய மத்திய வங்கி ஆளுநர் நியமனமும் அமைந்துள்ளது. அரசாங்கத்தின் பொருளாதார திட்டங்கள் காரணமாக இன்று அந்நிய செலாவணி குறைந்து நாட்டில் டொலர் பற்றாக்குறை நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், கையிருப்பில் உள்ள டொலர்களை இறக்குமதிக்கு பயன் விடாது சுமார் 623 பொருட்களுக்கு உத்தரவாத தொகை அல்லது வைப்பு தொகை முறை மூலம் இறக்குமதி கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த இறக்குமதி கட்டுப்பாடு தடையால் உள்நாட்டில் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.

எனவே, இந்த அரசாங்கத்திற்கு – நாட்டை திறம்பட ஆட்சி செய்ய முடியாது என்பது – இதன்மூலம் தௌிவாகிறது. அதனால். தங்களது இயலாமையை ஏற்றுக் கொண்டு – வீட்டுக்கு செல்வதே – இந்த அரசாங்கம் எடுக்கக் கூடிய – பொறுத்தமான தீர்மானமாக இருக்கும்.

ஐ.நா 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி ஆற்றிய உரை!

தொற்றுப் பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சினையானது, விசேடமாக அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு, மேலும் பல சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளது. இது, 2030இல் அடைய எதிர்பார்த்திருக்கும் நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான நிகழ்ச்சி நிரலைச் செயற்படுத்துவதற்குப் பாதகமாக அமைந்திருக்கின்றது.

அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள், இவ்வாறான நிலையற்ற தன்மையிலிருந்து மீள்வதற்காக, சர்வதேசப் பொறிமுறையொன்றின் ஊடாக அபிவிருத்திக்கான நிதி மற்றும் கடன் சலுகை உள்ளிட்ட மேலும் பல வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது அத்தியாவசியமாகியுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ இதனை தெரிவித்தார்.

ஜனாதிபதி ஆற்றிய முழுமையான உரை கீழே….

தலைவர் அவர்களே, செயலாளர் நாயகம் அவர்களே,

அரச தலைவர்களே, கௌரவத்துக்குரிய உறுப்பினர்களே,

அனைவருக்கும் வணக்கம்..!

இன்று நடைபெறும் இந்த மாபெரும் மாநாட்டில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கலந்துகொள்ளக் கிடைத்தமையிட்டு, நான் பெருமையடைகிறேன்.

76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரின் அவைத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள மேதகு அப்துல்லா ஷாஹிட் (Abdulla Shahid) அவர்களுக்கு, என்னுடைய வாழ்த்துகளை முதற்கட்டமாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தலைவர் அவர்களே, நீங்கள் இலங்கையின் நீண்டகால நண்பராக இருக்கிறீர்கள். எதிர்வரும் காலங்களிலும், உங்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிப் பணியாற்ற நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

இதற்கு முன்னர் இடம்பெற்ற பொதுச் சபைக் கூட்டத்தொடரின் போது, மேதகு வொல்கன் பொஸ்கீர் (Volkan Bozkir) அவர்கள் ஏற்றிருந்த பொறுப்புகளுக்குப் பாராட்டுத் தெரிவிப்பதோடு, இன்றைய இக்கட்டான சூழ்நிலையிலும் சிறப்பாகத் தமது தலைமைத்துவத்தை வழங்கி வரும் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரெஸ் அவர்களையும் பாராட்ட, இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்கிறேன்.

தலைவர் அவர்களே, கொவிட் – 19 தொற்றுப் பரவலானது, மானிட குலத்துக்கு, பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தியிருக்கிறது. தொற்றுப் பரவலால் தமக்கு நெருக்கமானவர்களை இழந்துள்ள அனைவருக்கும், எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகம் முழுவதிலுமுள்ள சுகாதார மற்றும் அத்தியாவசியச் சேவை ஊழியர்களின் அர்ப்பணிப்புகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்வதோடு, இந்தப் பிரச்சினை தொடர்பில், உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கி வரும் ஒத்துழைப்புகளுக்கும் பாராட்டுத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கொவிட் – 19 தொற்றுப் பரவலின் மூலம் கற்றுக்கொண்ட பாடங்களைப் பறிமாறிக்கொள்ளவும் சிறந்த முறையில் நாடுகளை மீளக் கட்டியெழுப்பவும், பிராந்திய தகவல் மையமொன்றை அமைப்பதற்கான ஒத்துழைப்பு, உலக சுகாதார ஸ்தாபனத்துக்கு வழங்க, இலங்கை எதிர்பார்க்கின்றது. வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி ஏற்றல் மற்றும் சிகிச்சை முறைமைகளை அறிமுகப்படுத்துவதில், அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேகமானதும் ஆக்கபூர்வமானதுமான செயற்பாடுகளை, நான் மிகவும் பாராட்டுகிறேன்.

அதேவேளை, ஆபத்துமிக்க புதிய வைரஸ் திரிபுகள் பரவலடைவதைத் தடுப்பதற்கான தடுப்பூசி உற்பத்தி, விநியோகம் மற்றும் அவற்றை ஏற்றுக்கொள்ளல் போன்றன தொடர்பில் காணப்படும் சவால்களை உடன் வெற்றிகொள்வது எவ்வாறு என்பது தொடர்பில் அடையாளம் காணப்படல் வேண்டும்.

அனைத்து இடங்களிலுமுள்ள அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்வது, தொற்றுப் பரவலில் இருந்து மீள்வதற்கான மிகச் சிறந்த வழிமுறையாகும். அபிவிருத்தி அடைந்துவரும் நாடாக இருப்பினும், தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டத்தில், இலங்கை வெற்றி கண்டுள்ளது.

30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், முழுமையானளவில் தடுப்பூசி ஏற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.

ஒக்டோபர் மாத இறுதிக்குள், 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், முழுமையானளவில் தடுப்பூசி ஏற்றப்படும்.

மிக விரைவில், 15 வயதுக்கு மேற்படி சிறுவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தையும் ஆரம்பிக்கவுள்ளோம்.

சுகாதாரச் சேவை ஊழியர்கள், பாதுகாப்புப் படையினர் மற்றும் பொலிஸார், அரச ஊழியர்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கிடையிலான ஒருங்கிணைப்பே, இந்தத் தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டத்துக்கு அடித்தளமாக அமைந்திருக்கிறது.

தொற்றுப் பரவல் முகாமைத்துவத்துக்காக, இரு தரப்பு மற்றும் பல தரப்பு நன்கொடையாளர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற நிதி மற்றும் பொருள் உதவிகளால், இலங்கை பெரிதும் நன்மையடைந்தது. அந்த நன்கொடையாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு, இவ்விடத்தில் நான் நன்றிகூறக் கடமைபட்டிருக்கிறேன். தற்போது நிலவும் சிக்கலான காலப்பகுதியில், உலகளவில் காணப்படும் பெரும் ஒத்துழைப்பு மிகவும் ஊக்கமளிக்கிறது. எவ்வாறாயினும், செய்யவேண்டிய மேலும் பல விடயங்கள் இருக்கின்றன.

தலைவர் அவர்களே, தொற்றுப் பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சினையானது, விசேடமாக அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு, மேலும் பல சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளது. இது, 2030இல் அடைய எதிர்பார்த்திருக்கும் நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான நிகழ்ச்சி நிரலைச் செயற்படுத்துவதற்குப் பாதகமாக அமைந்திருக்கின்றது.

அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள், இவ்வாறான நிலையற்ற தன்மையிலிருந்து மீள்வதற்காக, சர்வதேசப் பொறிமுறையொன்றின் ஊடாக அபிவிருத்திக்கான நிதி மற்றும் கடன் சலுகை உள்ளிட்ட மேலும் பல வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது அத்தியாவசியமாகியுள்ளது. தொற்றுப் பரவல் காரணமாக, இலங்கை கடுமையான சிரமத்துக்கு உள்ளாகியுள்ளது. சோகமயமான உயிரிழப்புகளுக்கு மேலதிகமாக, எங்களுடைய பொருளாதாரத்துக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

நாட்டைப் பூட்டுவது மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகளுக்குக் கட்டுப்பாடு விதித்தல், சர்வதேச உல்லாசப் பயணிகளின் வருகை வீழ்ச்சி மற்றும் மிதமான உலக வளர்ச்சி என்பன, எமது பொருளாதாரத்தின் அனைத்துப் பிரிவுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. இலங்கையானது, அதிகளவில் அந்நியச் செலாவணியை ஈட்டும் வழிமுறையாகக் காணப்படுவதும் நாட்டின் சனத்தொகையில் 14 சதவீதமானோர் தங்கியிருக்கும் தொழிற்றுறையுமான சுற்றுலாத்துறை, பெரிதளவில் சரிவடைந்துள்ளது.

சுற்றுலாத் தொழிற்றுறை மற்றும் ஏனைய பல துறைகளில் சிறிய மற்றும் நடுத்தர அளவில் ஈடுபட்டிருக்கும் வர்த்தகங்களுக்கு, வட்டி நிவாரணம் மற்றும் நிதி பெற்றுக்கொடுத்தல் போன்று, அரசாங்கத்தின் உதவித் திட்டங்கள் மூலம் சலுகைகள் வழங்கப்பட்டன.

நாளாந்தம் வருமானம் பெருவோர் மற்றும் குறைந்த வருமானத்தைக் கொண்ட குடும்பங்களுக்கு, நிதி உதவிகளும் உலருணவுப் பொருட்களும் வழங்கப்பட்டன. நாடு மூடப்பட்ட காலப்பகுதிகளில் இவ்வாறான உதவித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதால், அரச செலவானது அதிகரித்தது. தொற்றுப் பரவலால் ஏற்பட்ட நேரடிப் பிரச்சினைகளுக்கு மேலதிகமாக ஏற்பட்ட இந்தப் பொருளாதாரப் பிரச்சினைகளானவை, எங்களுடைய அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக இருந்த நிதியின் இருப்பைச் சீர்க்குழைய வைத்தன.

தலைவர் அவர்களே, தொற்றுப்பரவலின் விளைவுகள், மனித குலத்துக்கு மிகவும் அழிவுகரமானவையாக அமைந்தன. இவற்றை விட மிக மோசமான விளைவுகளை, காலநிலைப் பிரச்சினைகள் ஏற்படுத்தக்கூடும். அதனால், எதிர்வரும் சில தசாப்தங்களுக்குள் இந்த உலகம், பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிடும்.

இந்தப் பூமியின் ஆரோக்கியத்துக்கு, முன்னர் இல்லாதளவில் மேற்கொள்ளப்படும் மனிதச் செயற்பாடுகள் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன என்று, காலநிலை மாற்றம் குறித்த அரசாங்கங்களுக்கு இடையிலான குழுவின் சமீபத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. காலநிலை மாற்றங்கள் மற்றும் பல்லுயிர்ப் பரம்பல் இல்லாமல் போவதால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களுக்குத் தீர்வு காண்பதற்காக, தீர்க்கமானதும் உடனடியானதுமான பலதரப்பு நடவடிக்கையொன்றின் தேவை அவசியமாகியுள்ளது.

காலநிலை மாற்றங்களுக்கு இலக்காகும் ஒரு நாடாக, அதில் உள்ள அபாயங்கள் குறித்து இலங்கை நன்கு அறிந்திருக்கிறது.

இலங்கையின் தத்துவப் பாரம்பரியம் ஆழமாக வேரூன்றியுள்ள என்றும் சுற்றுச்சூழல் மதிப்பைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும், கௌதம புத்தர் வலியுறுத்தியிருக்கிறார். இலங்கையானது, பொதுநலவாய அமைப்பின் நீல சாசனத்தின் பலமிக்க நாடாக விளங்குவதோடு, இதன் அடிப்படையிலேயே, சதுப்புநிலக் கலாசாரம் தொடர்பான செயற்பாட்டுக் குழுவுக்குத் தலைமைத்துவத்தையும் வழங்கி வருகின்றது.

2030ஆம் ஆண்டுக்குள், நைட்ரஜன் கழிவுகளின் அளவை அரைவாசியாகக் குறைக்க எதிர்பார்த்திருப்பதோடு, ‘நிலையான நைட்ரஜன் முகாமைத்துவம் பற்றிய கொழும்பு சாசனத்தை நிறைவேற்றிக் கொண்டதன் மூலம், சுற்றுச்சூழல் மாசடைவைக் கட்டுப்படுத்தி, உலகளாவிய முயற்சிகளுக்கு, இலங்கையும் பங்களிப்பு நல்கியுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்ற முன்கூட்டிய மாநாட்டில், ஒன்லைன் ஊடாகக் கலந்துகொண்டதன் மூலம், இந்த மாதத்தின் பிற்பகுதியில் இடம்பெறும் ஐ.நா உணவு மாநாடானது, உலகளவில் ஆரோக்கியமானதும் நிலையான மற்றும் சமமான உணவு முறைகளை ஊக்குவித்தல் தொடர்பில் செயற்பாட்டு ரீதியிலான பிரதிபலன்களைப் பெற்றுத்தரும் என்று நான் எதிர்பார்க்கிறேன். அவ்வாறான பிரதிபலன்கள், மனிதச் சுகாதாரத்தைப் போன்றே, இந்தப் பூமியின் சுகாதாரத்துக்கும் மிக முக்கியமாக அமையும்.

நிலைத்தன்மை என்பது, இலங்கையின் தேசிய கொள்கைக் கட்டமைப்பின் ஒரு முக்கிய அங்கமாகும். மண் வளம், பல்லுயிர், நீர்வழிகள் மற்றும் ஆரோக்கியம் தொடர்பில் எழுந்த பிரச்சினைகள் காரணமாக, என்னுடைய தலைமையிலான அரசாங்கம், இந்த ஆண்டின் ஆரம்பத்தில், இரசாயனப் பசளை, பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகளின் பயன்பாட்டுக்குத் தடை விதித்தது. சேதனப் பசளை உற்பத்தி மற்றும் அதனைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் விவசாயத்துக்கான முதலீடுகள் ஊக்குவிக்கப்படுகின்றன.

இலங்கைக்குள் நிலையான விவசாயத்தை உருவாக்குவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளுக்காக, உலகளாவிய நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்கள் பலவற்றிடமிருந்து கிடைக்கப்பெற்ற ஊக்கமளிப்புகளுக்கு, இவ்விடத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன். நமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது நமது தேசிய முன்னுரிமைகளில் ஒன்றாகும். அடுத்த சில தசாப்தங்களில், வனப்பகுதியை கணிசமானளவில் அதிகரிப்பதே எங்கள் குறிக்கோளாக இருக்கின்றது.

நாடு முழுவதிலும் காணப்படும் 100 ஆறுகளுக்கும் மேலானவற்றைச் சுத்தம் செய்து மீட்கவும் ஆறுகள் மற்றும் சமுத்திர மாசுபடுத்தலுக்கு எதிராக நிற்கவும், நாங்கள் நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கிறோம்.

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஆதரவாக, ஒருமுறை உபயோகிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கும் தடை விதித்துள்ளோம்.

படிம எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்து கார்பனேற்றத்தை ஆதரிப்பதற்கான அவசரத் தேவையை இலங்கை அடையாளம் கண்டுள்ளது.

எம்முடைய மின்சக்தி கொள்கையின் ஊடாக, 2030ஆம் ஆண்டுக்குள், எமது தேசிய மின்சாரத் தேவையின் 70 சதவீதத்தை, சூரியசக்தி, காற்றாலை மற்றும் நீர் போன்ற புதுப்பிக்கத்தக்க சக்தி வலுக்களினூடாகப் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கிறோம்.

தலைவர் அவர்களே, எமது பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புதல் மற்றும் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களைச் செயற்படுத்தும் போதும், சர்வதேச சமூகத்தினரின் ஒத்துழைப்பை இலங்கை அன்புடன் வரவேற்கிறது.

முதலீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கும் வர்த்தகத் தொடர்புகளை விரிவுபடுத்திக் கொள்வதற்கும், எமது நாட்டின் அமைவிடம் மற்றும் எங்களுடைய வலுவான நிறுவனங்கள், வலுவான சமூக உட்கட்டமைப்பு மற்றும் திறமையான பணியாளர்களை அதிகளவில் பயன்படுத்த எதிர்பார்த்திருக்கிறோம்.

இதற்கான வசதிகளை வழங்குவதோடு, எமது மக்கள் அனைவரையும் வளப்படுத்துவதற்கான நீதி, ஒழுங்கு, நிர்வாகம் மற்றும் கல்வி போன்ற துறைகளையும் விரிவுபடுத்தி, விரிவான சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள, எனது அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னர் இருந்தே, இலங்கையானது சர்வஜன வாக்குரிமையைப் பெற்றிருந்தது. ஜனநாயகக் கலாசாரம் என்பது, எமது வாழ்வியலில் மிக முக்கிய அங்கமாகக் காணப்படுகிறது.

வளமானதும் நிலையானதுமான நாடொன்று உருவாக்கப்படுவதற்காகவும் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை உறுதிப்படுத்துவதற்காகவும், 2019ஆம் ஆண்டில் என்னை இந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கவும் 2020இல் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலின் ஊடாகப் புதிய அரசாங்கமொன்றை உருவாக்கவும், மாபெரும் மக்கள் ஆணையை இலங்கை மக்கள் வழங்கியுள்ளனர்.

2019ஆம் ஆண்டில், அடிப்படைவாத மதவாதத் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களையும் இலங்கை எதிர்கொண்டது. அதற்கு முன்னர், அதாவது 2009ஆம் ஆண்டு வரையில், சுமார் 30 வருடங்களாக இலங்கையில் யுத்தம் நிலவியது.

பயங்கரவாதம் என்பது, உலகளாவிய அச்சுறுத்தல் என்பதோடு, அதனை வெற்றிகொள்ள வேண்டுமாயின், விசேடமாகப் புலனாய்வுத் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கு, சர்வதேசத்தின் ஒத்துழைப்பு அத்தியாவசியமாகின்றது.

கடந்த அரை நூற்றாண்டுக் காலத்தில், இலங்கையில் ஆயிரக்கணக்கான உயிர்களும் பல தசாப்தங்களுக்குரிய செழிப்பும் இழக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற வன்முறைச் செயல்கள் இலங்கையில் மீண்டும் நடக்காது என்பதை உறுதி செய்வதில் எனது அரசு உறுதியாக உள்ளது. அதனால், அவற்றின் பின்னால் காணப்படும் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்.

நீடித்த சமாதானத்தை நாட்டுக்குள் ஏற்படுத்திக்கொள்ள, தேசிய நிறுவனங்களினூடான பொறுப்புக்கூறல், மறுசீரமைக்கப்பட்ட நீதி மற்றும் அர்த்தமுள்ள நல்லிணக்கம் ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

பொருளாதார அபிவிருத்தியின் பிரதிபலன்களுக்காக, நியாயமான பங்கேற்பை உறுதி செய்வதிலும் உண்மையாக இருக்க வேண்டும்.

இனப் பாகுபாடு, மதம் மற்றும் பாலின வேறுபாடுகளின்றி, அனைத்து இலங்கையர்களுக்கும் வளமானதும் நிலையானதும் பாதுகாப்பானதுமான எதிர்காலத்தை உருவாக்குவதே, என்னுடைய அரசாங்கத்தின் நோக்கமாகும்.

இந்தச் செயற்பாட்டுக்காக, அனைத்து உள்ளூர் பங்குதாரர்களுடன் இணைந்து, சர்வதேசப் பங்குதாரர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள நாங்கள் தயார். எவ்வாறெனினும், மக்களின் அபிலாஷைகளை பிரதிபலிக்கும் உள்ளூர் நிறுவனங்கள் மூலம் மட்டுமே நிலையான முடிவுகளைப் பெறமுடியுமென்பதை வரலாறு எடுத்துக்காட்டியுள்ளது.

இலங்கையின் பாராளுமன்றம், நீதித்துறை மற்றும் சுயாதீன சட்டரீதியான அமைப்புகள், தங்கள் செயற்பாடுகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்ற வரம்பற்ற இடத்தைக் கொண்டிருக்க வேண்டும். மதிப்புக்குரிய தலைவர் அவர்களே, உறுப்பினர்களே, இன்று நமது பொதுச் சபை விவாதத்தின் கருப்பொருளுக்கு ஏற்ப எங்கள் நம்பிக்கையின் மூலம் உண்மையான நெகிழ்ச்சியை உருவாக்க வேண்டுமாயின், நாங்கள் அனைவரும், பொது நலனைக் கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும்.

இறையாண்மையுடன் கூடிய அனைத்து அரசாங்கங்களினது அளவையும் வலிமையையும் பொருட்படுத்தாமல், நியாயமான முறையில் கருதி, அவர்களின் வழிமுறைகள் மற்றும் பாரம்பரியத்துக்கு உரிய மரியாதையுடன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது, ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்பாக இருக்கின்றது.

ஆப்கானிஸ்தானில் பௌத்த உரிமைகளைப் பாதுகாத்து ஊக்குவிக்குமாறு, ஐக்கிய நாடுகள் சபையிடமும் சர்வதேசத்திடமும் கேட்டுக்கொள்கிறேன்.

அனைத்து மனித குலத்துக்கும் சிறந்ததும் நிலையானதுமான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக, உண்மையான ஒத்துழைப்புடனும் தியாக மனப்பான்மையுடனும், நல்லெண்ணம் மற்றும் பரஸ்பர மரியாதையுடன் ஒன்றாகப் பணியாற்றுவோம் என்று, இந்த மாபெரும் சபையில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளிடம் நான் கேட்டுக்கொள்கிறேன். நன்றி..!

Posted in Uncategorized

வல்வெட்டித்துறையில் தமிழ் தேசியம் அடித்து வீழ்த்தப்பட்டிருக்கிறது – எம்.கே.சிவாஜிலிங்கம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களில் ஒருவர் துரோகத்துக்கு விலை போனதால் ஆட்சி வீழ்த்தப்பட்டிருக்கிறது. அங்கஜன்,  சுமந்திரனின் ஆசீர்வாதத்தோடு வல்வெட்டித்துறையில் தமிழ் தேசியம் அடித்து வீழ்த்தப்பட்டிருக்கிறதென தமிழ்த் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் தேர்வு தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று நடைபெற்ற வல்வெட்டித்துறை நகரசபைக்கான தலைவர் தேர்தலில் தமிழ்த் தேசியத்தை சீர்குலைக்க கூடிய விடயங்கள் நடைபெற்று சுயேட்சை குழுவின் தலைவரான செல்வேந்திரா தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறை நகரசபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் 7 உறுப்பினர்களும் செல்வேந்திரா தலைமையிலான சுயேட்சை குழுவில் 4 உறுப்பினர்களும் ஈ.பி.டி.பியில் 3 உறுப்பினர்களும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் 2 உறுப்பினர்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியில் ஒருவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒருவரும் என மொத்தமாக 17 பேர் காணப்படுகின்றனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆளுகையில் வல்வெட்டித்துறை நகரசபையின் உப தலைவராக தெரியப்பட்டு வந்த ஞானேந்திரன் தனக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் எனக் கோரி வெளியேறியிருந்தார். சாதி மத பிரதேசத்தைக் கடந்து தமிழ்தேசியம் நிற்கின்றது என்பதை காட்டுவதற்காக இதுவரை காலமும் ரெலோ இயக்கத்துடன் பிரிந்துநின்ற சதீஷை இணைத்து முதல் சந்தர்ப்பத்தை அவருக்கு வழங்கினோம்.

தங்கதுரை, குட்டிமணி,  தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்த மண்ணிலே தமிழ்த் தேசியம் தோற்கடிக்கப்படக் கூடாது என்ற எண்ணத்தில் இதற்கு பக்கபலமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஆதரவளித்தது. ஆனால் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி செல்வேந்திராவின் 4 உறுப்பினர்களும் ஈ.பி.ஆர்.எல்.எப்இன் ஒருவரும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி,  ஈ.பி.டி.பி என்பன இணைந்து வல்வெட்டித்துறை நகரசபையை கைப்பற்றியுள்ளது.

வல்வெட்டித்துறையில் தற்காலிகமாக தமிழ் தேசியம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இது துரோகத்திற்கு கிடைத்த வெற்றி. இந்த தோல்வியை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். இதுபோன்ற எத்தனையோ துரோகங்களை தமிழ் தேசியம் கண்டிருக்கிறது. துரோகங்கள் புதிதல்ல.

துரோகங்களுக்கு தற்காலிக வெற்றி கிடைக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களில் ஒருவர் துரோகத்துக்கு விலை போனதால் ஆட்சி வீழ்த்தப்பட்டிருக்கிறது. அங்கஜன்இ சுமந்திரனின் ஆசீர்வாதத்தோடு வல்வெட்டித்துறையில் தமிழ் தேசியம் அடித்து வீழ்த்தப்பட்டிருக்கிறது. நாங்கள் இருக்கின்றோம் நாங்கள் விழுந்து கிடக்கப்போவதில்லை என உறுதி கூறுகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.