இராஜினாமா செய்யுங்கள்: பேராயர் கோரிக்கை

ராஜபக்ஷ குடும்பம் தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பது, தற்போதைய துரதிஷ்டமான சூழ்நிலையில் இருந்து நாட்டை விடுவிப்பதற்கு மிகப் பெரிய தடையாக உள்ளதாக கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

புதிய பிரதமரின் நியமனம் குறித்து மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு அடிபணிந்து சிறிது காலம் மௌனம் காத்த போதிலும் சமயத் தலைவர் மற்றும் பொறுப்புள்ள பிரஜை என்ற ரீதியில் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு தன்னால் அமைதியாக இருக்க முடியாது எனவும் பேராயர் தெரிவித்தார்.

பேராயர் இல்லத்தில் இன்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போதைய சூழ்நிலையில் ஆட்சியில் இருப்பதற்கு ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் தார்மீக உரிமை இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, நாட்டில் ஏற்பட்டுள்ள அவல நிலைக்கு பொறுப்பேற்று பதவிகளை இராஜினாமா செய்து நாட்டின் எதிர்காலத்தை மக்களிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுப்பதாகவும் பேராயர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்பின்னர், மக்கள் எதிர்பார்க்கும்அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த இடைக்கால சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கலாம் என்று கூறிய பேராயர், தொழில்நுட்ப மற்றும் புத்திஜீவிகள் குழு மூலம் நிபுணத்துவ ஆலோசனை பெற்று, தற்போதுள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றார்.

நாட்டில் நிலைமை சீரடைந்தவுடன் விரைவில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும், இந்த நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்க அனைத்து எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களும் முன்வர வேண்டுமென கேட்டுக் கொள்வதாகவும் பேராயர் தெரிவித்தார்.

Posted in Uncategorized

எட்டி உதைத்த அதிகாரி இடைநிறுத்தம்

குருநாகல், யக்கபிட்டியவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமகன் ஒருவரை எட்டி உதைத்த இராணுவ அதிகாரி அனைத்து கடமைகளில் இருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் இன்று (05) தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் முடியும் வரை லெப்டினன்ட் கேணல் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இராணுவம்  வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவின் பணிப்புரைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

5 பேர் கொண்ட விசாரணை நீதிமன்றத்தின் பரிந்துரைகள் வரும் வரை குற்றம் சாட்டப்பட்ட இராணுவ அதிகாரி அனைத்துப் பணிகளில் இருந்தும் உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

இராணுவ அதிகாரி ஒருவர், பொதுமகன் ஒருவரை எட்டி உதைத்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியதை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்த ஒரு குழு நிலையத்தின் நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்ததாக எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் மற்றும் அதிகாரிகளின் கூற்றுப்படி தெரியவந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

பணியில் ஈடுபட்டிருந்த இராணுவம் மற்றும் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும் அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குழு வேண்டுமென்றே எரிபொருள் நிலையத்தில் அமைதியின்மையை உருவாக்கி மோதலுக்கு அழைப்பு விடுத்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர் என்றும் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பேச்சாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எட்டு இலங்கையர்கள் தனுஷ்கோடியை சென்றடைந்தனர்

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும்  பொருளாதார நெருக்கடி காரணமாக யாழ்பாணம் -வல்வெட்டித்துறையை சேர்ந்த 8 இலங்கை தமிழர்கள்  அகதிகளாக தனுஷ்கோடி சென்றுள்ளனர்.

இவர்களை    மீட்ட மரைன் பொலிஸார்,   ராமேஸ்வரம் மரைன் பொலிஸ் நிலயைத்துக்கு அழைத்துச் சென்று, விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணைக்கு பின்னர் 8 பேரையும் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்படுவார்கள்.

தற்போது வரை இலங்கை தமிழர்கள் 103 பேர் அகதிகளாக  தமிழகம் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் சபா மண்டபத்திலிருந்து வெளியேறினார் ஜனாதிபதி!

இன்று நாடாளுமன்றத்தில் பிரசன்னமாகிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்பையடுத்து, சபாமண்டபத்திலிருந்து வெளியேறிச் சென்றார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்தில் பிரசன்னமாகினார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு அருகில் உட்கார்ந்து, சபை நடவடிக்கைகளை அவதானித்துக் கொண்டிருந்தார். இதையடுத்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு எதிராக கோசமெழுப்பினர்.

கோட்டா கோ கோம் என எதிர்க்கட்சிகள் முழுங்கியதால் நாடாளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்பட்டது. எனினும், எதிர்க்கட்சிகளின் போராட்டம் ஓயவில்லை. இதையடுத்து சபாமண்டபத்தைவிட்டுமண்டபத்திலிருந்து வெளியேறினார் ஜனாதிபதி.

Posted in Uncategorized

கந்தகாடு மோதல்: விசாரணை அறிக்கை இன்று

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை பெற்றுக்கொள்ளவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

அதனை பெற்றுக் கொண்ட பின்னர் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்க நான்கு பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.

அமைதியின்மையின் போது தப்பியோடிய சுமார் 800 கைதிகளில் 701 கைதிகள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 27 பேரை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

சீனா வந்தால் இனிக்கும்! அதானி வந்தால் கசக்குமா?: சிதம்பரம் கருணாநிதி

கடந்த 30 ஆண்டு கால யுத்தம் காரணமாகவே இலங்கை முதலில் பாதிக்கப்பட்டது. அதன் பின்னர் ஆட்சிக்கு வருகை தந்த சில அரசியல்வாதிகளால் நாடு அழிவு பாதையில் சென்றுகொண்டுள்ளது. எனவே நாட்டை மீட்க முடியுமா என்பது சந்தேகமாகவே உள்ளது என எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

IBC தமிழ் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டின் வளங்கள் சூறையாடப்பட்டுள்ளன. இப்போது எந்த வளமும் நாட்டில் இல்லை. இதற்கு ஒரே தீர்வு ராஜபக்சர்கள் ஆட்சி விளக்க வேண்டும் என மக்கள் கூறுகின்றனர். அது தான் உண்மையில் நாட்டை மீட்பதற்கான தீர்வாகவும் காணப்படுகின்றது.” என கூறியுள்ளார்.

Posted in Uncategorized

ஜனாதிபதி வெளியிட்டுள்ள விஷேட வர்த்மானி அறிவிப்பு

அத்தியாவசிய பொதுச் சேவை சட்டத்தின் கீழ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விஷேட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதனடிப்படையில் மின்சார விநியோகத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து சேவைகளும், பெட்ரோலியம் மற்றும் எரிபொருளை வழங்குதல் அல்லது விநியோகிப்பது அத்தியாவசிய சேவைகளாக்கப்பட்டுள்ளன.

அத்துடன் வைத்தியசாலைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் பிற ஒத்த நிறுவனங்களில் உள்ள நோயாளிகளின் வரவேற்பு, பராமரிப்பு உணவு மற்றும் சிகிச்சை நிலையங்களும் அத்தியாவசிய சேவையாக்கப்பட்டுள்ளன.

எரிபொருள் நிலையத்தில் ஒருவரை காலால் உதைத்த இராணுவ அதிகாரி தொடர்பில் விசாரணை!

குருநாகல் யக்கஹபிட்டியவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவ அதிகாரி ஒருவரை காலால் உதைத்து தாக்கிய சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக இலங்கை இராணுவத்தினரால் உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இராணுவ அதிகாரி ஒருவர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நபர் ஒருவரை எட்டி உதைக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதுடன், பொதுமகனை தாக்கிய அதிகாரி இலங்கை இராணுவத்தின் லெப்.கேணல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் மற்றும் அதிகாரிகளின் கூற்றுப்படி, எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்த ஒரு குழு  எரிபொருள் விநியோக நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்ததாக அவர் கூறியுள்ளார்.

மேலும் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவம் மற்றும் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும் அவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த குழு வேண்டுமென்றே எரிபொருள் நிலையத்தில் அமைதியின்மையை உருவாக்கி மோதலுக்கு அழைப்பு விடுத்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள்கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சஜித் – மைத்திரி திடீர் சந்திப்பு!

எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று நடைபெற்றது.

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறுகின்றது.

இந்த சந்திப்பில் சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் கலந்துகொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சர்வ கட்சி அரசாங்கம், அரசியலமைப்புத் திருத்தம் உள்ளிட்ட சில முக்கிய அரசியல் விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Posted in Uncategorized

”இலங்கைக்கு அவுஸ்திரேலியா உதவும்”

இலங்கையின் பொருளாதார, சமூக மற்றும் கடல்சார் துறைகளின் முன்னேற்றத்திற்கு ஆதரவளிப்பதாக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலி தெரிவித்துள்ளார்.

இன்று (04) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற சந்திப்பில் டேவிட் ஹோலி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதாரப் பிரச்சினை குறித்து அவுஸ்திரேலியா நன்கு அறிந்துள்ளதா‌க அவர் குறிப்பிட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனி நாடொன்று இலங்கைக்கு வழங்கிய மனிதாபிமான உதவிகளில் அதிகூடிய தொகையை அந்நாட்டினால் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இது ஆரம்பம் மட்டுமே. எதிர்காலத்தில் ஏனைய துறைகளுக்கும் இலங்கைக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவை வழங்குவோம்” என அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் இதன்போது தெரிவித்துள்ளார்.