இராஜாங்க அமைச்சர் தவறிழைத்துள்ளார்! மாகாணசபை தேர்தல்களை பிற்போட முடியாது!

அமைச்சரவையின் தலையீட்டின் மூலம் மாகாணசபை தேர்தல்களை ஒத்திவைக்க முடியாது என தேர்தல் ஆணையாளர் நிமால் ஜி புஞ்சிவேவ தெரிவித்துள்ளார்.

மாகாணசபை தேர்தல்களை பிற்போடுமாறு அமைச்சரவை தேர்தல் ஆணையகத்தை கேட்டுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் எதுவும் சட்டத்தில் இல்லை எனவும் அவர் கூறினார்.

எனினும் உள்ளுராட்சி தேர்தல்களை பிற்போடலாம் எனவும் அவர் கூறினார். மாகாணசபைகளிற்கான தேர்தல்களை மேலும் ஒருவருட காலத்திற்கு பிற்போடுவதற்கான அனுமதியை கோரும் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளதாக அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் தேர்தல் ஆணையாளர் இதனை கூறினார்.

தேர்தலை பிற்போடுவது தொடர்பான அமைச்சரவையின் முடிவை தேர்தல் ஆணையகத்திற்கு அறிவிக்க உள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மாகாணசபை தேர்தல்களை ஒத்திப்போடுவது தொடர்பாக அமைச்சரவை தீர்மானித்துள்ளது என தெரிவித்துள்ளதன் மூலம் இராஜாங்க அமைச்சர் தவறிழைத்துள்ளதாகவும் தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி வழக்கில் ரெலோ செயலாளர் நாயகம் ஜனா பா.உ நீதிமன்றத்தினால் பிணை

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரணியில் கலந்துகொண்டமை தொடர்பில் பொத்துவில் நீதிவான் நீதிமன்றத்தினால் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமுமான கோ.கருணாகரம் ஜனா மற்றும் கலையரசன் உள்ளிட்டோர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில் இடம்பெற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரணியில் பொலிஸாரினால் பெறப்பட்ட நீதிமன்றத் தடையுத்தரவை மீறி கலந்து கொண்டமை தொடர்பில தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் ஜனா மற்றும் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் உள்ளிட்டோர் மீது திருக்கோவில் மற்றும் பொத்துவில் பொலிஸ் நிலையங்களினால் மேற்கொள்ளப்பட்ட வழக்கின் விசாரணை இன்றைய தினம் பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இன்றைய வழக்கு விசாரணையில் நீதிமன்ற அழைப்பாணையின் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் ஜனா, பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணித் தலைவர் கி.சேயோன், வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க அம்பாறை மாவட்டத் தலைவி செல்வராணி, சமூக செயற்பாட்டாளர் பிரதீபன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர் சயனொளிபவன் உள்ளிட்டோர் ஆஜராகியிருந்த நிலையில் வழக்கு விசாரணை எதிர்வரும் 2022 மார்ச் மாதம் 02ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதுடன், அவர்கள் பிணையில் செல்லவும் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது முடிவு மாத்திரமல்ல, ஆரம்பமும் தான் – மன்னாரில் சீன தூதுவர் தெரிவிப்பு

இலங்கைக்கான சீன தூதுவர் Qi Zhenhong வட மாகாணத்திற்கான பயணத்தை நிறைவு செய்யும் வகையில், இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலுள்ள இராமர் பாலத்தை இன்று (17) கண்காணித்தார்.

அங்கு நியூஸ்ஃபெஸ்டிற்கு கருத்து தெரிவித்த அவர், இந்த விஜயம் முடிவாக மாத்திரமன்றி ஆரம்பமாகவும் அமைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

மூன்று நாட்களாக வட மாகாணத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று பார்வையிட்ட இலங்கைக்கான சீன தூதுவர் Qi Zhenhong மன்னார் – தாழ்வுபாடு கடற்படை முகாமை இன்று முற்பகல் சென்றடைந்தார்.

அங்கிருந்து தமது தூதரக பிரதிநிதிகளுடன் கடற்படை படகுகளில் இராமர் பாலத்தை நோக்கி புறப்பட்டார்.

இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதி பாதுகாப்பு தலைமை அதிகாரி கேர்ணல் காஓ பின், தலைமை அரசியல் அதிகாரி லூஓ ச்சொங் உள்ளிட்டவர்களும் தூதுவருடன் இந்த பயணத்தில் இணைந்திருந்தனர்.

கடற்படை முகாமிலிருந்து புறப்பட்டவர்கள் சுமார் ஒரு மணித்தியாலம் பயணித்து இராமர் பாலத்திற்கு அருகே சிறு படகொன்றில் ஏறினர்.

17 கடல் மைல் தொலைவிலுள்ள இராமர் பாலம் மணற்திட்டை சீன தூதுவர் உள்ளிட்டவர்கள் பார்வையிட்டனர்.

சுமார் 20 நிமிடங்களாக இராமர் பாலத்தில் இருந்த இலங்கைக்கான சீன தூதுவர் உள்ளிட் இராஜதந்திரிகள் பின்னர் அங்கிருந்து புறப்பட்டனர்.

மன்னார் – தாழ்வுபாடு பகுதியிலுள்ள கடற்படை முகாமிற்கு திரும்பிய சீனத் தூதுவரிடம் இந்த பயணம் தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் வினவியபோது, ”இதுவே முடிவு, ஆனால் ஆரம்பமும் கூட” என பதிலளித்தார்.

தலைமன்னாரில் இருந்து இந்தியாவின் தனுஷ்கோடி வரை 32 கிலோமீட்டருக்குள் உள்ள 16 மணல் திட்டுக்களை கொண்ட பகுதி இராமர் பாலம் எனவும் ஶ்ரீ ராம்சேது என வணக்கத்திற்குரிய புனித பகுதியாகவும் பாரத மக்களால் போற்றப்படுகின்றது.

இந்த 16 மணல் திட்டுக்களில் 8 மணல் திட்டுக்கள் இலங்கைக்கும் எஞ்சிய 8 இந்தியாவிற்கும் உரியவையாகும்.

அண்மையில் இலங்கைக்கு வருகை தந்த பாரதிய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக பிரகடனப்படுத்துவதில் பாரத பிரதமருக்கு உள்ள தடைகள் என்னவென ட்விட்டர் பதிவொன்றில் வினவியிருந்தார்.

இதனிடையே, மன்னாரிலுள்ள இராமர் சேது பகுதிக்கு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உள்ளிட்டவர்கள் கடந்த மார்ச் மாதம் விஜயம் செய்திருந்தனர்.

இதன்போது இந்திய உயர்ஸ்தானிகர் விசேட பூஜை வழிபாடுகளிலும் ஈடுபட்டிருந்தார்.

இதனிடையே, இலங்கைக்கான சீனத் தூதுவர் மன்னார் – தாழ்வுபாடு பகுதியில் அமைந்துள்ள ரின் மீன் தயாரிப்பு தொழிற்சாலையையும் இன்று முற்பகல் பார்வையிட்டிருந்தார்.

பயங்கரவாத தடைச்சட்டம் சீரமைக்கப்பட வேண்டும்: ஐ.நா-வின் 7 விசேட பிரதிநிதிகள் இலங்கைக்கு ஆலோசனை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நிர்வாகத்தின்கீழ் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் மிகவும் மோசமடைந்துவரும் நிலையில், மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை உரியவாறு நிறைவேற்றுமாறு அரசாங்கத்தின்மீது அழுத்தம் பிரயோகித்து தற்போதைய நிலைவரத்தை மாற்றியமைப்பதற்கான மிகமுக்கிய வாய்ப்பு ஐரோப்பிய ஒன்றியத்தின் வசமுள்ளது.

இலங்கையில் மேலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதைத் தடுக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் ஏனைய சர்வதேச தரப்புக்களுடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

அதேவேளை வரியின்றி ஐரோப்பிய சந்தைகளைச் சென்றடைவதற்கான இலங்கையின் இயலுமை ஜி.எஸ்.பி வரிச்சலுகையிலேயே தங்கியிருக்கின்றது.

ஆகவே உரியவாறான நோக்கத்தைப் பூர்த்திசெய்யாத மேலோட்டமான பயங்கரவாதத்தடைச்சட்டத்திருத்தத்தினால் தாம் ஏமாற்றப்படுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் இடமளிக்கக்கூடாது என்றும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

பயங்கரவாதத்தடைச்சட்டத்தை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைக்குமாறும் அதுவரை அதன் பயன்பாட்டை இடைநிறுத்துமாறும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்திவரும் நிலையில், இதுகுறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப்பிராந்தியப் பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி மேலும் கூறியிருப்பதாவது,

பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாட்டு ராஜதந்திரிகளிடம் கூறியபோது, அதில் ஓரளவு நம்பகத்தன்மை காணப்பட்டது.

இருப்பினும் இவ்வருட ஆரம்பத்தில் விசாரணைகளின்றி நீண்டகாலத்திற்குத் தடுத்துவைக்கக்கூடியவாறான சட்டத்தை உருவாக்குவதற்கு அவர் முற்பட்டார்.

உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் தொடர்ச்சியாகப் பிரயோகிக்கப்பட்ட வலுவான அழுத்தங்களையடுத்து, பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் குறித்த பரிந்துரைகளை முன்வைப்பதற்கென போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் படையணிக்குத் தலைமைதாங்கியவரும் ஓய்வுபெற்ற ஜெனரலுமான பாதுகாப்புச்செயலாளர் கமால் குணரத்ன தலைமையிலான குழுவொன்று அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டது.

அக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைகள் இன்னமும் பகிரங்கப்படுத்தப்படாத போதிலும், நீதியமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்ட கருத்துக்களை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில் அப்பரிந்துரைகள் சிவில் சமூக அமைப்புக்களின் அர்த்தமுள்ள கரிசனைகளையும் ஆலோசனைகளையும் உள்வாங்கத்தவறியிருப்பதாகத் தோன்றுகிறது.

அதுமாத்திரமன்றி தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் பயங்கரவாதத்தடைச்சட்டத்திருத்த செயன்முறை தொடர்பில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பெரும்பாலும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருப்பதுடன், இச்சட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் தொடர்பில் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் ஏற்கனவே அச்சட்டத்தில் உள்வாங்கப்பட்டிருப்பதாகவும் மாறாக மிகமோசமான மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கக்கூடியவாறான குறைபாடுகள் (பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் காணப்படும் குறைபாடுகள்) குறித்து இப்பரிந்துரைகளில் அவதானம் செலுத்தப்படவில்லை என்றும் அவர்கள் அண்மையில் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேபோன்று இலங்கை கொண்டிருக்கக்கூடிய சர்வதேச கடப்பாடுகளுக்கு அமைவாக பயங்கரவாதத்தடைச்சட்டத்தைத் திருத்தியமைக்கும் போது மிகமுக்கியமாக அவதானம் செலுத்தப்படவேண்டிய 5 விடயங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசேட அறிக்கையாளர்கள் எழுவர் அண்மையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் இலங்கையைச் சேர்ந்த செயற்பாட்டாளர்களைப்போன்று அவர்களும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் பயன்பாட்டை உடனடியாக இடைநிறுத்துமாறு கோரியுள்ளனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் இலங்கையின் தற்போதைய நிலை தொடர்பான மதிப்பீடுப்பணிகள் ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. வரிகளைச் செலுத்தாமல் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளின் சந்தைகளைச் சென்றடைவதற்கான இலங்கையின் இயலுமை ஜி.எஸ்.பி வரிச்சலுகையிலேயே தங்கியிருக்கின்றது.

கடந்த 2017 ஆம் ஆண்டில் இலங்கை ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீளப்பெற்றுக்கொண்டபோது, ஏற்கனவே நிறைவேற்றப்படாமல் இருக்கும் பல்வேறு மனித உரிமைகள்சார் கடப்பாடுகளில் ஒன்றான பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முழுமையாக நீக்குவதாகவோ அல்லது அதில் உரியவாறான திருத்தங்களை மேற்கொள்வதாகவோ வாக்குறுதியளித்தது.

மேலும் இலங்கையில் பயங்கரவாதத்தடைச்சட்டம் உள்ளடங்கலாக மனித உரிமைகள் தொடர்பில் அர்த்தமுள்ள மறுசீரமைப்பு இடம்பெறவேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த ஜுன் மாதத்தில் ஐரோப்பிய ஒன்றியப்பாராளுமன்றத்தில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது.

இருப்பினும் அத்தீர்மானம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கொண்டிருக்கக்கூடிய உறுதிப்பாட்டின் அடிப்படையிலேயே அதன் விளைவுகள் அமையும். ஆகவே தற்போது அடைந்துகொள்வதற்கு எதிர்பார்க்கப்படும் நோக்கத்தைப் பூர்த்திசெய்யாத மேலோட்டமான பயங்கரவாதத்தடைச்சட்டத்திருத்தத்தினால் தாம் ஏமாற்றப்படுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் இடமளிக்கக்கூடாது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நிர்வாகத்தின்கீழ் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் கரிசனைக்குரிய வகையில் மிகமோசமாகச் சரிவடைந்துவரும் சூழ்நிலையில், அதனை மாற்றியமைப்பதுடன் மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை நிறைவேற்றுவது குறித்து அரசாங்கத்தின்மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கான மிகமுக்கிய வாய்ப்பு ஐரோப்பிய ஒன்றியத்தின் வசமிருக்கின்றது.

இலங்கையில் மிகமோசமான மனித உரிமை மீறல்களுடன் தொடர்புபட்ட மேலும் இரு படைவீரர்களுக்கு எதிராகக் கடந்த வாரம் அமெரிக்கா தடைவிதித்துள்ள நிலையில், இலங்கையில் மேலும் மீறல்கள் இடம்பெறுவதைத் தடுக்கக்கூடிய வகையில் ஐரோப்பிய ஒன்றியம் சர்வதேசமட்ட பங்காளிகளுடன் இணைந்து செயலாற்றுவது அவசியமாகும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

Posted in Uncategorized

திருக்கோவில் சந்தியில் அமைந்திருந்த பிள்ளையர் சிலை உடைத்து சேதம்

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள கஞ்சிக்குடியாறு சந்தியில் அமைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலையை இனந்தெரியாத விசமிகளால் உடைத்து சேதமாக்கப்பட்ட சம்பவம் நேற்று வியாழக்கிழமை (16) இரவு இடம்பெற்றள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.

திருக்கோவில் பொத்துவில் பிரதான வீதியிலுள்ள கஞ்சிக்குடியாறு சந்தியில குடியிருப்புக்கள் இல்லாத பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன பிள்ளையார் சிலை ஒன்றை அமைத்ததையடுத்து அதனை அந்த பிரதான வீதி ஊடாக பிரயாணிக்கும் மக்கள் வழிபட்டுவந்தனர்.

இந்த நிலையில் சம்பவதினமான நேற்று இரவு குறித்த பிள்ளையர் சிலையின் கை, தும்பிக்கை போன்றவற்றை இனந்தெரியாத விசமிகள் உடைத்து சேதமாக்கியுள்ளனர் என பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

Posted in Uncategorized

வௌிநாடுகளிலுள்ள 3 இலங்கை தூதரகங்கள் மூடப்படுகின்றன

வௌிநாடுகளிலுள்ள மூன்று இலங்கை தூதரகங்களை மூடுவதற்கு வௌிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.

நைஜீரியாவிலுள்ள இலங்கை தூதரகத்தையும் ஜெர்மனியிலுள்ள பிரேங்பர்ட் மற்றும் சைப்பிரஸிலுள்ள இலங்கை கன்சியூலர் அலுவலகங்களை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சேவையின் தேவை மற்றும் செலவீனங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்கிணங்க, நைஜீரியாவிற்கான தூதுவர் மியன்மாருக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்படவுள்ளார்.

இதேவேளை, சைப்பிரஸிற்கான கன்சியூலர் ஜெனரல் நாடு திரும்பியுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

2022 ஆண்டு இலங்கையில் “நாவலர் ஆண்டு” ஆக பிரகடனம்

சைவத் தமிழ் உலகிற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் இருநூறாவது ஜனன ஆண்டான 2022 ஆம் ஆண்டை – “நாவலர் ஆண்டு” என இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் பிரகடனம் செய்வதற்கான தீர்மானத்தை அங்கீகரிக்கும் நிகழ்வு – பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தலைமையில் இன்று அலரி மாளிகையில் நடைபெற்றது.

இந்த பிரகடனத்திற்கான அங்கீகாரத்தையும் முழுமையான ஒத்துழைப்பையும் வழங்கும் வகையில் பிரதமரினால் அங்கீகாரக் கடிதம் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு.அ. உமாமகேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டது.

இதன்போது இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் உலகப்புகழ் பெற்ற ஓவியர் திரு. மு. பத்மவாசன் அவர்களினால் தத்ரூபமாக வரையப்பட்ட ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் இரு திருவுருவப் படைப்புகள் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவினால் வெளியிட்டு வைக்கப்பட்டன.

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் திருவுருவ வர்ணப் படைப்பு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நல்லை ஆதீனக் குரு முதல்வர் வணக்கத்திற்குரிய ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞான சம்பந்த பரமாசார்ய சுவாமிகள், கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் வணக்கத்திற்குரிய அக்ஷராத்மானந்த மகராஜ் சுவாமிகள் ஆகியோரிடம் வழங்கி வெளியிட்டு வைக்கப்பட்டது.

மற்றைய படைப்பு ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையின் தலைவர் திரு.சி.தனபாலா, அகில இலங்கை இந்து மாமன்றத்தின் செயலாளர் திரு.வே.கந்தசாமி ஆகியோரிடம் வழங்கி வெளியிட்டு வைக்கப்பட்டது.

மேற்படி பிரகடன நிகழ்வில், நல்லை ஆதீன முதல்வர் வணக்கத்திற்குரிய ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞான சம்பந்த பரமாசார்ய சுவாமிகள், கொழும்பு, இராமகிருஷ்ண மிஷன் தலைவர் வணக்கத்திற்குரிய அக்ஷராத்மானந்த மகராஜ் சுவாமிகள், பிரதமரின் இந்து மத விவகாரங்களுக்கான இணைப்பாளர் வணக்கத்திற்குரிய கலாநிதி இராமச்சந்திரக் குருக்கள் பாபு சர்மா, பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேன் ராகவன், அங்கஜன் இராமநாதன், இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் திரு.அ.உமாமகேஸ்வரன், இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்கள முன்னாள் பணிப்பாளர்களான திரு.எஸ்.தில்லை நடராஜா மற்றும் திருமதி.சாந்தி நாவுக்கரசன், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையின் தலைவர் திரு.சி.தனபாலா, அகில இலங்கை இந்து மாமன்றத்தின் செயலாளர் திரு.வே.கந்தசாமி, திரு.சுந்தரலிங்கம், திரு.சுப்பிரமணியன், திரு.விக்னேஸ்வரன், திரு.ஜெயராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Posted in Uncategorized

மனோ தலைமையில் தமுகூ தூதுக்குழு அமெரிக்க தூதரை சந்திப்பு

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்பி தலைமையில் தமுகூ தூதுக்குழு, நேற்று (16)அமெரிக்க தூதரை சந்தித்து கலந்துரையாடியது. இச்சந்திப்பின் போது, தற்போது நடைபெறும் தமிழ்-முஸ்லிம் கட்சிகளின் கூட்டு செயற்பாடு, தேசிய அரங்கில் மலையக தமிழ் மக்களின் எழுச்சி, இலங்கை தேசிய இனப்பிரச்சினையில் அமெரிக்காவின் பங்கு, பொறுப்புகூறல், எதிர்வரும் ஐநா மனித உரிமை ஆணைக்குழு கூட்டங்கள் ஆகியவை பற்றி கலந்துரையாடப்பட்டன.

புதிய வருடத்தில் அமெரிக்காவில் இருந்து அரசாங்க பிரமுகர்கள், அதிகாரிகள் இலங்கை வர உள்ளதாகவும், அவர்கள் தமுகூ உட்பட இலங்கையின் அனைத்து தரப்பினரையும் சந்திக்க ஆவலாக இருப்பதாகவும் அமெரிக்க தூதர் தெரிவித்தார். அதேபோல் அமெரிக்கா வந்து ராஜாங்க திணைக்கள அதிகாரிகளை சந்திக்கும்படியும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பிக்கு அமெரிக்க தூதர் அழைப்பு விடுத்தார்.

தற்போதைய தமிழ்-முஸ்லிம் கட்சிகளின் கூட்டு செயற்பாட்டின் பின்னர், தேசிய, சர்வதேசிய அரங்குகளில் நாம் முன்வைக்க உள்ள, இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களின் பொது குறைந்தபட்ச யோசனைகள் அடங்கிய ஆவணத்துடன் நாம் சர்வதேச சமூகத்தை காத்திரமாக எதிர்கொள்வோம் என தமுகூ தலைவர் மனோ கணேசன் பதிலளித்தார்.

இந்த சந்திப்பின் போது அமெரிக்க தரப்பில் பதில் தூதுவர் மார்டின் கெலி, பதில் துணை தூதர் சுசன் வோல்க், அரசியல் அதிகாரி ஜெப்ரி சனின் ஆகியோரும், தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் தலைவர் மனோ எம்பியுடன், தமுகூ நிதி செயலாளர் கண்டி மாவட்ட எம்பி வேலு குமார், பொது செயலாளர் சந்திரா சாப்டர், இணை தவிசாளர் பேராசிரியர் விஜயசந்திரன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

சிங்கள மக்கள் இனவாதிகளே- பகிரங்கமாக கருத்து வெளியிட்ட தேரர்!

இலங்கையில் சிங்கள மக்கள் இனவாதிகளே என தென்னிலங்கையின் பௌத்த தேரர் ஒருவர் பகிரங்கமாக கருத்து வெளியிட்டுள்ளார்.

ஜனநாயக சமூகத்தில் நல்லிணக்கத்திற்கான அரசியலமைப்பு என்ற தலைப்பில் கொழும்பில் இன்று இடம்பெற்ற செயலமர்வில் பங்கேற்று கருத்து வெளியிட்ட வடவல சித்தார்த்த தேரர் என்பவரே, கடந்த காலங்களில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளை நினைவுபடுத்தி இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தான் இந்த கருத்துக்களை வெளியிட்டமையால் விமர்சனங்களை எதிர்நோக்க வேண்டியேற்படும் எனவும், எனினும் அது தொடர்பில் தான் கவலையடையவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“நீண்ட காலமாக என் மனதில் இருக்கும் பெரும் வேதனையான ஒரு விடயத்தை நான் இந்த இடத்தில் சொல்ல ஆசைப்படுகின்றேன். நான் சிலாபம் பகுதியில் கடற்கரைக்கு அருகில் பிறந்தேன்.

நான் வாழ்ந்த அந்த பகுதியில் நிறைய தமிழ் குடும்பங்கள் அன்று வாழ்ந்து வந்தன. 1956 ஆம் ஆண்டு காலப் பகுதி அது. அந்த நாட்களில் நான் பாடசாலைக்கு சென்று வந்ததன் பின்னர் விகாரைக்கு சென்று அங்குள்ள புத்தகங்களை வாசிக்கச் செல்லுவேன்.

அன்று அதில் நான் பார்த்த விடயம் தான் இன்று வரை என்மனதில் பெரும் கவலையாக உள்ளது. சிங்களவர் தமிழர் இனக் கலவரம் இடம்பெற்ற வேளையில் சிங்களவர்களால் தார் பீப்பாய்க்களை கொதிக்க வைத்து அதில் சிங்களவர்களின் உடல்களை அமிழ்த்துகிறார்கள்.

அதேபோல் மற்றொரு சம்பவத்தையும் பார்த்தேன் அதேபோல் தார் பீப்பாய்க்களை கொதிக்க வைத்து அதில் தமிழர்களின் உடல்களை அமிழ்த்தி கொல்கின்றார்கள். அன்று எனக்கு 10 வயது . இதை பார்த்த நாள் முதல் இன்று வரை சிங்கள தமிழ் கலவரம் பற்றி பேச்சை எடுத்தால் என் மனம் என்னிடம் சொல்லும் ”சித்தார்த்த நீ மாத்திரம் சிங்களவர்களுக்காக பேசக்கூடாது” என்று.

அதே போல் நேற்று மாலை ஒரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தேன். அந்த புத்தகத்தில் கடந்த 70 களில் நடத்த யுத்தம் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த யுத்தத்தின் போது இருந்த தமிழ் குடும்பங்கள் வீடுகளை விட்டு காடுகளுக்குள் ஒளிந்திருந்து ஒரு வாரம் கழித்து வீடு உள்ளதா என பார்க்க வருவார்கள்.

வந்து பார்க்கும் போது வீட்டிற்கு குண்டு தாக்குதல் மேற்கொண்டு வீடு சுக்குநூறாகியிருக்கும். தாய் தன் தந்தையை தேடி அழுகிறாள். காரணம் தந்தையை காணவில்லை. பார்த்தால் தந்தை கிணற்றில் விழுந்துள்ளார் அல்லது இராணுவத்தினால் கொன்று வீசப்பட்டுள்ளார்.

இப்படியான நாட்டில் தான் நாம் ஜனநாயகத்தைப் பற்றி பேசுகின்றோம். இன்று தேரர்களாகிய நாம் மக்களிடத்தில் நிறைய, பிரபலமாக, கடுமையாக விமர்சனத்திற்குள்ளாகின்றோம். நாம் தான் இனவாதிகள் என நான் சொல்கின்றேன் அது உண்மை தான்.

இதை கூறியதற்காக என்னை விமர்சிப்பார்கள். பத்திரிகைகளில் எழுதினாலும் பரவாயில்லை அதுதான் உண்மை. தேரர்களாக எமக்கு, சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் யாராக இருந்தாலும் பரவாயில்லை. அவர்களுடைய உயிரை உயிராக மதித்து அவர்களுக்கு உதவ முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

வடக்கில் அதிகரித்த இராணுவ பிரசன்னம் – உடன் வெளியேற்றுமாறு வலியுறுத்து

வட மாகாணத்தில் குவிக்கப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவத்தினர் குறைக்கப்பட வேண்டும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன்   வலியுறுத்தியுள்ளார்.

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே சி.வி.விக்னேஸ்வரன் இதனைக் கூறியுள்ளார்.

வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தலைமையில் இராணுவத்தின் பங்கேற்புடன் நீர், சுற்றாடல், மற்றும் விவசாய பாதுகாப்பு அமைப்பின் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இந்தக் கலந்துரையாடலுக்கு விக்னேஸ்வரனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், இராணுவத்தின் பிரசன்னம் குறித்து அவர் தமது கரிசனையினை வெளிப்படுத்தியுள்ளார்.

யுத்தம் முடிவடைந்து 12 வருடங்கள் ஆகியுள்ள நிலையில், வடக்கில் பாரியளவில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளமையினால் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துவருவதாகவும், விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே வடக்கில் தங்கியுள்ள மேலதிக இராணுவத்தினரை உடன் வெளியேற்றுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை இராணுவத் தரப்பின் பங்கேற்புடன் குறித்த கலந்துரையாடல் இடம்பெறுகின்மையினால் தம்மால் அதில் கலந்து கொள்ள முடியாது எனவும் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.