கூட்டு முயற்சியில் திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் அபிவிருத்தி – மீண்டும் வலியுறுத்தும் இந்தியா

இலங்கை – இந்திய கூட்டு ஒத்துழைப்புகளின் முக்கிய மற்றும் முன்னுரிமை மிக்க பரிமாணங்களில் ஒன்றாக எரிசக்தி ஒத்துழைப்பு அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் தீவுப்பகுதிகளின் எரிசக்தி பாதுகாப்பிற்காக இலங்கையுடன் இணைந்து பணியாற்ற உறுதிப்பூண்டுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.

Image result for indian flag

இவ்வாறானதொரு நிலையில் திருகோணமலை எண்ணெய் தாங்கிகளின் வளர்ச்சி மற்றும் செயற்பாட்டிற்கான பரஸ்பர நன்மை பயக்கும் வகையில் இரு தரப்பு ஒத்துழைப்புடன் ஊக்குவிப்பது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில் இரு தரப்பு கூட்டு உற்பத்தி உறுதிப்பாட்டை தொடர்வதற்கு எதிர்பார்ப்பதாக இந்திய மேலும் தெரிவித்துள்ளது.

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை மீண்டும் இலங்கை வசமாக்குவது குறித்து கடந்த 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்திய உயர்ஸ்தாணிகர் கோபால் பாக்லே மற்றும் இலங்கை தரப்பினருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடல் வெற்றியளித்துள்ளதாகவும் அதனடிப்படையில் 2017 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட கூட்டு முயற்சிக்கான இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை அறிவித்துள்ளது.

2003 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வழங்கப்பட்ட இந்த எண்ணெய் தாங்கிகளை மீளப்பெற்றுக்கொள்வதில் இலங்கை நீண்ட காலமாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்த போதிலும் இந்தியா கூட்டு முயற்சியிலான திட்டங்களையே வலியுறுத்தி இருந்தது. இதனையே தற்போதும் வலியுறுத்தியுள்ளதாக இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

மறுபுறம் வடக்கில் நெடுந்தீவு , அனலைதீவு மற்றும் நைனாதீவு ஆகிய மூன்று தீவுகளை உள்ளடக்கி புதுப்பிக்கத்தக்க இரட்டை ரக சக்தி திட்டம் சீனாவுடன் இணைந்து முன்னெடுக்கப்பட உள்ளதாக இலங்கை அண்மையில் அறிவித்திருந்தது.

அதனை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் கடந்த செவ்வாய்க்கிழமை அரசாங்கம் உறுதியாகவே சீனாவுடன் குறித்த திட்டத்தை முன்னெடுப்பதாக அறிவித்திருந்த நிலையிலேயே திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் விவகாரம் மற்றும் தீவுப்பகுதிகளுக்கான எரிசக்தி பாதுகாப்பு குறித்து இரு தரப்பும் நிலைப்பாடுகளை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

சீரற்ற நிதி நிலையால் தேசிய நிறுவனங்களுக்கே கடும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது: Fitch Ratings

இலங்கையில் நிலவும் சீரற்ற நிதி நிலைமை காரணமாக தேசிய நிதி நிறுவனங்களுக்கே கடும் அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச மதிப்பீட்டு நிறுவனமான Fitch Ratings தெரிவித்துள்ளது.

இலங்கை நிறுவனங்களின் வலுவான வணிகத்தன்மை, நிதி திரவத்தன்மை மற்றும் அரச அழுத்தங்களிலிருந்து விடுபடும் தன்மை என்பனவே இந்த நிலைக்கு காரணமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2020 நவம்பர் மாதம் இலங்கையின் சர்வதேச நிதி தரப்படுத்தலை B நெகட்டிவிலிருந்து (B-) CCC வரை Fitch Ratings குறைத்தது.

சர்வதேச கடன் பெறல், சர்வதேச முதலீடுகளை நாட்டிற்கு கவர்ந்திழுத்தல், நிதி கிடைத்தல் போன்ற விடயங்களில் இந்த Fitch Ratings அறிக்கை தாக்கம் செலுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்கள் அரசியல்வாதிகளின் எடுபிடிகளாக இருக்கக்கூடாது! ரெலோ இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ்

வடகிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள் அரசியல் வாதிகளின் எடுபிடிகளாகக் கூடாது என வலியுறுத்தியுள்ளார் ரெலோ இளைஞர் அணித் தலைவர் சபா குகதாஸ்.

இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில்,

வடக்கு கிழக்கு தமிழர் தாயகப்பகுதியில் சிவில் சமூக அமைப்புக்கள் 2009 ஆண்டின் பின்னர் பலமாக இல்லை என்பது பாரிய குறைபாடாக தமிழ் மக்கள் மத்தியில் உள்ளது. காரணம் மக்களின் ஒன்றிணைந்த குரலை ஒரு திரட்சியாக்கி அரசியல் அரங்கில் அதிர வைப்பதற்கும் பாதிக்கப்பட்ட தரப்புக்களின் குரலை உயர்த்தவும் அதற்கான நீதியை பெற்றுக் கொள்ளவும் பக்க சார்பு அற்ற அமைப்பாக சிவில் சமூக அமைப்பே வழி நடத்த முடியும். இதனால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் சிவில் சமூக அமைப்புக்கள் பலம் பெறுவது காலத்தின் கட்டாயம் ஆகும்.

தமிழர்களின் விடுதலையை, அரசியல் அபிலாசைகளை, மறுக்கப்பட்ட நீதியை,பாதிக்கப்பட்ட தரப்பின் நியாயங்களை, அரசியல் கட்சிகளின் ஒற்றுமையை,கட்சிகளின் கொள்கை உறுதியை சரியாக வழி நடத்த பலமான அரசியல் கலப்பற்ற பக்க சார்பற்ற சிவில் சமூக அமைப்பு அவசியமானதாகும்.

தமிழர்களின் விடுதலைக்கு அரசியல் பிரவேசம் இல்லாத சுயலாப நோக்கம் இல்லாத சிவில் சமூக தலைவர்கள் அவசியம் அந்த வகையில் தற்போது வடக்கு கிழக்கில் ஒன்றிணைந்த சிவில் சமூக அமைப்புக்கள் தங்களை முன்மாதிரியாக காட்டி ஈழத் தமிழர்களுக்கு நேர்மையான அமைப்பை கட்டியெழுப்ப வேண்டும்.

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை ஒரு மாபெரும் மக்களின் திரட்சியை ஒன்றிணைத்த சிவில் சமூக அமைப்புக்கள் தொடர்ந்து அரசியல் கலப்பற்று அரசியல் பதவிகளை சுயலாபத்திற்காக குறி வைக்காது ஒரு சில அரசியல்வாதிகளின் எடுபிடிகளாக மாறாது அரசியல் கட்சிகளின் பின்னால் போகாது இனத்தின் விடுதலைப் பயணத்திற்கு சரியான பக்க சார்பற்ற வழிகாட்டியாக செயல் ஆற்றுங்கள். நிச்சயமாக நீங்கள் தமிழர்களின் இன ஒற்றுமைக்கும் அரசியல் கட்சிகளின் ஒற்றுமைக்கும் வலுச் சேர்ப்பவர்களாக மாறுவீர்கள்.

இதுவரை சிவில் சமூக அமைப்பின் பலத்தை ஒரு சிலர் தவறாக பயன்படுத்தியதன் வெளிப்பாடே மக்கள் சிவில் சமூக அமைப்புக்களில் நம்பிக்கை இழந்தமையாகும் ஆகவே தற்போது உள்ள வடகிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள் நேர்த்தியான செயற்பாடுகளை முன்னெடுத்து இனத்தின் விடுதலைக்கு அர்பணிப்புடன் பணியாற்றுங்கள் உங்களுக்கு பாதுகாப்பாக சகல சக்திகளும் இருக்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளை வழி நடத்துபவர்களாகவும் தடம் மாறும் அரசியல்வாதிகளை மக்களுக்கு இனம் காட்டுபவர்களாகவும் உங்கள் செயற்பாடுகள் அமைய வேண்டும்.

பாரிய மக்கள் எழுச்சியின் வெற்றியை தனி மனித வெற்றியாக கற்பனை செய்து புதிய அமைப்புக்களை உருவாக்குதல் மக்கள் மத்தியில் சிவில் சமூக அமைப்பின் நல்லெண்ணத்தை சிதைத்துவிடும் ஆகவே பொது நோக்கில் இனத்தின் விடுதலையே எமது வெற்றி என ஒன்றிணைவோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

‘இலங்கையில் பாஜக ஆரம்பிக்கும் நோக்கம் உள்ளது’ – மறவன்புலவு க. சச்சிதானந்தன் – பிபிசி தமிழ்

பாரதிய ஜனதா கட்சி நேபாளம் மற்றும் இலங்கையில் தனது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான அமித் ஷாவை மேற்கோள்காட்டி திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சர் பிப்லப் குமார் தேப் வெளியிட்ட கருத்து இலங்கையில் பேசு பொருளாக மாறியுள்ளது.

இலங்கையில் பாஜக கிளையை தொடங்க இங்குள்ள இந்துத்துவவாதிகள் விரும்புகின்றனர் என்கிறார் இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர்.

பிப்லப் குமார் தேப் வெளியிட்ட கருத்து தொடர்பான தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளதாக நேபாள வெளியுறவு அமைச்சர் பிரதீப் க்யாவாலி ட்விட்டர் பயனர் ஒருவருக்கு பதில் அளித்துள்ளார். இந்தியாவில் உள்ள நேபாள தூதரகமும் இந்திய அதிகாரிகளிடம் தங்கள் எதிர் கருத்தைத் தெரிவித்துள்ளாக நேபாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனிடையே, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுத் திட்டங்கள், இந்திய வம்சாவளித் தமிழ் மக்களுக்கான உதவிகள், 5 லட்சம் கோவிட் தடுப்பூசிகள் உள்ளிட்டவற்றை இலங்கையில் அரசியல் கட்சியை ஆரம்பிக்கும் நோக்குடனேயே பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான இந்திய அரசு செய்தது என்றும் பேச்சுகள் எழுந்துள்ளன.

‘தமிழர் பகுதிகளில் தேவையற்ற அழுத்தம்’

இலங்கை தமிழர் பகுதிகளில் தேவையற்ற விதத்தில் அழுத்தங்களை உண்டாக்குவதற்காக இவ்வாறான கருத்தொன்று வெளியிடப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுவதாக ராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தை நிர்க்கதி நிலைக்கு உட்படுத்தி, இந்தியாவிற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளா மேற்கொள்ளப்படுகின்றது எனவும் கேள்வி எழுவதாக அவர் கூறியுள்ளார்.

அதேபோன்று, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வழங்க மறுப்பு தெரிவித்த சந்தர்ப்பத்தில் இருந்தா, இவ்வாறான திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது எனவும் ராஜாங்க அமைச்சர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, இந்திய அரசாங்கத்தின் உள்ளக நோக்கம் என்னவென்பது தொடர்பில் முதலில் ஆராய வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரகொடி தெரிவிக்கின்றார்.

திடீரென வெளியிடப்பட்ட கருத்தின் ஊடாக, இதனை புரிந்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

‘நோக்கம் உள்ளது’ – இலங்கை சிவ சேனை

இலங்கைப் பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சியொன்றை ஆரம்பிப்பதற்கான நோக்கம் உள்ளதாக இலங்கை சிவ சேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலுள்ள இந்துத்துவவாதிகளுக்கே இவ்வாறான நோக்கம் ஒன்று உள்ளதாகவும் தான் உறுதிபட கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் உள்ள கட்சிகளின் பெயரை இலங்கையில் பெயராக்கி கட்சி தொடங்குவது புதிய செய்தி அல்ல என அவர் நினைவூட்டியுள்ளார்.

இந்தியாவின் விடுதலை இயக்கமான இந்திய தேசிய காங்கிரஸின் வெற்றிகரமாக செயலைப் பார்த்துக் கொழும்பில் சிங்களவரும் தமிழரும் இணைந்து உருவாக்கியது இலங்கை தேசிய காங்கிரஸ் என அவர் கூறியுள்ளார்.

இலங்கை வரலாறு இந்தியப் பண்பாட்டை தழுவியதாகவே உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் என்ன சொல்கிறது?

பாரதீய ஜனதா கட்சியின் நடவடிக்கைகளை இலங்கையில் ஆரம்பிக்கவுள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவராக அமித் ஷா கருத்தொன்றை வெளியிட்டதாக உறுதியான தகவல்கள் எதுவும் கிடையாது இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் உதய கம்மன்பில இதனைத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான கருத்தொன்றை அமித் ஷா கூறியதாக திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சரே தெரிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவராக அமித் ஷா, இவ்வாறான கருத்தை வெளியிடும் வகையிலான காணொளி அல்லது அறிக்கை இதுவரை ஊடகங்களுக்கு கிடைக்கவில்லை என அவர் குறிப்பிடுகின்றார்.

அவ்வாறு பாரதிய ஜனதா கட்சி இலங்கையில் அரசியல் கட்சியொன்றை ஆரம்பித்து, தனது அரசியலை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு, இலங்கை வாழ் தேச பற்றாளர்கள், வெளிநாட்டு கட்சியொன்றுக்கு ஆதரவு வழங்குவார்கள் என தான் நம்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு கட்சி இலங்கையில் போட்டியிட முடியுமா?

இலங்கை அரசியலமைப்புக்கு அமைய, வெளிநாட்டு கட்சியொன்றை இலங்கையில் பதிவு செய்வதற்கான சந்தர்ப்பம் கிடையாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

இலங்கையிலுள்ள கட்சிகளுக்கு வெளிநாட்டு கட்சிகளுடன் தொடர்புகளை பேண முடியும் என்ற போதிலும், வெளிநாட்டு கட்சியொன்று நாட்டிற்குள் பதிவு செய்ய முடியாது எனவும் அவர் கூறினார்.

இலங்கை குடியுரிமை பெறாத ஒருவரால், இலங்கையில் கட்சியொன்றை ஆரம்பிக்கவோ வாக்களிக்கவோ முடியாது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் விரைவில் எமது வசமாகும் – உதய கம்மன்பில

திருகோணமலையிலுள்ள எண்ணெய் தாங்கிகள் மிக விரைவில் இலங்கை வசமாகவுள்ளதாக எரிசக்தி அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து இந்திய உயர்ஸ்தானிகருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவு பெற்றதாகவும் கொலன்னாவையில் இன்று (17) இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் கூறியுள்ளார்.

2017 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களையும் புறந்தள்ளி, தாம் முன்வைத்த நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதற்கு இந்த பேச்சுவாரத்தையின் போது இணக்கம் காணப்பட்டதாகவும் அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

அலி சப்ரியை பதவி நீக்காவிடின் அரசாங்கம் பலவீனமடையும் – ஞானசார தேரர்

நீதியமைச்சர் அலி சப்ரி நாட்டு தலைவர் அல்ல இவர் வரையறைகளுக்குட்பட்டு செயற்பட வேண்டும். பௌத்த மத உரிமை சட்டங்களில் கை வைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய பெரும்பான்மை மக்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு.

நீதியமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கள் அடிப்படைவாதத்தை தோற்றுவிக்கும் வகையில் உள்ளது நீதியமைச்சர் பதவியில் இருந்து இவரை நீக்க வேண்டும். இல்லாவிடின் இவராலேயே இந்த அரசாங்கம் பலவீனமடையும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார்.

பொதுபல சேனா அமைப்பின் காரியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பௌத்த மத கல்வி எவ்விடத்திலும் அடிப்படைவாதத்தையும்,பிற மதங்களை அழிக்க வேண்டும் என்றும் போதிக்கவில்லை.பௌத்த மத கொள்கையினை கொண்டுள்ள நாட்டில் அடிப்படைவாதம் தலைதூக்கவில்லை. இலங்கையில் பௌத்த அடிப்படைவாதம் கிடையாது. ஆனால் இஸ்லாமிய அடிப்படைவாதம் உள்ளது.

மத்ரஸா பாடசாலை, காதி நீதிமன்றம், ஷரியா சட்டம் ஆகியவை நாட்டுக்கு பொறுத்தமற்றது என்பதை பல முறை குறிப்பிட்டுள்ளோம். மத்ரஷா பாடசாலை,ஷரியா சட்டம் ஆகியவை இஸ்லாமிய அடிப்படைவாதத்தை போதித்து தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.

ஒரு நாடு ஒரு சட்டம் என்ற கொள்கையினை செயற்படுத்த வேண்டுமாயின் மேலைத்தேய சட்டம், தேசவழமை சட்டம் ஆகியவற்றை நீக்க வேண்டும் என நீதியமைச்சர் அலி சப்ரியின் வாதம் தேவையற்றதாகும்.பௌத்த மத உரிமைகளை பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்டங்களில் கை வைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

பௌத்த மத சட்டங்களும், பௌத்த கல்வியும் நாட்டில் பௌத்த அடிப்படைவாதத்தையும், வன்முறைகளையும் தூண்டவில்லை. ஆனால் மத்ரஸா பாடசாலை, ஷரியா சட்டம் ஆகியவை இஸ்லாமிய அடிப்படைவாதத்தை தோற்றுவிக்கிறது.அதற்கு பல ஆதாரங்கள் உண்டு. முஸ்லிம் விவாக சட்டத்தில் ஒரு தரப்பினரது உரிமை மீறப்படுகிறது. இது பொது சட்டத்திற்கு புறம்பானது.

பௌத்த மத உரிமை பாதுகாக்கும் சட்டங்களை நீக்க பெரும்பாலான மக்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள். இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்கவே பெரும்பான்மையின மக்கள் தனி சிங்கள அரசாங்கத்தை தோற்றுவித்தார்கள். ஆகவே நீதியமைச்சர் அலி சப்ரி நாட்டின் தலைவர் என்று நினைத்துக் கொண்டு கருத்துரைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

நீதியமைச்சரது கருத்துக்கள் தேவையற்ற பிரச்சினைகளை தோற்றுவிக்கும் வகையில் உள்ளது. ஆகவே இவரது செயற்பாடு குறித்து ஜனாதிபதி உரிய கவனம் செலுத்த வேண்டும். நீதியமைச்சர் பதவியில் இருந்து இவரை விலக்குவது சிறந்ததாகும். இல்லாவிடின் இவரால் வெகுவிரைவில் அரசாங்கம் பலவீனமடையும் என்றார்.

Posted in Uncategorized

இலங்கை தற்போது முழுமையாக, சீனாவின் காலனித்துவ நாடாக மாறிவிட்டது – சந்திரிகா

நாங்கள் உயிரைப் பணயம் வைத்து உருவாக்கிய நாடு இப்போது பின்னோக்கி செல்கிறது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்

இலங்கை தற்போது முழுமையாகச் சீனாவின் காலனித்துவ நாடாக மாறிவிட்டது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க மறைந்த விஜய குமாரதுங்கவின் 33ஆவது நினைவுதின நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து கடற்படையினர் விலக்கப்படமாட்டார்கள் – இலங்கை அரசாங்கம் அறிவிப்பு

சீனாவின் நிதியுதவியில் அமைக்கப்பட்டுள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து கடற்படையினர் விலக்கிக்கொள்ளப்படமாட்டார்கள் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச,சீன ஜனாதிபதியிடம் தமது நிலைப்பாட்டை விளக்கியுள்ளதாக அமைச்சரவையின் இணைப்பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

2017ஆம் ஆண்டு டிசம்பரில் செய்துக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் படி ஹம்பாந்தோட்டை

துறைமுகத்தின் செயற்பாடுகள் சீனாவின் சர்வதேச துறைமுகக்குழுவுக்கும், ஹம்பாந்தோட்டை துறைமுகச்சேவைகள் நிறுவனத்துக்கும் கையளிக்கப்பட்டது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு கையளித்த நிலையில் இந்தியா தமது பாதுகாப்பு தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மருத்துவர்களின் உதவிக்கான இறுதிஅழுகுரலை நாங்கள் செவிமடுத்திருக்கின்றோம்

காயமடைந்தவர்களிற்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தவேளை எறிகணை தாக்குதலிற்கு உள்ளான மருத்துவமனைகளின் மருத்துவர்களின் உதவிக்கான இறுதிஅழுகுரலை நாங்கள் செவிமடுத்திருக்கின்றோம் என முன்னாள் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி ஆறுமாதங்களும் பல முறை சர்வதேச தொலைக்காட்சிகளில் வெளியாகியுள்ளன.

நாங்கள் பயங்கரவாத அமைப்பான விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர்கள் என குற்றம்சாட்டப்படுபவர்களை இலங்கை இராணுவம் அவர்கள் வெள்ளை கொடியை காண்பித்தவேளையிலும் சுட்டுக்கொல்வதை பார்த்திருக்கின்றோம்.

தமிழ்பொதுமக்கள் மீதான கடுமையான விமான குண்டுவீச்சுகளையும் அவர்களின் வீடுகள் மருத்துவமனைகள் கோவில்கள் அடைக்கலம் கோரிய இடங்கள் அழிக்கப்பட்டதையும் நாங்கள் பார்த்திருக்கின்றோம்.

பயங்கரவாதிகள் என குற்றம்சாட்டப்படுபவர்கள் கைதுசெய்யப்பட்ட பின்னரும் இந்த தாக்குதல் இடம்பெற்றது.
காயமடைந்தவர்களிற்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தவேளை எறிகணை தாக்குதலிற்கு உள்ளாது.

மருத்துவமனைகளின் மருத்துவர்களின் உதவிக்கான இறுதிக்குரலை நாங்கள் செவிமடுத்திருக்கின்றோம்.

Posted in Uncategorized

இறுதி நேரத்தில் இரத்தானது பாகிஸ்தான் பிரதமரின் பாராளுமன்ற உரை

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பாராளுமன்ற உரை இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எதிர்வரும் 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இலங்கை வருகின்றார்.

No description available.

இந்த விஜயமானது இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ , பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை சந்தித்து பாக்கிஸ்தான் பிரதமர் கலந்துரையாடவுள்ளார்.

மேலும் 24 ஆம் திகதி கொழும்பில் இடம்பெறும் வர்த்தக மற்றும் முதலீட்டு மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளதுடன் பாராளுமன்ற விஜயம் மற்றும் விளையாட்டு மையம் திறப்பு ஆகிய நிகழ்வுகளில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கலந்துக்கொள்வார் என தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமரின் விஜயம் 22 ஆம் திகதி இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் 23 ஆம் திகதியே இடம்பெறுவதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் உயர்ஸ்தாணிகராலயம் ஊடாக இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றுவது குறித்து கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இவ்வாறானதொரு நிலையில் பாகிஸ்தான் பிரதமரின் பாராளுமன்ற உரை இடம்பெறாது என பாராளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ஷான் விஜேதுங்க வீரகேசரிக்கு தெரிவித்தார்.

பாகிஸ்தான் பிரதமரின் விஜயம் மற்றும் அவரது பாராளுமன்ற உரை தொடர்பிலும் கடந்த 8 ஆம் திகதி திங்கட்கிழமை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இதன் போது பாராமன்றத்தில் உரை நிகழ்த்துவதற்கு வாய்ப்பளிக்க இணக்கப்பாடு எட்டப்பட்ட போதிலும் இறுதி தீர்மானத்தை எடுக்கும் நோக்கில் 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன் போதே பாக். பிரதமருக்கு 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கான வாய்ப்பை அளிக்க முடியும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்த போதிலும் இறுதி தீர்மானம் எடுக்கப்பட வில்லை.

மேலும் தேநீர் விருந்துபசாரம் , பன்னாட்டு இராஜதந்திரிகள் அழைப்பு மற்றும் சுகாதார விதிமுறைகள் உள்ளிட்ட விடயங்கள் சபாநாயகர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் கவனத்தில் கொள்ளப்பட்டிருந்தது.

பொதுவாகவே இலங்கை வரும் பன்னாட்டு தலைவர்களும் பாராளுமன்றத்தில் உரையாற்றுவதில்லை.

ஆனால் விசேடமாக கோரிக்கை விடும் பட்சத்தில் இராஜதந்திர சம்பிரதாயங்களுக்கமைவாக உரையாற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.

இவ்வாறானதொரு இராஜதந்திர சம்பிரதாயங்களுக்கமையவே இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வந்திருந்த போது பாராளுமன்றத்தில் உரைநிகழ்த்தியிருந்தார்.

எவ்வாறாயினும் பாக். பிரதமரின் பாராளுமன்ற உரை இறுதி நேரத்தில் கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.