கிருசாந்தி படுகொலை 25ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிருசாந்தியின் 25ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.

வல்வெட்டித்துறையில் உள்ள தமிழ்த் தேசிய கட்சியின் அலுவலகத்தில் அதன் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கத்தினால் நேற்று பிற்பகல் 3 மணியளவில் நினைவேந்தல் இடம்பெற்றது.

1996ஆம் செப்ரெம்பர் மாதம் 7ஆம் திகதி யாழ். சுண்டிக்குளி கல்லூரி மாணவி கிருசாந்தி வீதியால் சென்று கொண்டிருந்தபோது செம்மணி பகுதியில் அப்போதிருந்த இராணுவ முகாமில் வழிமறித்த இராணுவத்தினர் அவரை சித்திரவதையின் பின் படுகொலை செய்ததாக நீதி விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

Posted in Uncategorized

என்னிடம் வலிந்து திணிக்கப்பட்டதே சீ.விக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானக் கடிதம்- சி.வி.கே.சிவஞானம்

வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான கடிதம் சதித்திட்டம் ஊடாக என்னிடம் வலிந்து திணிக்கப்பட்டது என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, கடிதம் எழுதியதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 05.09.2021ஆம் திகதி யாழில் இருந்து இயங்கும் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வடக்கு மாகாண சபையை குழப்புவதில் நிறைய அனுபவம் வாய்ந்த வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வீ. கே. சிவஞானமும் பாரிய கவனம் செலுத்தினார் என குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த விடயம் தொடர்பாக உண்மை நிலையைத் தெளிவுபடுத்தும் நோக்குடன் இன்றைய தினம் (புதன்கிழமை) ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நான் செய்த தவறாக அவர் குறிப்பிட்டது 17 சபை உறுப்பினர்களுடன் சேர்ந்து மாகாண சபையை கலையுங்கள் என்ற கடிதத்தை ஆளுநரிடம் நான் கையளித்தமை பற்றியது. இந்த விடயம் தொடர்பாக பல தெளிவுபடுத்தல்களை நான் கடந்த 5 வருடங்களாக வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறேன்.

ஆளுநருக்குக் கொடுத்த கடிதம் முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லை என்பது மட்டுமே தவிர. சபையைக் கலையுங்கோ என்றல்ல என்பதை முதலில் குறிப்பிட விரும்புகின்றேன்.

முதலமைச்சர், அமைச்சர்களுக்கு எதிராக விசாரணைக் குழு ஒன்றை சபை நியமிக்க வேண்டும் என்ற முன்மொழிவைச் சமர்பித்தபோது, இதன் பொருட்டு சபை உறுப்பினர்களைக் கொண்ட தெரிவுக் குழுவை நியமிக்க முடியுமே தவிர, முதலமைச்சர் கோரியபடி வெளியாட்கள் கொண்ட குழுவை நியமிப்பதை நிராகரித்ததே நான்தான்.

முதலமைச்சர் தமக்குரிய சிறப்புரிமைக்கமைய அமைச்சர்களை நீக்கும்படி ஆளுநருக்கு சிபாரிசு செய்யலாம் என்பதால் விசாரணைக்குழு தேவையற்றது என்பதே எனது நிலைப்பாடாக இருந்தது.

அதனால் சுமார் ஒன்றரை நாள் விவாதத்தின் பின்பு முதலமைச்சர் தாமே ஒரு குழுவை நியமிக்கலாம் என்று நாம் கூறியதற்கு அமையவே விசாரணைக்குழு அவரால் நியமிக்கப்பபட்டது.

அந்த அறிக்கையை சபையில் சமர்ப்பித்த பின் நடைபெற்ற விவாதத்தின் முடிவில் திரு பொ.ஐங்கரநேசன் தன்னிலை விளக்கம் அளித்த நிலையில், முதலமைச்சர் அதனையும் பரிசீலித்து அவரது முடிவை இரண்டு நாட்களின் பின்பு தெரிவிக்கலாம் என்ற எனது கோரிக்கையை நிராகரித்து, தமது தீர்மானத்தை வாசிக்கத் தொடங்கியதும் அநேகமான மாகாண சபை உறுப்பினர்கள் சபையைவிட்டு வெளியேறினர்.

இவ்வாறான நடவடிக்கை பற்றி எனக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் பிற்பகல் 3 மணிக்கு கட்சித் தலைமையகத்தில் ஒரு கூட்டம் இருப்பதாகவும் அதில் கலந்துகொள்ளுமாறு எனக்குத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கமைய நான் சபை அமர்வு முடிந்த பின்பு கட்சித் தலைமையத்துக்கு இரண்டு மணித்தியாலயங்களுக்கு பின்பு சென்றபொழுது அநேகமான உறுப்பினர்களும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.

முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஆளுநருக்குச் சமர்ப்பிதற்கான கடிதம் கணினியில் தட்டச்சிடப்பட்டுக்கொண்டிருந்தது.

அது கட்சி உறுப்பினர்களின் முடிவு என எனக்குத் தெரிவிக்கப்பட்டது. அதில் எனது பெயர் முதலில் இருந்தபோது அப்படிப் போட வேண்டாம். அது தவறு என பலமுறை வற்புறுத்தியும் அதனை நிராகரித்து எனது பெயரை முதலில் தட்டச்சாக்கிவிட்டார்கள். வேறு வழியின்றி கையொப்பமிட நான் நிர்ப்பந்திக்கப்பட்டேன்.

இந்தக் கடிதத்தை ஆளுநரிடம் வழங்குவதற்கு என்னையும் அழைத்தார்கள். அப்படி நானும் மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தனும் எனது வாகனத்தில் புறப்படும்போது திரு.கமலேஸ்வவரன் அந்தக் கடிதக் கோவையை கொண்டு வந்து என்னிடம் தந்தார். அதை நான் ஏற்காமல் இந்த நடவடிக்கையை முன்னெடுத்தவர்களே கொடுக்க வேண்டும் எனக் கூறியதும் அவர் அதை எடுத்துச் சென்றார்.

பின்பு ஆளுநரைச் சந்திக்க மேல்மாடியில் உறுப்பினர்களும் ஊடகவியலாளர்களும் உட்சென்றபோது ஏற்பட்ட நெருக்கடிக்குள் அந்தக் கோவை எனது கையில் திணிக்கப்பட்டது. இதனால் நான் அதிர்ச்சியடைந்த போதும் அந்த இடத்தில் நின்று பிரச்சினைப்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு கடிதம் என்னால் ஆளுநரிடம் சகல உறுப்பினர்கள் முன்னிலையில் கையளிக்க வேண்டியதாயிற்று.

எனவே, இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையின் முன்னெடுப்பிலோ வேறு விதத்திலோ எனக்கு எதுவித சம்பந்தமும் இல்லை என்பதை காணலாம்.

சகல உறுப்பினர்களும் சேர்ந்து கட்சி சார்ந்து கட்சித் தலைமையகத்தில் எடுத்த முடிவுக்கு எப்படி என்னைப் பொறுப்பாளி ஆக்கலாம்” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஆப்கான் இடைக்கால அரசுடன் சீனா தொடர்பைப் பேறணும் – சீன வெளியுறவு அமைச்சு

ஆப்கானிஸ்தானில் புதிதாக உருவாக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்துடன் தொடர்புகளைப் பேண பீஜிங் தயாராகவுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 7 அன்று பெயரிடப்பட்ட புதிய ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை சீனா அங்கீகரிக்குமா என அலுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை கூறினார்.

ஆப்கானிஸ்தானின் இறையாண்மை, சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை சீனா மதிக்கிறது என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.

தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிய பின்னர் ஒரு பொறுப்பான அரசாங்கத்தின் முக்கிய அமைச்சரவை உறுப்பினர்களை செவ்வாய்க்கிழமை பெயரிட்டனர்.

இதினில் 2001 இல் வீழ்ச்சியடைந்த முந்தைய தலிபான் அரசாங்கத்தில் துணைப் பிரதமராகப் பணியாற்றிய முல்லா ஹசன் அகுந்த் இடைக்காலப் பிரதமராகப் பெயரிடப்பட்டார்.

அமெரிக்காவுடன் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளைக் கையாண்ட குழுவின் இணை நிறுவனர் முல்லா அப்துல் கனி பரதர் துணைப் பிரதமராகப் நியமிக்கப்பட்டார்.

தலிபானின் முதல் தலைவர் முல்லா உமரின் மகன் முல்லா மொஹமட் யாகூப் பாதுகாப்பு அமைச்சராகவும், ஹக்கானி நெட்வொர்க்கின் நிறுவனர் மகன் சிராஜுதீன் ஹக்கானி உள்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹெதாயத்துல்லா பத்ரி நிதி அமைச்சராக செயல்படுவார், அதே நேரத்தில் தோஹாவில் தலிபான் பேச்சுவார்த்தை நடத்திய அமீர்கான் முத்தாகி வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

ஆப்கானிஸ்தானின் “புதிய இஸ்லாமிய அரசாங்கத்தின்” 33 உறுப்பினர்களைக் குறிப்பிட்டு, மீதமுள்ள பதவிகள் கவனமாக விவாதிக்கப்பட்ட பின்னர் அறிவிக்கப்படும் என்று தலிபான்கள் கூறியுள்ளனர்.

எனினும் இந்த அரசாங்கத்தில் பெண்கள் யாரும் இடம்பெறவில்லை. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பெயரிடப்பட்ட தலிபான் அரசாங்கத்தின் உறுப்பினர்கள் குறித்து கவலையடைவதாக அமெரிக்கா கூறியுள்ளது.

தலிபான் பயங்கரவாத அமைப்பாக ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளினால் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

2வது கடிதம் மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பப்படவில்லை- சிறிதரன்

இலங்கை தழிரசுக் கட்சியில் இருந்து இரண்டாவது கடிதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் என சிவஞானம் சிறிதரன் உறுதிப்படுத்தியுள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சிக்குள்ளிருந்து இரண்டாவது கடிதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

மேலும் குறித்த கடிதத்தில் தமிழரசு கட்சியின் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 9 பிரமுகர்களின் கையொப்பத்துடன் அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டதிருந்தது.

இவ்விடயம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

கொவிட் தொற்று நிலைமை விசேட காரணல்ல – மேன்முறையீட்டு நீதிமன்றம்

சந்தேகநபர்களுக்காக பிணை கோரிக்கையை சமர்ப்பிக்கும் போது கொவிட் தொற்று நிலைமையை விசேட காரணமாக ஏற்றுக் கொள்ள முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

போதைப்பொருள் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவருக்காக சமர்ப்பிக்கப்பட்ட சீராக்கல் மனு ஒன்றை நிராகரித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாமினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அததெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

கடந்த வருடம் சிலாபம் பிரதேசத்தில் 67 கிலோகிராம் ஹேரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பிணையில் விடுதலை செய்யுமாறு கோரி குறித்த சீராக்கல் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த சீராக்கல் மனுவின் ஊடாக நாட்டில் தற்போது பரவி வரும் கொவிட் 19 தொற்றை விசேட காரணமாக கருத்திற் கொண்டு இந்த சந்தேகநபரை பிணையில் விடுவிக்குமாறு கோரப்பட்டிருந்தது.

கொரோனா தொற்று நிலைமை அனைத்து கைதிகளுக்கும் பொதுவானது என சுட்டிக்காட்டிய நீதிபதிகள் குழாம் அதனை விசேட காரணமாக கருத முடியாது என தீர்ப்பளித்துள்ளனர்.

Posted in Uncategorized

யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு ஒத்திவைப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக 35ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி தற்போதைய கொரோனா பெருந்தொற்று நிலைமைகளைக் கருத்தில் கொண்டு அடுத்த மாதம் 7, 8, 9 ஆம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஊடகப் பிரிவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஊடகப் பிரிவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அந்தச் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு:

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதியை இம்மாதம் 16 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும் நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பட்டமளிப்பு விழா ஏற்பாடுகள் பற்றி ஆராய்வதற்காக பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாக் குழு இன்று 8 ஆம் திகதி புதன்கிழமை காலை துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் கூடியது.

தற்போதைய நிலைமைகள் பற்றி ஆராய்ந்த குழு, நாட்டின் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பட்டமளிப்பு விழாவை அடுத்த மாதம் 07 ஆம் திகதி முதல் 09 திகதி வரை யாழ். பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடாத்துவதெனத் தீர்மானித்துள்ளது.

எனினும் சூழ்நிலைகளைப் பொறுத்து குறித்த தினங்களில் பட்டமளிப்பு விழாவைத் திட்டமிட்டபடி பட்டதாரிகளுடன் நடாத்த முடியாத நிலைமை ஏற்பட்டால் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பட்டமளிப்பு விழாவை நிகழ்நிலையில் நடாத்தி பட்டங்களை உறுதிப்படுத்துதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் பட்டமளிப்பு விழாவை நிகழ்நிலைக்கு மாற்றுவது தொடர்பான இறுதித் தீர்மானம் இம்மாதம் 23 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்றும் அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு பயணம் செய்ய வேண்டாம் – அமெரிக்கா அறிவிப்பு

கொவிட் ஆபத்து காரணமாக இலங்கைக்கு பயணம் செய்ய வேண்டாம் என அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அந்நாட்டு குடிமக்களுக்கு அறிவித்துள்ளது.

கொவிட் அபாயத்தின் அடிப்படையில் இலங்கையை 4 வது மட்ட அதிக ஆபத்து உள்ள நாடுகளில் ஒன்றாக பெயரிட்டு அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் இதனை குறிப்பிட்டுள்ளது.

இலங்கையைத் தவிர, ஜமைக்கா மற்றும் புருனே ஆகிய நாடுகளை அதிக ஆபத்து உள்ள நாடுகளாக அமெரிக்கா பட்டியலிட்டுள்ளது.

அத்தியாவசிய கடமைக்காக இலங்கைக்குச் செல்ல விரும்பினால், முழுமையான தடுப்பூசி டோஸ்களை பெற்றிருக்க வேண்டும் என அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் தற்போதைய நிலைமையின் படி முழுவதுமாக தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களுக்கும் கொவிட் தொற்று ஏற்படும் வாய்ப்பு மற்றும் பரவும் வாய்ப்பு அதிகமாக காணப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Posted in Uncategorized

கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 646 பேருக்கு கொரோனா

நாட்டில் மேலும் 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று இதுவரையில் 2,915 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 474,780 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 389,969 ஆக அதிகரித்துள்ளது.

அதே நேரம் நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 185 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த அனைவரும் நேற்றைய தினம் (07) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10,689 ஆக அதிகரித்துள்ளது.

இனச் சுத்திகரிப்பு பற்றிப் பேசுவோர் கிழக்கின் படுகொலைகள் பற்றியும் நினைவில் கொள்ள வேண்டும் – ரெலோவின் பிரதித் தலைவர் பிரசன்னா

வடக்கில் இடம்பெற்ற இனச்சுத்திகரிப்பு பற்றி நீலிக்கண்ணீர் வடிக்கும் எம்மவர்கள் கிழக்கில் மாற்றுச் சமூகத்தினால் இடம்பெற்ற இனஅழிப்பு தொடர்பில் ஏன் கருத்திட மறுக்கின்றார்கள். இனச் சுத்திகரிப்பு பற்றிப் பேசுவோர் கிழக்கில் இடம்பெற்ற படுகொலைகள் பற்றியும் நினைவில் கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதித் தவிசாளரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதித் தலைவருமான இந்திரகுமார் பிரசன்னா தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய அரசியற் நிலவரம் தொடர்பில் இன்றைய தினம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்டோர் அம்மக்களின் உணர்வுகளை மதித்து தங்கள் கருத்துக்களை வெளியிட வேண்டும். தாம் யதார்த்தமாகப் பேசுகின்றோம் என்ற எண்ணப்பாட்டில் தமிழ் மக்களின் உணர்வுகளைச் சீண்டும் முகமாகச் செயற்படுதல் கூடாது.

அனைத்து இனங்களையும் மதிக்க வேண்டும் என்பது உண்மையான விடயமே. ஆனால் எம்மின மக்களைக் காயப்படுத்தி அதன் மூலம் மாற்றுச் சமூகத்தைத் திருப்திப்படுத்த எண்ணுவது எந்த வகையிலும் நியாயமாகாது.

அண்மையில் எமது பாராளுமன்ற உறுப்பினரொருவர் யுத்த காலத்தின் போது வட மாகாணத்திலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்ட நடவடிக்கை இனச்சுத்திகரிப்பு என்ற வகையில் இடம்பெற்றது. இது குறித்து தாம் வெட்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இது இன்று நேற்றல்ல அவர் காலா காலமாகச் சொல்லிக் கொண்டு வரும் விடயமே. ஆனால் தேவையற்ற சந்தர்ப்பங்களில் இதனை அவர் குறிப்பிட்டு வருவது தமிழ் மக்களை இன்னும் மனம்நோகச் செய்யும் விடயமாகும்.

நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர். தனியே தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றே நாம் மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்படுகின்றோம். எமக்கு மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வாக்களிப்பதும் இல்லை, வாக்களிக்கவும் மாட்டார்கள். எனவே அவர்களைத் திருப்திப்படுத்த எம் சமூகத்தை நோகடிப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இது அரசியலுக்காவோ, வாக்கிற்காகவோ அன்றி தனிமனித விழுமியம் சார்ந்த விடயமாகவே இருக்கின்றது.

நாம் வடக்கு கிழக்குப் பிராந்தியங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள். எமது கருத்துக்கள் இரண்டு பிராந்தியங்களையும் சார்ந்தே இருக்க வேண்டும். வடக்கில் இடம்பெற்ற இனச்சுத்திகரிப்பு பற்றி நீலிக்கண்ணீர் வடிக்கும் எம்மவர்கள் கிழக்கில் மாற்றுச் சமூகத்தினால் இடம்பெற்ற இனஅழிப்பு தொடர்பில் ஏன் கருத்திட மறுக்கின்றார்கள்.

வரலாறு என்பது அனைவருக்கும் ஒன்றே. ஒரு இனத்தை அழிக்காமல் அவர்களை உயிருடன், பாதுகாப்பாக வெளியேற்றியமை தொடர்பில் வெட்கப்படும் நம்மவர்கள் எமது இன மக்களை கொத்துக் கொத்தாகக் காட்டிக் கொடுத்தும் எல்லைப் புறக் கிராமங்களில் வெட்டியும், சுட்டும் இனஅழிப்புச் செய்த விடயத்திற்கு என்ன சொல்லப் போகின்றார்கள். எத்தனை அழிப்புகள் கிழக்கில் இடம்பெற்றன. இதற்கெல்லாம் வெட்கப்பட மாற்றுச் சமூகத்தில் இரந்து எந்தப் பிரதிநிதியும் வரமாட்டார்கள்.

ஊர்காவற்படை, புலனாய்வாளர்கள் என்ற பெயரில் எத்தனையோ அழிப்புகள் கிழக்கில் இடம்பெற்றன. இந்த அழிப்புகளில் கிழக்கு மாகாணத்தில் எத்தனை தமிழ் கிராமங்கள் இல்லாமல் போயிருக்கின்றன. இவைகளை பற்றியும் சற்று அறிந்து கொள்ள வேண்டும். இதற்கெல்லாம் யார் வெட்கப்படப் போகின்றார்கள்.

வெறுமனே தாம் அறிந்த விடயங்களை வைத்து மாத்திரம் கருத்திடல் தமிழ்த் தேசியத்திற்குப் பொருந்தாத ஒன்றாகும். கிழக்குத் தமிழ் மக்களையும் நினைவில் வைத்து தங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள். பாதிப்புற்ற ஒரு சமூகம் தமக்காக பாடுபடும் கட்சி என்ற நம்பிக்கையில் தான் எம்முடன் அன்ற தொட்டு இருக்கின்றார்கள். அந்த நம்பிக்கையைச் சீர்குலைக்கும் விதத்தில் கருத்துக்கள் வருவது நல்லதல்ல.

மேற்குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினரின் செயற்பாடுகள், நடவடிக்கைகளை நாம் மதிக்கின்றோம். ஆனால் இவ்வாறான கருத்துக்கள் மூலம் அவர் மீது கொண்டுள்ள மதிப்பினை  அவரே குறைத்துக் கொள்ளக் கூடாது. எமது பிரச்சினைகள் தொடர்பில் அவரால் மேற்கொள்ளப்பட்ட, மேற்கொள்ளப்படுகின்ற விடயங்கள் முக்கியம் வாய்ந்தவை. இருப்பினும் தாம் இடும் கருத்துக்கள் தொடர்பில் அவர் கரிசனை கொள்ள வேண்டும். இனியாவது அவர் விடுகின்ற அறிக்கைகள் மேலும் மேலும் நிந்தனைக்குள்ளான தமிழ் சமூகத்திற்கு இன்னலை ஏற்படுத்துவதாக அமையக் கூடாது என்பதே எமது நோக்கம், எமது மக்களின் நோக்கமும் அதுவேயாகும் என்று தெரிவித்தார்.

நிதி திருத்தச் சட்டமூலம் நிறைவேறியது

வெளிப்படுத்தப்படாத சொத்துக்கள் தொடர்பான நிதி திருத்தச் சட்டமூலம் 90 மேலதிக வாக்குகளால் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலம் மீதான விவாதம் இன்று காலை முதல் நடத்தப்பட்டதுடன், அதனை தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு அதன் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதன்போது குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 134 வாக்குகளும், எதிராக 44 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதன்படி இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
வெளிப்படுத்தப்படாத சொத்துக்களை சட்டப்பூர்வமாக்கி, அதற்கான வரியின் பெறுமதிக்கு ஏற்றால் போன்று சமனான நிதியை முதலீடு செய்வதற்கு ஏற்ற வகையில் இந்த சட்டமூலம் நிதி அமைச்சரினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது.