உலக வங்கியின் கடனுதவியின் கீழ் இலங்கைக்கு அம்புலன்ஸ் வாகனங்கள் வழங்கி வைப்பு

உலக வங்கியின் கடனுதவியின் கீழ் இலங்கையில் கோவிட் -19 அவசரகால பதில் மற்றும் சுகாதார அமைப்பை மேம்படுத்தும் திட்டத்தினால் சுகாதார அமைச்சுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட சுமார் 60 புதிய அம்புலன்ஸ்கள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் அண்மையில் சுகாதார அமைப்புகளுக்கு கையளிக்கப்பட்டன.

நாட்டின் சுகாதார அமைப்பின் பௌதீக வளங்களை அதிகரிப்பதற்காக வழங்கப்பட்ட இந்த அம்புலன்ஸ் வண்டி ஒன்றின் பெறுமதி 24.4 மில்லியன் ரூபாவாகும், அதன்படி நன்கொடையாக வழங்கப்பட்ட அம்புலன்ஸ் வண்டிகளின் மொத்த பெறுமதி 1464 மில்லியன் ரூபாவாகும்.

முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் கயாஷான் நாவானந்தா, சுகாதார செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த, பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீதரன், பிரதி பணிப்பாளர் நாயகம் (விநியோகம்) சிசிரகுமார, பணிப்பாளர் (போக்குவரத்து) ஏ.சி.எச்.எஸ். ஜிசாந்த, உலக வங்கியின் பொது சுகாதார சேவைகள் தொடர்பான சிரேஷ்ட நிபுணர் தீபிகா ஆர்ட்டிகல மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர், பேராயருடன் ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதி சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார சேவைப்பிரிவின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களப் பணிப்பாளர் பயோலா பம்பலொனி நேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி, மனித உரிமைகள் நிலைவரம், சட்ட மறுசீரமைப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

அதேவேளை இன்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான தொடர்புகளை விரிவுபடுத்தல், ஆட்சிநிர்வாகம் மற்றும் மனித உரிமைகளை வலுப்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள சட்ட மற்றும் ஏனைய நடவடிக்கைகள் என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

மேலும் இன்றைய தினம் பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்துள்ள பயோலா பம்பலொனி, இலங்கையிலுள்ள மதச்சிறுபான்மையின மக்களின் நிலை தொடர்பில் கேட்டறிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கிச் சூடு – திஹாகொட பொலிஸ் நிலையத்தில் பதற்றநிலை

பொலிஸ் அதிகாரி ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக இயங்கியதில் பாடசாலை மாணவன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து திஹாகொட பொலிஸ் நிலைய வளாகத்தில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.

15 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

பாடசாலை மாணவர்கள் குழுவொன்று முச்சக்கர வண்டியில் பயணித்த போது, ​​அதனை தடுத்து நிறுத்தி சோதனையிட சென்ற போது, ​​திஹாகொட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கி இயங்கியதில் மாணவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

குறித்த மாணவன் தற்போது கராபிட்டிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவத்தையடுத்து, திஹாகொட பொலிஸ் நிலையத்திற்கு அருகில் கிராம மக்கள் திரண்டதால் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.

நிலைமையைக் கட்டுப்படுத்த அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களிலிருந்து அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் 55 வயதுடைய உதவி பொலிஸ் பரிசோதகர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Posted in Uncategorized

மாகாண சபை தேர்தலை விரைவுபடுத்த ஒன்றிணையுமாறு அமைச்சர் டக்ளஸ் பகிரங்க அழைப்பு

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதை விரைவுபடுத்தும் நோக்கில் தமிழ் தரப்புக்கள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்துள்ளார்.

இதன்மூலம்  மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவுபடுத்த முடியும் எனவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்த்தன ஆகியோர் அனைத்து தரப்புக்களையும் ஒன்றிணைத்து செயற்படுத்துவதற்கான ஆர்வத்தினை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த அரசியல் சூழலை தமிழ் தரப்புக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

குறுகிய நலன்களையும், தேர்தல் அரியல் பற்றிய சிந்தனைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு,

அனைத்து தமிழ் தரப்புக்களினதும் முயற்சிகள் மற்றும் தியாகங்களின் பலனாக கிடைத்த  மாகாண சபைகளை செயற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஒன்றிணைந்து செயற்பட அனைவரும்  முன்வரவேண்டும்.

அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள  மாகாண சபைகளை செயற்படுத்துவதன் மூலம் அதனைப் பாதுகாத்துக் கொண்டு, ஒவ்வொரு தரப்பினரும் தாங்கள் எதிர்பார்க்கின்ற அபிலாசைகளை வென்றெடுப்பது பற்றி சிந்திப்பதே ஆரோக்கியமான அணுகுமுறையாக இருக்கும்.

கடந்த காலங்களில் கிடைத்த சந்தர்ப்பங்கள் தவறவிடப்பட்டமையைப் போன்று, தற்போதைய அரசியல் சூழலையும் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ள அனைவரும் முன்வரவேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணையாளருடன் ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் நீதியரசர் ரோஹினி மாரசிங்கவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ள ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள் குழு, நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நிலைவரம் குறித்தும் அது மனித உரிமை ஆணைக்குழுவின்மீது ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் குறித்தும் தமது கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார சேவைப்பிரிவின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களப் பணிப்பாளர் பயோலா பம்பலொனி உள்ளடங்கலாக இலங்கையிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய இராஜதந்திரிகள் குழு நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலை கொழும்பில் அமைந்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு விஜயம் மேற்கொண்டதுடன் ஆணைக்குழுவின் தவிசாளர் முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் (ஓய்வுபெற்ற) ரோஹினி மாரசிங்கவையும் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இதன்போது நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நிலைவரம் குறித்தும், அது மனித உரிமைகள் ஆணைக்குழுவின்மீது ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்தும் ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள் தமது கரிசனையை வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும் பயங்கரவாதத்தடைச்சட்டம், அண்மையகாலப் போராட்டங்கள் மற்றும் விசாரணைகள், அவ்விசாரணைகள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு அரசினால் வழங்கப்படும் ஒத்துழைப்பு ஆகிய விடயங்கள் தொடர்பிலும் இச்சந்திப்பின்போது ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள் கேட்டறிந்தனர்.

அத்தோடு மனித உரிமைகளைப் பாதுகாக்கும் செயன்முறையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அனுபவங்கள் குறித்துக் கேட்டறிந்த ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள், ஆணைக்குழுவின் செயற்பாடுகளை வரவேற்றதுடன் அவர்களுக்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் உறுதியளித்தனர்.

இலங்கையின் கடன் வழங்குனர்களுக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்குமிடையிலான அடுத்த கட்டப் பேச்சு

இலங்கையின் கடன் வழங்குனர்களுக்கும், சர்வதேச நாணய நிதியத்துக்குமிடையிலான அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை நவம்பர் 03 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதன்போது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளது.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் மூவரடங்கிய குழுவுக்குமிடையே விசேட சந்திப்பொன்று நேற்று (27) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது தனது பதவிக்காலம் முடிந்து வெளியேறவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி Tubagus Feridhanusetyawan மற்றும் புதிதாக நியமனம் பெற்றுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி Sarwat Jahan ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் கடன் வழங்குனர்களின் மாநாடு என்பன தொடர்பிலும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் கவனத்துக்கு கொண்டுவரப்படுவதுடன் இது தொடர்பில் அவரது கருத்துக்களை சர்வதேச நாணய நிதியத்துக்கு தெரியப்படுத்துவதாகவும் சாகல ரத்நாயக்க இந்தக் குழுவிடம் உறுதியளித்தார்.

பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஆர்.எச்.எஸ் சமரதுங்கவும் இச்சந்திப்பில் கலந்து கொண்டார்

உண்மையான அரகலய இனிமேல்தான் ஆரம்பம் – ஹிருணிகா

உண்மையான அரகலய இனிமேல்தான் ஆரம்பமாகவுள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

உண்மையான அரகலய இனிமேல் தான் ஆரம்பமாகவுள்ளது தற்போதைய ஜனாதிபதியை கலைப்பதற்காக அது முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னைய அரகலய அமைப்புமுறை மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவும்ராஜபக்சாக்களை துரத்துவதற்காகவும் இடம்பெற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை அரகலய வீடுகளில் ஆரம்பிக்கும் பெற்றோர்கள் அதனை ஆரம்பிப்பார்கள் தங்கள் பிள்ளைகளிற்கு உணவளிக்க முடியாததன் காரணமாக அவர்கள் இதனை ஆரம்பிப்பார்கள் என ஹிருணிகா தெரிவித்துள்ளார்.

 

பிள்ளைகள் பட்டினி கிடப்பதை தாங்கிக்கொள்ள முடியாததன் காரணமாக அவர்கள் அரகலயவை ஆரம்பிப்பார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தாங்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளிற்கு ஏதோ ஒரு வழியில் தீர்வை காண்பதற்காக பெற்றோர்கள் அணிதிரள்வார்கள் பெற்றோர்கள் எதிர்கொண்டுள்ள கடும் நெருக்கடியுடன் இந்த அரசியல் தலைவர்கள் விளையாட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மாத இறுதியில் புதிய ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகும் இந்த வருட இறுதியில் ஆர்ப்பாட்டங்கள் முடிவிற்கு வரும் தேர்தலை அறிவிப்பதை தவிர ஜனாதிபதிக்கு வேறுவழியில்லை எனவும் ஹிருணிகா தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized | Tagged

ஆக்கிரமிப்புக்குள்ளாகும் திருக்கோணேஸ்வரர் ஆலயம் – கல்முனை மாநகர சபையில் தீர்மானம்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருகோணமலை, திருக்கோணேஸ்வரர் ஆலய சூழலை, சிங்கள, பௌத்த ஆக்கிரமிப்புக்குள்ளாக்க முனையும் திட்டமிட்ட செயற்பாடுகளை கண்டித்தும், தடுத்து நிறுத்துமாறு கோரியும் கல்முனை மாநகர சபையில் ஏகமனதாக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த ஆலய பிரதேசத்தை புனித பிரதேசமாக சட்டப்படி பிரகடனப்படுத்துமாறும் பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபையின் உறுப்பினர்களுக்கான மாதாந்தக் கூட்டம் மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் தலைமையில், சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திலேயே ஜனாதிபதி, பிரதமர், கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளைக் கோரும் மேற்படி தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

கல்முனை மாநகர சபை பெரும்பான்மை முஸ்லிம் உறுப்பினர்களைக் கொண்டிருந்தும் அவர்களதும் ஏகோபித்த ஆதரவுடன் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

சபை அமர்வில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதித் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான ஹென்ரி மகேந்திரன் தீர்மானம் தொடர்பான பிரேரணையை முன்மொழிந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.

“கிழக்கிலங்கையில் மிகவும் தொன்மை வாய்ந்த பிரசித்திபெற்ற புராதன இந்து ஆலயமாக திருகோணமலை, திருக்கோணேஸ்வரர் ஆலயம் திகழ்ந்து வருகின்றது.

உலகில் பிரசித்தி பெற்ற, இந்துக்களின் திருத்தலமான கோணேஸ்வரர் ஆலயத்தின் இன்றைய நிலை பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தொல்பொருள் என்ற போர்வையில் அங்கு விசமத்தனமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன், ஆலயத்தின் புனிதத்தன்மைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்ட பௌத்த, சிங்கள ஆக்கிரமிப்புகளும் மேலோங்கி நிற்கின்றன.

இதன் ஓர் அங்கமாகவே திட்டமிட்டு தொல்பொருள் என்ற போர்வையில் ஆலய புணருத்தாரண கட்டுமானப் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த நாடு சுதந்திரமடைந்த போது ஆலயம் அமைந்துள்ள திருத்தலம் 18 ஏக்கர் ஒரு றூட் பரப்பளவைக்கொண்டதாக இருந்ததென வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், மாறி, மாறி வந்த இந்த நாட்டின் அரசுகள் இப்புனித பிரதேசத்தை அபகரிப்பதிலும், ஆக்கிமிப்பதிலும் அக்கறைகாட்டி வந்துள்ளதால் இன்றைய மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

2006 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆட்சியிலிருந்த அரசின் பலம் பொருந்திய அமைச்சர் ஒருவர் சட்ட விரோதமாக, வாழ்வாதார உதவி என்ற போர்வையில் தென்னிலங்கை சிங்களவர்களுக்கு 22 கடைகளை அமைக்க வழிவகுத்தார்.

இத்தொகை இன்று பல்கிப்பெருகி, எமது ஆலயத்தின் புனிதத் தன்மைக்கு சவாலாகவும் அமைந்துள்ளது.

எனவே, கோணேஸ்வரர் ஆலய பூமியில் இடம்பெறும் பேரினவாத, பௌத்த சிங்கள ஆக்கிரமிப்புக்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

ஆலயப் பிரதேசம் சட்டபூர்வமாக புனிதப் பிரதேசமாகப் பிரகடனப்படுத்தப்பட வேண்டும். இதற்கு நமது குரல் ஒன்றுபட்டதாக ஓங்கி ஒலிக்க வேண்டும்” என்றார்.

உறுப்பினர்களான சந்திர சேகரம் இராஜன், எம். குபேரன் ஆகியோர் பிரேரணையை வழிமொழிந்து சபையில் உரையாற்றியதுடன், பிரேரணைதொடர்பான தீர்மானம் சபையில் ஏகமனதாகவும் நிறைவேற்றப்பட்டது.

கட்டுநாயக்க சென்ற ரஞ்சன் அதிகாரிகளால் வெளியேற்றம்

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற ரஞ்சன் ராமநாயக்கவை திருப்பி அனுப்ப குடிவரவு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அவர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அவருக்கு எதிராக நிலுவையில் உள்ள இரண்டு வழக்குகள் தொடர்பிலும் அந்த நீதிமன்றங்களால் விமானப் பயணத் தடை விதிக்கப்பட்டதால், கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பிலும் அவற்றைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதற்கமைய, ரஞ்சன் ராமநாயக்க கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு புறப்படுவதற்கு வருகை தந்த போது அவரை திருப்பி அனுப்ப குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ரஞ்சன் ராமநாயக்க கட்டுநாயக்கவில் இருந்து கட்டார் சென்று அங்கிருந்து அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்தார்

குருந்தூர் மலை விகாரை கட்டுமானம் தடுக்கப்படின் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்துவோம்

குருந்தூர் மலையானது இந்து கோவில் என குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. குருந்தூர் மலையானது பௌத்த விகாரை என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் ஆதலால் புத்த சாசனத்தின் அடையாளங்களை அழிக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என தேசிய பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான அமைப்புக்களின் கூட்டமைப்பின் தலைவர் மெதகொட தம்மானந்த தேரர் தெரிவித்தார். பெபிலியான சுனேத்ரா தேவி மஹா பிரிவெனா விகாரையில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு சில அரசியல்வாதிகள் குருந்தூர் மலை விவகாரத்தின் உண்மையை அறிந்துக்கொண்டு அரசியல் நோக்கத்துக்காக அமைதி காத்து செயற்பட்டு வருகிறார்கள். புத்தசாசனத்துக்கு எதிராக செயற்படுபவர்கள் அனைவரும் சபிக்கப்படுவார்கள்.

குருந்தூர் மலையில் 100-103 வரையிலான காலப்பகுதிக்குள் பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டதாகவும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த தொல்பொருள் அம்சங்கள் அடங்கிய விகாரைகள் நிர்மாணிக்கப்பட்டதாகவும் மகாவசம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் பௌத்த மத அடையாளத்தை பிரதிபலிக்கும் சின்னங்கள் குருந்தூர் மலையில் காணப்படுவதாக தொல்பொருள் ஆய்வு சான்றுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

குருந்தூர் மலை விகாரை இந்து கோயில் என்று குறிப்பிடுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. விகாரையின் நிர்மாண பணிகளுக்கு தமிழ் அடிப்படைவாதிகள் எதிர்ப்பு தெரிவிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

புலம் பெயர் தமிழ் அமைப்புக்களின் கட்டளைக்கு அமையவே தமிழ் அரசியல்வாதிகள் செயற்படுகிறார்கள். மேலும், புத்தசாசன அமைச்சர் மற்றும் தொல்பொருள் திணைக்கள் பணிப்பாளர் நாயகத்தில் செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கது எனவும் குருந்தூர் மலையில் புத்தசாசனத்துக்கு பாதிப்பை ஏற்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது எனவும் அவ்வாறு ஏற்படின் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்துவோம் என்றும் தெரிவித்திருந்தார்.