புதிய சட்டத்தை சமர்ப்பிக்காவிட்டால் தேர்தல் இடம்பெறாது – தேர்தல் ஆணையாளர்

மாகாணசபைகளுக்கான புதிய சட்ட திருத்தத்தினை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து , அதனை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறில்லை எனில் மாகாணசபை தேர்தல் இடம்பெறாது. தேர்தல் இடம்பெறாவிட்டால் மாகாணசபைகள் மக்கள் பிரதிநிதிகளால் அன்றி, அதிகாரிகளினாலேயே தொடர்ந்தும் நிர்வகிக்கப்படும் நிலைமை ஏற்படும் என்று சுயாதீன தேர்தர்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

மாகாணசபைகளுக்காக ஒதுக்கப்படும் நிதி, அவற்றின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகள் , பாடசாலைகள் உள்ளிட்டவற்றின் புனர்நிர்மாணம் உட்பட பல்வேறு பணிகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. எனவே மாகாணசபைகளை வெள்ளை யானை என்று விமர்சிப்பது பொருத்தமற்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மாகாணசபை தேர்தல் தொடர்ந்தும் காலம் தாழ்த்தப்பட்டு வரும் நிலையில் , அது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் நிலைப்பாட்டை தெரிவிக்கும் போதே ஆணையாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொதுத் தேர்தலின் போது பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும். எமது நாட்டில் நடைமுறையிலுள்ள அரசியலமைப்பிற்கமைய அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை ஜனாதிபதிக்கு கூட பாராளுமன்றத்தைக் கலைக்க முடியாது. ஜனாதிபதி விரும்பினாலும் அவரால் அதனை செய்ய முடியாது. மாறாக அதற்கு முன்னர் கலைக்க வேண்டுமெனில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் அதற்கான யோசனையை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறான யோசனை நிறைவேற்றப்பட்டாலும் அதனை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்பதை ஜனாதிபதி தீர்மானிக்க வேண்டும்.

2018 இல் 7 பேர் கொண்ட உயர்நீதிமன்ற நீதியரசர் குழாமினால் தெளிவாக இவ்விடயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டது. அதற்கமைய சட்ட ரீதியாக தற்போதைய காலத்தில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் ஆணைக்குழுவிற்குக் கிடையாது.  தற்போது மாகாணசபைகள் இல்லை என்று சிலர் கூறுகின்றனர். மாகாணசபைகள் காணப்படுகின்றன. அதற்குரிய அமைச்சு காணப்படுகிறது. அமைச்சின் கீழ் இதனுடன் தொடர்புடைய பல நிறுவனங்கள் இயங்குகின்றன. மாகாண சேவை ஆணைக்குழு உள்ளிட்டவை அவற்றில் உள்ளடங்குகின்றன. அரசாங்கத்தினால் இதற்கு நிதியும் ஒதுக்கப்படுகிறது. எனவே மாகாணசபைகளுக்கான பிரதிநிதிகள் மாத்திரமே தற்போது இல்லை.

மக்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் எந்தவொரு நிறுவனமும் மக்கள் பிரதிநிதிகள் இன்றி நிர்வகிக்கப்படக் கூடாது என்பதையே தேர்தல்கள் ஆணைக்குழு ஆரம்பம் முதல் வலியுறுத்தி வருகிறது.எனவே இவற்றுக்கு நிச்சயம் மக்கள் பிரதிநிதிகள் நியமிக்கப்பட வேண்டும். மாகாணசபைகளை வெள்ளை யானைகள் என்றும் சிலர் விமர்ச்சிக்கின்றனர். மாகாணசபைகளுக்கான நிதி தொடர்பில் ஆராய்ந்த போது , அதில் சுமார் 90 சதவீத நிதி புனர்நிர்மாணப்பணிகளுக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது. மாகாணசபைகளுக்கு உட்பட்ட பாடசாலைகள் , வைத்தியசாலைகளில் அதற்கான செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இது மாகாணசபைகளை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களுக்காகவே நிதி ஒதுக்கப்படுவதாக சிலர் குறிப்பிடுகின்றனர்.மாகாணசபை வரவு – செலவு திட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளுக்காக 0.03 சதவீதமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையா வெள்ளை யானை என்கின்றனர்?

எது எவ்வாறிருப்பினும் மக்கள் பிரதிநிதிகள் இன்றி மாகாணசபைகளை நிர்வகித்துச் செல்கின்றமையை தேர்தல் ஆணைக்குழு கடுமையாக எதிர்க்கின்றது. இதனை நாம் தெரிவுக்குழுவிலும் தெரிவித்திருக்கின்றோம். மாகாணசபை சட்டங்கள் இரண்டு காணப்படுகின்றன. 88 (2) மற்றும் 2017 (17) ஆகிய இரு சட்டங்கள் காணப்படுகின்றன.  2017 (17) சட்டத்திலுள்ள எல்லை நிர்ணய அறிக்கை தோல்வியடைந்துள்ளது. குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்ட போதிலும் , அதிலுள்ள முக்கிய விடயமான எல்லை நிர்ணய அறிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதனை முன்வைத்த அமைச்சரும் கூட அதற்கு எதிராகவே வாக்களித்தார்.

குறித்த யோசனை தோல்வியடைந்ததனால் , பிரதமர் தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் , அந்தக் குழு இரு மாதங்களுக்குள் அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. அதற்கமைய நியமிக்கப்பட்ட குழு ஒரு தடவை மாத்திரமே கூடியது. அதன் பின்னர் எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.எனவே தான் புதிய சட்ட நடைமுறைப்படுத்தப்படாமையின் காரணமாக , பழைய சட்டத்தின் கீழ் தேர்தலை நடத்த முடியும் என்று நாம் குறிப்பிட்டோம்.

எவ்வாறிருப்பினும் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டமையின் காரணமாக , பழைய சட்டத்தின் கீழ் நடத்த முடியாது என்றும் , மாறாக புதிய சட்டத்தில் ஒரு சிறிய திருத்தத்தினை மேற்கொண்டு அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே சட்டமா அதிபரின் நிலைப்பாடாகக் காணப்பட்டது. அதற்கமைய புதிய திருத்தத்தில் சிறிய திருத்தத்தினை மேற்கொண்டு , மாகாணசபைகளை பழைய முறைமையின் கீழ் நடத்திச் செல்வதற்கும் , அதன் பின்னர் எல்லை நிர்ணயத்துடன் அடுத்தடுத்த மாகாணசபைகளை நடத்திச் செல்வதற்கும் தெரிவு தீர்மானித்தது.

எனவே இதனை நடைமுறைப்படுத்துவதற்கு மாகாணசபைகளுக்கான புதிய சட்ட திருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அதனை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறில்லை எனில் மாகாணசபை தேர்தல்கள் நடைபெறாது. மக்கள் பிரதிநிதிகள் இன்றி தொடர்ந்தும் அதிகாரிகளால் மாகாணசபைகள் நிர்வகிக்கப்படும். மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் இதுவே தேர்தல் ஆணைக்குழுவின் நிலைப்பாடாகும்.

கௌரி நீதியின் குரல் : அஞ்சலி நிகழ்வில் ரெலோ தலைவர் பங்கேற்பு

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா எழுதிய கௌரி நீதியின் குரல் புத்தகமும் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் என்.சிறிகாந்தா, பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், புளொட் தலைவர் த.சித்தார்த்தன், தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.சிசிறிதரன், செ.கஜேந்திரன், முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர்கள் பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், முன்னாள் மாகாணசபை முன்னாள் உறுப்பினர்பா.கஜதீபன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா, இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளை தலைவரான சிரேஷ்ட சட்டத்தரணி வி.எஸ். தவராசாவின் பாரியாராவார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதான பலருக்காக நீதிமன்றங்களில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கத்தோலிக்க ஆயர்கள் விடுத்துள்ள கோரிக்கை

இலங்கை நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இவ்வேளையில், தேவையுடையோருக்கு மருந்துகள் மற்றும் உலர் உணவுகளை வழங்குமாறு கத்தோலிக்க ஆயர்கள் பொது மக்களை வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை, நாட்டில் துன்பப்படுவோரிடம் மக்கள் இரக்கத்துடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

“உலர் உணவுகள், குழந்தைகளுக்கான பால்மா மற்றும் ஏழை மக்களுக்கு மருந்துகள் வழங்குவதற்கு அனைத்து செலவுகளும் ஒதுக்கப்பட வேண்டும்” என பேரவையின் தலைவர் அருட்தந்தை ஹரோல்ட் அன்ரனி பெரேரா மற்றும் செயலாளர் நாயகம் ஆயர் ஜே.டி. அன்ரனி ஜெயக்கொடி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நத்தார் பண்டிகையை வெளிப்புறக் கொண்டாட்டங்களுக்கான ஒரு சந்தர்ப்பமாக மாற்றுவதைத் தவிர்க்குமாறு பக்தர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என ஆயர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை 1948 இல் சுதந்திரம் பெற்ற பின்னர் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. கடந்த ஜூன் மாதம் முதல் மருந்து தட்டுப்பாட்டுடன் போராடி வருகிறது. ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் மற்றும் உணவு விவசாய அமைப்பு ஆகியவை, நாட்டில் 6.3 மில்லியன் மக்கள் மிதமான மற்றும் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்வதாக எச்சரித்துள்ளனர்.

“நத்தார் என்பது எமது நாட்டைக் குணப்படுத்தவும், ஏழைகள் மற்றும் துன்பப்படும் மக்களுக்கு ஆறுதல் அளிக்கவும் ஒரு நேரம்” என ஆயர்கள் தெரிவித்துள்ளனர்.

Posted in Uncategorized | Tagged

ரஞ்சன் அமெரிக்கா பயணம்

நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை தடை நீக்கப்பட்டதையடுத்து, ரஞ்சன் ராமநாயக்க கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று (29) அதிகாலை அமெரிக்கா சென்றதாக விமான நிலைய குடிவரவு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இன்று அதிகாலை 03.50 மணியளவில் கட்டார் ஏர்வேஸ் விமானம் ஊடாக KR-663 இல் கட்டாரின் டோஹாவிற்கு புறப்பட்டார்.

அங்கிருந்து மற்றொரு விமானத்தில் அமெரிக்கா செல்ல உள்ளார்.

அமெரிக்காவில் சுமார் 10 இசை நிகழ்வுகளிலும், கனடாவில் 05 இசை நிகழ்வுகளிலும் பங்கேற்க உள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்க நேற்று முன்தினம் (27) இரவு அமெரிக்கா செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார், ஆனால் நீதிமன்றத்தால் அவருக்கு விதிக்கப்பட்ட விமானத் தடை காரணமாக மீண்டும் விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Posted in Uncategorized | Tagged

அந்த யுகம் தற்போது முடிந்து விட்டது

மலையகத்தில் ஒரு காலகட்டத்தில் அடாவடி அரசியலே இடம்பெற்று வந்தது. அந்த யுகம் தற்போது முடிந்து விட்டது. மக்கள் நலன்சார் விடயங்களுக்காக இணைந்து செயற்படுவதற்கு நாமும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் பொது இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளோம் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் “பிரபஞ்சம்” எனும் திட்டத்தின் கீழ் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் அமைந்துள்ள கேம்பிரிட்ஜ் கல்லூரிக்கு இன்று (29) காலை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பாடசாலை பஸ் ஒன்றினை வழங்கி வைத்துள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்த பஸ் கையளிக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, நுவரெலியா மாவட்டத்தில் பாடசாலைகளில் நடைபெறும் நிகழ்வுகளில் கடந்த காலங்களில் நான் பங்கேற்கவில்லை. ஏனெனில் நான் கலந்துகொண்டால் சம்பந்தப்பட்ட பாடசாலையின் அதிபருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டு வந்தது. மாணவர்களின் நலனை கருதி நானும் அமைதியாக இருந்தேன். ஒரு சில பாடசாலைகளுக்கு மட்டும் செல்வதுண்டு.

இப்படியான அடாவடி அரசியல் கலாச்சாரமே இங்கு இருந்தது. ஆனால் தற்போது அந்நிலைமை இல்லை. நாடாளுமன்றத்தில் வைத்து நாங்களும், ஜீவனும் பேச்சு நடத்தினோம். அவர்களின் அரசியலை அவர்கள் முன்னெடுப்பதற்கும், எங்கள் வழியில் நாங்கள் பயணிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. மக்கள் நலன்சார் விடயங்களின் போது இணைந்து செயற்படவும் இணக்கத்துக்கு வந்துள்ளோம்.

மலையக பெருந்தோட்ட மக்கள் தொடர்ந்து கூலித்தொழிலாளியாக இருக்க முடியாது. அவர்கள் சிறுதோட்ட உரிமையாளர்களாக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கை எமது ஆட்சியில் நிச்சயம் முன்னெடுக்கப்படும்.

நுவரெலியா மாவட்டத்துக்கு ஆங்கில பாடசாலையொன்று அவசியம். அதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கையை நல்லாட்சியின் போது எடுத்திருந்தோம். ஆனால் கைக்கூடவில்லை . சஜித் பிரேமதாச தலைமையிலான ஆட்சியில் நிச்சயம் செய்வோம் என்றார்

கொழும்பு மேயர் பதவிக்கு போட்டியிடும் முஜிபுர் ரஹ்மான்

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேயர் பதவிக்கு போட்டியிட கட்சியின் தலைமைத்துவமும் ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. கொழும்பு நகரில் சிறுபான்மை மக்களின் வாக்கு வங்கி முக்கிய பங்கு வகிப்பதன் காரணமாக முஜிபுர் ரஹ்மான் மேயர் பதவிக்கு போட்டியிட்டால் சாதகமான நிலைமை ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தியில் பலர் கருதுகின்றனர்.

முஜிபுர் ரஹ்மான் கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவிக்கு போட்டியிட உள்ளார் என்பதற்கான தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவே வெளியிட்டிருந்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய கொழும்பு தொகுதி அதிகார சபைக் கூட்டத்தில் அவர் இதனை சூசகமாக கூறியிருந்தார். கொழும்பு மாநகர சபையின் பதவிக்காலம் இந்த வருட இறுதியில் முடிவடையவுள்ளது.

முஜிபுர் ரஹ்மான் கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சுயேட்சைக்குழுவின் சார்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு தாக்கல் செய்த வேட்புமனு, வேட்பாளர் ஒருவர் தொடர்பான சிக்கல் காரணமாக நிராகரிக்கப்பட்டது

கோவிட் தொற்றால் ஏற்பட்ட நிலைமை மாற இன்னும் 3 வருடக் காலப்பகுதி தேவை! மைத்திரீ விக்ரமசிங்க

பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தின் நீண்ட வலுவாக தந்திரமான சக்தியினை உருவாக்க எதிர்காலத்தில் திட்டநடைமுறைகள் வரையப்பட்டு வருகின்றது. தன்னிறைவு அடைந்து வரும் இலங்கையில் தற்போதைய இரண்டு வருடகாலத்தில் கோவிட் தொற்று நிலைமை காரணமாக பாரிய பின்னடைவு சகல துறைகளிலும் காணபட்டுள்ளன. அவ்வாறான நிலையினை திறம்பட மாற்றுவதற்கு வாய்ப்பு இருக்கின்றது.

அதற்கு எதிர்வரும் 03 வருடகாலப்பகுதி தேவையாக இருக்கின்றது என ஜனாதிபதியின் பாரியார் மைத்திரீ விக்ரமசிங்க தெரிவித்தார்.

புதிய இயல்பு நிலையில் எதிர்காலத்தைச் செழுமைப்படுத்தல் ( Shaping the Future in the New Normal) என்ற தொனிப் பொருளில் நடாத்தப்பட்டு வரும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக சர்வதேச ஆய்வு மாநாட்டு தொடரில், பல்கலைக்கழக பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவ நிலையத்தினால் “பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தின் ஊடாகப் புதிய இயல்பு நிலையில் நிலைபேறான அபிவிருத்தியை அடைதல்” என்ற தலைப்பிலான ஆய்வு மாநாடு இன்று கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவ நிலையப் பணிப்பாளர் பேராசிரியர் சிவாணி சண்முகதாஸ் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்த ஆய்வு மாநாட்டின் முதன்மை உரையாளராக, இலங்கையின் முதல் பெண்மணியும், களனிப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையின் சிரேஸ்ட பேராசிரியரும், பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தில் அனுபவம் வாய்ந்த பெண்ணியவாதியுமான மைத்திரீ விக்ரமசிங்கே கலந்து கொண்டு முதன்மை உரை ஆற்றினார்.

இதன்போது கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொருளாதார ரீதியாக பண்புபற்ற வதிவிடங்களை உருவாக்க மனிதாபிமான உதவிகள் மேம்படுத்தப்படும். கடந்தகாலத்தை பின்பற்றாது எதிர்காலத்தில் வலுமையுள்ள சமூக கட்டமைப்பினை உருவாக்க சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றது – என்றார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்த முதல் பெண்மணியை யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ் ஸ்ரீசற்குண ராஜா வரவேற்றுக்கொண்டார்.

பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தின் ஊடாகப் புதிய இயல்பு நிலையில் நிலைபேறான அபிவிருத்தியை அடைதல் தொடர்பான 24 ஆய்வுகட்டுரையும்,12 உபதலைப்புகளுடான ஆய்வுக் கட்டுரைகள் முன்மொழிவுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.


இதில் கொழும்பு, களனி, யாழ். பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விப் புலமையாளர்கள், மாணவ மாணவிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

வட மாகாணத்தின் அபிவிருத்தி -ஆளுநர் ஜப்பான் தூதரகம் இணைந்து கலந்துரையாடல்

வட மாகாணத்தில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் பாங்கெடுப்புகள் தொடர்பில் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் ஹிடோக்கி மிசுகோஷி இணைந்து கொழும்பில் நேற்று (28) கலந்துரையாடலை ஏற்பாடு செய்தனர்.

குறித்த கலந்துரையாடலில் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் ஹிடேக்கி மிசுகோஷி, மாற்றுக் கொள்கைக்கான மையம் (CPA ) – கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க இந்தியாவில் உள்ள இலங்கை தூதுவர் மிலிந்த மொரகொட,வடக்கு ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் தன்யா ரத்னாவல், கொரிய தூதுவர் சந்துஷ் ஜியோங் வூன்ஜின் தாய்லாந்து தூதுவர் ஹெச், வியட்நாம் தூதுவர் போஜ் ஹர்ன்போல் , திருமதி ஹோ திதான் ட்ரூக் (தூதர்) மலேசியா, இந்தோனேசியா தூதர் எச்.இ. டெவி குஸ்டினா டோபிங் ,யாழ் இந்தியத் துனைத்தூதர் ராகேஷ் நடராஜ் , இலங்கைக்கான துருக்கி தூதரக அதிகாரி பிலால் சக்லாம் (மூன்றாவது செயலாளர்) ,சர்வதேச அமைப்புகள் WFP – அப்துர் ரஹீம் சித்திக் ( நாட்டு இயக்குநர் ) UNDP – திரு. ராபர்ட் ஐங்கர், அருண நாணயக்கார (அலகு தலைமை போர்ட்ஃபோலியோ நிர்வாகம்) WB – அசேல திஸாநாயக்க (சிரேஷ்ட நடவடிக்கை அதிகாரி), ஹூசம் அபுதாகா (ஆலோசகர்) JICA – டெட்சுயா யமடா (தலைமைப் பிரதிநிதி) , டகாஃபுமி சகுரசாகாத ஆகியோர் கலந்து கொண்டனர்.

குறித்த கலந்துரையாடலில் வட மாகாணத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தூதரக அதிகாரிகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பணிப்பாளர்களுக்கு விளக்கமளித்தார்.

கலந்துரையாடலில் பங்கு கொண்ட தூதரக அதிகாரிகள் மற்றும் அரசு சார்பற்ற நிறுவனத்தின் பணிப்பாளர்கள் வடமாகாணத்தில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி திட்டங்களுக்கு காத்திரமான பங்கை வகிப்பதுடன் விரைவில் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளதாக தெரிவித்தனர்.

கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வது நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியம் – அரசாங்கம்

இந்தியப் பெருங்கடல் உலக இராணுவ சக்திகளின் மோதலுக்குரிய பகுதியாகவோ அல்லது விளையாட்டு மைதானமாகவோ இருக்கக் கூடாது என இலங்கை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வது, நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு என்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பெருங்கடல் முழுவதும் உள்ள கடல்சார் இராஜதந்திரத்தை மற்ற பெருங்கடல்களுடன் இணைவதற்கு மேலும் வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதேவேளை இலங்கை எந்தவொரு இராணுவக் கூட்டணியிலும் பங்கேற்காது என்றும், பசுபிக் பிராந்தியத்தின் பிரச்சனைகள் இங்கு வருவதை விரும்பவில்லை என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

உலக வல்லரசுகளின் போட்டியிலிருந்து இலங்கை எப்போதுமே விலகி இருக்கும் என்றும் இந்தப் போட்டிகள் எதுவும் இந்தியப் பெருங்கடலில் மோதலுக்கு வழிவகுக்காது என்றும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

காவல்துறை கட்டளைச் சட்ட பயன்பாடு தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதம்

அரசியலமைப்பின் அடிப்படை உரிமை மற்றும் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கான சரத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் காவல்துறை கட்டளை சட்டத்தை பயன்படுத்துவதற்கு அனுமதியில்லை என பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு அறிவித்துள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்க, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு எழுத்து மூலம் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 14 (1) அ, மற்றும் ஆ சரத்துகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில், காவல்துறை கட்டளைச் சட்டத்தை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்து சுதந்திரம் மற்றும் அமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமை அனைத்து பிரஜைகளுக்கும் உள்ளதென, குறித்த சர்த்துகளில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்புகளை மேற்கோள் காட்டியே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு இந்த கடிதத்தை அனுப்பியுள்ளது.