22 ஆம் திருத்தம் மீதான விவாதம் ஒத்தி வைப்பு!

22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மீதான விவாதம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி அந்தத் திருத்த சட்டமூலத்தை அடுத்த அமர்வில் விவாதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தை இன்றும் (06) நாளையும் (07) நடத்துவதற்கு பாராளுமன்ற விவகாரக் குழு கடந்த 29 ஆம் திகதி தீர்மானித்திருந்தது.

Posted in Uncategorized

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிராக முல்லைத்தீவில் தொடரும் போராட்டம்

முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு துணைபோகும் அதிகாரிகளை 4இடம் மாற்றுமாறு கோரியும் சுருக்குவலை, வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடித்தல் போன்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிராகவும் முல்லைத்தீவு மாவட்டத்தின் 24 சங்கங்களை சேர்ந்த மீனவர்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

முல்லைத்தீவு மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எரிபொருள் கிடைக்காத நிலையில் பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் தொழிலுக்கு சென்று வருகின்ற மீனவர்கள், கடலில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமக்கு தீர்வு கிடைக்கவில்லை என தெரிவித்து ஆத்திரமடைந்த மீனவர்கள் தமது படகுகள் வலைகளுக்கு தீவைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபடும் மீனவர்கள் மீது குற்றச்சாட்டுக்களை முன் வைத்த முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் , சாலை பகுதிகளில் தென்பகுதியில் இருந்து வருகைதந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற மீனவர்கள் மற்றும் மாத்தளன் பகுதிகளில் மீன்பிடியில் ஈடுபடும் தமிழ் மற்றும் முஸ்லிம் மீனவர்கள் என சுமார் முந்நூறு பேர் முல்லைத்தீவில் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இந்நிலையில் ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மீனவர்களை தாக்க குறித்த மீனவர்கள் முற்ப்பட்டபோது காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிபடையினர் கண்ணீர் புகை தாக்குதலை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் “அமைதியான முறையில் மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மீனவர்களான தம்மீது, சுருக்குவலை உள்ளிட்ட சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளில் அரச அதிகாரிகளின் ஆதரவோடு ஈடுபட்டுவரும் மீனவர்கள் இன்று தாக்குதலை ஏற்படுத்தும் வகையில் வந்துள்ளார்கள் என ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சட்டவிரோத தொழில்களுக்கு எதிரான மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆதாரங்களை சேகரிக்கும்பொறிமுறையை- சர்வதேச விசாரணை பொறிமுறையாக தரமுயர்த்தவேண்டும்- புலம்பெயர் மனித உரிமை செயற்பாட்டாளர்.

ஆதாரங்களை சேகரிக்கும்பொறிமுறையை- சுதந்திரமான சர்வதேச விசாரணை பொறிமுறையாக தரமுயர்த்தவேண்டும் என புலம்பெயர் மனித உரிமை செயற்பாட்டாளர் ராஜி பட்டர்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அனைத்து மனித உரிமைகளையும் ஊக்குவித்தல் பாதுகாத்தல் என்ற கருப்பொருளில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இடம்பெற்ற பொதுவிவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்

அவர் மேலும் குறிப்பிட்டதாவது

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் முழுமையான அறிக்கையையும் பரிந்துரைகளையும் நாங்கள் பாராட்டுகின்றோம்.

இன்று நாங்கள் ஆதாரங்களை சேகரிப்பது தொடர்பில் காணப்படும் சவால்கள் குறித்தும் சாட்சிகளின் பாதுகாப்பிற்கான பொறிமுறையொன்றை உருவாக்கவேண்டிய அவசரதேவை குறித்தும் நாங்கள் கவனம் செலுத்தவுள்ளோம்.

தமிழ் மக்களை பொறுத்தவரை 46\1 தீர்மானத்தின் அடிப்படையிலான ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறை போதுமானதல்ல அதனை முழுமையான சுதந்திரமான சர்வதேச விசாரணை பொறிமுறையாக தரமுயர்த்தவேண்டும்.

தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கு நீதி வழங்குவதற்கான முழுமையாக ஆதாரங்களை சேகரிப்பது அடிப்படையாக அமையும் அதேவேளை சாட்சிகளை பாதுகாப்பதற்கான செயற்பாடுகள் மிகவும் பலவீனமாக உள்ளன.

புலனாய்வு உத்தியோகத்தர்களை அச்சுறுத்துவதற்கு மிரட்டுவதற்கு பயன்படுத்துவது என்பது சாட்சியங்களை ஒன்றுசேர்ப்பதற்கு பெரும் தடையாக உள்ளது.

அரசாங்கத்திலிருந்து சாட்சிகளை பாதுகாப்பதற்கானசுயாதீனமான பொறிமுறையை ஐநா குழு முன்வைக்கவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.மேலும் அச்சுறுத்தல்களிற்கு நேரடியாக அல்லது மறைமுகமாக ஆதரவளிக்கும் அரசாங்க அதிகாரிகளை தண்டிக்கவேண்டும் எனவும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

வீடுகளிற்கு வரும் பாதுகாப்பு படையினர் பாலியல்வன்முறைகளில் ஈடுபடலாம் என்ற அச்சங்களும் பயங்கரவாத விசாரணைபிரிவிடமிருந்து விசாரணைக்கு வருமாறு கடிதங்கள் கிடைப்பதும் இலங்கையில் உண்மையில் இடம்பெறும் சம்பவங்கள்.

மனித உரிமை செயற்பாட்டாளர்களும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் இலங்கையின் வடக்குகிழக்கு பகுதிகளில் இருந்து விசாரணைக்கு வருமாறுஅழைக்கப்படுகின்றனர்.

தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கு காரணமானவர்களிற்கு எதிராக ஐநா உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் 13 வருடங்கள் தாமதமாகிவிட்ட நீதியை வழங்கவேண்டும் எனவும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

தமிழ் மக்களிற்கு சுயநிர்ணயஉரிமையை உறுதிப்படுத்தும் அரசியல் தீர்வையும் முன்வைக்கவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நாளை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நாளைய தினம் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது.எவ்வாறாயினும், இலங்கை அதனை எதிர்க்கும் எனவும், வரைவிலுள்ள சர்வதேச நாடுகளின் தலையீடு தொடர்பான 8ஆவது சரத்துக்கு எதிராக செயற்பட்டு நிற்கும் எனவும் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

30 நாடுகளின் இணை அனுசரணையுடன் பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, ஜேர்மனி ஆகிய நாடுகள் இணைந்து இந்த வரைவை முன்வைத்துள்ளன.பிரித்தானியா தலைமையிலான சில முக்கிய நாடுகள், ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான இறுதி வரைவை முன்வைத்துள்ளன.

Posted in Uncategorized

தனது தோல்வியை மறைக்க இரகசிய பிரசாரத்தை கோட்டாபய ஆரம்பித்துள்ளதாக தகவல்

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அடுத்து மக்களால் நடத்தப்பட்ட போராட்டத்தின் காரணமாக வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்து அங்கு புகழிடம் மறுக்கப்பட்ட பின் அண்மையில் நாடு திரும்பிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தமக்கு ஏற்பட்ட தோல்வி பிம்பத்தைத் துடைக்கும் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளார் என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

“இதன் ஒரு கட்டமாக, கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது ‘கம சமக பிலிசந்தர’ திட்டத்தின் கீழ், அவர் விஜயம் செய்த கிராமங்களுக்கு தற்போது ஊடகவியலாளர் மற்றும் வர்த்தக அதிபர் ஒருவரால் அமைக்கப்பட்ட குழுவொன்று விஜயம் செய்து வருகிறது.

இந்த உறுப்பினர்கள் மக்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றனர். இந்த கிராமங்களில் கோட்டாபய ராஜபக்ச மீதான மக்களின் கருத்துக்களை அறியவும், முன்னாள் ஜனாதிபதி மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை உள்ளதா என்பதை சோதிப்பதற்காகவும் கருத்துக் கணிப்புகள் நடத்தப்படுகின்றன.

“வியத்மக” அணிக்கு நிகரான இந்தக் குழுவால் நடத்தப்படும் இந்த சமூக ஊடக ஆய்வு, தோல்வியடைந்த ஜனாதிபதி எதிர்காலத்தில் தேவைப்பட்டால் மீண்டும் அரசியலில் நுழைய முடியுமா என மக்களின் உணர்வுகளைக் கண்காணித்து வருகின்றது.

எனினும் தற்போது அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்படவில்லை. மறுபுறம், ராஜபக்ச அமெரிக்காவில் நிரந்தர வதிவிடத்திற்கு விண்ணப்பித்துள்ளார், ஆனால் செயல்முறை நீண்ட காலம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உண்மையில், இந்த அந்தஸ்து வழங்கப்பட்டாலும், ராஜபக்ச தொடர்ந்து நாட்டில் தங்கியிருப்பார் என்றும், தனது மகன் மற்றும் குடும்பத்தினரைப் பார்க்க மட்டுமே அமெரிக்கா செல்லக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை தாம் தவறாக வழிநடத்தப்பட்டதாக, அவர் கூறும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், முன்னாள் ஜனாதிபதிக்கு பல தடவைகள் கரிம உரக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டதாகவும் கட்சித் தலைவர்கள் தெரிவிக்கின்றனர். முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் இதில் ஒருவராவார்.

Posted in Uncategorized

இலங்கை மக்களிடையே பட்டினியும் வறுமையும் பரவி வருவது மனித உரிமை மீறலாகும் – சர்வதேச மன்னிப்புச் சபை

பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினால் இலங்கை மக்களிடையே பட்டினியும் வறுமையும் பரவி வருவது அவர்களின் மனித உரிமை மீறலாகும் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் சுகாதாரம், உணவு மற்றும் சமூக பாதுகாப்பு உரிமைகளைப் பாதுகாத்தல் தொடர்பான 57 பக்க ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

“We are near total breakdown” என்ற கருப்பொருளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கை, இலங்கையின் உணவுப் பணவீக்கம், சுகாதாரப் பாதுகாப்பில் உள்ள குறைபாடுகள், வருமான இழப்பு, ஊட்டச்சத்து குறைபாடுகள் போன்றவற்றைப் பற்றிய முழுமையான பகுப்பாய்வை முன்வைத்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம், மருந்துப் பொருட்களின் விலையை 40% உயர்த்த சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியதுடன், ஓகஸ்ட் மாதத்திற்குள் 2 உயிர்காக்கும் மருந்துகள் உட்பட 188 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2 ஆயிரத்து 724 அத்தியாவசிய அறுவை சிகிச்சை சாதனங்கள் பற்றாக்குறையாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6.2 மில்லியன் மக்கள் அல்லது 28% மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் 5.7 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுவதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி!

மூன்று சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக்கி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, மின்சார விநியோகம் தொடர்பான சேவைகள், எரிபொருள் உற்பத்தி, விநியோகம் மற்றும் பகிர்ந்தளிப்பு, வைத்தியசாலைகள், மருந்தகங்கள் மற்றும் அதுபோன்ற ஏனைய நிறுவனங்களில் நோயாளர்கள் பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள்
ஆகிய சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக்கி இந்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

”குடிசைகள் இல்லாத நாட்டை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம்”: பிரதமர்!

குடிசைகள் இல்லாத நாட்டை உருவாக்கி குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

‘மாற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் யாரையும் எதனையும் காப்போம்’ என்ற தொனிப்பொருளில் அலரி மாளிகையில் இன்று (திங்கட்கிழமை) காலை நடைபெற்ற 36ஆவது உலக வாழ்விட தின தேசிய கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உலக வாழ்விட தின கொண்டாட்டத்துடன் இணைந்து 650 வீட்டு உரிமைப் பத்திரங்களும் வழங்கப்பட்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மனித உயிர்களுக்கு பாதுகாப்பு, அபிவிருத்தி மற்றும் நம்பிக்கை உள்ள வீட்டில் பிள்ளைகளின் எதிர்காலத்தை கட்டியெழுப்பக்கூடிய சூழலை உருவாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென பிரதமர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் வசதி குறைந்த 1200 தோட்டங்களுக்கு நிரந்தர வீடமைப்புத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் பிரதமர் தினேஷ் குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

22ஆவது திருத்தம்: ஆராயுமாறு ஆளும் கட்சியினருக்கு ஜனாதிபதி வேண்டுகோள்!

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பாக ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் கலந்துரையாடி மேலதிக ஆய்வில் ஈடுபடுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதியின் தலைமையில் நேற்று இடம்பெற்ற ஆளும் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தின்போது நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கூட்டத்தின்போது, அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தச்சட்டமூலம் தொடர்பாக நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 29ஆம் திகதி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெற்ற பாராளுமன்ற விவகாரக் குழுவில் அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தை இம்மாதம் 6 மற்றும் 7ஆம் திகதிகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், தற்போதைக்கு அரசியலமைப்பு திருத்தம் தேவையில்லை என ஆளுங்கட்சி பராளுமன்ற உறுப்பினர்கள் பலர் தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தருணத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் நாட்டுக்கு தேவை என பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அந்த அதிகாரங்களை விட்டுக்கொடுக்க இது பொருத்தமான சந்தர்ப்பம் அல்ல எனவும் நாட்டின் ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு ஜனாதிபதியின் அதிகாரங்கள் அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேநேரம், அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வருவதற்கு பொதுஜன பெரமுனவின் 30க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Posted in Uncategorized

இந்த வார அமைச்சரவைத் தீர்மானங்கள்!

ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்
01. ‘உணவுக் கொள்கைக் குழுவை’ நிறுவுதல்
உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மற்றும் போசாக்கினை உறுதிப்படுத்தல் போன்ற தீர்மானங்களை எட்டுப்போது கிராமிய மட்டத்திலிருந்து மேல்மட்டத்தை நோக்கிய மூலோபாயத்தை பின்பற்றி கிராமிய பொருளாதார மறுமலர்ச்சி நிலையங்களை வலுப்படுத்தும் நோக்கில் பல் – துறைசார் பொறிமுறையொன்று அரசாங்கத்தால் அண்மையில் நிறுவப்பட்டது.
அத்தியாவசிய உணவுப் பொருட்களை உற்பத்தி செய்தல் மற்றும் விநியோகம் செய்தல் உள்ளிட்ட ஒட்டுமொத்த பொறிமுறைக்கு வழிகாட்டல் மற்றும் கண்காணித்தல், அத்துடன் பல்வேறு நிர்வாக மட்டங்களில் சமூகத்தில் அதிக இடருக்கு உள்ளாகக் கூடியவர்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களைப் பெற்றுக்கொள்ளக் கூடிய இயலுமை குறித்த பொறிமுறை மூலம் உறுதிப்படுத்தப்படும்.
இப்பொறிமுறையை முறைசார்ந்த வகையிலும் வினைத்திறனாகவும் நடைமுறைப்படுத்துவதற்காக விநியோகம்;, விலை மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பான குறுகியகால பிரச்சினைகள் உள்ளிட்ட நாட்டில் விநியோகச் சங்கிலி நடவடிக்கைகள் தொடர்பாக உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோருக்கிடையே நம்பிக்கையைக் கட்டியெழுப்புதல் மற்றும் நீண்டகால வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் குறித்த நிறுவனங்களின் தலைமையில் ஏற்புடைய நிறுவனங்களின் தலைவர்களின் பங்கேற்புடன் ‘உணவுக் கொள்கைக் குழுவை’ நிறுவுவதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
02. அரசுக்கு சொந்தமான தொழில் முயற்சிகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வு வயதை திருத்தம் செய்தல்
பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டுள்ள 2022 இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்டுள்ளவாறு, அரசுக்குச் சொந்தமான தொழில் முயற்சிகளில் பணிபுரியும் ஊழியர்களின் கட்டாய ஓய்வு பெறும் வயது 60 ஆக திருத்தப்பட வேண்டியுள்ளது. அதற்கமைய, 2023.01.01 தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் அதற்கான ஒழுங்குவிதிகளை விதித்து ஏற்புடைய சுற்றறிக்கை ஆலோசனைகளை வெளியிடுவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தெசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
03. 2022ஃ23 பெரும்போகச் செய்கைக்குத் தேவையான மியூரேட் ஒஃப் பொடாஸ்; (MOP) உரக் கொள்வனவுக்கான பெறுகை
ஆசிய அபிவிருத்தி வங்கியால் வழங்கப்பட்டுள்ள 50 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியைப் பயன்படுத்தி 40,000 மெட்ரிக்தொன் 2022ஃ23 பெரும்போகச் செய்கைக்குத் தேவையான மியூரேட் ஒஃப் பொடாஸ்; (MOP) உரக் கொள்வனவுக்கான பெறுகைக் கோரலுக்கு 2022.06.20 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, முறையான பெறுகைக் கோரல் செயன்முறை கடைப்பிடிக்கப்பட்டுள்ளதுடன், அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய குறித்த ஒப்பந்தத்தை Ameropa Asia Pte, Ltd
கம்பனிக்கு வழங்குவதற்காக நீர்ப்பாசன அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
04. சுங்கக் கட்டளைச் சட்டம் மற்றும் 2006 ஆம் 01 ஆம் இலக்க அரசாங்க அரசிறையைப் பாதுகாத்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தை திருத்தம் செய்தல்
சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 47 மற்றும் 57 ஆம் உறுப்புரைகள் மற்றும் 2006 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க அரசாங்க அரசிறையைப் பாதுகாத்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆவது உறுப்புரையைத் திருத்தம் செய்வதற்காக இதற்கு முன்னர் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அத்துடன் சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 153 ஆவது உறுப்புரையின் ஏற்பாடுகளால் பொருட்களை அரசவுடமையாக்கல் மற்றும் அபராதம் விதித்தல் போன்றவற்றால் அரசுக்கு கிடைக்கின்ற வருமானம் மிகவும் குறைந்த மட்டத்தில் காணப்படுவதால் குறித்த உறுப்புரையை திருத்தம் செய்வதன் அவசியத்தை அராசாங்க கணக்குகள் பற்றிய பாராளுமன்ற குழு சுட்டிக்காட்டியுள்ளது.
அதேபோல் இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் வர்த்தக நடவடிக்கைகளை இலகுபடுத்தும் படிமுறையாக சுங்க நடவடிக்கைகள் தொடர்பாக விசாரணை செய்தல் மற்றும் குறித்த விசாரணைகளைப் பூர்;த்தி செய்வதற்கான கால வரையறையை சட்டரீதியாகக் குறித்தொதுக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, பொருத்தமான சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்தி மேலும் சுங்கக் கட்டளைச் சட்டம் மற்றும் 2006 ஆம் 01 ஆம் இலக்க அரசாங்க அரசிறையைப் பாதுகாத்தல் சட்டத்தை திருத்தம் செய்வதற்குத் தேவையான படிமுறைகளை மேற்கொள்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
05. பாடசாலை பகலுணவு வேலைத்திட்டம்
அரசாங்கம் வருடாந்தம் 4 பில்லியன் ரூபாய்கள் செலவிட்டு 7,926 பாடசாலைகளில் 1.08 மில்லியன் மாணவர்களை இலக்குவைத்து பாடசாலை பகலுணவு வேலைத்திட்டத்தை  நடைமுறைப்படுத்தி வருகின்றது. வறுமையொழிப்பு கொள்கைப் பிரகடனத்தின் கீழ் ‘உணவுப் பற்றாக்குறையால் எந்தவொரு பிரஜையும் பட்டினியால் இருத்தல் ஆகாது’ எனும் நோக்கத்தை இலக்காகக் கொண்ட வேலைத்திட்டங்களை அரசாங்கம் துரிதமாக மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கின்றது.
அதன்கீழ் வறுமை மற்றும் போசாக்கு தொடர்பாக மாவட்ட மட்டத்தில் காணப்படுகின்ற தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, தேவையான நிதியை வெளிநாட்டு நன்கொடைகள் மூலம் பெற்றுக்கொண்டு தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பாடசாலை பகலுணவு வேலைத்திட்டத்தை விரிவாக்கம் செய்து மேலும் ஒரு மில்லியன் மாணவர்களுக்கு முழுமையான போசாக்கான பகலுணவு வேளையை வழங்குவதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
06. 2023 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
2023 நிதியாண்டுக்கான  ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை தயாரிப்பதற்காக 2022.08.22 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஒவ்வொரு செலவுத் தலைப்புக்களுக்கான வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளை உள்ளடக்கி தயாரிக்கப்பட்டுள்ள 2023 ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் அமைச்சரவையால் ஆராயப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான மொத்த மீண்டெழும் செலவாக 4,634 பில்லியன் ரூபாய்களும், மொத்த மூலதனச் செலவாக 3,245 பில்லியன்களும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, 2023 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காகவும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தெசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.