வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய நிலை – ரெலோவின் இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ்

அரசாங்கம் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் கட்டுப்பாட்டு விலையினை நீக்கி வர்த்தமானியை வெளியிட்டமை மக்களின் இயல்பு வாழ்வில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தவுள்ளன. அத்துடன் உணவுப் பொருட்களின் நிர்ணய விலை நீக்கம் என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய நிலையை உள்ளாகியுள்ளது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் கட்டுப்பாட்டு விலை நீக்கம் போன்ற விடயங்கள் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

மக்களின் இயல்பு வாழ்வில் ஏற்கனவே வருமானங்களை இழந்து அரசாங்க நிவாரணங்கள் எதுவும் இன்றி மிகவும் வறுமையில் அன்றாட வாழ்வை போராட்டத்தின் மத்தியில் கொண்டு செல்லும் போது அடிப்படை உணவுப் பொருட்களின் நிர்ணய விலை நீக்கம் என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய நிலையை உள்ளாகியுள்ளது.

தொடர்ந்தும் அன்றாடம் காச்சிகள் தொழில்களை இழந்து வருமானம் இன்றி குடும்பங்கள் அவல நிலைக்கு தள்ளப்பட்ட நிலையில் நாளுக்கு நாள் பொருட்கள் விலை உயர்ந்து செல்லுமாயின் நாட்டில் கொடிய வறுமை மாத்திரமல்ல பஞ்சம் பசி பட்டினி கொள்ளை களவு தற்கொலை வன் செயல் என்பன அதிகரிக்கவே வாய்ப்புக்கள் உள்ளன அத்துடன் நாட்டின் இயல்பு நிலையும் கேள்விக்குள்ளாகி அவசர நிலை உருவாகும்.

கட்டுப்பாட்டு விலை நீக்கப்படுவதால் மொத்த வியாபாரிகளும் சில்லறை வர்த்தகர்களும் பகல் கொள்ளை அடிக்க ஆரம்பித்து விடுவார்கள் இதனால் குறிக்கப்பட்ட தரப்புக்கள் பணம் சம்பாதிக்கவும் நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் மக்களின் இயல்பு வாழ்வு அவல நிலைக்கு தள்ளப்படவும் வழி வகுக்கும் . ஆகவே அத்தியாவசிய பொருட்களின் நிர்ணய விலை நீக்கம் தொடர்பாக அரசாங்கம் மீள் பரிசீலணை செய்ய வேண்டும் என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் – மனோ கணேசன்

விவசாயத்துறை அமைச்சரின் கொடும்பாவியை மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்த அரசையுமே கொளுத்தி, வீட்டுக்கு விரட்டியடிக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும் பொகவந்தலாவையில்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “கொரோனாவுக்கு மத்தியிலும் இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகள் இலங்கைக்கு கடன் கொடுத்தன. அந்நாடுகள் பொருளாதாரத்தை முகாமை செய்யவில்லையா? அப்படியானால் எமது நாட்டு அரசுக்கு மட்டும் ஏன் தடுமாற்றம்?

தேசிய உற்பத்தியில் புரட்சி செய்யபோவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். மஞ்சளுக்கு தடை விதிக்கப்பட்டது. நாட்டில் தற்போது மஞ்சள் இருக்கின்றதா? பாசி பயறு, உளுந்து உள்ளிட்ட பொருட்களும் இல்லை. அரசு தோல்வி கண்டுள்ளது.

விவசாய அமைச்சரின் மட்டுமல்ல இராஜாங்க அமைச்சரின் கொடும்பாவியையும் எரிக்க வேண்டும் என்கின்றனர். இவ்விருவரின் மட்டுமல்ல ஒட்டு மொத்த அரசையுமே கொளுத்தி, வீட்டுக்கு அனுப்பவேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

வைபவங்களுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள்?

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்குமாயின், மீண்டும் கட்டுப்பாடுகளை அமுல்படுத்தப்படுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

பொறுப்பற்ற வகையில் மக்கள் நடந்துகொள்வார்களாயின் விரும்பமின்றியேனும் மீண்டும் கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டிய நிலைமை ஏற்படுமெனத் தெரிவித்துள்ள பணிப்பாளர் நாயகம், பல விழாக்கள், விருந்துபசாரகள் மற்றும் திருமண வைபவங்களிலேயே கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பொதுமக்கள் இவ்வாறு நாளுக்கு நாள் பொறுப்பற்ற முறையின் கீழ், செயற்படுவார்களாயின் பொது வைபவங்களுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை, நேற்றுமுன்தினம் 617ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணித்தோரின் எண்ணிக்கை நேற்றுமுன்தினம் (06) அதிகரித்துள்ளது. அன்றையதினம் 20 பேர் மரணித்துள்ளனர். அதில், 14 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

2022 பட்ஜெட் வெள்ளி சமர்ப்பிப்பு

2022 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு- செலவுத்திட்டம், பாராளுமன்றத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (12) சமர்பிக்கப்படவுள்ளது.

பெசில் ராஜபக்ஷ, நிதியமைச்சராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், சமர்ப்பிக்கப்படும் முதலாவது வரவு- செலவுத்திட்டம் இதுவாகும்.

இயன்றவரை வினைத்திறனுடன் காணி வளங்களை பயன்படுத்துதல், இயன்றவர்களையும் விரும்பாதவர்களையும் வெல்வது, உற்பத்திப் பொருளாதாரத்தில் கவனம் செலுத்துவது போன்றவற்றில் இந்த வரவு -செலவுத் திட்டம் கவனம் செலுத்துமென அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியாக தெரிவுச் செய்யப்பட்டதன் பின்னர் சமர்ப்பிக்கப்படும் இரண்டாவது வரவு- செலவுத்திட்டம் இதுவென்பதுடன், நாட்டின் 76 ஆவது வரவு- செலவுத் திட்டமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கொவிட் சவால்களை வெற்றிகொண்டு, வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதனை இலக்காகக் கொண்டு, எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு, நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் என அரசாங்கத் தகவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இம்முறை வரவு-செலவுத் திட்டம் தயாரிப்பின்போது, பெரும் நூற்றுக்கும் மேற்பட்டோரிடமிருந்து ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன. நிதியமைச்சின் வேலைத்திட்டத்துக்கு அமைவாக நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களின் அபிப்பிராயங்களும் இதற்குப் பெறப்பட்டுள்ளன என்றும் அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் வைரஸ் தொற்றுக்கு மத்தியில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பொருளாதாரத்துக்குகு மிகுந்த அழுத்தம் ஏற்பட்டிருக்கின்றது.

எனவே, கொவிட் சவால்களை வெற்றிகொண்டு, வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதனை இலக்காகக் கொண்டு, எதிர்வரும் வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது என நிதியமைச்சு அறிவித்துள்ளது.

அரசாங்கத்தை வீடு நெருங்கி வருகிறது – ரவூப் ஹக்கீம்

பொருளாதாரத் தோல்வியின் விளிம்பில் காணப்படுகின்ற இந்த  அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புகின்ற காலம் நெருங்கி வருகின்றது என ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கொரோனா பரவலுக்கு மத்தியிலும் என்ன பொருளாதார கொள்கையினை அரசாங்கம் கடைபிடித்தாலும் அவர்களின் அண்மைக்கால நகர்வுகள் நாட்டில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வினை எந்தவிதத்திலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கைமீறிவிட்டது என்றும் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்த மாணவர்களை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று(07) ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எஸ்.ரி.ஆர். அமைப்பின் தலைவர் ஹாதீக் இப்றாஹீம் தலைமையில் இடம்பெற்றது. அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வை, சம்மாந்துறை  ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எஸ்.ரி.ஆர். அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையிலே – நாட்டில் இன்று விவசாயிகள், ஆசிரியர்கள், மின்சார சபை ஊழியர்கள், துறைமுக ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கள்  என தொடர் போராட்டங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

பொருட்களின் விலைகளில் எந்தக் கட்டுப்பாடுகளும் கிடையாது. அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் கிடையாது.

அத்தியாவசியப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்கும் வர்த்தமானியும் அரசாங்கம் வெளியிட்டுள்ளது. ஏனெனில் அரசாங்கத்தினால் பொருட்களின் விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கின்றது.

எனவே, அரசாங்கத்தின் அனைத்து வேலைத்திட்டங்களும் தோல்வியடைந்து, பொருளாதாரத் தோல்வியின் விளிம்பில் காணப்படுகின்ற இந்த  அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புகின்ற காலம் நெருக்கி வருகின்றது. என்றார்.

Posted in Uncategorized

’இராணுவ ஆட்சி செய்ய என்னால் முடியும்’ – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

இராணுவத்தினரைக் கொண்டு விவசாயிகளின் கழுத்தைப் பிடித்து, சேதனப் பசளையை பயன்படுத்த வைப்பதற்கு தன்னால் முடியும் என்று தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அவ்வாறு பலத்தை பிரயோகிப்பதற்குத் தான் விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.

புதிதாக அபிவிருத்தி செய்யப்பட்ட 1,500 வீதிகளை ஒரே நாளில் மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வின் பின்னர், நேற்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நான் இராணுவ ஆட்சியாளராக வருவேன் என்று எதிர்பார்த்து மக்கள் எனக்கு வாக்களித்தனர். ஓர் இராணுவ அதிகாரியைப் போல மக்களை கழுத்தைப பிடித்து ஆட்சி செய்ய முடியும், ஆனால் நான் அப்படி இல்லை என்றார்.

அப்படி நாட்டை ஆள விரும்பவில்லை. நான் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் அழிந்துவிடும் என்று சிலர் கூறுகின்றனர், ஆனால் அவ்வாறு பலத்தை பிரயோகிக்க நான் விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டார்.

‘நல்லாட்சி’ அரசாங்கத்தின் கீழ், முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் பாரிய பரிவாரங்களுடன் பயணம் செய்திருந்தனர் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த தாம் விரும்புவதாக தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டில் கலந்துகொண்டபோது, ​​தனது மனைவியுடன் சாதாரண ஹோட்டலில் தங்கியதாகவும் மனைவியின் விமான டிக்கெட் மற்றும் ஹோட்டல் தங்குவதற்கு தான் பணம் செலுத்தியதாகவும் சுட்டிக்காட்டினார்.

தன்னுடன் 7 பேர் மட்டுமே பயணம் செய்தாகவும் முந்தைய ஜனாதிபதிகள் சொகுசு விடுதிகளில் தங்கியிருந்ததாக சிலர் தன்னிடம் கூறியதாகவும் தெரிவித்த அவர், தான் அப்படிச் செய்யவில்லை என்றும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

கட்டாய தடுப்பூசி – நீதிமன்றம் தடை!

அமெரிக்காவில் பெரு நிறுவனங்களின் ஊழியா்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்ற அந்த நாட்டு அரசின் உத்தரவை முறையீட்டு நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.

நூற்றுக்கு மேற்பட்டோா் பணியாற்றும் நிறுவனங்களுக்கு அரசு விதித்துள்ள விதிமுறைகளில், வரும் ஜனவரி 4 ஆம் திகதிக்குள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஊழியா்கள் வாராந்திர கொரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்பட வேண்டும், கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் 5 ஆவது வட்ட மேல்முறையிட்டு நிதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

Posted in Uncategorized

மன்னாரில் கடும் மழை விடத்தல் தீவில் கிராமங்களுக்குள் புகுந்த கடல்நீர்-ரெலோ தலைவர் செல்வம் நேரடியாக சென்று நிலமையை அவதானித்தார்

விடத்தல் தீவு மற்றும் தலைமன்னார் கிராமத்தினுள் சென்ற கடல் நீர் – மக்கள் பாதிப்பு.
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (7) அதிகாலை மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு கிராமத்தில் கடல் நீர் கிராமத்தினுள் சென்றுள்ளது.

இதனால் விடத்தல் தீவு கிராமத்தில் மூன்று கிராம அலுவலர் பிரிவுகளில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை (7) அதிகாலை பெய்த கடும் மழையை தொடர்ந்து கடல் நீர் கிராமத்தினுள் சென்றுள்ளது.

இதனால் குறித்த கிராமத்தில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

மேலும் விடத்தல் தீவு மீனவர்களின் படகுகள் சில சேதமடைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் இன்று (7) காலை விடத்தல் தீவு கிராமத்திற்குச் சென்று நிலமையை அவதானித்ததோடு,பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்தார்.

மேலும் உரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு வினவியதோடு,உரிய கிராம அலுவலரை சந்தித்து பாதிப்பு தொடர்பாக அறிந்து கொண்டார்.

மேலும் பாதிக்கப்பட்ட மீனவர்களை சந்தித்தார்.மேலும் தலைமன்னார் கிராம பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் தொடர்பாக நேரடியாக சென்று நிலமையை அவதானித்தார்.

Posted in Uncategorized

திண்ணைச் சந்திப்பு -By Nillanthan

கடந்த செவ்வாய்க்கிழமை யாழ் திருநெல்வேலியில் அமைந்துள்ள திண்ணை உல்லாசவிடுதியில் 7 கட்சிகள் கூடின.13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுப்பது அச்சந்திப்பில் நோக்கமாக இருந்தது.தமிழ் தேசிய மக்கள் முன்னணி அதில் அழைக்கப்படவில்லை. தமிழரசுக் கட்சி அழைக்கப்பட்ட போதிலும் பங்குபற்றவில்லை.மனோ கணேசனும் ரவுப் ஹக்கீமும் சந்திப்புக்காக கொழும்பிலிருந்து வந்திருந்தார்கள். எனினும்,எதிர்பார்த்தபடி ஒரு இறுதித்தீர்மானம் எடுக்கப்படவில்லை. தமிழரசுக் கட்சியையும் இணைத்துக் கொண்டு ஒரு தீர்மானத்தை எடுப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. இதுதொடர்பில் முடிவெடுப்பதற்கு தமிழரசுக்கட்சி கால அவகாசம் கேட்ட படியால் அக்கட்சியையும் இணைத்துக் கொண்டு இறுதிமுடிவை எடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவை நோக்கி எப்படிப்பட்ட ஒரு கோரிக்கையை முன்வைப்பது என்பது தொடர்பில் முடிவெடுப்பது ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதே சரி.

இச்சந்திப்பை ஒழுங்குபடுத்தியது டெலோ இயக்கம். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அவ்வியக்கத்துக்கு மூன்று ஆசனங்கள் கிடைத்தன. இதுகாரணமாக அந்த இயக்கத்தின் பேரம்பேசும் சக்தி அதிகரித்திருப்பதாக தோன்றுகிறது.அந்த இயக்கத்தின் உத்தியோகபூர்வ பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தனது கட்சியின் உயர்ந்திருக்கும் பேரம்பேசும் சக்தியை சாத்தியமான வழிகளில் பிரயோகித்து தமிழ் அரசியலில் தமது கட்சியின் ஸ்தானத்தை மேலும் பலப்படுத்துவதற்காக உழைக்கும் ஒருவராகக் காணப்படுகிறார்.டெலோவின் முயற்சியால் கடந்த ஏப்ரல் மாதத்திருந்து ஐந்து கட்சிகள் ஏதோ ஒரு ஒருங்கிணைப்பின் கீழ் செயற்பட்டு வருகின்றன. ஜெனிவா கூட்டத்தொடரின்போது அவை ஒரு கூட்டுக் கடிதத்தையும் அனுப்பியிருந்தன.அதன் அடுத்தகட்டமாக இந்தியாவை நோக்கி இப்படி ஒரு கோரிக்கையை முன்வைப்பது என்று மேற்படி கட்சிகள் தீர்மானித்தன.

மேற்படி சந்திப்புக்களில் சிலவற்றில் மாவை சேனாதிராஜா பங்குபற்றியிருக்கிறார். அவர் பொதுவாக சந்திப்புகளுக்கு எதிரானவராக காணப்படவில்லை.ஆனால் முடிவெடுக்கும் தருணங்களில் அவர் சம்பந்தரையும் சுமந்திரனையும் மீறிச்சிந்திக்க முடியாதவராக காணப்படுகிறார். அதனால் கடந்த ஜெனிவா கூட்டத்தொடரின் போது கடிதம் அனுப்பும் விவகாரத்தில் தமிழரசுக்கட்சி கூட்டுக்குள் இருந்து பின்வாங்கியது. இப்போதும் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த கூட்டத்திலும் தமிழரசுக்கட்சி பங்குபற்றவில்லை. ஏனெனில் கூட்டமைப்புக்குள் உள்ள ஒப்பீட்டளவில் பெரிய கட்சி அது. மூத்த கட்சியும் அது. ஏனைய சிறிய கட்சிகளின் முயற்சிகளின் பின் செல்ல அது தயாரில்லை என்று தோன்றுகிறது. அதேசமயம் பங்காளிக் கட்சிகள் கூட்டமைப்புக்கு வெளியே இருக்கும் கட்சிகளோடு ஏன் ஒருவித ஒருங்கிணைப்பை நாடுகின்றன என்பதை குறித்து தமிழரசுக் கட்சி தன்னை சுய விசாரணை செய்து கொள்வதாகவும் தெரியவில்லை.

கூட்டமைப்பு இப்பொழுது இதயத்தால் ஒன்றிணைந்த ஒரு கூட்டாக இல்லை.அது தேவை கருதிய ஒரு கூட்டாகத்தான் இருக்கிறது.அதன் தலைவரான சம்பந்தர் பௌதிக ரீதியாக நடமாட முடியாத ஒருவராக மாறிவிட்டார்.நடைமுறையில் சுமந்திரன்தான் செயற்படும் தலைவராக இருக்கிறார்.கூட்டமைப்பின் செயற்படு தலைவராக மட்டுமல்ல தமிழரசுக் கட்சியின் முடிவுகளின் மீதும் செல்வாக்குச் செலுத்தும் ஒருவராக சுமந்திரன் காணப்படுகிறார்.எனவே மேற்படி கட்சிகள் ஒன்றுகூடி இந்தியாவுக்கு ஒரு கோரிக்கையை முன்வைப்பது என்ற விடயத்தில் சுமந்திரனை தவிர்த்தமை தந்திரோபாய ரீதியாகப் பொருத்தமானதா? சுமந்திரனை விலக்கிக்கொண்டு சம்பந்தரை அணுகியபொழுது சுமந்திரன் நிலைமைகளைக் குழப்பிவிட்டார் என்று மேற்படி கட்சி வட்டாரங்கள் கருதுகின்றன.

கடந்த சனிக்கிழமை கொழும்பில் இருக்கும் இந்தியத் தூதுவர் சம்பந்தரை அவருடைய இல்லத்தில் சென்று சந்தித்தார்.தீபாவளி பண்டிகையை ஒட்டிய ஒரு சந்திப்பு என்று கூறப்பட்ட போதிலும்கூட மேற்படி ஐந்து கட்சிகளின் ஒருங்கிணைந்த முயற்சியை நோக்கி சம்பந்தரைத் தூண்டும் உள்நோக்கம் அந்த சந்திப்பில் இருந்திருக்கலாம் என்று ஊகிக்க இடமுண்டு.எனினும் சந்திப்புக்கு பின்னரும் தமிழரசுக்கட்சி திண்ணையில் நடந்த சந்திப்பில் பங்குபற்றவில்லை.அக்கட்சி தனக்கு கால அவகாசம் தேவை என்று கேட்டிருந்தது. அதன்படி அக்கட்சியின் கருத்தையும் பெற்றுக்கொண்டு ஒன்றிணைந்த ஒரு கோரிக்கையை முன் வைக்கலாம் என்று கடந்த செவ்வாய்க்கிழமை முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.இதனிடையே, இந்திய தூதுவர் மறுபடியும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை வரும் செவ்வாய்க்கிழமை சந்திக்கிறார்.மேலும், அமெரிக்காவின் அழைப்பை ஏற்று கூட்டமைப்பு அமெரிக்கா செல்லவிருப்பதாக ஒரு தகவல் உண்டு.

மேற்படி சந்திப்புகளின் தொகுக்கப்பட்ட ஒரு சித்திரத்தை ஆராய்ந்தால் மிகத் தெளிவான சில விடைகள் கிடைக்கின்றன.முதலாவது கட்சிகளை ஒருங்கிணைக்கும் வேலைகளை சம்பந்தப்பட்ட கட்சிகளே செய்யுமாக இருந்தால் அதற்கு ஒரு வரையறை உண்டு. தேர்தல் நோக்கங்களைக் கொண்ட கட்சிகள் தங்களுக்கிடையே ஒரு பலமான ஐக்கியத்தை ஏற்படுத்த முடியுமென்றால் அது எப்பொழுதோ ஏற்பட்டிருக்க வேண்டும். அவ்வாறான ஓர் ஐக்கியம் ஏற்படாத ஒரு பின்னணியில்தான் தமிழ்தேசிய பரப்பில் மூன்று தரப்புகளை காணமுடிகிறது. இந்நிலையில் கட்சிகளாக விரும்பி ஒரு கூட்டை உருவாக்கக் கூடிய வாய்ப்புகள் பெருமளவுக்கு குறைவு என்பதே கடந்த 12 ஆண்டுகால அனுபவம் ஆகும்.மாறாக தேர்தல் உள்நோக்கம் இல்லாத பல்கலைக்கழக மாணவர்கள் அல்லது சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் முயன்றால் அவ்வாறான ஒருங்கிணைப்பு வேலைகளைச் செய்யலாம் என்பது கடந்த ஆண்டுகளில் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.இது முதலாவது.

இரண்டாவது விடயம், இந்தியாவை நோக்கி ஒரு பொதுக் கோரிக்கையை எந்த அடிப்படையில் முன்வைப்பது என்பது.13வது திருத்தத்தை இனப்பிரச்சினைக்கு தீர்வாக முன்வைப்பதா?அல்லது இந்தியாவை இனப்பிரச்சினைக்குள் மீண்டும் தலையிட வைக்கும் ஓர் ஊக்கியாக பயன்படுத்துவதா?

மேற்படி கட்சிகளில் பெரும்பாலானவை 13வது திருத்தத்தை ஒரு இறுதித்தீர்வாக ஏற்றுக் கொள்ளவில்லை.கடந்த பன்னிரண்டு ஆண்டு காலப்பகுதிக்குள் மிக குறிப்பாக 2015க்கும் 2018க்கும் இடைப்பட்ட காலப்பகுதிக்குள் ஈழத்தமிழர்கள் ஒப்பீட்டளவில் அதிகளவு தீர்வு முன்மொழிவுகளை முன் வைத்திருக்கிறார்கள். மேற்சொன்ன கட்சிகள் யாவும் தாங்கள் சார்ந்த கூட்டுக்களுக்கூடாக அல்லது தமிழ் மக்கள் பேரவைக்கு ஊடாக அல்லது வட மாகாண சபைக்கூடாக அவ்வாறான முன்மொழிவுகளை முன் வைத்திருக்கின்றன. அந்த முன்மொழிவுகள் யாவும் 13ஐக் கடந்து வருகின்றன. அவற்றில் பெரும்பாலானவை ஒற்றையாட்சி கட்டமைப்புக்கு வெளியே வரும் கூட்டாட்சி முன்மொழிவுகள் ஆகும். எனவே மேற்கண்ட கட்சிகள் 13ஐ ஒரு இறுதி ஏற்பாடாக ஏற்றுக் கொள்ளவில்லை.ஆயின் இந்தியாவை மீண்டும் இனப்பிரச்சினைக்கு தலையிடக் கோரும் ஒரு ஊக்கியாகத்தான் மேற்படி கோரிக்கை முன்வைக்கப்படுகிறதா?

அப்படியென்றால் அது மிக ஆழமான ஒரு விடயம்.இனப்பிரச்சினையில் இந்தியாவை மீண்டும் தலையிட வைப்பது அல்லது இந்தியாவை அரவணைப்பது மூலம் தமிழ் மக்களின் பேரம்பேசும் சக்தியை அதிகப்படுத்துவது போன்ற அனைத்துமே நீண்டகால நோக்கில் தமிழ் மக்களின் வெளியுறவுக் கொள்கை சார்ந்த விவகாரங்கள் ஆகும். இதுதொடர்பில் கட்சி நிலைப்பாடுகளுக்கு அப்பால் முழுத் தமிழ்த்தரப்பும் ஒருமித்த ஒரு பொது கொள்கைக்கு;பொது அணுகுமுறைக்கு போகவேண்டும்.

ஆனால் 13வது திருத்தம் தொடர்பில் தமிழ் கட்சிகள் மத்தியில் ஒத்தகருத்து கிடையாது.அதேசமயம், இந்தியாவின் பிராந்திய நலன்களை குறிப்பாக புவிசார் நலன்களை பாதுகாக்கவேண்டும் என்ற விடயத்தில் எல்லாத் தமிழ் கட்சிகளும் ஏறக்குறைய ஒரே நிலைப்பாட்டில் உள்ளன என்பதனை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும்.

பொதுவாக கடும்போக்காளர்கள் என்று கருதப்படும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது இந்த விடயத்தை மிகத்தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறது. இந்திய-இலங்கை உடன்படிக்கையை அக்கட்சி ஏற்றுக்கொள்கிறது. ஆனால் 13ஆவது திருத்தத்தை ஒரு தீர்வாக ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தியாவின் பிராந்திய நலன்களை பாதுகாக்கும் விடயத்தில் அக்கட்சியானது இந்தியாவோடு ஒத்துழைக்கும் என்பதனை அக்கட்சியின் தலைவர் அழுத்தமாகக் கூறி வருக்கிறார். ஆனால் இந்தியாவின் பிராந்திய நலன்களைப் பாதுகாப்பதற்காக ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13ஆவது திருத்தத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதனையும் அக்கட்சி தெளிவாக தெரிவித்துவிட்டது.

தமிழரசுக்கட்சி 13ஆவது திருத்தத்தைக் கடந்து சென்று 13 பிளஸ் குறித்து பேசிய ஒரு கட்சி.அக்கட்சியானது தனது வெளியுறவுக் கொள்கை இதுதான் என்பதனை தெளிவாக வரையறுத்து கூறாவிட்டாலும் கூட அதன் பல தசாப்தகால நடவடிக்கைகளைத் தொகுத்துப் பார்த்தால் அது இந்தியாவின் பிராந்திய நலன்களுக்கு பாதகமாக சிந்திக்கும் ஒரு கட்சி அல்ல.

மற்றது விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி. இக்கூட்டணி திண்ணை சந்திப்பில் பங்குபற்றியது.இக்கூட்டணிக்குள் காணப்படும் பங்காளிக் கட்சிகள் இந்தியாவின் பிராந்திய நலன்ளைப் பாதுகாப்பவை அதோடு இந்திய தலையீட்டை வரவேற்பவை.

எனவே தொகுத்துப் பார்த்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது. தமிழ்ப் பரப்பில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்ட கட்சிகளில் பெரும்பாலானவை இந்தியாவின் புவிசார் அரசியல் நலன்களுக்கு ஆதரவாகவே காணப்படுகின்றன. ஆனால் இந்தியாவின் புவிசார் அரசியல் நலன்களுக்காக 13வது திருத்தத்தை ஒரு உச்சமான தீர்வாக ஏற்றுக் கொள்வதில்தான் கட்சிகளுக்கிடையே கருத்து பேதங்கள் உண்டு.இந்த அடிப்படையில் சிந்தித்தால் இந்தியாவின் புவிசார் அரசியல் நலன்களின் அடிப்படையில் கொழும்பின்மீது இந்தியா அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பதில் மேற்படி கட்சிகள் மத்தியில் பெரியளவிற்கு முரண்பாடுகள் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் அவ்வாறு இந்தியாவை அழுத்தம் பிரயோகிக்க வைக்கத்தக்க ஒரு கோரிக்கையானது 13ஐ அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டுமா இல்லையா என்பதில்தான் கட்சிகளுக்கிடையே வேறுபட்ட கருத்துக்கள் உண்டு.

இலங்கை இனப்பிரச்சனை என்பது சாராம்சத்தில் ஒரு புவிசார் அரசியல் பிரச்சினைதான். தமிழ் மக்கள் அனுபவிக்கும் எல்லா துயரங்களுக்கும் காரணம் அவர்களுடைய புவிசார் அமைவிடம்தான். ஈழத்தமிழர்களின் புவிசார் அரசியல் எனப்படுவது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான புவியியல் அருகாமையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது -Geographical proximity. இதில் சிங்கள மக்களுக்கும் இந்தியாவோடு அருகாமை உண்டு.தமிழ் மக்களுக்கும் உண்டு.ஆனால் சிங்கள மக்களை விடவும் தமிழ் மக்களுக்கு அதிகமாக இருப்பது தமிழ்நாடு.மொழியால்,இனத்தால்,பண்பாட்டால் இன்னபிறவால் இருநிலத்து தமிழ் மக்களுக்கும் இடையே அருகாமை அதிகம்.அந்த அருகாமையை பயன்படுத்தித்தான் இந்திய அரசு இந்திய-இலங்கை உடன்படிக்கையை நோக்கி கொழும்பை நிர்ப்பந்தித்தது. அதே அருகாமையை தமிழ் மக்களும் புத்திசாலித்தனமாக பயன்படுத்தலாம். பயன்படுத்த வேண்டும்.ஏனென்றால் சிறிய தேசிய இனங்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு எனப்படுவது அருகில் இருக்கும் பேரரசுகளால்தான் அதிகம் தீர்மானிக்கப்படுகிறது என்பது ஒரு வரலாற்று அனுபவம் ஆகும். பின்லாந்தில், திபெத்தில்,கிரீமியாவில்,சைபீரியாவில்,கிழக்குத் திமோரில் அதுதான் புவிசார் அரசியல் யதார்த்தம்.

எனவே ஈழத் தமிழர்களுக்கு இப்பொழுது தேவையாக இருப்பது கட்சிகளுக்கு அப்பாற்பட்ட, ஒரு தேசமாக சிந்திக்கின்ற வெளியுறவுக் கொள்கைதான். அதை அமல்படுத்தத் தேவையான ஒரு வெளியுறவு பொதுக்கட்டமைப்புத்தான்.அப்படி ஒரு கட்டமைப்பை உருவாக்குவது என்றால் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கட்சித் தலைவர்கள் உள்ளடங்களாக தாயகத்திலும், புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் உள்ள செயற்பாட்டாளர்களும் புத்திஜீவிகளும் அக்கறையுள்ள எல்லோரும் இணைந்த ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். தமிழ்மக்கள் அரசியலை அரூபமாக சிந்திக்காமல் தூலமாக பிரயோக வடிவத்தில் சிந்திக்க வேண்டும்.அதாவது கட்டமைப்புக்குள்ளால் சிந்திக்க வேண்டும்.ஒரு பொதுவான வெளியுறவுக் கொள்கை; ஒரு பொதுவான வெளியுறவு கட்டமைப்பு போன்றன இல்லாத ஒரு வெற்றிடத்தில்தான் இந்தியாவை நோக்கி எப்படிப்பட்ட ஒரு பொதுக் கோரிக்கையை முன்வைப்பது என்பது தொடர்பில் தெளிவற்ற நிலைமை காணப்படுகிறது.

பொருத்தமான கட்டமைப்புகள் இருந்தால் எந்த ஒரு நெருக்கடிக்குள்ளிருந்தும் விடுபடலாம் என்பதற்கு ஸ்ரீலங்காவில் அண்மைக்கால உதாரணம் உண்டு. டெல்டா திரிபு வைரஸ் நாட்டின் கழுத்தை நெரித்தது.ஒருபுறம் பொருளாதார நெருக்கடி.இன்னொரு புறம் வைரஸ் நெருக்கடி.மூன்றாவதாக ராஜதந்திர நெருக்கடி.இம் மூன்று நெருக்கடிகளையும் சமாளிப்பதற்கு அரசாங்கம் அதன் வெளியுறவு அணுகுமுறைகளில் சுதாகரித்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.அதற்குரிய கட்டமைப்புகளையும் நிபுணத்துவ அறிவையும் அவர்கள் பயன்படுத்தினார்கள்.அந்த மாற்றங்களை முன்னெடுக்ககூடிய நபர்களை உரிய பதவிகளில் நியமித்தார்கள். அதன் விளைவாக அண்மை மாதங்களில் அரசாங்கம் அதன் வெளியுறவு அணுகுமுறைகளில் ஒப்பீட்டளவில் மாற்றங்களை காட்டியிருக்கிறது.

அவர்கள் ஒரு அரசுடைய தரப்பு.அவர்களிடம் எல்லாவற்றுக்கும் கட்டமைப்புக்கள் உண்டு. ஆனால் அரசற்ற தரப்பாகிய தமிழ் மக்களிடம் உரிய பொருத்தமான வெளியுறவுக் கொள்கையும் கிடையாது ; ஒரு பொதுவான வெளியுறவுக் கட்டமைப்பும் கிடையாது. இவ்வாறான ஒரு வெற்றிடத்தின் பின்னணியில்தான் மேற்படி கட்சிகள் இதுவரை சந்தித்தன ; இனியும் சந்திக்கவிருக்கின்றன.

தமிழ் முற்போக்கு கூட்டணி பொகவந்தலாவையில் போராட்டம்

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும், பட்ஜட் ஊடாக மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் தமிழ் முற்போக்கு கூட்டணியால் இன்றைய தினமும் (07.11.2021) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

பொகவந்தலாவை நகரில் முற்பகல் 10.00 மணியளவில் ஆரம்பமான இப்போராட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதித் தலைவர்களான பழனி திகாம்பரம், வீ. இராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்களான வேலுகுமார், உதயகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

அத்துடன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும் போராட்டத்தில் பங்கேற்று, விலையேற்றத்தைக் கண்டித்தனர். இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, பொகவந்தலாவை நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் இன்று மூடப்பட்டிருந்தன.

” அத்தியாவசியப் பொருட்களின் விலையை உடனடியாக குறைக்கவும். வரவு – செலவுத் திட்டத்தில் நிவாரணம் வேண்டும். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அவர்களின் தொழில் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் உரம் வழங்க வேண்டும். அதற்கான விசேட பொறிமுறை அவசியம்.” எனவும் போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.