’இன மோதல்களுக்கு அரசாங்கம் தூபமிடுகிறது’ – ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்

ஒரே நாடு ஒரே சட்டத்திற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவராக சர்ச்சைக்குரிய ஞானசார தேரர் நியமிக்கப்பட்டிருப்பதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

இந்த நியமனத்துக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது, எவருக்குமே அறவே புரியாத, எந்தவிதமான தெளிவுமற்ற ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற விவகாரம் பற்றி பல்லின சமூகத்தவர் வாழும் இலங்கை நாட்டில் மக்கள் மத்தியிலும் பொது வெளியிலும் தாறுமாறான கருத்துக்கள் பரவலாக நிலவிவருகின்றன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான நோக்கம் ஆட்சிமாற்றத்தை அடிப்படையாகக் கொண்டதா?  முஸ்லிம்களையும், அல்லாஹ்வையும் பகிரங்கமாகவே நிந்தித்து வருபவரும், பொதுவாக பௌத்தம் தவிர்ந்த ஏனைய சமயங்கள் மீது பகிரங்கமாகத் தமது வெறுப்புணர்வை கொட்டித் தீர்த்து வரும் ஞானசார தேரரை தலைவராக நியமித்திருப்பது நாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்ற இனங்களுக்கிடையிலான துருவப்படுத்தலை மேலும் மோசமான நிலைமைக்கே  இட்டுச்செல்லும் எனவும் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் இச்செயல்பாடானது நாட்டில் அமைதியின்மை தொடர்வதற்கும் இனங்களுக்கிடையிலான மோதல்கள் அடிக்கடி நிகழ்வதற்கும் தூபமிடும் செயலாகவே அமைந்துள்ளதாகதாகவும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

இன விகிதாசாரத்தை மாற்றி அமைக்கும் செயற்பாட்டுக்கு எதிராக கண்டனம்

வவுனியா வடக்கில் இன விகிதாசாரத்தை மாற்றியமைக்கும் செயற்பாட்டுக்கு எதிராக எதிர்வரும் வெள்ளிக் கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.

வவுனியா, பழைய பேரூந்து நிலையம் முன்பாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஏற்பாட்டில் குறித்த கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.

மதவாச்சியில் உள்ள 1330 சிங்கள குடும்பங்களை வவுனியா வடக்கு பிரிவில் இணைத்து இன விகிதாசரத்தை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னனி தெரிவித்துள்ளது.

தமிழ் மக்களின் நிலத்தையும், இருப்பையும் காக்க தமிழ் மக்களை இவ் ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிணையுமாறும் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய உட்பட பலர் மீது சர்வதேச நீதிமன்றில் வழக்குத் தாக்கல்!

ஆட்கடத்தல்கள், சட்டவிரோதமான தடுத்துவைப்புக்கள், சித்திரவதைகள் போன்றனவற்றைப் புரிந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சிறிலங்காவின் அரச தலைவர் கோட்டாபாய ராஜபக்ச உட்பட பல இராணுவ உயரதிகாரிகள் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (International Criminal Court (ICC) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Global Rights Compliance LLP (GRC) என்ற சட்டவல்லுனர் அமைப்பு இந்த வழக்கைத் தாக்கல் செய்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த முக்கியஸ்தர்களை புலனாய்வு செய்து, உரிய நேரத்தில் கைதுசெய்து, குற்றவிசாரணை செய்யவேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் தற்போதைய அதிபரும் முன்னாள் பாதுகாப்புச் செயலருமான கோட்டாபய ராஜபக்ச, சிறிலங்காவின் தற்போதைய பாதுகாப்புச் செயலரும் சிறிலங்கா இராணுவத்தின் (SLA) முன்னாள் இராணுவ அதிகாரியுமான கமல் குணரட்ண, சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும் சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரியுமான ஜகத் ஜெயசூரியா, சிறிலங்கா பொலிஸின் குற்ற விசாரணைப் பிரிவு (CID) மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவுகளின் (TID) பிரதிப் பொலிஸ்மா அதிபர் சிசிர மென்டிஸ் உட்பட 2002ம் ஆண்டு முதல் சிறிலங்கா காவல்துறையின் (SLP) பொலிஸ்மா அதிபர்களாகப் பதவி வகித்து வந்தவர்கள் மற்றும் 2002ம் ஆண்டு முதல் சிறிலங்கா காவல்துறையின் விசேட அதிரடிப்படைப்பிரிவின் (STF) கட்டளை அதிகாரிகளாக செயற்பட்டவர்கள் போன்றோர்களின் பெயர்களும் அந்த மனுவில் இடம்பெற்றுள்ளன.

சிறிலங்காவிலும் பிரித்தானியாவிலும் வாழும் ஏராளமான பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆட்கடத்தல்கள், சட்டவிரோதமான தடுத்துவைப்புக்கள், சித்திரவதைகள் ஆகிய செயற்பாடுகள் ஊடாக வலுக்கட்டாயமாக நாடுகடத்தல், தாயகத்திற்கு திரும்பிச் செல்வதற்கான உரிமையினை மறுதலித்தல், துன்புறுத்துதல் ஆகிய மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் பொறுப்பாக இருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றம் சுமத்தப்பட்டவர்கள் இலங்கையில் இடம்பெற்ற மிகமோசமான ‘வெள்ளை வான் கடத்தல்கள்’ உட்பட்ட மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைப் புரிவதில் ஈடுபட்டுள்ளதற்கான ஆதாரங்களும் வழங்கப்பட்டுள்ளதாக, இந்த வழக்கினைத் தாக்கல் செய்த புலம்பெயர் அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்ட 200 இலங்கைத் தமிழர்கள் சார்பாக Global Rights Compliance LLP (GRC)என்ற சட்டவல்லுனர் அமைப்பினால் ரோமச் சட்டத்தின் 15ஆவது சரத்தின் (Article 7 of the Rome Statute) கீழ் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கு நடத்துபவருக்கு இத்தொடர்பாடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Posted in Uncategorized

இராணுவ வீரராக இருந்தவருக்கு விவசாயிகளின் நிலை புரியாது – நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம்  

இராணுவ வீரராக இருந்த ஜனாதிபதி அவர்களுக்கு விவசாயிகளின் நிலைமை புரியாது. எனவே அரசானது தனது பிடிவாதத்தை கைவிட்டு கொள்கைகளிலும் மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும் என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமை குழு உறுப்பினரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வினோ நோகராதலிங்கம்    தெரிவித்தார்.

இரசாயன உரம் மற்றும் கிருமிநாசினி வேண்டி மன்னார் மாவட்டத்தின் 174 கமநல சேவை விவசாய அமைப்புக்கள் ஒன்றிணைந்து மன்னார் விவசாய சம்மேளனத்தின் தலைமையில் உயிலங்குளம் பகுதியில் கடந்த மாபெரும் கவனயீர்ப்பு போரட்டம் ஒன்றை கடந்த ஜதிங்கள் கிழமை (25.10.2021) மேற்கொண்டனர்.

இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கும் போதுமன்னார் மாவட்ட விவசாயிகள் ஒன்று திரண்டு இரசாயன உரம் மற்றும் கிருமி நாசினி வேண்டி போராட்டத்தில் குதித்துள்ளனர். இவர்களுடைய போராட்டத்தில் நாங்களும் இவர்களுடன் முழுமையாக இணைந்துள்ளோம்.

இப்பிரச்சனை மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கு மட்டுமல்ல இந்த நாடு முழுவதும் இவ் பாரிய பிரச்சனையாக இருக்கின்றது.

விவசாயிகளை கைவிட்டால் இந்த நாடு பெரியதொரு வறுமைக்கு தள்ளப்பட்டு விடும்.அரசானது இந்த உரப் பிரச்சனையை விட்டுக்கொடுக்காத நிலையில் அவர்கள் தன்னிச்சையான செயல்பாட்டில் இருந்து வருகின்றனர்.

ஒரு இராணுவ வீரனாக இருந்தவருக்கு விவசாயத்தின் அருமை தெரியாத நிலையே இங்கு காணப்படுகின்றது.ஆகவே அரசானது உரத்தை இறக்குமதி செய்து விவசாயிகளின் போராட்டத்தை நிறுத்துவதற்கான செயல்பாட்டில் இறங்க வேண்டும் என்பதை இந்த நேரத்தில் அரசுக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

மன்னார் மாவட்டத்திலுள்ள விவசாய நிலம் சேதன பசளைக்கு இடம்கொடுக்காத நிலை காணப்படுவதால் திடீரென சேதன பசளைக்கு இங்குள்ள நிலத்தை மாற்றுவது ஒரு கடினமான செயல்பாடாகும்.

ஆகவே விவசாயிகள் இவ் நிலத்தை சேதன பசளைக்கு ஏற்ப இவ் நிலத்தை பக்குவப்டுத்தும் வரைக்கும் விவசாயிகளுக்கு இரசாயன பசளையை இந்த நேரத்தில் வழங்க வேண்டு;ம் என நாம் இங்கு கோரி நிற்கின்றோம் என இவ்வாறு தெரிவித்தார்.

சீன டெலிகொம் நிறுவனத்தின் அனுமதி இரத்து செய்தது அமெரிக்கா

சீனாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றின் அனுமதியை தேசிய பாதுகாப்பு என்ற காரணத்தை சுட்டிக்காட்டி அமெரிக்கா இரத்து செய்துள்ளது.

எனவே சீனா டெலிகொம் என்ற அந்த சீன தொலைத்தொடர்பு நிறுவனம் அமெரிக்காவில் சேவை வழங்குவதை 60 நாட்களுக்குள் நிறுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சீன அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனம் அமெரிக்க தொலைத்தொடர்புகள் குறித்த தகவல்களை சீன அரசு சேமிக்க, இடைமறிக்க, திசை திருப்ப உதவியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு இந்த தொலைத்தொடர்பு நிறுவனம் அமெரிக்காவுக்கு எதிராக உளவு பார்க்கும் சதி மற்றும் பிற தீங்கான நடவடிக்கைகளுக்கு அனுமதிக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும் அமெரிக்காவில் கடந்த 20 வருடங்களாக தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வந்த அந்த நிறுவனம் அமெரிக்காவின் இந்த முடிவு ஏமாற்றமளிப்பதாக தெரிவித்துள்ளது.

110 நாடுகளில் நூற்றுக்கணக்கான மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள குறித்த நிறுவனம், இணைய வசதி முதல் மொபைல் மற்றும் தொலைபேசி நெட்வொர்க் சேவைகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சுந்தரம் அருமைநாயகம், பி.எஸ்.எம். சார்ள்ஸ் ஆகியோருக்கு புதிய நியமனங்கள்

சுந்தரம் அருமைநாயகம் மற்றும் பி.எஸ்.எம். சார்ள்ஸ் ஆகியோரின் புதிய நியமனங்களுக்கு பாராளுமன்ற பேரவை அனுமதி வழங்கியுள்ளது.

பொதுச்சேவைகள் ஆணைக்குழு உறுப்பினராக பதவி வகித்த வி. சிவஞானசோதி காலமானதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு சுந்தரம் அருமைநாயகம் நியமிக்கப்படவுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா தலைமையிலான பாராளுமன்ற பேரவை இணக்கம் தெரிவித்துள்ளது.

வௌிநாட்டு தொழில்வாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு ஆகியவற்றின் செயலாளராக சுந்தரம் அருமைநாயகம் கடமையாற்றியுள்ளார்.

இதனிடையே, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து ஜீவன் தியாகராஜா விலகியதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு பி.எஸ்.எம். சார்ள்ஸ் நியமிக்கப்படவுள்ளார்.

பி.எஸ்.எம். சார்ள்ஸ் வட மாகாணத்தின் ஆளுநராக பதவி வகித்துள்ளார்.

இதனைத் தவிர, சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் செயலாளராகவும் சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கடமையாற்றியிருந்தார்.

நேற்று முன்தினம் (25) கூடிய தனது இணக்கப்பாட்டை வழங்கியிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

Posted in Uncategorized

நாகவிகாரையின் நாட்டாண்மையை அனுமதிக்க முடியாது; ஐங்கரநேசன் கண்டனம்

யாழ்ப்பாணம் மாநகர சபையால் ஆரியகுளத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்திப் பணிகளில் நாகவிகாரை ஆரம்பம் முதலே தலையீடு செய்துவருகிறது. குளத்தின் நடுவே தியான மண்டபம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்த நாகவிகாரையின் விகாராதிபதி விமலதேரர், இப்போது குளத்தின் பருத்தித்துறை வீதிப்பக்கமாக நடைபாதை அமைக்கப்பட்டு வருவதை உடனடியாக நிறுத்துமாறும், குளத்தைச் சுற்றுலாத் தேவைகளின் பொருட்டுப் பயன்படுத்தக் கூடாது என்றும் மாநகர முதல்வருக்குக் கடிதம் மூலம் கட்டளை பிறப்பித்துள்ளார்.

குளத்தின் அபிவிருத்திப் பணிகளில் நாகவிகாரையின் நாட்டாண்மையை அனுமதிக்க முடியாது என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தனது காட்டமான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
ஆரிய குளத்தின் புனரமைப்புப் பணிகளில் அண் மைக்காலமாக நாகவிகாரை தலையிட்டு வருகின்றமை தொடர்பாக பொ. ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடுகையில் –

“ஆரியகுளம் நாகவிகாரைக்கு உரித்தான குளம் அல்ல. ஆன்மீகத் தேவைகளின் பொருட்டு வேறு ஆலயங்களால் உருவாக்கப்பட்ட குளமும் அல்ல. இது மழைநீர் சேகரிப்பு மற்றும் வெள்ள நீர்முகாமைத்துவத்தில் தமிழ் மக்கள் கொண்டிருந்த அறிவைப் பறைசாற்றுகின்ற பண்டைய குளங்களில் ஒன்றாகும்.

வேறு குளங்களில் இருந்து படிமுறைகளில் நிரம்பிவழிகின்ற மழை நீரைச் சேகரிக்கும் பொருட்டும், மிகை மழைநீரைக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் யாழ்.நகர் வெள்ளத் தினுள் மூழ்காதிருக்கும் பொருட்டும் அமைக்கப்பட்ட குளம் ஆகும். ஆரியகுளம் தொடர் பராமரிப்பின்மையால் நாற்ற மெடுக்கும் கழிவுக்குளமாக மாறி நிலத்தடி நீர் மாசுபாட் டையும் சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்தி வந்ததால் இது புனரமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தைப் பலதரப்பும் பலகாலமாக வலியுறுத்தி வந்துள்ளன.

தற்போது புனரமைப்புப் பணிகளை முன்னெடுத்துள்ள யாழ் மாநகரசபை, குளம் யாழ். நகர மையத்தில் நுழை வாசலில் அமைந்திருப்பதால் அதனை மக்களைக் கவரும் சூழல்சார் சுற்றுலா மையமாக அமைத்து வருகிறது. இதனை விரும்பாத விகாராதிபதி அபிவிருத்திப் பணிகளுக்குத் தடைகளை ஏற்படுத்தி வருகிறார். ஆரியகுளத்தில் ஒரு காலத்தில் பிக்குகள் நீராடினார்கள் என்ற கருத்தைப் பரப்புவதன் மூலம் குளத்தின் மீது உரிமை கொண்டாட முயலும் விகாராதிபதி, அபிவிருத்திப் பணிகளை நிறுத்துவதற்கு அல்லது தமக்குரியதாக மாற்றி அமைப்பதற்கு யாழ்.மாநகர சபையை வற்புறுத்தி வருகிறார்.

இலங்கையில் பெளத்தத்துக்கே முதலிடம் என்ற வகையில் இவர் யாழ்.மாநகர சபையின் மீது அரசியல் மற்றும் இராணுவ அழுத்தங்களைப் பிரயோகிக்கவும் கூடும். ஆனால், யாழ்மாநகர சபை குளத்தின் அருகேயுள்ள மக்கள் குடியிருப்புகளினதும் வணக்கத் தலங்களினதும் இயல்பு நிலையைச் சீர்குலைக்காத வகையிலும், பண்பாட்டுப் பிறழ்வுகளை ஏற்படுத்தாத வகையிலும் அபிவிருத்திப் பணிகளை உறுதி செய்துகொண்டு எவ்விடர்வரினும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்பதே எல்லோரினதும் எதிர்பார்ப்பாகும்” என்றும் தெரிவித்துள்ளார்.

 

கோட்டாபயவின் அழைப்பை புறக்கணித்த 52 நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் கடந்த 24 ஆம் திகதி நடைபெற்ற ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் 52 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.

159 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வருகின்றனர். இவர்களில் 107 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

கூட்டத்திற்கு சமூகமளிக்காத 52 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 20 பேர் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என்பதை தெரியப்படுத்தியுள்ளனர்.

கூட்டத்தில் கலந்துகொள்ளாத நாடாளுமன்ற உறுப்பினர்களில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அமைச்சர் விமல் வீரவங்ச ஆகியோரும் அடங்குகின்றனர்.

ஜனாதிபதி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் பிரச்சினைகள் பற்றி பேசிய போதிலும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச எந்த கருத்துக்களையும் வெளியிடவில்லை என கூட்டத்தில் கலந்துகொண்ட ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து கனடா செல்வோருக்காக அறிமுகமாகியுள்ள புதிய திட்டம்

வெளிநாடுகளில் இருந்து கனடாவுக்கு செல்லும் பயணிகளுக்காக புதிய திட்டமொன்றை ஏர் கனடா அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி குறித்த பயணிகள் ஏர் கனடா விமானங்களில் பயணிக்க முன் தாமாகவே கோவிட் சுயபரிசோதனை செய்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்விட்ச் ஹெல்த் என்ற திட்டத்தின் மேற்பார்வையின் கீழ் பயணிகள் சுய பரிசோதனை செய்து 45 நிமிடங்களுக்குள் பரிசோதனை முடிவின் மின்னணு அறிக்கையைப் பெறலாம் என தெரியவருகிறது.

கனடா அரசாங்கத்தின் சோதனை நுழைவுத் தேவைகளை இந்த பரிசோதனையானது பூர்த்தி செய்யும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கனடாவிற்கு செல்லும் பயணிகள் விமானத்தில் பயணிக்கும் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவின் சான்றிதழை (கோவிட் தொற்று இல்லை என்பதற்கான முடிவை) சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

மனிதாபிமான அடிப்படையில் ரஞ்சன் ராமநாயக்க விடுதலை செய்யப்பட வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர்

மனிதாபிமான அடிப்படையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க விடுதலை செய்யப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு சென்று எதிர்க்கட்சித் தலைவர் இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்தார்.

இதன் பின்னர் எதிர்கட்சித்தலைவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.

இதன்போது, ரஞ்சன் ராமநாயக்க முதுகெலும்பு மற்றும் முழங்கால் பாதிக்கப்பட்டமையால் தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் உள்ளதாகவும் இதற்கு மேலான முறையான சிகிச்சையை அவருக்கு வழங்க முடியும் எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

வெலிக்கடை சிறைச்சாலைக்கு அவரை மாற்றம் செய்தால், அவருக்கு முறையான சிகிச்சை வழங்க முடியும் எனவும் உயர்கல்வி நடவடிக்கையை தொடர முடியும் எனவும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

அவர் அரசாங்க நிதியை பிழையாகக் கையாளவில்லை, ஊழலில் ஈடுபடவில்லை. அவரது தனிப்பட்ட சொத்துக்கள் முதற்கொண்டு மக்களுக்காக செலவிட்டுள்ளார். மனிதாபிமான அடிப்படையில் ஜனாதிபதி அவருக்கு முழுமையாக விடுதலை வழங்குவார் என எதிர்பார்க்கிறேன் என சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.