ஐ.நா மனித உரிமை பேரவையில் படுதோல்வியை சந்திக்க போகும் இலங்கை

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனையை எந்த வழியிலும் இலங்கை அரசால் தோற்கடிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இலங்கைக்கு ஆதரவாக ஆறு நாடுகள் மாத்திரமே வாக்களிக்கும் என புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா, பிரித்தானியா, கனடா,ஜேர்மனி,மலாவி,மொண்டினீக்ரோ மற்றும் கிழக்கு மெசிடோனியா ஆகிய நாடுகள் இலங்கைக்கு எதிரான யோசனைக்கு இணை அனுசரணை வழங்குகின்றன. அல்பேனியா, அவுஸ்திரேலியா, ஒஸ்ரியா, பெல்ஜியம், கனடா, செக் குடியரசு, டென்மார்க், எஸ்தோனியா, பிரான்ஸ், ஜேர்மனி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, லத்வியா, லிவ்டென்ஸ்டையின், லக்ஸம்பேர்க், மாஷல் தீவுகள், நெதர்லாந்து, நியூசிலாந்து, ஸ்லோவேக்கியா, சுவீடன், துருக்கி, பிரித்தானியா, வட அயர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் ஏற்கன யோசனை ஆதரவாக கையெழுத்திட்டுள்ளன. இந்தியா, நேபாளம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் வாக்கெடுப்பில் கவந்துக்கொள்ளாது

வழமையாக இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும் ரஷ்யா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு இம்முறை வாக்களிக்கும் உரிமை இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவும் நேபாளமும் வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளவதில்லை என தீர்மானித்துள்ளன.

அதேபோல் கடந்த காலங்களில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்து வந்த மத்திய கிழக்கு நாடுகளும் இம்முறை வாக்களிப்பில் கலந்துக்கொள்வதில்லை என முடிவு செய்துள்ளன.

இலங்கைக்கு எதிரான யோசனை எதிர்வரும் 6 ஆம் அல்லது 7 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் வாக்கெடுப்புக்காக சமர்ப்பிக்கப்பட உள்ளது. வெளிவிவகார அமைச்சர் அலி சப்றி தற்போது ஜெனிவா சென்றுள்ளார்

Posted in Uncategorized

மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவர்கள் நியமனம்!

புதிய அமைச்சர்கள் பதவியேற்ற பின்னரே 25 மாவட்டங்களுக்குமான மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்படுவார்கள் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவர்கள் நியமனம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

“அமைச்சர்கள் சிலர் விரைவில் பதவியேற்கவுள்ளனர். புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டதன் பின்னர், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவர்களை நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

விரைவில் அவை நடைமுறைப்படுத்தப்படும்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்: தீர்ப்பாயத்தின் அறிவிப்பு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் பிரதிவாதிகளின் பிணைக் கோரிக்கை மீதான உத்தரவு நவம்பர் 24ஆம் திகதி பிறப்பிக்கப்படும் என, கொழும்பு மேல் நீதிமன்ற தீர்ப்பாயம், இன்று (03) திகதி நிர்ணயித்தது.

ஈஸ்டர் தாக்குதலுக்கு சதி மற்றும் ஆதரவு வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மௌலவிகள் உட்பட பிரதிவாதிகள் 25 பேருக்கு எதிராக சட்டமா அதிபரால்  வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதிபதிகளான தமித் தொட்டவத்த (தலைவர்) அமல் ரணராஜா மற்றும் நவரட்ன மாரசிங்க அடங்கிய மேல் நீதிமன்ற தீர்ப்பாயம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன்போது, பிரதிவாதிகளின் பிணை கோரிக்கைகள் தொடர்பில் ஆட்சேபனைகளை தாக்கல் செய்யவுள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஹரிபிரியா ஜயசுந்தர மன்றுக்கு அறிவித்தார்.

அதனையடுத்து, பிரதிவாதிகளின் பிணைக் கோரிக்கை மீதான உத்தரவு, நவம்பர் 24ஆம் திகதி பிறப்பிக்கப்படும் என, நீதிபதிகள் குழாம் திகதியை நிர்ணயித்தது.

நௌபர் மௌலவி, சஜித் மௌலவி, மொஹமட் மில்ஹான், சாதிக் அப்துல்லா, ஆதம் லெப்பை, மொஹமட் சனாஸ்தீன் மற்றும் மொஹமட் ரிஸ்வான் உட்பட 25 பிரதிவாதிகளுக்கு எதிராக 23,270 குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டன.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளில் கொலைக்கு சதி செய்தல், உதவி செய்தல், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை சேகரித்தல் மற்றும் கொலை முயற்சி ஆகியவை அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று, கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பில், 270 பேர் உயிரிழந்ததுடன் 500 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

Posted in Uncategorized

புனர்வாழ்வுப் பணியக சட்டமூலம்- சட்டமா அதிபரின் முக்கிய அறிவிப்பு

புனர்வாழ்வுப் பணியக சட்டமூலம் குறித்த ஏற்பாடுகள் நீதித்துறை மீளாய்வுக்கு உட்படுத்தப்படும் என்று உயர்நீதிமன்றத்துக்கு இன்று (03) அறிவித்த சட்டமா அதிபர், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலத்தில் சில திருத்தங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது என்றும் அறிவித்தார்.

நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ கடந்த 23 ஆம் திகதி புனர்வாழ்வு பணியகத்தை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.

அந்த சட்டமூலம் நாட்டை இராணுவமயப்படுத்துவதற்கு வழிவகுக்கும் அரசியலமைப்புக்கு முரணான சட்டமூலம் என தீர்ப்பளிக்குமாறு கோரி  சட்டத்தரணி அமில எகொடமஹவத்த உயர் நீதிமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை (29) விசேட தீர்மான மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

மேலும், குறித்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர், எஸ்.எம்.மரிக்கார் வெள்ளிக்கிழமையன்று (30) அடிப்படை உரிமைகள் மனுவொன்றை தாக்கல் செய்தார்.

குறித்த மனுக்கள், பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே சட்டமா அதிபரால் மேற்குறிப்பிட்ட விடயம் மன்றுக்கு அறிவிக்கப்பட்டது.

அரசியலமைப்பின் 3 மற்றும் 4 வது பிரிவுகளை குறித்த சட்டமூலம் மீறும் என்றும் நாட்டு மக்களுக்கு சொந்தமான நீதிமன்ற அதிகாரம், நீதிமன்றத்தின் உத்தரவின்றி பணியகத்திடம் ஒப்படைக்கப்படுவதாகவும், சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் அது நீதிமன்ற அதிகாரத்தை சூறையாடும் எனவும் சட்டத்தரணியின் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தீவிர அல்லது அழிவுகரமான செயல்களில் ஈடுபடும் வழி தவறிய போராளிகளுக்கு புனர்வாழ்வு என முன்னுரையில் கூறப்பட்டாலும், குறிப்பிட்ட வரையறை எதுவும் உள்ளடக்கப்படாமையின் காரணமாக கடந்த கால தவறுகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு கூட புனர்வாழ்வு அளிக்கும் அதிகாரம் இராணுவத்தினருக்கு வழங்கப்படும் என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மக்களின் பேச்சு, கருத்துச் சுதந்திரம் , அமைதியான போராட்ட சுதந்திரம் ஆகியவற்றை முற்றிலும் நசுக்கும் வகையிலான இந்த சட்டமூலத்தை  சபையின் 2/3 பெரும்பான்மைக்கு மேலதிகமாக வாக்கெடுப்பின் மூலம் மக்களின் ஆணை தேவை என்று அறிவிக்குமாறு மனுதாரர் கோரியுள்ளார்.

வழி தவறிய போராட்டக்காரர்கள், அடிப்படைவாதிகள்,  நாசகார செயலில்  ஈடுபடுவோர் அல்லது போதை மருந்துகளுக்கு அடிமையானோருக்கான புனர்வாழ்வு செயற்பாட்டை திறம்பட செயலாற்றுவதற்காக இந்த பணியகம் ஸ்தாபிக்கப்படவுள்ளது.

பணியகத்தின் செயற்பாடுகள், நிர்வாகம், முகாமைத்துவம் என்பவற்றுக்கு சபையொன்றை ஸ்தாபிக்கப்பட்டு, பாதுகாப்புக் கல்வி , சுகாதாரம் , புனர்வாழ்வு உள்ளிட்ட துறைசார் அமைச்சுகளின் செயலாளர்கள் அதற்கென நியமிக்கப்படவுள்ளனர்.

தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் உறுப்பினர்கள் மற்றும் பொலிஸ்மா அதிபர் அல்லது பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோரும் அதில் உள்ளடக்கப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகில் பட்டினியால் வாடும் நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இணைத்துக்கொள்ளப்பட்டது

உலகில் பட்டினியால் வாடும் நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது.உலக உணவுத் திட்டத்தால், கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையில், முதல் தடவையாக பட்டினியால் வாடும் நாடுகளின் பட்டியலில் இலங்கை இணைக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட புதிய அறிக்கையிலும், இலங்கை பட்டினி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

உணவு பாதுகாப்பற்ற நிலை காணப்படும் நாடுகளில் ஆப்கானிஸ்தான், எதியோப்பியா, நைஜீரியா, தென் சூடான், சோமாலியா மற்றும் யேமன் ஆகிய நாடுகள் காணப்படுகின்றன.அத்துடன், இலங்கையும் இந்த அபாய கட்டத்தை நெருங்கி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கையானது கடும் உணவு தட்டுப்பாட்டுக்கு முகம் கொடுத்துள்ளது என உலக உணவுத் திட்டத்தின் அறிக்கையை மேற்கோள்காட்டி சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.குறித்த அறிக்கையை மேற்கோள்காட்டி சர்வதேச நாணய நிதியமும் இவ்வருடம் ஒக்டோபர் மாதம் முதல் எதிர்வரும் ஜனவரி மாதம் வரையிலான காலப்பகுதியில் இலங்கை உட்பட 19 நாடுகளில் உணவு பாதுகாப்பற்ற நிலை காணப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.(

Posted in Uncategorized

இலங்கையில் வேலை வாய்ப்பற்றோர் எண்ணிக்கையில் அதிகரிப்பு

இலங்கையில் வேலை வாய்ப்பற்றோர் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக புள்ளி விபரத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜுன் மாதத்துடன் நிறைவடைந்த இரண்டாம் காலாண்டுப் பகுதியில் வேலை வாய்ப்பு இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

வட்டி வீத உயர்வு, இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள், பணவீக்கம் உள்ளிட்ட பல காரணிகளினால் இந்த நிலைமை உருவாகியுள்ளது.

முதலாம் காலாண்டில் வேலை வாய்ப்பற்றோர் எண்ணிக்கை 4.3 வீதமாக காணப்பட்டதாகவும், இரண்டாம் காலாண்டில் இது 4.6 வீதமாக உயர்வடைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலைமைகளினால் முழுமையான அளவில் முயற்சியான்மைகளை மூட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இரண்டாம் காலாண்டில் மொத்த தேசிய உற்பத்தியானது 8.4 வீத பின்னடைவினை சந்தித்துள்ளது.

Posted in Uncategorized

இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு அவுஸ்திரேலியாவிடம் கோரிக்கை

இலங்கையில் அவுஸ்திரேலிய நிறுவனங்களின் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அவுஸ்திரேலிய  துாதுவர் போல் ஸ்டீபன்ஸிடம்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இருவருக்கும் இடையில் நேற்று முன்தினம் சந்திப்பு இடம்பெற்றதாக வெளிவிவகார அமைச்சு நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, உள்நாட்டு சவால்களை எதிர்கொள்வதற்காக அண்மையில் அவுஸ்திரேலியாவினால் வழங்கப்பட்ட உடனடியான மனிதாபிமான உதவிகளுக்கு வெளிவிவகார அமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

வலுசக்தி மற்றும் கல்வித்துறையில் முதலீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

அதேநேரம், பல்தரப்பு மட்டத்தில் பரஸ்பர நலன்கள் உள்ளிட்ட பல்வேறு இருதரப்பு விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

”இலங்கை அடிப்படை உரிமைகளை மதித்து செயற்படுவது அவசியமானது”: ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்

கருத்துச் சுதந்திரம், ஒன்றுகூடல் சுதந்திரம் போன்ற அடிப்படை உரிமைகளை மதித்து செயற்படுவது அவசியமானது என ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன் தெரிவித்துள்ளார்.

பொருளாதார சவால்களை வெற்றிகொள்வதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு எப்போதும் ஆதரவளிக்க ஐரோப்பிய ஒன்றியம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

GSP+ உறுதிமொழிகளை ஐரோப்பிய ஒன்றியம் மிக விரைவில் ஆராயும் என உர்சுலா அனுப்பியுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் அறிக்கை இந்த ஆண்டின் இறுதியில் அல்லது 2023ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து இலங்கையர்களின் குறுகிய, நீண்ட கால தேவைகளை உறுதிப்படுத்தும் கொள்கைகளை அறிமுகப்படுத்தி இந்த அறிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்களப் பேரினவாதம் தமிழர்களின் நிலங்களை திட்டமிட்டுக் கூறு போடுகின்றது-தவராசா கலையரசன்

திருகோணமலை மாவட்டத்தைக் குறிவைத்து சிங்களப் பேரினவாதம் தமது பணிகளை மிக வேகமாக ஆரம்பித்துள்ளது. தொல்லியல், வனபரிபாலனம் எனத் தமிழர்களின் பாரம்பரிய நிலங்கள் திட்டமிட்டு கூறு போடுகின்ற நிலைமையே நடந்து கொண்டிருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

திருகோணமலையில் இடம்பெற்ற இந்திய துாதுவருடனான நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை இந்தியா என்கின்ற நட்புறவோடு நீணட காலமாக இலங்கைக்குப் பல உதவிகளை வழங்கிய நாடாக அண்மையில் உள்ள நாடு என்ற அடிப்படையில் இந்தியா அமைந்துள்ளது.

இந்த நாட்டிலே தமிழர்களாகிய நாங்கள் எங்களுடைய கலை கலாசார அம்சங்களோடு வாழ வேண்டும் என்று நினைக்கின்றோம் ஆனால் திட்டமிட்டு எம்மினத்தின மீது சிங்களப் போனவாதம் திணிப்புகளைச் செய்து கொண்டிருக்கின்றது.

குறிப்பாக திருகோணமலை மாவட்டத்திலே திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் தொல்லியல் திணைக்களம் என்பவற்றின் மூலம் எமது புனிதத்தலத்தின் புனிதத்தைக் கெடுப்பதற்குரிய நடடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் இந்திய உயர்ஸ்தானிகரின் திருகோணமலை மாவட்ட வருகை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.

அது மாத்திரமல்லாமல் திரியாய் என்று சொல்லப்படுகின்ற கிராமத்தை மையமாக வைத்து தொல்லியல் திணைக்களம், வனபரிபாலன இலாகா போன்ற திணைக்களங்களுடாகத் தமிழர்களின் பாரம்பரிய நிலங்கள் திட்டமிட்டு கூறு போடுகின்ற நிலைமையே நடந்து கொண்டிருக்கின்றது. மிக வேகமாக இந்த மாவட்டத்தைக் குறி வைத்து சிங்களப் பேரினவாதம் தமது பணிகளை ஆரம்பித்துள்ளது. இதனை இந்த நாட்டின் நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கின்ற செயற்பாடாகவே நாங்கள் கருதுகின்றோம். இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்து இந்த நாட்டிலே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது.

நாட்டின் புதிய ஜனாதியாக ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தெரிவு செய்யப்பட்ட போதும் ராஜபக்ச காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அந்த சிங்கள அரச தீவிரவாத செயற்பாடு மிகவும் மோசமாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவர் பதவிக்கு வந்தபோது இந்த நாட்டில் சமாதானம், சமத்துவம், சகோதரத்துவத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற அடிப்படையில் பேசியிருந்தாலும் அதற்கு மாறான செயற்பாடுகளே எமது தமிழர் பிரதேசத்திலே நடந்து கொண்டிருக்கின்றன.

எனவே இந்த நாட்டில் சமாதானம் சமத்துவம், சகோதரத்துவம் நிலைநாட்டப்பட வேண்டுமானால் தமிழர் பிரதேசங்களிலே இடம்பெறுகின்ற நில ஆக்கிரமிப்புகள், மத ரீதியான அடக்குமுறை என்பன நிறுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

Posted in Uncategorized

பொருளாதார நெருக்கடிக்கான காரணங்களை ஆராய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானம் !

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கான காரணங்கள் குறித்து விசாரணைகளை ஆரம்பிக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.

மாறிவரும் அரசியல் காரணங்களால் பொருளாதாரத்தில் கொள்கை மாற்றங்கள் ஏற்படுத்திய தாக்கம் குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.

மேலும் பொருளாதாரச் சரிவை ஏற்படுத்திய கொள்கை முடிவுகளை எடுப்பதில் அதிகாரிகள் நடந்துகொண்ட விதம் குறித்தும் கவனம் செலுத்த ஆணைக்குழு எதிர்பார்க்கிறது.

பொருளாதார நெருக்கடியின் ஊடாக மக்களின் வாழ்வுரிமை மீறப்பட்டதன் காரணமாகவே இந்த விசாரணை நடத்தப்படுவதாக மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு நாட்டில் வேரூன்றி இருக்கும் ஊழல்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென மனித உரிமைகள் ஆணையாளர் அண்மையில் மனித உரிமைகள் பேரவை அமர்வில் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கையில் கடந்த கால மற்றும் அண்மைக்கால மனித உரிமை மீறல்கள் மற்றும் பொருளாதார குற்றங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் மனித உரிமைகள் ஆணையாளர் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.