நிபந்தனைகளுடன் சர்வகட்சி அரசாங்கத்தில் இணைந்து செயற்பட தமிழ் தேசியக்கூட்டமைப்பு தயார் – ரெலோ வினோ நோகராதலிங்கம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ள சர்வகட்சி அரசாங்கத்தில் நிபந்தனைகளுடன் இணைந்து செயற்பட தமிழ் தேசியக்கூட்டமைப்பு தயார் கண்மூடித்தனமாக ஆதரவு வழங்க தயாரில்லை என ரெலோ தலைமை குழு உறுப்பினரும் கூட்டமைப்பின் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வினோ நோக ராத லிங்கம் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதியின் சிம்மாசன உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயேஅவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாடு இன்று அரசியல் ரீதியாக ,பொருளாதார ரீதியாக மிகவும் நெருக்கடியான கட்டத்திலே இருக்கின்ற இந்த நேரத்திலே சர்வகட்சி அரசினுடைய தேவையை புரிந்து கொள்கின்றோம்.

உணர்ந்து கொள்கின்றோம். அனைத்து கட்சிகளும் இணைந்து அப்படி ஒரு அரசு உருவாகுமானால் நிபந்தனைகளோடு நாட்டு மக்களின் நன்மை கருதி தற்போதுள்ள சூழ்நிலை கருதி அந்த அரசில் இனணந்து செயற்படுவதற்கு தயாராக இருக்கின்றோம்.

யுத்தம் முடிந்த பின்னர் ஐ. நா. ஆணையாளரிடம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமிழ் மக்களுக்கு 13 பிளஸ் பிளஸ் தீர்வு வழங்கப்படுமென உறுதியளித்திருந்தார்.

ஆனால் எந்த தீர்வு முயற்சியை யும் அவர்கள் முன்னெடுக்கவில்லை. அதேபோல்தான் நல்லாட்சி அரசிலும் நான்கரை வருடங்கள் பேச்சுவார்த்தை மூலம் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை பெறுவதற்காக எமது கட்சித்தலைவர் சம்பந்தன் ஐயாவை ஒவ்வொரு முறையும் ஏமாற்றி அவரை நமப வைத்து எமது 16 எம்.பிக்களின் ஆதரவை பெற்றுக்கொண்டனர் தற்போதைய ஜனாதிபதியை ரணிலும் அப்போதைய ஜனாதிபதி மைத்திரியும் ஏமாற்றிய வரலாறும் உண்டு.

எனவே கண்ணை மூடிக்கொண்டு இந்த சர்வகட்சி அரசுக்கு ஆதரவு தருவதற்கு நாம் தயாரில்லை. அரசினதும் எதிர்கட்சிகளினதும் தமிழ் மக்களிடமிருந்து எம்மை பிரிக்கும் சகுனி விளையாட்டுக்களினால்தான் 16 எம்.பிக்களைக்கொண்டிருந்த எமது கட்சி இன்று 10 எம்.க்களுடன் நிற்கின்றது.

மீண்டும் எம்மை எமது மக்களிடமிருந்து பிரிப்பதற்கு முயற்சிப்பீர்களேயானால் , எமது ஆசனங்களை வெட்டி குறைப்பதற்கு நீங்கள் முயற்சிப்பீர்களேயானால் நாங்கள் மீண்டும் ஒரு தடவை ஏமாறத்தயாராக இல்லை.

யுத்தத்தில் காணாமல் போன தமது உறவுகளுக்காக 2000 நாட்களைக்கடந்து அவர்களின் உறவுகள் போராடிக்கொண்டிருக்கின்றனர்.

இன்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் வடகிழக்கின் 8 மாவட்டங்களையும் சேர்ந்த மக்களும் இணைந்து இந்த 2000 ஆவது நாளை போராட்டத்தினூடாக முன்னெடுக்கின்றனர்.

நாம் இங்கு பதாகைளுடன் எழுந்தவுடன் ஒளிப்பதிவு நிறுத்தப்படுகின்றது. பதாகைகளை பிடித்தால் நீங்கள் உடனடியாக இது புலிகளுக்கான அஞ்சலி என பிரசாரம் செய்கின்றீர்கள் .

சிறுபான்மையினர் ஒதுக்கப்படுவது மட்டுமன்றி அவர்களின் பிரதிநிதிகள் கூட பாராளுமன்றத்தில் ஒதுக்கப்படுகின்றனர். அவர்கள் தமது பேச்சு சுதந்திரத்திலிருந்து ,கருத்து சுதந்திரத்திலிருந்து மறுக்கப்படுகின்றார்கள் .தடுக்கப்படுகின்றார்கள் . இதற்கும் எமக்கு நீதி வேண்டும்.

தமது காணாமல் போன் உறவுகளுக்காக 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி அந்த மக்கள் வீதிகளில் தொடங்கிய போராட்டம் இன்று 2000 நாட்களைக்கடந்து 121 பெற்றோரை இழந்து முன்னெடுக்கப்படுகின்றது.

அந்த போராட்டத்த்துக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பாகிய நாங்கள் இந்த சபையில் முழுமையான ஆதரவை தெரிவிக்கின்றோம்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுடைய 121 பெற்றோர் ,உறவுகள், போராட்டக்களத்தில் இருந்தவர்கள் நோய்வாய்ப்பட்டு ,வயது முதிர்ச்சியினால் மரணித்துள்ளனர்.

இந்த மரணங்களை சாதாரணமாக விட்டுவிட முடியது. இந்த மரனனக்ளும் இந்த அரசினுடைய படுகொலைப் பட்டியலில் வரவேண்டிய விடயம். அவர்கள் மரணிக்கவில்லை. கொல்லப்பட்டார்கள். அவர்களை வீதிகளில் இறங்கி போராட வைத்து இந்த அரசு கொன்றுள்ளது. இதற்கு அரசு பதில் சொல்ல வேண்டும் என்றார்.

வீரமுனை படுகொலை நினைவேந்தல் தினம் இன்று அனுஸ்டிப்பு

அம்பாறை மாவட்டம் வீரமுனை பிரதேசத்தில் 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான படுகொலை தினத்தின் 32 வது வருட நினைவேந்தல் நிகழ்வு இன்று வீரமுனையில் இடம்பெற்றது.

வீரமுனை பிரதேச இந்து ஆலயம் ஒன்றிற்குள் புகுந்து இராணுவத்தினர் நடத்திய இனவெறி தாக்குதலில் 55 பேர் அந்த இடத்திலேயே படுகொலை செய்யப்பட்டனர்.

உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையிலும் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டியும் இன்று 32 ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வு அனுஸ்டிக்கப்பட்டது.

அம்பாறை அகம் அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி. ஜெயசறில் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேவேளை, எதிர்காலத்தில் இப்படிப்பட்ட சம்பவம் இடம்பெறக்கூடாது என்பதை வலியுறுத்துவதாக இதன்போது கி. ஜெயசறில் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

இருப்பிடமின்றி நாடு நாடாக அலைகின்றார் கோட்டாபய:சஜித் கிண்டல்

இலங்கையில் ஜனாதிபதி தேர்தலில் 69 இலட்சம் மக்கள் தன்னை ஆதரித்து வாக்களித்தனர் என்று வீராப்புப் பேசி வந்த கோட்டாபய ராஜபக்ச இறுதியில் நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டார். அதுமட்டுமன்றி இருப்பிடம் இல்லாமல் ஒவ்வொரு நாடு நாடாக அலைகின்றார் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,”இம்மாதம் நேற்று(11) முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இலங்கை வருவார் என்றும், அவருக்கு முன்னாள் ஜனாதிபதிக்குரிய சலுகைகள் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்த ‘மொட்டு’ அணியினர் வாயடைத்து நிற்க, கோட்டாபய தாய்லாந்து நாட்டின் காலடியில் தற்போது விழுந்துள்ளார்.

அங்கும் அவர் 3 மாதங்களுக்கு மேல் தங்கியிருக்க முடியாது. அவர் இனி எந்த நாட்டின் காலடியில் விழப்போகின்றார் என்பதை மொட்டுக் கட்சியினரிடம் கேட்க விரும்புகின்றேன்.

நாட்டைவிட்டு ஓடிய கோட்டாபய, இனி நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்க முடியாது. அவர் மீண்டும் இலங்கை வந்தால் மென்மேலும் அவமானங்களைச் சந்திக்க வேண்டி வரும். மக்களை வாட்டி வதைத்த கோட்டாபய, இன்று உலக அரங்கில் அவமானப்பட்டு நிற்கின்றார்” என தெரிவித்துள்ளார்.

இதேவேளை,முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச சிங்கப்பூரில் இருந்து வெளியேறி தாய்லாந்தை சென்றடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

சிங்கப்பூரில் சுமார் ஒரு மாத காலம் வரை தங்கியிருந்த அவர் நேற்று(11) மாலை சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு தாய்லாந்து நேரப்படி நேற்று மாலை எட்டு மணியளவில் அவர் அங்கு சென்றடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் தாய்லாந்தின் பாங்கொக் நகரில் அவர் தங்கியிருப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், ராஜதந்திர கடவுச்சீட்டு அடிப்படையில் 90 நாட்கள் அந்நாட்டில் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டா கோ கமயிலிருந்த எஞ்சிய கூடாரங்களும் அகற்றம்!

கொழும்பு, காலிமுகத்திடல் ‘கோட்டா கோ கம’ போராட்டக்களத்தில் எஞ்சியிருந்த கூடாரங்கள் மற்றும் நிர்மாணங்கள் என்பன இன்றைய தினம் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளன.

பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபையினர் இணைந்தே இந்த நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

கொழும்பு, காலிமுகத்திடல் கோட்டா கோ கமயில் இருந்து வெளியேறுவதாக கடந்த 3 மாதங்களாக போராடி வந்த போராட்டக்காரர்கள் கடந்த 10 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து அங்கு நிர்மாணிக்கப்பட்டிருந்த கூடாரங்கள் மற்றும் கொட்டகைகள் உள்ளிட்ட அனைத்துக் கட்டுமானங்களும் படிப்படியாக அகற்றப்பட்டு வந்தன.

எஞ்சிய சில நிர்மாணங்களில் போராட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையிலேயே, இன்று அவை அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளன.

அதேநேரம், அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளரான தானிஸ் அலி உள்ளிட்ட நான்கு பேருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 26 ஆம் திகதி வரை குறித்த நால்வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிமன்றினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

உறவுகளின் தொடர்போராட்டத்திற்கு இன்றுடன் 2000 நாட்கள்- கிளிநொச்சியில் மாபெரும் போராட்டமும் முன்னெடுப்பு!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தொடர் போராட்டம் 2000 நாட்களை எட்டியுள்ள நிலையில், இன்றைய தினம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று நடைபெறவுள்ளது.

வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினாலேயே இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்கவேண்டும் என்று வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தக் கவனயீர்ப்புப்போராட்டமானது பேரணியாகச்சென்று டிப்போ சந்தியில் நிறைவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, பேரணியின் நிறைவில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் யாழ்ப்பாணத்திலுள்ள ஐக்கிய நாடுகள் கிளைக்காரியாலயத்தில் ஊடாக ஐ.நா வதிவிடப்பிரதிநிதிக்கான மகஜரொன்றும் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

பாகிஸ்தானின் தைமூர் போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

பாகிஸ்தான் கடற்படையில் இணைவதற்காக சீனாவில் இருந்து தனது முதல் பயணத்தை ஆரம்பித்த தைமூர் போர்க்கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

கப்பல் எதிர்வரும் 15 ஆம் திகதி பாகிஸ்தான் நோக்கி பயணமாகவுள்ளது.

தைமூர் யுத்தக் கப்பல் இலங்கைக்கு வருகை தருகின்றமை தொடர்பில் இந்தியா உன்னிப்பாக அவதானித்திருந்தது.

தமது நாட்டின் துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதற்கு பங்களாதேஷ் மறுப்பு தெரிவித்ததன் காரணமாகவே குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்தை நோக்கி திருப்பப்பட்டது.

Posted in Uncategorized

ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளித்த வௌிநாட்டு யுவதி மனு தாக்கல்

இலங்கையில் இருந்து வெளியேற்ற குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் எடுத்துள்ள தீர்மானத்தை செல்லுப்படியற்றது என உத்தரவிடுமாறு கோரி பிரித்தானிய பிரஜையான ஸ்கொட்லாந்து யுவதி கெலின் பிரேஷர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரீட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

காலிமுகத்திடலில் நடைபெற்ற கோட்டா கோ கம போராட்டத்தில் தான் செயற்பாட்டு ரீதியாக பங்களிப்பு வழங்கியதாக மனுதாரர் மனுவில் கூறியுள்ளார்.

இதன் பின்னர் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தனக்கு வழங்கப்பட்டிருந்த விசா அனுமதியை தன்னிச்சையாக இரத்துச் செய்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எவ்வித நியாயமான அடிப்படைகளும் இன்றி குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் எடுத்துள்ள இந்த தீர்மானம் சட்டவிரோதமானது என தீர்ப்பளித்து, அதனை செல்லுப்படியற்றது என அறிவித்து உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு மனுதாரர் நீதிமன்றில் கோரியுள்ளார்.

Posted in Uncategorized

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாப்பரசர் 400 லட்சம் வழங்கினார்!

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட தரப்பிற்கு, பாப்பரசர் 400 லட்சம் ரூபாவை வழங்கியுள்ளதாக கொழும்பு பேராயர் இல்லத்தின் தேசிய மக்கள் தொடர்பாளர் பிரிவின் பணிப்பாளர் அருட் தந்தை ஜுட் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இந்த நிதியுதவி, கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகையிடம் கையளித்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

கடந்த பெப்ரவரி மாதம் வத்திகானுக்கு சென்ற மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகையிடம், ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை தான் பாதுகாப்பதாக பாப்பரசர் உறுதியளித்துள்ளார்.

இந்த திட்டத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் பாப்பரசரினால், ஒரு லட்சம் யூரோக்கள் (400 லட்சம் ரூபா) வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாளைய தினம் கட்டுவாபிட்டிய தேவாலயத்திலும், நாளை மறுதினம் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திலும் நட்டஈடு வழங்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்த குடும்பங்களுக்கும், தொடர்ந்தும் மருத்துவ சிகிச்சைகளை பெற்றுவருவோருக்கும், உபாதைக்குள்ளாகியுள்ளோருக்கும் இந்த தொகை பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஜெனீவா கூட்டத் தொடருக்கு முகங்கொடுக்க தயாராகும் இலங்கை

ஐக்கிய நாடுகளின் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடருக்கு முகம் கொடுக்கும் வகையில் இலங்கை சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையை தயாரிக்கும் நடவடிக்கையை இலங்கை ஆரம்பித்துள்ளது.

நீதி மற்றும் சிறைச்சாலைகள், மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜேயதாச ராஜபக்ஷ தலைமையில் நேற்று முன்தினம் (09) நீதி அமைச்சில் இது தொடர்பான விசேட கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

மனித உரிமைகள் நல்லிணக்கம் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளை கையாளும் தேசிய நிறுவனங்களின் நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பாக ஆராயும் இவ் விசேட கலந்துரையாடலில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியும் கலந்து கொண்டார்.

மனித உரிமைகளை பாதுகாப்பது, நல்லெண்ணத்தை உருவாக்குவது மற்றும் கட்டியெழுப்புவது தொடர்பாக அந்நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பாக இங்கு பல கருத்துக்கள்  முன்வைக்கப் பட்டதோடு எதிர்காலத்தில் அந்நிறுவனம் செயற்பட வேண்டிய விதம் தொடர்பாகவும்  கவனம் செலுத்தப்பட்டது.

ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடருக்கு இது தொடர்பான அனைத்து நிறுவனங்களும் எவ்வாறு முகம் கொடுப்பது என்பதற்கான பொறிமுறையொன்றை தயாரிக்கவும் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

சவாலான காலங்களில் இலங்கையின் பங்காளியாக ஐரோப்பிய ஒன்றியம் இருக்கும்-ரணிலுடனான சந்திப்பில் தூதுவர்கள் கருத்து

சவாலான காலங்களில் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் பங்காளியாக இருக்கும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழு உறுதியளித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்கள் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்கள் இலங்கை ஜனாதிபதியுடன் ஆக்கபூர்வமான சந்திப்பொன்றை நடத்தியதாக இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக கருத்துச் சுதந்திரம் மற்றும் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தும் உரிமைக்கு மேலாக சிவில் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

“இலங்கையை மீண்டும் அப்பாதையில் கொண்டு வருவதற்கு வெளிநாட்டு விவகாரங்களில் கூட்டு மற்றும் உள்ளடக்கிய நடவடிக்கை தேவை என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்” எனத் தூதுவர்கள் தெரிவித்துள்ளனர்.

பின்வரும் 3 முக்கிய செயன்முறைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியம் ஜனாதிபதியை ஊக்குவிப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

1.ஜீஎஸ்பி +

2.சர்வதேச நாணய நிதியம்

3.மனித உரிமைகள் பேரவை

இந்தச் செயன்முறைகளை வெற்றியடையச் செய்வதற்கு இலங்கை அரசாங்கத்தினால் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் நம்புவதாக இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு மேலும் கூறியுள்ளது.

Posted in Uncategorized