புதிய அரசியலமைப்பில் ‘13’ காணாமல் போகுமா? காப்பாற்ற முனையும் தமிழ்க் கட்சிகள் – அகிலன்

ரெலோவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டம்தான் கடந்த வாரம் தமிழ் அரசியல் வட்டாரங்களில் முக்கிய பேசுபொருளாக இருந்தது. காரசாரமான விமர்சனங்கள் – அச்சுறுத்தல்களுக்கு மத்தியில்தான் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டம் சுமுகமாக நடத்தப்பட்டதாகவும், தமிழரசுக் கட்சியையும் இணைத்து அடுத்த சந்திப்பு விரைவில் நடைபெறும் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கின்றார்கள். இதன் மூலம் இவர்கள் சாதிக்க நினைப்பது என்ன?

அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும், அதற்கான அழுத்தத்தை இந்தியா கொடுக்க வேண்டும் எனவும் கோரும் தீர்மானத்தை ஏழு கட்சிகள் இணைந்து நடத்திய இந்த சந்திப்பின் பின்னர் நிறைவேற்றிய தீர்மானத்தில் தெரிவித்துள்ளன. இந்தக் கோரிக்கை ஏற்கனவே முன்வைக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும் கூட, ஏழு கட்சிகள் இணைந்து இந்தக் கோரிக்கையை முன்வைத்திருப்பது தமிழ் அரசியலைப் பொறுத்தவரையில் முக்கியமான திருப்பம்!

கோட்டாபய ராஜபக்‌ச அரசாங்கத்தினால் தயாரிக்கப்படும் புதிய அரசியலமைப்பில், 13 ஆவது திருத்தத்தில் உள்ள அம்சங்கள் காணாமல்போகலாம் என எதிர்பார்க்கப்படும் ஒரு சந்தர்ப்பத்தில்தான் 7 சிறுபான்மையினக் கட்சிகள் இணைந்து இந்தக் கோரிக்கையை முன்வைத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. “இவ்விடயத்தில் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமாக இருந்தால், தமிழ்க் கட்சிகள் அனைத்தும் இணைந்து ஒருமித்த குரலில் இது தொடர்பில் கோரிக்கை வைக்க வேண்டும்” என இந்தியா கேட்டுக் கொண்டிருந்தது. அதன் தொடர்ச்சியாகவே தமிழ்க் கட்சிகள் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளன.

இந்தியத் தலைவர்கள், அதிகாரிகளைச் சந்திக்கும் சந்தர்ப்பங்களில், தமிழ்க் கட்சிகள் முன்வைக்கும் கோரிக்கைகளில் ஒன்றாக இது இருந்திருக்கின்றது. “இலங்கை அரசுக்கு நாம் அழுத்தம் கொடுப்பது என்பது ஒருபுறம் இருக்கட்டும். முதலில் நீங்கள் (தமிழ்க் கட்சிகள்) ஒன்றிணைந்து இதற்கான கோரிக்கையை தெளிவாக முன்வையுங்கள்” என்பதை புதுடில்லி தமிழர் தரப்புக்குச் சொன்னதையடுத்தே, தமிழ்க் கட்சிகளை இவ்விடயத்திலாவது இணைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டது.

ரெலோ அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சியில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி உட்பட ஏழு கட்சிகள் பங்குகொண்டமை முக்கிய அம்சமாகும். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என்.சிறிகாந்தா, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் சார்பில் பேராசிரியர் சிவநாதன், ரெலோ தேசிய அமைப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான குருசுவாமி சுரேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆனாலும்கூட, பிரதான தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் இவ்விடயத்தில் இணைக்க முடியாமல் போய்விட்டது. குறிப்பாக, இலங்கை தமிழரசுக் கட்சி இதில் கலந்துகொள்ளவில்லை. கொள்கை ரீதியான முரண்பாடுகள் எதுவும் அதற்கு காரணமல்ல. முயற்சியை ரெலோ முன்னெடுத்தமையால், தமது முக்கியத்துவம் குறைந்துவிடும் என தமிழரசுக் கட்சி கருதியிருக்கலாம். கட்சியின் தலைவர் மாவை. சேனாதிராஜா இதில் கலந்துகொள்வதாகக் கூறியிருந்தார். ஆனால், கட்சிக்குள் உருவாகிய அழுத்தங்களையடுத்து அவர் கலந்துகொள்ளவில்லை. கட்சியின் அரசியல் குழுவைக்கூட்டித்தான் இது குறித்து தீர்மானிக்க வேண்டும் என மாவை தரப்பில் பின்னர் தெரிவிக்கப்பட்டதாம்.

இதனைவிட, இதில் பங்குகொள்ளாத இரண்டாவது பிரதான கட்சி கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி. அவர்கள் இதில் கலந்துகொள்ள மாட்டார்கள் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். காரணம்: 13 ஆவது திருத்தத்தை முற்றுமுழுதாக நிராகரிக்கும் ஒரு கட்சியாக அது உள்ளது. 13 ஆவது திருத்தத்தை ஏற்றுக்கொள்வதென்பது, தமிழ் மக்களுடைய போராட்டத்தை இந்தியாவிடம் அடகுவைப்பதாகிவிடும் என்பதுதான் அவர்கள் பகிரங்கமாக வெளிப்படுத்தி வரும் நிலைப்பாடு. அதனால், 13 ஐ வலியுறுத்தும் இந்தச் சந்திப்பில் அவர்கள் கலந்துகொள்ளாமலிருந்தமை ஆச்சரியமான ஒன்றல்ல.

காப்பாற்ற முனையும் தமிழ்க் கட்சிகள்1987 ஆம் ஆண்டின் இலங்கை – இந்திய உடன்படிக்கையின் விளைவாக உருவாக்கப்பட்ட ஒன்றுதான் இந்த 13 ஆவது திருத்தம். அந்த வேளையில் வடக்கு, கிழக்கில் பெரும் பகுதியைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த விடுதலைப் புலிகள் அதனை நிராகரித்தார்கள். ஏனைய தமிழ்க் கட்சிகள் அதனை ஒரு இறுதித் தீர்வாக ஏற்கமுடியாது என்ற போதிலும், அதனை ஒரு ஆரம்பமாக ஏற்பதாகக் கூறினார்கள். அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழ்த் தலைவர்களுக்குக் கொடுத்த சில வாக்குறுதிகளும் இதனை ஏற்பதென்ற தமிழ்க் கட்சிகளின் முடிவுக்குக் காரணமாக இருந்தது.

ஆனால், 13 ஆவது திருத்தம் அது கொண்டு வரப்பட்டதிலிருந்து பல மாற்றங்களைக் கண்டிருக்கின்றது. இணைந்திருந்த வடக்கு, கிழக்கு பிரிக்கப்பட்டது. மாகாண சபைகளுக்கு இருந்த காணி, பொலிஸ் அதிகாரங்கள் பிடுங்கப்பட்டு விட்டன. இப்போது கல்வி, மற்றும் மருத்துவத் துறையில் மாகாண சபைகளுக்குள்ள அதிகாரங்களில் கைவைக்கப்படுகின்றது. மாகாண சபைகள் செயற்படாதிருப்பதால், ஆளுநர்கள் மூலமாக இவ்வாறு பல்வேறு விடயங்களையும் சாதிப்பதற்கு அரசு முற்படுகின்றது. அதனால்தான், மாகாண சபைகளுக்கான தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்பதும் 13 முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதும் தமிழ்க் கட்சிகளால் முன்வைக்கப்படும் கோரிக்கையாகவுள்ளது.

அதேவேளையில், இது இந்தியாவைத் திருப்திப்படுத்துவதற்கான ஒரு முயற்சி என்ற கருத்தும் முன்வைக்கப்படுகின்றது. 1987 இல் அப்போதிருந்த பூகோள – பிராந்திய நலன்களின் அடிப்படையில்தான் இலங்கையை உடன்படிக்கைக்குள் இந்தியா கொண்டுவந்தது. உடன்படிக்கையின் பின்னிணைப்பாக இருந்த கடிதங்கள் இதனை உறுதிப்படுத்தும். தமது நலன்கள் அடையப்பட்ட நிலையில்தான், 13 ஆவது திருத்தம் தொடர்பில் இந்தியா நீண்டகாலமாக மௌனமாக இருந்தது. வடக்கு, கிழக்கு பிரிக்கப்பட்ட போதிலும், மாகாண அதிகாரங்கள் பறிக்கப்பட்ட போதும் இந்தியா எதுவும் செய்யவில்லை.

இப்போது, சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துவரும் நிலையில், இலங்கை மீதான தமது பிடியை இறுக்குவதற்கு 13 மட்டும்தான் தமது கைகளில் உள்ள துரும்புச் சீட்டு என்பதை இந்தியா அடையாளம் கண்டுகொண்டுள்ளது. அதனால்தான், தமிழ்க் கட்சிகளை நோக்கி அதற்கான நகர்வை புதுடில்லி மேற்கொண்டது. 13 ஐ அடிப்படையாகக் கொண்டு தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சி இந்தியாவைத் திருப்திப்படுத்தும் செயற்பாடு என குற்றஞ்சாட்டப்படுவதற்கு அதுதான் காரணம்.

13 ஐ வலியுறுத்துவதன் பின்னணியில் இந்திய நலன்கள் உள்ளது என்பது உண்மையாக இருந்தாலும், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில், தற்போதைய நிலையில் அதனைப் பயன்படுத்திக் கொள்வதுதான் புத்திசாலித்தனமானது என இதனை முன்னெடுக்கும் கட்சிகள் கருதுகின்றன. 1987 இல் விடுதலைப் புலிகள் பலமான ஒரு அமைப்பாக இருந்தது. அதனால், பேரம் பேசக்கூடிய சக்தி அதற்கு இருந்தது. தற்போதைய நிலையில் உருவாகிவரும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொள்வதுதான் இராஜதந்திரமாக இருக்க முடியும். இந்த சந்தர்ப்பத்தையும் தவறவிட்டால், கோட்டாபய கொண்டுவரப்போகும் புதிய அரசியலமைப்பில் இருப்பதும் இல்லாமல் போய்விடக்கூடிய ஆபத்தும் இருக்கின்றது!

புதிய அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தத்தில் இருக்கக்கூடிய அம்சங்கள் தொடர்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்பதை கோட்டாபய அரசின் நிகழ்ச்சி நிரலைப் புரிந்துகொண்ட எவருக்கும் சொல்லத் தேவையில்லை. ஆதனால், தமது பிடி தளரலாம் என்ற அச்சம் இந்தியாவுக்கு இருக்கலாம். இந்தியா தற்போது இவ்விடயத்தில் தீவிரமாக இருப்பதற்கு அதுவும் ஒரு காரணமாகவும் இருக்கலாம். இந்த நிலைமையை எமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதுதானே இராஜதந்திரம் என்ற கூட்ட ஏற்பாட்டாளர்களின் கருத்தையும் புறக்கணித்துவிட முடியவில்லை.

Source:இலக்கு

Posted in Uncategorized

யாழில் குறைந்த பாராளுமன்ற ஆசனம் கம்பஹாவுக்கு

கம்பஹா மாவட்டத்துக்கு இதுவரை இருந்து வந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரிக்கப்படுவதாக கம்பஹா மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் ஜயலால் தெரிவித்துள்ளார்.

கம்பஹா வட்டத்துக்கு இதுவரை இருந்துவந்த பாராளுமன்ற ஆசனங்களின் மொத்த எண்ணிக்கை 18ஆக இருந்தது.

புதிய வாக்காளர் பதிவில் வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு அமைய கம்பஹா மாவட்டத்துக்கு ஒரு ஆசனம் அதிகரித்திருக்கின்றது.

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு அமைய மாவட்ட மட்டத்தில் ஆசனங்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்படுகிறது.

அதன் பிரகாரம் யாழ்ப்பாண மாவட்டத்தில் இதுவரை 6 பாராளுமன்ற ஆசனங்கள் இருந்து வந்தன.

தற்போது அது 5ஆக குறைவடைந்துள்ளது. புதிய வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு அமையவே ஒரு ஆசனம் குறைந்துள்ளது. அவ்வாறு குறைந்த ஆசனம் கம்பஹா மாவட்டத்துக்கு சென்றிருக்கின்மை குறிப்பிடத்தக்கது.

பொது இடங்களில் தடுப்பூசி அட்டை கட்டாயம்

பொது இடங்களுக்கு செல்லும்போது பொது மக்கள் தடுப்பூசி அட்டையை வைத்திருப்பதை கட்டாயமாக்குவது குறித்து, இலங்கை கூடுதலான கவனம் செலுத்தியிருப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இந்த வேலைத் திட்டத்தை இலங்கையிலும் நடைமுறைப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

கனேடிய உயர்ஸ்தானிகருடனான சந்திப்பின் போதே சுகாதார அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

கனடாவில் பொது இடங்களில் பிரவேசிக்கும் போது தடுப்பூசி அட்டையினை வைத்திருப்பது கட்டாயம் என்று உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கினன் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையின் மூலம் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க முடியும் என்றும் கனேடிய உயர் ஸ்தானிகர் சுட்டிக்காட்டினார்.

Posted in Uncategorized

நாட்டில் அதிகரிக்கும் போராட்டங்கள் – அடிப்டை காரணத்தை வெளியிட்ட மைத்திரிபால சிறிசேன

மக்கள் பிரதிநிதிகள் மக்களுடன் இல்லாத காரணத்தினாலேயே நாட்டில் போராட்டங்கள் இடம்பெறுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் அரச தலைவருமான மைத்திரிபால சிறிசேன   தெரிவித்தார்.

பத்தேகமவில் உள்ள தொழிற்பயிற்சி நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்ற காலி மாவட்ட தேர்தல் அமைப்பாளர்களின் கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“இன்று நாடு முழுவதும் ஆசிரியர்கள், விவசாயிகள், பிற கட்சிகள் மத்தியில் போராட்டங்கள் அலை வீசுகின்றன. இதற்கு மக்கள் பிரதிநிதிகளே காரணம். அவர்கள் மக்களிடம் செல்வதில்லை. மக்களின் பிரச்சினைகளை அடையாளம் கண்டு பேசுவதில்லை. ஒவ்வொரு கட்சியையும் விமர்சித்து வருகின்றனர்.

நாட்டில் பொருட்களின் விலை மேலும் உயர்ந்தால் மோசமான நிலை ஏற்படும்.பொருட்களின் விலை உயர்வை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொருட்களின் விலையை குறைக்குமாறு நாங்கள் அரசாங்கத்திடம் முன்மொழிந்தோம் ஆனால் சாதகமான பதில் கிடைக்கவில்லை.

எமது கட்சியின் எதிர்காலத்தை மாவட்ட மட்டத்தில் அபிவிருத்தி செய்து வருகிறோம், இந்த நாட்டில் எந்தக் கட்சியாலும் தனித்துச் செல்ல முடியாது, தனித்து ஆட்சி அமைக்க முடியாது” என்றார்.

நவம்பர் 20ம் திகதி: போரினால் இறந்தவர்களுக்கான சிறப்பு நாளாக சிறப்பிப்போம்-வடக்கு கிழக்கு ஆயர்கள் பேரவை

வரும் நவம்பர் 20ம் திகதி இலங்கையில் நடைபெற்ற 30 வருட கால போரினால் இறந்தவர்களுக்கான சிறப்பு நாளாக நினைவு கூர்ந்து மன்றாடுகின்ற நாளாக சிறப்பிப்போம் என வடக்கு கிழக்கு ஆயர்கள் பேரவை அறிவித்துள்ளது.

இது தொடர்பில் வெளியிட்டுள்ள

Posted in Uncategorized

இலங்கையில் சீனாவின் இராணுவத் தளம்

இலங்கையில் இராணுவத் தளம் அமைப்பது தொடர்பில் சீனா பரிசீலித்து வருவதாக அமெரிக்காவின் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் அறிக்கை வெளியிட்டுள்ளது.

“சீன மக்கள் குடியரசை உள்ளடக்கிய இராணுவம் மற்றும் பாதுகாப்பு அபிவிருத்திகள்” என்ற தலைப்பில், பென்டகன், நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்குறிப்பிட்ட விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதிக தொலைவில் தமது இராணுவ பலத்தை நிலைநிறுத்த சீனா முயல்வதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இலங்கை உட்பட 13 நாடுகளில் இராணுவ தளங்கள் அல்லது இராணுவத் தளவாட வசதிகளை நிறுவுவது குறித்து சீனா பரிசீலித்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூர், பாகிஸ்தான், மியன்மார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் தாய்லாந்து ஆகியவை அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ள பிற நாடுகளில் அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா தனது கடற்படை, விமானப்படை மற்றும் தரைப்படைகளின் வலிமையை அதிகரிக்க இந்த வசதிகளை நிறுவ பரிசீலித்து வருவதாக பென்டகன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

முத்துராஜவெல வர்த்தமானி: ரிட் மனுத் தாக்கல் செய்த கர்தினால்

முத்துராஜவெல ஈரநிலங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் குறித்து கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித், உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

நீர்கொழும்பு, வத்தளை, ஜா-எல பிரதேசங்களில் உள்ள முத்துராஜவெல ஈரநிலத்திற்கு சொந்தமான 3,000 ஏக்கருக்கும் அதிகமான காணிகளை நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் சுவீகரிக்க எடுக்கப்பட்ட தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன் பிரதிவாதிகளாக நகர அபிவிருத்தி அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா, சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர, நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர், மத்திய சுற்றாடல் அதிகார சபை, வத்தளை, நீர்கொழும்பு மற்றும் ஜா-எல பிரதேச செயலாளர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் 07ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக முத்துராஜவெல சதுப்பு நிலப் பகுதிக்கு சொந்தமான 3000 ஏக்கருக்கும் அதிகமான காணிகளை நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.

இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுவதுடன் அவர்களது வசிப்பிடமும் கடுமையாக சவாலுக்கு உள்ளாகியுள்ளதாக மனுதாரரான பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி, குறித்த காணியை நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் சுவீகரிப்பது தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வலுவிழக்கும் வகையில் ரிட் கட்டளை ஒன்றை பிறப்பிக்குமாறு மனுதாரர் கோரியுள்ளார்.

அரசாங்கத்தைப் பாதுகாப்பது மிகவும் கடினம் – வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ்

அரசாங்கத்தைப் பாதுகாப்பது மிகவும் கடினம் என வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ்  தெரிவித்துள்ளார்.

கண்டி அஸ்கிரிய பீடத்திற்குச் சென்ற அவரிடம் ஊடகவியலாளர்கள் தொடுத்த கேள்விக்குப் பதிலளிக்கும் போதே இதனை அவர் குறிப்பிட்டிருந்தார். இதன்போது மேலும் பதில் வழங்கிய அவர்,

“கூட்டணி அமைத்துள்ள அரசாங்கத்திற்குள் பல்வேறு கருத்துக்கள் இருக்கும். இது இயல்பான ஒன்று. ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கின்றது. என்ன தான் இருந்தாலும் இறுதியில் அரசாங்கமே நிலைபெறுகின்றது.

ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு எமது நாட்டில் சக்தியுள்ளது. மக்கள் எமது அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து, அதிகாரத்தை வழங்கியுள்ளார்கள். அந்த விசுவாசத்தையும் அரசாங்கத்தையும் பாதுகாக்க வேண்டும்.

பல்வேறு தரப்பினரின் தியாகம், அர்ப்பணிப்பில் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தைப் பாதுகாக்க வேண்டும். சில நேரங்களில் அரசாங்கத்தை அமைப்பதைவிட அமைத்த அரசாங்கத்தைப் பாதுகாப்பது கடினமானது.

ஆகவே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது இலகுவானது. அரசாங்கத்திற்குள் பிரச்சினை இருப்பது இயல்பானது. அதனை தீர்த்துக் கொள்ள முடியும். பிரச்சினையில்லாத அரசாங்கம் இந்த நாட்டில் இருந்துள்ளதா? எனவே இதனைக் குறித்து அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்றார்.

எல்லைமீறும் சர்வதேசம்! இருண்ட யுகத்தை நோக்கி நகரும் இலங்கை – தேரர் எச்சரிக்கை

நாட்டின் உள்ளக விவகாரங்களில் சர்வதேசத்தின் தலையீடு என்பது எல்லைகடந்து சென்றுள்ளது. இவ்வாறான நிலையில் இனங்களுக்கிடையில் தேசிய நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படாவிடின் நாட்டின் எதிர்காலம் இருண்ட யுகத்தை நோக்கிச் செல்லும் என்பதில் ஆச்சிரியமில்லை என அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக ஸ்ரீ மெதகம தம்மானந்த தேரர்  தெரிவித்துள்ளார்.

குறுகிய நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டவர்கள் மதங்களுக்கிடையில் முரண்பாட்டை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள். அரசியல்வாதிகள் அதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் பல்லின சமூகத்தினர் வாழ்கிறார்கள். இருப்பினும் இன நல்லிணக்கம் இதுவரையில் கேள்விக்குள்ளாக்கப்பட்டதாக காணப்படுகிறது. கடந்த காலங்களில் இனங்களுக்கிடையில் இடம்பெற்ற முரண்பாடுகளினால் ஒரு தரப்பினர் பயன்பெற்றுக் கொண்டதனை பல்வேறு சம்பவங்கள் ஊடாக அறிய முடிகிறது.

நாட்டின் உள்ளக விவகாரங்களில் சர்வதேசத்தின் தலையீடு எல்லை கடந்து சென்றுள்ளது. இவ்வாறான நிலையில் இனங்களுக்கிடையில் தேசிய நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படாவிடின் நாட்டின் எதிர்காலம் இருண்ட யுகத்தை நோக்கில் செல்லும் என்பதில் ஆச்சிரியமில்லை.

பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கம் அரசியல்வாதிகளுக்கு கிடையாது. அத்துடன் இன நல்லிணக்கத்தை அரசியல்வாதிகள் விரும்புவதில்லை.

தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் பொறுப்பு மத தலைவர்களுக்கு உண்டு மத தலைவர்கள். சமூகத்தை ஒன்றிணைப்பதற்கு மத கொள்கையில் குறிப்பிடப்பட்ட விடயங்களுக்கு அமைய செயற்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

ஐரோப்பா மீண்டும் கோவிட் தொற்றின் கேந்திரமாக மாறலாம் : உலக சுகாதார அமைப்பு

ரோப்பா மீண்டும் கோவிட் தொற்று நோயின் கேந்திர நிலையமாக மாறலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய பிராந்தியத்தில் பயணக்கட்டுப்பாடுகள் துரிதமாக தளர்ப்பட்டுள்ளமை மற்றும் போதுமானளவில் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாமை என்பன இதற்கு காரணம் என உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இதனடிப்படையல், எதிர்வரும் பெப்ரவரி மாதமளவில் ஐரோப்பிய பிராந்தியத்தில் மேலும் 5 லட்சம் கோவிட் மரணங்கள் ஏற்படக் கூடும் என உலக சுகாதார அமைப்பு கணித்துள்ளது.

53 ஐரோப்பிய நாடுகளில் இதுவரை கொரோனா காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்தை தாண்டியுள்ளது. அத்துடன் கோவிட் தொற்றுக்கு உள்ளாகும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளார்.