அரசாங்கத்திற்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் நடுநிலை வகிக்கவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்தது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளர் மருதபாண்டி ராமேஷ்வரன் இதனை உறுதிப்படுத்தினார்.
அரசாங்கத்திற்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் நடுநிலை வகிக்கவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்தது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளர் மருதபாண்டி ராமேஷ்வரன் இதனை உறுதிப்படுத்தினார்.
கொழும்பு காலி முகத்திடலில் 7வது நாளாக ஆர்ப்பாட்டம் இன்றும் (15) தொடர்கிறது.
நாடளாவிய ரீதியில் இளைஞர்கள் கலந்து கொண்ட இந்தப் ஆர்ப்பாட்டம் கடந்த 9 ஆம் திகதி ஆரம்பமானது.
அதன்படி, இரவு பகலாக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக கூடாரங்களை அமைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சித்திரை புத்தாண்டை தினமான நேற்று பெரும் எண்ணிக்கையிலான மக்கள்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி மற்றும் தற்போதைய அரசாங்கத்தை உடனடியாக பதவி விலகுமாறு வலியுறுத்தி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டம் 7 ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது.
எந்தவித அரசியல் தலையீடுகளுமின்றி பொதுமக்கள் இந்த போராட்டத்தில் ஒன்றிணைந்துள்ளனர்.
கொழும்பு – காலி முகத்திடலிலுள்ள ஆர்ப்பாட்ட பகுதியில் இன்று காலை நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் கூடினர்.
இதனிடையே, முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக பிரசாத் இன்று காலை காலி முகத்திடலில் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளார் .
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கிடைக்க வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இதேவேளை, நாட்டின் தற்போதைய நிலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாட்டின் பல பகுதிகளில் இன்றும் ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றன.
ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் இடம்பெறுகின்ற அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவை வழங்குவதற்காக இன்று காலை நீர்கொழும்பு ரயில் நிலையத்திற்கு மக்கள் வருகை தந்திருந்தனர்.
வலஸ்முல்ல பகுதியிலும் இளைஞர் யுவதிகள் ஒன்றிணைந்து இன்று முற்பகல் முச்சந்தியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஹொரணை மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் வலுப்பெற்றது. சுமார் 2 மணித்தியாலங்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை, தற்போதைய அரசாங்கம் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வௌிநாடுகளில் வசிக்கின்ற இலங்கையர்கள் தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
ஊழல் ஆட்சிக்கு எதிரான சுதந்திர இலங்கையர்களின் குரல் என்ற தொனிப்பொருளில் நேற்று இத்தாலியில் போராட்டம் ஒன்று வலுப்பெற்றது. ரோமில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
ஊழல் மிகு அரசாங்கம் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இத்தாலியில் வசிக்கின்ற இலங்கையர்களால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது .
இதேவேளை அமெரிக்காவின் அரிசோனா பிராந்தியத்தில் உள்ள அரச பல்கலைக்கழகத்திற்கு முன்பாக அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஜனாதிபதியை பதவியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தி, எந்தவித கட்சிகளின் பங்களிப்பும் இன்றி போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில், ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக காலி முகத்திடலை அண்மித்து ‘ கோட்டா கோ கம ‘ என பெயரிடப்பட்டுள்ள போராட்ட களத்துக்கு சென்றதாக கூறி கைது செய்யப்பட்ட குட்டிகல பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்டு சேவையாற்றும் பொலிஸ் சார்ஜன் டப்ளியூ.எம். அமரதாசவை (30158) கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று (15) பிணையில் விடுவித்தது.
கொழும்பு மேலதிக நீதிவான் கேமிந்த பெரேரா இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.
காலி முகத்திடல் போராட்ட களத்துக்கு பொலிஸ் சார்ஜன் ஒருவர், நேற்று (14) பொலிஸ் சீருடையில் வந்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த சம்பவம் பலரையும் ஈர்த்தது.
நாட்டில் தற்போது உள்ள நெருக்கடி நிலைமையால் ஏற்பட்டுள்ள அழுத்தங்களை தன்னால் சகிக்க முடியாது எனவும், நாளை தனது தொழில் இல்லாமல் போனாலும் தான் சுரங்கங்களில் பணியாற்றி ஏனும் வாழ்வதாக அந்த பொலிஸ் உத்தியோகத்தர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு மத்தியில் தெரிவித்தார்.
அத்துடன் தன்னை போலவே மனச் சாட்சியுடன் போராடும் பல பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொலிஸ் திணைக்களத்தில் இருப்பதாக தெரிவித்த அந்த உத்தியோகத்தர், அவர்களுக்கும் போராட்ட களத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
‘ உங்கள் ஒவ்வொரு பெட்டன் பொல்லுத் தாக்குதலும், ஒவ்வொரு கண்ணீர்ப் புகைக் குண்டும் இந்த பிள்ளைகளைத் தாக்காது. அது உங்கள் பிள்ளைகளையும், பிள்ளைகளின் பிள்ளைகளையுமே சென்றடையும்.’ என இதன்போது அந்த பொலிஸ் உத்தியோகத்தர் அங்கிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களை நோக்கி தெரிவித்தார்.
இவ்வாறான நிலையில், தன் மனசாட்சியை திறந்து போராட்டத்துக்கு ஆதரவளித்த குறித்த பொலிஸ் சார்ஜன் அமரதாச, நேற்று ( 14)பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, துறைமுக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
அவருக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இது தொடர்பில் இரவோடிரவாக ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டு பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவவும் அறிவித்தார்.
இவ்வாறான நிலையிலேயே கைதுசெய்யப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் அமரதாச, இன்று ( 15) கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.
இதன்போது குறித்த சார்ஜன்ட்டுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி அரசகுலரத்ன தலைமையிலான 15 சட்டத்தரணிகள் மன்றில் ஆஜராகினர்.
பொலிசார், தண்டனை சட்டக் கோவையின் 162 ஆம் அத்தியாயத்தின் கீழும் பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 82 ஆவது அத்தியாயத்தின் கீழும் சந்தேக நபர் குற்றங்களை புரிந்துள்ளதாக மன்றில் கூறினர்.
அதாவது, அரச ஊழியரான குறித்த சந்தேக நபர், அரசுக்கு பங்கம் ஏற்படும் வண்ணம் நடந்துகொண்டுள்ளதாகவும், பொலிஸ் அதிகாரியான அவர், சீருடையுடன் பொருத்தமற்ற இடமொன்றுக்கு சென்றுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இந் நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெறும் நிலையில், சந்தேக நபரான சார்ஜன்டை விளக்கமறியலில் வைக்குமாறு விசாரணையாளர்கள் கோரினர்.
இதன்போது மன்றில் சந்தேக நபருக்காக ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி அரசகுலரத்ன, சந்தேக நபர் எந்த குற்றமும் இழைக்கவில்லை எனவும், அரசியலமைப்பு ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ள உரிமையையே அவர் பயன்படுத்தியதாகவும் குறிப்பிட்டார்.
அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள கருத்து, கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை பயன்படுத்துவது குற்றமாகாது என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
அத்துடன் அரசுக்கு பங்கம் ஏற்படுத்தும் விதமாக பொலிசார் குற்றம் சுமத்தியுள்ள போதும், அரசாங்கமே மக்களுக்கு பங்கம் ஏற்படுத்தியுள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். எனவே சந்தேக நபரை பிணையில் விடுவிக்குமாறு அவர் வாதிட்டார்.
இந் நிலையிலேயே விடயங்களை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதிவான் கேமிந்த பெரேரா, 3 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் சந்தேக நபரான சார்ஜன்டை விடுவித்தார்.
இது குறித்த மேலதிக வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 29 ஆம் திகதிவரை ஒத்தி வைக்கப்பட்டது.
வீரம் உள்ள தோழர்களே!
வீழ்ந்து கிடப்பது தமிழ் அல்ல
மீண்டெழும் தமிழ் இனத்தின் தீரமான உங்கள் வலிமையும் வளமும் இம்மண் விழிமேல் காத்து நிற்கின்றது இப் புத்தாண்டு உங்களை வரவேற்கின்றது.
தமிழ்த் தாய் அழைக்கின்றேன் ஒற்றுமையுடன் வாருங்கள்.என் உயிர்க் குழந்தைகளே என் கையில் இடப்பட்டுள்ள அடிமை விலங்கை உடைத்தெறிந்து சுதந்திரக் காற்றை சுவாசிக்க இன்று நான் மெலிந்து போகவில்லை இன்றும் நிமிந்து நிற்கின்றேன் துணிந்து வாருங்கள் உன்
தாய் தன் தலைமேல் சுமந்து நிற்கும் பழுவை இறக்கி வைக்க புத்தாண்டு உங்கள் மனங்களில் புதுமைகள் படைக்கட்டும்.
அரசாங்கத்திற்கு எதிரான அனைத்து சக்திகளும் ஒன்றிணையாவிட்டால் ஜனாதிபதியோ, அரசாங்கமோ பதவி விலகப்போவதுமில்லை. மக்களின் பிரச்சினை தீரப் போவதில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு இன்று அவர் (14) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையின் பொருளாதாரம் அதளபாதாளத்திற்கு சென்று விட்டிருக்கும் நிலையிலும்,மக்கள் வாழ்க்கை செலவுகளை தாங்க முடியாமல் வரலாறு காணாத போராட்டங்களை நடாத்திக் கொண்டிருக்கும் நிலையிலும் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதை பார்க்கிலும் தங்களது கட்சி அரசியலையும் தமக்கான செல்வாக்கையும் வளர்த்துக் கொள்ளவே ஒவ்வொரு அரசியல் இயக்கமும் முன்டியடித்துக் கொண்டிருப்பதை காணக்கூடியதாகவுள்ளமை கவலையளிக்கிறது.
ஒட்டு மொத்த நாடும் கொழும்பு காலிமுகத்திடலிலே ஒன்று கூடி அரசாங்கத்தை வீட்டுக்குச் செல்லுமாறு கோருகின்ற போதும் இது எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சி என்றும் இன்னும் 69 இலட்சம் மக்களும் எம்மோடுதான் உள்ளனர் என்றும் ஆளுங்கட்சி அமைச்சர்கள் பாராளுமன்றத்தில் மார்தட்டுகின்றனர்,எதிர்க்கட்சிகளும் மக்களின் குறை தீர்க்க இந்த நேரத்திலும் கூட ஒன்றிணைய முடியாமல் தனித்தனியாகவே காரியமாற்றிக் கொண்டிருக்கின்றன.
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அரசாங்கம் எதிர் வரும் நாட்களில் சிற்சில சலுகைகளை மக்களுக்கு அறிவிப்பதனூடாக மக்களின் போராட்டங்களை பிசுபிசுத்துப் போகச் செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. மக்களின் போராட்டங்களை வலுவிழக்கச் செய்யப்படுவதனூடாக மீண்டும் அரசாங்கத்தை ஸ்திரப்படுத்திக்கொள்ள ஆளும் தரப்பு காய்நகர்த்திக் கொண்டிருப்பதால் ஜனாதிபதியோ,அரசாங்கமோ பதவி விலகப் போவதில்லை என்பதே யதார்த்தமாகும்.
இந்நிலையில் அனைத்து அரசியல் இயக்கங்களும் தங்களுக்கிடையே உள்ள கொள்கை வேறுபாடுகளை தவிர்த்து மக்களையும் ஒன்றிணைத்து இப் போராட்டத்தை ஒன்றாக முன்னெடுப்பதனூடாகவே இந்த தோல்வியடைந்த அரசாங்கத்தையும், ஜனாதிபதியையும் வீட்டுக்கு அனுப்பவும், மக்களுக்கு நிவாரணமளிக்கவும் முடியும் என்றும் மேலும் கூறினார்.
பொது வாக்கெடுப்பு அல்லது தமிழர்களின் சுதந்திர ஆட்சிக்கான பேரம் பேசலை முன்னெடுக்க வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளதாக வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.
தமிழ்புத்தாண்டு தினத்தினை முன்னிட்டு வவுனியாவில் அவர்களால் இன்று (14) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்,
கொழும்பில் உள்ள தமிழ் இளைஞர்கள், சிங்கள இளைஞர்களின் புரட்சியின் மீது கொண்ட காதல், தமிழர்களுக்கு எந்த விடிவையும் கொண்டு வராது. அது தமிழர்களின் துன்பங்களை ஒழிக்காது, ஒற்றையாட்சியை மேலும் வலுப்படுத்தும்.
“கொழும்பில் ஒற்றுமை” என்ற பெயரில், இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றங்களில் இருந்து விடுபடுவதற்கு சிங்கள சிந்தனைக் குழுவின் உத்தியாக கூட இது இருக்கலாம். வடக்கு கிழக்கில் எந்தவொரு தமிழர்களும் அரசாங்கத்திற்கு எதிராக பொருளாதார ஆர்ப்பாட்டம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை இன்று பலவீனமாக உள்ளது, உணவுஇல்லை, பணம்இல்லை, பெரும்பாலான பொருளாதார நடவடிக்கைகள் முடங்கியுள்ளன. இது மற்ற நாடுகளுக்கு சந்தைப்பங்கை இழக்கிறது.இலங்கையால் வெளிநாட்டு கடனை செலுத்த முடியவில்லை. இலங்கையின் எதிர்காலம் சர்வதேச நாணய நிதியம் மற்றும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா போன்ற பணக்கார நாடுகளில் தங்கியுள்ளது.
எனவே தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனுடன் பொது வாக்கெடுப்பு அல்லது சுதந்திர ஆட்சிக்கான பேரம் பேசலை முன்னெடுக்கவேண்டும்.வாக்குறுதிகளை நிறைவேற்றும்படி இந்த நாடுகளிடம் கேட்க வேண்டும். தமிழர்களுக்கான நிரந்தரத்தீர்வை எட்டுவதற்கு, இந்த நாடுகள் இலங்கையுடன் பேரம்பேச இதுவே சிறந்த தருணம் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
அல்லது அவர்களின் எம்.பி. பதவிகளை ராஜினாமா செய்வதற்கான கிளர்ச்சியை முன்னெடுத்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவுடன் தமிழர்கள் சார்பில் வாதாடக்கூடிய சில புதிய துணிச்சலான இளைஞர்களை கொண்டுவர வேண்டும்” என்று தெரிவித்தனர்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளால் எனக்கு எந்தப் பயனும் இல்லை என்றும் அதிகாரத்தைப் பெறுவதில் தனக்கு ஆர்வமில்லை எனவும் இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மேலும் அரசாங்கம் உட்பட நாட்டுக்கு அழிவை ஏற்படுத்திய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்பதே மக்களின் இன்றைய கருத்து என்றும் பொதுமக்கள் தமது குறைகளுக்கு தீர்வுகளை எதிர்பார்க்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈழத்தமிழர்களுக்கான சமவுரிமையை அரசியலமைப்பு ரீதியாக ஏற்றுக் கொள்ளாத வரை வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் சிங்கக் கொடியின் கீழ் நிற்க முடியாது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணித் தலைவரும் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தென்னிலங்கையில் சிங்கக் கொடியுடன் முன்னெடுக்கப்படும் ராஐபக்ச அரசாங்கத்திற்கு எதிரான சிங்கள பொது மக்களின் போராட்டங்களில் வடகிழக்கு தமிழர்கள் பங்குகொள்ள முடியாது. காரணம் இலங்கைத் தீவில் பூர்வீக தேசிய இனமாக வாழும் ஈழத் தமிழர்களுக்கான சமவுரிமையை சிங்கள ஆட்சியாளர்கள் இதுவரை அரசியல் அமைப்பு ரீதியாக ஏற்றுக் கொள்ளாமையாகும்.
சிங்கக் கொடி மீது தமிழர்களுக்கு தனிப்பட்ட வெறுப்புக்கள் இல்லை. அதனைப் பயன்படுத்தும் ஆட்சியாளர்களின் இனவாத மதவாத ஆக்கிரமிப்பும் தமிழர்களின் உரிமைகளை சிங்கக் கொடியின் உதவியுடன் பறிப்பதும் தொடர் கதையாக இருப்பதால் சிங்கக் கொடியின் கீழ் நின்று போராட முடியாது.
இதுவரை தமிழர் மனங்களில் சிங்கக் கொடி என்றால் ஆக்கிரமிப்புக் கொடி என்ற மன எண்ணமே நிறைந்துள்ளது.
நாட்டில் அனைவருக்கும் பொதுவான ஒரு பொருளாதாரப் பிரச்சினைக்கு ஒருமித்து குரல் கொடுப்பது கட்டாயம் என்ற உண்மையை யாரும் மறுக்கமுடியாது. ஆனால் தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை சிங்கள ஆட்சியாளர்கள் தொடர்ந்து மறுப்பதனால் தான் நாடு தொடர் பின்னடைவை சந்திக்கிறது என்ற உண்மையை சிங்கள மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
அதனால் ஒரு கொடியின் கீழ் பல்லினங்களும் ஒன்றிணைய சமவுரிமையை உறுதி செய்வது காலத்தின் கட்டாயம்.
தமிழர்களின் சமவுரிமை சட்டரீதியாக அரசியலமைப்பின் மூலம் உறுதி செய்யப்படுமாயின் ஒரு கொடியின் கீழ் ஒன்றிணைந்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல உறுதியாக பயணிக்கலாம். என அவர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபயவுக்கு எதிராக கொழும்பு – காலிமுகத்திடல் பகுதியில் முன்னெடுக்கப்பட்டும் போராட்டம் ஆறாவது நாளாகவும் தொடர்கின்றது.
தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு மத்தியிலும் அந்த ஆர்ப்பாட்டம் தொடர்கின்றது. இதில் பெருந்திரளானவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
ஜனாதிபதி உள்ளிட்ட முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று கோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த சனிக்கிழமை இந்தப் போராட்டம் ஆரம்பமானது.
இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் மேலும் 2 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஏற்கனவே இலங்கையுடன் பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறிய இலங்கையின் சமீபத்திய முடிவு குறித்து இந்திய அரசாங்கம் கவலை தெரிவித்தாலும், அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளது.
இந்தியா ஏற்கனவே 1.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு கடனாக வழங்கியுள்ளதுடன் மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர் எரிபொருளையும் வழங்கியுள்ளது.
சீனாவை விட இலங்கைக்கு கடன் வழங்குவதில் முன்னணியில் இருக்க இந்திய அரசாங்கம் உத்தேசித்துள்ளதாகவும் ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.