தமிழரசுக் கட்சியின் பிரித்தானிய கிளையும் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு!

இலங்கைத்தீவில் 21 செப்டம்பர் 2024 இல் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற தமிழ் பொது வேட்பாளருக்கு இலங்கைத் தமிழரசு கட்சியின் பிரித்தானியவுக்கான கிளையானது (ITAK UK(Forum)) தனது முழுமையான ஆதரவை தெரிவிக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரித்தானிய கிளை வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மேற்படி விடையம் சார்பாக ஐக்கிய இராச்சியத்தில் உள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கிளையானது மாதாந்த கூட்டங்களில் பல தடவை விவாதித்தது. அக்கூட்டங்களில் கலந்துகொண்ட பெரும்பான்மையினருடைய வேண்டுகோளுக்கும், விருப்பிற்கும் இணங்க, 26 மே 2024 அன்று நடந்த பொதுக் கூட்டத்தில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.
எனினும் தாயகத்தில் தாய் கட்சியின் முடிவுகள் எதுவும் அறிவிக்கப்படாமையினால், தொடர்ந்தும் இந்த விவகாரம் எமது மாதாந்த கூட்டத் தொடரில் விவாதிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது தமிழரசு கட்சியின் மத்திய குழு, தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவளிப்பதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்ட நிலையிலும், கட்சியின் மாவட்டக் கிளைகளுக்கு இடையே பல்வேறு கருத்து முரண்பாடுகளும், ஆதரவும், எதிர்ப்பும் என்ற நிலை தோன்றியிருந்த நிலையில் தாயகத்தில் உள்ள தமிழரசு கட்சியின் மாவட்ட கிளைகள் பெரும்பாலானவை மத்திய குழுவின் முடிவை நிராகரித்து, மீறி தமிழ் பொது வேட்பாளர்களுக்கு ஆதரவளிப்பது என்ற தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.
இந்நிலையில் தாயக மக்களுடைய பெரும்பான்மையினருடைய விருப்பினை கருத்தில் கொண்டும், புலம்பெயர்ந்து வாழ்கின்ற பெரும்பான்மை மக்களுடைய விருப்பினையும் கருத்தில் கொண்டும், இந்த விடயத்தை அறிவியல் பூர்வமாகவும், அரசியல் ராஜதந்திர நடைமுறைக்கு ஊடாகவும். தத்துவார்த்த ரீதியிலும் ஆராய்ந்து இந்த முடிவை எடுத்திருக்கிறோம்.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் தமிழ் தேசிய இனம் தனது அனைத்து வகையான தேசியக் கட்டுமானங்களையும் இழந்து, தமிழ்த் தேசியம் சிதைந்து சீரழிவுக்கு உட்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழ்த் தேசியம் பேசுவோர் பல்வேறு கட்சிகளாக பிளவுபட்டிருக்கும் நிலையில், தமிழ் மக்களை ஒன்று திரட்டி ஒரு தேசியதிரட்சி பெற வைப்பதற்கான ஒரு நடைமுறையான செயல் திட்டம் ஜனாதிபதித் தேர்தல் என்ற வடிவில் தமிழ் மக்களுக்கு கிடைத்திருக்கிறது.
இந்த அரிய வாய்ப்பை தமிழ் மக்கள் தமது தேசிய கட்டுமானங்களை மீள்கட்டுவதற்கும், பிரிந்து போய் இருக்கின்ற கட்சிகளையும், மக்களையும் இணைப்பதற்கும், தமிழ் மக்கள் தமது தேசிய அபிலாசைகளை அடைவதற்குமாக, மக்கள் பேரவா கொண்டுள்ளனர் என்பதை வெளிக்காட்டுவதற்காகவும், தமிழ் தேசிய இனம் தனது சுயநிர்ணய உரிமையை மீட்டெடுப்பதற்கு தொடர்ந்து போராடும் என்பதை வலியுறுத்தி பறைசாற்றுவதற்கும், தமிழ் மக்களின் தேசிய இருப்பை உறுதிப்படுத்தக்கூடிய செயல்முறை என்ற அடிப்படையில் ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தி, தமிழ் மக்களை அவருக்கு வாக்களிக்க வைத்து, தேசியத்தை மீள் உறுதிப்படுத்துதல் என்ற அடிப்படையிலும், தமிழ் மக்கள் பொதுக் கட்டமைப்பு நிறுத்தியுள்ள பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களுக்கு எமது முழுமையான ஆதரவை தெரிவிக்க வேண்டியுள்ளது.
இந்நிலையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஐ. இராச்சிய கிளையானது, ஏற்கனவே தனது 26மே 2024 மாதாந்த பொது கூட்டத்தில் எடுத்த முடிவான தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவளித்தல் என்ற உறுதியான நிலைப்பாட்டை ஏற்கனவே தாயகத்தின் தாய் கட்சியின் தலைமை காரியாலயத்திற்கு( ITAK HO 30 Martyn Jaffna Sri Lanka) அறிவித்துள்ளோம். இப்போது அந்த முடிவை ஊடக வாயிலாக எம்மின மக்களுக்கு அறியத் தருகிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Posted in Uncategorized

ஏகமனதாக எடுக்கப்பட்ட தமிழரசுக்கட்சி தீர்மானம் : சி.வி.கே.சிவஞானம் தெரிவிப்பு!

மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களுடைய தேர்தல் விஞ்ஞாபனங்களையும் பரிசீலித்து ஒப்பீட்டு ரீதியிலேதான் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்கலாம் என்ற முடிவிற்கு நாங்கள் வந்திருக்கின்றோம் என தமிழரசு கட்சியின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியினுடைய நிலைப்பாடு தொடர்பில் நேற்று (12) இடம்பெற்ற ஊடக் சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற சந்திப்பானது மிகவும் சுமூகமான நிலையிலே இடம்பெற்றது. இதன்போது கருத்து வேறுபாடுகள் பல இருந்தாலும் கூட சஜித்தை ஆதரிப்பது தொடர்பான தீர்மானத்தை மாற்றியமைப்பதோ அல்லது இரத்துச் செய்வதோ என்ற கருத்து எங்களிடையே பகிரப்படவில்லை.

ஆகவே அதனடிப்படையில் அதற்கு பாதகம் இல்லாமல் நாங்கள் எமது கட்சியினுடைய நிலைப்பாட்டை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய கடப்பாடு எமக்கு உள்ளது.

அந்தவகையில் இவ்வார இறுதியில் குறித்த உபகுழு கூட இருக்கின்றது. இதில் எடுக்கப்படவுள்ள தீர்மானம் கடந்த 01ஆம் திகதி எடுக்கப்பட்ட தீர்மானத்தை ஒட்டியதாகவே இருக்கும்.

எனினும், வெற்றிவாய்ப்புள்ள வேட்பாளர்களது தேர்தல் விஞ்ஞாபனங்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையிலேதான் ஒப்பீட்டு ரீதியில் அவருடைய தேர்தல் விஞ்ஞாபனம் எங்களுக்கு சாதகமாக இருந்தது.

இதில் தமிழ் மக்கள் தொடர்பான விடயங்களையும் குறிப்பாக சஜித் பிரேமதாச தெரிவித்த பகிரங்க கருத்துக்களையும் உள்ளடக்கியதாவே எமது நிலைப்பாடு இருந்தது. எனவேதான் சஜித்தை ஆதரிக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரை கைது செய்ய உத்தரவு!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகேவை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் முன்னிலையாகாததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது மூவரை தாக்கிய குற்றச்சாட்டிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

பொதுவேட்பாளரின் சின்னமான சங்கிற்கு மட்டும் புள்ளடியிடுங்கள்: முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

கூட்டுத்தலைமையை உருவாக்குவதற்காகவே ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர். எனவே, பொதுவேட்பாளரின் சின்னமான சங்கிற்கு மட்டும் புள்ளடியிடுங்கள் என இரானியேல் செல்வின் தெரிவித்துள்ளார்.

வடமராட்சியில், தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனை ஆதரித்து இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,”சிங்கள தலைவர்களையும், கட்சிகளையும் நாம் ஒரு தரப்பினராகவே பார்க்க வேண்டும். அத்துடன், தமிழ் மக்கள் அனைவரும் ஒரு தரப்பினராக இணைய வேண்டும்.

இவ்வாறு ஒன்றிணைந்து, பலமுள்ள மக்களாக நாம் பேசுவோம். அடிமைத்தனம் என்று எங்கள் மனங்களில் ஊறிப் போயுள்ள விடயங்களை உடைத்தெறிவோம்” என வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, தமிழ் மக்கள் உட்பட அனைவரும் ஒன்றிணைந்து பொதுவேட்பாளருக்கு வாக்களிப்போம் என கூறினார்.

Posted in Uncategorized

நாமல் ராஜபக்சவின் பிரசார கூட்டத்தின் மீது கல் வீச்சு!

ஶ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச பங்கேற்கவிருந்த பிரசார கூட்டத்தின் மீது கல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டை சிறிபோபுர பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த கல் வீச்சு தாக்குதல்களில் சிறுவன் ஒருவன் காயமடைந்துள்ளான்.

அரகலயவின் போது சஜித் தாக்கப்பட்டதன் பின்னணி குறித்து அம்பலப்படுத்திய அநுர தரப்பு
அரகலயவின் போது சஜித் தாக்கப்பட்டதன் பின்னணி குறித்து அம்பலப்படுத்திய அநுர தரப்பு
அம்பாந்தோட்டை வைத்தியசாலை
காயமடைந்த சிறுவன் அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பிரசார கூட்டத்தில் நாமல் ராஜபக்ச, சமல் ராஜபக்ச, ஷிராந்தி ராஜபக்ச ஆகியோர் பங்கேற்கவிருந்தனர்.

கல் வீச்சுத் தாக்குதல்களைத் தொடர்ந்து அவர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

ஷிராந்தி ராஜபக்ச, காயமடைந்த சிறுவனை பார்வையிட அம்பாந்தோட்டை வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார்.

Posted in Uncategorized

தமிழ்ப் பொதுவேட்பாளர் நிறுத்தப்பட்டமை சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல – நிரோஷ் தெரிவிப்பு

தமிழ்ப் பொதுவேட்பாளர் நிறுத்தப்பட்டமை சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல. மாறாக, இந்த நாட்டின் தேசிய இனங்களில் ஒன்றான தமிழ் மக்கள் வரலாற்று ரீதியில் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகள் இன்றும் தீர்க்கப்படவில்லை என்பதை எடுத்துக்காட்டுவதற்கானது என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு உறுப்பினரும் முன்னாள் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளருமான தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.
தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனை ஆதரித்து நேற்று (10) மாலை வடமராட்சி மாலுசந்தி மைக்கல் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
தமிழ்த் தேசியம் இன்று பலவாறாக அகத் துண்டாடலுக்கு உட்பட்டு வருகிறது. இது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெளியுலகுக்கும் ஆட்சியில் அமர்பவர்களுடன் பேசுவதற்கும் அழுத்தம் கொடுப்பதற்கான நிலைமைகளை பலமிழக்கச் செய்துவிடுமோ என்ற நியாயபூர்வமான அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. அந்த அச்சத்தில் நியாயபூர்வமான யதார்த்தம் உள்ளது.
தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடைய இனமான நாம் எமது அரசியல் அபிலாசைகளை சாதாரண ஜனநாயக உரிமைகளுடன் மட்டும் மட்டுப்படுத்திவிடமுடியாது.
நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எந்தளவு தூரம் ஆட்சியில் அமரக்கூடிய ஒருவருக்கு ஆதரவு அளிக்கலாம் என்று சிலர் அல்லும் பகலும் அறை போட்டு சிந்திக்கின்றனர், செயற்படுகின்றனர்.
அவர்கள் இந்த நாட்டில் வெல்லக்கூடிய ஒருவரை தேடிப்பிடித்து சலுகைகளைப் பெற்று பெற்று சகித்து வாழ்வோம் என்ற மனநிலையில் இனத்தினை அடைமானம் வைக்கின்றனர்.
நாட்டில் சிங்கள மக்கள் பெரும்பான்மையான எண்ணிக்கையில் வாழ்கின்றனர் என்பதற்காக எண்ணிக்கையில் குறைந்த அளவுடைய நாட்டின் தேசிய இனமான தமிழ் இனம் இன உரிமைகளை விற்று வாழ முடியாது. சிங்கள பேரினவாதிகளுக்கு நோகக்கூடாது என்று வாழ்பவர்கள் எம்மிடத்தில் அதிகரித்துவிட்டனர். மக்களின் இட்சியத்தினையும் தியாகத்தினையும் விற்றுப் பிழைப்பதில் முண்டியடிக்கின்றனர்.
மண்ணுக்காக எத்தனையோ தியாகங்களை எம் இனம் மேற்கொண்டிருக்கிறது. அடிப்படையில், எமது மக்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்பதை வலியுறுத்தியும், எமக்கு சமஸ்டி அடிப்படையிலான உலகம் ஏற்றுக்கொண்ட அரசியல் தீர்வினை முன்வைக்கக் கோரியும் நாம் பொது வேட்பாளரை முன்நிறுத்திச் செயற்படுவது நியாயபூர்வமாகச் சிந்திக்கும் எந்தவொரு சிங்களப் பிரஜைக்கும் எதிரான செயற்றிட்டம் கிடையாது. சிங்கள முற்போக்கு சக்திகளும் சொந்த தாய்நாட்டில் ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகும் தமிழ் மக்களின் கருத்து வெளிப்பாட்டு உரிமைக்கும் ஜனநாயக உரிமைக்கும் மதிப்பளித்து வாக்களிக்க முடியும்.
தமிழ் மக்களைப் பொறுத்தளவில் எமது அரசியல் அபிலாசைகளை தொடர்ந்தும் வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இன்றும் உள்ள நிலையில் ஒருமித்து தமிழ் பொது வேட்பாளரின் சின்னமான சங்கு சின்னத்துக்கு வாக்களித்து தமிழ்த் தேசியக் கடமையினை நிறைவேற்றுவோம் என ரெலோவின் தலைமைக்குழு உறுப்பினரும் முன்னாள் பிரதேச சபைத் தவிசாளருமான தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.
Posted in Uncategorized

தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சிக் கிளை தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதாக ஏக மனதாக தீர்மானம்

தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சிக் கிளை தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதாக ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

குறித்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் 3 மணியளவில் மாவட்டக் கிளை அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தலைமையில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் குருகுலராஜா, பிரதேச சபைகளின் முன்னாள் தவிசாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது, ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஆராய நியமிக்கப்பட்ட குழு கூடாமலே கட்சியின் ஆதரவு அறிவிக்கப்பட்டது என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி கட்சி அலுவலகமான அறிவகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச வட்டாரகிளைகளின் நிர்வாகிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவிக்கையில் கடந்த 18-08-2024 அன்று மத்திய குழுக்கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஆராய்ந்து யாருக்கு ஆதரவு அளிப்பது தொடர்பான குழு நியமிக்கப்பட்டது.

இந்த குழு கூடி முடிவெடுக்காது முடிவு அறிவிக்கப்பட்டது. தவறு நாளைய தினம் குறித்த குழு கூடவுள்ளது. கூடி சில முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற கலந்துரையாடலை கூடியிருந்த அனைவரும் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்தனர். ஏக மனதாக தீர்மானம் எடுத்தனர்.

அஞ்சல் வாக்களிப்பில் தமிழர் பொதுச் சின்னத்திற்கு வாக்களியுங்கள் – முன்னாள் தவிசாளர் நிரோஸ் வேண்டுகோள்!

ஜதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் வாக்களிப்பு நாளை முதல் ஆரம்பமாகவுள்ள நிலையில் வாக்களிக்கவுள்ள அரச உத்தியோகத்தர்கள் தமிழ் மக்களின் பொதுச் சின்னமாகவுள்ள சங்கு சின்னத்திற்கு வாக்களித்து எமது மக்கள் சார்ந்து எமக்குள்ள தேசிய உணர்வையும் பொறுப்பினையும் வெளிப்படுத்த வேண்டும் என முன்னாள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளரும் ரெலோவின் தலைமைக்குழு உறுப்பினருமான தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.

நேற்றையதினம் (திங்கட்கிழமை) கோப்பாய் பகுதியில் அரச சேவையாளர்களை நோக்கிய பிரச்சார நடவடிக்கைகளின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அரச சேவையில் எமது மக்களுக்கான பணிகளை அர்ப்பணிப்புடன் எமது சகோதரர்கள் ஆற்றி வருகின்றீர்கள். அரச சேவையில் பல்வேறுபட்ட நெருக்கடிகள் இன ரீதியிலும் அரசியல் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டும் இன்றும் காணப்படுகின்றன. அரச சேவையாளர்கள் பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் இன ரீதியில் பழிவாங்கப்பட்டுள்ளீர்கள். தனிச்சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டமை நாட்டின் இன முரண்பாடுகளுக்கு பிரதான அடிப்படைகளில் ஒன்றாகக் காணப்படுகின்றது என்றால் அச் சட்டத்தின் காரணமான மிகவும் பாதிக்கப்பட்ட தரப்பினுள் அரச சேவையாளர்கள் உள்ளடங்கினீர்கள்.

பல்கலைக்கழக தரப்படுத்தல்இ அரச சேவையில் சிங்கள மயப்படுத்தல்இ அரச சேவையினை இராணுவ மயப்படுத்தல்இ அரசியல்கட்சி மயப்படுத்தல் என குறிப்பாக வடக்கக் கிழக்கில் பணியாற்றும் நீங்கள் இனரீதியாக மாறி மாறி ஆட்சிக்குவந்த அரசாங்கங்களால் பாதிக்கப்பட்டீர்கள். தற்போது அவை நேரடியாகப் தெரியக்கூடியதாக பிரயோகிக்கப்படவில்லை ஆயினும் மறைமுகமாக இன ரீதியிலான புறந்தள்ளல்கள் இலங்கையின் நிர்வாகசேவைக்கட்டமைப்புஇ இதர சேவைக்கட்டமைப்புக்களில் தொடர்ந்த வண்ணமே உள்ளன. இவ்விடயங்கள் எல்லாம் தமிழ் மக்களுக்கு எமது அரசியல் அபிலாசைகளைப் பிரயோகிக்கத்தக்க  நிரந்தர அரசியல் தீர்வு கிட்டும் வரையில் தொடர்கதையாகக் காணப்படும் என்பதுவே உண்மை. இந் நிலையில் எமக்கும் பிரச்சினைகள் உண்டு என்பதை இரகசியமாக வாக்களித்து ஒடுக்குமுறையை வெளிப்படுத்துங்கள்.

தமிழ் பொதுவேட்பாளர் என்பது நாட்டினுள் இன நல்லிணக்கத்தினைத் துண்டாடுவதற்கானதல்ல. மாறாக எங்களுக்குப் பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை வெளிக்காட்டுவதற்கானது. இது ஜனநாயக ரீதியில் சர்வதேசம் ஏற்றுக்கொண்ட உரிமைசார் நடவடிக்கையுமாகும் என்பதை புரிந்து கொண்டு அரச உத்தியோகத்தர்கள்தமிழ் மக்களின் பொதுச் சின்னமான சங்குச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு உறுப்பினருமான தியாகராஜா நிரோஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சமஸ்டிக்கோரிக்கையை தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைக்க முடியுமா..! சபா குகதாஸ் பகிரங்க சவால்

ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் சமஷ்டிக்கோரிக்கையை உள்ளடக்க முடியுமா என ரெலோ அமைப்பின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சபா குகதாஸ், மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரனுக்கு சவால் விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்றைய தினம் (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அனுர குமார திஸாநாயக்க போட்டியிடுகின்ற நிலையில் அவரது யாழ். மாவட்ட அமைப்பாளரான இராமலிங்கம் சந்திரசேகரன் தமிழ் மக்களிடம் பொய்களைக் கூறி வாக்கு கேட்க ஆரம்பித்துவிட்டார் என்றார்.

அதேவேளை, நாம் தமிழ் மக்களின் பொது வேட்பாளரை ஆதரித்துள்ளோம் அது தொடர்பில் மக்களிடம் தெளிவாகவே கூறியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

சீன திட்டங்களை தமிழ் மக்கள் ஆரோக்கியமாக பார்க்கவில்லை: சபாகுகதாஸ் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கின் தமிழர் பகுதிகளில் சீன (China) அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் திட்டங்களை தமிழ் மக்கள் ஆரோக்கியமான திட்டமாக பார்க்கவில்லை என ரெலோ அமைப்பின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சபா குகாதாஸ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் (Jaffna) உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நேற்றையதினம் (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அண்மையில் சீன தூதுவரை சுமந்திரன் மற்றும் சாணக்கியன் சென்று சந்தித்திருந்தார்கள். அவர்களது சந்திப்பு தற்போதைய சூழ்நிலையில் ஒரு ஆபத்தான சந்திப்பாக பார்க்கும் நிலையில் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு விடயங்களில் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஏனெனில், தற்போது ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை மட்டும் வழங்கப்படுகின்ற நிலையில் ஜனாதிபதியை தீர்மானிப்பதில் வல்லரசுகளின் ஆதிக்கங்களே அதிகமாக காணப்படுகின்றன.

கடந்த தேர்தல்களிலும் வல்லரசுகளின் ஆதிக்கம் இலங்கையில் பிரயோகிக்கப்பட்ட நிலையில் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் சீன தூதுவரை சந்தித்தது தற்போதைய சூழ்நிலையில் ஏற்புடையதல்ல.

வடக்கு – கிழக்கு தமிழர் பகுதிகளில் சீன அரசாங்கத்தினால் பொருத்து வீட்டு திட்டம் மற்றும் கடற்தொழிலாளர்களுக்கு அரிசி என்பன வழங்கப்பட்டது. குறித்த திட்டங்களை மக்கள் தமக்கான ஆரோக்கியமான திட்டங்களாகப் பார்க்கவில்லை.

ஆகவே, மக்களின் விருப்பங்களை அறியாதும் எமது கலாசாரங்களை பின்பற்றாத வீட்டு திட்டங்களை வழங்கும் சீன அரசாங்கம் மக்களை கருத்தில் கொள்ளாது தமது பூலோக அரசியலை தக்க வைத்துக்கொள்வதற்காக செய்யும் வேலை திட்டமாகவே பார்க்க முடிகிறது” என கூறியுள்ளார்.