பேரம் பேசும் இணக்க அரசியல் வேண்டாம் – திடசித்தத்துடன் முன் நகர்வோம் – யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை

பேரம் பேசும் இணக்க அரசியல் வேண்டாம் – திடசித்தத்துடன் முன் நகர்வோம் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சிறிலங்காவின் அரச தலைவரைத் தேர்வு செய்யும் தேர்தல் தொடர்பான பேச்சுக்கள் முனைப்புப் பெற்றுள்ள நிலையில், கட்டமைக்கப்பட்ட இனவழிப்புப் பொறிமுறைகளிற்குள் (Structural Genocide) சிக்குண்டு இனவிடுதலை வேண்டி நிற்கும் ஈழத்தமிழ் மக்கள் தமது அரசியல் விடுதலைப்பயணத்தில் இத்தேர்தல் களத்தினை தங்கள் நலன்சார்ந்து எவ்வாறானதாகக் கையாள வேண்டும் என்பதில் கடந்த கால அனுபவங்களைப் பரிசீலனை செய்து இனியாவது சுதாகரித்து முன்நகர வேண்டிய அவசிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

2009 இற்குப் பின்னரான 15 ஆண்டுகள் காலத்தில் சாணக்கியம், ராஜதந்திரம் என்னும் பெயரில் வெற்று வாக்குறுதிகளை மாத்திரமே நம்பி தமிழ்த் தரப்புக்களால் முன்னெடுக்கப்படும் பேரம் பேசும் இணக்க அரசியலினால் தமிழினவழிப்பிலிருந்து தாயகத்தின் ஒரு அங்குல நிலத்தையேனும் காப்பாற்ற முடியவில்லை என்பதோடு, தமிழ் மக்களும் தமிழ்த் தேசிய அரசியற்கட்சிகளும் உதிரிகளாக்கப்பட்டுள்ளமையும் அது உளவியல்ரீதியில் தோல்வி மற்றும் அடிமைத்துவ மனநிலையினை மக்களிடையே விதைப்பதிலுமே வெற்றியடைந்துள்ளது.

1. ஈழத்தமிழ் மக்களை அரசியற்படுத்தி அணிதிரட்டுதல்.

2. போரிற்குப் பின் மக்களிடையே உள்ள தோல்வி மனோநிலையினை அகற்றுதல்.

3. வடக்கு – கிழக்கிற்கான பொருளாதாரக் கட்டமைப்பை நிறுவுதல்.

4. அரசற்ற தரப்பாக பன்னாடுகளைக் கையாள்வதற்கான வெளிவிவகாரக் கொள்கை மற்றும் கட்டமைப்பை உருவாக்குதல்.

5. பன்னாட்டுச் சமூகத்தில் கூட்டாகத் தமிழரின் குரலை முன்வைத்தல்.

6. வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படும் தொடர்ச்சியான கட்டமைக்கப்பட்ட இனவழிப்பினை தடுத்துநிறுத்துதல்.

7. அதிகாரப்பகிர்வோடு எவ்விதத்திலும் தொடர்பற்ற சிறிலங்கா ஒற்றையாட்சி அரசியலமைப்பிற்குட்பட்ட 13ஆம் திருத்தத்திற்கு அப்பால் தமிழ் அரசியலை நகர்த்துதல்.

ஓர் அரசற்ற தரப்பாக எமது தமிழ்ச் சமூகத்தினால் அடைந்து கொள்ளப்பட்டிருக்க வேண்டிய மேற்குறிப்பிட்ட விடயங்களெதனையும் சாதித்திராத தமிழ் அரசியற் தரப்புக்கள் தொடர்ந்தும் பேரம் பேசும் அரசியலால் இனியும் எதையாவது சாதிக்கும் என்பதில் நம்பிக்கையில்லை. தமிழ் அரசியற்கட்சிகளும், குடிமக்கள் சமூகத்தினரும் (Civil Societies) தமிழ் மக்களின் பின்நோக்கிய இந்நிலையிலாவது தம்மைச் சுதாகரித்துக் கொண்டு தமிழ் அரசியலின் பாதையினை மீளச் சரிவர தகவமைத்துக் கொள்ள வேண்டும்.

கடந்த 2010, 2015, 2019 ஆண்டுகளில் நடைபெற்ற சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தல்களில் இனப்படுகொலைப் பொறுப்பாளிகளான ஒரு தரப்பினரை எதிர்ப்பதாகக் கூறி, இனப்படுகொலைக் குற்றத்தைப் புரிந்த சிறிலங்காவின் இராணுவத் தளபதி, பதில் பாதுகாப்பு அமைச்சர், போர்க்குற்றம் புரிந்த பெருமளவான இராணுவத்தினரின் ஆதரவினைப் பெற்ற நபர்களுக்கே வாக்களிப்பதற்குப் பரிகார நீதி கோரக்கூடிய தமிழ் மக்கள் தவறாக வழிநடாத்தப்பட்டோம்.

இனியாவது ஏமாற்று கபட அரசியலிற்குப் பலியாகாமல், தமிழ் மக்களின் வாக்குகள் சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் முகவர்களுக்கோ, வெளித்தரப்புக்களுக்கோ சென்றுசேர்வதைத் தவிர்த்து, தமிழ் மக்களின் அரசியல் வேணவாக்களைப் பிரதிபலிக்கும் தீர்மானங்களை தமிழ் அரசியற் தரப்புக்கள் மேற்கொள்ளத் தவறுமேயானால் நாம் அரசியல் பிழைத்த மக்களாக்களாக்கப்படுவோம்.

சமகால அரசியற் களச்சூழலில் தமிழ் மக்களின் முன்னால் உள்ள தெரிவுகள்,

1. சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தலைப் புறக்கணித்தல்.

2. சிறிலங்காவின் அரச தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் என்ற அடிப்படையில் தற்போது எதிர்பார்க்கப்படும் தேர்தலை நிராகரித்து, அத்தேர்தலை நடைமுறையில் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்கான அறைகூவல் விடுக்கும் பொதுவாக்கெடுப்பாகக் கைளாளும் வகையில் தமிழ்ப் பொதுவேட்பாளரை நிறுத்துதல்.

சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தலைப் புறக்கணித்தல் மற்றும் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துதல் இரண்டும் ஒரே கருத்தியலின் இருவேறுபட்ட பிரயோக வடிவங்களே! தமிழர்களால் அளிக்கப்படாத வாக்குகள் மற்றும் பொதுவேட்பாளருக்கு வழங்கப்படும் வாக்குகள் என இரண்டுமே சிங்கள – பௌத்த பெருந்தேசியவாதத்தின் முகவர்களை நிராகரிக்கும் வாக்குகளேயாகும்.

பொதுவேட்பாளர் தொடர்பில் தீர்க்கமான முடிவுகள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில், பின்வரும் விடயங்களில் கூடுதல் கவனம் செலுத்த தமிழ் மக்கள் உள்ளிட்ட தொடர்புபட்ட தரப்புக்கள் அனைவரையும் வலியுறுத்துகின்றோம்.

1. சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தலைப் புறக்கணிப்பதனாலோ, தமிழ்ப் பொதுவேட்பாளரை நிறுத்துவதனாலோ சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் முகவர் எவர் வென்றுவிடக் கூடும் எனும் கேள்வி பொதுவில் அனைவரிடமும் எழக்கூடியதொன்று. ஆனால், அரசியல் விடுதலை வேண்டும் சமூகமாக எமக்கு எது தேவை? எமது நிலைப்பாடு என்ன? என்பதுவே நாம் அக்கறை கொள்ளவேண்டியது. அதன் பக்க விளைவுகளைப் பற்றியல்ல.

2. பொதுவேட்பாளரை நிறுத்துதல் என்பது எதிர்வரும் சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தலைத் தமிழ் மக்களின் வேணவாக்களைப் பிரதிபலிக்கும் தேர்தல் ஒன்றாக மாற்றுவதேயாகும். ஆகவே, பொதுவேட்பாளர் எனும் எண்ணக்கரு நடைமுறையில் வெற்றி – தோல்விகளுக்கு அப்பாற்பட்டதாகும்.

3. பொதுவேட்பாளர் தமிழ் மக்களின் இதுவரைகால வேணவாக்களை பிரதிபலிக்க வேண்டுமேயன்றி, குறிப்பிட்ட சில தரப்புக்களின் அரசியல் நலன்களையல்ல.

4. பொதுவேட்பாளர் தமிழ் மக்களின் குறியீடாக நிறுத்தப்பட வேண்டும். முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தை அடையாளப்படுத்தும் வகையில் கிழக்கிலிருந்து வேட்பாளர் தேர்வு நடைபெற வேண்டும். அவ்வேட்பாளர் பெண்ணொருவாராக இருப்பின் உத்தமம்.

5. தமிழ்மக்களின் வாக்குகள் என்பது அவர்தம் வேணவாக்களைச் உறுதிபடச் சொல்வதற்கேயன்றி பேரங்கள் பேசுவதற்கல்ல. ஆகவே இரண்டாம், மூன்றாம் விருப்பு வாக்குகள் என்ற பேச்சுக்களுக்கே இடமளித்தல் கூடாது.

6. பொதுவேட்பாளராக நிறுத்தப்படும் நபர் அரசியல்வாதியல்லாதவராக இருப்பதோடு, தேர்தலின் பின்னர் அந்நபர் எந்தவொரு அரசியல் கட்சியுடனும் இணைந்து செயற்படுவதோ, தேர்தல் அரசியலில் ஈடுபடுவதோ தவிர்க்கப்பட வேண்டும் என்பது முன்நிபந்தனையாக்கப்பட வேண்டும்.

மேற்படி விடயங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழ்மக்களின் வாக்குகள் இத்தேர்தலிலாவது அவர்களின் உரிமைக்குரலாகப் பிரயோகிக்கப்பட வேண்டும். மேற்கண்ட தெரிவுகளில் தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் குடிமக்கள் சமூகத்தினர் உள்ளிட்ட அனைவரும் இணைந்து கூட்டாகத் தீர்மானமொன்றினை மேற்கொள்ளும் பட்சத்தில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரிப்பதற்கும் இணைந்து பயணிப்பதற்குமான எமது உடன்பாட்டினை மாணவர் சமூகமாக நாம் வெளிப்படுத்துகின்றோம்.

தமிழ் மக்களின் வாக்குகள் சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் முகவர்களுடனான பேரம் பேசலுக்காகப் பலியாக்கப்படாது. தமிழ்மக்களின் நலன்களைக் கருத்திற்கொண்டு, தமிழ் அரசியற்கட்சிகள் மற்றும் குடிமக்கள் சமூகத்தினர் ஒன்றுபட்டுத் தீர்க்கமான முடிவொன்றினைத் திடசித்தத்துடன் மேற்கொள்வதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் சமூகமாக வலியுறுத்தி நிற்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு இணைந்த தேச அரசியலை மக்கள் மயமாக்கும் செயற்பாட்டை துரிதப்படுத்த வேண்டும் – அருட்தந்தை மா.சக்திவேல்

இணைந்த வடக்கு கிழக்கிற்கான, தேச அரசியலலை மக்கள் மயமாக்கும் செயற்பாட்டை துரிதப்படுத்துவது காலத்தின் கட்டாயம் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் வலியுறுத்தியுள்ளார்.

இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

இறுதி யுத்தக் காலப்பகுதியில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் படுகொலை செய்யப்பட்டதாகவும் யுத்தமற்ற காலப்பகுதியில் இனவாத வன்முறைகளால் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அருட்தந்தை மா.சத்திவேல் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் மே மாதம் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் பொது சுடர் ஏற்றப்பட்டு உணர்வு பூர்வமாக நினைவேந்தல் நடத்தப்பட்டபோது கிழக்கின் பல இடங்களில் பொலிசார் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டதோடு தாக்குதலும் நடத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேரினவாதிகளின் தொடர் வன்முறைகளுக்கு பலத்த எதிர்ப்பை அருட்தந்தை மா.சத்திவேல் வெளியிட்டுள்ளார்.

சர்வதேச மன்னிப்பு சபையின் செயலாளர் நாட்டில் இருக்கும் போதே இனவாத அரசின் கைக்கூலிகளான பொலிசார் கிழக்கில் தாக்குதலை மேற்கொண்டு கிழக்கை வடக்கோடு இணைய விடமாட்டோம் என்ற செய்தியை சர்வதேசத்துக்கு கூறி உள்ளதாகவும் அருட்தந்தை மா.சத்திவேல் குறிப்பிட்டுள்ளார்.

நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தலாம் என ஜனாதிபதி அறிவித்த பின்னரும் கிழக்கில் நான்கு பேரை பொலிசார் கைது செய்திருந்தாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே கிழக்கும் வடக்கும் இணைந்த தேச அரசியலை மக்கள் மயமாக்கும் செயற்பாட்டை துரிதப்படுத்துவதே காலத்தின் கட்டாயம் என தமிழ் தேசிய கொள்கையாளர்களும் அரசியல்வாதிகளும் உணராவிடின் கிழக்கு மட்டுமல்ல வடக்கும் துண்டாடப்படும் எனவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

Posted in Uncategorized

சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் இலங்கை அரசாங்கம் மீது குற்றச்சாட்டு

நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது இராணுவத்தினரால் மீறப்பட்டுள்ள மனித உரிமை மீறல்களை அரசாங்கம் தொடர்ந்தும் மறுத்துவருவதாக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பசுபிக் இயக்குநர் எலைன்பியர்சன் தெரிவித்துள்ளார்.

இறுதிக்கட்ட யுத்ததின் போது கொல்லப்பட்டவர்களையும் காணாமல் ஆக்கப்பட்டவர்களையும் நினைவு கூர்ந்தவர்களை பொலிஸார் அச்சுறுத்தியதுடன் சிலரை தடுத்து வைத்திருந்தாகவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பசுபிக் இயக்குநர் எலைன் பியர்சன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் கடந்த 18ஆம் திகதி வடக்கு கிழக்கில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வுகளை குழப்பும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டதாக எலைன் பியர்சன் மேலும் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட தரப்பினரை மௌனிக்கச்செய்வதற்கே அரசாங்கம் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தக் குற்றச்சாட்டுக்களுக்கு அரசாங்கம் பொறுப்பு கூறவேண்டும் என கடந்த 17 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்ததாகவும் ஆசிய பசுபிக் இயக்குநர் எலைன் பியர்சன் நினைவு படுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் முன்வைத்துள்ள பரிந்துரைகளை வெளிநாட்டு அரசாங்கங்கள்
ஐக்கியநாடுகள் அமைப்புகள் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையின் பொறுப்புக்கூறல் செயற்திட்டத்திற்கான ஆணையை செப்டம்பர் அமர்வில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை புதுப்பிப்பது மிகவும் அவசியம் என தெரிவித்த எலைன் பியர்சன், அந்த குற்றங்களிற்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு உலகெங்கிலும் உள்ள சட்டத்தரணிகள் இந்த ஆதாரங்களை பயன்படுத்துவது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் யாழ் விஜயம் ; பல்கலைக்கழக மருத்துவ பீட புதிய கட்டிடம் திறந்து வைப்பு

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் 46 வருடங்களில் முதன்முறையாக 942 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் தொகுதியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (24) திறந்து வைத்தார்.

யாழ் வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இதன்மூலம் வடக்கில் சிறந்த சுகாதார கட்டமைப்பை உறுதிப்படுத்த முடியும் என யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கான மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக் கட்டிடத்தை இன்று (24) திறந்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்திற்கான மூன்று நாள் விஜயத்திற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்.

உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் வந்திறங்கிய ஜனாதிபதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் வரவேற்றனர்.

இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட கட்டிடத்தை திறந்துவைத்துள்ளதுடன், துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறும் இளைஞர் சேவை மன்ற நிகழ்வு, தந்தை செல்வா கலையரங்கில் நடைபெறும் ஆசிரியர் நியமன நிகழ்விலும் கலந்துகொள்கிறார்.

Posted in Uncategorized

ரெலோவின் யாழ். அலுவலகத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

15 ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ்ப்பாண மாவட்ட பணிமனையில் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் சபா குகதாஸ் அவர்களின் பொதுச் சுடர் ஏற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டது.

கட்சி உறுப்பினர்களின் பங்குபற்றலுடன், முன்னாள் வலி கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் நிரோஸ் முன்னாள் யாழ்ப்பாண மாநகர பிரதி மேயர் ஈசன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

முள்ளிவாய்க்கால் போர்க்களத்தில் இருந்து மீண்டு வந்த போரின் சாட்சியமான சபா குகதாஸ் நினைவுரை ஆற்றினார்.

யுத்தம் முடிந்து 15 வருடங்களாகியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை – பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர்

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள போதிலும், இறந்தவர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதற்கான பதிலைத் தேடிக்கொண்டிருப்பதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு அறிக்கையொன்றை வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2013ஆம் ஆண்டு இலங்கையின் வடக்குப் பகுதிக்கு விஜயம் செய்தபோது, ​​போரினால் ஏற்பட்ட அழிவுகள் குறித்தும், அங்கு போரினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்குவது குறித்தும் கேட்டறிந்ததாகவும், உண்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்காக ஐக்கிய இராச்சியத்தில் ஆதரவை வழங்க உறுதி பூண்டுள்ளதாக தெரிவித்தார்.

இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் நிலைமாறுகால நீதி தொடர்பான சர்வதேச முயற்சிகளுக்கு ஐக்கிய இராச்சியம் தொடர்ந்து தலைமைத்துவத்தை வழங்கும் எனவும் டேவிட் கமரூன் குறிப்பிட்டுள்ளார்.

முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான மக்கள் உணர்வுபூர்வ அஞ்சலி: சர்வதேச மன்னிப்புசபை செயலாளரும் அஞ்சலி

2009 இல் இறுதியுத்தத்தில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூர்ந்து இன்று முள்ளிவாய்க்காலில் உணர்வபூர்வ அஞ்சலி செலுத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.

சர்வதேச மன்னிப்புசபையின் செயலாளர் நாயகம் ஆக்னஸ் காலமர்ட் அவர்களும் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டு, உயிரிழந்தவர்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

 

கடந்த ஓரிரு ஆண்டுகளை விட இம்முறை அதிகளவான மக்கள் நினைவஞ்சலியில் கலந்துகொண்டார். காலை 10.30 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, உயிரிழந்தவர்கள் நினைவாக தீப்பந்தங்கள் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

கண்ணீர், அழுகையென அந்த பகுதியே சோகத்தில் மிதந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், செ.கஜேந்திரன், சி.சிறிதரன் உள்ளிட்டவர்களும் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மிருசுவிலில் 8 தமிழர்கள் படுகொலை: கொலையாளி சிப்பாயை மன்னித்த கோட்டாவுக்கு உயர்நீதிமன்றம் அழைப்பாணை

கடந்த 2000ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மிரிசுவில் பகுதியில் இடம்பெயர்ந்த 5 வயதுக் குழந்தை உட்பட 8 பேர் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட கொடூர குற்றத்திற்காக கொழும்பு மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவை ஜனாதிபதி மன்னிப்பில் விடுவித்தமை தொடர்பில் நீதிமன்றில் தனது தரப்பு உண்மைகளை முன்வைக்குமாறு கோரி அவருக்கு அழைப்பாணை அனுப்புமாறு உயர் நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது.

மாற்றுக் கொள்கை மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்துவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு இன்று யசந்த கோதாகொட மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மனு அழைக்கப்பட்ட நேரத்தில், மனுதாரர் தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதியின் மன்னிப்பின் பின்னர் விடுவிக்கப்பட்ட இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்புமாறு நீதிமன்றில் கோரினார்.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் குழாம், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியது தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.

அத்துடன், மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்ட இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்பின், உண்மைகளை உறுதிப்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட மனுவை செப்டம்பர் 4ஆம் திகதிக்கு அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் 2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி, ஒரு சிறு குழந்தை உட்பட 8 பொதுமக்களை வெட்டிக் கொன்று புதைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட இராணுவ கோப்ரல் சுனில் ரத்நாயக்க மற்றும் ஒரு இராணுவக் குழுவினருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்தார்.

வழக்கு விசாரணையின் பின்னர், குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட சுனில் ரத்நாயக்கவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய பெஞ்ச் மரண தண்டனை விதித்தது.

அதனையடுத்து, சுனில் ரத்நாயக்க, தன்னை மரண தண்டனையிலிருந்து விடுவிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் மேன்முறையீடு செய்திருந்தார்.

மே 20, 2017 அன்று, மேன்முறையீட்டு மனுவை விசாரித்த ஐந்து பேர் கொண்ட உயர் நீதிமன்ற பெஞ்ச், பிரதிவாதி சுனில் ரத்நாயக்கவுக்கு மரண தண்டனை விதித்து, கொழும்பு உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய பெஞ்ச் தீர்ப்பை உறுதி செய்தது.

அதன் பின்னர், மரண தண்டனை விதிக்கப்பட்ட சுனில் ரத்நாயக்க, 2020 மார்ச் 26 அன்று அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் விடுவிக்கப்பட்டார்.

மே 18 ஆம் திகதியை தமிழ் தேசிய துக்க தினமாக அனுஷ்டியுங்கள் – ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு கோரிக்கை

முள்ளிவாய்க்கால் நினைவு தினமான எதிர்வரும் 18 ஆம் திகதியை தமிழர் தாயகமெங்கும் தமிழ் தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்குமாறு ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பில் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு.அகத்தியர் அடிகளார் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் மிக கொடூரமாக கொன்று அழிக்கப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவுறுகின்ற வலி சுமந்த நாட்களை நினைவு கூருகின்ற இந்த தருணத்தில் தமிழராகிய எம் ஒட்டுமொத்த ஆன்மாவையும் பாதித்த மே 18 ஐ தமிழ் தேசிய துக்க நாளாக நாம் அனைவரும் கடைப்பிடிப்போம்

ஏற்கனவே வட மாகாண சபையால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள நிலையில் இதனை உணர்வுபூர்வமாக தமிழர் தாயகமெங்கும் அனுட்டிக்க தமிழ் தேசிய சக்திகளோடு கலந்தாலோசித்து ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அழைப்பு விடுக்கின்றது.

இந்த நாளில் முள்ளிவாய்காலில் சென்று நினைவேந்த கூடியவர்கள் வழமைபோன்று முள்ளிவாய்கால் பொது கட்டமைப்பு ஒழுங்கு செய்த நிகழ்வுகளில் பெருந்திரளாக பங்கேற்குமாறு வேண்டி நிற்கின்றோம்.

அதே நேரம் அங்கு செல்லமுடியாதவர்கள் தங்கள் பிரதேச வழிபாட்டுத்தலங்களில் ஒன்றுகூடி பிரார்த்தனைகளை மேற்கொள்ளவும் வேண்டுகின்றோம்.

அன்றைய தினம் அனைத்து தமிழர் வணிக வளாகங்கள் பொது இடங்களில் கறுப்புக்கொடிகளை பறக்கவிடுமாறும் கறுப்புப் பட்டியுடன் கடமைகளில் ஈடுமாறும் கோருகின்றோம்.

எமது தெருக்களை பொது இடங்களை வீட்டின் முன்னுள்ள வீதியோரங்களை துப்புரவு செய்வதுடன் அனைத்து கேளிக்கை நிகழ்வுகளையும் தவிர்த்து முள்ளிவாய்கால் கஞ்சியை ஒரு நேர உணவாகவேனும் உண்பதற்கு ஒவ்வொரு தமிழ் குடும்பமும் முன் வருவோம்.

மேலதிக தனியார் கல்வி நடவடிக்கைகள் அனைத்தையும் அன்றைய தினம் முழுமையாக நிறுத்தி எம் இளையோருக்கு எம் வலிகளின் ஆழத்தை சாத்வீகமாக உணர்வபூர்வமாக வெளிப்படுத்துவோம்.

பல்கலைக்கழக மாணவர் எற்பாடு செயதுள்ள இந்த காலப்பகுதிக்கான இரத்ததான முகாம்களில் பங்கேற்போம்.

வலி சுமந்த குடும்பங்களிற்கு மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஆறுதல் அளிப்போம்.

இந்த தமிழ்த்தேசிய துக்க நாளில் ஒட்டுமொத்த தமிழராய் நிலத்திலும் புலத்திலும் எம் உச்சபட்ச ஆத்மார்த்த உணர்வை அமைதியாக உறுதியாக லெளிக்காட்டுவோம். அதற்காக அனைவரும் திடசங்கற்பம் பூணுவோம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குமுதினி படுகொலையின் 39 ஆவது நினைவேந்தல்!

நெடுந்தீவு குமுதினி படுகொலையின் 39 வது நினைவேந்தல் நிகழ்வு இன்று (15) காலை நெடுந்தீவு மாவிலி துறைமுகத்தில் அமைந்துள்ள குமுதினி படுகொலை நினைவுத் தூவியில் நடைபெற்றது.

நிகழ்வில் பொதுச்சுடர்அ ஏற்றப்பட்டு நினைவுத் தூபிக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டு அஞ்சலி நிகழ்வு உணர்வெளிச்சியுடன் நடைபெற்றது.