அணு மூலக்கூறுகளுடன் இலங்கைக்கு வந்த சீனக் கப்பல் குறித்து சபையில் சஜித் கேள்வி

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வேதியல் அணு மூலக்கூறுகளுடன் சர்வதேச கப்பலொன்று வந்துள்ளமை உண்மையா? குறித்த நாட்டின் தூதரகத்தின் வலுயுறுத்தலுக்கு கட்டுப்பட்டு அரசாங்கம் இதனை கண்டுகொள்ளாது மௌனம் காக்கின்றதா? இது உண்மையென்றால் நாட்டின் நிலைமை என்னவாகும் என தெரியுமா என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் கேள்வி எழுப்பினார். அதேபோல் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நாளை மறுதினம் துறைமுக நகருக்கு கற்கை விஜயம் ஒன்றினை மேற்கொள்ள வருமாறு சீன தூதரகத்தினால் விடுக்கப்பட்டுள்ள அழைப்பு குறித்தும் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர்.

பாராளுமன்ற அமர்வுகள் இன்று புதன்கிழமை இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச,ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்துள்ள கப்பல் குறித்து வெளிவரும் செய்தி தொடர்பில் சபையில் கேள்வி எழுப்பினார்.

“சமூக வலைத்தளங்களில் செய்தி ஒன்று பகிரப்பட்டு வருகின்றது. நேற்று 20 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சர்வதேச கப்பலொன்று வேதியல் அணு மூலக்கூறுகளுடன் உள்நுழைந்துள்ளது. இதனை இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு கண்டறிந்துள்ளனர். இது உண்மையான செய்தியென நாம் நம்புகின்றோம், அது தவறான செய்தி சென்றால் அது குறித்து அரசாங்கம் அறிவிக்க முடியும். ஆனால் இலங்கை கடற்படைக்கு கூட இந்த கப்பலை பரிசோதனை செய்ய அனுமதிக்கவில்லை என கூறப்படுகின்றது.

துறைமுகத்தில் இருந்து இந்த கப்பலை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. ஆனால் இப்போது வரையிலும் இந்த விடயத்தில் அரசாங்கம் மௌன கொள்கையை பின்பற்றி வருகின்றது. ஒரு வெளிநாட்டு தூதரகத்தின் வலியுறுத்தலுக்கு கட்டுப்பட்டே அரசாங்கம் இவ்வாறு செயற்பட்டு வருகின்றது எனக் கூறப்படுகின்றது. எனவே இந்த செய்தியின் உண்மை தன்மையை நன்கு ஆராய்ந்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேதியல் அணு மூலக்கூறுககள் எமது நாட்டுக்குள் கொண்டுவருவது என்பது பாரிய அச்சுறுத்தலாகும். எனவே அரசாங்கம் உடனடியாக இதனை ஆராய்ந்து உண்மை பொய் தன்மைகளை ஆராய்ந்து உண்மையென்றால் உடனடியாக கப்பலை வெளியேற்ற வேண்டும், அல்லது இலங்கை கடற்படையை கொண்டு ஆராய அனுமதிக்க வேண்டும்” என அவர் சபையில் வலியுறுத்தினார்.

அதேபோல் எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா ஒழுங்குப்பிரச்சினை எழுப்பி சீன தூதரக அறிவித்தல் தொடர்பில் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் இருந்து எமது தொலைபேசிக்கு குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்) ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதனை உங்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றேன்.

கொழும்பு துறைமுக நகர் கற்கை விஜயம் ஒன்றினை சீன தூதரகம் ஏற்பாடு செய்துள்ளதாகவும், ஏப்ரல் 22 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வுகள் முடிவுக்கு வந்த பின்னர் இந்த விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த குறுந்தகவலில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் எமது ஆட்சியிலும் இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்ட போதும் நகர அபிவிருத்தி அதிகாரசபையே ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் எமது நாட்டின் நிலப்பரப்பில் விஜயம் ஒன்றினை செய்ய சீன தூதரகம் எவ்வாறு ஏற்பாடுகள் செய்ய முடியும் என கேள்வி எழுப்பினார். இதனை கைவிடுமாறு அமைச்சர் தினேஷ் குணவர்தன சபையில் தெரிவித்த வேளையில் குறித்த குறுஞ்செய்தி தொடர்பில் தான் ஆராய்ந்து பார்ப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

வலி கிழக்கு ரெலோ தவிசாளர் நிரோஷ் வழக்கில் நீதிவான் வழங்கியுள்ள உத்தரவு

வலி கிழக்குத் தவிசாளர் – வீதி அபிவிருத்தி அதிகார சபை கலந்துரையாடி இணக்கத்திற்குச் சென்று வழக்கை பாபஸ் பெற்றுக்கொள்ள முடியும் என அறுவுறுத்தி எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதிக்கு வழக்கை மல்லாகம் நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா தவணையிட்டார்.

தம்மால் வீதியை அபிவிருத்தி செய்வதற்காக நாடப்பட்ட பெயர்ப்பலகையினை தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளரும் ஆன தியாகராஜா நிரோஷ் அகற்றினார் எனக் குற்றஞ்சாட்டி அரச சொத்துக்குத் சேதம் விளைவித்தார் எனத் தெரிவித்து கடந்த வருட இறுதியில் வலிகிழக்குத் தவிசாளரைக் கைதுசெய்வதற்கு பொலிஸார் முயற்சித்த நிலையில் தவிசாளர் கைதுக்கு எதிராக நீதிமன்ற பாதுகாப்பைப் பெறும் நோக்கில் முன்பிணை பெற்றார்.

இந் நிலையில் மீள வீதி அபிவிருத்தி அதிகார சபை சார்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அவ் வழக்கு இன்று புதன்கிழமை காலை (21) மல்லாகம் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் சார்பில் சிரோஷ்ட சட்டத்தரணி வி.திருக்குமரன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழாம் முன்னிலையாகியது. சட்டத்தரணிகளால் தற்போதைய நிலையில் வீதி அபிவிருத்தி அதிகார சபை உரிய அனுமதிகளை உரியவாறு பிரதேச சபையில் இருந்து பெற்றுக்கொள்கின்றது.

இந் நிலையில் குறித்த வீதிக்கான பெயர்ப்பலகைக்கான அனுமதியையும் பெற்றுக்கொள்வதற்கான கடிதங்கள் கிடைத்துள்ளன. குறித்த வழக்கு நிலுவையில் உள்ளமையின் காரணமாக குறித்த விளம்பரப்பதாகைக்கான அனுமதி பற்றி பரிசீலிக்க முடியவில்லை என முன்வைக்கப்பட்டது.

இந் நிலையில் இருதரப்புமாக முடிவெடுத்து வழக்கை பின்வாங்கிக் கொள்ள பெறமுடியும் எனவும் நிதிபதி அறிவுறுத்தி வழக்கை எதிர்வரும் மார்கழி முதலாம் திகதிக்கு தவணையிட்டதுடன் குறித்த வழக்கில் தவிசாளரை ஐம்பதாயிரம் ரூபா சொந்தப்பிணையில் செல்வதற்கு அனுமதித்தார்.

Posted in Uncategorized

பழிவாங்குவதால் திருப்திப்படுத்த முடியாது ; தவறிழைத்தவர்களை மன்னிப்போம் – ஈஸ்டர் தாக்குதல் குறித்து பாப்பரசர்

கத்தோலிக்க சபையானது தவறிழைப்பவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதோடு பழிவாங்குவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களை திருப்திப்படுத்த முடியாது. அதே போன்று பழிவாங்குவதால் எவ்வித பயனும் கிடைக்கப் போவதில்லை என்பதை பாதிக்கப்பட்ட மக்களுக்கான கூறிக்கொள்வதுடன் அனைவரையும் ஆசிர்வதிப்பதாகவும் பாப்பரசர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளமையை முன்னிட்டு நேற்று புதன்கிழமை கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோணியார் திருத்தலத்தில் இடம்பெற்ற விசேட நிழ்வில்; பாப்பரசரின் செய்தியை அறிவிக்கும் போது பாப்பரசரின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ப்ரையன் யுடைக்வே இதனைத் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்ற இன்றைய தினத்தில் நான் பாப்பரசரின் செய்தியை உங்களுக்கு அறிவிக்கின்றேன். அவர் அவரது ஆசீர்வாதத்தை உங்களுக்கும் உங்களது குடும்பத்திற்கும் வழங்கியுள்ளார்.

கத்தோலிக்க சபையானது தவறிழைப்பவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதாகும். பழிவாங்குவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களை திருப்திப்படுத்த முடியாது. பழிவாங்குவதால் எவ்வித பயனும் கிடைக்கப் போவதில்லை என்று பாப்பரசர் பாதிக்கப்பட்ட மக்களுக்கான செய்தியில் குறிப்பிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதே வேளை நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவானேஷ்வரர் ஆலய குருக்கள் ,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் உயிரிழந்தவர்களின் முக்திக்காக நாம் இறைவனை பிரார்த்திக்கின்றோம். தாக்குதல்களால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் காயமடைந்தோருக்கும் ஆருதல் கூறுகின்றோம் என்று குறிப்பிட்டார்.

இதன் போது ஹசன் மௌலானா மௌலவி குறிப்பிடுகையில் ,

தீவிரவாத செயற்பாடுகளுக்கு முஸ்லிம் மதத்தில் ஒருபோதும் அனுமதி கிடையாது. இந்த தாக்குதல்களை உலகிலுள்ள சகல முஸ்லிம்களும் கடுமையாக எதிர்க்கின்றனர். அடிப்படைவாத கொள்கைகளை கொண்டவர்களின் செயற்பாடுகள் வேறு ரூபங்களில் முன்னெடுக்கப்படுகின்றன. எனவே இவ்வாறான விடயங்கள் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு மக்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

அத்தோடு கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் போன்றோரால் தற்போது சமூகத்தில் சாதாரண ஒரு பிரஜையாக வாழ முடிகிறது என்றால் , அதே போன்று அடிப்படைவாத கொள்கைகளைக் கொண்ட முஸ்லிம்களும் மனம் திருந்தி ஏன் வாழ முடியாது? அடிப்படைவாதத்தை கைவிட்டு சிறந்த பிரஜைகளாக வாழுமாறு வலியுறுத்துகின்றோம் என்றார்.

மாகாணசபையை பாதுகாக்க தமிழ் கட்சிகளை ஒன்றிணையுமாறு ரெலோ கோரிக்கை

மாகாணசபையை பாதுகாக்க தமிழ் கட்சிகளை ஒன்றிணையுமாறு கூட்டமைப்பின் பங்காளிகள் கட்சிகளில் ஒன்றான ரெலோ அமைப்பின் தேசிய அமைப்பாளர் சுரேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போதைய அரசியல் சூழலில் மாகாணசபைத் தேர்தல் நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏதேதோ காரணங்கள் சொல்லி அரசினால் பின் போடப்பட்டு வருகிறது. குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்ந்தும் பின் போடப்படுவதால் மாகாண சபை முறைமை செயலிழந்துள்ளது.

கடந்த ஆட்சியில் இருந்து இது தொடர்டகிறது. இதனால் மாகாண சபை முறைமையை அவசியமற்றது என்று கருத்து கூற அரச தரப்பில் பலர் முன் வந்துள்ளனர்.

வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் ஆபத்தான கட்டத்தை எதிர்நோக்கி இருக்கிறார்கள். எமது பூர்விக தாயகப் பரப்பில் காணி நிலங்கள் அபகரிக்கப்பட்டு அபிவிருத்தி என்ற பெயரிலும் தொல்லியல் என்ற பெயரிலும் குடியேற்றங்கள் நிறுவப்பட்டு வருகின்றன. தேர்தல் முறைகளில் மாற்றம் கொண்டு வருவதாக கூறி அரசு சட்ட சிக்கலை முன்வைத்து மாகாணசபை தேர்தலை மேலும் பின்னடித்து செல்கிறது.

மாகாண சபை முறைமையை அரசியல் யாப்பில் இருந்து நீக்கிவிட வேண்டும் என்ற முழுவீச்சோடு பேரினவாத அரசாங்கங்கள் முயற்சி செய்து வருகின்றன. இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக கொண்டுவரப்பட்டமையால் இந்தியாவினுடைய நேரடி அழுத்தத்தின் காரணமாக 13ம் திருத்தம் காப்பாற்றப் பட்டு வருகிறது.

இந்தியாவை பகைத்துக் கொள்ள விரும்பாமல் அல்லது முடியாமல், அதே நேரம் தமது முயற்சியும் கைகூடாமல் அரசு கைகட்டி நிற்கிறது. இழுத்தடிப்பு செய்தாவது நடைமுறைப் படுத்தாமல் காலம் தாழ்த்துவதன் மூலம் பயனற்றுப் போக வைக்கும் செயலாகவே இதை நாம் கருதுகிறோம்.

எமது தேசிய இனத்தின் கோரிக்கைகளுக்கு தீர்வாக இந்த மாகாண சபை முறைமை இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் போராட்ட அமைப்புகளின் தியாகத்திலும் இந்தியாவினுடைய முயற்சியாலும் இலங்கையின் அரசியல் சாசனத்தில் பதின்மூன்றாம் திருத்தச் சட்டத்தினூடாக உள்வாங்கப்பட்ட முக்கிய அரசியல் அம்சமாக இது கருதப்படுகிறது.

வடக்கு கிழக்கை எமது பூர்வீக பிரதேசமாகவும் தமிழை தேசிய மொழியாக ஆட்சி மொழியாக அங்கீகரித்த இந்த ஏற்பாட்டை தமிழ் மக்கள் இழந்து விடமுடியாது. நிரந்தர தீர்வு கிடைக்கும் வரையான தற்காலிக தளமாக இது பேணப் படவேண்டும்.

காலாகாலமாக வந்த அரசுகளுடன் அரசியல் தீர்வு சம்பந்தமாக நடத்தப்பட்ட பல பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறவில்லை. அதே போல இப்பொழுது அரசு முன்வைத்திருக்கின்ற புதிய அரசியல் சாசனத்திற்கான நிபுணர்கள் குழுவிடம் பல்வேறு அரசியல் தீர்வினை தமிழர் தரப்புகள் முன்வைத்திருக்கிறன.

ஏற்கனவே அரசியல் சாசனத்தில் உள்ள 13 ஆவது திருத்தச் சட்டத்தை முற்றுமுழுதாக எந்த அரசுகளும் நிறைவேற்றாத நிலையில், அரசியல் தீர்விற்கான ஆலோசனைகள் நிறைவேற்றப்படுமா அல்லது கருத்தில் கொள்ளப்படுமா என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

அப்படியான தீர்வினை எட்டும் வரைக்கும் , ஆகக் குறைந்த பட்சமாக கருதக்கூடிய மாகாணசபை முறைமையை பேணுவதற்கும், தமிழ் இனம் எதிர்கொண்டிருக்கும் அபாயகரமான நிலையை தடுப்பதற்கும்,
விரைந்து மாகாண சபை தேர்தலை நடாத்துவது அவசியம்.

தமிழ் கட்சிகள், தேர்தல் அரசியலையும் , தமக்குள் இருக்கும் கொள்கை முரண்பாடுகளையும் கடந்து இந்த விடயத்தை முன்னெடுக்க ஒன்றிணைந்து செயல்படுவது தற்போதைய காலத்தின் அவசியம் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

தமிழ் தேசியம் சார்ந்தவர்களும், மற்றைய தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துப் பயணிக்க தமிழ் ஈழ விடுதலை இயக்கம் கோரிக்கை விடுகிறது. இதற்கான முழுமையான செயற்பாட்டுக்கு எமது முற்றான ஆதரவையும் வழங்கவும் தயாராக உள்ளோம்.

சுரேந்திரன்
ஊடகப் பேச்சாளர்
ஊடக வாரியம்
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் -(ரெலோ)
தமிழ் தேசியக் கூட்டமைப்பு

Posted in Uncategorized

மே தின கூட்டங்களுக்கு அனுமதி இல்லை

மே தின கூட்டங்களையும், நிகழ்வுகளையும் நடத்துவதற்கு அனுமதி வழங்காதிருக்க தீர்மானித்துள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கு அனைத்து கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று (20) கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

இலங்கை விரைவில் மாகாணசபை தேர்தல்களை நடத்தவேண்டும்

இலங்கை விரைவில் மாகாணசபை தேர்தல்களை நடத்தவேண்டும் என இந்தியா எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளது.
மாகாணசபைகளுக்கு தேர்தல்களை நடத்துவது உட்பட்ட நடவடிக்கைகள் மூலம் அதிகாரங்களை பகிர்வது குறித்த தனது அர்ப்பணிப்பை நிறைவேற்றவேண்டும் என்ற சர்வதேச சமூகத்தின் கோரிக்கையை இந்தியா ஆதரிக்கின்றது என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரைக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் ஜெய்சங்கர் இதனை தெரிவித்துள்ளார்.

இது இலங்கையின் 13வது திருத்தத்தின் அடிப்படையில் அனைத்து மாகாணசபைகளும் பலனளிக்ககூடிய விதத்தில் செயற்படுவதை உறுதி செய்வதற்கான அர்ப்பணிப்பையும் உள்ளடக்கியுள்ளது என இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வில் இந்தியாவின் நிலைப்பாடு தெளிவுபடுத்தப்பட்டதாக தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் இந்தியா வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை ஆனால் வாக்களிப்பிற்கு முன்னதாக சமத்துவம் நீதி கௌவரம் மற்றும் சமாதானத்திற்கான தமிழர்களின் அபிலாசைகளை பூர்த்திசெய்வது குறித்த வலுவான அறிக்கையொன்றை இந்தியா வெளியிட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

மஹிந்தவுடன் நேற்றைய கூட்டத்தில் எடுத்த முடிவுக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இன்று அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இம்முறை மே தினக் கூட்டத்தை தனித்து நடத்த தீர்மானித்துள்ளது. கட்சியின் மத்திய குழு மற்றும் பாராளுமன்ற குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கட்சி தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு மற்றும் பாராளுமன்ற குழு என்பன சுதந்திரக் கட்சி வழமையைப் போன்று மே தினக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று தீர்மானித்துள்ளன. அதற்கமைய கொழும்பில் மே தினக் கூட்டத்தை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர கட்சியின் வரலாற்றை அவதானிக்கும் போது கீழ் மட்டத்திலுள்ள மக்களை உயர்மட்டத்திற்கு கொண்டு வந்தததும் சுதந்திர கட்சியாகும். எனவே நாம் மே தினக் கூட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம் என்றார்.

மாகாண சபை தேர்தல் முறைமை தொடர்பில் கட்சி தலைவர் கூட்டத்தில் ஒரு தீர்மானத்தை வெகுவிரைவில் எடுக்கவும், மே தின கூட்டத்தை ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியின் பங்காளி கட்சிகள் அனைத்து ஒன்றிணைத்து நடத்தவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நேற்றையதினம் அலரிமாளிகையில் பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியின் பங்காளி கட்சி தலைவர்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மேதினக் கூட்டத்தை தனித்து நடத்தப்போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்றையதினம் பொதுஜன பெரமுன கூட்டணியில் அங்கம் வகிக்கும் பெரும்பாலான பங்காளி கட்சிகளின் தலைவர்கள் பிரதமருடனான பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவில்லை.

கூட்டணி, மற்றும் அரசாங்கத்தில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து தனிப்பட்ட முறையில் கலந்துரையாட பிரதமரிடம் பங்காளி கட்சிகளின் தலைவர்கள் அனுமதி கோரியுள்ளார்கள்.

பிரதமர் தலைமையில் இடம்பெற்ற இப்பேச்சுவார்த்தையில் சுதந்திர கட்சியின்தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன, பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ,வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன,கல்வி அமைச்சர் ஜி.எல் பீரிஸ், நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் கலந்து கொண்டுள்ளார்கள். பங்காளி கட்சியின் முக்கிய தரப்பினர்களாக கருதப்படும் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையில், இது குறித்து கட்சியின் பொது செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவிக்கையில் ,

சுதந்திர கட்சி இம்முறை மே தினக் கூட்டத்தை தனித்து நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதோடு , பொதுஜன பெரமுன உள்ளிட்ட ஏனைய சகல தரப்பிற்கும் இதில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுனவின் மே தினக் கூட்டத்தில் சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் என்ற ரீதியில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கலந்து கொள்வார் என்றார்.

Posted in Uncategorized

இரட்டை வேடம் போடுகிறார் மல்கம் ரஞ்சித் – ஞானசாரர் குற்றச்சாட்டு

கார்டினல் மல்கம் ரஞ்சித் இரட்டை வேடம் போடுவதாக சாடியுள்ளார் பொது பல சேனாவின் ஞானசார. ஈஸ்டர் தாக்குதல் அதிகாரத்தைக் கைப்பற்றத் தேவையிருந்த ஒரு அரசியல் சக்தியாலேயே நடாத்தப்பட்டது என கார்டினல் அண்மையில் தெரிவித்த கருத்து குறித்தே ஞானசார இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடன் கார்டினலுக்கு பிரச்சினையிருந்தால் அதனைப் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அதற்கு மாறாக இவ்வாறு கருத்துரைப்பது தீவிரவாதத்துக்கு மேலும் தீனி போட்டு அங்கீகரிப்பதாகி விடும் எனவும் ஞானசார தெரிவிக்கிறார்.

இதேவேளை, தான் கூறிய கூற்று தவறாக விளங்கிக் கொள்ளப்பட்டிருப்பதாகவும் தான் ‘சர்வதேச’ அரசியல் சக்தியொன்றே தமது ஆளுமையை பலப்படுத்திக் கொள்ள இவ்வாறு செய்துள்ளதாக தெரிவித்ததாகவும் கார்டினல் மறு விளக்கம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரிசாதுடன் அரசாங்கம் போட்ட ‘டீல்’: கார்டினல் விசனம்!

20ம் திருத்தச் சட்டத்தின் மீதான வாக்கெடுப்பின் போது முஸ்லிம் கட்சித் தலைவர்கள் வாக்களிக்காமல் அவர்களது கட்சி உறுப்பினர்கள் மாத்திரம் வாக்களித்த விதம் அரசியல் ‘டீல்’ ஒன்றின் வெளிப்பாடு என தெரிவிக்கிறார் கார்டினல் மல்கம் ரஞ்சித்.

அதற்கு சில தினங்களுக்கு முன்பாக ரிசாதின் சகோதரர் கைது செய்யப்பட்ட போதே தான் இது பற்றி தெரிவித்ததாகவும் அப்போது அது மறுக்கப்பட்ட போதிலும் பின்னர் வாக்கெடுப்பின் போது நடந்த விடயங்கள் அந்த டீலை உறுதிப்படுத்தியதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

இதேவேளை, அரசாங்கம் ஈஸ்டர் தாக்குதல் விசாரணையை திருப்திகரமாக நடாத்தவில்லையெனவும் தெரிவிக்கின்ற அவர், உண்மையான சூத்திரதாரிகளைக் கைது செய்யாது காட்டப்படும் காட்சிகள் எவ்விதத்திலும் நம்பக் கூடிய வகையில் இல்லையெனவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

25 தமிழ்த் தொகுதிகளை உருவாக்குமாறு செந்தில் தொண்டமான் வலியுறுத்தல்

மலைநாட்டில் 10 இலட்சம் மலையக மக்கள் செரிந்து வாழ்கின்ற சூழ்நிலையில், புதிய தேர்தல் முறைமையின் படி, மாகாண சபைகள் மூலம் அந்தப் 10 இலட்சம் மக்களுக்கும் ஐந்து உறுப்பினர்கள் மாத்திரமே தேர்ந்தெடுக்கப்படுவர். தற்போதைய நிலைமையின்படி, மலையகமெங்கும் தமிழ் மாகாணசபை உறுப்பினர்கள் 25 பேர் காணப்படுகின்றனர். ஆனால், புதிய முறைமையின்படி ‌ஐவர் மாத்திரமே கிடைக்கப்பெறுவர். அதனால் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என இ.தொ.கா.வின் உப தலைவரும் பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் ஆகியோர்

அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம், அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று இடம்பெற்றது.

இதில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சார்பில், அக்கட்சியின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் மற்றும் இ.தொ.கா.வின் உப தலைவரும் பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்தக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது, மாகாணசபைத் தேர்தல்களை புதியமுறைமையின் இரு வழிமுறைகள் தொடர்பில் தீர்க்கமாக ஆராயப்பட்டது.

இவ்விரண்டு முறைமைகளில் எதையேனும் மற்றைய கட்சிகள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்ற சூழ்நிலையில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இரண்டு வழிமுறைகளுக்கும் நேரடியாக எதிர்ப்பைத் தெரிவித்தது.

இதன்போது, இதற்கான மாற்று வழிகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த செந்தில் தொண்டமான், மலைநாட்டில் 10 இலட்சம் மலையக மக்கள் செரிந்து வாழ்கின்ற சூழ்நிலையில், புதிய தேர்தல் முறைமையின் படி, மாகாண சபைகள் மூலம் அந்தப் 10 இலட்சம் மக்களுக்கும் ஐந்து உறுப்பினர்கள் மாத்திரமே தேர்ந்தெடுக்கப்படுவர்.

தற்போதைய நிலைமையின்படி, மலையகமெங்கும் தமிழ் மாகாணசபை உறுப்பினர்கள் 25 பேர் காணப்படுகின்றனர். ஆனால், புதிய முறைமையின்படி ‌ஐவர் மாத்திரமே கிடைக்கப்பெறுவர். அதனால் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

இதன்போது, இந்த முறைமையைத் தாங்கள் தயாரிக்கவில்லை என்றும் கடந்த அரசாங்கமே இந்த முறைமையைத் தயாரித்துள்ளதென்றும், அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது கருத்துரைத்த செந்தில் தொண்டமான்,

அதனால்தான் கடந்த அரசாங்கத்தின்போது, இந்த முறைமைக்குத் தாங்கள் எதிர்ப்புத் தெரிவித்ததாகக் குறிப்பிட்டார்.

இந்த 25 பேர் கிடைக்கப்பெறக்கூடிய வழிமுறைகள் பற்றியும் கேள்வி எழுப்பினார். அத்துடன், இரட்டைத் தொகுதி தொடர்பிலும் இதன்போது அரசாங்கத்தால் யோசனை முன்வைக்கப்பட்டது.

இதற்கு பதலளித்த செந்தில் தொண்டமான், இரட்டைத் தொகுதி எனும் பட்சத்தில், சிறுபான்மைக் கட்சிகள் கட்டாயமாகப் பெரும்பான்மைளோடுபோகக்கூடிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

அதனால், சுயமாகத் தனித்துப் போட்டியிடும் வாய்ப்பற்றுப் போகிறது. அதனால், அம்முறைமையையும் ஏற்றுக்கொள்ள முடியாதென்று எதிர்ப்புத் தெரிவித்தார்.

அந்த வகையில், அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட வழிமுறைகள் சாத்தியப்படாது எனும் பட்சத்தில், தங்களின் ஆலோசனைகளையும் வழிமுறைகளையும் முன்வைக்குமாறு வலியுறுத்தப்பட்டது.

இதன்போது, கருத்துரைத்த செந்தில் தொண்டமான், நீங்கள் தற்போது 70,000 – 80,000 பேருக்கான தொகுதிகளை உருவாக்குகிறீர்கள்.

அவ்வாறு செய்யாமல், குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட தனித் தமிழ் மக்கள் மாத்திரம் உள்ளடங்கும் வகையில், 25 தமிழ்த் தொகுதிகளை உருவாக்குமாறும் அதற்குத் தாங்கள் ஆதரவளிப்பதாகவும் குறிப்பிட்டார்.

உதாரணமாக, சுமார் 14 இலட்சம் சனத்தொகையைக் கொண்டுள்ள கம்பஹா மாவட்டத்தையும் சுமார் 6 இலட்சம் சனத்தொகையைக் கொண்ட மொனராகலை மாவட்டத்தையும் எவ்வாறு தனி மாவட்டங்களாகப் பிரித்திருக்கிறீர்களோ, அவ்வாறே தமிழ்ப் பிரதேசங்களுக்கும் தனித் தொகுதிகளை உருவாக்குமாறும் வலியுறுத்தினார்.

அத்துடன், அவ்வாறு வழங்கப்படும் பட்சத்தில் அது எந்தக் கட்சியாயினும், மலையக மக்களின் பிரதிநிதிகள் வரும் வகையில் வழிமுறைகளை வகுத்து அறிவிக்கிறோம் என்றும் செந்தில் தொண்டமான் குறிப்பிட்டார்.

Posted in Uncategorized