இங்கிலாந்து பிரதமராக லிஸ் டிரஸ் தெரிவு!

இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகியதை தொடர்ந்து, புதிய பிரதமராகும் வாய்ப்பை லிஸ் டிரஸ் பெற்றுள்ளார்.

ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 2 ஆம் திகதி முடிவடைந்தது.

இந்தத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக்குக்கும், தற்போதைய வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ்சுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

புதிய தலைவரை தேர்வு செய்ய கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்கள் சுமார் 1.60 லட்சம் பேர் தபால் மற்றும் ஆன்லைன் மூலமாக வாக்களித்தனர். வாக்குகள் எண்ணப்பட்டு இறுதி முடிவுகள் இன்று அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஆளும் கட்சியின் தலைவருக்கான தேர்தலில் லிஸ் டிரஸ் வெற்றி பெற்றார்.

இதையடுத்து, இங்கிலாந்தின் அரசியலமைப்பு சட்டப்படி ஆளும் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படும் நபரே நாட்டின் பிரதமராக நியமிக்கப்படுவார். நாளை இங்கிலாந்து ராணியை சந்தித்து ஆசி பெற்ற பின்னர் பிரதமராக பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அகதிகளாக உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு திருப்பியழைக்க ஜனாதிபதி நடவடிக்கை

இந்தியாவில் அகதிகளாக உள்ள இலங்கையர்களை, நாட்டுக்கு திருப்பியழைப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.இதற்கமைய, புகலிடம்கோரி அகதிகளாக இந்தியாவுக்கு சென்ற இலங்கையர்களை நாட்டுக்கு திருப்பி அழைப்பதற்கான வசதிகளை முன்னெடுப்பதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்க நாயக்கவினால் இந்த விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதியின் ஊடகப்பிரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது

Posted in Uncategorized

குமார வெல்கம தலைமையில் புதிய அரசியல் கட்சி

பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையிலான புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் கட்சித் தலைமையகம் பத்தரமுல்லையில் இன்று(05) திறந்துவைக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் இன்றைய நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா, சந்திம வீரக்கொடி மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கை அகதிகள் தொடர்பில் விசேட குழு நியமிப்பு

யுத்த காலத்தில் இந்தியாவிற்கு அகதிகளாக இடம்பெயர்ந்த இலங்கையர்கள் மீண்டும் நாடு திரும்பும் செயன்முறையை இலகுபடுத்துவதற்காக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க குழுவொன்றை நியமித்துள்ளார்.

ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் சந்திமா விக்ரமசிங்க தலைமையிலான இக்குழுவில் குடிவரவு குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம், வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் நீதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

யுத்த காலத்தில் இந்தியாவிற்கு அகதிகளாக இடம்பெயர்ந்த இலங்கையரை மீண்டும் அழைத்து வர வேண்டும் என “ஈழ அகதிகள் புனர்வாழ்விற்கான அமைப்பு” (OFERR) வேண்டுகோள் முன்வைத்திருந்தது. இதுகுறித்து பேசுவதற்காக, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க தலைமையில் இன்று (05) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் இதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இந்தியாவின் தமிழக மாநிலத்தில் தற்போது சுமார் 58,000 இலங்கையர்கள் அகதிகளாக தங்கியுள்ளதாகவும் அவர்களில் 3,800 பேர் மாத்திரமே இலங்கைக்கு திரும்புவதற்கு தயாராக இருப்பதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. அதனையடுத்து இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் இலங்கை வருவதை இலகுபடுத்துவதற்காக இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையிலுள்ள இலங்கை பிரதி உயர்ஸ்தானிகராலயமும் இச்செயன்முறையை இலகுபடுத்துவதற்கான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றது.

பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்னே, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, நீதி அமைச்சு மற்றும் குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் ஆகியோருடன் ஈழ அகதிகள் புனர்வாழ்வுக்கான அமைப்பின் (OFERR) பிரதம செயற்பாட்டாளர் சி.எஸ்.சந்திரஹாசன், எஸ். சூரியகுமாரி உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Posted in Uncategorized

ஐ.நா. சபையில் கூறிய கூற்றை ஜனாதிபதி மறுத்து நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது – ரெலோ தலைவர் செல்வம் எம்.பி.

ஜனாதிபதியாக வந்த ரணில் விக்ரமசிங்க ஐநா சபையிலே கூறி வந்த கூற்றை, இப்போது மறுத்து நடக்கின்ற செயற்பாட்டை அவர் செய்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி அவர்கள் நல்லாட்சி அரசாங்கத்திலே ஐநா சபையிடம் பல கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்திருந்தார். அதிலே ஒன்று பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதாக கூறியிருந்தார். அதே பிரதமர் இப்போது ஜனாதிபதியாக வந்திருக்கின்ற சூழலிலே அவர் கொடுத்த வாக்குறுதி என்பது மறுக்கப்பட்டிருக்கிறது.

மீண்டும் பயங்கரவாத தடை சட்டத்தை ஜனாதிபதி கையில் எடுத்திருக்கிறார். ஆகவே ஐநாக்கு ஒன்று கூறுவதும், வெளியே ஒன்றை செய்வதுமாக இருக்கின்ற சூழலை நாங்கள் பார்க்கக்கூடியதாக இருக்கிறது.

தேசிய பாதுகாப்பு சட்டம் என்பதும், பயங்கரவாத தடைச்சட்டமும் ஒன்றாகத்தான் இருக்கும் என்று கூறுவதைவிட மோசமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். ஆகவே பிரதமராக இருந்து ஜனாதிபதியாக வந்த ரணில் விக்ரமசிங்க ஐநா சபையிலே கூறி வந்த அந்த கூற்றை இப்போது மறுத்து நடக்கின்ற செயற்பாட்டை அவர் செய்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

கூறிய வார்த்தை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். என்னை பொறுத்தமட்டிலே சட்டங்கள் மாறுகின்றது எல்லாம் பயங்கரவாத தடை சட்டத்தின் அடிப்படையாகத்தான் வரும் என்பது என்னுடைய கருத்து.

ஆகவே ஜனாதிபதி அவர்கள் மீள் பரிசீலனை செய்ய வேண்டும். ஐநாவுக்கு கொடுத்த வாக்குறுதியை, சந்தர்ப்பத்தை ஜனாதிபதி நிறைவேற்றிகொள்ள வேண்டும் என்று அவர்களிடம் கோரிக்கை வைக்கின்றேன்.

அதை விட ஏற்கனவே அவர் மீது குற்றச்சாட்டு இருக்கிறது. தமிழ் மக்களை, தமிழ் இனத்தை, ஏன் இலங்கை நாட்டையே குட்டிச்சுவராக்கிய மகிந்த குடும்பத்தை காப்பாற்றுகின்ற ஒரு செயற்பாட்டை அவர் செய்து கொண்டு இருப்பதனை நாங்கள் காணக்கூடியதாக இருக்கிறது.

அந்தவகையிலே இந்த சட்டங்களின் ஊடாக ஜனநாயக நீரோட்டத்திலே இந்த குடும்பத்திற்கு எதிராக போராடியவர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணைக்குட்படுத்துவது என்பது உண்மையிலே அந்த குடும்பத்தை காப்பாற்றுகின்ற ஒரு செயற்பாடாகத்தான் காணக்கூடியதாக இருக்கும். ஏனென்றால் அந்த மக்கள் இந்த குடும்பத்துக்கு எதிராகத்தான் போராடினார்கள். பல்கலைக்கழக மாணவர்கள் கூட அந்த குடும்பத்துக்கு எதிராகத்தான் போராடினார்கள்.

தற்போது புதிய ஜனாதிபதியாக ஒருவர் வந்திருக்கிறார் என்றால் அந்த போராட்டத்தின் பின்னணிதான். ஆகவே மகிந்த குடும்பத்தை எதிர்க்கின்ற வகையிலேதான் இந்த போராட்டம் இருந்தது. ஆனால் இப்போது இந்த சட்டங்களின் ஊடாக போராடியவர்களை கைது செய்து சிறையிலே அடைப்பது என்பது மகிந்த குடும்பத்தை காப்பாற்றுகின்ற ஒரு செயற்பாட்டை ஜனாதிபதி செய்ய துணிகிறார் என்ற ஒரு சந்தேகம் எங்களுக்கு எழுகிறது.

அந்தவகையிலே இந்த விடயத்திலே மக்களினுடைய ஜனநாயக போராட்டத்தின் ஊடாக தான் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வந்தார். ஆகவே அந்த விடயத்தை கவனத்தில் எடுக்க வேண்டும் என்பதனை கூறி கொள்ள விரும்புகிறேன் என்றார்.

Posted in Uncategorized

அரசாங்கத்துக்கு ட்ரான்ஸ்பேரன்சி அமைப்புக் கண்டனம்

நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு சவால் விடுக்கும் வகையில் அமைதிப் போராட்டங்களில் ஈடுபட்டு குரல் எழுப்பிய பொதுமக்களை கைது செய்தல் மற்றும் அவர்கள் மீது ஒடுக்குமுறைகளை மேற்கொள்வதை ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனம் வன்மையாகக் கண்டித்துள்ளது.

மேலும், எந்தவொரு சூழ்நிலையிலும் ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் சொந்தமான பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கும் அந்நிறுவனம் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

ஊழலற்ற நாட்டை உருவாக்கும் நோக்குடன் குரலெழுப்பிய பொதுமக்களை தன்னிச்சையாகவும் நியாயமான சந்தேகங்களுக்கு இடமின்றிய நிலையிலும் கைது செய்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய ஏனைய சட்ட ஏற்பாடுகளை தவறாக பயன்படுத்துவதனை TISL நிறுவனமானது உன்னிப்பாக அவதானிப்பதாகவும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தின் இத்தகைய தன்னிச்சையான பிரயோகமானது பொதுமக்கள் தமது ஜனநாயக உரிமைகளை பின்பற்ற தயக்கம் காட்டும் நிலைமையினை உருவாக்கும் அதேவேளை இவை நாட்டுக்கு மோசமான விளைவுகளை உருவாக்கவும் வழிவகுக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 5-வது இடம்

சர்வதேச நிதியம், வருடாந்திர அடிப்படையில் டாலர் மதிப்பீடு அளவில் உலக பொருளாதார வளர்ச்சி கணக்கிடப்பட்டு வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு கடைசி மாதங்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி பொருளாதார வளர்ச்சியில் உலகின் 5-வது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்து உள்ளது.

அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனிக்கு அடுத்தபடியாக இங்கிலாந்து 5-வது இடத்தில் இருந்தது. தற்போது இந்த நாட்டை பின்னுக்கு தள்ளி இந்தியா பிரபல நாடுகளின் பட்டியலில் 5-வது இடத்தை பிடித்து சாதனை படைத்து இருக்கிறது. நடப்பாண்டில் 7.7 சதவீதம் பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா விளங்குகிறது. இந்த ஆண்டு இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி 8.8 சதவீதமாக இருக்கும் என கணக்கிடப்பட்டு இருந்தது.

ஆனால் வட்டி விகிதங்கள் அதிகரிப்பு, சர்வதேச வளர்ச்சியில் மந்தநிலை போன்ற காரணங்களால் இந்த சதவீதத்தை எட்ட முடியவில்லை என சர்வதேச தர குறியீட்டு நிறுவனமான மூடிஸ் கணித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 11-வது இடத்தில் இருந்த இந்தியா படிப்படியாக முன்னேறி இந்த இடத்துக்கு வந்துள்ளது.

குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டுவிட்டது. இங்கிலாந்தில் விரைவில் ஆட்சி தலைமை மாற உள்ளது. தற்போது அங்கு பொருளாதார வீழ்ச்சி அடைந்து உள்ளதால் புதிதாக பதவி ஏற்க உள்ள பிரதமருக்கு இது சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார பின்னடைவு 2024-ம் ஆண்டு வரை நீடிக்கும் என அந்நாட்டு பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

Posted in Uncategorized

மார்ச்சில் உள்ளூராட்சித் தேர்தல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் நடாத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2018 ஆம் ஆண்டில் இடம்பெற்றது. அதன் காலம் 2022 ஆம் ஆண்டு முடிவடைய இருந்தது. அமைச்சருக்கு உள்ள அதிகாரத்த்டதிற்கமைய அதன் காலம் 2023 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது.

தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரத்தின் கீழ் உள்ளூராட்சி மன்றங்களுக்கு செப்டம்பர் 20ஆம் திகதிக்கு பின்னர் தேர்தலை நடத்த முடியும் என்று சட்டத்தரணி புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி வாக்காளர் பட்டியல்கள் சான்றளிக்கப்படவுள்ளதால், உள்ளூராட்சித் தேர்தலை பின்னர் நடத்துவது குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த முறை உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்காக 5 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இம்முறை அந்த தொகை எட்டு முதல் பத்து மில்லியன் வரை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது

”இலங்கைக்கு தொடர்ந்தும் உதவுவோம்”: சீனா!

இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக சீன சீன வெளியுறவு அமைச்சகம் இதனை தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இலங்கைக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் தற்போதைய சிரமங்களை சமாளிக்கவும், கடன் சுமையை குறைக்கவும், நிலையான வளர்ச்சியை அடையவும் இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவை வழங்குவதாக சீனா தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு சாதகமாக உதவுவதற்கு சம்பந்தப்பட்ட நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

”சுதந்திரக் கட்சி மீண்டும் ஆட்சியமைக்கும்” – மைத்திரிபால சிறிசேன

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீண்டும் நாட்டில் ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் தவிசாளர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 71 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், அக்கட்சியின் அகில இலங்கை செயற்குழு கூட்டம் மற்றும் நிறைவு விழா நேற்று மஹரகம இளைஞர் சேவை மன்றத்தில் நடைபெற்றது.

நேற்று முன்தினம் மத்திய செயற்குழு கூட்டத்தில்  அனுமதி வழங்கிய கட்சியின் யாப்பு திருத்தத்திற்கு அகில இலங்கை செயற்குழு இன்று ஏகமனதாக அனுமதி வழங்கியது.

சிரேஷ்ட உப தவிசாளர்கள் மற்றும் உப தலைவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், கட்சியின் கொள்கைக்கு  முரணாக ஒழுக்கத்தை மீறுவோரை கட்சியில் இருந்து நீக்குதல் தொடர்பிலான திருத்தமும் இதில் உள்ளடங்குகிறது.

‘எதிர்பார்ப்பிற்கு உயிர் கொடுப்போம்’ என்ற தொனிப்பொருளில் கட்சியின் மாநாடு நடைபெற்றது.

Posted in Uncategorized