முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரி கவனயீர்ப்பு போராட்டம்

மாணவியின் மரணத்தை கண்டித்து முல்லையில் ஆர்ப்பாட்ட பேரணி.

முல்லைத்தீவு மாவட்டத்தில் சிலாவத்தை பகுதியில் அண்மையில் சிகிற்சைக்கா அனுமதிக்கப்பட்ட பாடசாலை மாணவி வைத்தியசாலையின் அசமந்த போக்கு காரணமாக உயிரிழந்த அந்த துன்பியல் நிகழ்வானது பொது மக்களிடையேயும், வைத்தியசாலையின் வட்டாரத்திலும் பாரிய அதிர்வலைகளை தோற்றுவித்திருந்தது.

மாணவி மரணித்த அந்த துன்பியல் நிகழ்வை கண்டித்தும் வைத்தியசாலை மற்றும் வைத்தியர்களின் அசமந்த போக்கை கண்டித்தும், சிறுமியின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்திய அதே நேரத்தில் வைத்தியசாலையில் இருந்து இவ்வாறான உயிர் இழப்புகள் ஏற்படாதவாறு அதாவது வைத்தியர்களினதும் வைத்தியசாலையினதும் அசமந்த போக்கு மற்றும் பொறுப்பற்ற தனத்தால் எதிர்காலத்தில் இவ்வாறான உயிரிழப்புகள் ஏற்படாதவகையிலும், மருத்துவத்திற்காக அனுமதிக்கப்படும் நோயாளர் மட்டில் பொறுப்பாக நடந்துகொள்ளவேண்டும் என்பதனையும் வலியுறுத்திய முல்லைத்தீவு மாணவர்கள் மற்றும் மக்களால் கண்டன ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் 29/12/2025 திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

மேலும் இவ் விடயம் தொடர்பாக ஜனாதிபதி அவர்களது கவனத்திற்கு கொண்டுசெல்வதற்கான முழு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதுடன் இன்றைய போராட்டத்தின் உணர்வுகளையும், மக்களின் உரிமைகளையும், உணர்வுகளையும் மதித்து அவர்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாகவும் மக்களுக்கான நீதியை பெற்றுக்கொடுக்கும் வகையிலும் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ரெலோ தலைவருமான கெளரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்களும் மக்களின் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

ஈழமக்கள் மீதும் ஈழ விடுதலைமீதும் தனியாத ஈர்ப்புக்கொண்டு இதய தெய்வமாய் வாழ்ந்த எம் ஜி ஆர் அவர்கள் இறந்த தினம் 24-12-25

எமது ஈழ தமிழ் மக்கள் மீதும் ,ஈழத்தின் மீதும் மிகுந்த ஈர்ப்பு கொண்டவராக மக்கள் மனதில் இதய தெய்வமாக போற்றப்படுகின்றவராக இன்றும் நினைவில் கொள்ளப்படுபவர் தமிழ்நாட்டின் மறைந்த முதல்வர் மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்கள் என்றால் அது மிகையாகாது.

ஈழமக்களின் மீது ஈழத்தின் மீதும் அவர் கொண்டிருந்த பற்றின் நிமித்தமாக பல்வேறுபட்ட உதவிகளை ஆற்றியிருந்தார். எமது தாயக மக்களுக்கு அவர்கள் மேல் சிங்கள அரசினால் கட்டவிழ்த்துவிட்ட ஒவ்வொரு இனக்கலவரங்களின் போதும் மக்கள் தமிழ்நாட்டில் தஞ்சம் கோரிய நிலையில் எமது மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கிய வள்ளல் எமது எம் ஜி ஆர் அவர்கள்.

இந்திய மத்திய அரசாங்கத்திடமும், இலங்கையை ஆண்ட ஆட்சியாளர்களிடத்திலும் ஈழ மக்கள் சார்பான தொடர்ச்சியான கோரிக்கைகளை முன்னிறுத்தி மக்கள் மீது தொடுக்கப்படும் அத்துமீறல்களுக்கு எதிராகவும், இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்தவர் எமது மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்களாவார்.

மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்கள் இறந்து 38 வருடங்கள் நிறைவுற்றாலூம் அவர்களின் இறந்ததினமாகிய இன்று அவர் ஈழ மக்கள் மீதும் ஈழ விடுதலைமீதும் கொண்டிருந்த அளவுகடந்த பற்றினை மீண்டும் நினைவில் கொள்வது இன்றைய நாளில் பொருத்தமானதே.

அ.அடைக்கலநாதன்.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்
தலைவர்
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ)

யாழ்.மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் தவிசாளர் நிரோஷ் வெளியிட்ட தகவல்

உள்ளூராட்சி மன்றங்களின் சபை அனுமதிக்கு பின்பே யாழிற்கான அபிவிருத்தியை ஆராய முடியும் என ரெலோ வின் தலைமை குழு உறுப்பினரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்துள்ளார்.

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட யாழ்.குடாநாட்டின் பத்து ஆண்டுக்கான திட்டம் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் அனுமதிக்காக அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு அனுமதி கோரப்பட்டது.

சபைத் தீர்மானங்கள்

இதன் போது வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் 10 ஆண்டுகளுக்கான அபிவிருத்தித் திட்டம் உள்ளுராட்சி மன்றங்களுக்கு ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட அவைகள் அமைந்துள்ளன.

எனவே இதனை ஏற்பதாயின் உள்ளூராட்சி மன்றங்களின் சபைத் தீர்மானங்கள் அவசியம். சபைத் தீர்மானங்கள் இன்றி அபிவிருத்தினை ஏற்பது உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்களையும் காத்திரமான அபிவிருத்தி இலக்கினையும் மீறுவதாகும்.

சபையில் வரைபை நாம் ஆராய்ந்து காத்திரமான பொருத்தமான முடிவுகளை எடுக்கவேண்டும். அதுவரையில் ஒத்திவைக்க வேண்டும் என மாவட்ட அபிவிருத்திக் குழுவில் தெரிவித்தார்.

வல்வெட்டித்துறை நகரபிதா சிவாஜிலிங்கமும் வரைபில் போதாமைகள் காணப்படுகின்றன என்றார்.

இந்த விடயம் விவாதத்திற்கு உள்ளாகிய போது நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், மேற்படி வரைபை இன்றே நிறைவேற்ற வேண்டும் என்றும் நகர அபிவிருத்தி தொடர்பான விடயத்திற்கும் உள்ளூராட்சி மன்றத்திற்கும் என்ன தொடர்பு என கேள்வி எழுப்பினார்.

ஆட்சி முறைமை

இதற்கு பதிலளித்த தவிசாளர் நிரோஷ் ஆட்சி முறைமை தொடர்பான அறிவில் தாங்கள் பூச்சியமாக உள்ளீர்கள். உள்ளுராட்சி மன்றங்களே அபிவிருத்தி தொடர்பான விடயங்களில் அதிகாரமுடையவை. உள்ளூராட்சி மன்றங்களின் அனுமதியின்றி ஒத்துழைப்பின்றி அபிவிருத்தியினை முன்கொண்டு செல்ல முடியாது என்றார்.

இந் நிலையில் மாவட்ட அபிவிருத்தி அனுமதியை வழங்குவோம் பின்னர் தங்களுடைய சந்தேகங்களை உள்ளூராட்சி மன்றங்கள் தீர்த்துக்கொள்ளட்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

இதனை வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் நிரோஷ் தாம் ஒட்டுமொத்தமாக ஏற்க முடியாதெனத் தெரிவித்தார்.

இந் நிலையில் எதிர்வரும் ஒரு மாதத்திற்குள் உள்ளூராட்சி மன்றங்கள் ஆராய்ந்து உரிய அவைத் தீர்மானங்களை வழங்க முடியுமா என அரச அதிபர் ம. பிரதீபனினால் கோரப்பட்டது.

அதற்கு தவிசாளர்கள் சம்மதித்த நிலையில் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் அமைச்சர் சந்திரசேகரனினால் உள்ளூராட்சி மன்றங்களின் அனுமதியைப் பெற்று எதிர்வரும் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இந்தவிடயம் எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது.

Posted in Uncategorized

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள வலிகாமம் – கிழக்கு பிரதேச சபை தவிசாளர்

ரெலோ வின் தலைமை குழு உறுப்பினரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தில் ஈடுப்பட்டபோது கைது செய்யப்பட்ட அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸாரின் நடவடிக்கை

மேற்குறிப்பிட்ட போராட்டம், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போது வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் வேலன் சுவாமிகள் உள்ளிட்ட ஐவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பின்னர் மல்லாகம் நீதிமன்றினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இவ்வாறாக பொலிஸாரினால் கைது செய்யப்படும் போது கடும் சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டே கைது செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்படுகின்றது.

இவ்வாறு தாக்குதல்களுக்கு உள்ளான வேலன் சுவாமிகள் ஏற்கனவே யாழ். போதானா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஆண்கள் விடுதி 9இல் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் 24-12-2025 ஆம் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தையிட்டி அமைதி வழி போராட்டத்தில் பொலிசாரின் சித்திரவதை தொடர்பில் சர்வதேச துதுவராலயங்களுக்கு முறையிட்டுள்ளேன் – தவிசாளர் தியாகராஜா நிரோஷ்

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக அமைதி வழியில் ஜனநாயக ரீதியாக போராடிய எம்மை அரச அறிவுறுத்தலின் பேரில் பொலிசார் கடுமையாக சித்திரவதை செய்துள்ளனர். சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவேண்டிய பொலிசாரின் இம் மிலேச்சத்தனமான பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதியான அணுகுமுறைகளுக்காக அழுத்தத்தினைப் பிரயோகிக்குமாறு வெளிநாட்டுத் துதுவராலயங்கள் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் ரீதியிலான பொறிமுறைகளுக்கும் அரசுக்கு உதவி அளிக்கும் நிறுவனங்களுக்கும் ரெலோ வின் தலைமை குழு உறுப்பினரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் கோரியுள்ளார்.

இலங்கையில் தமக்கு எதிராக இடம்பெற்ற சித்திரவதைகள் தாம் பௌத்த சிங்கள ஆக்கிரமிப்பினை எதிர்த்த வேளை இடம்பெற்ற தாக்குதல்கள் என்பதால் இலங்கை அரச கட்டமைபினுள்ளாக ஒருபோதும் நீதி கிட்டாது என்பதை நாம் உணர்கின்றோம். அரச கொள்கையும் சட்டங்களும் சட்ட அமுலாக்கமும் பௌத்த சிங்கள பேரினவாத ஆக்கிரமிப்பிற்கு வலுச்சேர்ப்பவையாகவே பேணப்படுகின்றன. யாரும் எதிராக அமையக்கூடாது என்பதில் ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பே இலங்கையில் நடைமுறையில் உள்ளது. எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோதும் மாற்றமின்றி இந் நிலை தொடர்கின்றது. பௌத்த பேரினவாத விஸ்தரிப்பிற்கு எதிராக கடந்த காலத்தில் கௌரவ நீதிமன்றங்களின் தீர்ப்புக்கள் கூட இந் நாட்டில் நடைமுறைப் படுத்தப்படுவதில்லை.

தையிட்டியில் நேற்று வலிகாமம் வடக்கு பிரதேச சபை ஏகமனதாக முன்னெடுத்த சபைத் தீர்மானத்தின் அடிப்படையில் பகிரங்க அகிம்சை வழி போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அப் போராட்டத்தில் கௌரவ நீதிமன்றின் உத்தரவுகளை மதித்தே நாம் போராடினோம். அவ்வாறாகப் போராடிய போது எம்மீது பொலிசார் பிரயோகித்த சித்திரவதையினையும் மனித குல நாகரீகத்திற்குப் ஏற்புடையதல்லாத நடவடிக்கைகள் தொடர்பாகவும் இலங்கையில் உள்ள பிரதான நாடுகளின் வெளிநாட்டுத் தூதுவராலயங்கள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் தொடர்பான நிறுவனங்கள், சித்திரவதைக்கு எதிரான சர்வதேச தாபனங்கள், இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள மனித உரிமைகள் நிறுவனங்கள் மற்றும் ஏனைய தாபனங்களுக்கும் இவ்விடயம் பற்றி போதிய ஆதாரங்களுடன் முறையிட்டுள்ளோம்.

இராணுவமயமாக்கத்தின் கீழ் பொதுமக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளில் அரச அனுசரனையுடன் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தினை பாதிக்கம் வகையில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத விகாரைக்கு எதிராகவே நாங்கள் தொடர்ச்சியாக போராடிவருகின்றோம். அரசாங்கம் இவ்வாறான நீதிகோரிய அகிம்சை ரீதியிலான போராட்டங்கள் மீது அடக்கு முறையினையும் மக்களிடத்தில் அச்சத்தினையும் ஏற்படுத்தும் நோக்கில் பொலிசாரை ஏவிவிட்டு சித்திரவதை செய்து வருகின்றமை உடன் நிறுத்தப்படவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

பெளத்த சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக ஜனநாயக வழியில் போராடிய நாங்கள் மிலேச்சத்தனமாக கைது செய்யப்பட்டோம் – விடுதலையின் பின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ்

தமிழ்மக்களுக்குச் சொந்தமான பூர்வீகக் காணிகள் பௌத்த சிங்கள பேரினவாத சிங்கள நிகழ்ச்சி நிரலுடன் கட்டப்பட்ட சட்டவிரோத விகாரைக்கு எதிராக அதே சமயம் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் ஏகமனதாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக இடம்பெற்ற இந்தப் போராட்டத்திலே நாங்கள் பங்கெடுத்திருந்த போது எங்களில் ஐவரை தேடித் தேடி கைது செய்தனர்.என ரெலோ வின் தலைமை குழு உறுப்பினரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் விடுதலையின் பின் தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் நன்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட கைதாக பொலிசாரின் இந்தக் கைது அமைந்துள்ளது.

குறித்த பௌத்த பன்சலையை நிர்வகிப்பவர்கள் பொதுமக்களுடைய காணிகளை அடாத்தாகக் கைப்பற்றி சட்டவிரோத கட்டிடங்கள் அமைத்து அடாத்தாக இராணுவப்பலத்துடன் தாங்கள் அதனை ஆட்சியுரிமை செய்து முகாமை செய்கின்ற நிலமையிலே நாங்கள் எங்கள் மக்களின் காணிக்காக நீதியுரிமை வேண்டிப் போராடிய நிலையில் கைது செய்யப்படுகின்றோம். கௌரவ நீதிமன்றம் ஏற்கனவே ஒரு தீர்ப்பை வழங்கியதாகவும் சொல்லி இருந்தார்கள். நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம். நீதிமன்ற தீர்ப்புக்கு பாதகமில்லாமல் ஜனநாயக அகிம்சை வழியிலே நாங்கள் போராடி இருந்தோம். இலங்கையிலே பௌத்த சிங்கள பேரினவாதம் தொடர்பில் கடந்தகாலங்களிலே கௌரவ நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகளைக் கூட பொலிசார் நடைமுறைப்படுத்தவில்லை. அது ஒரு அப்பட்டமாகவே தெரிந்த விடயம். குருந்தூர்மலையிலே பொலிசாரை அமுல்படுத்துமாறு நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புக்களை நடைமுறைப்படுத்தவில்லை. அதேபோன்று வெவ்வேறு பட்ட விடயங்களின் அடிப்படையிலே பௌத்த சிங்களப் பேரினவாத நிகழ்ச்சி நிரலை மேற்கொள்வதற்கு எதிராக நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புக்களை குறைந்த பட்சமேனும் நடைமுறைப்படுத்தாத நிலையில் இந்த இடத்தில் அமைதிக்கும் சட்டத்திற்கும் மதிப்பளித்து ஜனநாயக ரீதியில் போராடிய நாங்கள் மிலேச்சத்தனமாக கைது செய்யப்பட்டிருக்கிறோம். இந்தக் கைதுகளின் போதான நடவடிக்கைகள் என்பது எங்களின் பாதுகாபைஇ அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது. எமது மண்ணிலே பௌத்த சிங்கள பேரினவாதத்தை நிலைநிறுத்த வேண்டும். பௌத்த சிங்கள தேசமாக இதனை மாற்ற வேண்டும் என்ற அரசாங்கத்தின் கொள்கைக்கு பொலிசார் செயல்வடிவம் அளிப்பதாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

Posted in Uncategorized

அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் மூன்றாம் கட்ட வெள்ள நிவாரண நிதியுதவி

அகில இலங்கைக் கம்பன் கழகம் தனது உள்நாட்டு, வெளிநாட்டு உறுப்பினர்களின் ஆதரவோடு இயற்கை அனர்த்தத்தால் பாதிப்புற்ற மக்களுக்கு கொழும்பு மாநகர சபையின் மூன்றாம் கட்ட நிதியுதவியான ரூபா 250000/= இரண்டரை இலட்சத்தினை தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவருமான கௌரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் மூலமாக மன்னார் மக்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.

கொழும்பில் உள்ள கம்பன் கழக அலுவலகத்தில் மேற்படி தொகைக்கான காசோலை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நிதியுதவியை வழங்கிய அகில இலங்கை கம்பன் கழகம் ஊடாக நிதியுதவியை வழங்கிய அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.

மன்னார் மாவட்ட நிவாரணங்கள் குறைபாடுகளுக்கான தீர்வு உள்ளீட்டு பலதரப்பட்ட கோரிக்கைகளை ஜனாதிபதி கவனத்திற்கு கொண்டு சென்றார் செல்வம் MP

பேரிடரால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், கால்நடைகளை இழந்தோர், மீனவர்களுக்கான நிவாரணங்கள் மற்றும் மன்னார் மாவட்ட வைத்தியசாலையின் அடிப்படை குறைபாடுகளுக்கான தீர்வு உள்ளீட்டு பலதரப்பட்ட கோரிக்கைகளை ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றார் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்கள்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்கள் தலமையில் மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தம் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று 13.12.2025 தினம்
மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
.
மேற்படி கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவருமான கெளரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் உள்ளிட்ட ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும், வடமாகாண மற்றும், மன்னார் மாவட்ட திணைக்களங்களின் அதிகாரிகளும், பங்கேற்றிருந்தனர்.

கலந்துரையாடலின் போது வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் ஜனாதிபதி அவர்களிடம் முன்வைத்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி அவர்கள் அவற்றுக்கான தீர்வையும் வழங்கியிருந்தார்.

அந்த வகையில் நடைபெற்ற பேரிடரால் வடமாகாணத்தில் அதிகளவு பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்டத்தின் விவசாயிகள், குறிப்பாக ஆடு மாடு போன்ற கால்நடைகளை இழந்தவர்களுக்கான இழப்பீட்டை பாரபட்சமின்றி அனைவருக்கும் வழங்கவேண்டும் என்றும்
மன்னார் மாவட்டத்தில் அதிகளவு பாதிக்கப்பட்ட மீனவர்களின் படகுகளுக்கு மட்டுமே சலுகைகள், நிவாரணம் வழங்கப்படுகிறது என்றும் வாழ்வாதாரமான கடற்றொழில் பாதிக்கப்பட்டு தொழிலுக்கு செல்ல முடியாத நிலையில் மன்னார் மாவட்ட மீனவர்கள் அதிகம் உள்ளதை சுட்டிக்காட்டியதை தொடர்ந்து ஜனாதிபதி அவர்கள் அனைத்து மீனவ குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்குமாறு கட்டளை பிறப்பித்திருந்தார்.

மற்றும் மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் காணப்படும் அடிப்படை தேவைகளை, குறைபாடுகளை பூர்த்திசெய்ய கோரிக்கை விடுத்த கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களுக்கு பதிலளித்த ஜனாதிபதி அவர்கள் சுகாதார அமைச்சரோடு கலந்தாலோசித்து மேற்கொள்ளவேண்டிய அனைத்து அடிப்படை பிரச்சனைகள் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதாகவும் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணித் தலைவர்களுக்கு இடையே யாழில் சந்திப்பு

இலங்கை தமிழ் அரசுக் கட்சித் தலைவர்களுக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்களுக்கும் இடையே யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை (7) சந்திப்பு நடைபெற்றது.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழ் அரசு கட்சியின் தலமை அலுவலகத்தில் தமிழ் அரசு கட்சியின் தலைவர் திரு.C.V.K சிவஞானம் அவர்களது தலமையில் நடைபெற்றது.

தமிழ்த் தேசியக் கட்சிகளின் இணைந்த செயற்பாட்டை கருத்திற்கொண்டு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அழைப்பின் பேரில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி குறித்த கலந்துரையாடலில் பங்கேற்றது.

இந்த சந்திப்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பங்காளிக் கட்சி தலைவர்களான ரெலோ தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன்,ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்,PLOTE இயக்கத்தின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், முருகேசு சந்திரகுமார், சி.ரவீந்திரா, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பொதுச் செயலாளர் நா.இரட்ணலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர்.

Posted in Uncategorized

பேரிடரால் பாதிக்கப்பட்ட மன்னார், மடு மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர்களை சந்தித்து கலந்தரையாடினார் ரெலோ தலைவர் செல்வம்

பேரிடரால் பாதிக்கப்பட்ட மன்னார், மடு மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர்களை சந்தித்து கலந்தரையாடினார் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவருமான கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள்.

மன்னார் பிரதேச செயலாளர் , மாந்தை மேற்கு பிரதேச செயலாளர்,மற்றும் மடு பிரதேச செயலாளர் ஆகிய மூன்று பிரதேச செயலாளர்களுடனான சந்திப்பொன்றை வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் இன்றைய தினம் 5/12/2025 வெள்ளிக்கிழமை மேற்கொண்டிருந்தார்.

மேற்படி பிரதேச செயலாளர்களுடனான கலந்துரையாடலில் கடந்த வாரத்தில் நாட்டில் ஏற்பட்ட பேரிடர் அனர்த்தம் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படுத்தப்படவேண்டிய பல்வேறுபட்ட நடவடிக்கைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது .

மன்னார் மாவட்டத்தில் மடு மற்றும் மாந்தை பிரதேசங்களில் அதிகளவிலான அனர்த்தங்களும், அழிவுகளும், ஏற்பட்டுள்ளது, குறிப்பாக மடு மற்றும் மாந்தை பகுதிகளில் உள்ள பிரதான நிலப்பரப்புகளை உள்ளடக்கிய பிரதான வீதிகள், உள்ளக வீதிகள் யாவும் நிர்மூலமாக்கப்பட்டு தொடர்புகள் அற்ற நிலை ஏற்ப்பட்டுள்ளது. மடுப்பிரதேசத்தில் தொடர்ச்சியாக தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் பல கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலை காணப்படுகிறது. பாதைகள் முற்றாக அழிந்துள்ள நிலையே அதிகம் காணப்படுகிறது.

மற்றும் பல்வேறுபட்ட கிராமங்களில் மின்சாரம் மற்றும் மின்சார இணைப்புகள் யாவும் துண்டிக்கப்பட்ட நிலை காணப்படுவதுடன் கடந்த பேரிடர் காலத்தில் பிரதேச செயலக நடவடிக்கைகள் முற்றுமுழுதாக ஸ்தப்பித்திருந்ததுடன்,மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டு செயலகத்தினுடைய தொலைத்தொடர்புகள் யாவும் முற்றுமுழுதாக தடைப்பட்டிருந்துள்ளது. இதன் காரணமாக பேரிடரின் போது கிராமங்களின் நிலைபற்றிய தொடர்புகள் கிராம சேவகர்களின் நிலை மற்றும் செய்யவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான பலதரப்பட்ட விடயங்களை அறியமுடியாதிருந்துள்ளது.

தற்பொழுது பேரிடரால் பாதிக்கப்பட்ட பேரிடர் நிவாரண நிதி 25000/= வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், பிரதேச செயலாளர்கள், பிரதேசசபை தவிசாளர்கள ,உறுப்பினர்கள் ஊழியர்கள், கிராம சேவகர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் என பலரும் இரவு பகல் பாராது தங்களது மக்களுக்கான முழுமையான பணிகளை ஆற்றிவருகின்ற நிலை காணப்படுகிறது.
மடு பிரதேசத்தில் பல கிராமங்கள் பல்வேறுபட்ட அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட நிலையில் கன மழை காரணமாக அப்பகுதியில் உள்ள குளங்கள் உடைக்கப்பட்டதுடன், பெருக்கெடுத்து பாயும் வெள்ள நீர் மற்றும் கட்டுக்கரை குள நீர் போன்ற நீர் நிலைகளில் இருந்து பெருக்கெடுத்த வெள்ள அனர்த்தத்தின் காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டு தொடர்புகள் யாவும் துண்டிக்கப்பட்ட துர்ப்பாக்கிய சூழல் நிலவியிருந்தது.

மற்றும் மன்னார் குஞ்சுக்குளத்தை சூழ உள்ள பல்வேறுபட்ட கிராமங்கள் புயலின் தாக்கத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்டு அவ் பகுதிகளுக்குள் பேரிடர் நேரத்தில் யாருமே செல்ல முடியாத நிலை காணப்பட்டிருந்தது. பாதைகள் யாவும் மழை வெள்ளத்தால் நிரம்பி துண்டிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது குஞ்சுக்குள பகுதிகளுக்கான ஒரு பாதை பாவிக்க கூடிய சூழ்நிலை உள்ளது. அந்த பாதையினூடாக அனர்த்த முகாமைத்துவ நிர்வாகம், பிரதேச செயலகம் போன்றன மக்களை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மாந்தை மேற்கு பிரதேசத்தில் அதிகளவு கால்நடைகளும், வீதிகளும் பேரிடரால் பாதிக்கப்பட்ட நிலை காணப்படுகிறது. மக்களது வாழ்வாதார கால்நடைகள், அழிவுற்ற நிலையும், விவசாய நிலங்களும் முற்றுமுழுதாக பாதிப்படைந்துள்ளது. அந்த வகையில் இவ் அழிவுகளுக்கான இழப்பிடுகளை எந்த வகையில் பெற்றுக்கொள்ளுவது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலாளர்களையும் சந்தித்து கலந்துரையாடியதில் நேரம் காலம் பார்க்காது மக்களுக்கான நிவாரண உதவிகளை பெற்றுக்கொடுப்பதில் மும்முரமாக தமது சேவையில் அவர்கள் ஈடுபட்டுக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அந்த வகையிலே பேரிடரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மடு ,மாந்தை மற்றும் மன்னார் நகர பிரதேசம் ஆகியவை அதிகளவு பாதிக்கப்பட்ட பகுதிகளாக காணப்படுவதுடன் இலங்கையில் வட மாகாண ரீதியில் மன்னார் மாவட்டம் அதிகளவான பாதிப்பையும், முல்லைத்தீவு , வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் போன்றவை பாதிப்புகளை அடைந்துள்ளதுடன் ஆரம்பத்தில் மன்னார், பூநகரி பாதை துண்டிக்கப்பட்ட நிலையில் நிவாரண பொருட்களை கொண்டு செல்ல முடியாத நிலை ,மற்றும் குடி நீர் வழங்கல் துண்டிக்கப்பட்ட நிலை காணப்பட்டது என்றும் பிரதேச செயலாளர்களினால் கருத்து தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் கால்நடைகளின் இறப்பு மிக மோசமாக எமது பகுதியில் நடைபெற்றது என்றும் குறிப்பிட அளவில் இறந்த கால்நடைகளை புதைத்திருந்தாலும் பேரிடரால் அகப்பட்ட கால்நடைகள் காடுகளில் இறந்து நிலையில் அவற்றை அகற்றமுடியாத சூழ்நிலையில் அவற்றின் துர்நாற்றத்தால் தொற்றுநோய்கள் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளது என்ற அச்சமும் நிலவுவதும் குறிப்பிடத்தக்கதாகும்.