அதிக பணவீக்கம் பதிவாகியுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடம்!

தெற்காசிய பிராந்தியத்திலேயே அதிக பணவீக்கம் பதிவாகியுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடம் பெற்றுள்ளது.

2021 நவம்பரில் 9.9% ஆக இருந்த நாட்டின் பணவீக்க விகிதம் 2021 டிசம்பரில் 12.1% ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

சர்வதேச நாடுகளின் பணவீக்க விகிதத்தில் இலங்கை 20ஆவது இடத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பொது இணக்க ஆவணம் தயாரிக்க தமிழ்ப் பேசும் கட்சிகள் உடன்பாடு!

இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகள், எதிர்பார்ப்புகளை ஒன்றுபட்டுப் பிரதிபலிக்கும் பொது ஆவணம் ஒன்றை மேலும் காலம் தாழ்த்தாமல் விரைந்து தயாரித்து முடிப்பது என்ற இணக்கப்பாட்டுக்கு தமிழ்ப் பேசும் மக்களின் கட்சித் தலைவர்கள் வந்துள்ளனர்.

தமிழ்த் தேசிக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் தலைமையில் அவரின் இல்லத்தில் நேற்று (31) மாலை 6 மணி முதல் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்குபற்றிய ரவூப் ஹக்கீம் (ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்), மனோ கணேசன் (தமிழ் முற்போக்குக்குக் கூட்டணி), எம்.ஏ.சுமந்திரன் (இலங்கைத் தமிழரசுக் கட்சி), செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ),தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் சார்பில் இச்செயற்பாட்டின் ஒருங்கிணைப்பாளர் குருசுவாமி சுரேந்திரன் தர்மலிங்கம் சித்தார்த்தன் (புளொட்) ஆகியோர் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

இந்தக் கூட்டத்தின் தீர்மானங்கள் குறித்து சுமந்திரன் வெளியிட்ட தகவல்கள் வருமாறு,

“ஐக்கியமாக நாங்கள் தொடர்ந்து செயற்பட வேண்டும் என்பதில் நம் அனைவருக்கும் இடையில் ஒத்த நிலைப்பாடு இருந்தது. அதில் மாற்றுக் கருத்து இல்லை. நாம் ஒன்றுபட்டு செயற்படுவது முக்கியம் என எல்லோரும் வலியுறுத்தினர்.

எல்லாத் தரப்பினருக்கும் இருக்கும் கரிசனைகளைக் கருத்தில் எடுத்து, இந்த ஆவணத் தயாரிப்பை வெகுவிரைவில் ஓர் இணக்கப்பாட்டுடன் நாம் முடிவுக்குக் கொண்டு வந்து, அதை வெளிப்படுத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது.

இது தொடர்பில் காலம் கடந்தாமல் துரிதமாகப் செயற்படுவதற்காக இன்று (1) முற்பகல் 11 மணிக்கு சுமந்திரன் இல்லத்தில் உள்ள அலுவலகத்தில் சிலர் திரும்பவும் கூடி இந்த ஆவணத்தை இறுதி செய்யும் செயற்பாட்டை முன்னெடுக்கத் தீர்மானித்து உள்ளதாகவும் எம்.ஏ.சுமந்திரன் இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

ஜனவரியில் மீண்டும் இந்தியா செல்கிறார் பசில்

விடுமுறைக்காக அமெரிக்கா சென்றுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ அடுத்த வருடம் ஜனவரி மாதம் 10 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

பூகோள மாநாட்டிற்காக இந்தியா செல்லும் நிதியமைச்சர் இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீடுகள் குறித்தும் கலந்துரையாடவுள்ளதாக உரிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரவு செலவுத் திட்ட விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது டிசம்பர் முதலாம் திகதி பசில் ராஜபக்ஸ இந்தியா சென்றிருந்தார்.

இந்த விஜயத்தின்போது திருகோணமலை எரிபொருள் களஞ்சியசாலையின் நவீனமயமாக்கல் , எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கிடைக்கவுள்ள நான்கு நிவாரணங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

நல்லூர் ஆலயத்தில் இன்று முதல் அமுலாகும் புதிய நடைமுறை

நல்லூர் ஆலயத்தில் இந்துமத பாரம்பரியங்களை பாதுகாக்கும் வகையில் புதிய நடைமுறை இன்று ஆலய நிர்வாக அதிகாரியினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அரைக் காற்சட்டை அணிந்து வரும் ஆண்கள் மற்றும் முழங்கால் தெரியும் வகையில் ஆடை அணிந்து வரும் பெண்களுக்கு ஆலய முகப்பில் சால்வை வழங்கப்படும் நடைமுறையே இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆலயத்துக்கு சால்வையை அணிந்து சென்று வழிபாடுகள் நிறைவடைந்த பின்னர் அதனை பை ஒன்றிலிட்டு வழங்கப்பட்ட இடத்திலுள்ள பெட்டியில் மீள வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது.

ஆலயத்தில் இந்துமத பாரம்பரியங்களை பாதுகாக்கும் வகையில் இந்த நடைமுறை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

Posted in Uncategorized

இளஞ்செழியன் வடக்கிற்கு இடமாற்றம்!

அடுத்தாண்டுக்கான வடக்கு, கிழக்கு மாகாண மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான இடமாற்றம் அமுலுக்கு வரவுள்ளது.

தலைமை நீதியரசரினால் வழங்கப்படும் இந்த இடம்மாற்றம் எதிர்வரும் ஜனவரி ஐந்தாம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது. யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், திருகோணமலை குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டுள்ளார்.

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி டெனிஸ் சாந்தன் சூசைதாஸன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டுள்ளார்.

Posted in Uncategorized

வடக்கு, கிழக்கை ஒருபோதும் இணைக்க முடியாது; அமைச்சர் தினேஷ்

இந்தியப் பிரதமருக்கு ஆவணம் அனுப்புவதால் வடக்கு, கிழக்கை ஒருபோதும் இணைக்க முடியாது என்றும் இதற்கு முஸ்லிம் மக்கள் அனுமதி வழங்கமாட்டார்கள் எனவும் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தைச் சுட்டிக்காட்டி தமிழ்க் கட்சிகள் பாரத பிரதமருக்கு ஆவணம் ஒன்றினை அனுப்ப திட்டமிட்டுள்ளமை குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

வடக்கு, கிழக்கு தமிழர்களின் தாயகமோ அல்லது முஸ்லிம்களின் தாயகமோ அல்ல என குறிப்பிட்ட அமைச்சர், இரு மாகாணங்களும் ஒரே நாட்டுக்குள்ளேயே அமைந்துள்ளன என்றும் குறிப்பிட்டார்.

எனவே, மாகாணங்களைப் பிரித்து எந்த இனத்தவர்களும் சொந்தம் கொண்டாட முடியாது என்றும் அனைவரும் ஒரே நாட்டின் பிள்ளைகள் என்றும் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் அன்று இணைந்திருந்தமையினாலேயே இனக்கலவரம் வெடிக்க ஆரம்பித்தது என்றும் வன்முறைகள் தொடங்கின என்றும் அவர் கூறினார்.

கடந்த காலத்தில் இடம்பெற்ற இந்தத் துன்பியல் நிகழ்வுகளைத் தமிழ்க் கட்சிகள் கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

Posted in Uncategorized

பஷில் பிரதமரானால் ஆளும் கூட்டணிக்குள் பாரிய பிளவு ஏற்படும் – வாசுதேவ நாணயக்கார

நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை இவ்வருடம் முதல் முறையாக செயற்படுத்த எதிர்பார்த்துள்ளோம். நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்கவுள்ளார் என வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றதாகும். அவ்வாறு நிகழ்ந்தால் அது கூட்டணிக்குள் பாரிய பிளவினை ஏற்படுத்தும் என நீர்வழங்கல்துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் கடந்த 2 வருடகாலமாக நாட்டு மக்களின் சுகாதார பாதுகாப்பினை உறுதிப்படுத்தியுள்ளது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.இரண்டு வருடங்களும் கொவிட் தாக்கத்துடன் நிறைவடைந்தன.

நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை கொவிட் தாக்க சவாலுக்கு மத்தியில் நிறைவேற்றியுள்ளோம்.இவ்வருடம் முதல் வாக்குறுதிகள் அனைத்தையும் பூரணப்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.

நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்கவுள்ளார் என வெளியாகியுள்ள செய்தி பொய்யானது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நலமாகவுள்ளார். அவர் அரசியலில் இருந்து ஓய்வுப்பெறுவதற்கு அவசியமில்லை. நாட்டு மக்கள் அவர் மீது நம்பிக்கை வைத்தே 2019ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.

நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றால் அது கூட்டணிக்குள் பாரிய பிளவினை ஏற்படுத்தும்.யுகதனவி மின்நிலைய ஒப்பந்தம் தொடர்பில் அவருக்கும் பங்காளி கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் சுமூகமான தன்மை கிடையாது.

ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளுக்கும், பிரதான ஆளும் கட்சிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகளுக்கு இக்காலப்பகுதியிலாவது தீர்வு பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

Posted in Uncategorized

வடக்கு – கிழக்கு மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றம்

வடக்கு – கிழக்கு மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 5ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்வகையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான வழமையான இடமாற்ற நடைமுறையின்கீழ் இந்த இடமாற்றம் தலைமை நீதியரசரினால் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், திருகோணமலை குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி டெனிஸ்சாந்தன் சூசைதாஸன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மலையக பிரச்சினைகளை சர்வதேச மட்டம்வரை உயர்த்த கூட்டு செயற்பாட்டிற்கு இறுதி பேச்சு – மனோ கணேசன்

இந்நாட்டில் வாழும் வடகிழக்கு, முஸ்லிம் தேசிய இனங்களுடன் கரங்கோர்த்து, சிங்கள சகோதர மக்களுக்கும் ஒரு செய்தியை சொல்லி, மலையக மக்களின் அபிலாஷைகளை தேசிய மற்றும் சர்வதேசிய மட்டங்களுக்கும் உயர்த்த வேண்டிய வரலாற்று கடமை தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் என்ற முறையில் எனக்கு இருக்கிறது.

சமீபத்து இந்திய வம்சாவளி மலையக தமிழ் இலங்கையர்களின் விவகாரங்களை தொடர்ந்தும் தோட்ட, பிரதேச, மாவட்ட பிரச்சினைகளாக மட்டும் முடக்காமல், ஏனைய சகோதர சமூகங்களது பிரச்சனைகளை போல் தேசிய மற்றும் சர்வதேசிய மட்டங்களுக்கு கொண்டு செல்வதே, இன்றைய தமிழ், முஸ்லிம் கட்சிகளின் கூட்டு செயற்பாட்டில் எங்கள் நோக்கங்களில் ஒன்றாக இருக்கிறது. இதை சரியாக புரிந்துக்கொண்டு மலையக இளைய தலைமுறையும், படித்த தலைமுறையும் எமது கரங்களை பலப்படுத்த வேண்டும்.

நாளை 31ம் கொழும்பில் ததேகூ தலைவர் சம்பந்தன் அவர்களது இல்லத்தில் நடைபெறும் இறுதி சுற்று பேச்சுகளில் இனிய இறுதி முடிவு எட்டப்படும் என நான் நம்புகிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

இது தொடர்பில், மனோ எம்பி தெளிவுப்படுத்தியதாவது,

இந்த கூட்டு செயற்பாட்டில் நாம் இடம்பெறாமல் இருந்திருந்தாலும்கூட நான் இதை வேறு அடிப்படைகளை செய்தே இருப்பேன். ஐநா அவைக்கு மலையக விவகாரங்களை கொண்டு செல்ல தீர்மானித்துள்ளேன் என நான் மூன்று மாதங்களுக்கு முன்பே சொன்னேன். இன்று இந்தியாவுக்கு ஞாபகப்படுத்தி, அமெரிக்கா, ஐரோப்பா, ஐநா என சகோதர மக்களுடன் கரங்கோர்த்து மலையக மக்களும் பயணிக்க வேண்டிய காலம் உதயமாகி உள்ளது.

இன்றைய நடவடிக்கை இலங்கையின் உற்ற நட்பு நாடான இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதுவதில் ஆரம்பிக்கிறது. இந்நாட்டின் சமீபத்து இந்திய வம்சாவளி மக்களையும் சேர்க்காமல் அல்லது இந்திய வம்சாவளி மக்களின் பிரதான அரசியல் இயக்கத்தின் பங்கு பற்றல் இல்லாமல், இந்திய பிரதமருக்கு கடிதம் எழுத முடியுமா?

ஆகவே, நாம் எங்கே இருக்க வேண்டுமோ, அங்கேயே இருக்கிறோம். அதுவும் நன்றாகவே இருக்கிறோம். நாம் எதை செய்ய வேண்டுமோ, அதையே செய்கிறோம். அதையும் நன்றாகவே செய்கிறோம். இந்நோக்கில் எம்முடன் கரங்கோர்க்கும் எவரையும் அரவணைக்க தயாராகவும் இருக்கிறோம்.

எழுபதுகளில் மறைந்த சௌமியமூர்த்தி தொண்டமான் தமிழ் கட்சிகளுடன் தமிழர் கூட்டணி கூட்டு தலைமையில் இடம் பெற்றார். வட்டுக்கோட்டை தீர்மானத்தை எடுக்கும் நிலைமைக்கு ஈழத்தமிழ் உடன்பிறப்புகள் தள்ளப்பட்ட பிறகு, தன்னிலை விளக்கம் அளித்து அந்த கூட்டில் இருந்து நாகரீகமாக பெரியவர் தொண்டமான் விலகினார். அதேபோல் பிற்காலத்தில் வடகிழக்கு சகோதரர்களின் தலைமையின் அழைப்பை ஏற்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் நண்பர் சந்திரசேகரனும், நானும் வடகிழக்கு சகோதரத்துடனான எங்கள் உறவுகளை தொடர்ந்தும் கட்டி வளர்ந்து வந்தோம்.

கட்சி மாறுபாடுகளுக்கு அப்பால் பெரியவர் சௌமியமூர்த்தி தொண்டமானை நான் எப்போதும் மதிக்கிறேன். அவர் அன்று எடுத்த முடிவு சரியானதே. தனிநாடு என்ற இலக்கை மலையக தமிழ் மக்கள் ஏற்க முடியாது என அவர் முடிவெடுத்தார். அதேவேளை, பொது நோக்கங்களில் ஒன்று சேர்ந்து செயற்பட வேண்டுமெனவும் அவர் முடிவெடுத்து செயற்பட்டார்.

தனிநாடு” என்பதால் கூட்டு செயற்பாட்டில் இருந்து
தொண்டமான் விலகியதை கணக்கில் எடுப்பவர்கள், அவர் அதுவரை தமிழ் கட்சிகளுடன் ஒருங்கிணைந்து
செயற்பட்டதையும் கணக்கில் எடுக்க வேண்டும்.

இது தொடர்பில் செளமியமூர்த்தி தொண்டமான் கடை பிடித்த கொள்கைகளையே நானும் கடை பிடிக்கிறேன். அதேபோல் நண்பர் சந்திரசேகரன் கடைபிடித்த கொள்கைகளையே நான் கடைபிடிக்கிறேன்.

நானும் நேற்று பொதுவாழ்வுக்கு வந்தவனல்ல. எனக்கும் இவை தொடர்பில் நீண்ட வரலாறு இந்நாட்டில் கடந்த இருபத்தி ஐந்து வருடங்களாக இருக்கிறது.

இன்று எமது பொது நோக்கு நிகழ்ச்சி நிரலில் தனிநாடு என்ற இலக்கு இல்லை. ஆயுத போராட்டம் என்பதும் இங்கில்லை. எங்கள் தந்தை நாடான இந்தியா, எங்கள் தாய் நாடான இலங்கையுடன், பிரிபடாத நாட்டுக்குள் எங்கள் பிரச்சினைகள் தொடர்பில் செய்துக்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஏற்படுத்திகொண்ட கடப்பாடுகளை நிறைவேற்ற வேண்டும் என நாம் இன்று கோருகிறோம். இது எமது பிரச்சினைகளுக்கு முழுமையான அரசியல் தீர்வு அல்ல எனவும் கூறுகிறோம்.

இதை எப்படி சிங்கள மக்களுக்கு, சிங்கள மொழியில் எடுத்து கூற வேண்டும் என்பதும் எனக்கு தெரியும். இன்று மாகாணசபைகளை இடைநிறுத்தி ஆளுநர்கள் மூலம் இந்த அரசு அராஜகம் செய்வதும், ஒரு தேர்தல் மூலம் இந்த அரசுக்கு கடும் செய்தி ஒன்ற சொல்ல சிங்கள மக்கள் காத்திருப்பதும் எனக்கு தெரியும். ஆகவே இதையிட்டு எவரும் கலவரமடைய தேவையில்லை.

இந்தியாவை நோக்கி முன்வைக்கப்படவிருக்கும் கூட்டுக்கோரிக்கை எது? நிலாந்தன்

தமிழ்க் கட்சிகளை ஒருங்கிணைத்து இந்தியாவுக்கு ஒரு கூட்டுக் கோரிக்கையை முன்வைக்கும் நோக்கத்தோடு டெலோ இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஒருங்கிணைப்பு முயற்சிகள் கடந்த செவ்வாய்க்கிழமையோடு புதிய திருப்பத்தை அடைந்திருப்பதாக தெரிகிறது. டெலோ இயக்கம் அந்த நகர்வை முன்னெடுத்த பொழுது 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவது என்பதே பிரதான கோரிக்கையாக காணப்பட்டது. அக்கோரிக்கையை தமிழரசுக் கட்சி ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் அந்த ஒருங்கிணைப்பு முயற்சிகளில் தமிழரசுக்கட்சி ஈடுபட மறுத்தமைக்கு அது மட்டும்தான் காரணமல்ல. அதைவிட ஆழமான காரணங்கள் உண்டு.

சிறிய பங்காளிக் கட்சியான டெலோ அவ்வாறான ஒருங்கிணைப்பு முயற்சியை ஏனைய கட்சிகளுடன் இணைந்து முன்னெடுக்கிறது என்றால் அதன் பொருள் அது ஏதோ ஒரு விகிதமளவிற்கு தலைமை தாங்க முற்படுகிறது என்பதுதான். தலைமை தாங்க வேண்டிய மூத்த கட்சியான தமிழரசுக் கட்சியை மேவி டெலோ முன்கை எடுக்கிறது என்றுதான் பொருள். கடந்த ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக கூட்டமைப்புக்குள் ஒரு அப்பாவிப் பங்காளியாகக் காணப்பட்ட டெலோ இயக்கம்  இவ்வாறு திடீரென்று முன்கை எடுக்க காரணம் என்ன ?

முதலாவது காரணம், கடந்த பொதுத் தேர்தலில் கூட்டமைப்பு அதன் ஏகபோகத்தை இழந்தமை. இரண்டாவது காரணம்,டெலோ இயக்கத்துக்கு 3 ஆசனங்கள் கிடைத்தமை. மூன்றாவது காரணம், சுமந்திரனின் தொடர்ச்சியான அவமதிப்புக்களால் ஏற்பட்ட கோபமும் ரோஷமும். நான்காவது காரணம் டெலோ இயக்கத்தின்  பேச்சாளரும் கடந்த பொதுத் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டவருமான குருசாமி சுரேந்திரன்.

அப்பாவியாக காணப்பட்ட டெலோ இவ்வாறான ஒருங்கிணைப்பு முயற்சிகளுக்கு தலைமை தாங்க முடியும் என்பது சில மாதங்களுக்கு முன் நிகழ்ந்த ஜெனிவாக் கூட்டத்தொடரில் அனுப்பப்பட்ட ஒரு கூட்டுக் கடித்தில் நிரூபிக்கப்பட்டது.அதில் தமிழரசுக் கட்சி இணையவில்லை. எனினும் தமிழரசுக் கட்சியை தவிர்த்துவிட்டு ஏனைய கட்சிகள் ஒரு கூட்டுக் கடிதத்தை அனுப்ப முடியும் என்பது கடைசியாக நடந்த ஜெனிவா கூட்டத்தொடரில் நிரூபிக்கப்பட்டது.

அதன் அடுத்த கட்டமாக இவ்வாறு இந்தியாவுக்கு ஒரு கூட்டுக் கோரிக்கையைக் முன்வைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. இவ்வாறு டெலோ இயக்கம் முன்கை எடுப்பதை தமிழரசுக்கட்சி ரசிக்கவில்லை.டெலோவின் பின்னணியில் இந்தியா இருக்கிறது என்று ஒரு பகுதியினர் குற்றம் சாட்டினார்கள். பசில் ராஜபக்ச இருக்கிறார் என்று மற்றொரு பகுதியினர் குற்றம் சாட்டினார்கள்.

குறிப்பாக டெலோவின் முன்னெடுப்புக்களில் சுமந்திரன் இணைக்கப்படவில்லை.ஏனெனில் அது கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் என்று காரணம் கூறப்பட்டது. ஆனால் சுமந்திரன் தொடர்ச்சியாக பங்காளிக் கட்சிகளை அவமதித்தமையும் ஒரு காரணம்தான். எனினும் சுமந்திரனை ஒதுக்கியது ஒரு தந்திரோபாயத தவறாக காணப்பட்டது. ஏனெனில் தமிழரசுக் கட்சிக்குள்ளும் கூட்டமைப்புக்குள்ளும் அடுத்தகட்டத் தலைவராக சுமந்திரனே காணப்படுகிறார். அவரை மீறி செல்லத்தக்க தகைமை தங்களுக்கு இருப்பதாக கட்சிக்குள் வேறு யாரும் இதுவரையிலும் நிரூபித்திருக்கவில்லை. எனவே கூட்டமைப்பினதும் தமிழரசுக்கட்சியினதும் செயற்படு தலைவராக காணப்படும் சுமந்திரனை ஒதுக்கிவிட்டு அப்படி ஒரு ஒருங்கிணைப்பை முன்னெடுத்தமை தந்திரோபாய ரீதியாக பலவீனமானது. அதன் விளைவுகளே கடந்த பல வாரங்களாக ஏற்பட்டுவரும் குழப்பங்கள் ஆகும்.

இதனால்தான் டெலோ இயக்கம் தமிழரசுக் கட்சியின் தலைவரான மாவைக்கு கொடுத்த அழைப்புகளை மாவை வெளியில் கூறாமல் மறைத்திருக்கிறார். ஏனெனில் கட்சியின் தலைவராக அவர் காணப்பட்டாலும் சுமந்திரனை பகைத்துக்கொண்டு முடிவெடுக்க முடியாதவராக அவர் காணப்படுகிறார். அதுபோலவே சம்பந்தரை தமது முன் முயற்சிகளுக்கு தலைமை தாங்குமாறு டெலோ இயக்கம் பல தடவை கேட்டும் அவர் அதை மறுத்து விட்டார். சுமந்திரனை ஒதுக்கும் அந்த முயற்சிகளை சம்பந்தரும் ஏற்றுக்கொள்ளவில்லை.

அதே சமயம் சுமந்திரன் தனது முதன்மையை நிரூபிக்கும் விதத்தில் ஒரு குழுவுக்குத் தலைமை தாங்கி அமெரிக்காவுக்கு போனார்.அதோடு கூட்டமைப்பை புதுடில்லிக்கு வருமாறு இந்தியா அழைத்தபோது சம்பந்தர் அதை ஒத்திவைத்தார். இவை அனைத்தினதும் தொகுக்கப்பட்ட சித்திரமானது சம்பந்தர் இந்தியாவை இனப்பிரச்சினைக்குள் முழு அளவுக்கு சம்பந்தப்படுத்த விரும்பவில்லை என்ற தோற்றத்தை வெளிக்கொண்டு வந்தது. எனவே அவ்வாறு இந்தியாவை முரண் நிலைக்குத் தள்ள விரும்பாத சம்பந்தர் முடிவில் டெலோவின் முன்னெடுப்புக்களுக்கு ஒத்துழைக்க முன்வந்தார். இதன் விளைவாக கடைசியாக நடந்த இரண்டு சந்திப்புகளில் தமிழரசுக் கட்சி பங்குபற்றியிருக்கிறது.

தமிழரசுக்கட்சியின் உள்நுழைவோடு கூட்டுக் கோரிக்கையின் வடிவம் மாற்றப்படும் நிலைமைகள் தெரிகின்றன.கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த இரண்டாவது சந்திப்பில் கூட்டுக் கோரிக்கையின் ஆரம்ப வடிவத்திலிருந்து அடுத்தடுத்த கட்ட வளர்ச்சிகள் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. அது இயல்பான ஒன்றுதான். ஏனென்றால் எந்த ஒரு கூட்டுக் கோரிக்கையும் தொடக்கத்தில் இருப்பதைப் போல முடிவில் அமைவதில்லை. பல கட்சிகள் சம்பந்தப்படும் ஒரு முன்னெடுப்பில் அப்படித்தான் மாற்றங்கள் ஏற்படும். அது இயல்பானது, இயற்கையானது, தவிர்க்க முடியாதது.

கடந்த ஜனவரி மாதம் ஜெனிவாவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்திலும் அது நடந்தது. அந்த ஒருங்கிணைப்பு முயற்சிகளின் முதலாவது சந்திப்பு கிளிநொச்சியில் இடம் பெற்றது. அதில் சுமந்திரனும் சிவாஜிலிங்கமும் ஏற்றுக்கொண்ட அடிப்படைகள் வேறு.  ஆனால்,வவுனியாவில் நடந்த இரண்டாவது சந்திப்பில் கஜேந்திரகுமார் இணைந்தபின் முடிவெடுக்கப்பட்ட கோரிக்கை வேறு. அக்கோரிக்கை பின்னர் கிளிநொச்சியில் நடந்த கடைசிச் சந்திப்பில் வேறு அம்சங்களை இணைத்து இறுதியாக்கப்பட்டது. எனவே பல கட்சிகள் சம்பந்தப்படும்போது கூட்டு கோரிக்கை மாற்றம் காணும்.

அதுதான் இப்பொழுது நடக்கிறது. தமிழரசுக்கட்சி உள்நுழைந்த பின் 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை விட இந்திய-இலங்கை உடன்படிக்கையின் அடிப்படையில் கோரிக்கையை முன் வைப்பது என்ற அம்சம் முதன்மை பெறுவதாக தெரிகிறது. எனினும் எல்லா தரப்புக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட இறுதி வரைபு உத்தியோகபூர்வமாக வெளியிடப்படாதவரையிலும் அது தொடர்பில் கருத்து தெரிவிக்க முடியாது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி இதில் வெளியே நிற்கிறது. அக்கட்சியை உள்ளே கொண்டு வந்திருந்தால் கூட்டுமுயற்சி அதன் முழுமையான வடிவத்தை அடைந்திருக்கும். எனினும் அக்கட்சியை உள்ளே கொண்டு வரும் முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை என்று ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள். ஒருங்கிணைப்பு முயற்சிகளின் தொடக்கத்திலிருந்து கஜேந்திரகுமாருக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களுக்கு அவர் பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் மனோ கணேசன்,ரவூப் ஹக்கீம்,செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் அவரை அணுகி நேரடியாக அழைப்பு விடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதோடு அவர் அண்மை வாரங்களாக ஊடகங்களுக்கு தெரிவித்துவரும் கருத்துக்கள் மேற்படி ஒருங்கிணைப்பு முயற்சிகளுக்கு எதிரானவைகளாகவும் காணப்படுகின்றன. எனவே அவரை இந்த ஒருங்கிணைப்பு முயற்சிகளுக்குள் கொண்டுவர முடியவில்லை என்று ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

ஆனால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை இந்த ஒருங்கிணைப்புக்குள் இணைத்திருந்தால் புவிசார் அரசியல் தொடர்பிலும் பூகோள அரசியல் தொடர்பிலும் அக்கட்சியானது துலக்கமான நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியிருக்கும். அதோடு இப்பொழுது தயாரிக்கப்பட்டுவரும் இறுதியாவணம் வேறொரு வடிவத்தை அடைந்திருக்கும்.

கிடைக்கும் தகவல்களின்படி அந்த இறுதிவரைபு பெரும்பாலும் வரும் புதன்கிழமை கையெழுத்திடப்படலாம் என்று தெரிகிறது. அந்த இறுதிவரைபு எப்படியும் அமையலாம். ஆனால் அது ஒப்பீட்டளவில் ஆகப்பெரிய ஒரு கூட்டு முயற்சியாக அமையும். மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகளை இணைத்து தமிழ்க் கட்சிகள் இவ்வாறாக ஓர் ஒருங்கிணைப்புக்குப்  போனமை என்பது ஒரு முக்கிய திருப்பம். இது ஒரு விதத்தில் 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் போது காணப்பட்ட நிலைமைக்கு நிகரானது.

மிகக் குறிப்பாக கூட்டமைப்புக்குள் கடந்த ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக அப்பாவியாக காட்சியளித்த இரு கட்சிகள் கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய கட்சிகள் மற்றும் தலைவர்களோடு இணைந்து இவ்வாறான ஒர் ஒருங்கிணைப்பு முயற்சியில் குறிப்பிடத்தக்க அளவிற்கு முன்னேறியிருப்பது என்பது கூட்டமைப்பின் அக ஜனநாயகத்தை பலப்படுத்துவதில் ஒரு முக்கிய அடைவுதான்.அதேசமயம் கட்சிகளுக்கிடையிலான போட்டாபோட்டிகள் மற்றும் முரண்பாடுகளுக்கு ஊடாக ஒரு மக்கள் கூட்டத்தின் வெளியுறவுக் கொள்கையை அணுகக் கூடாது என்பதிலும் சம்பந்தப்பட்ட கட்சிகள் தெளிவாகவும் விழிப்பாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும்.