ஆறு முக்கிய அமைச்சர்களின் பொறுப்புக்களில் மாற்றம்

ஜனாதிபதியால் நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், புதிய நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன. எதிர்வரும் 18 ஆம் திகதிக்கு முன்னர் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த புதிய அமைச்சரவை மாற்றத்தின் போது ஆறு முக்கிய அமைச்சர்களில் பொறுப்புகளில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் கூறுகின்றன.

அத்துடன் ராஜாங்க அமைச்சர்களின் பதவிகளிலும் சில மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. தனிப்பட்ட பயணமாக அமெரிக்கா சென்றிருந்த நிதியமைச்சர் பசில் ராஜபக்ச  நேற்றைய தினம் நாடு திரும்பினார்.

அவரது வருகையின் பின்னர் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.

புதிய ஆண்டில், புதிய மாற்றங்களுடன் புதிய பயணத்தை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச,  ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கடந்த வாரம் கோரிக்கை விடுத்திருந்தார்.

அமைச்சரவை மாற்றமும் இதன் பிரதிபலனே எனக் கூறப்படுகிறது.

இதனிடையே செயற்திறனில் பலவீனமாக இருக்கும் அரசாங்கத்தின் 8 முன்னணி நிறுவனங்களின் தலைமை பதவிகளிலும் மாற்றங்களை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கம், புதிய ஆண்டில் புதிய பயணத்தை ஆரம்பிக்கும் அடிப்படை நடவடிக்கையாக இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படடவுள்ளன.

கோவிலில் சிலைகள் உடைப்பு! குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் : இராதாகிருஷ்ணன்

அக்கரப்பத்தனை நகரிலுள்ள கோவிலில் சாமி சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு உண்மை கண்டறியப்பட வேண்டும் எனவும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மலையக மக்கள் முன்னணியின் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கிடையிலான கூட்டமொன்று இன்று (02.01.2022) தலவாக்கலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,

“புதுவருடம் பிறந்தாலும் இன்னமும் வழி பிறக்கவில்லை. இன்று எந்த வரிசையில் நிற்கவேண்டி வருமோ என்ற அச்சத்துடன் தான் பொழுது விடிகின்றது. அரசு வங்குரோத்து நிலைக்கு வந்துள்ளது. நாடு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

எனது 32 வருடகால அரசியல் வாழ்வில் எந்தவொரு அரசும், இப்படியானதொரு வீழ்ச்சியைக் கண்டதில்லை. ஜனாதிபதி செயலாளரை மாற்றினர். தற்போது மேலும் பல அரச அதிகாரிகளை மாற்ற தயாராகிவருகின்றனர். இதற்கிடையில் அமைச்சரவையும் மாற்றப்படவுள்ளதாம். இப்படி ஆட்சிகளை மாற்றிக்கொண்டிருந்தால் தீர்வு கிட்டுமா?

அக்கரப்பத்தனையில் உள்ள கோவில் உடைக்கப்பட்டுள்ளது. சுமார் 60, 70 சிலைகள் இனந்தெரியாத நபர்களால் தேசமாக்கப்பட்டுள்ளன. இது மிகவும் மோசமான செயலாகும். இதற்கு முன்னர் லிந்துலை பகுதியில் மாதா கோவிலின் சிலை சேதமாக்கப்பட்டது. தற்போது இந்து கோவில் இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இனங்களுக்கிடையில் முறுகலை ஏற்படுத்தவா இவ்வாறான சம்பவங்கள் திட்டமிட்ட அடிப்படையில் இடம்பெறுகின்றன என்ற சந்தேகமும் எழுகின்றது.

யாழ்ப்பாணத்தில் சிலைகள் திருடப்பட்டு, வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளன. எனவே, இதன் பின்னணியில் குழுவொன்று செயற்படுகின்றதா என்பதும் கண்டறியப்பட வேண்டும். அரவிந்தகுமார் நல்லவர் தான். ஆனால் அவர் இருக்கும் இடம்தான் சரியில்லை. 2013 இல் மாகாணசபைத் தேர்தலில் தோற்றார்.

ஆனால் 2015 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றார். அதற்கு அவர் அங்கம் வகித்த மலையக மக்கள் முன்னணியும், ஐக்கிய தேசியக்கட்சியுமே காரணம். 2020 இலும் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதற்கும் அவர் மலையக மக்கள் முன்னணியில் அங்கம் வகித்ததே காரணம்.

செந்தில் தொண்டமானுக்கு செல்வாக்கு இருந்தும், பண பலம் இருந்தும் நாடாளுமன்றம் தெரிவாகவில்லை. ஏனெனில் அவர்கள் கூட்டணி அமைத்து போட்டியிட்ட கட்சி தொடர்பில் மக்கள் மத்தியில் விமர்சனம் இருக்கின்றது. இந்நிலையில் நுவரெலியாவில் வந்து போட்டியிடுவேன் என அரவிந்தகுமார் அறிவித்துள்ளார். வரட்டும் பார்ப்போம்.

தமிழக மீனவர்களுக்கும், யாழ்ப்பாண மீனவர்களுக்கும் இடையில் முறுகல் நிலைமை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து மீன்பிடிக்க வருபவர்கள் தமிழர். அதேபோல யாழ்ப்பாணத்தில் இருந்து மீன்பிடிக்க செல்பவர்கள் தமிழர்.

எனவே, தமிழர்கள் மோதிக்கொண்டால் அதன்மூலம் மற்றைய தரப்புக்குதான் நன்மை. இந்த விடயத்தையும் அரசு திட்டமிட்டு செய்கின்றதா என்ற சந்தேகமும் எமக்கு இருக்கின்றது. எனவே, நாம் சிந்தித்து செயற்பட வேண்டும் எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

பேராயர் டெஸ்மண்ட் டுட்டு – அநீதிக்கெதிரான ஒரு குரல் மௌனித்தது

தென்னாபிரிக்க நிறவெறி நிறுவனக் கட்டமைப்பிற்கெதிராக, கறுப்பின அடக்குமுறைக்கெதிராக முற்போக்குச் சிந்தனையோடு போராடிய ஒரு விடுதலைப் போராளியின் பயண நிறைவில் நீதிக்கும் அமைதிக்குமான குருக்கள், துறவிகள் வடக்கு-கிழக்கு ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்கின்றது.

அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“’அநீதியான சூழ்நிலையில் நடுநிலையாளனாக இருப்பது என்பது ஒடுக்குமுறையாளனின் பக்கம் நிற்பதாகும். யானை எலியின் வாலில் தனது காலை வைத்துக் கொண்டு தான் நடுநிலையாளன் என்று சொல்லுவதை, எலி ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.’ -டெஸ்மண்ட் டுட்டு

நிறுவன மயப்படுத்தப்பட்ட நிறவெறி அடக்குமுறைக்கெதிராக 1970 களிலிருந்து அடக்குமுறைக்குட்படுத்தப்பட்ட பெரும்பான்மை மக்களின் குரலாகவும், அம்மக்களோடு பயணித்து மக்களின் விடுதலைக்காக உழைத்து ‘வானவில் தேசமான’ தென் ஆபிரிக்காவை கட்டியெழுப்பிய தேசப்பிதாக்களில் ஒருவரான டுட்டுவின் மறைவு நிரப்பீடு செய்யப்படமுடியாதது.

தனது பட்டறிவின் மூலம் அடக்கப்பட்ட மக்களின் அரசியல் வேணவாவை விளங்கிக் கொண்டு அதற்காகவே கொள்கை ரீதியான நிலை எடுத்து தன்னை அடக்குமுறைக்குட்படுத்தப்பட்ட மக்களின் ஒரு பொதுப்படிமமாக கட்டமைத்துக் கொண்டவர். டுட்டுவின் அரசியல், அடக்குமுறைக்கெதிராக பல்வகை உத்திகளை விடுதலையை நோக்கிப் பயணிப்பதற்கு கையாண்டாலும் அவரது விமர்சனப் பகுப்பாய்வு நகைச்சுவையும், வன்முறையற்ற அணுகுமுறையும் மிகவும் முக்கியமானது. அதே உத்தியை விடுதலைக்குப் பின்னர் தென்னாபிரக்க தலைவர்கள் ஊழல்களில் சிக்கிய போதும் கையாண்டார் என்பது அவரது தலைமைத்துவத்திற்கான சிறந்த எடுத்துக்காட்டாகும்.

நிறவெறி, கிட்லரின் நாசிசத்திற்கு சமமானது எனக் குறிப்பிடடு;, ஐ.நா.சபையில் (1988) நிறவெறிக்கெதிராக தண்டனை அமுல்படுத்தாத மேற்குலக அரசியல்வாதிகளை நிறவெறியவர்கள் என சாடியதையும் வரலாறு நினைவு கூரும். பாதிக்கப்பட்ட-மக்கள்-மைய நீதிப் பொறிமுறை அணுகுமுறையே எதிர்காலத்தில் மீள் நிகழாமையை உறுதிப்படுத்தும் என்பது அவரது பட்டறிவாக இருந்ததை அவருடைய கருத்துக்களிலிருந்து அவதானிக்க முடிகின்றது.

சர்வதேச மூதவையின் தலைவராக இருந்த போது 2013 நவம்பரில் பொதுநலவாய மாநாடு சிறிலங்காவில் நடத்தமுடியாது என குரல் கொடுத்தவர்களில் டெஸ்மன் டுட்டுவும் ஒருவர். ]தமிழ்த்தேசிய நோக்கில் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்கள் என்ன சொல்லுகிறார்கள் என்பதைப் பொறுத்தே ‘தான் வழிநடத்தப்பட விரும்புவதாக’ குறிப்பிட்டு அவ்வாறே ஏனைய அரசாங்க தலைவர்களும் பொதுநலவாய மாநாட்டிற்கு போகக் கூடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து, பொதுநலவாய மாநாடு சிறிலங்காவில் நடத்தப்படக்கூடாது என்ற பகிஸ்கரிப்புக்கு சர்வதேச மூதவை ஊடாக வலுச் சேர்த்ததையும் ஈழத்தமிழினம் ஒரு போதும் மறக்காது.

ஈழத்தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் ‘சிறிலங்கா அரசாங்கம் நேர்மையாக செயற்படவில்லையெனில் சர்வதேச சமூகம் தன்னாலான முழு முயற்சிகளையும் முடுக்கி விட வேண்டும்’ என ஆணித்தரமாக இடித்துரைத்தவர். ‘அவ் உத்திகளில் பொதுநலவாய மாநாட்டு பகிஸ்கரிப்பும் ஒரு தந்திரோபாயம்’ எனக் குறிப்பிட்டார்.

தென்னாபிரிக்கா நாட்டின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழவின் தலைவராய் இருந்த போது, நிறுவனமயப்படுத்தப்பட்ட நிறவெறியில் நிகழ்ந்த, நிகழ்த்தப்பட்ட குற்றங்களை ஏற்றுக் கொள்ளுதலே எதிர்காலத்தை எதிர்கொள்வதற்கான ஒரே வழி எனக் குறிப்பிட்டதை தென்னாபிரிக்க வரலாறு சொல்லித் தந்திருக்கின்றது.

ஈழத்தமிழினப்படுகொலை மறுப்பு ஒரு போதுமே நல்லிணக்கத்திற்கு இட்டுச் செல்லமுடியாது. ஏனெனில் இனப்படுகொலை மறுப்பில் உண்மை சாகடிக்கப்படுகின்றது. உண்மையை ஏற்றுக் கொள்வதோடு அதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டுமென்பதில் மிகவும் ஆழமான நம்பிக்கை கொண்டிருந்த பேராயர், பல அரசியல் தலைவர்கள் நிறவெறி அரசோடு கைகோர்த்த போது அதை கடுமையாகச் சாடினார் என்பதற்கு 1984ல் அப்போதை ஐக்கிய இராச்சிய பிரதமராகவிருந்த மார்கிரட் தட்சருக்கு அவர் எழுதிய கடிதம் முழுச்சான்றாக அமையும். ‘ஐக்கிய இராச்சியம் தென்னாபிரிகக் பிரதமரை அரசியல் நோக்கங்களுக்காக உத்தியோகபூர்வமாக அழைத்திருப்பது, நாளாந்தம் நிறவெறி வன்முறைக்குப் பலியாகும் பல்லாயிரக்கணக்கான மக்களின் முகத்திலடிப்பதைப் போன்றது’ எனக் குறிப்பிட்டார்.

நடுநிலை அரசியலில் நம்பிக்கை இழந்த அவர் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பான நிலைப்பாட்டில் உறுதியாயிருந்தார். ஈழத்தமிழினப்படுகொலைக்கு சுயாதீன சர்வதேச விசாரணை மூலமே நீதி கிடைக்க முடியும் என்ற ஈழத்தமிழரின் கோரிக்கைக்கு வலுச் சேர்த்ததையும் ஈழத்தமிழினம் நினைவுகூரும்.

குறுகிய வரையறைகளைக் கடந்து மதத்திற்கு அப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி கிடைக்க வேண்டும் என்பதில் உண்மையாகவும் நேர்மையாகவும் ஈழத் தமிழருக்காக செயற்பட்ட ஒரு நண்பரை ஈழத்தமிழினம் இழந்து நிற்கின்றது.

ஈழத்தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்திற்கு ஆதரவு அளித்தது மட்டுமல்லாது சர்வதேச அரங்கில் அதற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தமையை நாம் நன்றியுடன் நினைவு கூருகின்றோம். அரசியல் தலைமைத்துவ வெறுமையில் அடக்குமுறைக்குட்பட்டோரின் குரலாக எழுந்த ஒரு குரல் மௌனித்துப் போய்விட்டது.”

புதிய ஆவண நகல் இன்று தயார்! – தலைவர்களின் முடிவுக்கு காத்திருப்பு

வடக்கு – கிழக்குத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், முஸ்லிம்கள் ஆகிய தமிழ் பேசும் தரப்புக்களின் ஒருமித்த நிலைப்பாட்டை, பொதுவான அபிலாஷைகளைப் பிரதிபலிக்கும் பொது ஆவணத்தைத் தயாரிக்கும் முயற்சியில் புதிய நகல் ஒன்று இன்றைய கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்த் தரப்புக் கட்சித் தலைவர்களின் பரிசீலனைக்கு அது வழங்கப்பட்ட பின்னர் தீர்மானம் எடுக்கப்படும். இன்று எம்.ஏ.சுமந்திரனின் இல்லத்திலுள்ள அவரது அலுவலகத்தில் முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை புதிய நகல் ஆவணம் தயாரிக்கும் முயற்சியில் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த முயற்சியில் எம்.ஏ.சுமந்திரன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி., ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளர் நிஸாம் காரியப்பர், புளொட் தலைவர் த.சித்தார்த்தன் எம்.பி., ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., ரெலோவின் பேச்சாளரும் இந்த முயற்சியின் இணைப்பாளருமான சுரேந்திரன் குருசாமி ஆகியோர் பங்குபற்றினர்.

புதிய ஆவண நகல் தயாரிப்புக்காக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. அனுப்பிவைத்த குறிப்பும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

* இந்த ஆவணத்தில் அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதற்கு அப்பாலும் செல்வோம் என 1987 முதல் இலங்கை – இந்தியத் தலைவர்கள் வழங்கிய உறுதிமொழிகள் நினைவூட்டப்பட்டுள்ளன.

* 13ஆவது திருத்தத்தில் வழங்கப்பட்டு, பின் கைவாங்கப்பட்ட, நடைமுறைப்படுத்தப்படாத அதிகாரப் பகிர்வு விடயங்களை நடைமுறைப்படுத்துவது இந்திய – இலங்கை அரசுகளின் கடப்பாடு என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

* சமஷ்டி அடிப்படையிலான தீர்வே இறுதி இலக்காக அமைய வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சுமார் மூன் று பக்கங்களைக் கொண்ட இந்த நகல் ஆவணத்தின் பிரதிகள் அனைத்துத் தமிழர் தரப்புக் கட்சிகளின் தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. அவர்களின் பிரதிபலிப்பை கவனத்தில் எடுத்து ஆவணம் இறுதி செய்யப்படும் எனத் தெரிகின்றது.

இன்றைய கூட்டத்துக்கு மனோ கணேசன் வராத நிலையில் இந்த ஆவணம் தொடர்பில் அவரின் அவதானிப்பு முக்கியமாக எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆவணத்தின் பிரதியைத் தம்முடன் எடுத்துச் சென்ற ரவூப் ஹக்கீம் எம்.பி., தமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்களுடன் விரிவாக உரையாடிய பின்னர் தமது பக்கக் கருத்துக்களைத் தெரிவிப்பார் எனவும் கூறப்பட்டது.

Posted in Uncategorized

தமிழ் – முஸ்லிம் மக்களின் ஒற்றுமை காலத்தின் கட்டாயம்: சம்பந்தன்

அரசியல் தீர்வை வென்றெடுக்கத் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ஒற்றுமை காலத்தின் கட்டாயம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் திட்டமிட்ட வகையில் இனமுறுகலை ஏற்படுத்தி சிங்களக் கடும் போக்குவாதிகள் முன்னெடுத்த அரசியலை மறக்க கூடாது என்றும் சுட்டிக்காட்டினார்.

ஆகவே வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் பேசும் மக்கள் கடந்தகாலத் துன்பியல் நிகழ்வுகளை மறந்துவிட்டு தீர்வை வென்றெடுக்க ஓரணியில் பயணிக்க வேண்டும் என்றும் இரா.சம்பந்தன் அழைப்பு விடுத்தார்.

இதன் அவசியத்தை உணர்ந்து முஸ்லிம் அரசியல்வாதிகள் செயற்பட வேண்டும் என்றும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

அதிக பணவீக்கம் பதிவாகியுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடம்!

தெற்காசிய பிராந்தியத்திலேயே அதிக பணவீக்கம் பதிவாகியுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடம் பெற்றுள்ளது.

2021 நவம்பரில் 9.9% ஆக இருந்த நாட்டின் பணவீக்க விகிதம் 2021 டிசம்பரில் 12.1% ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

சர்வதேச நாடுகளின் பணவீக்க விகிதத்தில் இலங்கை 20ஆவது இடத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

பொது இணக்க ஆவணம் தயாரிக்க தமிழ்ப் பேசும் கட்சிகள் உடன்பாடு!

இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகள், எதிர்பார்ப்புகளை ஒன்றுபட்டுப் பிரதிபலிக்கும் பொது ஆவணம் ஒன்றை மேலும் காலம் தாழ்த்தாமல் விரைந்து தயாரித்து முடிப்பது என்ற இணக்கப்பாட்டுக்கு தமிழ்ப் பேசும் மக்களின் கட்சித் தலைவர்கள் வந்துள்ளனர்.

தமிழ்த் தேசிக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் தலைமையில் அவரின் இல்லத்தில் நேற்று (31) மாலை 6 மணி முதல் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்குபற்றிய ரவூப் ஹக்கீம் (ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்), மனோ கணேசன் (தமிழ் முற்போக்குக்குக் கூட்டணி), எம்.ஏ.சுமந்திரன் (இலங்கைத் தமிழரசுக் கட்சி), செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ),தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் சார்பில் இச்செயற்பாட்டின் ஒருங்கிணைப்பாளர் குருசுவாமி சுரேந்திரன் தர்மலிங்கம் சித்தார்த்தன் (புளொட்) ஆகியோர் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

இந்தக் கூட்டத்தின் தீர்மானங்கள் குறித்து சுமந்திரன் வெளியிட்ட தகவல்கள் வருமாறு,

“ஐக்கியமாக நாங்கள் தொடர்ந்து செயற்பட வேண்டும் என்பதில் நம் அனைவருக்கும் இடையில் ஒத்த நிலைப்பாடு இருந்தது. அதில் மாற்றுக் கருத்து இல்லை. நாம் ஒன்றுபட்டு செயற்படுவது முக்கியம் என எல்லோரும் வலியுறுத்தினர்.

எல்லாத் தரப்பினருக்கும் இருக்கும் கரிசனைகளைக் கருத்தில் எடுத்து, இந்த ஆவணத் தயாரிப்பை வெகுவிரைவில் ஓர் இணக்கப்பாட்டுடன் நாம் முடிவுக்குக் கொண்டு வந்து, அதை வெளிப்படுத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது.

இது தொடர்பில் காலம் கடந்தாமல் துரிதமாகப் செயற்படுவதற்காக இன்று (1) முற்பகல் 11 மணிக்கு சுமந்திரன் இல்லத்தில் உள்ள அலுவலகத்தில் சிலர் திரும்பவும் கூடி இந்த ஆவணத்தை இறுதி செய்யும் செயற்பாட்டை முன்னெடுக்கத் தீர்மானித்து உள்ளதாகவும் எம்.ஏ.சுமந்திரன் இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

ஜனவரியில் மீண்டும் இந்தியா செல்கிறார் பசில்

விடுமுறைக்காக அமெரிக்கா சென்றுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ அடுத்த வருடம் ஜனவரி மாதம் 10 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

பூகோள மாநாட்டிற்காக இந்தியா செல்லும் நிதியமைச்சர் இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீடுகள் குறித்தும் கலந்துரையாடவுள்ளதாக உரிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரவு செலவுத் திட்ட விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது டிசம்பர் முதலாம் திகதி பசில் ராஜபக்ஸ இந்தியா சென்றிருந்தார்.

இந்த விஜயத்தின்போது திருகோணமலை எரிபொருள் களஞ்சியசாலையின் நவீனமயமாக்கல் , எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கிடைக்கவுள்ள நான்கு நிவாரணங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

நல்லூர் ஆலயத்தில் இன்று முதல் அமுலாகும் புதிய நடைமுறை

நல்லூர் ஆலயத்தில் இந்துமத பாரம்பரியங்களை பாதுகாக்கும் வகையில் புதிய நடைமுறை இன்று ஆலய நிர்வாக அதிகாரியினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அரைக் காற்சட்டை அணிந்து வரும் ஆண்கள் மற்றும் முழங்கால் தெரியும் வகையில் ஆடை அணிந்து வரும் பெண்களுக்கு ஆலய முகப்பில் சால்வை வழங்கப்படும் நடைமுறையே இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆலயத்துக்கு சால்வையை அணிந்து சென்று வழிபாடுகள் நிறைவடைந்த பின்னர் அதனை பை ஒன்றிலிட்டு வழங்கப்பட்ட இடத்திலுள்ள பெட்டியில் மீள வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது.

ஆலயத்தில் இந்துமத பாரம்பரியங்களை பாதுகாக்கும் வகையில் இந்த நடைமுறை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

இளஞ்செழியன் வடக்கிற்கு இடமாற்றம்!

அடுத்தாண்டுக்கான வடக்கு, கிழக்கு மாகாண மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான இடமாற்றம் அமுலுக்கு வரவுள்ளது.

தலைமை நீதியரசரினால் வழங்கப்படும் இந்த இடம்மாற்றம் எதிர்வரும் ஜனவரி ஐந்தாம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது. யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், திருகோணமலை குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டுள்ளார்.

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி டெனிஸ் சாந்தன் சூசைதாஸன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டுள்ளார்.

Posted in Uncategorized