ஊழல் நிறைந்த நாடாக இலங்கை – கொழும்பு பேராயர் ஆதங்கம்

நாட்டில் இன்று ஊழல் நிறைந்த நிர்வாக முறைமை தோற்றம்பெற்றுள்ளது. 70 வருடகாலமாக ஊழல் நிறைந்த ஆட்சிமுறைமையே தொடர்கிறது. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்கிறார் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை .

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,

“இன்றைய சூழ்நிலையில் பல பொதுப் பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன. இதனால் நடுத்தர மக்கள்பெரும் சிக்கல்களை எதிர்க்கொண்டுள்ளார்கள். இருப்பினும் இவ்விடயம் குறித்து அரசாங்கம் அக்கறைகொள்ளவில்லை.

நீதி தமக்கு ஏற்றால் போல் மாற்றப்பட்டுள்ளது. இதனால்நீதி, நியாயத்தை பெற்றுக்கொள்ள முடியாத சமூக முறைமை தற்போது தோற்றம் பெற்றுள்ளது.

சுதந்திரத்திற்கு பின் ஆட்சிக்கு வந்த அனைத்து அரசாங்கங்களும் சட்டத்திற்கு புறம்பாகவே செயற்பட்டுள்ளன. இன்றும் இவ்வாறான நிலைமையே காணப்படுகிறது.

சாதாரண நபர் நியாயத்தை பெற்றுக் கொள்ளும் வழிமுறை சமூகத்தில் உள்ளதா என்ற சந்தேகம் தோற்றம் பெற்றுள்ளது. வறுமை, ஏழ்மையை துரிதப்படுத்தும் வகையில் மாபியாக்கள் தற்போது அதிகம் தோற்றம் பெற்றுள்ளார்கள். இவ்வாறான ஊழலையும், முறைக்கேடுகளையும் கட்டுப்படுத்த எவருக்கும் முடியாதுள்ளது.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்கள் நியாயத்தை பெற்றுக்கொள்ளும் வழிமுறையும் இல்லாமல் போயுள்ளது.

இவ்விடயத்தில் அரசியல் அழுத்தம், அரசியல் இலாபம் ஆகியவை காரணமாக நீதியை பெறமுடியாதுள்ளது. அனைத்தையும் மறைக்கும் நடவடிக்கைகள் மாத்திரம் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுகின்றன” என்றார்.

Posted in Uncategorized

விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பில் இந்திய புலனாய்வு முகமை வெளியிட்ட தகவல்

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் தனி மனிதர்களுடன் விடுதலைப்புலிகள் அமைப்பை தொடர்புபடுத்தி இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமை அமைப்பு தனது அறிக்கையிடலை சிறப்பு நீதிமன்றத்தில் முன்வைத்தமை தமிழகத்தின் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளை கவலையடைய வைத்துள்ளது.

இலட்சத்தீவில் இருந்து இலங்கை சென்ற மீன்பிடி கப்பலில் இருந்து கடந்த ஆண்டு கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் போதைப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டதாக என்.ஐ.ஏ எனப்படும் இந்தியாவின் தேசிய புலனாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சுரேஷ் ராஜ் மற்றும் சௌந்தரராஜன் என அடையாளம் காணப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு சந்தேக நபர்கள் பின்னர் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என்று கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களின் இந்தச் செயற்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, தமிழீழ விடுதலைப்புலிகளே குறித்த கடத்தலை செய்துள்ளதாக என்.ஐ. ஏ சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழ்நாடு, இலங்கை மற்றும் பிற வெளிநாடுகளில் அமைந்துள்ள அமைப்பின் தலைவர்களின் மேற்பார்வையின் கீழ் புலிகளின் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல அவர்கள் இரகசியமாக வேலை செய்து வந்ததாக அந்த அமைப்பு கூறுகின்றது.

இந்திய கடலோர காவல்படையினர் கடந்த ஆண்டு மார்ச் 18 ஆம் திகதி அரபிக்கடலில் இலங்கை மீன்பிடி கப்பலான ரவிஹன்சியை தடுத்து நிறுத்தி, ஏராளமான போதை மருந்துகள், ஐந்து ஏகே 47 துப்பாக்கிகள் மற்றும் ஆயிரம் எம்எம் அளவுள்ள வெடிமருந்துகளை பறிமுதல் செய்தனர். இதன்போது ஆறு இலங்கைப் பிரஜைகள் கைது செய்யப்பட்டதுடன், இந்த வழக்கு பின்னர் என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில் போதைப்பொருள், தங்க கடத்தல் மற்றும் ஹவாலா நடவடிக்கைகள் மூலம் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்காக குற்றம் சாட்டப்பட்டவர் நிதி சேகரித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக இந்தியாவின் தேசிய புலனாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

‘ஜனநாயக முறைமையின் கீழ் பிரச்சினைகளுக்கு தீர்வு’ – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

வரலாற்றில் எந்தவொரு காலத்திலும், சர்வாதிகாரம் அல்லது ஏகாதிபத்திய அரசாங்கமொன்று உருவாகாத பழமைவாய்ந்த வலய நாடாகவும் ஜனநாயக நாடாகவும் விளங்குகின்ற இலங்கைக்குள், ஜனநாயக விதிமுறைகளுக்கமைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படும் என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளை, மிரிஹான பகுதியில் அமைந்துள்ள தனது இல்லத்தில் நேற்று (04) முற்பகல் சந்தித்து உரையாற்றும் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ மரபுகளுடன் ஏற்கெனவே ஒப்புக்கொள்ளப்பட்ட இலங்கையின் இணக்கம், இலங்கையுடன் இணைந்துப் பணியாற்றுதல் மற்றும் இலங்கை தொடர்பில் ஐரோப்பிய பாராளுமன்றம் கொண்டிருக்கும் எண்ணப்பாடு போன்ற விடயங்களை, இந்த விஜயத்தின் போது, மேற்படி பிரதிநிதிகள் ஆராய எதிர்பார்த்திருக்கின்றனர்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தொடர்பில் விசேட அவதானம் செலுத்திய ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள், காலத்தை முன்னிலைப்படுத்திய தீர்வொன்றின் தேவை தொடர்பில் வலியுறுத்தினர். இந்த விஜயத்தின் போது தாம் ஆராய்ந்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு, ஐரோப்பிய ஆணைக்குழு மற்றும் ஐரோப்பிய பாராளுமன்றம் ஆகியவற்றுக்கு அறிக்கை ஒன்றைத் தயாரித்து வழங்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

தேவையான குழுக்களை நியமித்து, அவற்றின் அறிக்கைகளுக்கமைய, நீதி அமைச்சர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் காணப்படும் திருத்தப்பட வேண்டிய உறுப்புரைகளைத் திருத்த உடன் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

அதேவேளை, தற்போதைய உலகின் மனித உரிமைகள் தொடர்பில் காணப்படும் இணக்கப்பாடுகளுக்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், ஜனாதிபதி தெரிவித்தார்.

கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள சவால்கள் மற்றும் அதனால் அரசாங்கத்தின் திட்டமிடல்களை மேற்கொள்வதில் ஏற்பட்ட தடைகள் பற்றியும், ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

இருப்பினும், நாட்டில் நிலவிய நீண்டகால யுத்தம் காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் பலவற்றுக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்கவும் வடக்கு – கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியைப் போன்றே, ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகள் தொடர்பிலும், ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.

விசேடமாக, காணாமற்போனோரது குடும்பங்களுக்கு உதவிகளை வழங்கவும் காணாமற்போனோருக்கு நட்டஈடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் எடுத்துரைத்தார்.

நாட்டின் உள்ளகப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கும் நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்வதற்கும், தமிழ் அரசியல் கட்சிகள், புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றும் சர்வதேச நாடுகளின் அனைத்துத் தரப்பினருடனும் இணைந்துப் பணியாற்றுவதன் தேவை தொடர்பில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடரில் உரையாற்றும் போது தான் தெளிவுபடுத்தியதாகவும், ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

சிவில் அமைப்புகளுடன் பரஸ்பர புரிதலுடன் பணியாற்றுவதோடு, நாட்டின் நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றுக்கு அவற்றின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதாகவும் ஜனாதிபதி அவர்கள் எடுத்துரைத்தார்.

கடந்த இரண்டு வருடக் காலப்பகுதியில் நடத்தப்பட்ட எதிர்ப்புப் போராட்டங்களுக்கு, ஒருபோதும் தடியடிப் பிரயோகமோ தண்ணீர்த் தாரைப் பிரயோகமோ அல்லது கண்ணீர்ப்புகைத் தாக்குதலோ நடத்த வேண்டாமென்று தான் ஆலோசனை வழங்கியிருந்ததாகவும் போராட்டக்காரர்களுக்கென்றே, ஜனாதிபதி அலுவலகத்துக்கு முன்னால் தனியிடம் ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

இந்த அரசாங்கம், ஜனநாயக ரீதியில் செயற்பட்டாலும், அவை தொடர்பில் அவதானம் செலுத்தப்படுவதில்லை என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஒரு சிறிய சம்பவத்தின் அடிப்படையில் பல்வேறு தரப்பினர் தவறான கருத்துக்களை உருவாக்குவது துரதிர்ஷ்டவசமானது என்றும் குறிப்பிட்டார்.

அரச மற்றும் தனியார்த் துறையினருடன் இணைந்துப் பணியாற்றவும் தனியார் துறையை மேம்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கச் செய்யவும், அபிவிருத்தியடைந்த நாடுகளின் தொழில்நுட்ப உத்திகளை, தரமான பொதுச் சேவைக்காகப் பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

இந்நாட்டின் முக்கிய வாழ்வாதாரமாகக் காணப்படும் விவசாயத்துறையின் அபிவிருத்திக்கான தொழில்நுட்ப மற்றும் பயிற்சி உதவிகளைப் பெற்றுக்கொள்வதன் ஊடாக, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அடைவதற்குள்ள வாய்ப்புகள் தொடர்பிலும், ஜனாதிபதி தெளிவுபடுத்தப்பட்டது.

நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான அரசாங்கத்தின் திட்டமிடல்கள் தொடர்பில் தெளிவுபடுத்திய ஜனாதிபதிக்கு, ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள், தங்களுடைய வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொண்டனர்.

ஐரோப்பிய ஆணைக்குழுவின் சிரேஷ்ட ஆலோசகர், வர்த்தகம் மற்றும் நிலையான அபிவிருத்தி, ஜீஎஸ்பி மற்றும் Environment Action Programme இன் வர்த்தக நடவடிக்கைகள் பணிப்பாளர் நாயகம் நிக்கொலொஸ் ஸையிமிஸ் (Nikolaos Zaimis), ஐரோப்பிய ஆணைக்குழுவின் வெளிப்புற நடவடிக்கைகள் மற்றும் சேவைகளுக்கான தெற்காசியப் பிரிவின் தலைவர் அயோனிஸ் ஜியோகாரகீஸ் ஆர்கிரோபோலோஸ், கொழும்பில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டெனிஸ் ஷாயிபி (Denis Chaibi), ஜீஎஸ்பி வர்த்தகச் சலுகைகள் தொடர்பான ஒருங்கிணைப்பாளர் கயிடோ டொலாரா (Guido Dolara), வர்த்தகம், சமூக நடவடிக்கைகள் – தொழிலாளர், இயக்கம் – சர்வதேசப் பிரச்சினைகள் தொடர்பான பிரிவின் தலைமை அதிகாரியும் பணிப்பாளர் நாயகமுமான லுயீ ப்ராட்ஸ் (Lluis Prats), இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கொள்கை அதிகாரி மொனிகா பைலெய்ட் (Monika Bylaite), வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொழம்பகே ஆகியோரும், இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர்.

இந்திய நிதியில் அமைக்கப்பட்ட பெருந்தோட்டப் பகுதி வீடுகள் கையளிப்பு

இந்திய அரசாங்கத்தின் நிதி பங்களிப்புடன் மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட ஆயிரத்து 235 வீடுகள் நேற்று திங்கட்கிழமை பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சூம் தொழில்நுட்பம் ஊடாகவே இதற்கான நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதற்கமைய பிரதான நிகழ்வு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ், இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் தலைமையில் அலரிமாளிகையில் நடைபெற்றது.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் இந்திய தூதுரக அதிகாரிகள் உள்ளிட்டோர் பிரதான நிகழ்வில் பங்கேற்றனர்.

இதன்போது இந்தியாவால் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் பற்றி காணொளி ஒளிபரப்பப்பட்டதுடன் பிரமுகர்களின் உரைகளைத் தொடர்ந்து சூம் தொழில்நுட்பம் ஊடாக திறப்பு விழா இடம்பெற்றது.

இதன்படி, காலி மாவட்டத்தில் 50 வீடுகளும் பதுளை மாவட்டத்தில் 479 வீடுகளும் கண்டி மாவட்டத்தில் 184 வீடுகளும் ஹற்றன் மற்றும் பொகவந்தலாவ ஆகிய பகுதிகளில் 155 வீடுகளும் நுவரெலியா- அக்கரபத்தனை பகுதியில் 267 வீடுகளும் இவ்வாறு திறந்து வைக்கப்பட்டன.

குறித்த பகுதிகளில் இருந்த இ.தொ.கா. பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் ஊடாக வீடுகளுக்குரிய ஆவணங்கள், பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதேவேளை இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் புஸல்லாவை சரஸ்வதி கல்லூரியில் அமைக்கப்பட்ட கட்டடமும் திறந்து வைக்கப்பட்டது.

மேலும் நுவரெலியா – இராகலை லிடேஸ்டேல் தோட்ட பிரிவான டியநிலை மேல் பிரிவு தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட 166 வீடுகள் கொண்ட இவ்வீட்டு திட்டத்திற்கான பெயர் பலகை   நேற்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளுக்கு வீடுகளும் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

பாடசாலைகளை திறப்பது தொடர்பில் ஆளுநர்களுக்கு அறிவுறுத்தல்

பாடசாலைகளை திறப்பது தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடல்களுக்கு அமைய, பாடசாலைகளுக்கு அடிப்படை வசதிகளை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்துமாறு கல்வி அமைச்சர் மாகாண ஆளுநர்களுக்கு அறிவித்துள்ளார்.

இதற்கமைய, மீள திறப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள பாடசாலைகளின் சூழல், வகுப்பறை, கதிரைகள், உபகரணங்களை சுத்தம் செய்தல் மற்றும் புனரமைத்தல் தொடர்பில் ஆளுநர்களின் தலையீட்டில் வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

200-க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவையும் 100-க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளினதும் கல்வி நடவடிக்கைகளையும் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சில மதிப்பீடுகளுக்கு அமைய சுமார் 3,000 பாடசாலைகள் இந்த மாதத்தில் திறக்கப்படவுள்ளன என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம், இலங்கை – இந்திய ஒப்பந்தம் – மீறப்படுகின்றன!

சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் சாராம்சத்தின்படி இலங்கையின் ஏனைய பிரஜைகள் அனுபவிக்கும் அதே உரிமைகள், இலங்கை குடியுரிமை பெற்ற மலையக தமிழர் பரம்பரையினருக்கும் கிடைக்க வேண்டும். ஆனால், பெருந்தோட்டங்களில் வாழும் தமிழ் தொழிலாளர் குடும்பங்களுக்கு மாற்று தொழில்களுக்கான காணி உரிமைகள் மறுக்கப்படுகின்றன. 60 வருடங்களுக்கு பிறகும் நிலவுகின்ற இந்நிலைமை குறித்து இலங்கை அரசிடம் பேசுங்கள். இம்மக்கள் தொடர்பில் இந்திய அரசுக்கு கடப்பாடு இருப்பதாக நாம் நம்புகிறோம்.

13 ஆம் திருத்தம் முழுமையாக அமுல் செய்யப்பட வேண்டும். மாகாணசபை தேர்தல்கள் துரிதப்படுத்தப்பட வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங்களுடன் மத்திய, மேற்கு, ஊவா, சப்ரகமுவ மாகாண சபை தேர்தல்கள் உடனடியாக நடைபெறவேண்டியமை நமக்கு அவசியமானதாகும். அதேபோல், 16 ஆம் திருத்தமும் முழுமையாக அமுல் செய்யப்பட்டு, தமிழ் மொழியின் அந்தஸ்து உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழு இன்று கூட்டணி தலைவர் மனோ கணேசன் மற்றும் பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம், வி. ராதாகிருஷ்ணன், பொது செயலாளர் சந்திரா சாப்டர் ஆகியோர் உள்ளடங்களாக இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வாதன் ஷிருங்லாவை சந்தித்து உரையாடியது. இந்திய இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே, துணை தூதர் உட்பட தூதரக அதிகாரிகள் இருந்தனர்.

16 ஆம் திருத்தம் முற்று முழுதாக உதாசீனப்படுத்தப்பட்டுள்ளது. இத்திருத்தத்தின் மூலமாகவே தமிழ் மொழியும் ஒரு நிர்வாக மொழியாக, கல்வி மொழியாக, நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்கப்பட்டது.

13 ஆம் திருத்தம், 16 ஆம் திருத்தம் இரண்டுமே இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலமே இலங்கை அரசியலமைப்பில் அரங்கேறியது. ஆகவே, இவை பற்றி இந்திய அரசுக்கு கடப்பாடு இருப்பதாக நாம் நம்புகிறோம்.

சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் சாராம்சத்தின்படி இலங்கையின் ஏனைய பிரஜைகள் அனுபவிக்கும் அதே உரிமைகள், இலங்கை குடியுரிமை பெற்ற மலையக தமிழர் பரம்பரையினருக்கும் கிடைக்க வேண்டும்.

இலங்கையின்மிக பின் தங்கிய பிரிவினரான பெருந்தோட்டங்களில் வாழும் தமிழ் தொழிலாளர் குடும்பங்களுக்கு மாற்று தொழில்களுக்கான காணி உரிமைகள் மறுக்கப்படுகின்றன. பாரபட்சம் காட்டப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் மூலம் இலங்கையில் இருந்து மலையக தமிழர் நாடு கடத்தப்பட்டிருக்காவிட்டால், இன்றைய இலங்கை பாராளுமன்றத்தில், குறைந்தபட்சம் 30 தமிழ் எம்பீக்கள் தென்னிலங்கையில் இருந்து மாத்திரம் தெரிவு செய்யப்பட்டிருப்பார்கள். ஆகவே, இந்த ஒப்பந்தம் இலங்கை மலையக தமிழ் மக்களின் அரசியல் பலத்தை குறைத்து விட்டது.

இன்று பேசப்பட்டு வரும் தேர்தல் முறை சீர்திருத்தம், இந்நாட்டில் சிதறி வாழும் நமது மக்களின் பாராளுமன்ற, மாகாணசபை பிரதிநிதித்துவங்களை இன்னமும் அபாயத்துக்குள் தள்ளும் நோக்கத்தை கொண்டுள்ளது. இலங்கையின் ஏனைய பிரஜைகள் அனுபவிக்கும் அதே அரசியல் பிரதிநிதித்துவ உரிமைகள், இலங்கை குடியுரிமை பெற்ற மலையக தமிழர் பரம்பரையினருக்கும் கிடைக்க வேண்டும்.

1964 ஆம் ஆண்டின் சிறிமா சாஸ்திரி ஒப்பந்த கைச்சாத்திடலுக்கு பின்னர் 60 வருடங்களுக்கு பிறகும் நிலவுகின்ற இந்நிலைமைகள் குறித்து இலங்கை அரசிடம் பேசுங்கள். இதேபோல்தான் 1987 ஆம் ஆண்டின் இலங்கை – இந்திய ஒப்பந்தமும் முழுமையாக அமுலாகவில்லை. இவை தொடர்பில் இந்திய அரசுக்கு கடப்பாடு இருக்கின்றது. இந்திய அரசு கொண்டுள்ள கடப்பாடுகளின் அடிப்படையில் இவ்விவகாரங்கள் தொடர்பில் இலங்கை அரசுடன் ராஜதந்திர அடிப்படையில் உரிய அழுத்தங்களை வழங்கும்படி இந்திய அரசை கோருகிறோம்.

இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வாதன் ஷிருங்லாவிடம் மனோ கணேசன் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக இந்திய அரசுக்கான ஒரு மகஜர் ஆவணத்தையும் கையளித்தார்.

Posted in Uncategorized

கடுமையான நடவடிக்கை என சரத் வீரசேகர எச்சரிக்கை – ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் காட்டுமாறு ஆசிரியர் சங்கம் சவால் !

தொழிற்சங்க போராட்டங்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பொது பாதுகாப்பு அமைச்சரின் எச்சரிக்கைக்கு மத்தியில் ஆசிரியர் மற்றும் அதிபர்கள் நாடளாவிய ரீதியில் போராட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளனர்.

கொரோனா பரவலுக்கு மத்தியில் நாடு திறப்பட்டுள்ள நிலையில் போராட்டம் நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நேற்று முன்தினம் அமைச்சர் சரத் வீரசேகர எச்சரித்திருந்தார்.

ஒன்றுகூடல்களால் மற்றுமொரு கொரோனா அலை ஏற்பட்டால் நாடு கடுமையான சிக்கலை எதிர்கொள்ளும் என்பதனால் மக்களின் நலனுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கூறியிருந்தார்.

இருப்பினும் சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 312 போராட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுசெயலாளர் அறிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கைக்கு வருகைதந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த கடுமையான நடவடிக்கைகளை முன்வைக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளார்.

தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்து 84 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் அதற்கான தீர்வினை வழங்க தவறியுள்ள அரசாங்கம் போராட்டத்தை பல்வேறு வழிகளில் ஒடுக்க முயற்சிக்கிறது என ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுசெயலாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 12 ஆம் திகதி முதல் சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி ஒன்லைன் கற்பித்தல் நடவடிக்கைகள் மற்றும் பரீட்சை நடவடிக்கைகளில் இருந்தும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

திருகோணமலையிலுள்ள 100 எண்ணெய் தாங்கிகள் ஏற்கனவே இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக திருகோணமலை துறைமுகத்தை ஒட்டியுள்ள 100 எண்ணெய் தாங்கிகள் ஏற்கனவே இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

திருகோணமலையிலுள்ள எண்ணெய் தாங்கிகளை இந்தியாவுடன் ஒப்படைக்க முயற்சிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதற்காக  திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

1987 மற்றும் 2003 ல் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் மூலம் குறித்த எண்ணெய் தாங்கிகள் ஏற்கனவே இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன இந்நிலையில் அவற்றினை மீண்டும் கையகப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில கூறினார்.

இதேவேளை 85 எண்ணெய் எண்ணெய் தாங்கிகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என்ற சோபித தேரரின் கருத்துக்களை நிராகரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்

இவை அனைத்தும் ஏற்கனவே ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் கீழ் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன என்றும் அமைச்சர் உதய கம்மன்பில கூறினார்.

உலக தலைவர்கள் ஊழல் பட்டியலில் நிரூபமா ராஜபக்ஷ

உலகில் அதிக ஊழல், மோசடிகளில் ஈடுபட்டு, கோடிக் கணக்கான பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்த ஆவணங்கள் ‘பென்டோரா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் ஞயிற்றுக்கிழமை (03) வெளியானது.

இதில் இலங்கையின் பிரபல பிரபல தொழிலதிபர் திருக்குமார் நடேசனின் மனைவியும், ராஜபக்ஷர்களின் நெருங்கிய உறவினரும், நிரூபமா ராஜபக்ஷவின் பெயரும் உள்ளடங்கியுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியாக பதவிவகித்த காலத்தில்,   நிரூபமா ராஜபக்ஷ, பிரதியமைச்சராக பதவி வகித்தார்.

2010ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை நிரூபமா ராஜபக்ஷ பிரதி நீர்வளங்கள் அமைச்சராக பதவி வகித்திருந்தார்.

உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், சொந்த நாட்டில் வரி ஏய்ப்பு செய்து வெளிநாடுகளில் முதலீடு செய்யும் தகவலின் இரகசிய ஆவணங்கள், 2016 இல் வெளியாகி சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த ஆவணங்கள் வெளியானது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பனாமா நாட்டைச் சேர்ந்த சட்ட ஆலோசனை நிறுவனமான மொசாக் போன்செகா, ஒரு கோடிக்கும் அதிகமான இரகசிய ஆவணங்களை, ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் 201 இ6ல் வெளியிட்டது.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்களும் இந்த முறைகேடுகளை அம்பலப்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்தனர்.

பல தனி நபர்கள், நிறுவனங்களின் முறைகேடுகள் இதில் வெளியாகின. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட பிரபலங்களின் பெயர்கள் இதில் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் அதேபோல் பென்டோரா பேப்பர்ஸ் என்ற பெயரில் இரகசிய ஆவணங்கள் ஞயிற்றுக்கிழமை (03) வெளியிடப்பட்டன.

பாகிஸ்தான் அமைச்சர்கள் கோடிக்கணக்கில் சொத்துக்களை குவித்துள்ளதாகவும், அறக்கட்டளை என்ற பெயரில் பல கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோர்டான் மன்னர் அப்துல்லா, பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் மற்றும் அவரது மனைவி ஷெரி பிளேயர் , ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் . செக் குடியரசு பிரதமர் எண்ட்ரேஸ் பாபிஸ், கென்ய ஜனாதிபதி உஹுரு உள்ளிட்டோர் பல கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடாக சொத்து குவித்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், சைப்ரஸ் நாட்டு ஜனாதிபதி நிக்கோஸ் அனஸ்தேசியேட்ஸ், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஈக்வடார் ஜனாதிபதி கில்லர்மோ லாசோ உட்பட பல நாடுகளின் அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் செய்துள்ள முறைகேடுகள் குறித்த ஆவணங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

குறிப்பாக இலங்கையில் பிரபல பிரபல தொழிலதிபர் திருக்குமார் நடேசனின் மனைவியும், ராஜபக்ஷர்களின் நெருங்கிய உறவினருமான நிரூபமா ராஜபக்ஷவின் பெயரும் இடம்பெற்றுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Posted in Uncategorized

இந்தியா இலங்கையின் முக்கிய சுற்றுலாத் தளமாகும்

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இன்று (04) முற்பகல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற இச்சந்திப்பின் ஆரம்பத்தில் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இந்திய பிரதமர்​ நரேந்திர மோதி மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் ஆகியோரது வாழ்த்துச் செய்திகளை பிரதமருக்கு முன்வைத்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவை பலப்படுத்திக் கொள்ளும் நோக்கில் தற்போது செயற்பாட்டிலுள்ள திட்டங்கள் மற்றும் சுற்றுலாத்துறை, பௌத்த உறவினை மேம்படுத்தல் உள்ளிட்ட பரஸ்பர ஒத்துழைப்பு மேம்படுத்தப்படும் பல்வேறு துறைகள் தொடர்பில் இச்சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது.

பௌத்த உறவை மேம்படுத்துவதற்கு இந்திய பிரதமர் மோதி அவர்கள் முன்னெடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராட்டு தெரிவித்தார். அது பிரதமர் மோதியின் முன்னுரிமையான பணியாக விளங்கியதாக ஷ்ரிங்லா நம்பிக்கை தெரிவித்தார்.

இந்திய – இலங்கை பிரதமர்களிடையே கடந்த ஆண்டு இடம்பெற்ற இணையவழி இருதரப்பு மாநாட்டின் இறுதியில் இரு நாட்டு மக்கள் இடையிலான ஆழமான உறவை பலப்படுத்தும் நோக்கில் இந்திய பிரதமரினால் பௌத்த உறவின் மேம்பாட்டிற்காக 15 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடை அறிவிக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, இந்தியாவின் குஷிநகர் விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக பிரகடனப்படுத்தப்பட்ட உடன், இலங்கையிலிருந்து முதல் யாத்ரீக விமானம் வருகைத்தரும் என நம்புவதாக தெரிவித்தார். இந்திய பிரதமர் நரேந்திர மோதி கடந்த இருதரப்பு மாநாட்டின் போது இதற்கான வேண்டுகோளை முன்வைத்திருந்தார்.

சுற்றுலாத்துறையை மீண்டும் கட்டியெழுப்புவது தொடர்பில் இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டதுடன், இரு நாடுகளிலும் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் மிகச் சிறப்பாக இடம்பெற்று வருகின்மையினால் உறவை மீண்டும் நிறுவுவதன் முக்கியத்துவம் குறித்தும் ஷ்ரிங்லா வலியுறுத்தினார்.

கொவிட் தொற்று நிலைமைக்கு முன்னர் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகைத்தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் 18 சதவீதமாவதுடன், இந்தியா இலங்கையின் முக்கிய சுற்றுலாத் தளமாகும்.

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத் தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.