யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கறுப்பு ஜீலை நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டது

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நேற்றைய தினம் காலை கறுப்பு ஜீலை நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இதன் போது பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலின் அருகே அமைந்துள்ள பிரதான கொடிக்கம்பத்தில் கறுப்பு கொடியேற்றப்பட்டு அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.அத்துடன் 1983 கறுப்பு ஜூலை வாரத்தில் தமிழிர்களுக்கு இழைக்கபட்ட அநீதிகள் தொடர்பான நினைவுரையும் இடம்பெற்றது.இதனையடுத்து பல்கலைக்கழக பிரதான தூபி வளாகத்தில் கறுப்பு ஜீலை நினைவுருவ படத்திற்கு மாணவர்களால் ஈகைச் சுடரேற்றப்பட்டதோடு ,மலரஞ்சலியுடன் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

மேலும் 39வருடங்களின் முன் இடம்பெற்ற இனச்சுத்திகரிப்பு, திட்டமிடப்பட்ட தமிழர்கள் மீதான வன்முறைகளின் போது பாதிக்கப்பட்ட உயிர்நீத்த உறவுகளுக்கான நீதி இதுவரை கிடைக்கப்பெறவில்லை, தற்காலத்திலும் தமிழர்கள் மீதான அடக்குமுறை இடம்பெற்றே செல்கிறது.ஒடுக்குமுறைகள் ஒழிக்கப்பட வேண்டும் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் வலியுறுத்தப்பட்டது.

தாக்குதல் அச்சம் வெளியிடும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை

கொழும்பில் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகிலுள்ள போராட்ட முகாமை அகற்றுவதற்கு, பாதுகாப்புப் படையினர் தேவையற்ற பலத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுவது தொடர்பில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் பீதியடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் ஜெனீவா மனித உரிமைகள் அலுவலகப் பேச்சாளர் ஜெரமி லோரன்ஸ் தெரிவித்துள்ளார்.

இதன்போது போராட்டக்காரர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள் மீது தடியடி நடத்தப்பட்ட செய்திகளையும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் கண்டித்துள்ளது.

அத்துடன் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க முடியவில்லை என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலக பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்கள் ஆர்ப்பாட்டங்களைக் கண்காணித்து அறிக்கையிடுவதற்கு உரிமையுடையவர்கள். எனவே இந்தச் செயற்பாடுகளை எந்த வகையிலும் தடை செய்யக்கூடாது என்று மனித உரிமைகள் அலுவலக பேச்சாளர் வலியுறுத்தினார்.

எனவே, அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிராக பலாத்காரம் பயன்படுத்துவது சர்வதேச சட்டத்திற்கு முரணானது எனவும், அவ்வாறான பலத்தை பயன்படுத்துவதை அதிகாரிகள் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் கோரியுள்ளது.

இலங்கையின் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளை பலவந்தமாக தீர்க்க முடியாது எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பரந்த ஆலோசனைகள் மற்றும் உரையாடல்களின் மூலமே, சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் இலங்கையர்கள் நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்ப ஆரம்பிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

ரணிலை சந்தித்தார் ஜூலி

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று சந்தித்துள்ளார்.

ஒரே இரவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்க்காரர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து தனது ஆழ்ந்த கவலையை தெரிவிப்பதற்காக ஜனாதிபதியை சந்தித்ததாக ஜூலி சங் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

சிறந்த எதிர்காலத்திற்கான இலங்கையர்களின் அழைப்புகளுக்கு பதிலளிக்க, ஜனாதிபதி மற்றும் அமைச்சரவைக்கு ஒரு வாய்ப்பும் கடமையும் உள்ளது. குடிமக்களை ஒடுக்குவதற்கான நேரம் இதுவல்ல.

மாறாக, மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும், பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பவும் அரசாங்கம் எடுக்கக்கூடிய உடனடி மற்றும் உறுதியான நடவடிக்கைகளை எதிர்நோக்க வேண்டுமென அமெரிக்க தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்திய – இலங்கை உறவு சிறந்த முறையில் உள்ளது: கோபால் பாக்லே

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் வர்த்தக முதலீட்டு உறவுகள் சிறந்த  முறையில் உள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் தேசிய தொலைகாட்சிக்கு வழங்கிய விசேட செவ்வியொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

துறைமுகம் , மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி, ஹைட்ரோ கார்பன் உட்கட்டுமான அபிவிருத்தி தொடர்பில் கரிசனை கொண்டுள்ளதாகவும் விவசாயம், பாலுற்பத்தி, தகவல்  தொழில்நுட்பம் மற்றும் உயர்  கல்வியிலும்  மேலதிக முதலீடுகளை மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ளதாகவும் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

பல தசாப்தங்களாக பாரிய நிறுவனங்கள் இலங்கையில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி  செயற்பட்டு வருவதுடன்,  காலி முகத்திடலில் பாரிய இந்திய நிறுவனங்கள் வர்த்தக நடவடிக்கைளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

ஹிட்லரின் தீர்வுகளை பொதுமக்கள் எதிர்பார்க்கவில்லை-ஓமல்பே சோபித தேரர் அரசாங்கத்திற்கு கண்டனம்

மக்கள் போராட்டத்துக்கு ஹிட்லரின் தீர்வுகளை பொதுமக்கள் எதிர்பார்க்கவில்லை என வண. ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

எம்பிலிப்பிட்டியவில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

காலி முகத்திடலை ஆக்கிரமித்த முப்படையினரால் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் இரக்கமற்ற மற்றும் நெறிமுறையற்ற செயல் எனவும் தேரர் தெரிவித்துள்ளார்.

பிற்பகல் 2 மணிக்குள் ஜனாதிபதி செயலகத்தை விட்டு வெளியேற ஆர்ப்பாட்டக்காரர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். இவ்வாறான சூழ்நிலையில் தாக்குதல் நடத்துவது வீண் என தேரர் தெரிவித்துள்ளார்.

உலகில் எந்த ஒரு நாடும் பலத்தைப் பயன்படுத்தி எதிர்ப்புகளை அடக்குவதற்கு மன்னிக்க முடியாது எனவும், சர்வதேச சமூகங்களும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளன எனவும் தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

புதிய அரசாங்கத்திற்கு உதவிகளை வழங்கத் தயார்-சீனா

புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு சீன ஜனாதிபதி Xi Jinping வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்க பதிவொன்றில், புதிய அரசாங்கம் இலங்கையை நெருக்கடி நிலையில் இருந்து மீட்டெடுக்கும் வகையில் செயற்படும் என தான் நம்புவதாக சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை புதிய அரசாங்கத்திற்கு உதவிகளை வழங்குவதற்கு சீனா தயாராகவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

ரணிலின் இடத்துக்கு வஜிர நியமனம்!

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானதன் பின் ஏற்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற ஆசன வெற்றிடத்துக்கு வஜிர அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான வர்த்தமானி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

எமது பிள்ளைகள் உகண்டாவிலா?: காணாமல் போனோரின் உறவுகள் கேள்வி!

ராஜபக்‌ஷ குடும்பத்தினருக்கு சொந்தமானதாக கூறப்படும் உகண்டாவில் உள்ள தொழிற்சாலைகளில் இலங்கையில் காணாமல் போன எமது பிள்ளைகள் இருக்கின்றார்களா என்று உலகவாழ் உறவுகள் ஆராய்ந்து வெளிப்படுத்த வேண்டும் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சஙக தலைவி கலாரஞ்சினி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதன்போது அவர் மேலும் கூறுகையில்,

இந்த ஆட்சி மாற்றம் எங்களிற்கு பெரிதாக ஒன்றும் செய்யப்போவதில்லை. நாங்கள் சர்வதேசத்தின் ஊடாக நீதியை கேட்டு நிற்கின்றோம். இலங்கையில் என்ன நடக்கின்றது என்பதை சர்வதேசம் பார்த்துக்கொண்டிருக்கின்றது.

சர்வதேசம் இலங்கை தொடர்பில் அவதானித்து தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வினையும், எமக்கான நீதியையும் பெற்றுத்தர வேண்டும் என கேட்டு நிக்கின்றோம். இதேவேளை உலகலாவிய ரீதியில் வாழ்கின்ற தமிழர்கள், ஒன்றிணைந்து போராட்டங்களை முன்னெடுத்து எமது போராட்டத்திற்கும், அரசியல் தீர்வுக்கும் முன்னின்று உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

இலங்கை அரசில் குடும்ப ஆட்சியும் இனவழிப்பும் நடந்து அவர்கள் கலைக்கப்பட்டு நாடு கடத்தப்பட்ட பின்னர் எங்களிற்கான தீர்வு சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டும் என நாங்கள் எதிர்பார்த்திருந்தோம்.

தற்பொழுது உள்ள ஜனாதிபதி பதவியை இழந்து நிற்கும்போது, எங்களுடைய மண்ணில் வந்து எங்களை சந்தித்தார். உங்களது பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள் எனவும், தற்பொழுது நான் பதவியில் இல்லை. மகிந்தவின் மனைவியின் பிள்ளை காணாமல் ஆக்கப்பட்டிருந்தால் அவர்கள் தேடுவார்கள். அவர்களிற்கான சட்டத்தை பயன்படுத்துவார்கள். நான் இந்த பதவிக்கு வந்தால், நிச்சயமாக பிள்ளைகளை மீட்டுத்தருவேன் என்று கூறியிருந்தார்.

அவரோ அல்லது அவர் சார்ந்த எவருமோ எமக்கு எதுவும் செய்யப்போவதில்லை. இன்று ராஜபக்ச குடும்பத்தினர், நாடுகடத்தப்பட்டு அனாதைகளாக தெருத்தெருவாக திரிகின்ற இந்த வேளையில், உண்மையாக அந்த இனவழிப்பை செய்தவர்களை கைது செய்வதற்கு சர்வதேசம் முன்வரவேண்டும். அவ்வாறு கைது செய்து எமக்கான நீதியை பெற்றுத்தருவார்கள் என்று நம்புகின்றோம்.

உகண்டா எனும் நாட்டிலே, ராஜபக்ச குடும்பத்தினர்11 தொழிற்சாலைகளை அமைத்து அங்கு எமது பிள்ளைகளை சம்பளமில்லாத கூலித்தொழிலாளிகளாக வேலைக்கு வைத்திருக்கலாம் என்று நாங்கள் நம்புகின்றோம். எமது கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளிற்கு என்ன நடந்தது என்று கூற முடியாதவர்கள், எங்களுடைய பிள்ளைகளை கூலித்தொழிலாளர்களாக வைத்திருக்கலாம் என்று நம்புகின்றோம்.

அந்த தொழிற்சாலைகளை நிர்வகிக்கின்றவர் வேலுப்பிள்ளை கனநாதன் என்ற ஒரு தமிழர். அவருடன் உலக நாடுகளில் உள்ள எமது உறவுகள் தொடர்புகொண்டு, எவ்வாறு அந்த தொழிற்சாலைகள் இயங்குகின்றன என்பதையும், அங்கு எமது பிள்ளைகள் இருக்கின்றார்களா என்பதை அறிவதற்கும் முன்வரவேண்டும் என்றார்.

காலிமுகத்திடல் போராட்டகாரர்கள் மீது தாக்குதல் – ஐ.நாவிடம் மனு கையளிப்பு

காலிமுகத்திடலில் இருந்த போராட்டகாரர்கள் மீது பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தியமைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் விசேட மனு ஒன்றை கையளித்துள்ளனர்.

கொழும்பு 4 தும்முல்லையில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் அலுவலகத்தில் இந்த மனு கையளிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான நளின் பண்டார, முஜிபுர் ரஹ்மான்,ஹர்சன ராஜகருண ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

அமைதியான போராட்டகாரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து கவனம் செலுத்தி, அது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்குமாறு இந்த மனு ஊடாக கோரிக்கை விடுத்துள்ளதாக முஜிபுர் ரஹ்மான் கூறியுள்ளார்.

புதிய ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளோம்-அமெரிக்கா,ஐரோப்பிய ஒன்றியம் கருத்து

இலங்கையின் புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளோம் என இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.

தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் பதிவிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையின் நெருக்கடிகளுக்கு தீர்வுகாணக் கூடிய புதிய அரசாங்கம் வழிவகுக்கும் என எதிர்பார்ப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு தனது ட்விட்டர் செய்தியில்,ரணில் விக்ரமசிங்க இன்று ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார். அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுடன் கூடிய அனைவரும் அடங்கிய அரசாங்கத்தை அமைக்க இது வழிவகுக்கும் என ஐரோப்பிய ஒன்றியம் எதிர்பார்த்துள்ளது.

இலங்கைக்கு வேகமான பொருளாதார மறுசீரமைப்பு தேவைப்படுகிறது. அத்துடன் தனிநபர் சுதந்திரம் மற்றும் நல்லிணக்க முயற்சிகளை பாதுகாத்தலும் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized