இராமர் பாலத்தை இந்தியாவின் தேசிய மரபுரிமையாக்க கோரும் மனு மீது மார்ச் 9 ஆம் திகதி விசாரணை

இராமர் பாலத்தை இந்தியாவின் தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இந்திய உச்ச நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.

ராம் சேது எனப்படுகின்ற ராமர் பாலத்தை இந்தியாவின் தேசிய மரபுரிமை சின்னமாக பிரகடனம் செய்யுமாறு கோரி பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான சுப்ரமணியன் சுவாமி இந்திய உச்ச நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்திய உச்ச நீதிமன்றத்தின் பிரதம நீதியரசர் என்.வி.ரமணா, உச்ச நீதிமன்ற நீதியரசர்களான A.S.போபன்னா , ஹிமா கோஹ்லி ஆகியோர் அங்கம் வகித்த நீதியரசர்கள் குழாமின் முன்னிலையில் இந்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த மனு மீதான விசாரணை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளதால், அதனை விரைந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு சுப்ரமணியம் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதற்கமைய, இராமர் பாலத்தை இந்தியாவின் தேசிய மரபுரிமை சின்னமாக பிரகடனப்படுத்துமாறு ​கோரும், சுப்ரமணியம் சுவாமியின் மனுவை மார்ச் மாதம் 09 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளள மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இன்று தீர்மானித்துள்ளது.

தமிழகத்தின் இராமேஸ்வரம் மற்றும் இலங்கையின் மன்னார் தீவிற்கு இடையே உள்ள ஆழமற்ற திட்டு போன்ற பகுதியே இராமர் பாலம் என அழைக்கப்படுகிறது.

இராமர் பாலத்தின் 8 மணல் திட்டுக்கள் இலங்கைக்கு உரித்தானவை. அவை இலங்கை கடற்பரப்பில் அமைந்துள்ளன.

தலைமன்னாரிலுள்ள இராமர் பாலத்திற்கு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உள்ளிட்டவர்கள் கடந்த வருடம் மார்ச் மாதமும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகள் கடந்த வருடம் பெப்ரவரி மாதமும் சென்று வழிபாடுகளை நடத்தியிருந்தனர்.

இதேவேளை, இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென் ஹொங் வட மாகாணத்திற்கான பயணத்தை நிறைவு செய்யும் வகையில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலுள்ள இராமர் பாலத்தை கடந்த டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி கண்காணித்தார்.

அங்கு கருத்து தெரிவித்த அவர், இந்த விஜயம் முடிவாக மாத்திரமன்றி ஆரம்பமாகவும் அமைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் அழைப்பை ஏற்று கடந்த வருடம் நவராத்திரி விழாவிற்காக இலங்கைக்கு விமானத்தில் வந்துகொண்டிருந்தபோது, சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் ராமர் பாலத்தின் புகைப்படத்துடன் கூடிய பதிவொன்றை இட்டிருந்தார்.

ராமர் பாலத்தை தேசிய நினைவுச்சின்னமாக பிரகடனப்படுத்துவதில் இந்திய பிரதமருக்கு உள்ள தடைகள் என்னவென அவர் அந்த பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.

அந்த சந்தர்ப்பத்தில் நாட்டில் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் குறைந்தது அவரிடம் இது குறித்து வினவியேனும் தகவல் வரவில்லை.

அன்று அவர்கள் கடைப்பிடித்த மௌனத்தின் விளைவாக இன்று எமது நாட்டின் இறையாண்மைக்கு சவால் விடுக்கும் வகையில் எமது நாட்டுக்குரிய மணல் திட்டுக்களும் இந்தியாவின் தேசிய மரபுரிமையாக அறிவிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.

நல்லூர் இராசதானியின் தோரணவாசலை புனருத்தாரணம் செய்ய தீர்மானம்

நல்லூர் இராசதானியின் தோரணவாசலை புனருத்தாரணம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மரபுரிமை மையம் மற்றும் தெல்பொருள் திணைக்களத்தின் அனுசரணையுடன் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை பகல் 12மணிக்கு இதன் ஆரம்ப நிகழ்வு இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் பேராசியர் பரமு புஸ்பரட்ணம், யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் உபதலைவர் பேராசிரியர் ரவிராஜ் தலைமையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

Posted in Uncategorized

13ஆவது திருத்தத்தை சின்னாபின்னப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்- ஜனா பா.உ

அரசியலமைப்பைப் பேணிப் பாதுகாக்க உறுதிமொழியெடுத்த நீங்கள் 13ஆவது திருத்தத்தை எவ்வாறு சின்னாபின்னப்படுத்தினீர்கள். இன்னும் சின்னாபின்னப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்பதற்கு அண்மைக்கால அரசியல் சம்பவங்கள் சான்றாக அமைகிறது என்று தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் (ஜனா) பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற அரசியலமைப்பு வரைபை வரைந்த சட்டப் பேராசிரியர் பீரிஸ் அவர்கள் இது தொடர்பாக கள்ள மௌனம் சாதித்துக் கொண்டிருக்கிறார் எனவும் கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்க (ரெலோ)த்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) வின் இன்றைய தினம் (23) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

உரையின் முழு வடிவம்,

நாட்டில் தற்பேது நிலவும் நிலைமைகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுவதன் மூலம் எமது நாட்டின் இப்போதைய நிலைமைகளை எமது நாட்டு மக்களுக்கு எடுத்துரைப்பதற்கு கிடைத்த பெரும் சந்தர்ப்பமாகவே இதனைக் கருதுகின்றேன்.

எமது நாட்டின் வரலாற்றில் ராஜபக்ச குடும்பத்தின் வரலாறு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டுமா? இல்லை இழிவாக எடுத்துரைக்கப்பட வேண்டுமா? என்ற இரு துருவ வினாக்களுக்கான விடையினை அரசாங்கமே தேர்ந்தெடுக்க வேண்டும். இன்னமும் காலம் முடியவில்லை. திருந்த இடமுண்டு. ஆனால், நீங்கள் திருந்த மாட்டீர்கள் என்ற நம்பிக்கையும் எனக்குண்டு.

69 இலட்சம் மக்களினால் அதுவும் பெரும்பான்மை மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்ததாகப் பெருமைப்பட்டு அனுராதபுர மகாபோதியில் இருந்து பிரகடனம் செய்து பெருமைப்பட்ட நீங்கள் இன்று உங்களது செயல்திறனற்ற நிலைமையினை அந்த 69 இலட்சம் மக்களே உணர்ந்துள்ள நிலைமையை நாடு காண்கிறது.

அரசாங்கம் என்பது ஜனாதிபதி, அமைச்சரவை, பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கலாக சட்டவாக்கத்துறை, நிறைவேற்றுத்துறை, நீதித்துறை என்ற தூண்களில் சிறப்பாகக் கட்டியெழுப்பப்பட வேண்டும். இதற்கான அத்திவாரம் உறுதியாக இருக்க வேண்டும். ஆனால் இன்று அத்திவாரம் இல்லாத கட்டடம் போல சாட்டவாக்க, நிறைவேற்று, நீதித்துறை காணப்படுகிறது.

கூட்டுப் பொறுப்புடன் செயற்பட வேண்டிய அமைச்சர்களிடையே கூட்டுப் பொறுப்பென்பது இம்மியளவும் இல்லை. பாராளுமன்ற ஜனநாயக சம்பிரதாயம் நிலவும் நாடுகளில் அமைச்சரவைக் கூட்டுப் பொறுப்பு பாராம்பரியமாகப் பேணப்பட்டு வரும் மரபாகும். ஆனால், அமைச்சரவைத் தீர்மானங்களை அமைச்சர்களே எதிர்க்கட்சியினரைவிட மோசமாக விமர்சிக்கின்ற நிலையை இன்று நாங்கள் காண்கிறோம்.

அமைச்சரவைக் கூட்டங்களை திறந்தவெளியில் நடத்துங்கள் அதனை மக்களுக்கும் தெரிய சமூக ஊடகங்கள் மூலம் ஒளிபரப்புங்கள். அப்போது தெரியும் யார் புரூட்டஸ் என்பது. இல்லையெனில் அன்று எஸ்.டப்ளியூ.பண்டாரநாயக்கா கூறிய போன்று காலி முகத்திடலில் நடத்துங்கள். மக்கள் கண்ணாரக்கண்டு மகிழ்வார்கள்.

எமது நாடு மறுசீரமைக்க முடியாத, மீளக் கட்டியெழுப்பமுடியாத அதள பாதாளத்துக்குள் சென்று கொண்டிருக்கிறது. உலக அரசியல் வரலாற்றில் பாராளுமன்ற ஜனநாயக வரலாற்றில் என்றும் காணாதளவுக்கு அமைச்சர்களின் எண்ணிக்கை, இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை, செயலாளர்களின் எண்ணிக்கை, இவர்களது இணைப்புச் செயலாளர்கள், ஆலோசகர்கள், பிரேத்தியக உதவியாளர்கள் என்று அரச நிதி வீண்விரயமாகிக்கொண்டிருக்கிறது. கட்சிக் காரர்களுக்கும் அமைச்சர்களது உறவினர்களுக்கும் ஓய்வுபெற்ற இராணுவ உயரதிகாரிகளுக்கும் பதவிகளும், பவுசுகளும், வரப்பிரசாதங்களும் தந்து உல்லாசம் அனுபவிக்கத் தந்து, நாட்டு மக்களை சொல்லொணாத் துயரத்துக்குள் தள்ளிவிட்டுள்ளது இந்த அரசு.

ஆட்சியமைத்த இரு வருட காலத்துக்குள் அமைச்சரவையில் எத்தனை தடவை மாற்றங்களை செய்துள்ளீர்கள். உதை பந்தாட்டப் பந்துகூட இந்த அளவுக்கு உதைகளை பட்டிருக்காது. பசில் ராஜபக்சவினை பாராளுமன்றத்துக்குள் கொண்டுவருவதற்கும் நிதி அமைச்சராக்குவதற்கும் எத்தனை பாடு பட்டீர்கள். இதற்காக அமைச்சர் உதய கம்மம்பில எவ்வாறு பலிக்கடாவாக்கப்பட்டார். அலாவுதீனின் அற்புத விளக்கோடு அதிசய பொருளாதார மாற்றங்களினை ஏற்படுத்துவார் என்று அவரைச் சுற்றி போதி சத்துவருக்கு ஒப்பான விம்பத்தை ஏற்படுத்தினீர்கள். நடந்தது என்ன? நாட்டின் பொருளாதாரப் பிரச்சினை நிதி அமைச்சரினால் கட்டுப்படுத்த முடியாத நிலைமைக்குச் சென்றுவிட்டது.

எரிபொருள் விலை உயர்வு, எரிவாயு விலை உயர்வு, அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு என்று நாட்டில் விலை உயராத பண்டங்களும் இல்லை. சேவைகளும் இல்லை. மகிந்த ராஜபக்ச அவர்களினால் நிதி அமைச்சை திறம்பட நிருவகிக்க முடியாது. கௌரவ பவித்திரா வன்னியாராச்சி அவர்களினால் சுகாதார அமைச்சினை திறம்பட நிருவகிக்க முடியாது. கௌரவ கெகலிய ரம்புக்கல்ல அவர்களினால் வெகுஜன ஊடகத்துறையை நிருவகிக்க முடியாது. என்று அவர்களது அமைச்சுப் பொறுப்புக்களை மாற்றினீர்கள். ஒரு அமைச்சினை ஒழுங்காக நிருவகிக்க முடியாதவர்கள் என்று கருதியவர்களுக்கே வேறு அமைச்சுப் பொறுப்புக்களை வழங்கியுள்ளீர்கள். உங்களால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதியின் ஆலோசகர்கள், அமைச்சுக்களின் ஆலோசகர்கள் என நியமிக்கப்பட்ட நிபுணத்துவ ஆலோசகர்களினால் பெற்றுக் கொண்;ட ஒரு நிபுணத்துவ ஆலோசனையையாவது இந்த உயரிய சபையில் எடுத்துரைக்க முடியுமா?

நாட்டின் நிதிக் கொள்கை தோல்வியடைந்துள்ளது. மத்திய வங்கி நாணாயக் கொள்கையை திறம்படக் கையாள முடியாத நிலையில் உள்ளது. நிதியமைச்சு தோல்வியடைந்துள்ளது வெளிநாட்டு அமைச்சு தோல்வியடைந்துள்ளது. நீதி அமைச்சு தோல்வியடைந்துள்ளது. விவசாயத்துறை அமைச்சு தோல்வியடைந்துள்ளது. சுகாதார அமைச்சு தோல்வியடைந்துள்ளது. கல்வி அமைச்சு தோல்வியடைந்துள்ளது. கடற்றொழில் அமைச்சு தோல்வியடைந்துள்ளது. கலாசார அமைச்சு தோல்வியடைந்துள்ளது. எரிபொருள் அமைச்சு தோல்வியடைந்துள்ளது. இவையாவும் ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல அன்றி பல பதங்களினை எடுத்துக் காட்டியுள்ளேன்.

அணி சேராக் கொள்கையையும், பஞ்ச சீலத்தையும், அரசியல் சித்தாந்தமாக்கி உலகத்துக்கு வெளியுறவுக் கொள்கைளினை எடுத்தியம்பிய எமது நாடு இன்று தனது பிழையான வெளிநாட்டுக் கொள்கையினால் சர்வதேச நாடுகளின் விரோதங்களைச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது.

நாட்டின் வளங்கள் வெளிநாடுகளுக்கு தாரை வார்க்கப்படுகிறது. இதை எதிர்க்கட்சியினராகிய நாங்கள் கூறவில்லை. அரசாங்கக் கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களும் கூறவில்லை. கூட்டுப் பொறுப்புடன் இருந்து தீர்மானங்களை எடுக்கும் அமைச்சர்களே இதனைக் கூறுகின்றார்கள்.

நிதி அமைச்சர் கூறுகிறார். கறுப்புச் சந்தையில் டொலர் வாங்கி கறுப்புச் சந்தையில் ஆயுதம் வாங்கி, கறுப்பாகவே யுத்தத்தை முடித்தோம் என்று. இதை எதிர்க்கட்சியினர் கூறவில்லை. நிதி அமைச்சரே ஊடகவியலாளர் மகாநாட்டில் பெருமையுடன் கூறுகின்றார். இத்தகைய புத்திசாலித்தனமான நிதி அமைச்சரை எமது நாடு கொண்டிருக்கிறது. இதன் விளைவையே நாட்டு மக்கள் அனுபவிக்கிறார்கள்.

ஒரே இரவில் சேதனப் பசளைத் திட்டத்தினை கொண்டு வந்தீர்கள். இன்று நாட்டின் விவசாய உற்பத்தித்துறை எங்கு செல்கின்றது. ஒட்டு மொத்த விவசாயிகளுமே கடனாளிகளாக மாறியுள்ளார்கள்.

ஒரு பரீட்சையினை பிரச்சினை இல்லாது நடத்த முடியாத நிலைமையில் பரீட்சைத் திணைக்களம் உள்ளது. வினாத்தாள் தயாரிப்பதிலிருந்து இரு மொழிகளில் பரிமாற்றம் செய்வது, தகுதியான பரீட்சை மேர்ப்பார்வையாளர்களை நியமனம் செய்வது வரை எந்தளவு திறமையுடன், பரீட்சைத் திணைக்களமும், கல்வித் திணைக்களமும், கல்வியமைச்சும் செயற்படுகிறது என்பதற்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற கல்விப் பொதுத் தாராதர உயர்தரப் பரீட்சையில் நடந்து கொண்டிருக்கும் குழறுபடிகள் தகுந்த உதாரணமாகும்.

வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் நாளொரு அரச வர்த்தக மானியை வெளியிட்டு விலைகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதாகக் கூறி வாய்ச்சவாடல் மாத்திரம் விட்டார். அவரைப் பொறுத்தவரை வாய்ச் சவாடல்தான் அவரது மூலதனம். இன்று நாட்டின் பொருள்களின் விலை உயர்வுக்கு குறிப்பாக பால்மா விலை உயர்வுக்கு தானோ தனது அமைச்சோ காரணமில்லை உற்பத்தியாளர்களும், வர்த்தகர்களுமே காரணம் என்று எந்த விதமான குற்ற உணர்வுமின்றி, அமைச்சர் என்ற பொறுப்பின்றி பத்திரிகையாளர் முன் கூறுகின்றார்.

ஒரே நாடு ஒரே சட்டம் என்கிறீர்கள். ஒரே நாட்டில் ஒரே சட்டம் நிலவுகின்றதா, தமிழர்களுக்கு ஒரு சட்டம், சிங்களவர்களுக்கு ஒரு சட்டம் முஸ்லிம்களுக்கு ஒரு சட்டம். கிறிஸ்தவர்களுக்கு ஒரு சட்டம் என நான் கூறவில்லை. நீதிமன்ற அவமதிப்பினைச் செய்து நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட ஒரே இனத்தைச் சேர்ந்த கலகொட அத்தே ஞானசார தேரர் தொடர்பாகவும், பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ரஞ்சன் ராமநாயக்க தொடர்பாகவும் உங்கள் சட்டச் செயற்பாடுகளை நோக்கும் போது உங்கள் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கையானது உங்களைப் பார்த்தே பரிகசிப்பதாக உணரவில்லையா?

அரசியலமைப்பு மேதகு ஜனாதிபதியவர்களுக்கு குற்றவாளிகளுக்கு மன்னிப்பளிக்கும் அதிகாரத்தினை வழங்கியுள்ளது. அதனை எவ்வாறு பிரயோகிக்கலாம் எனவும் பொருள் கோடல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், மரண தண்டனைக் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் இராணுவ வீரர்களுக்கு நீங்கள் பொது மன்னிப்பளித்த விதம் பற்றி இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உட்பட சிவில் சமூகத்தினர் வரை அதை எவ்வாறு விமர்சித்தார்கள் என்பதை நீங்கள் உணர்ந்தீர்களா? இத்தனைக்கும் எமது நீதி அமைச்சர் இளைமையானவர், ஆளுமையானவர், திறமையானவர், ஜனாதிபதி சட்டத்தரணியும் கூட. இது தவறெனத் தெரிந்தும் எடுத்துரைக்க முடியாத கையறு நிலை அவருக்கு. இதுதான் எமது நாட்டின் சட்ட ஆட்சியின் இன்றைய நிலை.

இன்று ஜெனிவா திருவிழா ஆரம்பகாலம். இதனால், மனித உரிமைகள் பேணுவது தொடர்பாக, பயங்கரவாதத் தடைச்சட்டம் சீர்திருத்தம் தொடர்பாக, அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக, வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பாக, கரிசனை காட்டுவது போல் ஒரு விம்பத்தை உருவாக்குகின்றீர்கள். சட்டப் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அவர்கள். உப்புச் சப்பற்ற பயங்கரவாதத் தடைச்சட்டத் திருத்தம் தொடர்பாக பெரிய வியாக்கியானம் செய்கின்றார். ஆனால், இந்தப் பயங்கரவாதத் திருத்தச் சட்டம் ஓட்டைக் குடத்தில் நீர் நிரப்புவதற்கு ஒப்பானதாகும்.

எமது நாட்டின் வரலாறு ராஜபக்ச பரம்பரையினர் காலத்தில் சகல துறைகளிலும் இருண்ட யுகமாக இருந்தது என எதிர்காலத்தில் உங்களால் எழுதப்படும் மகாவம்ச வரலாற்றில் குறிப்பிடப்பட வேண்டுமா? எமது நாட்டின் பல்லினத் தன்மை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமா? எமது நாட்டின் அரசியலமைப்பு முறையாகப் பேணப்பட வேண்டுமா?

அரசியலமைப்பின் ஒரு அங்கமான 13ஆவது திருத்தம் உங்களால் எவ்வாறு கையாளப்படுகிறது. அரசியலமைப்பைப் பேணிப் பாதுகாக்க உறுதிமொழியெடுத்த நீங்கள் 13ஆவது திருத்தத்தை எவ்வாறு சின்னாபின்னப்படுத்தினீர்கள். இன்னும் சின்னாபின்னப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்பதற்கு அண்மைக்கால அரசியல் சம்பவங்கள் சான்றாக அமைகிறது. ஒரு காலத்தில் பேரினவாத நிலைப்பாட்டில் இருந்த சம்பிக்க ரணவக்க, மக்கள் விடுதலை முன்னணியின் அனுரகுமார திசாநாயக்க போன்றோரே 13ஆவது திருத்தத்தின் உண்மையான அமுலாக்கத்துக்கும் அதிகாரப் பகிர்வுக்கும் ஆதரவான தங்களது நிலைப்பாட்டை மாற்றி வருகின்ற நிலைமையில், பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற அரசியலமைப்பு வரைபை வரைந்த சட்டப் பேராசிரியர் பீரிஸ் அவர்கள் இது தொடர்பாக கள்ள மௌனம் சாதித்துக் கொண்டிருக்கிறார்

எனவே இந்த நாடு சுபிட்சமான நாடாக திகழ வேண்டுமானால், நீங்கள் உங்களது நிலைப்பாட்டிலிருந்து மாறவேண்டும் என்று கூறிக் கொள்கிறேன். அத்துடன், இன்று நாட்டில் அனைத்து மக்களும் தங்களது சம்பளப்பிரச்சினைக்காக வீதிக்கு வருகின்றார்கள். ஆக குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கு முன்பள்ளி ஆசிரியர்கள் கூட தங்களை நிரந்தரமாக்குமாறு கோரி வருகின்றார்கள். அவர்களை நிரந்தரமாக்கி குழந்தைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுப்பதற்காவது நீங்கள் முன்வரவேண்டும்.

Posted in Uncategorized

பயங்கரவாத தடுப்பு (திருத்தம்) சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் 6 மனுக்கள்

பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தம்) சட்டமூலத்திற்கு எதிராக ஆறு மனுக்கள் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது என சபாநாயகர் அறிவித்தார்.

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கடந்த வாரம் அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் “பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தம்)” எனும் சட்டமூலத்தை சபைக்கு சமர்ப்பித்திருந்தார்.

குறித்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரண் என தெரிவித்து அதற்கு எதிராக சிவில் அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அதன் பிரகாரம் நேற்று பாராளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியபோது நீதிமன்றம் அதுதொடர்பில் விடுத்துள்ள அறிவிப்பை சபைக்கு சபாநாயகர் அறிவித்தார்.

குறித்த அறிவிப்பில் அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தம்) எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட ஆறு மனுக்களின் பிரதிகள் பாராளுமன்றத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.

அந்த பிரதிகள் எனக்கு கிடைக்கப்பெற்றிருக்கின்றன என குறிப்பிட்டார்.

சிங்கள தேசியவாதம் தொடர்பான ஆருடம்? ஈழநாடு Editorial

சிங்கள பத்திரிகை உலகிலும், புத்திஜீவிகள் உலகிலும் விக்டர் ஐவன்
முக்கியானவர். ஜே.வி.பியின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரான

அவர், சிங்கள இனவாத புத்திஜீவிகளுக்கு எதிரானவர். ஆட்சியாளர்

களை விமர்சிக்க தயங்காதவர். இவர், அண்மையில் ஆங்கில ஊடமொன்றிற்கு
வழங்கிய நேர்காணலில் – சிங்கள தேசியவாதம் அதன் இறுதி கட்டத்தை
அடைந்திருப்பதாக குறிப்பிட்டிருக்கின்றார். தற்போதைய ஆட்சியாளர்கள்
நெருக்கடிகளை சந்தித்து வரும் பின்னணியை கருத்தில் கொண்டுதான்,
அவர் இவ்வாறு குறிப்பிடுகின்றார். விக்டர் ஐவனின் கணிப்பு சரியானதா –
சிங்கள தேசியவாதம் அதன் இறுதி கட்டத்தை அடைந்திருப்பது உண்மை
தானா?

சிங்கள தேசியவாத அரசியல் வரலாற்றை எடுத்து நோக்கினால் – தமிழர்
விரோதமே, அதன் அடிப்படையாக இருந்திருக்கின்றது. கட்சிக் கொடிகளின்

நிறத்தை தாண்டி, தமிழர் விரோதம் அனைத்து சிங்கள கட்சிகளுக்குள்ளும்,
புரையோடிப் போயிருக்கின்றது. இந்த பின்னணியை அடிப்படையாகக்
கொண்டு, சிந்தித்தால், இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து, சிங்கள
தேசியவாதமென்பது, அடிப்படையில் தமிழர் விரோத தேசியவாதமாகவே

எழுச்சியுற்றிருந்தது. தேசியவாதங்கள் தொடர்பான பொதுவான கணிப்புக்குள்
சிங்கள தேசியவாதம் அடங்காது. அடிப்படையில் – சிங்கள தேசியவாத
மென்பது, தமிழர் விரோத – சிங்கள பௌத்த பெருந் தேசியவாதமாகும்.
‘அப்பே-றட்ட’ என்பதுதான் சிங்கள பெருந்தேசியவாதத்தின் அச்சாணிக்
கருத்தாகும். அதாவது, இந்த நாடு சிங்கள மக்களுக்குரியது- ஏனைய
இனங்கள் இங்கு வாழலாம் ஆனால் தனித்துவமான உரிமைகளை
அனுபவிக்க முடியாது. இதுதான், சிங்கள பெருந்தேசியவாத அசியலின்
இலக்காகும். இந்த அடிப்படையில்தான், இலங்கையின் கடந்த 74 வருடகால
அரசியல் வரலாறானது, இந்த அடிப்படையில்தான் நகர்ந்திருக்கின்றது.

இவ்வாறானதொரு சூழலில், சிங்கள தேசியவாதம் அதன் இறுதிக் கட்டத்தை
நோக்கி பயணிப்பதாக கூற முடியுமா?

தமிழ் தேசியவாத அரசியல் எழுச்சியென்பது சிங்கள ஆட்சியாளர்களின்
தவறுகளிலிருந்தே உருவானது. இலங்கை தமிழரசுக் கட்சியை உருவாக்கிய
எஸ்.ஜே.வி.செல்வநாயகமும், ஏனைய தலைவர்களும், ஐக்கிய இலங்கைக்குள் சிங்கள மக்களோடு இணைந்து வாழ்வதற்கான கோரிக்கைகளைத்
தான் முன்வைத்திருந்தனர். பண்டா-செல்வா, டட்லி-செல்வா – ஒப்பந்தங்கள்,

ஐக்கிய இலங்கைக்குள் வாழ்வதற்கான கோரிக்கைகள்தான். உண்மையில்
அவைகள் சமஷ்டிக் கோரிக்கைகளும் அல்ல. ஆனால் அந்தக்
கோரிக்கைகளைக்கூட சிங்கள ஆட்சியாளர்கள் நிறைவேற்ற முயற்சிக்கவில்லை.
மேற்படி கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட பின்னணியில்தான், தமிழ்த்
தலைமைகள் தனிநாட்டு கோரிக்கையை நோக்கிச் சென்றன. ஆனால்
அப்போதுகூட, தனிநாட்டு கோரிக்கையை அடைவதற்கான எந்தவொரு
வழிமுறையும் தமிழ்த் தலைமைகளிடம் இருந்திருக்கவில்லை. ஆனால்
தமிழ்த் தலைமைகளின் கோரிக்கைகளை புரிந்து கொண்டு ஆரோக்கியமான
அரசியல் இணக்கப்பாடு நோக்கி, சிங்கள ஆளும் வர்க்கம் வரவில்லை. தமிழர்
விரோதத்தை முன்னிறுத்தி தங்களின் அதிகாரத்தை பாதுகாத்துக் கொள்வது
பற்றியே அவர்கள் சிந்தித்தனர். படித்தவரான பண்டாரநாயக்க தனிச்சிங்கள
சட்டத்தை முன்வைத்தது இந்த பின்னணியில்தான்.

அரசியலுக்கு வருவதற்கு முன்னர், இலங்கைக்கான சமஸ்டி தொடர்பில் பேசிய பண்டாரநாயக்க,இறுதியில் ஒரு சிறு நிலத் துண்டைக் கூட தமிழர்களுக்கு வழங்கக்கூடா
தென்னும் சிங்கள பெருந்தேசியவாத மனோநிலைக்கு அத்திபாரமிட்டார்.
சிங்கள ஆளும் வர்க்கத்தை பொறுத்தவரையில் தமிழர் விரோதம் இல்லாத
அரசியலை அவர்களால் இதுவரையில் நிரூபிக்க முடியவில்லை. இந்த
நிலையில், புதிதாக அரசியலுக்கு வருபவர்கள்கூட, விரும்பியோ – விரும்
பாமலோ தமிழர் விரோதத்தை கையிலெடுக்கின்றனர். யுத்த வெற்றியை
தேர்தல் மேடைகளில் உச்சரிக்கின்றனர். இந்த நிலையில், தற்போதைய
ஆட்சியாளர்கள் நெருக்கடியிலிருந்தாலும் கூட, சிங்கள பெருந்தேசியவாதம்
வீழ்ச்சியடைந்து விடுமென்று கருத முடியாது. இந்த ஆட்சியாளர்கள்
வீழ்சியடைந்தாலும் கூட, சிங்கள-பௌத்த பெருந்தேசியவாதம் புதிய வடி
வங்களில் தன்னை நிறுவிக் கொள்ளும். ஏனெனில் சிங்கள பெருந் தேசிய
வாதம் என்பது, அடிப்படையில், சிங்கள பௌத்தத்தோடு பின்னிப் பிணைந்தது.
சிங்கள பெருந்தேசியவாதம் நெருக்கடிகளை சந்திக்கும் போதெல்லாம், சிங்கள
பௌத்தம் அதனை தாங்கிப்பிடிக்கும். அதற்கான புதிய உக்திகளை
கைக்கொள்ளும்.

Posted in Uncategorized

ஜெனிவா செல்லும் இலங்கை குழுவுக்கு அமைச்சர் பீரிஸ் தலைமை தாங்குகிறார்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத்தொடரில் கலந்துக்கொள்ளும் இலங்கை பிரதிநிதிகள் குழுவிற்கு வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தலைமை தாங்கவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை 28 ஆம் திகதி ஆரம்பமாகி ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வரை நடைப்பெறவுள்ளது.

மார்ச் மாதம் 3 ஆம் திகதி இலங்கை தொடர்பிலான கூட்டத்தொடர் இடம்பெறவுள்ளது.

49 ஆவது கூட்டத்தொடர்பில் கலந்துக்கொள்ள வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ்,நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி உட்பட விசேட பிரதிநிதிகள் குழுவினர் ஜெனிவா செல்லவுள்ளனர்.

இந்த பிரதிநிதிகள் குழுவிற்கு வெளிவிவகாரத்துறை அமைச்சர் தலைமை தாங்குவார்.

இவ்விஜயத்தின் போது வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் 49ஆவது அமர்வின் உயர்மட்ட பிரிவில் உரையாற்றுவார்.

அதனை தொடர்ந்து இடம்பெறவுள்ள இலங்கை தொடர்பான உரையாடலிலும் அவர் பங்குப்பற்றுவார்.

அத்துடன் வெளிவிவகாரத்துறை அமைச்சர் இவ்விஜயத்தின் போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் உட்பட முக்கிய தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் இடம்பெறவுள்ளதாக அறிய முடிகிறது.

யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் இலங்கையில் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொருளாதாரம் மற்றும் சமூக கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து நேரடி களவிஜயத்தை மேற்கொள்ளுமாறு வெளிவிவகாரத்துறை அமைச்சர் சர்வதேச சமூகத்திடம் வலியுறுத்தவுள்ளார்.

Share

Posted in Uncategorized

கச்சத்தீவு ஒப்பந்தத்தினால் இரு நாட்டு மீனவர்களின் நட்புறவில் பாதிப்பு – ஜீவன் தொண்டமான்

கச்சத்தீவு உடன்படிக்கையின் பின்னரே இலங்கை – இந்திய மீனவர்களின் நட்பில் பாதிப்பு ஏற்பட்டதாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட குழுவினர், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து தெரிவித்துள்ளதாக ‘தி ஹிந்து’ செய்தி வௌியிட்டுள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், பிரதமரின் இணைப்புச் செயலாளரான செந்தில் தொண்டமான் உள்ளிட்ட குழுவினர் நேற்று (21) சந்தித்து கலந்துரையாடினர்.

இலங்கை தமிழர்களின் நலன் விடயங்கள், மீனவர் பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கச்சத்தீவு உடன்படிக்கை முறையானதாக அமையாததன் காரணமாகவே இரு நாட்டு மீனவர்களின் நட்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக முதல்வரை சந்தித்த பின்னர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட குழுவினர் தெரிவித்ததாக தி ஹிந்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் முதல்வருடன் கலந்துரையாடியதாகவும் இது குறித்து பரிசீலிப்பதாக தமிழக முதல்வர் கூறியதாகவும் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, இலங்கையிலுள்ள இந்திய தூதரகத்தின் ஊடாக இலங்கை தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக இதன்போது குறித்த குழுவினரால் தெரிவிக்கப்பட்டதாக தி ஹிந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

இந்தியத் தூதுவருடன் பேசுதல்? -ஈழநாடு

இந்திய தூதுவர் கோபால் பாக்லேயை சம்பந்தன் சந்தித்து பேசி யிருக்கின்றார். வழமைபோலவே அங்கு சம்பந்தன் ஆணித்தரமாக பேசினார் என்றவாறான செய்திகள், கசியவிடப்பட்டிருக்கின்றன. உண் மையில் சம்பந்தன் இந்திய தூதரகத்திற்கு செல்வதில் விசித்திரங்கள் எதுவுமில்லை. இது சாதாரணமான ஒன்று. இவ்வாறான சந்திப்புக்கள் சம்பந்தனின் வேண்டுகோளுக்கு அமைவாகவே இடம்பெறுவதுண்டு. இந்திய தூதரகம் எப்போதாவதுதான் சம்பந்தனையும் கூட்டமைப்பையும் அழைப்பதுண்டு. ஆனால், சந்திப்புக்கள் முடிந்ததும் வழமைபோல் இந்தியா தங்களை அழைத்து பேசியது போன்றே கதைகள் சொல் லப்படுவதுண்டு.

இந்த மாதம் இறுதியில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் கொழும்பு வரவுள்ளார் என்ற செய்திகள் வெளியாகியிருக் கின்றன. இதேபோன்று, இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வரவுள்ளதான செய்திகளும் வெளிவந்திருக்கின்றன. இந்த நிலை யில்தான் சம்பந்தன், தனது முன்னைய தவறுகளை சரிசெய்யும் நோக்கில் இந்திய தூதுவரை சந்திருக்கின்றார். ஏனெனில், இந்திய பிரத மரை சந்திப்பதற்கான வாய்ப்பு கூட்டமைப்புக்கு வழங்கப்பட்ட போதும், அதனை சம்பந்தன் தட்டிக் கழித்திருந்தார். இதனை கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் கடுமையாக ஆட்சேபித்திருந்தன. தூதரகத்திடமும் முறையிட்டிருந்தன. இதன் பின்னர் தனது தவறை சமாளிக்கும் வகையில், பஸில் ராஜபக்ஷ புதுடில்லியில் நிற்கும்போது இந்த அழைப்பு வந்த காரணத்தால்தான், நான் இதனை பிற்போட்டேன் – ஏனெனில், இந்தியாவுக்கு சங்கடங்களை ஏற்படுத்த நான் விரும்பவில்லை – என்ற வாறு தூதுவருக்கு கதை சொல்ல முற்பட்டிருக்கின்றார். ஆனால், இதன் போது – இந்தியாவுக்கு யாரை எவ்வாறு கையாள வேண்டுமென்று தெரியுமென்று கூறி, சம்பந்தனின் வாயை தூதுவர் அடைத்திருந்தார். இதன்போது ஏனைய கட்சிகளின் தலைவர்களும் இருந்தனர்.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு மிகவும் தெளிவானது. இதனை அவர்கள் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் சுட்டிக் காட்டி வந்திருக்கின்றனர். அந்த நிலைப்பாட்டை இந்தியா மாற்றிக் கொள்ளப்போவதில்லை. இந்த விடயங்கள் சம்பந்தனுக்கு தெரியாத விடயங்களுமல்ல. ஆனாலும் உண்மை நிலையை மக்களுக்கு சொல்லி, விடயங்களை முன்னெடுக்கும் அரசியல் தற்துணிவுடன் சம்பந்தன் இல்லை.

அதேவேளை – மிகவும் உடல் ரீதியில் தளர்ந்திருக்கும் சம்பந்தனை முன்னிலைப்படுத்தக்கூடிய நிலையிலும் இந்தியா இருப்பதாகத் தெரிய வில்லை. பல இலட்சக் கணக்கான மக்களை திரட்டக்கூடிய ஒரு மக்கள் சக்திமிக்க தலைவராக இருந்தால், சம்பந்தன் ஆணித்தரமாகப் பேச

முடியும். அதேவேளை, இந்தியாவை தவிர்த்து, பிறிதோர் இந்திய எதிர்ப்பு
சக்தியுடன் கைகோக்கக் கூடிய மக்கள் செல்வாக்குமிக்க தலைவராக
இருந்தாலும்கூட, இந்தியா சற்று யோசிக்க இடமுண்டு. ஆனால், சம்பந் தனோ தூதரகங்களை நம்பியிருக்கும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மட்டும்தான். எனவே சம்பந்தனால் ஒருபோதும் இராஜதந்திர தரப் புக்களிடம் குரலை உயர்த்த முடியாது. இந்திய இராஜதந்திரிகளுக்கும், கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பொன்றில், சம்பந்தன் மேசையில் தட்டிப் பேசிய போது, அங்கிருந்த முக்கியமான ஒருவர், இப்படி கூறி யிருக்கின்றார். “மிஸ்டர் சம்பந்தன் இது உங்களுடைய கட்சிக் கூட்ட மல்ல”,- சம்பந்தன் கடந்த பன்னிரெண்டு வருடங்களாக மேசையில் தட்டிப் பேசி எதுவும் நடக்கவில்லை. இனியும் எதுவும் சம்பந்தனால் முடியாது.

இந்த நிலையில்தான், அரசியலமைப்பில் இருக்கின்ற 13ஆவது திருத் தச்சட்டத்தை கூட பாதுகாக்க முடியுமா என்னும் கேள்வி எழுந்தி ருக்கின்றது. இவ்வாறானதொரு சூழலில்தான் ஆறு கட்சிகள் இணைந்து இந்திய பிரதமரின் தலையீட்டை கோரியிருந்தன. ஒருவேளை இந்தியா, (தமிழர்களை நடுவீதியில் இந்தியா விட்டுவிடாது என்னும் நம்பிக்கைக்கு அப்பால்) 13 விடயத்தில் அமைதியாக இருந்துவிட்டால் ஆட்சியாளர்கள் தாங்கள் நினைப்பதை சாதாரணமாக செய்து முடித்துவிடமுடியும். ஒரு பௌத்த சாசன அரசியல் யாப்பை கொண்டு வந்தால் சம்பந்தனால் என்ன செய்ய முடியும் – அப்போதும் தூதரங்களின் கதவுகளை தட்டுவதை தவிர?

Posted in Uncategorized

21 இந்திய மீனவர்கள் விடுதலை

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில், மீனவர்கள் தொடர்பான வழக்கு இன்று (21) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 03 வருட சிறைத்தண்டனை என்ற நிபந்தனையின் அடிப்படையில் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் குறிப்பிட்டார்.

மீனவர்களிடம் கைப்பற்றப்பட்ட 02 படகுகளையும் அரசுடமையாக்கி நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, மீனவர்களிடம் கைப்பற்றப்பட்ட கையடக்கத்தொலைபேசி உள்ளிட்ட பிரத்தியேக உடமைகளை மீள வழங்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

விடுதலை செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்களையும் மிரிஹான இடைத்தங்கல் முகாமிற்கு அனுப்பி, குடியகழ்வு குடிவரவு திணைக்களத்தினூடாக இந்தியாவிற்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்குமாறு பருத்தித்துறை நீதவான் இன்று (21) உத்தரவிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பான அறிக்கையை எதிர்வரும் ஏப்ரல் 04 ஆம் திகதி நீதிமன்றத்திற்கு சமர்பிக்குமாறு, யாழ். சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த போது, கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் திகதி 21 இந்திய மீனவர்களும் வடக்கு மீனவர்களால் சுற்றிவளைக்கப்பட்டனர்.

இதன்போது கடற்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டு, மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அமைச்சரவை அமைச்சர்களுக்கு திடீர் அழைப்பு

விசேட அமைச்சரவை கூட்டம் ஒன்று நாளைய தினம் (22) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று பிற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடி குறித்து கலந்துரையாட இந்த விசேட அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.