பயங்கரவாத தடைச் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலத்தை சபையில் முன்வைத்தார் வெளிவிவகாரத்துறை அமைச்சர்

1979 ஆம் ஆண்டின் 48ஆம் இழக்க பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை திருத்துவதற்கானதொரு சட்டமூலம் நேற்று வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிசினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

இதன் இரண்டாம் வாசிப்பு நாளைய தினம் எடுத்துக்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சபையில் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹகீம், ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை கூட்டு ஆணைக்குழு சில முக்கிய விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளது.

Posted in Uncategorized

மீனவர் பிரச்சினை தொடர்பான பிரேரணையை திரும்பப்பெற்றனர் முன்னணியினர் : செல்வராசா கஜேந்திரன்

“இந்தியத் தூதரக அதிகாரியின் வேண்டுகோளுக்கு இணங்க மீனவர்களது பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அவர்களது முயற்சிக்கு ஒத்துழைக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு வேளை பிரேரணையை இன்று விவாதத்துக்கு எடுப்பதைத் தவிர்த்துக்கொண்டுள்ளோம்.” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில்,

“வடபகுதி மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் இன்று ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் ஆகிய நான் முன்மொழிந்து நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வழிமொழிந்து விவாதத்தை ஆரம்பிக்கும் வகையில் எமது தரப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன் பிரகாரம் குறித்த பிரேரணை இன்று பிற்பகல் 4.50 மணியளவில் விவாதத்துக்குக் கொண்டு வரப்படும் வகையில் நாடாளுமன்றில் அறிவித்தல் பலகையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

குறிப்பாக எமது மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களைத் தடுக்காது, அவர்களது வலைகள் அழிக்கப்படுவதையும், படகுகள் சேதமாக்கப்படுவதையும், மீனவர்கள் தாக்கப்படுவதையும், கொல்லப்படுவதையும் இலங்கைக் கடற்படையும் இலங்கை அரசும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றமை தொடர்பில் குறித்த விவாதத்தை நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தோம்.

இந்நிலையில், இன்று நண்பகல் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்திலிருந்து அதிகாரி ஒருவர் தொடர்புகொண்டு, எம்மால் முன்னெடுக்கப்படவிருந்த விவாதம் தொடர்பில் கலந்துரையாடினார்.

அதன்போது நாம், எமது வட பகுதி மீனவர்களது கடற்தொழிலுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில், இலங்கை கடற்படை நடவடிக்கை எடுக்காதது, எமது வடபகுதி மீனவர்களுக்கும் எல்லை தாண்டிவரும் மீனவர்களுக்கும் இடையில் மோதலைத் தீவிரப்படுத்தி பகைமையை வளர்க்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் சபையின் கவனத்தை ஈர்க்கும் நோக்குடன் நாம் குறித்த விவாதத்தை ஏற்பாடு செய்துள்ளோம் என்பதைத் தெரிவித்தோம்.

அதன்போது, தூதரக அதிகாரி, இந்தப் பிரச்சினை தொடர்பில் தமது தரப்பிலிருந்தும் தாம் அக்கறை செலுத்துவதாகவும், மேற்படி மீனவர் பிரச்சினையானது யாழ்ப்பாணத்திலும், தமிழகத்திலும் ஒரு நெருக்கடி மிகுந்த சிக்கல் நிலைக்கு வந்துள்ளதாகவும், அந்த நெருக்கடி நிலையைத் தாம் புரிந்து கொண்டுள்ளதாகவும் கேட்டுக்கொண்டார்.

மேலும் இப்பிரச்சினையைக் கட்டுப்படுத்துவதற்குத் தாம் முடிவெடுத்துள்ளதாகவும், தாம் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகளுக்கு வாய்ப்பளிக்கும் முகமாகக் குறித்த விடயத்தை நாடாளுமன்றத்தில் விவாதிப்பதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

குறித்த தூதரக அதிகாரியின் வேண்டுகோளுக்கு இணங்க மீனவர்களது பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அவர்களது முயற்சிக்கு ஒத்துழைக்கும் வகையில் குறித்த பிரேரணையை இன்று விவாதத்துக்கு எடுப்பதைத் தவிர்த்துக்கொண்டுள்ளோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகாரப் பகிர்வு குறித்து கவனத்திற்கொள்ளப்படும்: G.L.பீரிஸ் இந்தியாவில் தெரிவிப்பு

அதிகாரப் பகிர்வு தொடர்பில் இந்தியா ஆர்வம் காட்டியுள்ளதாகவும் புதிய அரசியலமைப்பில் அது கவனத்திற்கொள்ளப்படும் எனவும் வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ் இந்தியாவில் தெரிவித்துள்ளார்.

13 ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு சில தமிழ் கட்சிகள் இணைந்து இந்திய பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதம் தொடர்பில் The Hindu பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார்.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது இடம்பெறுவதாகவும் நிபுணர் குழுவொன்று அதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதிகாரப் பகிர்வு விடயம் சந்தேகத்திற்கிடமின்றி கவனத்திற்கொள்ளப்படும் என அமைச்சர் தனது இந்திய விஜயத்தின் போது The Hindu பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

எனினும், எதனை செய்தாலும் நாட்டில் ஒருமித்த கருத்து இருக்க வேண்டும் என்பதுடன், பாரியளவிலான எதிர்ப்பை எதிர்கொண்டால் களத்தில் செயற்படுவது கடினமாக இருக்கும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் பேசுவதற்கு தாம் முயற்சிகளை மேற்கொண்டு வருதாகவும் இலங்கையின் அரசியல் கட்சிகள், முதன்மையாக இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பேச்சுவார்த்தை தொடர்பில் அறிவிக்கப்பட்டு 8 மாதங்களாகியும் ஜனாதிபதிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை இடம்பெறாமை தொடர்பில் இதன்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கும் அமைச்சர் பதிலளித்துள்ளார்.

COVID-19 உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் இதன்போது தலையீடு செய்ததாக தெரிவித்த அமைச்சர், விரைவில் அந்த பேச்சுவார்த்தை இடம்பெறும் என பதிலளித்துள்ளார்.

இலங்கை வருகிறார் நரேந்திர மோடி !

இலங்கையில் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள 5 ஆவது பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார கூட்டுறவிற்கான வங்காள விரிகுடா முயற்சி (பிம்ஸ்டெக்) மாநாட்டில் கலந்துகொள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட பிம்ஸ்டெக் அமைப்பின் தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளின் அரச தலைவர்களும் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக அறிய முடிகிறது.

4 ஆவது பிம்ஸ்டெக் உச்சிமாநாடு எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கையில் நடைப்பெறவுள்ளதாக வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் பிம்ஸ்டெக் குழுவினர்களிடம் அறிவித்துள்ளார்.

கடந்த 6ஆம் திகதி இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.ஜயசங்கருடன் இடம்பெற்ற சந்திப்பின் போது பிம்ஸ்டெக் மாநாடு குறித்தும்,மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பங்குப்பற்றல் குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.

பல்துறை தொழிநுட்பம் மற்றும் பொருளாதார கூட்டுறவிற்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பு (பிம்ஸ்டெக்) மாநாடு இம்முறை இலங்கையில் நடைப்பெறவுள்ளதை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர் டென்சின் லெக்ப்ஹெலிடம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார்..

2018ஆம் ஆண்டு தொடக்கம் 2020ஆம் ஆண்டு வரை பிம்ஸ்டெக் மாநாட்டின் தலைமை பொறுப்பினை இலங்கை வகித்துள்ளது.

பிம்ஸ்டெக் பங்களாதேஷ்,பூட்டான்,இந்தியா,மியன்மார்,நேபாளம்,இலங்கை மற்றும் தாய்லாந்து போன்ற தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகள் ஏழினை கொண்ட பன்னாட்டு அமைப்பாகும்.வங்காள விரிகுடாவை அண்மித்த தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளிடையில் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை ஏற்படுத்துவது இவ்வமைப்பின் நோக்கமாகும்.

பிம்ஸ்டெக் முக்கிய 14 துறைகளை உட்படுத்திய வகையில் நடைபெற்றதோடு தற்போது அது ஏழு துறைகளாக குறைக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞான தொழிநுட்பம் மற்றும் புத்தாக்கத்துறைக்கு இலங்கை தலைமை வகிக்கிறது.

பங்களாதேஷ் வியபாரம் மற்றும் முதலீட்டு துறைக்கும், பூட்டான் சுற்றாடல் மற்றும் காலநிலை சீர்கேடுட்டு துறைக்கும்,மியன்மார் விவசாயம் மற்றும் உணவுப்பாதுகாப்பு துறைக்கும்,இந்தியா பாதுகாப்பு துறைக்கும்,நேபாளம் தனிநபர் தொடர்பு மற்றும் தாய்லாந்து தொடர்பாடல் துறைக்கும் தலைமை வகிக்கிறது.

4ஆவது வங்காள விரிகுடாவின் பல்துறை தொழிநுட்பம் மற்றும் பொருளாதார உச்சி மாநாடு கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நேபாளம் காத்மண்டு நகரில் இடம்பெற்றது.3ஆவது பிம்ஸ்டெக் உச்சிமாநாடு 2014ஆம் ஆண்டு மியன்மாரில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

ஞானசார தேரர் பள்ளிவாசல் விஜயம் : முஸ்லிம் தரப்புக்களுக்கிடையில் முறுகல்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மற்றும் வேறு இனத்தை செந்தவர்களை அழைத்து பள்ளிவாசலில் வழிபாடுகளை நடத்தியதற்கு எதிராக முஸ்லிம்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

நிக்கவெரட்டிய தும்மல சூரிய பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் கடந்த 4ஆம் திகதி இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த மோதலுடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த பள்ளிவாசலில் வண.கலகொடஅத்தே ஞானசார தேரர் தலைமையில் சுதந்திர தின நிகழ்வு இடம்பெற்றது.

விழா முடிந்ததும் இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டது, மோதலில் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக தொடர்ந்த நெருக்­கு­வா­ரங்கள் தற்போது புதிய வடி­வத்தை எடுத்துள்ளன.

இது­வரை முஸ்லிம்களை வெளிப்புற சக்திகள் மூலம் சீண்டி வந்த தரப்­பினர், தற்போது முஸ்லிம்களுக்கு மத்தியிலேயே கருத்து முரணபாடு­களைத் தோற்றுவிப்பதற்கான முயற்சிகளில் இறங்­கி­யுள்ளதை அவதானிக்க முடி­கி­றது. இந்த சந்­தே­கத்தை சமூ­கத்தில் உள்ள பலரும் தற்­போது எழுப்பத் தொடங்­கி­யுள்­ளனர்.

‘ஒரே நாடு ஒரே சட்டம் செய­லணி’ தோற்றுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முஸ்லிம் சமூகத்தின் உள்ளக விவ­கா­ரங்­களில் இந்த செய­லணி தீவிர அக்கறை காட்டுவதைக் காண முடிகிறது.

அரசாங்கத்தின் பூரண அனுசரணையோடு இந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

குறிப்பாக முஸ்லிம்­களுக்குள் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் இந்த செயலணி மூலம் பூதாகரமாக்கப்படுகின்றன.

உலமா சபை­யினால் கடந்த காலங்­களில் வழங்­கப்­பட்ட பத்வா, காதி நீதி­மன்­றங்கள் மீதான விமர்­சனம் மற்றும் இஸ்லாம் பாட புத்­த­கங்­களில் திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்­கான ஏற்­பா­டுகள் என்­ப­வற்றை உதா­ர­ண­மாகக் குறிப்­பி­டலாம்.

எதிர்­கா­லத்தில் மேலும் பல கருத்து முரண்­பாட்­டுக்­கு­ரிய விட­யங்கள் சந்­திக்குக் கொண்டு வரப்­ப­டலாம். இவற்றை முஸ்லிம் சமூகம் எவ்­வாறு சாது­ரி­ய­மாக எதிர்­கொள்ளப் போகி­றது என்­பதே விடை காணப்­பட வேண்­டிய விட­ய­மாகும்.

ஒரே நாடு ஒரே சட்டம் செய­ல­ணியின் தலை­வ­ராக ஞான­சார தேரர் நிய­மிக்­கப்­பட்­டதைத் தொடர்ந்து குறித்த செய­லணி தொடர்பில் உள்­நாட்­டிலும் சர்­வ­தேச ரீதி­யா­கவும் பலத்த விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்­டன.

ஏற்­க­னவே நாட்டில் இனங்­க­ளுக்கு மத்­தியில் முரண்­பா­டு­க­ளையும் வன்­மு­றை­க­ளையும் தோற்­று­விப்­ப­தற்கு முன்­னின்ற ஒருவர் எவ்­வாறு இவ்­வா­றா­ன­தொரு செய­ல­ணிக்குத் தலைமை தாங்­கலாம் என்ற கேள்­வியை பலரும் முன்­வைத்­தனர். இன்றும் அதே கேள்­விகள் தொட­ரவே செய்­கின்­றன. இந்த செய­ல­ணிக்கு ஞான­சார தேரர் தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டதன் கார­ண­மாக, அதன் முன் தோன்றி கருத்­துக்­களை முன்­வைக்க முஸ்­லிம்கள் முன்­வ­ர­வில்லை.

விரல்­விட்டு எண்ணக் கூடிய ஓரிரு முஸ்லிம் அமைப்­பு­களும் தனி நபர்­க­ளுமே இந்த செய­லணி முன் பிர­சன்­ன­மாகி தமது கருத்­துக்­களை முன்­வைத்­தனர். இதனை ஒட்­டு­மொத்த முஸ்லிம் சமூ­கத்­தி­னதும் கருத்­தாக செய­லணி கருத முடி­யாது.

இதே­வேளை இச் செய­லணி தொடர்­பான முஸ்லிம் சமூ­கத்தின் சந்­தே­கங்கள் மற்றும் அதி­ருப்­தி­களை வெளிப்­ப­டுத்தும் வகையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் கையெ­ழுத்து வேட்டை ஒன்­றையும் ஆரம்­பித்­துள்­ளது.

இக் கையெ­ழுத்­துக்கள் மகஜர் ஒன்­றுடன் இணைக்­கப்­பட்டு செய­ல­ணிக்கு அனுப்பி வைக்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

இந்த செய­ல­ணியை முஸ்­லிம்கள் புறக்­க­ணிக்கக் கூடாது என்றும் சந்­தர்ப்­பத்தைப் பயன்­ப­டுத்தி தமது அபிப்­பி­ரா­யங்­களை முஸ்­லிம்கள் முன்­வைக்க வேண்டும் என்ற கோரிக்­கை­களும் ஆங்­காங்கே முன்­வைக்­கப்­பட்டு வரு­வ­தையும் காண முடி­கி­றது, எது எப்­ப­டி­யி­ருப்­பினும் இச் செய­லணி முஸ்லிம் சமூ­கத்­திற்கு எதி­ரான செய­ல­ணி­யாக தன்னை அடை­யா­ளப்­ப­டுத்திக் கொள்ளக் கூடாது என்­பதே எமது கரி­ச­னை­யாகும்.

முஸ்லிம் சமூ­கத்­துடன் கலந்து பேசி தீர்­மா­னிக்க வேண்­டிய விட­யங்­களை அதி­கார பலம் கொண்டு நடை­மு­றைப்­ப­டுத்த முயற்­சிக்­கு­மாயின் அது இருக்­கின்ற நெருக்­க­டி­களை மேலும் பூதா­க­ர­மாக்­கவே வழி­வ­குக்கும். அதனை விடுத்து, சம்­பந்­தப்­பட்ட தரப்­பு­க­ளுடன் கலந்­து­ரை­யா­டு­வதன் மூலமே பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண முற்­பட வேண்டும்.

இதற்­கப்பால் , முஸ்லிம் சமூ­கத்­தினுள் நீண்ட கால­மாக நிலவும் மார்க்க ரீதி­யான கருத்து முரண்­பா­டு­களை பயன்­ப­டுத்தி சில தீய சக்­திகள் குளிர்­காய முற்­ப­டு­வ­தையும் வெளிப்­ப­டை­யா­கவே காண முடி­கி­றது. டாக்டர் சாபி விட­யத்தில் முன்­னின்று பொய்­களைப் பரப்­பி­ய­வர்கள் இன்று முஸ்லிம் சமூ­கத்தின் மனித உரி­மைகள் பற்றி பாடம் எடுக்கத் தொடங்­கி­யுள்­ளமை வேடிக்­கை­யா­னது. எவ்­வாறு தேர்­தலில் வாக்­கு­களை கொள்­ளை­ய­டிக்க டாக்டர் சாபியை எதி­ரி­யாக காட்டி முஸ்லிம் சமூ­கத்­தையே குற்­றவாளிக் கூண்டில் நிறுத்தினார்களோ அதேபோன்றுதான் அடுத்த தேர்தலுக்காகவும் முஸ்லிம் சமூகத்தையே தூண்டி, சீண்டி வேடிக்கை பார்க்கமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

எனவேதான் முஸ்லிம் சமூகத்தின் அங்கமாகவுள்ள சகல தரப்புகளும் இந்த யதார்த்தத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். தமக்கு விரோதமானவர்களைப் பழி தீர்க்கிறோம் என்ற போர்வையில் ஒட்டுமொத்த சமூகத்தையும் அழிவுக்குள் தள்ள களமமைக்க கூடாதென வினயமாக வேண்டுகிறோம்.

Posted in Uncategorized

பயங்கரவாதத்தடைச்சட்டத்திருத்த முன்மொழிவுகளில் முக்கிய விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை – ஐரோப்பிய ஒன்றியம்

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்தடைச்சட்டத்திருத்தங்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்பை வெளியிட்டிருக்கும் அதேவேளை, மிகமுக்கியமான பல்வேறு விடயங்கள் அந்தத் திருத்தங்களில் உள்ளடக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியிருக்கின்றது.

அத்தோடு பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் பயன்பாட்டைக் குறைக்குமாறும் எவ்வித குற்றச்சாட்டுக்களுமின்றி அச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களை பிணையில் விடுதலை செய்வதற்குரிய சாத்தியமான நடவடிக்கைளை முன்னெடுக்குமாறும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியிருக்கின்றது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் 24 ஆவது கூட்டம் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை புருசேல்ஸில் நடைபெற்றது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசிய, பசுபிக் வெளிவிவகாரசேவையின் பிரதி நிறைவேற்றுப்பணிப்பாளர் பவோலா பம்பலோனி மற்றும் இலங்கையின் வெளிவிவகார செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே ஆகியோர் தலைமையிலான பிரதிநிதிகளுக்கிடையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

அதுகுறித்து ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் 24 ஆவது கூட்டம் நட்பானதும் வெளிப்படைத்தன்மை வாய்ந்ததுமான முறையில் நடைபெற்றதுடன் இதன்போது இருதரப்பு நல்லுறவு குறித்த மீளாய்வும் இடம்பெற்றது.

அதுமாத்திரமன்றி ஆட்சி நிர்வாகம், நல்லிணக்கம், மனித உரிமைகள் தொடக்கம் வர்த்தகம், அபிவிருத்தி ஒத்துழைப்பு, காலநிலை மாற்றம், சுற்றாடல், பல்துறை ஒத்துழைப்பு, பாதுகாப்பு, பயங்கரவாத முறியடிப்பு வரை இருதரப்பினதும் அக்கறைக்குரிய பல்வேறு விடயங்கள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன் அவற்றின் முன்னேற்றங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியைக் கையாள்வதற்கான இலங்கையினால் செயற்திறனான முறையில் முன்னெடுக்கப்பட்ட தடுப்பூசி வழங்கல் செயற்திட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் அதன் பாராட்டை வெளிப்படுத்தியது. அதேவேளை வைரஸ் தொற்றுப்பரவல் காரணமாக உருவாகியிருக்கும் இயலாமை மற்றும் சமத்துவமின்மை தொடர்பில் அவதானம் செலுத்தப்படவேண்டும் என்று சுட்டிக்காட்டிய ஐரோப்பிய ஒன்றியம், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் நாடுகளும் கொவிட் – 19 தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதை உறுதிசெய்வதற்கான கடப்பாட்டைத் தாம் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தது. அதனைக் கேட்டறிந்துகொண்ட இலங்கை, உலகின் அனைத்து நாடுகளுக்கும் சமத்துவமான முறையில் தடுப்பூசிகள் பகிரப்படுவதை உறுதிசெய்வதில் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிவரும் தொடர்ச்சியான பங்களிப்பிற்குத் தனது பாராட்டை வெளியிட்டது.

அதேவேளை மேற்படி இருதரப்புக்கலந்துரையாடலின்போது ஜனநாயகம், நிர்வாகம், சட்டத்தின் ஆட்சி, சிறுபான்மையினர், பெண்கள், சிறுவர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆகிய தரப்பினரின் உரிமைகள் உள்ளடங்கலாக மனித உரிமைகள், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் ஆகிய விடயங்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டது.

மேலும் நல்லிணக்கப்பொறிமுறையிலும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீனக்கட்டமைப்புக்களின் நடவடிக்கைகளிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்திற்குத் தெளிவுபடுத்தியது.

இதன்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடனும் அதன் பொறிமுறையுடனும் நெருங்கிய தொடர்பையும் ஒத்துழைப்பையும் தொடர்ந்து பேணுமாறு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையை ஊக்குவித்தது.

அத்தோடு மேற்படி சுயாதீனக்கட்டமைப்புக்கள் சுதந்திரமாகவும் செயற்திறனுடனும் இயங்கவேண்டியதன் அவசியத்தையும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியது. அதுமாத்திரமன்றி இக்கலந்துரையாடலின்போது சிவில் சமூக அமைப்புக்களை வலுப்படுத்துதல் மற்றும் அவற்றின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான இடைவெளியை உறுதிசெய்தல் என்பவற்றின் அவசியத்தை ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையும் ஏற்றுக்கொண்டதுடன் இலங்கையில் நீதி மறுசீரமைப்பு மற்றும் நல்லிணக்க முயற்சிகளு;ககு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்குத் தாம் தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் உறுதியளித்தது.

அதேவேளை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்தடைச்சட்டத் திருத்தங்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் அதன் வரவேற்பை வெளியிட்டபோதிலும், மிகமுக்கியமான காரணிகள் வர்த்தமானி அறிவித்தல் வடிவில் வெளியிடப்பட்டுள்ள திருத்தங்களில் உள்ளடக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியது.

இதுவிடயத்தில் ஐரோப்பிய ஒன்றியம் வெளிப்படுத்திய கரிசனை குறித்து அவதானம் செலுத்திய இலங்கை, சர்வதேச நியமங்களுக்கு அமைவாகப் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைத் திருத்தியமைப்பதற்கு அவசியமான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தது.

மேலும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் பயன்பாட்டைக் குறைக்குமாறு அறிவுறுத்திய ஐரோப்பிய ஒன்றியம், எவ்வித குற்றச்சாட்டுக்களுமின்றி பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களை பிணையில் விடுதலை செய்வதற்குரிய சாத்தியமான நடவடிக்கைளை முன்னெடுக்குமாறும் வலியுறுத்தியது.

அடுத்ததாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் வர்த்தகத்தொடர்புகள் குறித்து இதன்போது இருதரப்பும் அவதானம் செலுத்தின. அதன் தொடர்ச்சியாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் உற்பத்திகள் இலங்கையின் சந்தைக்குள் பிரவேசிப்பதைத் தடுக்கின்ற இறக்குமதிக் கட்டுப்பாடுகளை நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் மிகவும் வலுவாகக் கேட்டுக்கொண்டது.

அதற்குப் பதிலளித்த இலங்கை, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாட்டுக்கையிருப்பில் ஏற்பட்ட வீழ்ச்சியைக் கையாள்வதற்காக அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி தொடர்பில் தற்காலிகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாகத் தெளிவுபடுத்தியது. அத்தோடு இந்த நடவடிக்கைகள் தொடர்ச்சியான மதிப்பீடுகளுக்கு உட்படுத்தப்பட்டுவருவதாகவும் தெரிவித்தது.

மேலும் நாட்டின் நிலைபேறான அபிவிருத்திக்குப் பங்களிப்புச்செய்யக்கூடிய விதத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் தமது வரவேற்பை இலங்கை வெளிப்படுத்திய அதேவேளை, கடந்த 2021 செப்டெம்பரில் முன்னெடுக்கப்பட்ட ஜி.எஸ்.பி பிளஸ் மீளாய்வு நடவடிக்கைகளின்போது இலங்கையைச் சேர்ந்த அனைத்துத்தரப்பினராலும் வழங்கப்பட்ட ஒத்துழைப்பை ஐரோப்பிய ஒன்றியம் நினைவுகூர்ந்தது.

அத்தோடு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகைத்திட்டத்தின்கீழ் மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், சூழல் பாதுகாப்பு, சிறந்த நிர்வாகம் உள்ளடங்கலாக இலங்கை கொண்டிருக்கக்கூடிய 27 சர்வதேசக்கடப்பாடுகள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டதுடன் அவற்றை உரியவாறு நிறைவேற்றுவதற்கான தமது கடப்பாட்டை இலங்கை மீளவலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்தின் மனித உரிமை துஸ்பிரயோகங்கள் முடிவிற்கு வராது-சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்

இலங்கை அரசாங்கத்தின் பயங்கரவாத தடைச் சட்டத்தை திருத்துவதற்கான முன்மொழிவுகள் மூலம் அரசாங்கத்தின் மனித உரிமை துஸ்பிரயோகங்கள் முடிவிற்கு வராது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

மதிப்பிழந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி இலங்கை அரசாங்கம் மோசமான துஸ்பிரயோகங்களில் ஈடுபடுகின்றது என தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம், இந்த சட்டத்தை கைவிடுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தங்களை கொடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையின் ஏனைய வர்த்தக சகாக்களும் நிதி வழங்குநர்களும் குறிப்பிட்ட கால எல்லைக்குள் இலங்கை அரசாங்கம் இந்த சட்டத்தை கைவிட வேண்டும் என அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் மேலும் தெரிவித்துள்ளது.

அத்தோடு பரந்துபட்ட துஸ்பிரயோகங்களை முடிவிற்கு கொண்டுவருவதற்கு உதவாத உத்தேச திருத்தங்களை நிராகரிக்க வேண்டும் எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Posted in Uncategorized

ரிஷாட் வௌிநாட்டு செல்ல அனுமதி

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் இந்த அனுமதியை 3 மாத காலத்திற்கு வழங்கியுள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சமகி ஜன பலவேகே பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, ஈஸ்டர் ஞாயிறு அன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கு தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றிலும், தனது வீட்டில் பணிப்பெண்ணாகப் பணியாற்றிய சிறுமி தீயில் எரிந்து உயிரிழந்த வழக்கு தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றமும் பாராளுமன்ற உறுப்பினருக்கு பிணை வழங்கியிருந்தது.

13 ஆவது திருத்தத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்குவோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ள சம்பந்தன்

“அரசமைப்பின் 13ஆவது திருத்தத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வோர் தமிழ் மக்களின் நன்மை கருதிச் செயற்பட வேண்டும்.

தமது சுயலாப அரசியலுக்காகத் தமிழ் மக்களை நட்டாற்றில் விடும் வகையில் அவர்கள் செயற்படக்கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

13 ஆவது திருத்தத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவது படுமுட்டாள்தனமானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

“அரசமைப்பில் முதன்முறையாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் 13ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதைத் தேசிய இனப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வாக ஏற்க முடியாது. இதைத் தீர்வுக்கான முதல் படியாக வைத்துக்கொண்டு நாங்கள் முன்னோக்கி நகர்ந்து வருகின்றோம்.

இந்நிலையில், 13ஆவது திருத்தத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவது படுமுட்டாள்தனமானது.

இப்படியான செயற்பாடு, இருப்பதையும் இழப்பதற்குச் சமமானது. அதனால் தான் 13ஆவது திருத்தச் சட்டத்தை இலங்கை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரி வருகின்றோம்” என்றும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

இந்தியாவை ஏமாற்றுவதற்கான மற்றுமொரு நகர்வே பீரிஸின் புதுடில்லிக்கான விஜயம்-கருத்து வெளியிட்டார் விக்னேஸ்வரன்

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸின் புதுடில்லிக்கான விஜயம் இந்தியாவை ஏமாற்றுவதற்கான மற்றொரு நகர்வாகவே உள்ளது என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கட்சியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸின் தற்போதைய இந்திய விஜயம் தொடர்பாக ‘ரைம்ஸ் எப் இந்தியா’வுக்கு கருத்துவெளியிட்ட போதே விக்;னேஸ்வரன் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தெரிவித்தவை வருமாறு:

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸின் புதுடில்லிக்கான விஜயம் இந்தியாவை ஏமாற்றுவதற்கான மற்றொரு நகர்வாகவே உள்ளது. இந்தியா தமது நட்பு நாடு என அவர்கள் நடிப்பார்கள். தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு விடயத்தில் இந்தியா தலையிடாமலிருப்பதை உறுதிப்படுத்துவதற்காக போலியான வாக்குறுதிகளை அவர்கள் வழங்குவார்கள்.

தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்குவது உட்பட, இந்தியாவுக்கு கடந்த காலங்களில் கொடுத்த வாக்குறுதிகள் எதனையும் இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவில்லை. இந்திரா காந்திக்குப் பின்னர் இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை தோல்வியையே சந்தித்திருக்கின்றது. அதன் விளைவாகத்தான் இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்திருக்கின்றது.

இருந்த போதிலும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியில் நான் நம்பிக்கை வைத்துள்ளேன். அவரை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும். அவர் குஜாராத் முதலமைச்சராக இருந்த போது நான் அங்கு சென்றிருக்கின்றேன். அவர் இலங்கையின் போலி வாக்குறுதிகளை நம்பாமல் இலங்கை தொடர்பில் மிகவும் அவதானமாக இருந்து, தீர்க்கமான செயற்பாடுகளை முன்னெடுப்பார் என நான் நம்புகின்றேன்.

தமிழ் மக்களுடைய சட்டரீதியான உரிமைகளை உறுதிப்படுத்தவும், அவர்களுடைய தொடர்ச்சியான இருப்பை உறுதிப்படுத்தவும் இந்தியப் பிரதமர் துணிச்சலாகச் செயற்படுவார் என இலங்கைத் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். எம்மை வலுப்படுத்துவதற்காக இந்தியா எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் இந்தியாவின் பாதுகாப்புக்கும் உகந்ததாக இருக்கும். ஆக, பேராசிரியர் பீரிஸின் பேச்சுவன்மையில் இந்தியா ஏமாற்றுப்பட்டுவிடக்கூடாது என்பதுதான் என்னுடைய ஒரே எதிர்பார்ப்பாக உள்ளது.