சீனா நிறைவேற்றியுள்ள புதிய எல்லை பாதுகாப்பு சட்டம்

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் எல்லை தொடர்பான பிரச்சினைகள் நீடித்து வரும் நிலையில், சீனா நேற்று முன்தினம் புதிய எல்லைகளுடன் சம்பந்தப்பட்ட நிலங்கள் தொடர்பான பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

சீனாவின் இறையாண்மையை பாதுகாக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த சட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது என சீனா அறிவித்துள்ளது.

இந்த புதிய சட்டத்தின் படி பிராந்திய இறையாண்மை மற்றும் தனது நாட்டின் எல்லைகளை குறைத்து மதிப்பிடும் எந்த செயற்பாடாக இருந்தாலும் அதனை சீனா எதிர்க்கும் என கூறப்பட்டுள்ளது.

எல்லையை தாண்டி வந்து தாக்குதல் நடத்துவோர் மீது பதில் தாக்குதல் நடத்த இந்த சட்டத்தின் மூலம் சீனப் படையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எல்லைகளில் நடைபெறும் ஆக்கிரமிப்பு, படையெடுப்புகள் போன்ற நடவடிக்கைகளை சீனா உறுதியுடன் எதிர்க்கும். அத்துடன் நாட்டின் எல்லைப் பகுதிகளில் போக்குவரத்து, தொலைத் தொடர்பு, கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பான கட்டமைப்புகள் உருவாக்கப்படவுள்ளன.

ஏற்கனவே இந்திய எல்லை கிராமங்களில் சீனா, தனது பொதுவசதிகள் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகளை உருவாக்கி வரும் நிலையில், அதனை வலுப்படுத்தும் வகையில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கிழக்கு லடாக் எல்லைப்பகுதியில் இந்தியா – சீனா இடையிலான எல்லைப் பிரச்சினை நீடித்து வருவதுடன் லடாக் பகுதியில் இந்திய – சீன இராணுவத்தினர் இடையில் மோதல் நடைபெற்ற வரும் சூழ்நிலையில் இந்தப் பிரிவு சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.

இதனை தவிர அயல் நாடுகளுடனான எல்லைப் பிரச்சினைகளுக்கு பரஸ்பர நம்பிக்கை மற்றும் நட்பு ரீதியிலான பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணப்படும் எனவும் இந்த சீனா நிறைவேற்றியுள்ள சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

கனடியத் தூதரக அதிகாரிகள் யாழ் பல்கலைக்கு விஜயம்

கனடியத் தூதரக அதிகாரிகள் இன்று (25) காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.

கனேடிய அரசின் நிதி அனுசரணையுடன் இலங்கையிலுள்ள நான்கு பல்கலைக்கழகங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் திட்ட மேம்பாடு குறித்து ஆராய்வதற்காகவே கனடிய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள் குழு இன்று யாழ். பல்கலைக்கழகத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டது.

தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுத் திட்டத்தின் பணிப்பாளர் டொம் ப்றவ்ணல் தலைமையில் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர். விஜயலட்சுமி, திட்ட ஆலோசகர் ஆகியோரே கனடியத் தூதரகத்தின் சார்பில் விஜயம் செய்தனர் .

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, கலைப்பீடாதிபதி கலாநிதி கே. சுதாகர், மொழிபெயர்ப்புகள் கற்றல் துறையின் தலைவர் எஸ். கண்ணதாஸ் ஆகியோரை கனடிய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள் சந்தித்து திட்ட மேம்பாடு குறித்து கேட்டறிந்தனர்.

Posted in Uncategorized

அசாத் சாலிக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வௌியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் இன்று அசாத் சாலிக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கின் சாட்சி விசாரணைகளை எதிர்வரும் நவம்பர் 02 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கான அறிவிப்பை விடுத்த நீதிபதி, முறைப்பாட்டின் சாட்சியாளர்களை அன்றைய தினம் மன்றில் ஆஜராகுமாறு அறிவித்தலை அனுப்புவதற்கும் உத்தரவிட்டுள்ளார்.

வழக்கின் சாட்சிப் பொருளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இறுவெட்டையும் அன்றைய தினம் மன்றில் சமர்ப்பிக்குமாறு அது குறித்து விசாரணை நடத்திய குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இறுவெட்டை பகிரங்க நீதிமன்றத்தில் ஔிபரப்பு செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மேல் நீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதி அமல் ரணராஜா இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Posted in Uncategorized

திரவ உர இறக்குமதி: விசாரணை நடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தி முறைப்பாடு

இந்தியாவிலிருந்து திரவ உர இறக்குமதியின் போது, தனியார் நிறுவனமொன்றுக்கு பணம் செலுத்திய விடயம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்ற விசாரணை திணைக்களத்தில் இன்று முறைப்பாடொன்றை முன்வைத்தனர்.

இந்தியாவிலிருந்து நனோ நைட்ரஜன் இறக்குமதிக்காக 29 கோடி ரூபா பணம் தனியார் நிறுவனமொன்றினால் கடந்த 17ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் பாராளுமன்றத்தில் கருத்து வௌியிட்டிருந்தார்.

அந்த பணத்தில், 09 கோடியே 20 இலட்சம் ரூபா மாத்திரம் உர இறக்குமதிக்கு செலவிடப்பட்டுள்ளதாகவும் மீதி பணம் அந்த கணக்கிலேயே வைப்பிலுள்ளதாகவும் விஜித ஹேரத் தெரிவித்திருந்தார்.

அருட்தந்தை சிறில் காமினிக்கு எதிராக மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே முறைப்பாடு

அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று முறைப்பாடொன்றை முன்வைத்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அருட்தந்தை சிறில் காமினி மற்றும் ஏனைய சிலரால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ஆட்சேபித்து இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அருட்தந்தை சிறில் காமினி மற்றும் ஏனைய சிலரால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு கடுமையான எதிர்ப்பை வௌியிட்டுள்ளதுடன், அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானவை என முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாம் எந்தவொரு நிலைமையின் கீழும் எந்தவொரு தினத்திலும் சஹரான் ஹாசிம் அல்லது அவருடைய வழியை பின்பற்றியவர்களுடன் தொடர்புகளை பேணவில்லை என அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கூறியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கையை எடுக்குமாறு மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே தனது முறைப்பாட்டினூடாக கோரிக்கை விடுத்துள்ளார்.

Posted in Uncategorized

விரைவில் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம் – இராதாகிருஷ்ணன்

அரசாங்கம் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை கொண்டிருந்தாலும் மக்கள் மத்தியில் பெரும்பான்மை பலத்தை இழந்திருக்கின்றது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

எனவே, விரைவில் இந்த அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்புவோம். அதுவரை ஓயமாட்டோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு எதிராக இராகலை நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “குறுகிய காலத்தில் மக்களின் அதிருப்தியை சம்பாதித்து கொண்ட ஒரு அரசாங்கம் என்றால் அது இந்த அரசாங்கமே. இன்று எதை கேட்டாலும் விலையேற்றம், தட்டுப்பாடு என்ற வார்த்தைகளே வெளிவருகின்றது.

இந்த தீபாவளி தமிழர்களுக்கு ஒரு கறுப்பு தீபாவளியைாக அமைய போகின்றது. பொருட்களின் விலையேற்றம்,வேலைக்கான உரிய சம்பளமின்மை, தொடர்ச்சியான மக்களின் போராட்டம் போன்ற காரணங்களால் இந்த தீபாவளியை மக்கள் கொண்டாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

குறிப்பாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் விசேடமாக கொண்டாடும் தீபாவளி தினத்தை துக்க தினமாக கொண்டாட வேண்டிய சூழ்நிலையை இந்த அரசாங்கம் உருவாக்கியிருக்கின்றது.

நல்லாட்சி அரசாங்கத்தில் 50 ரூபாய் சம்பள உயர்வை தோட்ட தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுக்க முடியாது என்று எங்களை பார்த்து கை நீட்டியவர்கள் இன்று என்ன செய்துக்கொண்டிருக்கின்றார்கள்.

வாய் மூடி மௌனிகளாக அரசாங்கத்தை வக்காளத்து வாங்கி கொண்டிருக்கின்றார்கள். தொழிலாளர்களுக்கு எதிராக நடக்கின்ற அநீதிகளுக்கு குரல் கொடுக்க முடியாமல் இருக்கின்றார்கள்.

இப்படியான ஒரு நிலையில் நல்லாட்சியை குறை சொல்ல யாருக்கும் அருகதை கிடையாது. நல்லாட்சி அரசாங்கத்தில் கணிசமான சம்பள உயர்வை வழங்கியதோடு, எந்த காரணத்திற்காகவும் அத்தியவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கபடவில்லை.

எனவே, மக்களுக்கு துரோகம் செய்து கொண்டிருக்கின்ற இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் வரை தமிழ் முற்போக்கு கூட்டணியின் போராட்டம் தொடரும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

தமிழர்களுக்கு கிடைக்குமா தனி ஈழம்? தென்னிலங்கையில் ஆதரவுக் குரல்

தமிழர்களுக்கு தனி ஈழம் வழங்க வேண்டும் என்கிறார் புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன.

இலங்கையின் வளங்கள் மற்றும் நிலங்கள் பல்வேறு நாடுகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டால் இந்த நாட்டில் பிறந்த தமிழ் மக்களுக்கு ஏன் அவர்களின் ஈழத்திற்கான உரிமை வழங்கக் கூடாது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

கொழும்பு துறைமுக நகரத்தை சீனாவிற்கும், திருகோணமலையில் உள்ள எண்ணெய் கஞ்சியங்களை இந்தியாவிற்கும், கெரவலபிட்டி மின் நிலையத்தை அமெரிக்காவிற்கும் என வளங்களை வழங்கினால் – தமிழ் மக்களுக்கு அவர்கள் விரும்பும் ஈழத்தை வழங்குவது மிகவும் நியாயமானதாக இருக்கும்.

பொது வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் தமிழர்களுக்கு ஈழம் வழங்கப்பட வேண்டும். அது சர்வதேச அங்கீகாரதிற்கு வழியேற்படுத்தும் என்று விக்கிரமபாகு கருணாரத்ன கூறியுள்ளார்.

அத்தோடு, தமது ஈழ மண்ணிற்காக வடக்கில் தமிழ் இளைஞர்களால் தொடங்கப்பட்ட போராட்டம் மேற்கத்திய உலகத்தால் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு ஒடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Posted in Uncategorized

நல்லூரின் 11ஆவது நிர்வாக அதிகாரி கடமைகளை பொறுப்பேற்பு

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பதினோராவது நிர்வாக அதிகாரியாக குமரேஷ் சயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியார் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

நல்லூர் கந்தசுவாமி ஆலய பத்தாவது நிர்வாக அதிகாரியான குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியார் கடந்த 09ஆம் திகதி இறைபாதமடைந்தார்.

அன்றைய தினம் (09.10.2021) தொடக்கம், குமரேஷ் சயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் காலம் ஆரம்பமானது.

இந்த நிலையில் இன்றைய தினம் குமரேஷ் சயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியார் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்று விசேட பூஜை வழிப்பாட்டில் கலந்து கொண்டிருந்தார்.

பத்தாவது நிர்வாக அதிகாரியான குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியார் 1964 டிசம்பர் 15 முதல் கடந்த 09ஆம் திகதி அவர் இறைபாதமடையும் வரை அவரே நிர்வாக அதிகாரியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

கிழக்கு ஆளுநர் இனக்கலவரத்தை ஏற்படுத்த முனைகிறார் பகிரங்க குற்றச்சாட்டு

கிழக்கின் ஆளுநர் அனுராதா ஜகம்பத்  பல்லினத்திற்கான ஆளுநராக இல்லாமல் தனிப்பட்ட ஒரு இனத்தின் ஆளுநராகவே செயற்படுகின்றார்.

அவர் பெரும்பான்மை மக்களை எமது மக்களின் நிலங்கள், மேய்ச்சல் தரைகள் போன்றனவற்றில் குடியமர்த்தி இனக்கலவரத்தை ஏற்படுத்த முனைகின்றார் என்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்.

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட காரமுனை காணிப் பிரச்சினை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அவர் மூன்று விடயங்களை செய்து கொண்டிருக்கின்றார். ஒன்று, பெரும்பான்மை மக்களை எமது மக்களின் நிலங்களில் குடியமர்த்தி இனக்கலவரத்தை ஏற்படுத்த முனைகின்றார். இரண்டாவது, தமிழ் பேசும் உயர் அதிகாரிகள் ஓய்வு பெற்றுச் செல்லும் போது அந்த உயர் நிர்வாகங்களில் சிங்களவரை நியமிக்கின்றார். மூன்றாவது, ஒழுங்கான முறையில் இயங்கிக் கொண்டிருக்கும் உள்ளுராட்சி சபைகளைக் கலைப்பதற்காக தங்கள் அடிவருடிகளை இங்கு அனுப்பி அந்தச் சபைகளைக் குழப்பிக் கொண்டிருக்கின்றார்.இவற்றையே அவர் செவ்வனே செய்துகொண்டிருக்கிறார்.

நாங்கள் விழிப்பாக இல்லாது விட்டால் எங்கள் வீட்டுக் கதவுகளும் குடியேறுவதற்கு தட்டப்படும் நிலையே உருவாகும். விழிப்புடன், அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுவதன் மூலம் நாங்கள் எங்கள் உரிமையைப் பாதுகாக்க முடியும்.

நாங்கள் யாருக்கும் எதிரிகள் அல்ல. எமது மண்ணைப் பாதுகாப்பதற்காகவே நாங்கள் கஸ்டப்படுகின்றோம்.

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது போல நாங்கள் எங்களுக்குள் பிளவு பட்டால் கூத்தாடிகள் கூரையைப் பிரித்துக் கொண்டு இங்கு குடியேறுவதற்கு வருவார்கள். எனவே இந்த விடயத்தில் மிகக் கவனமாக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

வட மேல் மாகாண ஆளுநர் கட்சி தலைமையிலிருந்து நீக்கம்

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தவிசாளர் ராஜா கொல்லுரே பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கட்சித் தலைமையகத்தில் இன்று (24) நடைபெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வட மேல் மாகாண ஆளுநராக பதவி வகிக்கும் ராஜா கொல்லுரேவை, கட்சியின் அரசியல் குழுவினால் கொண்டுவரப்பட்ட யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கமைய, தவிசாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட பின்னர், சேவை புறக்கணிப்பில் ஈடுபடும் வடமேல் மாகாண அதிபர் மற்றும் ஆசிரியர்களின் நவம்பர் மாதம் சம்பளத்தை இடைநிறுத்தப் போவதாக ராஜா கொலுரே கூறியதுடன் அது சமூகத்தில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.