கோட்டாபயவை கைது செய்யுமாறு சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் முறைப்பாடு கையளிப்பு

சிங்கப்பூரில் தற்போது தங்கியிருக்கும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை போர்க் குற்றங்களுக்காக உடனடியாகக் கைது செய்யுமாறு சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் முறைப்பாடொன்று கையளிக்கப்பட்டுள்ளது.

தென் ஆபிரிக்காவின் மனித உரிமைகள் சட்டத்தரணி யஸ்மின் சூக்கா தலைமையிலான, சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் சட்டத்தரணிகள் இந்த முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளனர்.

உள்நாட்டுப் போரின் போது பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ, ஜெனிவா ஒப்பந்தங்களை கடுமையாக மீறினார் என்று அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த மீறலானது, சிங்கப்பூரின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட குற்றங்கள் என்று முறைப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மீறல்களில் கொலை, மரணதண்டனை, சித்திரவதை மற்றும் மனிதாபிமானமற்ற சித்திரவதை, பாலியல் வன்புணர்வு மற்றும் பிற பாலியல் வன்முறைகள், சுதந்திரத்தை பறித்தல், கடுமையான உடல் மற்றும் மனநல பாதிப்பு மற்றும் பட்டினி ஆகியவை அடங்கும் என்றும் சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் சட்டத்தரணிகள் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

Posted in Uncategorized

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான அனைத்து சட்ட விரோதமான நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான அனைத்து சட்ட விரோதமான நடவடிக்கைகளையும் நிறுத்தி தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுவிக்குமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் கேட்டுக்கொண்டுள்ளது.சட்டத்தின் ஆட்சியை விட மிருக பலத்தின் மூலம் செயற்பட விரும்புகின்றோம் என்ற ஆபத்தான செய்தியை, இந்த நடவடிக்கைகள் ஊடாக புதிய அரசாங்கம் மக்களுக்கு அனுப்புகிறது என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

மேலும் மக்களின் உரிமைகளை நசுக்கும் அரசாங்கத்தை ஆதரிக்க முடியாது என்ற செய்தியை இலங்கைக்கு அவர்களின் சர்வதேச பங்காளிகள் உரத்த குரலில் வலியுறுத்த வேண்டும் என்றும் மீனாட்சி கங்குலி கேட்டுக்கொண்டுள்ளார்.பதவியேற்ற ஒரு நாளுக்குப் பின்னர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மேற்பார்வையில் கொழும்பில் அமைதியான போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினரின் கொடூரமான தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக மீனாட்சி கங்குலி குற்றம் சாட்டியுள்ளார்.

காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி இதனை தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தேசிய பேரவையொன்று உருவாக்கப்படும் – எதிர்க்கட்சித் தலைவர்

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தேசிய பேரவையொன்று உருவாக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து நாடு முன்னேற்றமடைய வேண்டும் என்பதனால் அரசாங்கத்தின் சாதகமான செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கப்படும் என சஜித் பிரேமதாச கூறினார்.நாட்டை பயனுள்ள வகையில் மீண்டும் கட்டியெழுப்ப தேசிய ஒருமித்த கருத்து எட்டப்பட வேண்டும் என சஜித் பிரேமதாச மீண்டும் வலியுறுத்தினார்.

அனைத்து தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் போன்றவற்றை ஒன்றிணைத்து நாட்டை கட்டியெழுப்புவதற்கான எதிர்கால வேலைத்திட்டம் குறித்து திட்டவட்டமான புரிதலுக்கு வரவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அந்தவகையில் தேசிய பேரவை ஒன்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நிறுவப்படவுள்ளதாக சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.இதனை அடுத்து குறித்த பேரவையில் எட்டப்படும் முற்போக்கான பிரேரணைகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்

Posted in Uncategorized

போராட்டக்காரர்கள் வெளியேற்றம்: பொலிஸ் ஊடகப்பேச்சாளர் விளக்கம்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக கூடியிருந்தவர்கள் அங்கிருந்து வெளியேறுவார்கள் என்ற நம்பிக்கை இருக்காத காரணத்தினாலேயே அவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (23) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

பொதுமக்களுக்கான முடிவுகளை எடுப்பதற்கான பிரதான அலுவலக அமைப்பாகக் காணப்படும் ஜனாதிபதி செயலகத்தை நிறைவேற்று ஜனாதிபதி நியமிக்கப்பட்டதன் பின்னர், விடுவிக்க வேண்டிய பொறுப்பு தமக்குள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் நாட்டிலிருந்து மற்றுமொரு நிவாரண கப்பல்

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு வழங்கப்படும் மூன்றாம் தொகுதி உதவி பொருட்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்திய மக்களவை உறுப்பினரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிரணிச் செயலாளர் கனிமொழி கருணாநிதியின் தலைமையில் இதற்கான நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது.

இதற்கமைய 74 கோடி இந்திய ரூபா பெறுமதியான உதவி பொருட்கள் இவ்வாறு அனுப்பப்பட்டுள்ளன.

அத்தியாவசிய பொருட்களான அரிசி, பால்மா மற்றும் மருத்துப் பொருட்கள் என்பன இவ்வாறு தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Posted in Uncategorized

போராட்டக்கார்கள் மீது தாக்குதல் -யாழ்ப்பாணத்தில் கண்டன போராட்டம்

காலிமுகத்திடலில் போராட்டக்கார்கள் மீது இடம்பெற்ற தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் கண்டன போராட்டம் இன்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

போராட்டகாரர்கள் மீதான ரணில் – ராஜபக்ஷாக்களின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிப்போம்” எனும் தொனிப்பொருளில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாக இந்த போராட்டம் தொடங்கிய நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக கோஷம் எழுப்பி போராட்டம் தொடர்கின்றது.

Posted in Uncategorized

தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கறுப்பு ஜுலை வன்முறையை ரணில் நினைவு படுத்தியுள்ளார்- காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள்

கடந்த 1983ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில், தமிழர்களுக்கு எதிராக கறுப்பு ஜுலை வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.

இந்த கறுப்பு ஜுலை வன்முறை நடந்தேறி இன்றுடன் 39 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. தற்போது ஜே.ஆர்.ஜெயவர்தனவின் மருமகளான ரணில் ஜனாதிபதியாக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில் சிங்கள மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் ஒப்பிடுகின்றனர்.

கறுப்பு ஜுலையில் முதலாவது கலவரம் ஆரம்பமானது, ஜுலை மாதம் 23ம் திகதி என்பதுடன், அதே திகதியை அண்மித்து மக்கள் மீது இலங்கை இராணுவம் நேற்று (22) தாக்குதல் நடத்தியதாக காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

983ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23ஆம் திகதி முதல் சில வார காலத்திற்கு இலங்கையின் பல பகுதிகளில் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. கறுப்பு ஜுலை கலவரம் அல்லது 83 கலவரம் என இந்தக் கலவரத்தை இன்றும் இலங்கையர்கள் அடையாளப்படுத்தி வருகின்றனர்.

திட்டமிட்ட வகையில் தமிழ் இனத்தை அழிக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளின் ஆரம்பமாக இந்த கறுப்பு ஜுலை வன்முறை பார்க்கப்படுகிறது என்பதுடன் யாழ் நுாலகம் உள்ளிட்ட தமிழர்களின் பெரும் சொத்துக்கள் அழிக்கப்பட்டு பெருமளவிலான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், காலி முகத்திடல் போராட்டத்திலுள்ள இளைஞனான சத்துர ஜயவிக்ரம பண்டார, போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தார்.

”ஜுலை மாதம் 23ஆம் திகதி, இந்த நினைவுகளை நாம் சற்று பின்நோக்கிப் பார்த்தால், 1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23ஆம் திகதி இன்று இலங்கையில் 8வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பலவந்தமாக பதவியேற்றுக் கொண்ட, அதாவது மக்களின் விருப்பமின்றி தெரிவான ரணில் விக்ரமசிங்கவின் மாமனார், ஜுலை மாதம் 22ஆம் திகதியை அண்மித்தே அடக்குமுறையை ஆரம்பித்தார்.

மாமனார் செய்ததை, மருமகன் செய்வில்லை என்றால், அது பலனில்லை என எண்ணியிருப்பார் போலத் தெரிகிறது. நான் காணாத, அதாவது 39 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற, எமது நாட்டில் வாழக்கூடிய தமிழ் மக்கள் மாத்திரம் எதிர்நோக்கிய அடங்குமுறையை, இன்று ராணுவமயமாக்கலைப் பயன்படுத்தி மேற்கொண்டதை இன்று நாம் கண்டோம். 39 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றதை, ரணில் விக்ரமசிங்கவின் மூலம் இன்று எம்மால் அவதானிக்க முடிந்தது. மாமனார் செய்ததை, மருமகனும் செய்து, இலங்கையில் மீண்டுமொரு கறுப்பு ஜுலையை ஏற்படுத்த முயல்கிறார். இலங்கையில் மீண்டும் இளைஞர்களின் உயிர்களை பலியெடுப்பதற்காகவா அல்லது இளைஞர், யுவதிகளின் கனவுகளை இல்லாது செய்வதற்காகவா இப்போது முயல்கிறீர்கள் என்றும் 30 வருட யுத்தம் எனக் கூறி தமிழ், சிங்களம், முஸ்லிம் மக்களை மோதிக் கொள்ள வைத்து, நாட்டை இல்லாது செய்யவா முயல்கிறீர்கள் என்றும் ரணில் விக்ரமசிங்கவிடம் கேட்க விரும்புகின்றோம்” என சத்துர ஜயவிக்ரம பண்டார தெரிவிக்கின்றார்.

நன்றி- பிபிசி தமிழ்

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை பாதுகாத்துக் கொள்ளுமாறு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசாங்கத்துக்கு அறிவிப்பு

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பாதுகாப்பதற்காக மேற்கொண்ட உடன்படிக்கைகளை முழுமையாக பாதுகாத்துக் கொள்ளுமாறு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசாங்கத்திடம் அறிவித்துள்ளது.மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும், சட்டத்தின் ஆட்சி மற்றும் நல்லாட்சி கொள்கைகளை பாதுகாப்பதற்கும் நிலையான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டித்து ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த சில வருடங்களில் இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் 01 பில்லியன் யூரோக்கள் உதவி வழங்கியுள்ளதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.அதில் ஜனநாயக உரிமைகளை பாதுகாத்து இலங்கையில் பொருளாதார மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளுக்காக தம்மை தொடர்ந்தும் அர்ப்பணிப்பதாக தெரிவித்துள்ளது.அமைதியாக ஒன்றுகூடுவதற்கும் பேச்சு சுதந்திரத்திற்குமான பொதுமக்களின் உரிமையை உறுதிப்படுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியம் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

Posted in Uncategorized

அரச அலுவலகத்தை போராட்டக்கார்கள் சட்டவிரோதமாக கைப்பற்ற அனுமதி வழங்குவீர்களா? இராஜதந்திரிகளிடம் ஜனாதிபதி கேள்வி

அரச அலுவலகத்தை போராட்டக்கார்கள் சட்டவிரோதமாக கைப்பற்ற அனுமதி வழங்குவீர்களா என இராஜதந்திரிகளிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேள்வியெழுப்பியுள்ளார்.நீதிமன்ற உத்தரவை தொடர்ந்தும் அவர்கள் ஜனாதிபதி மாளிகையை சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருந்தனர் என்பதையும் ஜனாதிபதி அவர்களுக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக அறிக்கைகளை வெளியிடுவதற்கு முன்னர் அதிகாரிகளை தொடர்புகொண்டு உரிய தகவல்களை பெறவேண்டும் என ஜனாதிபதி அவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.சமூக ஊடகங்களை அடிப்படையாக கொண்டு அறிக்கைகளை வெளியிடுவது இலங்கையின் பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.அத்துடன் காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீதான இராணுவ நடவடிக்கை குறித்து இராஜதந்திரிகள் வெளியிட்ட கருத்து குறித்து அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

ஈழத்-தமிழர் அரசியலின் தந்திரோபாய வறுமை மீண்டுமொரு முறை நிரூபணமானது

யதீந்திரா
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பெரும்பாண்மை வாக்குகளால் தெரிவாகியிருக்கின்றார். அந்த வகையில் ‘ஒப்பிரேசன் ரணில்’ வெற்றிபெற்றுவிட்டது. இதனை சிலர் ராஜபக்சக்களின் வெற்றியென்று கூறலாம் ஆனால் இந்தக் கட்டுரையாளர் அப்படிக் கருதவில்லை. ஏனெனில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாவதற்கான திட்டங்கள் மிகவும் கச்சிதமாக முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது. கோட்டபாய ராஜபக்சவிற்கு எதிராக, கிளர்சிகள் அதிகரித்த போது, நிலைமைகளை சமாளிக்கும் ஒரு உக்தியாகவே ரணில் பிரதமராக நியமிக்கப்பட்டார். ஆனால் ரணில் பிரதமராக நியமிக்கப்பட்ட போதே, ரணில் ஜனாதிபதியாவதற்கான திட்டம் ரணிலிடம் இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் இது சாத்தியப்பட்டிருக்காது. ரணில் பிரதமரான போதே, கோட்டபாயவினால் அதிக காலம் பதவியில் நீடிக்க முடியாதென்னும் விடயத்தை ரணில் கணித்திருக்க வேண்டும். கோட்;டபாய விலகியதை தொடர்ந்து, ரணில் பதில் ஜனாதிபதியானார். 69 லட்சம் வாக்குகளால் வெற்றிபெற்ற ஜனாதிபதி ஒருவரின் வீழ்ச்சியை தொடர்ந்து, அதற்கு சமதையான வாக்குகளை பெற்றிருக்கும் 134 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ரணில் ஜனாதிபதியாகியிருக்கின்றார். இப்போது ரணில் கேள்விகளுக்கு அப்பாற்றபட்டவர்.

இந்த விடயத்தை எவ்வாறு கையாளுவது என்பதில்தான், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீண்டுமொரு முறை சறுக்கியிருக்கின்றது. யுத்தத்திற்கு பின்னரான கடந்த 13வருடங்களில், அரசியலை தந்திரோபாய ரீதியில் கையாளும் விடயத்தில் சம்பந்தன் தொடர்ந்தும் தோல்விகளையே சந்தித்திருக்கின்றார். தொடர் தோல்வியில் இப்போது புதிதாக சேர்ந்திருப்பதுதான் டளஸ் அழகப்பெருமவை ஆதரித்த பிரச்சினையாகும். புதிய ஜனாதிபதிக்கான விடயம் விவாதத்திற்கு வந்த நாளிலிருந்தே, தமிழரசு கட்சியை தீர்மானிக்கவல்ல, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பொது வெளிகளில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நிலைப்பாடுகளையே முன்வைத்துவந்தார். சுமந்திரனின், தெரிவு சஜித்பிரேமதாசவாகவே இருந்தது. ஆனால் சஜித்பிரேமதாச திடிரென்று போட்டியிலிருந்து விலகியதை தொடர்ந்து, ராஜபக்சக்களின் பொதுஜன பெரமுனவின் பொருளாளர் டளஸ் அழகப்பெருமவை ஆதரிக்கும் விவகாரம் சூடுபிடித்தது.

ஆனால் இதில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே மாறுபட்ட அப்பிராயங்கள் இருந்ததை தனிப்பட்டரீதியில் இந்தக் கட்டுரையாளர் அறிவார். இவ்வாறானதொரு சூழலில்தான், இதில் கூட்டமைப்பு எடுக்கக் கூடிய ஆகச் சிறந்த முடிவு தொடர்பில், இந்தக் கட்டுரையாளர் சில விடயங்களை வலியுறுத்தியிருந்தார். இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு கடிதமொன்றையும் அனுப்பியிருந்தேன். அதாவது, ஜனாதிபதி போட்டியிலிருந்து கூட்டமைப்பு விலகியிருப்பதுதான், சரியானதென்று சுட்டிக்காட்டியிருந்தேன். இதன் மூலம் ஜனாதிபதியாக எவர் தெரிவு செய்யப்பட்டாலும் அவருடன் பணியாற்றுவதற்கு, புதிய பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு இலகுவாக இருக்குமென்று வலியுறுத்தியிருந்தேன். ஆனால் வழமைபோலவே, சம்பந்தனும் சுமந்திரனும் பழைய பாணியில் சிந்தித்து, விடயங்களை குழப்பினர்.
தமிழ் அரசியல்வாதிகள், தமிழ் சிவில் சமூகம் மற்றும் புத்திஜீவிகள் என்போர் – ஒரு விடயத்தை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, நாம் என்னவகையான அரசியலை மேற்கொள்கின்றோம்? இந்தக் கேள்வியிலிருந்துதான் ஒவ்வொரு விடயங்களை பறறியும் சிந்திக்க வேண்டும். இன்று நாம் முன்னெடுக்கும் அரசியலானது, பிரதிநிதித்துவ ஜனநாயக அரசியலாகும். அதன் ஆற்றலுக்கு ஒரு எல்லையுண்டு. அதாவது, தேர்தல்கள் மூலம் கிடைக்கப்பெறும் பிரதிநித்துவ பலத்தின் அடிப்படையில், பேரம்பேசி விடயங்களை வெற்றிகொள்வதை பற்றித்தான், நாம், இங்கு சிந்திக்க முடியும். இது ஒன்றுதான், தற்போது தமிழர்களிடமுள்ள அரசியல் வறிமுறையாகும்.

இந்த வழிமுறையில் முன்னெடுக்கப்படும் அரசியலின் மூலம் வெற்றிகளை அடைய வேண்டுமாயின், தந்திரோபாயங்கள் மட்டுமே கைகொடுக்கும். அதே வேளை இங்கு வெற்றியென்பது முழுமையானதல்ல என்னும் புரிதலும் நம்மிடமிருக்க வேண்டும். எனவே பெறக் கூடியவைகளை பெறுவதென்பததான் வெற்றியாகும். ஏனெனில், விடயங்கள் தோhல்விடையும் போது, தமிழர் தரப்பில் அரசை, கீறங்கிவரச் செய்வதற்கான மாற்று வழிகள் இல்லை. எனவே முழுமையான அரசியல் வெற்றியென்பது தமிழர் அரசியலின் இலக்காக இருக்கவே முடியாது. உதாரணமாக பேச்சுவார்த்தைகள் தோல்வியடைகின்ற போது, விடுதலைப் புலிகள் அந்தத் தோல்வியை இராணுவ வெற்றிகள் மூலமே சரிசெய்துகொண்டனர். இதன் மூலம் மீளவும் அரசாங்கத்தை தங்களை நோக்கி வரவேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தினர். இவ்வாறான அணுகுமுறை ஆயுதப் போராட்ட அரசியலில் மட்டுமே சாத்தியப்படும். ஜனநாயக அரசியலில் தந்திரோபாயங்கள் மூலம் மட்டுமே நலன்களை வெற்றிகொள்ள முடியும்.

யுத்தம் நிறைவுற்ற காலத்திலிருந்து, கூட்டமைப்பு, ஏனைய தமிழ் தேசிய சிறுகட்சிகள், தமிழ் சிவில் சமூகம், புலம்பெயர் அமைப்புக்கள் என, அனைவரும் பல்வேறு தளங்களில் இயங்கியிருகின்றனர். ஜ.நா மனித உரிமைகள் பேரவையை நோக்கி, இந்தியாவை நோக்கி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருக்கி;ன்றனர். இவைகள் எவையும் தந்திரோபாயங்கள் அல்ல. மாறாக, சிறிலங்காவின் ஆட்சியாளர்கள் மீது அழுத்தங்களை பிரயோகிப்பதற்கான செயற்பாடுகள் மட்டுமே. ஒரு குறிப்பிட்டளவு அழுத்தங்களும் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் இவ்வாறான அழுத்தங்களின் ஊடாக, ஏதாவது வாய்ப்புக்கள் கிடைக்கும் போது, அதனை கச்சிதமாக பயன்படுத்திக் கொள்வதுதான் அரசியல் தந்திரோபாயமாகும். ஏனெனில் சர்வதேச அழுத்தங்கள் என்பவை நிரந்தரமானதல்ல. அவை மாற்றமடையக் கூடியவை. கொழும்பின் ஆட்சியாளர்களின் அணுகுமுறைகளில் மாற்றங்கள் ஏற்படுகின்ற போது, சிறிலங்காவின் மீதான அழுத்தங்களும் மாற்றமடைந்துவிடும். இந்த இடைப்பட்ட காலத்தில் கிடைப்பதுதான் வாய்ப்புக்கள், அந்த வாய்ப்புக்களை திறம்பட கையாளுவதில்தான் தமிழர் அரசியலின் வெற்றி தங்கியிருக்கின்றது. இந்த விடயங்களை தமிழர் தரப்புக்களால் புரிந்து கொள்ள முடியாமல் போகும் ஒவ்வொரு சந்தர்பங்களிலும், தமிழ் மக்களுக்கு வெறும் சுலோகங்கள் மட்டுமே மிஞ்சும்.

இப்போது மீண்டும் ஜனாதிபதி தெரிவு விவகாரத்திற்கு வருவோம். நான் முன்னர் குறிப்பிட்டது போன்று, ரணிலை எதிர்க்கும் நோக்கில் சிந்திக்காமல், வாக்கெடுப்பில் நடுநிலை வகிப்பதன் மூலம் ரணிலை எதிர்நிலைக்கு கொண்டுபோகாமல் இருந்திருக்கலாம். ஆனால் இந்த ஜனாதிபதி தெரிவின் போது, ஒரு வேளை ரணிலை ஆதரிக்கும் முடிவெடுத்திருந்தாலும் கூட, அது பிரச்சினைக்குரிய ஒன்றல்ல. ஏனெனில், இரண்டு பக்கத்திலுமே மொட்டு அணியினரின் ஆதிக்கம்தான் மேலோங்கியிருந்தது. ஒரு புறம் மொட்டு உறுப்பினர்களின் ஆதரவுடன் ரணில் விக்கிரமசிங்கவும் மறுபுறும் மொட்டு கட்சியின் சார்பில் டளஸ் அளகப்பெருமவும் போட்டியிட்டிருந்த நிலையில், கூட்டமைப்பிற்கு இதில் தலையீடு செய்ய வேண்டிய தேவையிருந்திருக்கவில்லை. ஒரளவு பொருத்தமானவர் என்னுமடிப்படையில் கூட்டமைப்பினர் வாக்களிக்க விரும்பியிருந்தால், ரணில் விக்கிரமசிங்கதான் கூட்டமைப்பினரின் தெரிவாக இருந்திருக்க முடியும். ஏனெனில், ரணில் விக்கிரமசிங்கவுடன் கூட்டமைப்பினர் முன்னர் இணைந்து பணியாற்றியிருந்தனர். இந்த பின்புலத்தில் ரணிலை ஆதிரிப்பதில் பெரிய அரசியல் சிக்கல்கள் இருந்திருக்கவில்லை. எனினும் கொள்கையடிப்படையில் ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டிய தேவையிருந்திருப்பின் நடுநிலை வகிப்பதே ஒரேயொரு சிறந்த தெரிவாக இருந்தது. ஆனால் சம்பந்தனால் தந்திரோபாய ரீதியில் செயற்பட்டிருக்க முடியவில்லை. ஏனெனில் அவ்வாறான அரசியல் ஆளுமை அவரிடம் இல்லை, அவரிடம் மட்டுமல்ல, தமிழ் சூழலிலேயே தந்திரோபாயம் தொடர்பான புரிதல் மிகவும் பலவீனமாகவே இருக்கின்றது. அரசியலை வெறும் உணர்வுரீதியில் புரிந்துகொள்வதற்கே பெரும்பாலான தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்கள் பழக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களை நெறிப்படுத்த வேண்டிய, புத்திஜீவிகள்; மற்றும் கருத்துருவாக்கிகள் மத்தியிலும் தந்திரோபாய அரசியல் சார்ந்து ஆழமான புரிதல்கள் இல்லை. அவர்களில் அனேகரும் உணர்வுரீதியாகவே விடயங்களை அணுக முற்படுகின்றனர். தாங்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை சிறிலங்கா ஏற்றுக்கொள்ளாவிட்டால், அரசை இறங்கிவரச் செய்வதற்கான மாற்றுவழிகள் தொடர்பில் எவரும் பேசுவதில்லை. ஏனெனில் அவர்களுக்கு அது தெரியாது.

உதாரணமாக சிலர் இடைக்கால அரசாங்கம் பற்றி கற்பனைகளை முன்வைக்கின்றனர். அதனை ஏற்றுக்கொள்ளாவிட்டால் தமிழர் தரப்புக்கள் என்ன செய்யும்? விடுதலைப் புலிகள் பாணியில் தாக்குதலை தொடுப்பீர்களா? பொத்துவில் தொடங்கி பொலிகண்டி போன்ற நடவடிக்கைகளால் கொழும்மை இறங்கிவரச் செய்ய முடியாது. ஏனெனில் வடக்கு கிழக்கில் இடம்பெறும் இது போன்ற நடவடிக்கைகளால் கொழும்பின் நிர்வாகம் முடங்கப்போவதில்லை. அண்மையில் இடம்பெற்ற சிங்கள இளைஞர்களின் பொருளாதார நெருக்கடி கோபம், எவ்வாறு கொழும்மை இறங்கிவரச் செய்தது என்;பது ஒரு நல்ல உதாரணமாகும். அவ்வாறான ஒரு நடவடிக்கையை வடக்கு கிழக்கில் மேற்கொண்டிருந்தால், அது கொழும்பிலுள்ளவர்களுக்கு ஒரு புதினமாகவே இருந்திருக்கும்.

எனவே விடயங்களை தொகுத்து நோக்கினால் தந்திரோபாயரீதியில் தீர்மானங்களை எடுக்க வேண்டிய ஒவ்வொரு சந்தர்பங்களிலும், சம்பந்தன் இடறிவிழுபராகவே இருந்திருக்கின்றார். இதற்கு என்ன காரணம்? சம்பந்தன் அரசியலில் காலாவதியாகிவிட்டார். சம்பந்தன் மட்டுமல்ல இன்னும் பலரும் அவ்வாறான நிலையில்தான் இருக்கின்றனர். ஆனால் தமிழ் வாக்காளர்களின் அறியாமையும், ஞாபக மறதியும் அவ்வாறானவர்களை காப்பாற்றிக் கொண்டிருக்கின்றது. தந்திரோபாய அரசியலுக்கு முன்னுரிமையளிக்கின்ற, வெறும் உண்ர்ச்சிகர அரசியலுக்கு மயங்காத ஒரு புதிய தலைமுறை தமிழ் தேசிய அரசியலை கைப்பற்றாதவரையில், இவ்வாறான பழம் அரசியலில் எந்தவொரு மாற்றமும் ஏற்படப் போவதில்லை. சில தினங்களுக்கு முன்னர் ஒரு சிங்கள சட்டத்தரணியோடு பேசிக் கொண்டிருந்த போது, அவர் ஒரு விடயத்தை குறிப்பிட்டார். அடுத்த தேர்தலில் குறைந்தது எழுபதிற்கு மேற்பட்ட புதியவர்கள், இளைஞர்கள், தெற்கில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக வரக்கூடும் என்றார். கூடவே, தமிழ் பகுதியில் நிலைமையென்ன என்று கேட்டார். தமிழ் வாக்காளர்களை நம்பி எவ்வாறு பதிலளிக்க முடியும்?