சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு இணைய வழியில் அச்சுவேலி பொதுச்சந்தை கட்டிட திறப்புவிழா – ரெலோ தவிசாளர் நிரோஷ்

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையினால் அச்சுவேலி பொதுச் சந்தையில் புதிதாக அமைக்கப்பட்ட பிரதான பொதுச்சந்தைக் கட்டடம் நாளை திங்கட்கிழமை (10),

காலை 10 மணிக்கு இணைய நேரலையில் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்படவுள்ளதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளரும் ஆன தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

பிரதேச சபையின் சபை நிதியில் 10 மில்லியன் ரூபா செலவிடப்பட்டு கடந்த வருடம் குறித்த அடிக்கல் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் சபையின் உறுப்பினர்கள்,

உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் பங்கேற்புடன் கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணக்கையினருடன் நாட்டிவைக்கப்பட்டது.

தற்போது தனியார் கட்டிடம் ஒன்றில் சந்தை நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன.

எனினும் குறித்த தனியாரின் கட்டிடமும் தற்போதைய சுகாதார நிலைமைகளுக்கு ஏற்பாடு உடையதல்ல என பொது சுகாதார அதிகாரி பணிமனையினால்,

எமக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து பிரதேச சபையினால் புதிதாகக் கட்டப்பட்ட கட்டிடம் அவசர அவசரமாக திறந்துவைக்கப்படுகின்றது.

புதிய கட்டிடம் திறந்துவைக்கப்படும் சந்தர்ப்பத்தில் மேலும் சமூக இடைவெளியுடன் சந்தையினை நடாத்திச்செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இத் திறப்புவிழா குறித்து தவிசாளர் கருத்துத் தெரிவிக்கையில், வலிகாமம் கிழக்குப் பிரதேசம் 18 ஆயிரம் விவசாயிகள் உள்ளனர்.

இந் நிலையில் அச்சுவேலிச் சந்தையே பிரதான சந்தையாகவுள்ளது. எனவே மிகவும் விமர்சையாக பலரும் அழைக்கப்பட்டு திறப்புவிழா மேற்கொள்ளப்படவேண்டும் எனவே விரும்பியிருந்தோம்.

எனினும் தற்போதைய சுகாதார நிலைமைகளைக் கருத்தில் கொண்டு எவரும் நேரில் அழைக்கப்படாது இணைய வழி திறப்பு விழாவாக சந்தை திறந்துவைக்கப்படுகின்றது.

இவ் அசௌகரியங்களை சகலரும் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

zசந்தைத்திறப்பு விழா நேரலையில் பிரதேச சபையின் முகப்புத்தகம் மற்றும் ஏனைய இணையவழி முறைமைகளின் ஊடாகவும் அரசியல் தலைமைகள்,

பிரதேச சபையின் உறுப்பினர்கள், அதிகாரிகள், சிவில் அமைப்புக்கள், சனசமூகநிலையங்கள், சந்தை வியாபாரிகள்,

பிரதேச மக்கள் என யாவரும் பங்குகொள்ள முடியும் என அவர் தெரிவித்தார்.

ஈழத் தமிழினத்தினைப் பலப்படுத்தவேண்டிய தார்மீக கடமை தமிழ்நாட்டுக்கு உண்டு!

தமிழகத்தில் நடைபெற்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று இன்று பதவி ஏற்கும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழக (தி.மு.க) அரசிற்குப் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் சார்பாகவும், ஈழத்தமிழர் சார்பாகவும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். தமிழகத்தின் முதல்வராக முதன்முறையாகப் பதவியேற்கும் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு விசேடமாக எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம் எனப் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தினர் அவருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளனர். ஈழத் தமிழினத்தினைப் பலப்படுத்தவேண்டிய தார்மீக கடமை தமிழ்நாட்டுக்கு உண்டு எனவும் குறித்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது .

வெள்ளிக்கிழமை(07) புதிதாகப் பதவியேற்றுள்ள தமிழக முதலமைச்சருக்கு மேற்படி பேரெழுச்சி இயக்கத்தின் சார்பாக அதன் ஒருங்கிணைப்பாளர்களான தவத்திரு வேலன் சுவாமிகள், எஸ். சிவயோகநாதன் மற்றும் வணபிதா கந்தையா ஜெகதாஸ் ஆகியோர் இணைந்து கையெழுத்திட்ட கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தாங்கள் பதவி ஏற்றதும் தி.மு.க தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஈழத் தமிழர் நல்வாழ்வு எனும் தலைப்பின் கீழ் முன்மொழியப்பட்ட இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், இனப்படுகொலை ஆகியவை குறித்துச் சுதந்திரமானதும், நம்பகத்தன்மை வாய்ந்ததுமான சர்வதேச விசாரணையை மேற்கொள்ள இந்திய அரசு உலக நாடுகளை வலியுறுத்திச் செயற்படுத்த வேண்டுமென மத்திய அரசை தி.மு.க. கழகம் தொடர்ந்து வலியுறுத்தும் மற்றும் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முழுவதும் நீர்த்துப்போன அரசியல் அதிகாரப் பங்கீடுகளே அனுமதிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள தமிழர்களின் விருப்பத்திற்கேற்றவாறு நிரந்தரமான அரசியல் தீர்வு அமைய இலங்கையில் உள்ள தமிழர்கள் மற்றும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களிடையே ஐ.நா. சபையின் மேற்பார்வையில் பொதுவாக்கெடுப்பு நடத்தவும், இலங்கையில் புதிதாக உருவாகவுள்ள அரசியல் அமைப்புச் சட்டத்தில் முழுமையான அதிகாரங்கள் தமிழர்களுக்குக் கிடைத்திடும் வகையில் சட்டப் பிரிவுகளை உருவாக்கவும் இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வேண்டும் என மத்திய அரசை தி.மு.க. கழகம் தொடர்ந்து வலியுறுத்தும் ஆகிய அம்சங்களுடன் ஈழத்தமிழர் தொடர்பான மற்றைய வாக்குறுதிகளிலும் விசேட கவனம் செலுத்துமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

ஆண்டாண்டு காலமாகத் தாய்த் தமிழக தொப்புள்கொடி உறவுகளுக்கும், ஈழத்தமிழருக்கும் இடையில் காணப்படும் பண்பாட்டு மற்றும் கலாசார ரீதியான இறுக்கமான உறவே தமிழ்த்தேசியத்தின் உறுதியான வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும்.

ஈழத்தமிழினத்தின் உறுதியும், பலமுமே இந்திய தேசத்தின் தென்கோடிக் கரையினதும், தமிழகத்தினதும் பாதுகாப்பிற்கு இன்றியமையாதது என்பதனை மீண்டும் இவ்விடத்தில் கோடிட்டுக் காட்டுவதுடன் அந்நிலை மீண்டும் உருவாவதற்கு ஈழத் தமிழினத்தினை பலப்படுத்தவேண்டிய தார்மீக கடமை தமிழ்நாட்டுக்கு உண்டு என்பதை உரிமையுடன் வலியுறுத்த விரும்புகின்றோம்.

தங்களின் ஆட்சிக் காலத்தில் தமிழகம் மென்மேலும் வளர்ச்சியுறவும், ஈழத்தமிழினத்தினுடனான உறவு வலுப்பெறவும் எதிர்பார்த்திருக்கின்றோம். தற்போது காணப்படும் கொவிட்- 19 பேரிடரிலிருந்து தமிழகம் மிக விரைவில் மீண்டுவர நாமும் பிரார்த்திக்கின்றோம் எனவும் அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாடு வாழ் தமிழர் நலன் என்ற பெயரில் அமைச்சக பெயர் மாற்றம் : மு. க. ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக அமைச்சரவையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்ற பெயரில் ஒரு அமைச்சகம் செயல்பட்டு வருகிறது தற்போது இந்த அமைச்சகத்தின் பெயர் மாற்றம் நடைபெற்று இருக்கிறது.

தமிழக அமைச்சரவையில் சில துறைகளின் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

‘தமிழகத்திலுள்ள அமைச்சகங்கள், துறைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் இன்றுள்ள சூழலில் மிகுந்த மாற்றங்களை அடைந்துள்ளன. மக்களின் எதிர்பார்ப்பு, பணியாளர்கள் நலன், எதிர்கொள்ளும் சவால்கள், நிர்ணயிக்கப்படும் அரசின் இலக்குகள் ஆகியவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு சில அமைச்சகங்களின் பெயர்களையும், துறைகளின் பெயர்களையும் தொலைநோக்குப் பார்வையோடு மாற்றியமைக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அந்தவகையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்கிற துறை ‘வெளிநாடு வாழ் தமிழர் நலன்’ என்று பெயர் மாற்றம் அடைகிறது. உலகெங்கும் பரவியுள்ள தமிழர்களுடனான தாயகத் தமிழர்களின் உறவை மேம்படுத்தவும், வெளிநாடு வாழ் தமிழ் குடும்பங்களிடமும், அவர் தம் வருங்கால தலைமுறையினரிடமும் தமிழைக் கொண்டு சேர்த்து வளப்படுத்தும் நோக்கத்துடன் இப்பெயர் மாற்றம் நடைபெற உள்ளது. இனி தமிழும், தமிழகமும் வெல்லும்.

உலக அளவில் கடைப்பிடிக்கப்படும் உயர்ந்த செயல்பாடுகளை மனதில் வைத்து தமிழக அரசு ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்கிற சிறந்த நோக்கத்தின் அடிப்படையில் இந்தப் பெயர் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இவை பெயர் மாற்றமாக இல்லாமல், செயல்பாட்டிலும் மிகப்பெரிய மாற்றங்களை திட்டங்களாக கொண்டு செயல்பட தூண்டுகோலாக இருக்கும்.’என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திமுக சார்பில் செஞ்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செஞ்சி கே எஸ் மஸ்தான், சிறுபான்மையினர் நலம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சராக பதவி ஏற்றிருக்கிறார்.

Posted in Uncategorized

யாழ். மாவட்டத்தில் ஒரே தொகுதியில் 17,603 பேரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்!

யாழ்ப்பாணம் மாவட்டம் காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் 17 ஆயிரத்து 603 பேரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வாக்காளர் சரிவு யாழ். மாவட்டத்தில் நாடாளுமன்ற ஆசனம் உள்ளிட்ட பலவேறு விடயங்களில் தாக்கம் செலுத்தும் என தெரிவிக்கப்படுகிறது.

2020ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் இறுதிசெய்யப்பட்டு கடந்த 30ஆம் திகதி வெளியிடப்பட்டது.

இதன்போது, கடந்த 2019ஆம் ஆண்டு பட்டியலில் நான்கு இலட்சத்து 79 ஆயிரத்து 584 பேர் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டிருந்தனர். தற்போது புதிய பட்டியலில் நான்கு இலட்சத்து 69 ஆயிரத்து 823 ஆக வாக்காளர் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.

முக்கியமாக, காங்கேசன்துறை தேர்தல் தொகுதிக்கு உட்பட்ட உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ளடங்கும் 21 கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களிள் பெயரு் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டதில் 21 ஆயிரத்து 905 பேரின் பெயர் நீக்கப்பட்டது.

இதையடுத்து, குறித்த மக்கள் எந்தப் பிரதேசத்தில் வசித்தாலும் தமது பதிவுகளை மேற்கொள்ளுமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவித்ததுடன் யாழ்ப்பாண மாவட்டத் தேர்தல் திணைக்களம் சிறப்பு நடவடிக்கைகள் சிலவற்றையும் முன்னெடுத்திருந்தது.

அத்துடன், பெயர் நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு வாக்காளர் பதிவு விண்ணப்பங்கள் கையளிக்கப்பட்டன. அத்துடன், பொது அமைப்புக்கள், கிராம சேவையாளர்கள் ஊடாகப் பதிவுக்கான கோரிக்கைகள் அனுப்பப்பட்டன.

இதனடிப்படையில், பெயர் நீக்கம் செய்யப்பட்ட 21ஆயிரத்து 905 பேரில் வெறும் நான்காயிரத்து 302 பேர் மாத்திரமே தமது பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.

இதனால், பதிவுகளை மேற்கொள்ளாத 17ஆயிரத்து 603 பேரின் பெயர், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் உள்ளடங்கும் கிளிநொச்சியில் கடந்த 2019ஆம் ஆண்டு 92ஆயிரத்து 264 பேர் வாக்காளராகப் பதிவாகியிருந்த நிலையில், 2020ஆம் ஆண்டு 93 ஆயிரத்து 370 பேராக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இன்று (08) முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள்

நாட்டின் 5 மாவட்டங்களில் மேலும் 21 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் – கொடிகாமம் மத்தி மற்றும் கொடிகாமம் வடக்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கம்பஹா மாவட்டத்தின் வத்தளை பொலிஸ் பிரிவில் கெரவலப்பிட்டிய, வத்தளை, ஹேக்கித்த, பள்ளியாவத்த தெற்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மாபாகே – கெரங்கபொக்குன , கலஉடுபிட்ட, மத்துமகல ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

களுத்துறை மாவட்டத்தில் மஹவஸ்கடுவ வடக்கு, நாகொட தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள விஜித மாவத்த, வித்தியாசார கிராம உத்தியோகத்தர் பிரிவில் போசிறிபுற பகுதியும், யட்டதொலவத்த மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் கொரட்டுஹேன கிராமமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.

இதேவேளை, காலி மாவட்டதின் ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்கல 01, கொக்கல 02, மீகஹகொட,
மலியகொட, பியதிகம மேற்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்று அதிகாலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டத்திலுள்ள பிலியந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிவன்திட்டிய, மாப்பே கிழக்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, மஹரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரோவ்வல மேற்கு இன்று அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதேவேளை, அம்பாறை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

அம்பாறை – உஹன பொலிஸ் பிரிவிலுள்ள குமாரிகம கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

குருநாகல் மாவட்டத்தின் குளியாபிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 82 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் 63 பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

ஏனைய 19 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் என இராணுவத் தளபதி கூறினார்.

Posted in Uncategorized

அத்துமீறி நுழைவதைத் தடுப்பதற்கு நல்லூர் பின்வீதியில் ஆதனத்தைச் சுற்றி வேலியடைப்பு!

யாழ். மாநகர சபையின் அனுமதி பெறாமல், சபைக்குரிய ஆதனத்தை அத்துமீறிப் பயன்படுத்தும் செயற்பாடுகளைத் தவிர்க்கும் வகையில் நல்லூர் பின் வீதியில் உள்ள ஆதனம் ஒன்று அறிக்கைப்படுத்தப்பட்டுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பின் பகுதியில் பருத்தித்துறை வீதியில் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன்பாக உள்ள யாழ். மாநகர சபைக்குச் சொந்தமான ஆதனம் காணப்படுகின்றது.

குறித்த ஆதனம், இதுவரை காலமும் அறிக்கையிடப்படாமல் திறந்த வெளியாகக் காணப்பட்டது.

அத்துடன், இந்த ஆதனத்தைச் சில வர்த்தக நிறுவனங்கள் மாநகர சபையின் அனுமதியுடன் உரிய குத்தகைப் பணம் செலுத்தி தமது பொருட்களின் வியாபார மற்றும் விளம்பர நோக்கங்களுக்குப் பயன்படுத்தின.

இதேவேளை, குறித்த ஆதனத்தை சிலர் அத்துமீறிப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில், அந்த ஆதனத்தை அறிக்கைப்படுத்திப் பாதுகாக்கும் நோக்குடன் யாழ். மாநகர சபையின் அனுமதியின்றி யாரும் உட்செல்ல முடியாதவாறு ஆதனத்தைச் சூழ முட்கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

யாழில் இடம்பெறவிருந்த அரச வெசாக் தினம் நிறுத்தம்

யாழ்ப்பாணம் – நயினாதீவு நாக விகாரையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த தேசிய வெசாக் நிகழ்வு இரத்து செய்யப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைய நிகழ்வு இரத்து செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் ஒரு வாரத்தை அரச வெசாக் வாரமாக முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்ததுடன், பிரதான நிகழ்வை யாழ்ப்பாணம் நயினாதீவில் நடத்த புத்தசாசன அமைச்சு திட்டமிட்டிருந்தது.

தற்போது நிலவும் கொரோனா நிலையை கருத்திற்கொண்டு வெசாக் பண்டிகையை வீடுகளிலேயே கொண்டாடுமாறு புத்த சாசன அமைச்சின் செயலாளர் கபில குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

சிறிசபாரட்ணம் நினைவேந்தல் காணிக்காரர் விடுவிப்பு தவிசாளர் நிரோஷிடம் பொலிஸார் வாக்குமூலம்

நினைவேந்தலுக்கும் காணி உரிமையாளர்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என ரெலோவின் யாழ் மாவட்டப்பொறுப்பாளரும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சென்று தெரிவித்ததனை அடுத்து சிறிசபாரட்ணத்தின் நினைவேந்தல் இடம்பெற்ற காணி உரிமையாளர் பொலிஸ் நெருக்குவாரங்களில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

கடந்த வியாழக்கிழமை (6-05-21) தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மறைந்த தலைவர் சிறிசபாரட்ணத்தின் 35 ஆவது நினைவு தினத்தினை அவர் மறைந்த இடமான கோண்டாவில் அன்னங்கை தோட்டவெளியில் அனுஸ்டித்தனர். ஒவ்வொரு ஆண்டும் அனுஷ்டிக்கப்படும் குறித்த இடம் தனியாருக்குச் சொந்தமான காணி ஆகும். எனினும் நினைவேந்தல்கள் மேற்கொள்வதை தடைசெய்யும் முகமாக குறித்த தோட்டங்களுக்குச் செல்லும் பாதைகள் அடைக்கப்படவேண்டும் என ஏற்கனவே காணி உரிமையாளர்களுக்கு புலனாய்வாளர்களால் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வந்தன.

இந் நிலையில் கடந்த 5 ஆம் திகதி குறித்த இடம் சிரமதானம் மூலமாக சுத்திகரிப்பட்டதையடுத்து புலனாய்வுத்துறையினரின் அழுத்தங்கள் காரணமாக காணி பராமரிப்பாளர்களால் அஞ்சலி நடைபெறும் இடம் வேலி மூலம் அடைக்கப்பட்டிருந்து. இவ்வாறு அடைக்கப்பட்டிருந்த இடத்தில் பாதை வடிவில் காணப்பட்ட இடத்தினைத் திறந்து வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் அஞ்சலி செலுத்த சென்றிருந்தார்.

அதனைத் தொடர்ந்து அங்கு வருகைதந்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் குறித்த இடத்தில் அஞ்சலித்திருந்தனர். இந்நிலையில் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு குறித்த காணியின் பங்கினைக் கொண்ட உள்நாட்டில் உள்ள பராமரிப்பாளர் அழைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வாக்குமூலங்கள் பெறப்பட்டன.

தொடர்ச்சியாக பொலிஸ் நிலையத்தில் காணி பராமரிப்பாளர் இருநாட்களாக பொலிஸ் நிலையத்திற்கு அலைக்கழிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் தவிசாளருக்கு தொலைபேசி வாயிலாக தான் நிலைமையினை அறிவித்தார். இதனையடுத்து கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற தவிசாளர் நினைவேந்தல் விடயத்திற்கும் இவர்களுக்கும் எதுவித தொடர்புகளும் கிடையாது எனத் தெரிவித்தனை தொடர்ந்து காணிப்பராமரிப்பாளர் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டார்.

இதேவேளை கடந்த மாவீரர் தினத்திற்கு முன்பாகவும் மாவீரர் துயிலும் இல்லத்தினைச் சூழவுள்ள காணிகளில் யாரும் அஞ்சலிக்காதவாறு காணி உரிமையாளர்களுக்கு நெருக்கடிகள் பிரயோகிக்கப்பட்டதுடன் திறந்திருந்த காணிகள் இராணுவத்தினரால் மூடி அடைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தனியார் காணிக்குள் நுழைந்து அஞ்சலித்தமை மற்றும் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறியமை தொடர்பாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மாவட்ட பொறுப்பாளரும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை தவிசாளருமான தியாகராஜா நிரோஷிடம் கோப்பாய் பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை இரவு (7) வாக்குமூலம் ஒன்றைப்பதிவு செய்துள்ளனர்.

தவிசாளர் பொலிஸ் நிலையம் சென்றமையை அறிந்து யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணன் மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி வி. திருக்குமரன் தேவையான சட்ட உதவி தெடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று ஆராய்ந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

தமிழக முதல்வராக பதவியேற்றார் மு.க.ஸ்டாலின்

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று (07) பதவியேற்றார்.

தமிழக முதல்வராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றதை தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

சென்னை கிண்டி ராஜ்பவனில் இன்று காலை பதவியேற்பு விழா எளிமையான முறையில் நடைபெற்றதாக தமிழக செய்திகள் தெரிவித்துள்ளன.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முதல்வருக்கான பதவியேற்பு உறுதி மொழியையும் இரகசிய காப்பு உறுதிமொழியையும் செய்து வைத்தார்.

‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான்’ என ஆரம்பித்து தமிழில் பதவியேற்பு உறுதிமொழியை வாசித்தார்.

தமிழக முதல்வர் பதவியேற்றதை தொடர்ந்து துரைமுருகன் உள்ளிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 33 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய ஆட்சிப் பணி, உள்துறை, காவல், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறைகளுக்குப் பொறுப்பேற்றார்.

கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான துரைமுருகன் நீர்ப்பாசனம், சட்டமன்றம், கனிமம் மற்றும் சுரங்கத் துறை அமைச்சராகப் பதவியேற்றார்.

உயர் கல்வித்துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல், தொழிற்கல்வி, மின்னணுவியல் அமைச்சராக பொன்முடி பதவியேற்றார்.

அனிதா ராதாகிருஷ்ணன் மீன் வளம், மீனவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்தார்.

கயல்விழி செல்வராஜ் ஆதி திராவிடர் நலன், மலைவாழ் பழங்குடியினர், கொத்தடிமைத் தொழிலாளர் நலன் அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.

கொரோனா கட்டுப்பாடு காரணமாக சுமார் 500 பேரே பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.

பதவியேற்பு விழாவில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அத்துடன், திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வைகோ, திருமாவளவன், ப.சிதம்பரம் ஆகியோரும் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

பதவியேற்பு விழாவையடுத்து, ஆளுநர், முதல்வர் மற்றும் புதிய அமைச்சர்களுக்கு ராஜ்பவனில் தேநீர் விருந்து அளிக்கப்பட்டதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

முதல்வராக பதவியேற்றபின் மு.க.ஸ்டாலின், கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று தன் தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றுக்கொண்டதுடன், தன் தந்தையும் முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதியின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி ஆசி பெற்றார்.

தமிழக முதல்வருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளதுடன், ஆதரவாளர்கள் பட்டாசு கொளுத்தி கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்

இந்நிலையில், மு.க.ஸ்டாலின் 5 முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

இதனடிப்படையில், கொரோனா நிலைமையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில், குடும்ப அட்டைகளைக் கொண்டுள்ள அனைவருக்கும் 2 ஆயிரம் இந்திய ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

அத்துடன், தமிழகம் முழுவதும் சாதாரணக் கட்டண நகரப் பஸ்களில், பெண்களுக்கு இலவசப் பயணம் மேற்கொள்ள சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், தமிழகம் முழுவதும் இயங்கும் அரசின் சாதாரண கட்டண நகர பஸ்களில் அனைத்து பெண்களும் கட்டணமின்றியும் பஸ்களுக்கான பயண அட்டை இன்றியும் நாளை முதல் பயணிக்க முடியும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவோரின் சிகிச்சைக் கட்டணத்தை மாநில அரசே காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஏற்க ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.

மேலும், பசும்பாலின் விலை ஒரு லிட்டருக்கு 3 ரூபா வீதம் குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

ரெலோ முன்னாள் தலைவர் ஸ்ரீசபாரெத்தினத்தின் 35வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு!

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீசபாரெத்தினம் அவர்களின் 35வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு நேற்றைய தினம் மட்டக்களப்பில் அமைந்துள்ள தமிழ் ஈழ விடுதலை இயக்க காரியாலயத்தில் அதன் உபதலைவரும், கிழக்கு மாகாணசபை முன்னாள் பிரதித் தவிசாளருமான இந்திரகுமார் பிரசன்னா தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை பிரதி மேயர் க.சத்தியசீலன், மண்முனை தென் எருவில் பற்றுப் பிரதேச சபைத் தவிசாளர் ஞா.யோகநாதன், மாநகரசபை உறுப்பினர்களான த.இராஜேந்திரன், சீ.ஜெயந்திரகுமார், பு.ரூபராஜ், ச.கமலரூபன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது மறைந்த தலைவரின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து, ஈகைச் சுடரேற்றப்பட்டதுடன், தலைவருடன் இணைந்து மறைந்த அத்தனை இயக்க உறுப்பினர்களுக்குமாக அகவணக்கம் செலுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.