அமெரிக்கா தமிழர் தாயகக் கோட்பாட்டை அங்கீகரிப்பதை வரவேற்கிறோம் ரெலோ ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன்

அமெரிக்க காங்கிரஸ் தமிழர் தாயக பூமியான இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்களை தமிழரின் பூர்வீக தாயகமாக அங்கீகரிக்கும் நிலைப்பாட்டை வரவேற்கிறோம்.

அண்மையில் அமெரிக்க காங்கிரஸ் செனட்டர்களின் ஏற்பாட்டிலே இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்கள் தமிழர்களின் பூர்விகத் தாயகமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற பிரேரணையை தயாரித்து வெளியுறவுக் குழுவிடம் சமர்ப்பித்திருக்கிறார்கள். அவர்களின் அங்கீகாரத்தின் பின்னர் இது செனட் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும் சந்தர்ப்பம் நிலவுகிறது.

அமெரிக்காவினுடைய இந்த நிலைப்பாடு தமிழர்களுடைய தாயகக் கோட்பாட்டினை சர்வதேச அரங்கிலே அங்கீகரிப்பதற்கானதும் எம்முடைய இனத்தினுடைய தேசியக் கோரிக்கைகளை படிப்படியாக வெற்றிபெற உதவும் நிலைப்பாடாக அவதானிக்கிறோம்.

இதன் பின்னணியாக அண்மையில் ஐநாவில் நிறைவேற்றப்பட்ட 46/1 பிரேரணையில் 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் அடிப்படையில் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானம் அமைந்துள்ளது.

ஒன்றிணைந்த வடகிழக்கு பிரதேசத்தை வலியுறுத்திய இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் 1987 ல் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு திருத்தம் பூகோள அரசியலில் பெற்றுள்ள முக்கியத்துவத்தை தமிழ் தரப்புகள் தட்டிக் கழிக்க முடியாது. இணைந்த வடக்கு கிழக்கு இலங்கைத் தமிழரின் வரலாற்று அல்லது பூர்விக வாழ்விடப் பிரதேசங்கள் என்பதை வலியுறுத்தி இலங்கை அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம் இன்று சர்வதேச அரங்கிலே குறிப்பாக அமெரிக்கா வடக்கு கிழக்கு இலங்கை தமிழரின் பூர்விகத் தாயகமென அங்கீகரிக்க முனைய வழியமைத்திருக்கிறது.

இப்பிரேரணை வெளியுறவு கமிட்டியின் அனுமதியை பெறும் பட்சத்தில் அமெரிக்க செனட் சபையில் ஏற்றுக் கொள்ளப்படும்.

இது தமிழரின், இணைந்த வடக்கு கிழக்கு தாயகக் கோட்பாட்டுக்கும் அதன் அடிப்படையிலான அரசியல் தீர்வுக்குமான கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.

மேலும் அமெரிக்காவின் வெளியுறவு கமிட்டியின் முடிவு இந்தியாவின் நிலைப்பாட்டின் அடிப்படையில்தான் தங்கியுள்ளது. உள்ளக அரசியலில் தமிழர் தரப்பாகிய நாம் ஒன்று பட்ட குரலுடன் செயல்படுவதே சர்வதேச நாடுகளின் முயற்சிக்கு பலமளிக்கும்.

இப்பூகோள சூழல்களை உணர்ந்து அதை எமது மக்களுக்கு சாதகமாக்க தமிழர் தரப்பின் ஐக்கியத்தின் அவசியத்தை அண்மையில் நாம் வலுயுறுத்தியுள்ளோம். அதற்கான ஆரம்ப கட்ட பேச்சுக்களையும் முன்னெடுத்துள்ளோம்.

தமது பதவிகள், தேர்தல் நோக்கங்கள், கட்சி நலன்கள் , தற்பெருமை என்பவற்றை கடந்து நாம் இந்த கணத்தில் எம்மக்களுக்காக ஒன்றுபட்டு சர்வதேச அரசியல் சூழலை சாதகமாக்க செயல்படத் தவறினால், எந்த நியாயப் படுத்தலுக்கும் அப்பால், பாரிய வரலாற்றுத் துரோகத்தை இழைத்தவர்கள் ஆவோம்.

சுரேந்திரன்
ஊடகப் பேச்சாளர்- ரெலோ
தமிழ் தேசியக் கூட்டமைப்பு

Posted in Uncategorized

தபால் நிலையங்கள் நாளை முதல் திறப்பு

நாளை (03) முதல் நாட்டின் அனைத்து தபால் மற்றும் உப தபால் நிலையங்களை மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

ஜூன் மாத பொதுமக்களுக்கான கொடுப்பனவு, மருந்து விநியோகம் உள்ளிட்ட குறிப்பிட்ட சில பணிகளுக்காக இவ்வாறு தபால் நிலையங்களை திறக்க தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்ள வரும் போது குறித்த கொடுப்பனவு அட்டை அல்லது முதியோர் அடையாள அட்டையை பாதுகாப்பு தரப்பினருக்கு காண்பித்து பயனாளர்கள் தபால்/ உப​தபால் நிலையங்களுக்கு வர முடியும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

வேலை நாட்கள் குறைக்கப்படுவதால் பொருளாதார சிக்கலை எதிர்கொண்டுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்கள்

COVID தொற்று நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமது வேலை நாட்கள் குறைக்கப்படுவதால் பொருளாதார சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

பல வருடங்களாக போராடியதன் விளைவாக 1000 ரூபா நாளாந்த சம்பளம் நிர்ணயிக்கப்பட்டாலும் வேலை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் குறிப்பிட்டனர்.

1000 ரூபா சம்பளத்திற்கு 20 கிலோகிராம் கொழுந்தை பறிக்க தாம் நிர்பந்திக்கப்படுவதாக பொகவந்தலாவை தோட்ட மக்கள் தெரிவித்தனர்.

20 கிலோகிராம் கொழுந்தினை பறிக்க முடியாத தற்போதைய சூழலில், வேலை நாட்கள் குறைக்கப்படுவதாகவும் தொழிலாளர்கள் கவலை வௌியிட்டனர்.

கடந்த முதலாம் திகதி வேலை வழங்கப்பட்ட நிலையில், எதிர்வரும் 7 ஆம் திகதியே மீண்டும் வேலை வழங்கப்படும் என தோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளதாகவும் தோட்டத் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டினர்.

ஏப்ரல் , மே மாதங்களில் 7 தொடக்கம் 12 நாட்கள் மாத்திரமே இந்த மக்களுக்கான சம்பளம் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், இவர்களின் வாழ்வாதாரம் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.

தொடரும் பயணக் கட்டுப்பாடு மற்றும் முடக்கல் நிலைமை காரணமாக முற்கூட்டியே பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத நிலைக்கும் இந்த மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

சம்பள நிர்ணய சபையூடாக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டாலும் இதன் உண்மையான பயனை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்தனர்.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 39 பேர் பலி,உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,566

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 39 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,566 ஆக அதிகரித்துள்ளது.

பயணக் கட்டுப்பாடு 14 ஆம் திகதி வரை நீடிப்பு

நாட்டில் தற்போது அமுலிலுள்ள பயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

பயணக் கட்டுப்பாடானது எதிர்வரும் 14 ஆம் திகதி அதிகாலை 04 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் நிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: சர்வதேச அமைப்புக்களை நாட நேரிடும் – பேராயர் எச்சரிக்கை

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் அரசியல் பின்னணியை அடிப்படையாகக் கொண்ட ஒரு சூழ்ச்சி என முன்னாள் சட்டமாதிபர் தப்புல டி லிவேரா குறிப்பிட்ட கருத்தின் உண்மை தன்மையினை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும். குண்டுத்தாக்குதல் சம்பவம் குறித்து ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் குற்றவாளிகள் என பெயர் குறிப்பிடப்பட்டவர்களை அரசாங்கம் அரசியல் நோக்கிற்காக பாதுகாக்கிறது. நல்லாட்சி, சுபீடசமான எதிர்காலம் ஆகியவற்றினால் ஏமாற்றமடைந்தது மாத்திரமே மிகுதயாகியுள்ளது என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் குறித்து முன்னெடுக்கப்படும் விசாரணையினை துரிதப்படுத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன் முன்னிலைப்படுத்துவமாறு அரசாங்கத்திற்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை மூன்று மாத காலத்திற்குள் சட்டத்தின் முன்னிலைப்படுத்துவதாக குறிப்பிட்ட அரசாங்கம் குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்று இரண்டு வருடங்கள் நிறைவடைந்தும் இதுவரையில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை அரசியலாக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் என குறிப்பிட்டவர்களை அரசாங்கம் அரசியல் நோக்கத்திற்காக பாதுகாக்கிறது. ஆணைக்குழுவின் அறிக்கையின் உள்ளடக்கங்களை செயற்படுத்த 6 அமைச்சர்களை உள்ளடக்கிய குழுவை ஜனாதிபதி நியமித்தார்.

இவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க கூடாது என்று வலியுறுத்தும் 6 பேர் கொண்ட குழுவின் செயற்பாடுகளை கடுமையாக எதிர்த்தோம்.. இவ்வாறான செயற்பாடு ஜனாதிபதியின் ஒரு நாடு:-ஒரு கொள்கை என்ற சட்டத்தை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.

நல்லாட்சி மற்றும் சுபீட்சமான எதிர்காலம் ஆகிய சொற்பதங்களினால் ஏமாற்றமடைந்தது. மாத்திரமே மிகுதியாகியுள்ளது. ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் விவகாரம் குறித்து உண்மை தன்மையுடன் அரசாங்கம் செயற்பட வேண்டும். இல்லாவிடின் முன்னர் குறிப்பிட்டதை போன்று சர்வதேச அமைப்புக்களை நாட நேரிடும் இவ்வாறான செயற்பாடுகள் அரசாங்கத்திற்கு பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்றார்

Posted in Uncategorized

யாழில் தமிழ் மொழியை புறந்தள்ளி ஆக்கிரமித்த சீன மொழி!

யாழ்.சாவகச்சேரியில் சீன அரச நிறுவனமான China State Construction Engineering Corporation எனும் நிறுவனத்தில் சீன மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டும் பெயரிடப்பட்டுள்ளது.

அலுவலக பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள கட்டிடம் முழுமையாக இரு மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளதுடன் தனியான பெயர்ப் பலகையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் அரச கரும மொழிகளான சிங்களமும், தமிழும் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டு பெயரிடப்பட்டுள்ளது.

இதேவேளை, காத்தான்குடியில் அரபி மொழியில் எழுதப்பட்டுள்ளதைப் புத்த பிக்குகளும், ஆளும் கட்சியும் அரபி என்ன இலங்கையின் ஆட்சி மொழியா? எனக் கேட்டுப் போராடியவர்கள் இன்று சீன மொழி இலங்கையில் எங்கும் பயன்படுத்தப்படுவதைக் கேள்விக்கு உட்படுத்தவில்லை.

சீனத் தூதர் சட்டமா அதிபர் மாளிகையில் வைத்த கல்வெட்டில் சீன மொழி இருந்ததற்கு தாங்கள் பரிசாக வழங்கிய இடம் அதனால் சீன மொழியைப் பயன்படுத்தினோம் என்று சமாளித்திருந்தார்.

இந்த நிலையில் வடகிழக்கில் தமிழ்மொழி பிரதான மொழியாக காணப்படும் நிலையில் தனியே சீனமொழி மட்டும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 15 ஆம் நூற்றாண்டில் சீனா இலங்கையை ஆக்கிரமித்து சிங்கள மன்னனை சிறை பிடித்து, சீனாவிற்கு கொண்டு சென்ற நிலை 21 ஆம் நூற்றாண்டிலும் நடக்குமா? எனப் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இலங்கையின் புதிய நியமனங்கள் இடைக்கால நீதிக்கான பொறிமுறைகளை சீர்குலைக்கின்றன – ஜஸ்மின் சூக்கா

இலங்கையில் காணாமல்போனோர் அலுவலகத்திற்கு போர்க்காலத்தில் பொலிஸ் அதிபராக இருந்தவர் நியமிக்கப்பட்டு முன்னைய அரசாங்கத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இடைக்கால நீதிப் பொறிமுறை முழுமையாக இராணுவமயப்படுகின்றது.

இலங்கையின் பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக புதிய யுத்தக்குற்றச்சாட்டுகளை வெளியிட்டது சர்வதேச அமைப்பு | Virakesari.lk

முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஹப்பு ஆராச்சிகே ஜெயந்த சாந்த குமார விக்ரமரட்ணவின் நியமனம் கடந்த மே மாதம் 20 திகதியன்று பாராளுமன்ற உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இடைக்கால நீதி தொடர்பான முன்னணி நிபுணர் ஜஸ்மின் சூக்கா, இந்த நகர்வானது காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு உண்மை மற்றும் நீதியினை வழங்குவதற்கான எந்த வாய்ப்பினையும் இல்லாது செய்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இது கடினமான ஒரு விடயமாகும். இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களில் ஈடுபட்டார் என ஐ.நா விசாரணையில் பெயர் குறிப்பிடப்பட்ட மூன்று பொலிஸ் பிரிவுகளுக்கு அதிபராக இருந்தவர் தற்போது காணாமல்போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்கின்றார்.

இவர் திட்டமிட்ட பொலிஸ் சித்திரவதை போன்ற ஒட்டுமொத்த மனித உரிமை மீறல் சம்வங்களிலும் கட்டளைப் பொறுப்பு வகித்தமைக்காக வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டால் உலகளாவிய சட்ட மேலாதிக்க வழக்குகளுக்கு முகம் கொடுக்கும் ஆபத்தில் உள்ள ஓர் உயர் அரச அதிகாரி என சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளளர் ஜஸ்மின் சூக்கா குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் போனோர் எண்ணிக்கையில் உலகிலேயே இரண்டாவது இடத்தில் உள்ள ஓர் நாட்டில் காணாமல் போன மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான சம்பவங்களை விசாரிப்பதற்குப் பொறுப்பாக காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் நியமிக்கப்படுகின்றது.

இந்த அமைப்புக்கு நிதியுதவி வழங்கவேண்டாம் எனக் கோரி ஐ.நாவின் அமைதியைக் கட்டியெழுப்பும் நிதியம் மற்றும் சர்வதேச நன்கொடையாளர்கள் ஆகியோருக்கு நாம் கடிதம் அனுப்புவோம்.

அத்தோடு இந்தப் பிரச்சினைக்குரிய நியமனம் தொடர்பாகவும் சம்பந்தப்பட்ட ஐ.நா அமைப்புக்களுக்கும் மற்றும் அங்கத்துவ நாடுகளுக்கும் இரகசிய ஆவணம் ஒன்றினையும் அனுப்புவோம் என சூக்கா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்இலங்கை அரசாங்கத்தின் கடந்த கால குற்றங்களை மூடிமறைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஓர் வாகனமாக மாறியுள்ள இந்த அமைப்புக்கு ஐ.நா மற்றும் ஏனைய நன்கொடையாளர்கள் தமது வரிப்பணத்தினை பயன்படுத்தி நிதி உதவி செய்யக்கூடாது என வலியுறுத்தி கடிதம் அனுப்புமாறு இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள பாதிக்கப்பட்ட சமூகத்தினரை நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

ஏற்கனவே, நீதிபதி உபாலி அபயரட்ண காணாமல் போனோர் அலுவலகத்திற்கு தலைவராக முன்னர் நியமிக்கப்பட்டபோது அந்த நியமனம் ஓர் நேரடியான அவமானம் என்றும் வன்முறைச் செயல் என்றும் இலங்கையிலுள்ள பாதிகப்பட்ட குடும்பங்களால் விபரிக்கப்பட்டது.

அரசியல் பழிவாங்கல் எனக் கூறப்படும் சம்பவங்களை விசாரிப்பதற்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவினால் நிறுவப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றின் தலைவராக நீதிபதி அபயரட்ணா இருந்துள்ளார்.

இந்த ஆணைக்குழு காணாமல் போனோர் தொடர்பான வழக்குகள் உள்ளிட்ட பல மனித உரிமை வழக்குகளுக்கான நீதிமன்ற தீர்ப்புக்களை குறுக்கிட்டுத் தடுத்துள்ளதாக மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளாதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் போனோர் அலுவலகத்தினை தலைமைதாங்குவதற்கு அவரை நியமித்தமையானது அந்த அமைப்பின் சுதந்திரத்தினையும் நம்பகத் தன்மையினையும் காத்திரமாகச் செயற்படுவதற்கான வலுவினையும் கடுமையாகச் சீர்குலைத்துள்ளது.

இலங்கையில் இடைக்கால நீதிக்காக நிறுவப்பட்ட இரண்டு அமைப்புக்களில் ஒன்று இந்த காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம். இரண்டாவது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்குடன் உருவாக்கப்பட்ட இழப்பீடு வழங்கும் அலுவலகமாகும்.

(ஓய்வுபெற்ற) மேஜர் ஜெனரல் வாடுகே பாலித பியசிறி பெர்னான்டோ என்பவரை இழப்பீடு வழங்குவதற்கான அலுவலகத்திற்கு நியமித்து தற்போது அந்த அமைப்பும் இராணுவமயப்படுத்தப்பட்டுள்ளது.

இராணுவத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இழப்பீடு வழங்குதலிலும் பெருந்தொகையான நிதி கையாளப்படும். எனினும் இங்கு இடைக்கால நீதிப் பொறிமுறை இராணுவமயப்படுத்தப்பட்டுள்ளது.

ஏனெனில் இழப்பீட்டு அலுவலகத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளவர் சர்வதேச சமூகத்தினால் ஆதரவு வழங்கப்பட்ட மற்றும் ஊழல் இடம்பெற்றதாக கண்டுகொள்ளப்பட்ட ஓர் நடவடிக்கையில் முன்னர் பொலிசாரால் விரிவாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர். அவரது ஊழல் குற்றச்சட்டுக்கள் நீதிமன்றச் சட்டத்தினால் பரிசோதிக்கப்பட்டு இன்னும் தீர்க்கப்பட்வில்லை என சூக்கா குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ணாவின் நெருகடகமானவர்களில் ஒருவரான சந்திர நிமால் வக்சித என்பவர் புதிதாக உருவாக்கப்பட்ட ஊழல் அணைக்குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

2009-10 காலப்பகுதியில் பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு வக்சித தலைமைதாங்கினார் – அந்தப் பிரிவினை திட்டமிட்ட சித்திரவதைக்குப் பொறுப்பான ஓர் பிரிவு என ஐநா குறிப்பிட்டது.

வன்முறைகள் இடம்பெற்ற காலத்தில் பாதுகாப்பு அதிகாரிகளாக இருந்தவர்களை உள்ளடக்குகின்ற இந்த இடைக்கால நீதிப் பொறிமுறைகளில்இலங்கையிலுள்ள காணாமல்போரின் குடும்பங்கள் பாதுகாப்பாக ஈடுபடமுடியாது. இந்த அமைப்புக்களின் இருப்பானது சாட்சியாளர்களின் பாதுகாப்புக்கு ஓர் பாரிய ஆபத்தை ஏற்படுத்துகின்றது எனவும் சூக்கா குறிப்பிட்டுள்ளார்.

கொரோனாவினால் உயிரிழப்பவர்களின் உடல்கள் தகனம்-ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் பிரதமருக்கு அவசரக் கடிதம்

வன்னியில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்கள், வவுனியா நகர சபை ஊடாக தகனம் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றபோது, அவர்களின் உறவினர்களிடம் பணம் அறவிடப்படுவதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த செயற்பாடு தொற்றினால் உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு மேலும் துயரத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே இவ்விடயம் தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டுச் செல்லும் வகையில் கடிதமொன்றை செல்வம் அடைக்கலநாதன் இன்று (செவ்வாய்க்கிழமை) அவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களை உடலை தகனம் செய்வதற்கு வவுனியா நகர சபையினால் நிதி அறவிடப்படுகிறது.

அதாவது ஒருவரை தகனம் செய்வதற்கு 7 ஆயிரம் ரூபாய், வவுனியா நகர சபையினால் அறவிடப்படுகின்றது.

கொரோனா அச்சுறுத்தலான சூழ்நிலையினால் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வாழும் மக்கள், குறித்த தொகையை வழங்க முடியாத நிலைமையிலேயே உள்ளனர்.

ஆகவே மக்களின் இத்தகைய நிலைமையை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்” என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவிற்கு உறுப்பினர்களை நியமித்தார் ஜனாதிபதி

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நியமித்துள்ளார்.

ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பனவின் தலைமையிலான கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவில் மேலும் ஆறு உறுப்பினர்களும் அங்கம் வகிக்கின்றனர்.

திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, நீர்வழங்கல் அமைச்சின் செயலாளர் கலாநிதி பிரியத் பந்துவிக்ரம, இலங்கை முதலீட்டு சபையின் முன்னாள் தலைவர் சாலிய விக்ரமசூரிய ஆகியோரும் இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

OREL Corporation-இன் தலைவரும் முகாமைத்துவ பணிப்பாளருமான குஷான் கொடித்துவக்கு, Mercantile Investments and Finance நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஜெராட் ஒன்டாச்சி, மெக்லரன்ஸ் குழுமத்தின் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான ரொஹான் டி சில்வா ஆகியோரும் துறைமுக நகர ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.