பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட 8 பேருக்கு வவுனியா நீதிமன்றம் பிணை

வெடி பொருட்களை தம் வசம் வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தில் 2019 ஆண்டு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 பேருக்கு வவுனியா நீதிமன்றம் இன்று (07) பிணை வழங்கியுள்ளது.

2019 ஆம் ஆண்டு முதலாம் மாதம் 5 ஆம் திகதி புளியங்குளம் காவல்துறையினரால் கிளைமோர் குண்டை வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 3 பெண்கள் மற்றும் 5 ஆண்கள் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இதில் 9 ஆவது சந்தேக நபரான ஆனந்தராஜா என்பவர் கைது செய்யப்படாத நிலையில் திறந்த பிடியானை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த 8 பேருக்கும் ஆதரவாக சி எச் ஆர் டி நிறுவனம் சட்ட உதவியை வழங்கியிருந்தது.

இந் நிறுவனத்தின் ஊடாக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கலும் செய்யப்பட்டிருந்தது.

இந் நிலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஆலோசனை சபை குறித்த விடயம் விசாரணைக்காக பாரப்படுத்தப்பட்டு விசாரணை நடத்தப்பட்ட நிலையில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இதன் பலனாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் 7/1 பிரிவின் பிரகாரம் சட்டமா அதிபரினால் பிணையில் விடுவிப்பதற்கான சம்மத கடிதம் நீதிமன்றத்திற்கு அனுப்பட்டிருந்தது.

இந்நிலையில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் சார்பில் வவுனியா நீதிமன்றத்தில் சட்டத்தரணி செ. கேதீஸ்வரன் ஆஜராகி குறித்த கடிதம் தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதன் பிரகாரம் 8 பேரும் இன்று பதில் நீதிபதி க. தயாபரனால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

Posted in Uncategorized

கிழக்கு மாகாண பிரதம செயலாளராக, துசித்த பி. வனிகசிங்க நியமனம்

கிழக்கு மாகாண பிரதம செயலாளராக, துசித்த பி. வனிகசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இருந்து அவர் நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

இலங்கை நிர்வாகச் சேவையின் சிரேஷ்ட அதிகாரியான துசித்த பி. வனிகசிங்க, கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்களின் செயலாளராகக் கடமையாற்றியுள்ளதுடன், அரச நிறுவனங்கள் பலவற்றிலும் பல்வேறு பதவிநிலைகளை வகித்தவராவார்.

இதற்கு முன்னர் 2019 டிசெம்பர் மாதத்தில், கிழக்கு மாகாண பிரதம செயலாளராக அவர் பதவியேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை – இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துரையாடல்

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

புது டெல்லியில் இன்று இந்த கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது இலங்கையில் இந்தியாவின் பொருளாதார மற்றும் முதலீட்டு முயற்சிகள் குறித்தும், எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், மீனவர்கள் விவகாரம் குறித்தும், இருதரப்பு பொறிமுறைகளை முன்கூட்டியே மேற்கொள்வது தொடர்பாகவும் இச்சந்திப்பில் பேசப்பட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது, வெளிவிவகார அமைச்சர் பீரிஸுடன், இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் டெல்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மற்றும் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர்.

Posted in Uncategorized

47 உறுப்பு நாடுகளிற்கான கடிதத்தில் 13ஐ கோராமை சம்பந்தனின் பெருந்தவறு என்கின்றார் ஜயதிலக்க

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 47 உறுப்பு நாடுகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அதில் 13 ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தாது பெருந்தவறிழைத்து விட்டார் என்று கலாநிதி.தயான் ஜயத்திலக்க வீரகேசரியிடம் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

13 ஆவது திருத்தச்சட்டத்தினை மையப்படுத்தி பிரதமர் மோடிக்கு ஆறு தமிழ்க் கட்சிகளின் ஏழு தலைவர்கள் இணைந்து கடிதம் அனுப்பி சொற்ப நாட்களில் இவ்விதமாக சம்பந்தன் செயற்பட்டுள்ளமையானது முரண்நகையாக உள்ளதாக சுட்டிக்காட்டியதோடு இதனால் 13 ஆவது திருத்தச்சட்டத்தினை அரசாங்கம் புதிய அரசியலமைப்பினை பயன்படுத்தி ஒழிக்கும்போது தடுக்க முடியாத நிலைமைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது போகும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், தோற்கடிக்கப்பட்டாலும் 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்ச்சியாக இருந்து வருகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியதோடு அவ்விதமான விடயத்தினை குறிப்பிடாது கடிதமொன்றை அனுப்புவது பயனற்றதாகும் என்றும் கூறியுள்ளார்.

துமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு கடிதம் அனுப்பியமை தொடர்பில் தாயன் ஜயத்திலக்க மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 47 உறுப்பு நாடுகளுக்கும் கடிதமொன்றை அனுப்புவதை நான் தவறு என்று கூறவில்லை. அந்தச் செயற்பாட்டினை தமிழ் மக்களின் தலைவராக அவர் செய்வது மிகவும் பொருத்தமானதொரு விடயமாகும்.

ஆனால், அவர் யதார்த்தமானதொரு விடயத்தினை தவிர்த்து விட்டிருக்கின்றார். 2009ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவான தீர்மானம் வெற்றி பெற்றது. அப்போதும் தீர்மானத்தில் 13ஆவது திருத்தச்சட்டம் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்பின்னர் 2012, 2013, 2014, 2015 (இலங்கைஇணைஅனுசரனை வழங்கியது), 2021 ஆகிய ஆண்டுகளில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் போதும் 13ஆவது திருத்தச்சட்டம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு 13 ஆவது திருத்தச்சட்டம் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் ஆறு தீர்மானங்களில் காணப்படுகின்றது. அந்த ஆறுதீர்மானங்களில் ஒன்று மட்டும் இலங்கைக்கு ஆதரவானது. ஏனையவை எதிரானவை. ஆனால் தொடர்ச்சியாக தீர்மானங்கள் ஆதரவாக வந்தாலும் சரி எதிராக இருந்தாலும் சரி 13ஆவது திருத்தச்சட்ட விடயம் தொடர்ச்சியாக இருந்து வருகின்றது.

அவ்விதமானதொரு விடயத்தினை கவனத்தில் கொள்ளாது விடுவது பொருத்தமற்றது. அதேநேரம், சம்பந்தன் இம்முறை அனுப்பிய கடிதத்திலாவது 13ஆவது திருத்த விடயத்தினை கவனமாக கையாண்டிருக்க வேண்டும். ஏனென்றால் அவர் உள்ளிட்ட ஏழு தமிழ்த் தலைவர்கள் பிரதமர் மோடிக்கு 13 ஆவது திருத்தச்சட்டத்தினை வலியுறுத்தி கடிதமொன்றையும் அனுப்பியுள்ளார்கள்.

அவ்விதமாக கடிதம் அனுப்பிய பின்னரும் ஐ.நா.வுக்கு அனுப்பிய கடிதத்தில் 13ஐ குறிப்பிடாது விடுவது பொருத்தமற்றது. ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களில் இந்தியாவின் முயற்சியால் தான் 13ஆவது திருத்தச்சட்டம் உட்புகுத்தப்பட்டுள்ளது என்பதை சம்பந்தன் அறியாதவர் அல்லர். ஆகவே அந்த விடயத்தினை அவர் குறிப்பிடாது விடுகின்றமையானது பாரதூரமான விடயமாகும்.

இதனைவிடவும், தற்போது இந்தியா இலங்கை அரசாங்கத்துக்கு பொருளாதார நிதி உதவிகளை வழங்கியுள்ளது. இலங்கையின் பொருளாதார நெருக்கடிகள் மேலும் ஏற்படுகின்றபோது இந்தியாவின் பங்களிப்பு நிச்சயமாக இருக்கப்போகின்றது. இது இலங்கை இந்திய இருதரப்பு உறவுகள் சார்ந்த விடயம்.

ஆனால், இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட போன்றவர்கள் இந்திய அரசாங்கம் கோரும் முதலீட்டு மற்றும் அபிவிருத்தி திட்டங்களை வழங்குவதன் ஊடாக 13ஆவது திருத்தம், அரசியல் தீர்வு உள்ளிட்ட இந்தியாவின் கோரிக்கைகளை நீர்த்துப்போகச் செய்யலாம் என்று கணக்குப்போட்டிருக்கின்றார்கள்.

அதேநேரம், ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் புதிய அரசியலமைப்பில் மாகாண சபை முறைமைகளை நீக்கியுள்ளதாக தெரியவருகின்றது. அவ்வாறான நிலையில் புதிய அரசியலமைப்பில் 13 ஒழிக்கப்பட்டிருக்குமாக இருந்தால் அதன் பின்னர் தமிழர்களுக்கு கிடைக்கப்போவது என்ன ? ஐ.நா.தீர்மானத்தில் 13 குறிப்பிடப்பட்டிருந்தாலும் அதனை தமிழ்த் தரப்புக்களே கோராதபோது இலங்கை அரசாங்கம் அதுபற்றி கரிசனை கொள்ளும் என்று கூறவும் முடியாது.

ஆகவே 13 ஆவது திருத்தச்சட்ட விடயத்தினை சம்பந்தன் தனது கடிதத்தில் குறிப்பிடாது பெருந்தவறு இழைத்துவிட்டார். இது சந்தர்ப்பங்களை வலுவிழக்கச் செய்துள்ளது என்றார்.

கச்சத்தீவுக்கு தமிழக மீனவர்களை அனுமதிக்க வேண்டும் – தமிழக முதலமைச்சர் கோரிக்கை

கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய ஆண்டு திருவிழாவில் பங்கேற்க தமிழக மீனவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளமைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கை அரசுடன் பிரச்சினையை எடுத்துரைத்து, இவ்விழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்க வழிவகை செய்யுமாறு இந்திய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை அவர் வலியுறுத்தியுள்ளார்.

“தமிழ் மீனவர்கள் மற்றும் யாத்ரீகர்கள் கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்துடன் ஆன்மீக மற்றும் உணர்ச்சி ரீதியான தொடர்பைக் கொண்டுள்ளனர், மேலும் பல தசாப்தங்களாக இந்த பாரம்பரிய நிகழ்வில் பங்கேற்று வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது தமிழக மீனவர்களுக்கு நிகழ்வில் பங்கேற்க இலங்கை அதிகாரிகளின் மறுப்பு தெரிவித்துள்ளமை மாநிலத்தில் உள்ள மீனவர் சமூகத்தினரிடையே ஆழ்ந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது,” என்று வெளியுறவுத் துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Posted in Uncategorized

மீனவர்களை மோத விடும் போக்கை இரு நாட்டு அரசுகளும் நிறுத்த வேண்டும்- தமிழ்நாடு மீனவர் மக்கள் சங்கம்

சிங்கள இனவாத அரசும் இந்திய அரசும் , ஈழத்தமிழ் மற்றும் தமிழக மீனவர்களை மோதவிடும் போக்கை உடனடியாக நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு மீனவர் மக்கள் சங்க தலைவர் ஜெ.கோசுமணி. வலியுறுத்தியுள்ளார்.

“சமீப காலங்களாக ஈழத் தமிழ் மீனவர்களை வைத்து இனவாத அரசின் அமைச்சராக இருக்கக்கூடிய டக்ளஸ் தேவானந்தா தொடர்ந்து தமிழ் மீனவர்களை மோதவிடும் போக்கை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.

ஈழத் தமிழ் மீனவர்கள் மீது, தமிழக மீனவர்கள் படகு மோதி இரண்டு மீனவர்கள் இறந்ததாக சொல்லப்படுகிறது, இதை ஒட்டி இலங்கை வடபகுதி மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சிங்கள இனவாத அரசு, ஈழத்தமிழ் மற்றும் தமிழக மீனவர்களை மோதவிடும் போக்கை உடனடியாக நிறுத்த வேண்டும். இரு நாட்டிற்கும் பகை ஏற்படுத்துகின்ற வகையில் இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இரண்டு மீனவர்களையும் மோதவிடும் போக்கை தொடர்ந்து கடைபிடித்து வருகிறார். இந்த செய்கை என்பது இரண்டு நாட்டு அரசுக்கும் சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதை டக்ளஸ் தேவானந்தா போன்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் மீனவ சமூக மக்களை இனத்தின் பெயரால் அழிக்க நினைப்பது மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.

இந்திய அரசும் இலங்கை அரசும் மீனவர்கள் சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தி ஒரு சுமுகமான தீர்வை எட்டுவதற்கான ஒரு முயற்சியை எடுக்க வேண்டுகிறேன். அதேபோன்று தமிழக மீனவர்கள் முடிந்தவரை இலங்கை கடற்பகுதியில் சென்று மீன்பிடிக்க கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன். எதிர்கால சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவுக்கு நாம் வரவேண்டும், இவ்வாறான மோல் போக்கால் பாதிக்கப்படுவது தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழ் மீனவர்களும் இந்திய தமிழ் மீனவர்களும் தான்.

எனவே இரு நாட்டு அரசு இதில் தலையிட்டு ஒரு நிரந்தர மீன்பிடிப்பு முறையில் ஒரு சட்டபூர்வமான வழிவகையை ஏற்படுத்த வேண்டும்” என இலக்கு ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

சிறிலங்காவில் தொடரும் கடத்தல், சித்திரவதைகளை குறிப்பிட தவறிய பிரித்தானிய அமைச்சர்

அண்மையில் சிறிலங்காவுக்கு விஜயம் செய்த பிரித்தானிய அமைச்சரும் பிரபுவுமாகிய அஹமட் அவர்கள், சிறிலங்காவில் தொடரும் சட்டவிரோதமான கைதுகளும் தடுத்துவைப்புக்களும் சித்திரவதைகளும் காணாமற்போதல்களும் பற்றி எந்தவித கருத்தும் தெரிவிக்க தவறியமையை கண்டித்து, தமிழ் அரசியல்வாதிகள் பலர் இணைந்து கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். இதுதொடர்பில் மேலதிக ஆதாரங்களை வழங்க நேரில் சந்திப்பதற்கும் அழைப்புவிடுத்துள்ளனர்.

தெற்கு, மத்திய ஆசியா, ஐக்கிய நாடுகள், மற்றும் பொதுநலவாய நாடுகள் விவகார அமைச்சரும் மோதல்களின் பாலியல் வன்முறைகளைத் தடுப்பதற்கான பிரித்தானியப் பிரதமரின் சிறப்புப் பிரதிநிதியுமான அதி மதிப்பிற்குரிய ரரீக் அஹமட் பிரபு அவர்கள் (The Rt. Hon. Lord (Tariq) Ahmad of Wimbledon) கடந்த மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் செய்து சிறிலங்காவின் ஜனாதிபதி, அமைச்சர்கள், அரசியல்வாதிகள், மக்கள் பிரதிநிதிகள் என குறிப்பிட்ட சிலரை சந்தித்திருந்தார்.

தாம் எழுதிய கடிதத்தில் சிறிலங்கா காவல்துறைக்குப் பயிற்சி வழங்கும் நடவடிக்கையினை ஸ்கொட்லாந்துக் காவல்துறை நிறுத்தியதை வரவேற்றுள்ள தமிழ் அரசியல் தலைவர்கள், இம்முடிவில் மாற்றம் இருக்காது என்று தாம் நம்புவதாகவும் கூறியுள்ளனர். அத்துடன் அண்மையில் சிறிலங்கா காவல்துறையின் தடுப்பில் நடந்த சித்திரவதைகள் மற்றும் மரணங்கள் தொடர்பாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகளையும் கோடிட்டுக் காட்டியுள்ளனர். அத்துடன் நாட்டில் உள்ள தமக்கு அங்கு நடக்கும் மனித உரிமைகள் மீறல்கள் பற்றி வெளிப்படையாகக் கதைப்பதற்கு சுதந்திரம் இல்லை என்றும், வெளிநாடுகளில் உள்ள ஊடகவியலாளர்களே இச்சம்பவங்கள் பற்றி அச்சமின்றி செய்திவெளியிடும் நிலைமையே இப்போது காணப்படுவதாகவும் அவர்கள் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.

மேலும் பாதுகாப்புப் படையினரால் தமிழர்கள் சட்டத்திற்குப் புறம்மான முறையில் கைதுசெய்யப்படுவது, கடத்தப்படுவது, சட்டத்திற்கு மாறாக தடுத்துவைக்கப்படுவது பற்றிய முறைப்பாடுகள் தொடர்ச்சியாக தமக்குக் கிடைப்பதாகவும், அது மட்டுமன்றி பல தமிழ் இளைஞர்கள் மர்மமான முறையில் காணாமல் போவதும் பின்னர் மரணமடைவதும் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல்களும் தமக்குக் கிடைப்பதாகவும் அவர்கள் அம்மடலில் தெரிவித்துள்ளார்கள்.

இவ்வாறு கைதுசெய்யப்படுகவர்களில் பலருக்கு விடுதலைப் புலிகளுடன் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை என்றும், போர் நடந்த காலத்தில் அவர்களில் பலர் பதின்மவயதைக்கூட எட்டியிருக்கவில்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் றிச்சார்ட் பதியுதீனின் ட்டிவிட்டர் பதிவை மேற்கோள் காட்டிக் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் போரில் இறந்தவர்களை நினைவுகூர்ந்தமையும் எங்கள் உரிகைளுக்காக அமைதிவழி ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டமையும் சமூக ஊடகங்களில் போரில் இறந்தவர்களைப் பற்றிய பதிவுகளைப் பகிர்ந்தமையும் பலர் கைதுசெய்யப்படுவதற்கு தூண்டுதலாக அமைந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் ஊடகவியலாளர்களும் உள்ளனர் என்றும் அவர்கள் எழுதியுள்ளார்கள்.

மேலும் புனர்வாழ்வுபெற்ற முன்னாள் போராளிகள் பலரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர்கள், ஆர்ப்பாட்டங்கள் நினைவேந்தல்களில் பங்குபற்றியதற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பயங்கரவாத தடுப்புப் பிரிவால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதையும், இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் கைதுசெய்யப்பட்டதையும் கோடிட்டுக் காட்டியுள்ளனர்.

அத்துடன், போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இலங்கை அதிகாரிகள் மீது பிரித்தானியா தடை விதிப்பதுடன் அதனது உலகளாவிய நீதிஅதிகாரத்தைப் பயன்படுத்தி விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், எங்களது மக்கள் பலரை நாட்டைவிட்டுத் தப்பியோடி வெளிநாடுகளில் புகலிடம் கோருவதற்குக் காணரமாக இருக்கும் தற்போதும் நடந்துகொண்டிருக்கும் மோசமான மனித உரிமை மீறல்கள் பற்றி பிரித்தானியா பேசவேண்டும் என்றும் தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

மேலும் இது தொடர்பான நேரடி வாக்குமூலங்கள், மேலதிக தகவல்கள் மற்றும் கூடுதல் ஆதாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும், இது தொடர்பில் பிரித்தானிய அரசு அர்த்தமுள்ள நடவடிக்கை எடுப்பதற்கு உதவுவதற்கும், தாங்கள் தயாராக இருப்பதாவும், இதற்காக ஒரு சந்திப்பை நாங்கள் கோருகிறோம் என்றும் அக்கடிதத்தில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நீதியரசரும், முன்னாள் வடமாகாண முதலமைச்சரும், தற்போதய பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பு யாழ் பாராளுமன்ற உறுப்பினராகிய, தர்மலிங்கம் சித்தார்த்தன், வன்னிமாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், நோகராதலிங்கம், சாள்ஸ் நிமலநாதன், மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம் ஆகியோருடன், தமிழ்மக்கள் தேசிய கூட்டணியின் செயலாளர் நாயகமும், முன்னாள் யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், வடமாகாணசபையின் முன்னாள் அமைச்சரும் ஈழத்தமிழர் சுயேட்சைக் கழகத்தின் பொதுச்செயலருமான அனந்தி சசிதரன் ஆகியோரும் இக்கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளார்கள். யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினாராகிய சிவஞானம் சிறிதரன் அவர்களும் இதே கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

சிறிலங்கா காவல்துறையின் தடுப்பில் நடைபெற்ற சித்திவதைகளும் மரணங்களும், எழுந்தமானமான கைதுகள், சட்டவிரோத தடுத்துவைப்புக்கள், காணாமற்போதல்கள், மர்மச்சாவுகள் என்பன பற்றிய தொடர் அறிக்கைகள், சமீபத்தில் பாதிக்கப்பட்டவர்களது விபரங்கள், தூண்டுதலாக அமையும் காரணங்கள், முன்னாள் விடுதலைப்புலிப் போராளிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் மீதான வன்முறை, இந்நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் என பல்வேறு உப தலைப்புக்களில் இக்கடிதம் விரிவான விபரங்களுடன் எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு தலைப்புக்களுக்கீழும் ஊடகங்களில் வந்த சம்பவங்கள் ஆதாரமாக வழங்கப்பட்டுள்ளன.

இவை ஊடகங்களில் பதிவான ஒருசில மனித உரிமை மீறல்களுக்கான உதாரணங்கள் மட்டுமே என்றும் இதுபோல இன்னும் பல சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றன என்றும் குறிப்படப்பட்டுள்ளது.

அத்துடன், நவம்பர் 2019 முதல் இன்றுவரையான காலப்பகுதியில், ஊடகங்களில் பதிவான, 809 மனித உரிமைமீறல்ச் சம்பவங்கள் ஆவணப்படுத்தப்பட்ட, 66 பக்கங்கள் கொண்ட விரிவான பட்டியலும் இணைத்து அனுப்பி வைக்கப்பட்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கை படைத் தளபதிகளை தடை செய்யுமாறு பிரித்தானியாவில் கோரிக்கை

இலங்கையில் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட படை அதிகாரிகள் மீது பிரித்தானியா அரசு தடைகளை கொண்டுவரவேண்டும் என்ற தீர்மானம் தெற்கு லண்டன் பகுதியில் உள்ள ரூட்டிங் நகரசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பல பத்து வருடங்களாக இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எனவே இந்த குற்றங்களில் ஈடுபட்ட படை அதிகாரிகள் மீது அனைத்துல மனித உரிமைகள் மீறல் தடைச்சட்டம் -2020 இன் அடிப்படையில் பிரித்தானியா அரசு தடையை கொண்டுவர வேண்டும் என தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு பகிரங்கமாக தடை விதிக்குமாறு பிரச்சாரம்

இலங்கையில் இனவழிப்பு, மனித குலத்திற்கு எதிரான குற்றம் மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட போர்க் குற்றவாளிகளுக்கு எதிரான பிரச்சாரமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் 74வது சுதந்திர தினம் தமிழ் மக்களின் ஒரு துக்க தினமாகும்.

இலங்கையில் மனித குலத்திற்கு எதிரான பாரிய குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக 04 பெப்ரவரி 2022, அன்று உலகளாவிய புலம்பெயர் தமிழ் அமைப்புகளால் மனித குலத்திற்கு எதிரான பாரிய குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்று நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இனம் காணப்பட்ட நபர்கள் மீது பகிரங்க தடை விதிக்க கோரி பிரச்சாரத்தை தொடங்குகின்றனர்.

பிரச்சாரம் பற்றி

இலங்கை அரச இயந்திரத்தினால் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட மனிதகுலத்திற்கு எதிரான பாரிய குற்றங்களினால் இலங்கையிலிருந்து வெளியேறிய பத்து லட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உலகளாவிய புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் இணைந்து இந்த மனுவில் கையொப்பமிட்டு, தங்கள் நாடுகளின் அரசாங்கங்களை நம்பத்தகுந்த சாட்சியங்களை ஆதரமாகக் கொண்டு 16 செப்டம்பர் 2015 அன்று வெளியிடப்பட்ட இலங்கை மீதான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலக (OHCHR) விசாரணையின் (OISL) அறிக்கையின்படி அதில் பெயர் குறிப்பிடப்பட்ட நபர்களை பகிரங்க தடை செய்ய கோரும் நடவடிக்கை.

இந்த அறிக்கை (OISL) குறிப்பாக 2008-2009 போரின் முடிவில் பாரிய மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்ததற்காக கட்டளைப் பொறுப்பைக் கொண்டிருந்த பதினெட்டு இலங்கை அதிகாரிகளையும் தலைவர்களையும் அடையாளம் கண்டுள்ளது.

பிரச்சார நோக்கம்

இந்த அறிக்கையில் (OISL) ஆதாரபூர்வமாக சுட்டிக்காட்டப்பட்ட உண்மையின் அடிப்படையிலும், UNHRC தீர்மானம் 46/1 வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டமை கொடுத்த ஊக்கத்தின் அடிப்படையிலும், அந்தந்த நாடுகளை பின்வரும் விடயங்களை நடைமுறைப்படுத்த வலியுறுத்துவதை நோக்கமாகக் கொண்டு இப்பிரச்சாரம் அமைந்துள்ளது.

● 16 செப்டம்பர் 2015ல் இடம்பெற்ற இலங்கை மீதான OHCHR விசாரணை அறிக்கையில் (OISL) பட்டியலிடப்பட்டுள்ள நம்பத் தகுந்ததாகக் கூறப்படும் 18 போர்க் குற்றவாளிகளுக்கு பகிரங்கத் தடை விதித்தல்.

● இந்த 18 நபர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது பயணத் தடை மற்றும் சொத்து முடக்கம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துதல்.

● உலகளாவிய நியாயாதிக்கம் (Universal Jurisdiction) வழிகளைப் பயன்படுத்தி இந்தப் போர்க் குற்றவாளிகளுக்கு தக்க தண்டனையை உறுப்பு நாடுகளின் நீதித்துறை செயல்முறையின் மூலம் பெற்றுத்தரல்.

எதிர்பார்க்கின்ற பெறுபேறுகள்

பிரேசில், கனடா, அமெரிக்கா (U.S.A), பிரித்தானியா (U.K) மற்றும் ஐரோப்பாவில் உள்ள சில நாடுகள், மனிதகுலத்திற்கு எதிரான பாரிய குற்றங்களில் ஈடுபட்டதாக நம்பத் தகுந்த வகையில் குற்றம் சாட்டப்பட்ட சில தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை போர்க் குற்றவாளிகளை அந்தந்த நாடுகளுக்குள் நுழைவதை தடுத்தும் மற்றும் வெளியேற்றியும் வருகின்றன.

அண்மையில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இரண்டு இலங்கை இராணுவ அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு பகிரங்கமாக தடை விதித்துள்ளது.

அதேபோன்று, 2020ஆம் ஆண்டு அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ தீவிரமான மற்றும் நம்பகமான ஆதாரங்களை மேற்கோள் காட்டி, தற்போதைய பாதுகாப்புப் படைத் தளபதியும், இலங்கை இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா, சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதன் காரணமாக, அமெரிக்காவுக்குள் நுழைவதற்குத் தகுதியற்றவர் என அறிவித்தார்.

ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகளை மதிக்கும் நாடுகள் மேலே பட்டியலிடப்பட்டுள்ள பிரச்சார நோக்கங்களை அடைய உதவ முன்வர வேண்டும் என்று இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

பிரச்சார மனு

1948 இல் பிரித்தானியர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றதில் இருந்து அடுத்தடுத்து வந்த இலங்கை அரசாங்கங்களால் இனப்படுகொலை நோக்கத்துடன் கொடூரமான ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்குப் பரிகார நீதி கிடைப்பதற்கு, புலம்பெயர் தமிழ் மக்கள் வாழும் நாடுகள், ஐ.நா, ஐ.நாவின் உறுப்பு நாடுகள், சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள், பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் ஆகிய அனைவரையும் ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இலங்கையின் 74வது சுதந்திர தினமான 04 பெப்ரவரி 2022 அன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட “இலங்கைப் போர்க் குற்றவாளிகள் மீதான பகிரங்க தடை” பிரச்சாரத்தில் இணையுமாறு உலகத் தமிழ் அமைப்புகளையும், உண்மை, மனித உரிமைகள் மற்றும் நீதியை நிலைநாட்டும் பிற நிறுவனங்களையும் இருகரம் நீட்டி அழைக்கிறோம்.

இலங்கை மீதான OHCHR விசாரணை அறிக்கையில் (OISL) பட்டியலிடப்பட்டுள்ள நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் போர்க் குற்றவாளிகள் என பட்டியல் இடப்பட்ட பெயர் விபரம்.

1. மஹிந்த ராஜபக்ஷ – பிரதமர், அப்போதைய ஜனாதிபதி மற்றும் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி

2. கோட்டாபய ராஜபக்ச – ஜனாதிபதி, முன்னாள் பாதுகாப்பு செயலாளர்

3. ஜெனரல் சரத் பொன்சேகா

4. லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா

5. மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே

6. மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன

7. மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க

8. மேஜர் ஜெனரல் நந்த மல்லவாராச்சி

9. மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ்

10. மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய

11. பிரிகேடியர் பிரசன்ன சில்வா

12. பிரிகேடியர் நந்தன உடவத்த

13. பிரிகேடியர் சாகி கல்லகே

14. கேணல் ஜி.வி. ரவிப்ரியா

15. அட்மிரல் வசந்த குமார் ஜயதேவ கரன்னாகொட

16. அட்மிரல் திசர எஸ்.ஜி.சமரசிங்க

17. அட்மிரல் திஸாநாயக்க விஜேசிங்க ஆராச்சிலாகே சோமதிலகே திஸாநாயக்க

18. சி.என்.வகிஷ்டா

Posted in Uncategorized

13 ஆம் திருத்தச் சட்டம் தேவைதானா? – தி.திபாகரன்

“இலங்கையில் தமிழர்களுக்கு அரசியல் பிரச்சனை கிடையாது. தமிழர்களுடைய பிரச்சனை பொருளாதார பிரச்சனை மட்டும்தான். அதனை வருகின்ற புதிய அரசியல் யாப்பின் ஊடாக உறுதி செய்து பொருளாதாரப் பிரச்சினையை தீர்த்து விடுவோம்”” என இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது கூறியிருந்தார்.

இதிலிருந்து இலங்கை அரசாங்கம் 13ஆம் திருத்தச் சட்டத்தை நீக்குவதை குறிக்கோளாகக் கொண்டுள்ளது என்பது புலனாகிறது. அந்த அடிப்படையில் இந்த 13ஆம் திருத்தச் சட்டத்தினால் இலங்கை அரசுக்கு இருக்கின்ற தடைகளும், நெருக்கடிகளும் என்ன என்பதுபற்றி நோக்குவது அவசியமானது.

எனவே மேற்கூறப்பட்ட கூற்றிலிருந்து இலங்கை அரசாங்கம் முன்வைக்கின்ற புதிய அரசியல் யாப்பில் தமிழ் மக்களுக்கு தீர்வு இல்லை என்பதை ஏற்கனவே திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்கள். இப்போது அதனை உறுதிப்படுத்தி அறிவிக்கப்பட்டுவிட்டது. எனவே இங்கு சிங்களப் பேரினவாதத்தின் பிரதான நோக்கமும் பிரச்சனையும் 13ஆம் திருத்தச் சட்டத்தை இல்லாது ஒழிப்பதுதான்.

ஏனெனில் 13 ஆம் திருத்தச் சட்டம்தான் அந்நிய தலையீட்டினால் உருவாக்கப்பட்ட ஒரு திருத்தச் சட்டமாகும். எனவே இலங்கை மீது அந்நிய தலையீட்டை அதுவும் குறிப்பாக இந்திய தலையீட்டு அல்லது மேற்கு உலகத்தின் தலையீட்டையோ ஏற்படுத்தவல்ல. அதனால்த்தான் இந்த 13 ஆம் திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்பதில் அவர்கள் குறியாக இருக்கிறார்கள்.

இன்றைய அரசியல் யாப்பினை மாற்ற வேண்டிய தேவை சிங்கள தேசத்திற்கு ஏன் வந்தது?. என்னவெனில் அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று 13ஆம் திருத்தச் சட்டம். மற்றையது விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறை. இந்த இரண்டும் சிங்கள தேசத்திற்கு நன்மை பயக்கக் கூடியது அல்ல. அது சிங்கள இனவாத பசிக்கு தடைக்கல்லாக இருக்கிறது. இந்த இரண்டையும் ஒழிப்பதன் ஊடாக சிங்கள பௌத்த பேரினவாதம் இலங்கை முழுவதையும் தன்னுடைய முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.

13ஆம் திருத்தச் சட்டத்தை நீக்கிவிட்டால் இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்தியாவினுடைய தொடர்பையும், தலையீட்டையும் முற்றாகத் தடுத்து விடமுடியும். அத்தோடு அமெரிக்காவோ அல்லது மேற்குலகமும் சார்ந்த அந்நியத் தலையீடுகளையும் தடுத்துவிட முடியும். இதனைப் புரிந்து கொண்டுதான் இந்தியா 13வது திருத்தச் சட்டத்துக்கு தமிழ் அரசியல் தலைவர்களின் ஆதரவைப் எதிர்பார்த்து காய்களை நகர்த்த முனைகிறது. அதற்கு இன்னொரு பக்கமும் உண்டு. புவிசார் அரசியலில் 13ஆம் திருத்தச் சட்டமும் அதற்கு மூலாதாரமான இந்திய இலங்கை ஒப்பந்தமும் இந்தியாவுக்கு அவசியமான தேவையாகவும் உள்ளது என்பதும் இங்கு மறுக்கமுடியாத உண்மையே.

ஆனால் சிங்களப் பேரினவாதம் 13ஆம் திருத்தச் சட்டத்தை நீக்குவதன் மூலம் தமிழர்களுக்கு என்று ஒரு அரசியல் கட்டமைப்பு இருக்கக் கூடாது என்பதிலும், தமிழர்களுக்கு எந்த ஒரு வகையிலும் பிரதேச ரீதியிலான அரசியல் அதிகாரமும் கிடைக்க கூடாது என்பதிலும் உறுதியாக செயற்படுகிறது. “” தமிழர்களுக்கு அரசியல் பிரச்சினையும் இல்லை, அரசியல் தீர்வு தீர்வும் தேவையில்லை”” என்பதும், உள்நாட்டுத் தீர்வு என்பதனை நிலைநிறுத்தி தமிழர்களுக்கு பொருளாதார பிரச்சினை மட்டுமே என வரையறுத்து தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்க வேண்டிய கட்டாயத்தையும் இல்லாமல் செய்துவிட முடியும்.

இந்த 13 வதை இல்லாதொழிப்பது இலகுவான காரியமல்ல. எனவே அதனை நீக்குவதற்கு தமிழர்களுடைய உதவி தேவைப்படுகிறது. அதற்கு 13ஆம் திருத்தச்சட்டம் தேவையற்றது என தமிழர்களையும் ஏற்றுக்கொள்ளச் செய்ய வேண்டும். அவர்களை இதற்கு எதிராகப் போராடவும் தூண்டவேண்டும். தமிழர்கள் போராடினால் அதனை நியாயமானதாக வெளி உலகத்துக்கு காட்டி 13ஆம் திருத்தச் சட்டத்தை இல்லாது ஒழித்திட முடியும். அதற்காகத்தான் அண்மையில் ராஜபக்ச அணியிலிருந்து ஜி. எல். பீரிஸவும் , கெஹெலிய ரம்புக்கலவும் “” 13ஆம் திருத்தச்சட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவோம் “” என ஒரு பொய்யான பரப்புரை ஒன்றைத் தொடங்கி இருக்கிறார்கள். இந்த சதிகார திட்டத்தின் பின்னணியில் கஜேந்திரகுமார் அணியினர் தற்போது போராடத் தொடங்கிவிட்டனர். தை 31ம் திகதி நல்லுார் கிட்டு புங்காவில் நடத்திய போராட்டம் சிங்கள தேசத்திற்கு மேலும் வலுச்சேர்த்துக் கொடுத்துள்ளது.

இன்றைய விகிதாசாரத் தேர்தல் முறையின் கீழ் முஸ்லிம்கள் பத்துக்கு மேற்பட்ட நாடாளுமன்ற ஆசனங்களை கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் அவர்கள் மூன்றாவது அரசியல் சக்தியாக விளங்குகிறார்கள். எனவே விகிதாசார பிரதிநிதித்துவ முறைமையை ஒழித்து தொகுதிவாரி பிரதிநிதித்துவ முறைக்கு மாற்றுவதன் மூலம் தென்னிலங்கையில் சிதறி வாழும் 60% முஸ்லிம்களின் நாடாளுமன்ற ஆசனங்களை இல்லாதொழிக்க முடியும். அதேவேளை அவர்கள் ஒரு சிங்களக் கட்சியின் கீழ் போட்டியிட்டுத்தான் அங்கு வெற்றி பெறமுடியும். எனவே இங்கே முஸ்லீம் தலைமைத்துவம் இல்லாது ஒழிக்கப்பட்டுவிடும். அதேவேளை கிழக்கிலும் வடக்கிலும் குறிப்பிட்ட சில பகுதிகளில் செறிந்து வாழ்கின்ற 40 விகித முஸ்லீம்களால் தொகுதிவாரி தேர்தல் முறையில் அதிகபட்சம் மூன்று பாராளுமன்ற பிரதிநித்துவத்தை மட்டுமே பெறமுடியும் என்பதை சிங்கள தேசம் நன்கு புரிந்து கொண்டுள்ளது. எனவே தமிழ் பேசும் மக்களாகிய முஸ்லிம்களுடைய பாராளுமன்ற பிரதிநித்துவத்தை இதன்மூலம் குறைத்து அரசியல் சக்தியற்றவர்களாக ஆக்க முடியும்.

இத்தகைய அரசியல் சதுரங்க விளையாட்டில் சரியான தீர்வினை மேற்கொண்டு வாய்ப்புகளை சாதகமாக பயன்படுத்தி வரலாற்றில் என்றும் மீட்க முடியாத படுபாதாளத்தில் தமிழ் மக்கள் வீழ்த்தப்படுவர். இதனை சர்வதேச ரீதியாக தாய்வான் எதிர்நோக்கும் அரசியல் நெருக்கடியில் இருந்து மேலும் விளங்கிக் கொள்ளமுடியும்.

1945ஆம் ஆண்டு ஐநா சாசனத்தின்படி சீனா உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கு வீட்டோ அதிகாரம் வழங்கப்பட்டது. ஆனால் 1949ஆம் ஆண்டு சீனப் புரட்சியின் போது சீனப் பெரும் நிலப்பரப்பை மாவோ தலைமையிலான கம்யூனிஸ்ட்கள் கைப்பற்றிக்கொண்டனர். சாங்காய்செக் (Chiang Kai-shek) அரசு 10 லட்சத்துக்கு மேற்பட்ட சீன மக்களுடன் சீன இராணுவ மற்றும் அதிகார மையத்துடன் போமாசா தீவுக்குள் சென்று முடங்கிக் கொண்டது. அன்று போமாசாதீவின் மொத்த குடித்தொகை ஒன்றரைக் கோடியாக இருந்தது. அதே நேரத்தில் மாவோ தலைமையிலான நெஞ்சீனாவில் 100 கோடி மக்கள் இருந்தனர். ஆனால் அரசியல் சாசனத்தின்படி சாங்காய்செக் தலைமையிலான அரசை சீன (Republic of China) அரசாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.

அதே நேரத்தில் அமெரிக்க சார்ந்த மேற்குலகம் Chiang Kai-shek தலைமையிலான அரசை சீனஅரசு(Republic of China) என பேணவேண்டிய நிலை நீடித்து வந்தது. ஏனெனில் கம்யூனிசம் உலகில் பரவாமல் தடுப்பதற்கு கம்யூனிஸ்ட் சீனாவை தற்காலிகமாக தடுத்து வைத்திருக்க வேண்டிய தேவை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்கு இருந்தது. இதனல் ஐநா உறுப்புரிமையும் Republic of China என்ற பெயரில் தாய்வான் அரசே பெற்றுக் கொண்டு இருந்தது. அதனால் 1971 ஆம் ஆண்டு வரை செஞ் சீனாவால் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாமல் வெற்றிகரமாக தடுத்து வைத்திருந்தார்கள் என்பது இங்கே பச்சை உண்மையாகும்.

அதேநேரத்தில் 1970களில் திறந்த பொருளாதாரக் கொள்கையில் பெரும் சந்தை வாய்ப்பை அமெரிக்கா தேடியது. அதற்கு 100 கோடி மக்களைக் கொண்ட செஞ்சீனாவில் பெரும் சந்தைவாய்பு இருந்ததனால் சீனாவுடன் இரகசிய உறவை வளர்ப்பதற்கு அமெரிக்கா முயன்றது. அதனைத் தொடர்ந்து 1971 ஆம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் சீனாவுக்குவிஜயம் செய்து சீனவுடனான உறவை பலப்படுத்தி தொடங்கினார். அதற்கு இன்னுமொரு காரணமும் இருந்தது. சோவியத் யூனியனை வீழ்த்துவதற்கு சீனாவை பயன்படுத்த அமெரிக்கா முயன்றது. இந்த அரசியல் சதுரங்கத்தில் தனக்குரிய பாத்திரத்தை சரியாக விளையாட தாய்வான் தலைவராக இருந்த Chiang Kai-shek தவறிவிட்டார். அவர்”” ஒரு சீனாதான் “” என பேசத் துவங்கினார். ஆனால் உண்மையில் Chiang Kai-shek இரண்டு சீன அரசுகள் என்று முடிவெடுத்திருந்தால் இன்று ஐநாவில் உறுப்புரிமை உடைய நாடாக தாய்வான் இருந்திருக்கும்.

ஆனால் மாறாக “‘ஒற்றைச் சீனா”” என்ற வறட்டுப் பிடிவாத அரசியல் கைக்கொள்ளப்பட்டதன் விளைவு 1971ஆம் ஆண்டு ஐநா தீர்மானம் 2758 படி உண்மையான சீனாவாக செஞ்சீனாவை (People’s Republic of China) ஐநா ஏற்றுக் கொண்டுவிட்டது. அதன் மூலம் People’s Republic of China தான் உண்மையான சீனாவாக ஏற்றுக் கொள்ளப்பட்டமையினால் தாய்வான் தனது ஐநா உறுப்புரிமையை இழந்தது. செஞ்சீனா உறுப்புரிமையை பெற்றதோடு மட்டுமல்ல வீட்டோ அதிகாரத்தையும் பெற்றுக் கொண்டுவிட்டது. இவ்வாறு அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டதன் மூலம் தாய்வான் பின்னர் அதற்கான தகுதியை இழந்துவிட்டது. தாய்வான் மீண்டும் ஐநாவில் இணைய முடியாதவாறு சீனா தன்னுடைய வீட்டோ அதிகாரத்தை கையில் கொண்டுள்ளது.

உலகில் 15 நாடுகளின் அங்கீகாரம் தாய்வானுக்கு இருக்கின்ற போதிலும் இன்று தாய்வான் சட்டரீதியாக உலக நாடுகளுடன் ஒப்பந்தங்களைச் செய்ய முடியாத நிலையில் இருக்கின்றது. ஆனால் ஜி7 நாடுகள் தாய்வானை ஏற்றுக்கொள்கின்றன. உலகின் பொருளாதாரதர வரியையில் 22வது நிலையில் தாய்வான் உள்ளது.

தொழில்நுட்பத்தில் அதி உச்சம் வளர்ச்சி அடைந்த தாய்வான் இன்று இரண்டரை கோடி மக்களைக் கொண்டுள்ளது. தாய்வான் கடந்த 74 ஆண்டுகளாக நடைமுறை அரசாக தொழிற்படுகின்றது. ஆனால் சர்வதேச ரீதியாக ஒரு சட்டரீதியான இறைமையுள்ள நாடாக அங்கீகரிக்கப்படவில்லை. இன்று வரை உலகில் சிறிய 15 நாடுகள் மாத்திரமே அங்கீகரித்துள்ளன.

அதே நேரத்தில் மேற்குலகம் தமது நலன் சார்ந்து சட்டரீதியற்ற விதத்திலேயே தாய்வான் உடன் ஒப்பந்தங்களையும் வர்த்தக உறவுகளையும் கொண்டிருப்பதை காணமுடிகிறது. எப்போதும் சீனாவின் இராணுவ ஆக்கிரமிப்புக்கும், மேலாதிக்கத்துக்கும் பயந்து நிலையிலேயே தாய்வான் வாழ்ந்து கொண்டிருக்கிறது. தென் கொரியா, ஜப்பான், அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் இல்லையேல் அல்லது இந்த மூன்று நாடுகளும் தாய்வானை கைவிடும்பட்சத்தில் மறு கணத்தில் சீனாவினால் தாய்வான் விழுங்கப்பட்டிட முடியும்.. இத்தகைய ஒரு அபாயகரமான நிலைக்கு இட்டுச் சென்றது சாங்காய்செக் அவர்கள் மேற்கொண்ட முட்டாள்தனமான அரசியல் முடிவுகள்தான் காரணம். இதனால் சர்வதேசரீதியாக தான் இழந்த உரிமையை இப்போது தாய்வான் மீட்க முடியாமல் இருக்கிறது. இதைப்போன்ற ஒரு ஒத்த நிலைமை இலங்கைத்தீவில் தமிழ் மக்களுக்கும் ஏற்படுவதற்கான சூழல் இப்போது தென்படுவது மிக ஆபத்தானதும், அச்சத்துக்கு உரியதாகும்.

1930ஆம் ஆண்டு டொனமூர் அரசியல் சட்ட சீர்திருத்த காலத்திலிருந்து 1987 ஆம் ஆண்டு வரையான 57 ஆண்டு காலமாக தமிழ் மக்கள் தமது தேசிய அபிலாசைகளை அடைவதற்காக மேற்கொண்ட சாத்வீகப் போராட்டமும், ஆயுதப் போராட்டமும் , அதனால் சிந்தப்பட்ட இரத்தமும் போராளிகளினதும் மக்களினதும் இழப்புக்களின் விளைவாக பெறப்பட்ட ஒரு அடைவுதான் 13ஆம் திருத்தச் சட்டம் ஆகும். இந்த அடைவு எந்த அரசினது கொடையோ, தானமோ அல்ல. தமிழ் மக்களின் துன்ப துயரங்களுக்கு கிடைத்த ஒரு சிறு பரிசு. ஆகவே இது இந்திய இலங்கை அரசியல் நலன்களுடன் மாத்திரம் அல்லது அவர்களுடைய சலுகைகள் அல்லது அவருடைய பரிசாக தமிழ் மக்களுக்கு கிடைக்கவில்லை. தமிழ் மக்களின் இரத்தத்திலும் பிணக் குவியல்களின் மீதும் உருவாக்கப்பட்ட ஒரு அற்ப சொற்பமான தீர்வுத்திட்டம்தான் என்பதை கருத்தில் கொள்ளவேண்டிய அதேவேளை இதனையும் முட்டாள்தனமாக இழந்துவிடக்கூடாது.

இப்போது இருக்கின்ற 13ஆம் திருத்தச் சட்டம் என்பது தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வாகாது. ஆனால் அது நல்லதோ, கெட்டதோ, பயனுடையதோ, பயனற்றதோ எப்படி இருப்பினும் இந்திய-இலங்கை ஒப்பந்தம் என்ற அடிப்படையில் சர்வதேச விதிமுறைக்கு உட்பட்ட சர்வதேச அங்கீகாரத்தின் ஊடாக உருவாக்கப்பட்ட ஒரு ஒப்பந்தமாகும்.

இந்த இலங்கை இந்திய ஒப்பந்தம் இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதலாவது பகுதி நேரடியாக இலங்கை- இந்தியா ஆகிய இரண்டு நாடுகளின் நலன்கள் சார்ந்த பகுதியாகஉள்ளது அதில் குறிப்பாக இந்தியாவின் பாதுகாப்பு நலன்கள் சார்ந்து இலங்கையின் துறைமுகங்களும் நிலப்பகுதியும் வேறு எந்த அந்நிய நாடுகளின் இராணுவ, புலனாய்வுப் பயன்பாட்டுக்கும் அனுமதிக்கக் கூடாது என்பது பற்றியதாகும்.

அதனை அடுத்து ஈழத்தமிழர் பிரச்சினை பற்றியது இரண்டாவது பகுதியாக உள்ளது. இத்தகைய ஒரு சர்வதேச அரசியல் ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்டதுதான் 13 ஆம் திருத்தச் சட்டம் ஆகும். இந்தச் சட்டம் தமிழ் மக்களுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பு அளிக்கக்கூடிய அல்லது தமிழ் மக்களை சிங்கள அரசு அழிப்பதற்கு தடைக்கல்லாக இருக்கக்கூடிய ஒரு துரும்பாக இருக்கின்றது. அந்த சட்டத்தை இல்லாது ஒழிப்பதை தமிழ் மக்கள் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

அதே நேரத்தில் 13ஆம் திருத்தச் சட்டம் என்பது தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வும் கிடையாது. அது தமிழ் மக்களுக்கு எந்த ஒரு தீர்வையும் தரப் போவதும் இல்லை. ஆயினும் இன அழிப்புக்கு எதிரான ஒரு குறைந்தபட்ச தடைக்கல்லாக உண்டு.

சிங்களப் பேரினவாதம் தமிழ் மக்களுக்கு எந்த ஒரு உரிமையையும் அல்லது குறைந்தபட்ச சலுகையைதானும் கொடுக்க தயாராக இல்லை. ஆனால் இந்த 13ஆம் திருத்தச் சட்டம் என்பது சிங்களப் பேரினவாதத்தின் தொண்டையில் சிக்கிய முள்ளாக உள்ளது. எனவே இவ்வாறு சிங்களத்தின் தொண்டையில் சிக்கியிருக்கும் இந்த முள்ளானது தமிழர்களுக்கு ஒருவகையில் சாதகமானது. அதனை அப்படியே வைத்திருப்பதுதான் தமிழர்களுக்கு ஒரு குறைந்தபட்ச பாதுகாப்பை கொடுக்க வல்லதுமாகும். எனவே சிங்களத்தின் தொண்டையில் சிக்கிய 13 என்கின்ற முள்ளை அகற்றுவதற்கு தமிழர் தரப்பு முயற்சிக்கக் கூடாது. அதனை அகற்றினால் சிங்களப் பேரினவாதம் பெரும் பசிக்கு தமிழ் மக்கள் இரையாக்கப்படுவர். சர்வதேச ரீதியிலான சர்வதேச விதிமுறைக்கு உட்பட்ட ஒரு ஒப்பந்தத்தின் மூலம் பெறப்பட்டதை இழந்தால் மீண்டும் அதைப் பெறமுடியாது. எனவே 13 ஆவதை அகற்றுவது என்பது தமிழ் மக்களை சிங்களப் பேரினவாதத்திற்கு இரையாக்குகின்ற நண்பனின் வடிவிலான எதிரியின் செயற்பாடாகவே அமையும்.

எனவே இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு எந்த அரசியல் அதிகாரத்தையும் கொடுக்கத் தயாரில்லை என்பதுவும் பிரதேச ரீதியாக தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்ற எந்த பேச்சுக்கும் இடமில்லை என்பதையும் அவர்கள் திட்டவட்டமாக தங்கள் கொள்கை பிரகடனங்களில் வெளியிட்டு விட்டார்கள். ஆயுதப் போராட்டத்தின் விளைவால் ஏற்பட்ட, நிர்ப்பந்தத்தின் மூலமாக உருவாக்கப்பட்ட 13வது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிக்க சிங்கள தேசம் கங்கணம் கட்டி நிற்கிறது. அவ்வாறு சிங்கள தேசத்தின் இருப்பை நிறைவேற்றக் கூடிய வகையில் அதற்கு ஆதரவாக 13ஆம் திருத்தத்தை தமிழ் மக்கள் தரப்பிலிருந்து யார் எதிர்த்தாலும் அவர்கள் சிங்களப் பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரலில் கோத்தபாயவின் கட்டளையில் செயற்படுகிறார்கள் என்பது புலனாகின்றது. எனவே இந்த 13 ஆவதை எதிர்ப்பவர்கள் தமிழ் மக்களுக்குத் துரோகம் செய்கிறார்கள் என்றுதான் சொல்லு வேண்டும்.

13ஆவது திருத்தத்தை எதிர்த்து அதனை நீக்க வேண்டும் என்று கூறுவதைவிட தமிழ் மக்களுக்கு என்ன வேண்டும் என்று கோரி, அதாவது சமஸ்டி வேண்டும் என்று கோரி போராடுவதுதான் இன்றைய காலத்தின் அவசரத் தேவையாகும். 13ஆம் திருத்தத்தை நீக்காது அதனை மேற்கோள்காட்டி அரசியல் யாப்பில் சமஸ்டி ஆட்சி முறையை உருவாக்க போராட வேண்டுமே தவிர ராஜபக்சக்கள் விரும்புகின்றவாறு 13 ஆம் சட்டத்திருத்தத்தை நீக்குமாறு கோரி போராடுவது ராஜபக்ஷாக்களுக்கும் இன வாதத்திற்கும் செய்யும் சேவையாக அமைவதுடன் தமிழ் மக்களுக்கு இழைக்கும் துரோகமாகவும் அமைந்துவிடும்.