யாழ்ப்பாணம் -சென்னை நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்க நடவடிக்கை

கொவிட் தொற்றுநோய் காரணமாக இடைநிறுத்தப்பட்ட யாழ்ப்பாணம் -சென்னைக்கு இடையிலான நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்க அரசாங்கம் தயாராகி வருகிறது.

அதேவேளை இரத்மலானை, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு இடையே உள்நாட்டு விமான சேவையையும் விரைவில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறியுள்ளார்.

பலாலி மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்களும் சர்வதேச விமான நிலையங்களாக அபிவிருத்தி செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை தேசியக் கொடிக்கு வந்த நிலை ! சீனாவுடன் கவலை எழுப்புகிறது இலங்கை

இலங்கையின் தேசிய கொடியுடன் வடிவமைக்கப்பட்ட தரைவிரிப்புகள் தற்போது விற்பனைக்கு வந்துள்ள படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

பொருட்களை இணையத்தளத்தில் விற்பனைசெய்யும் உலகின் முன்னணி இணையத்தள பொருள் விற்பனை தளமான amazon இல் இவ்வாறு இலங்கை கொடியை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட தரை விரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த தரைவிரிப்பு 12 டொலருக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இவ்வாறு இலங்கையின் தேசிய கொடியுடனான தரைவிரிப்புக்கள் விற்பனை செய்யப்படுகின்றமைக்கு எதிராக பலரும் பல்வேறு கருத்துக்களை சமூக ஊடகங்களில் தெரிவித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வெளியுறவு செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பேஜ் பெய்ஜிங்கில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு சீனாவில் சம்பந்தப்பட்ட உற்பத்தியாளரை தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளார், மேலும் கொழும்பில் உள்ள சீன தூதரகத்தின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளார்.

சத்தியாக்கிரகத்தில் பொதுபல சேனா, பௌத்த பிக்குகள் சங்கம்

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைக்கும், பொதுபல சேனா அமைப்பு உட்பட பௌத்த அமைப்புக்களை தடை செய்ய முன்வைக்கப்பட்டுள்ள யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பொதுபல சேனா அமைப்பினரும்,பௌத்த பிக்குகள் சங்கத்தினரும் ஒன்றினைந்து சுதந்திர சதுக்கத்தில் சத்தியாக்கிரகத்தில் ஈடுப்பட்டார்கள்.

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்கும் கொள்கை திட்டங்களை மார்ச் 11 என பெயர்குறிப்பிட்டு அரசாங்கத்திடம் கையளித்தனர்.

விடுதலை புலிகள் அமைப்பு செயற்பட்ட காலக்கட்டத்தில் இராணுவத்தின் உளவாளிகளாக செயற்பட்ட பயங்கரவாதி சஹ்ரான் உள்ளிட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு யார் ஆயுதம், நிதியுதவி வழங்கியது, வழங்கப்பட்ட ஆயுதங்கள் மீள பெற்றுக் கொள்ளப்பட்டதா, இல்லையாயின் அந்த ஆயுதங்களுக்கு என்னவாயிற்று.

ஏப்ரல் 21 குண்டுத்தாகுதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு அரசியல் நோக்கங்களை விடுத்து தண்டனை வழங்கப்பட வேண்டும்.

இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் முன்னாள் நீதியமைச்சர் 2016. நவம்பர் மாதம் 18 ஆம் திகதி பாராளுமன்றில் ஆற்றிய உரைக்கு எதிர்ப்பு தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதின், அனாஸ் நசீர், முஜ்பூர் ரஹ்மான்,தேசிய சுரா கவுன்சிலின் தலைவர் தரிக் மொஹமட், இலங்கை முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் எம்.எம் அலிம், ஐக்கிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு, முன்னாள் ஆளுரநர் ஹிஸ்புல்லா, ஆகியோருக்கு எதிராக முறையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

கட்டுவாப்பிடிய தேவஸ்தானத்தின் குண்டுதாரியின் மனைவியான சாரா உயிருடன் உள்ளாரா என்பது தொடர்பில் முறையான விசாரணை எடுக்கப்பட வேண்டும்.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கான விசாரணை விசேட மேல்நீதிமன்றம் ஊடாக நாளாந்தம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

பொதுபல சேனா அமைப்பினை தடை செய்யவும், பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசாரதேரருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவும் ஆணைக்குழு முன்வைத்துள்ள யோசனை மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும்.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தை முன்னெடுக்க தயாரான காரணிகளை பயங்கரவாதி சஹ்ரான் குறிப்பிட்டுள்ளதாக ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.அக்காரணிளாவன,

அல்லாஹ் கடவுளுக்கான கடமைகளில் ஒன்றாக,கடவுளால் படைக்கப்பட்ட இஸ்லாமிய இராஜ்ஜியத்தில் சிரியாவில் முஸ்லிம் சமூகத்தினர் படுகொலை செய்யப்பட்டைக்கு பழிவாங்கும் வகையில்,நியூசிலாந்து கிறைஸ்ட்சேர்ச் முஸ்லிம் பள்ளியில் இடம் பெற்ற தாக்குதலுக்கு பழிவாங்கும் வகையில்,என்று குறிப்பிடப்பட்டுள்ளன. இதற்கும் இலங்கைக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.

இனம் ,மத கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு அரசியல் கட்சிகள் செயற்படுகின்றமையினால் தேசிய நல்லிணக்கம் பாதிக்கப்படுகிறது. ஆகவே இவ்வாறான அரசியல் கட்சிகளை முழுமையாக தடை செய்ய வேண்டும்.

ஆகவே மேற்குறிப்படப்பட்டுள்ள அனைத்து யோசனை குறித்தும் அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டும்.

Posted in Uncategorized

பொதுஜன முன்னணியின் அடுத்த ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக பஸில் ராஜபக்சவே களமிறங்குவார்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அடுத்த ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக கட்சியின் ஸ்தாபகரும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் சகோதரருமான பஸில் ராஜபக்சவே களமிறங்குவார் என பொதுஜன முன்னணி பகிரங்கமாக அறிவித்துள்ளது.

இதற்கு எதிராகவே விமல் வீரவன்ச உள்ளிட்டவர்கள் சூழ்ச்சி செய்து வருவதாக கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சஹான் பிரதீப் வித்தாரண குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட சஹான் பிரதீப் வித்தாரண,

கொவிட் நெருக்கடியை எமது நாடு வேறு நாடுகளை விட சிறப்பாக கையாண்டதன் பின்னணியில் மீண்டும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடப்போவதில்லை என நினைத்தாலும் மக்கள் இறுதியாக அவரை கைவிடமாட்டார்கள்.

மீண்டும் போட்டியிடச் செய்யும் வகையிலான கோரிக்கைகளையே முன்வைப்பார்கள் என நினைக்கின்றேன்.

ஒரு வருடத்திற்குள் கொரோனா தொற்றுடன் மோதி, ஊழல் மோசடி, போதைப்பொருளை அழித்து இளைஞர்களை வழிநடத்தியவர் ஜனாதிபதியே.

சிலர் இதனை மாற்றியமைக்க பொதுஜன முன்னணியை களங்கப்படுத்தி அழிக்க கனவு காண்கிறார்கள். அந்த கனவு நனவாகாது. அப்படியொரு சந்தர்ப்பத்தை அவர்களுக்கு மக்கள் வழங்கமாட்டார்கள். சில கட்சிகள் அரசாங்கத்தை அமைக்க உதவினார்கள்.

சில வருடங்கள் சென்று அரசாங்கத்தின் உறுதியைப் பேணாமல் பிரிந்து சென்று தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்ய முயற்சிக்கின்றார்கள். எமது அரசாங்கத்திற்குள்ளேயே இருந்துகொண்டு பொதுஜன முன்னணிக்குள் தலைவர் ஒருவர் வருவார் என்கிற அச்சம் சிலருக்கு உள்ளது.

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அடுத்த தேர்தலில் போட்டியிடாவிட்டால் அடுத்தகட்டமாக பஸில் ராஜபக்ஷவே தெரிவுக்கு இருக்கின்றார்.

அவர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு தகுதியானவர். அவர் போட்டியிடுவதை எதிர்ப்பவர்களும் கட்சிக்குள் இருக்கின்றார்கள். அதனால்தான் சேறுபூசுகின்றார்கள். பொதுஜன முன்னணியையும், பஸில் ராஜபக்ஷவையும் வீழ்த்த எவருக்கும் முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

வீட்டுத் திட்டங்களுக்கான நிலுவைத் தொகையை வழங்குங்கள்!ரெலோ தலைவர்செல்வம் பிரதமரிடம் கோரிக்கை!

வடக்கில், தொடங்கப்பட்டு நிறைவுக்கு எட்டாத வீட்டுத் திட்ட நிலுவைத் தொகையை வழங்குமாறு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் பிரதமருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இன்று (வியாழக்கிழமை) அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த கடிதத்தில், “முன்னாள் வீடமைப்பு மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் காலப்பகுதியில் மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களிலும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை ஊடாக ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத் திட்டமானது இற்றைவரைக்கும் பூர்த்தி செய்யப்படவில்லை.

அத்துடன், பயனாளிகளுக்கான மீதமுள்ள கொடுப்பனவும் வழங்கப்படவில்லை. ஏழை மக்கள் தங்கள் சொத்துக்களையும் கையில் வைத்திருந்த சிறிய தொகைப் பணத்தையும் வைத்துத்தான் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட நிதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் இந்த வேலையை ஆரம்பித்தார்கள்.

ஆனால், ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத் திட்ட வேலை நிறைவுக்கு வரவில்லை. ஏழை மக்கள் கடந்த உள்நாட்டுப் போரில் அனைத்தையும் இழந்தவர்கள். இப்பொழுது மிகவும் அவதிப்படுகிறார்கள்.

குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் சமூகத்தின் பல நிலைகளிலும் வாழும் இந்த மக்கள் தங்களுக்கென ஓர் நிரந்தரவீடு இன்மையால் இன்னும் சிறிய குடிசைகளில் தங்களது வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். வீட்டு வசதி என்பது ஒருநாட்டுக் குடிமகனின் அடிப்படைத் தேவை.

ஆனால், இந்த மக்கள் அதைப்பார்க்கவும் அனுபவிக்கவும் கூட முடியாத நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டவர்கள்.

எனவே, இந்த மக்களுக்கு சுதந்திரமாக வாழவும் பாதிப்புக்களில் இருந்து விடுபடவும் ஒரு வீடு தேவை. இதனால், பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வீட்டுத்திட்ட குறைகளை நிறைவுக்குக் கொண்டுவருவதற்கும் அவர்களின் அன்றாட வாழ்வினை சுமூகமாக நகர்த்திச் செல்வதற்கும் வழிவகுக்க ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என அவர் கோரியுள்ளார்.

Posted in Uncategorized

இலங்கை குறித்த ஜெனிவா நகர்வுகளை உன்னிப்பாக அவதானிக்கிறோம் – இந்தியா உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் கீழ், அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை செயல்படுத்துவது இலங்கையின் இன நல்லிணக்கம், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு உதவுவதோடு நாட்டையும் பலப்படுத்தும் என தெரிவித்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே , ஜெனீவாவில் இலங்கை தொடர்பான தீர்மானம் குறித்த விவாதங்கள் இடம்பெறுகின்ற நிலையில் இந்திய தூதுக்குழு அங்குள்ள நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

ஜெனிவா விவகாரம் மற்றும் தமிழ் மக்களின் தீர்வு திட்டங்கள் தொடர்பில் புதன்கிழமை வீரகேசரிக்கு தெளிவுபடுத்துகையிலேயே இந்திய உயர்ஸ்தாணிகர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில் ,

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 46 வது அமர்வில் இலங்கை விவகாரம் தொடர்பான விடயங்களிலும் அதன் முன்னேற்றங்கள் குறித்தும் இந்தியா அக்கறையுடன் அவதானத்தில் கொண்டுள்ளது.

ஜெனீவாவில் இலங்கை தொடர்பான தீர்மானம் குறித்த விவாதங்கள் இடம்பெறுகின்ற நிலையில் இந்திய தூதுக்குழு அங்குள்ள நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறது.

இலங்கை பிரதிநிகளும் தங்களது மதிப்பீட்டை எங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர். எனவே இந்திய இந்த விடயத்தில சரியான முறையில செயற்படும் .

எவ்வாறாயினும் தெற்காசியா பிராந்திய அமைதி மற்றும் நல்வாழ்வை இந்தியா என்றும் குறித்து நிற்கும். இலங்கை எங்கள் நெருங்கிய நண்பர் மற்றுமல்ல அண்டை நாடும் கூட. அந்த வகையில் இலங்கையின் ஒற்றுமை, ஸ்திரத்தன்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு இந்தியா எப்போதும் உறுதியாக நிற்கும்.

இன நல்லிணக்கத்தை ஊக்குவித்தலை உள்ளடக்கிய அரசியல் கண்ணோட்டத்தின் அடிப்படையில் இலங்கையின் நல்லிணக்க செயல்முறையை பரந்;த உள்ளத்துடன் ஆதரிப்போம்.

தமிழர்கள் உட்பட இலங்கையில் அனைத்து சமூக பிரிவினரும் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கௌரவத்திற்கான அபிலாஷைகளை அடைவது இலங்கைக்கு பலம் அளிக்கும்.

எனவே, அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் கீழ், அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை செயல்படுத்துவது இலங்கையின் நல்லிணக்கம், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு உதவுவதோடு நாட்டை பலப்படுத்தவும் உதவும் என தெரிவித்தார்.

Posted in Uncategorized

பழைய முறைமையில் ஜூலையில் மாகாணசபைத் தேர்தல் – பொதுஜன பெரமுனவின் மாகாணசபை ஒன்றியம்

மாகாணசபை தேர்தலை பழைய முறைமையில் எதிர்வரும் ஜூலை மாதம் நடத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது. இத்தீர்மானத்துக்கு ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளமை தவறான செயற்பாடாகும். இவ்விடயம் குறித்து பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கவுள்ளோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாகாண சபை ஒன்றியத்தின் தலைவர் காஞ்சன ஜயரத்ன தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் மாகாணசபை ஒன்றியத்தின் உறுப்பினர்களுடன் பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இடம் பெற்ற பேச்சுவார்த்தை குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நல்லாட்சி அரசாங்கம் மாகாண சபை தேர்தலை திட்டமிட்ட வகையில் பிற்போட்டது. மக்களின் பிரதிநிதிகள் இல்லாமல் நிறைவேற்று துறையின் பிரதிநிதியால் மாகாண சபைகளின் நிர்வாகம் நிர்வகிக்கப்படுகின்றனமை ஜனநாயக கொள்கைக்கு முரணானது. மாகாண சபை தேர்தல் உரிய காலத்தில் இடம் பெற்றிருந்தால் பொதுஜன பெரமுன அமோக வெற்றிப் பெற்றிருக்கும்.

மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு சட்ட சிக்கல் ஒருபுறம் காணப்படுகின்ற பட்சத்தில் பிறிதொரு புறம் பொதுகாரணிகளும் செல்வாக்கு செலுத்தின. இம்மாதம் முதல் வாரத்தில் மாகாண சபை தேர்தலை நடத்த எதிர்பார்க்கப்பட்டது. கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. மாகாண சபை தேர்தலை பழைய முறைமையின் கீழ் எதிர்வரும் ஜூலை மாதம் நடத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது. ஆளும் தரப்பின் ஒரு சில உறுப்பினர்கள் மாகாண சபைக்கு எதிரான தங்களின் தனிப்பட்ட நிலைப்பாட்டை அரசாங்கத்தின் நிலைப்பாடாகக் கூறுகின்றனர்.

மாகாணசபை தேர்தலை தொடர்ந்து பிற்போட்டு மாகாணசபை முறைமையை முழுமையாக இல்லாதொழிக்க ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் சிலரால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் கவலைக்குரியவை. இவ்விடயம் குறித்து பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம் என்றார்.

Posted in Uncategorized

அரசாங்கம் சஹ்ரானுக்கு சம்பளம் வழங்கி வழிநடத்தி இருக்கின்றது – கபீர் ஹாசிம்

அரசாங்கம் சஹ்ரானுக்கு சம்பளம் வழங்கி வழிநடத்தி இருக்கின்றது.சஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல பகிரங்கமாக ஏற்றுக்கொண்டிருந்தார். அத்துடன் இந்த தாக்குதலால் நன்மை அடைந்தவர்களே இதன் உண்மை நிலைமைகளை மறைக்க முயற்சிக்கின்றனர்.

இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை வெளிப்படுத்தவேண்டும் என்ற நிலைப்பாட்டிலே முஸ்லிம்கள் இருக்கின்றனர் என எதிர்க்கட்சி உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

மாவனெல்லை புத்தர் சிலை தகர்ப்பு தொடர்பாக தகவல் வழங்கிய காரணத்துக்காக சஹ்ரானின் குண்டர்களின் துப்பாக்கி சூட்டுக்கு ஆளாகிய எனது இணைப்புச்செயலாளர் படுகாயமடைந்து சுயநினைவு இழந்திருக்கின்றார்.

அவருக்கு எனது சொந்த செலவில் மருத்துவம் செய்துவந்தேன். தற்போதும் அவர் நாட்டு வைத்தியம் செய்துவருகின்றார். அவரின் செயலை மதித்து சிங்கள இளைஞர்கள் அவருக்கு வீடொன்றை நிர்மாணித்து கொடுத்துள்ளனர்.

அவரின் மருத்துவ செலவுக்கு அரசாங்கம் உதவி செய்யவேண்டும் என நான் அரசாங்கத்திடம் கேட்டிருந்தேன். எந்த பதிலும் வழங்கவில்லை.

ஆனால் அவரை குணப்படுத்த வெளிநாட்டுக்கு அழைத்துச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால் அதற்கு அரசாங்கம் நிதி உதவி செய்யவேண்டும் என ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளமை தொடர்பில் மகிழ்ச்சியடைகின்றேன்.

மேலும் உயிருத்த ஞாயிறு தாக்குதல் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டது கத்தோலிக்க மக்களாகும். அதேபோன்று பாரிய நெருக்கடிகளுக்கு ஆளாகியது முஸ்லிம் மக்களாகும்.

சஹ்ரானின் நடவடிக்கைக்கும் இஸ்லாம் மார்க்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இஸ்லாம் ஒருபோதும் இவ்வாறான செயல்களை மனுமதித்ததில்லை.

மேலும் எனது இணைப்புச்செயலாளரின் மருத்துவ செலவுக்கு பணம் வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் கேட்டபோது அதற்கு செலவிடவில்லை.

ஆனால் அரசாங்கம் சஹ்ரானுக்கு சம்பளம் வழங்கி வழிநடத்தி இருக்கின்றது.சஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல பகிரங்கமாக ஏற்றுக்கொண்டிருந்தார். அப்படியென்றால் அப்போதை பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோத்தாபய ராஜபக்ஷ்வுக்கு அறிவுறுத்தியே வழங்கியிருக்கவேண்டும்.

அதேபோன்று 2011ஆம் ஆண்டில் இருந்து சஹ்ரானின் நடவடிக்கை தொடர்பாக முஸ்லிம் அமைப்புகள் முறைப்பாடு செய்திருக்கின்றன.

ஆனால் அப்போதை அரசாங்கத்தினால் அதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தது கோத்தாபய ராஜபக்ஷ் என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

மேலும் மைத்திரிபால சிறிசேன மற்றும் ஜனாதிபதி காேத்தாபய ராஜபக்ஷ்வை கொலை செய்ய திட்டமிட்டிருப்பதாக நாமல் குமார செய்த முறைப்பாடு தொடர்பாக இன்று எந்த விசாரணையும் இடம்பெறுவதில்லை.

நாமல் குமாரவின் இந்த முறைப்பாடு காரணமாகத்தான் சஹ்ரான் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவந்த பொலிஸ் அதிகாரி நாலக்கசில்வா கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார். நாமல் குமாரவின் அந்த முறைப்பாடு இல்லாமல் இருந்திருந்தால் சஹ்ரான் கைதுசெய்யப்பட்டிருப்பார்.

எனவே இந்த தாக்குதலின் பின்னால் யார் இருக்கின்றார் என்பதை கண்டறியவேண்டும் என்ற நிலைப்பாட்டிலே முஸ்லிம் மக்களும் இருக்கின்றனர். அதனால் இந்த விசாரணை அறிக்கை தொடர்பாக கர்தினால் மெல்கம் ரன்ஜித்தின் நிலைப்பாட்டுக்கு நாங்களும் ஆதரவளிக்கின்றோம்.

Posted in Uncategorized

‘அம்பிகையின் கோரிக்கைகளுடன் ஒருங்கிணைந்து போராடுவோம்’ – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

சிறீலங்காஅரசு மேற்கொண்ட இனப்படுகொலைக்கு நீதி வேண்டியும், தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும் பிரித்தானியாவில் திருமதி அம்பிகை செல்வகுமாரினால் மேற்கொள்ளப்படும் உணவு தவிர்ப்புப் போராட்டம் இந்த பத்தி எழுதும் போது 7 ஆவது நாளை கடந்துள்ளது.

1948 ஆம் ஆண்டு சிறீலங்கா சுதந்திரம் அடைந்த பின்னர் தமது சுயநிர்ணய உரிமைக்காகவும், அடிப்படை உரிமைகளுக்காகவும், பறிபோகும் தமது தாயக பிரதேசத்தைக் காப்பாற்றுவதற்காகவும் தமிழ் மக்கள் பல வழிகளில் போராடி வந்துள்ளனர்.

அகிம்சைப்போர் என ஆரம்பித்த போராட்டத்தை சிறீலங்கா அரசு வன்முறை வழிகளை கையாண்டு தனது படை பலம்கொண்டு அடக்கியதுடன், பல தடவைகளில் அப்பாவிமக்களை இனக்கலவரங்கள் என்ற வழிகளில் படுகொலை செய்ததை தொடர்ந்து தமிழ் மக்களின் போராட்டம் ஆயுதப்போராட்டமாக பரிணமித்தது.

ஆயுதங்கள் மூலம் தமிழ் மக்கள் தம்மை பாதுகாத்துக் கொண்ட போதும், தமிழ் மக்களின் அந்த பாதுகாப்பை உடைப்பதற்கு உலக வல்லரசுகளும், பிராந்திய வல்லரசுகளும் சிறீலங்கா அரசுடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கை என்பது மிகப்பெரும் இனஅழிப்பாக மாற்றம் பெற்றது.

ஒருசமரை மட்டுமே இழந்த தமிழ் இனம் தொடர்ந்து பல்வேறுவழிகளில் தனது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றது. ஆனால் சிறீலங்கா அரசும் உலக வல்லரசுகளும், பிராந்திய வல்லரசுகளும் தமிழ் மக்களின் இந்த போராட்டங்கள் மீதும்தொடர்ந்து அழுத்தங்களையும், தாக்குதல்களையும் மேற்கொண்டு வருகின்றன.

தமதுஉரிமைகளுக்காகவும், இனப்படுகொலையில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கோரியும் ஐக்கியநாடுகள் சபை வரை தமிழ்இனம் சென்றபோதும், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணைக்குழுவில் 2015 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தீர்மானத்திலும், 2021 ஆம் ஆண்டு முன்வைக்கப்படும் தீர்மானத்திலும் சிறீலங்கா அரசு மேற்கொண்ட மனிதஉரிமை மீறல்கள் தமிழ் மக்களுக்கு எதிரானது என்பதை இந்தியாவுடன் இணைந்து மேற்குலகம் மிகவும் நுட்பமாக மறைத்துள்ளது என்பது தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமைக்கான வழிகளை இந்த நாடுகள் நிராகரித்துள்ளதையே காட்டுகின்றது.

அதாவது இந்த நாடுகளின் நடவடிக்கை என்பது கடந்த 12 வருடங்களாக தமிழ் மக்கள் மேற்கொண்ட அரசியல் மற்றும் இராஜதந்திர நகர்வுகளின் தோல்வியின் வெளிப்பாடாகும்.

இந்தநிலையில் தான் அமைப்புக்கள் மற்றும்அரசியல் கட்சிகள் தவிர்ந்து மக்களாக முன்வந்து போராட்டத்தை முன்னெடுக்கும் கள நிலை ஒன்றுஉருவாகியுள்ளது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை என்ற போராட்டமும், அம்பிகை அவர்களின் போராட்டமும் மக்கள் போராட்டமாகவே பார்க்கப்பட வேண்டும்.

எனினும்அம்பிகை அவர்களின் போராட்டத்தினை தமிழ் மக்களை ஏமாற்றும் தீர்மானத்தை வரைந்ததில் முன்னிலை வகித்த பிரித்தானியா கண்டுகொள்ளவில்லை. அது மட்டுடல்லாது, பலஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள மியான்மாரில் இடம்பெறும்போராட்டங்களை மணிக்கு ஒரு தடவை காண்பிக்கும் பிரித்தானியா ஊடகங்களும், அனைத்துலக ஊடகங்களும் பிரித்தானியா மண்ணில் இடம்பெறும் போராட்டத்தை கண்டுகொள்ளவில்லை.

எனினும் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக தாகயத்தில் வடக்கிலும், கிழக்கிலும், அனைத்துலக நாடுகளிலும் தமிழ் மக்கள் சுழற்சி முறையிலான போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இருந்தபோதும், இந்த போராட்டங்களுக்கு இடையில் ஒரு ஒருங்கிணைவு ஏற்படவில்லை என்பதை அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை கொண்டு நாம் அறிந்துகொள்ள முடிகின்றது. அம்பிகை முன்வைத்துள்ள 4 கோரிக்கைகளை முன்வைத்து எல்லா நாடுகளிலும் போராடும் போது தான் அவரின் போராட்டம் என்பது ஒரு ஒருங்கிணைந்த போராட்டம் என்ற கருத்துருவாக்கம் ஏற்படும்.

ஓவ்வொரு நாடுகளிரும், ஒவ்வொரு அமைப்புக்களும், கட்சிகளும் தமக்கு வேண்டிய கோரிக்கைகளை முன்வைத்து போராடும் போது அது தனிப்பட்ட போராட்டமாகவே பார்க்கப்படும். அது அம்பிகை அவர்களின் போரட்டத்தை பலவீனப்படுத்தும் என்பதிலும் மாற்றுக்கருத்தில்லை.

அதுமட்டுமல்லாது, எந்தவித கட்சிகளும், அமைப்புக்களும் சாராது ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டத்திற்கு புலம்பெயர் அமைப்புக்கள் உரிமை கோருவதை தவிர்த்து அதற்கான ஆதரவுகளை வழங்கவேண்டும் என்பதுடன், அதற்கான ஆதரவுகளை திரட்டுவதற்கும் முன்வரவேண்டும்.

கடந்த 12 வருடங்களாக நாம் மேற்கொண்ட இராஜதந்திர அரசியல் எங்கு தோற்றுப்போனது என்பதை தமிழ் மக்கள் அறிந்து கொண்டு செயற்படுவதன் மூலமே இந்த போராட்டங்களை அதன் இலக்கை நோக்கி நகர்த்த முடியும்.

பெரும்பாலான புலம்பெயர் அமைப்புக்களைப் பொறுத்தவரையில், மேற்குலகம் சார்ந்த கருத்துக்கள் அல்லது ஆதரவான அமைப்புக்களாகவே உள்ளன. தாயகத்தில் உள்ள கட்சிகளை பொறுத்தவரையில்இந்தியா சார்பு நிலையே அங்கு அதிகம்.

அதற்கானகாரணம் என்ன?

தாயகத்தில்உள்ள இந்திய சார்பு தமிழ் கட்சிகள் தமது இருப்பை தக்கவைக்க இந்தியாவின் கருத்துக்களை அப்படியே உள்வாங்கி போராடுகின்றன. புலம்பெயர் தேசத்தில் உள்ள அமைப்புக்களும், செயற்பாட்டாளர்களும், குறிப்பாக மேற்குலகம் சார்பாக அந்தந்த நாடுகளுக்கு சார்ப்பு நிலை எடுத்து தமதுசொத்துக்களையும், சுகமான வாழ்வையும் தக்கவைக்க போராடுகின்றனர். இவற்றுக்கு இடையில் தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர் என்பது தான் உண்மை.

உண்மைஎன்பது கசப்பானது, ஆனால் அதனை ஏற்றுக்கொண்டால் தான்நாம் சரியான பாதையில் நகரமுடியும். இல்லையேல் ஏமாற்றுக்காரர்களை சுற்றிவந்து எமது வாழ்வு முடிந்துவிடும்.

இதனைசுருக்கமாக கூறுவதானால்இ ஒரு அடிபணிவு அரசியல்என கூறலாம். இந்த அடிபணிவு அரசியல்மூலம் எமக்கு தேவையானவற்றை பெறமுடியாது, மாறாக அவர்களின் கொள்கைகளுக்கு அமைவாகவே இந்த அமைப்புக்களும் கட்சிகளும் இயங்க முடியும்.

எனவேதான் தற்போது மெல்ல மெல்ல தமிழ் மக்கள் போராட்டத்தை தமது கையில் எடுத்துக்கொள்ள தலைப்பட்டுள்ளனர்.

சிறீலங்காவை பொறுத்தவரையில் அனைத்துலக நாடுகளுடன் நல்லுறவை பேணுகின்றது. ஹிரோசிமாவில் அணுக்குண்டு வீசப்பட்டதற்கு எதிராக அறிக்கை வெளியிட்டு யப்பானை நண்பனாக்கியது சிறீலங்கா.

கொரியப் போரின் போது கொழும்பு துறைமுகத்தை விநியோகத்திற்கு வழங்கி சீனாவையும், ரஸ்யாவையும் நண்பனாக்கியது சிறீலங்கா. உச்சக்கட்டப் போரின் போது 2007 ஆம் ஆண்டு திருமலை துறைமுகத்தை அமெரிக்காவுக்கு வழங்கி தமிழ் மக்களின் நடைமுறை அரசை அழித்து முடித்ததுசிறீலங்கா.

ஆனால் கிரம்பிளினில் உள்ள லெனின் சதுக்கத்தில் திருக்குறளை வைத்து தமிழுக்கு மரியாதை செலுத்தும் ரஸ்யாவை எதிரியாக பார்க்கின்றது தமிழ் சமூகம்.

2005 ஆம் ஆண்டு பெக்கன் நடவடிக்கை என திட்டம் போட்டு விடுதலைப்புலிகளை அழித்த மேற்குலகத்துடன் நட்பை பாராட்டி பணத்துக்காக ஆயுதங்களை விற்பனை செய்த சீனாவை எதிர்த்து அறிக்கை விடுகின்றன தமிழ் கட்சிகள்.

1976 ஆம் ஆண்டு எழுதப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானம் என்பது ரஸ்ய புரட்சியில் லெனின்தன்னாட்சிக்கு பயன்படுத்திய வசனங்களை தழுவியது என்பது எத்தனை பேருக்கு தெரியும். 1980கள் வரையிலும் சிறீலங்காவைஒரு தனிநாடாக ரஸ்யா ஏற்றுக்கொள்ளவில்லை என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

எமதுகட்சிகளினதும் அமைப்புக்களினதும் சுயநலவாத அரசியல் என்பது உலகில் பல நாடுகளின் ஆதரவுகளைஇழக்கும் நிலையை ஏற்படுத்தி வருவதுடன், நாம் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றோம் என்பதையும் தற்போது ஜெனீவாவில் இடம்பெறும் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் மீண்டும் எடுத்தியம்பியுள்ளது.

அம்பிகையின்போராட்டத்திலாவது நாம் இதனை உணர்ந்தவர்களாக அவரின் கோரிக்கைகளை ஒற்றுமையாக அனைத்துலக நாடுகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நாடுகளிடையே பேதம் பார்க்காது உறவுகளை வலுப்படுத்துவோமாக இருந்தால் அதுவே நாம் சரியான பாதையில்பயணிப்பதற்கான முதல் படியாகும்.

யுத்தத்துக்கு பின் முல்லைத்தீவில் 67 விகாரைகள் – அம்பலப்படுத்தும் ஓக்லாண்ட் ஆய்வு அறிக்கை

வடக்கு -கிழக்கு மாவட்டங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மிகவும் தீவிரமான நில அபகரிப்பு இராணுவம் மற்றும் அரச திணைக்களங்களினால் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும், இராணுவமயமாக்கல் அதீதமான அளவில் காணப்டுவதாகவும் உலகின் பல நாடுகளிலும் நில ஆக்கிரமிப்பு பற்றி ஆய்வு நடத்திவரும் ஓக்லாண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்த ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

முல்லைத்தீவில் பொதுமக்கள் மற்றும் இராணுவம் இடையிலான விகிதம் 2:1 என்ற அளவில் இருப்பதாகவும், சுமார் 100 க்கும் மேற்பட்ட முகாம்கள் மிகவும் நெருக்கமாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவக்கும் நாயாறுக்கும் இடையிலான 15 கிலோ மீற்றர் , முல்லைத்தீவுக்கு தாண்டுவனுக்கும் இடையிலான 15 கிலோ மீற்றர் , முல்லைத்தீவுக்கு ஓட்டுசுட்டானுக்கும் இடையிலான 26 கிலோ மீற்றர், முல்லைத்தீவுக்கு புதுக்குடியிருப்புக்கும் இடையிலான 17 கிலோ மீற்றர் பகுதிகளில் மட்டும் 33 இராணுவ முகாம்கள் இருப்பதாகவும் அளவுக்கு அதிகமான இராணுவமயமாக்கல் பொதுமக்களின் வாழ்வாதார செயற்பாடுகளை மிக மோசமாக பாதித்துள்ளதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இராணுவத்தினர் மட்டும் ஆகக்குறைந்தது 16, 910 ஏக்கர் தனியார் மற்றும் அரச காணிகளை முல்லைத்தீவில் அபகரித்துள்ளனர். இதுபற்றிய விபரமான புள்ளிவிபரம் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் காடுகளுக்குள் இருக்கும் முகாம்களுக்காக சுவீகரிக்கப்பட்டுள்ள நிலம் கணக்கில் எடுக்கப்படவில்லை.

வன இலாகா திணைக்களம் 32, 110 ஏக்கர், வனஜீவராசிகள் திணைக்களம் 23, 515 ஏக்கர், தொல்பொருள் திணைக்களம் 202 ஏக்கர், மகாவலி அதிகாரசபை 4,368 ஏக்கர் நிலத்தையும் அபகரித்துள்ளன. அத்துடன், சுமார் 25, 000 ஏக்கருக்கும் அதிகமான நிலம் மணலாற்றில் வெலிஓயா பிரசதேச செயலக பிரிவு உருவாக்குவதற்காக கடந்த பல வருடங்களாக அபகரிக்கபப்ட்டுள்ளது. மொத்தமாக 80, 000 ஏக்கருக்கும் அதிகமான நிலம் முல்லைத்தீவில் இராணுவம் மற்றும் அரச திணைக்களங்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இது காடுகள் தவிர பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உரிய மொத்த நிலபபரப்பில் ( 201,617 ஏக்கர்) 40 சத வீதத்துக்கும் அதிகமாகும்.

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் முல்லைத்தீவில் மட்டும் 67 பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன.”