ஜனாதிபதி நாடு திரும்பியதும் ஆச்சரியயங்கள் நடக்கும் – பா.உ. அசோக அபேசிங்க

சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச ஐ.நாவிலிருந்து வந்து சிறைக்கைதிகளை விடுதலை செய்தாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க  தெரிவித்துள்ளார்.

கொழும்பில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,

2020ஆம் ஆண்டு முதல் தற்போது வரை வெளிநாட்டிலிருந்து வந்த வைரஸால் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும், இந்த அரசு ஆட்சிக்கு வந்தது முதல் ராஜபக்ச உறவினர்களால் வந்த வைரஸால் மக்கள் இரண்டாவது முறையாகப் பாதிக்கப்பட வேண்டி இருக்கின்றது.

ராஜபக்ச அரச தரப்பினர் நாட்டின் பெரும் பகுதியைச் சீனாவுக்குத் தாரைவார்த்துக் கொடுத்துள்ளனர். சங்ரிலா ஹோட்டல் பகுதி, துறைமுக நகர பெரும் பகுதி ஆகியவற்றை சீனாவுக்கு வழங்கியுள்ளனர்.

இலங்கை கோட்டாபய ராஜபக்ச, இலங்கை நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச ஆகியோர் அமெரிக்க பிரஜாவுரிமை கொண்டவர்கள். நாட்டின் சொத்தை அமெரிக்காவிடம் ஒப்படைக்கின்றனர். இதன் உச்சமாக கடந்த வாரத்தில் இந்த நாட்டின் மொத்த மின் உற்பத்தி நிலையங்களினதும் உரிமத்தை வெளிநாட்டவர்களுக்கு ஒப்படைத்துவிட்டனர்.

கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் 40 சதவீத பங்குகள் திறைசேரிக்குச் சொந்தமானவை. 23.9 சதவீத பங்குகள் ஊழியர் சேமநல நிதியத்துக்குச் சொந்தமானவை. இந்த நாட்களில் ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வுகள் இடம்பெறுகின்றன.

இந்த அரசு சங்கைக்குரிய தேரர்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது. இந்த அரசைப் போன்று பொய் கூறும் ஓர் அரசைப் பார்த்ததில்லை என்று முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கூறுகின்றார்.

கோட்டாபய ஐ.நாவிலிருந்து வந்து சிறைக்கைதிகளை விடுதலை செய்தாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை என்றார்.

Posted in Uncategorized

த.தே. கூ. வல்வெட்டித்துறை நகரசபையின் ஆட்சி அதிகாரத்தை இழந்தது

வல்வெட்டித்துறை நகரசபையின் ஆட்சி அதிகாரத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று இழந்தது.

நகர சபையின் உப தலைவராக பதவி வகித்து வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரின் ஆதரவுடன் சுயேட்சைக் குழுவொன்று நகரசபையின் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது.

வல்வெட்டித்துறை நகரசபையின் தலைவராக பதவி வகித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோ.கருணானந்தராசா கடந்த பொதுத்தேர்தலில் தமிழ் தேசியக் கட்சிக்கு ஆதரவாக பரப்புரை செய்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து தனது இராஜினாமா கடிதத்தை கட்சிக்கு அனுப்பிவைத்த அவர் கொரோனா தொற்று காரணாக கடந்த மாதம் காலமானார்.

இந்த நிலையில், புதிய தலைவர் தெரிவிற்கான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் உப தலைவர் ஞானேந்திரன் சுயேட்சைக் குழுவிற்கு ஆதரவளித்தமையினால், மேலதிக ஒரு வாக்கினால் சுயேட்சைக் குழு நகரசபை ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

இதனடிப்படையில், சுயேட்சை உறுப்பினர் ச.செல்வேந்திரா வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய தலைவராக தெரிவாகியுள்ளார்.

புதிய நகரசபை உறுப்பினருக்கு ஆதரவாக நான்கு சுயேட்சை உறுப்பினர்களும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் இரண்டு உறுப்பினர்களும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகியவற்றின் இரண்டு உறுப்பினர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நகர சபை உப தலைவரும் வாக்களித்துள்ளனர். அதன் படி, 9 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், தலைவர் பதவிக்கு போட்டியிட்ட க.சதீஸிற்கு, கூட்டமைப்பின் 6 உறுப்பினர்களும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 2 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

Posted in Uncategorized

தமிழ் கைதிகளுக்கு பாலியல் சித்திரவதை – பா. உ. செல்வராசா கஜேந்திரன்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டு 540 நாள்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட 12 தமிழ் இளைஞர்களின் அந்தரங்க உறுப்புகள் மிகவும் கேவலமான முறையில் சோதனை செய்யப்பட்டதாகவும், இதுவொரு பாலியல் சித்திரவதை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (21) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை அனுராதபுர சிறைச்சாலைக்குள் சென்று தமிழ் அரசியல் கைதிகளிடம் வெறியாட்டம் ஒன்றை ஆடியிருக்கிறார்.

2009ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி தடுத்து வைக்கப்பட்டவர்களிடமே இவ்வாறு லொஹான் ரத்வத்தை இவ்வாறு நடந்து கொண்டிருந்துள்ளார். இவர்களுக்கு எதிரான வழக்குகள் எதுவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தால் 5 அல்லது 6 வருடங்களுக்கு முன்பே அவர்கள் குற்றமற்றவர்கள் எனவிடுதலை செய்யப்பட்டிருப்பார்கள் எனவும் அவர் இதன்போது கூறினார்.

தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவர்கள் கைது
செய்யப்பட்டுள்ளனர். இதுவரைக்கும் லொஹான் ரத்வத்தை செய்த குற்றச்சாட்டுகளுக்காக அவரின் அமைச்சுப் பதவி பறிக்கப்படவில்லை.

இவ்வாறான நிலையில் அரசாங்கம் லொஹான் ரத்வத்தைக்கு துணைநிற்கிறதா? என்கிற
சந்தேகம் ஏற்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார். லொஹான் ரத்வத்தவிடமிருந்து அனைத்து பதவிகளும் பறிக்கப்பட்டு, பாராளுமன்றத்திலிருந்தும் அவரை வெளியேற்றி சட்டத்தின் முன்நிறுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

சம்பவம் நடைபெற்று 6 நாள்களுக்குப் பின்னரே சிறைச்சாலைகள் அதிகாரிகள் கைதிகளிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என்றால், 6 நாள்களாக இந்த விசாரணைகளை தடுத்தவர் யார்? எனவும் அவர் இதன்போது வினவினார்.

பயங்கரவாதத் தடைச்சத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 12 தமிழ் இளைஞர்கள், கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 26ஆம் திகதி அந்த சிறைச்சாலைக்குக் கொண்டுவரப்பட்ட இந்த இளைஞர்களை 29ஆம் திகதி நிர்வாணமாக்கி சோதனையிட்டுள்ளனர்.

540 நாள்களாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர்கள்,
பல்வேறு கொடூரமான சித்திரவதைகளுக்கு முகங்கொடுத்து உள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

பொதுப் பட்டமளிப்பை நிகழ்நிலை வாயிலாக நடத்த இணக்கம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பொதுப்  பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி, அறிவிக்கப்பட்டபடி  ஒக்டோபர்  07ஆம் திகதி, நிகழ்நிலை வாயிலாக நடைபெறும் என்று,  பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாக் குழுத் தலைவரும், கலைப் பீடாதிபதியுமான கலாநிதி கே.சுதாகர் தெரிவித்தார்.

பட்டமளிப்பு விழா தொடர்பில்  தீர்மனங்களை இயற்றுவதற்காக, இன்று  நண்பகல், துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாக்குழுவின் விசேட கூட்டத்தின் முடிவில், ஊடகங்களுக்கு விபரிக்கும் போதே, கலாநிதி கே. சுதாகரன் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்துரைத்த அவர், நிகழ்நிலைப் பட்டமளிப்புக்குத் தங்கள் இணங்கவில்லை என்று பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் நேற்று செவ்வாய்க் கிழமை துணைவேந்தரின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர் என்றார்.

“இதனையடுத்து, துணைவேந்தரின் வேண்டுகோளுக்கமைய, மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளையும் உள்வாங்கி, பட்டமளிப்பு விழாக் குழுவின் விசேட கூட்டம் இன்று கூட்டப்பட்டிருந்தது.

“கூட்டத்தின் முடிவில்,  ஒக்டோபர் 07ஆம் திகதி நிகழ்நிலையில் நடத்தி பட்டங்களை உறுதி செய்வதென்றும், தற்போதைய நிலைமைகள் சீரடைந்ததும் மரபு ரீதியான பட்டமளிப்பு வைபவத்தை மிகக் குறுகிய காலத்தினுள் நடத்துவதற்கான திகதியை முன்மொழிவதற்கென மாணவர் பிரதிநிதிகளையும், பல்கலைக்கழக அலுவலர்களையும் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

“குழுவினால் முன்மொழியப்படும் திகதிகளில் பட்டமளிப்பு விழாவை நடத்துவதற்கென சுகாதார சேவைகள் திணைக்கள அனுமதியைப் பெறுவதற்கான ஏற்பாடுகளையும் இதே குழு மேற்கொள்ளவுள்ளது” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஐ.நாவில் கொண்டுவரப்படும் தீர்மானம் நல்ல தீர்வாக அமையவில்லை -ஜனநாயக போராளிகள் கட்சி

தொடர்ச்சியாக ஐ.நாவில் கொண்டுவரப்படும் தீர்மானம் என்பது, இலங்கையை அடிபணியவைப்பதும் அச்சுறுத்துவதுமாக இருந்தே அன்றி, தமக்கான நல்ல தீர்வாக அமையவில்லை என்று  ஜனநாயக போராளிகள் கட்சியின் பொதுச் செயலாளர் இ.கதிர் தெரிவித்தார்.

 

முல்லைத்தீவில், நேற்று (21) நடைபெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர்,  இம்முறையும் மக்கள் மிகுந்த ஏமாற்றத்தினை சந்தித்துள்ளார்கள் என்றார்.

இலங்கை தமிழர்கள் தனித்துவமான இனம். வரலாற்று ரீதியாக வடக்கு – கிழக்கு தாயகப் பகுதியில் வாழ்ந்து வந்தார்கள் என்ற அங்கிராம் இன்று வரைக்கும் உலக நாடுகளால் தமிழ் மக்களுக்கு வழங்கப்படவில்லை எனவும், அவர் கூறினார்.

மாறாக, இலங்கையை சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டு சென்று, அதன் ஊடாக தங்கள் பூகோள ரீதியான அரசியலை நகர்த்துவதற்காக, தமிழ் மக்களின் பிரச்சினையை சர்வதேசம் கையாண்டு வருகின்ற தோற்றப்பாடே, காணக்கூடியதாக இருக்கின்றது எனவும், அவர் தெரிவித்தார்.

‘தொடர்ச்சியாக ஐ.நாவின் அமர்வு வரும் போது தமிழ்தேசியம் சார்ந்த அரசியல்வாதிகள் தங்களின் கட்சி கொள்கைகளையும் அரசியலையும் அந்தக் காலங்களில் முன்னெடுத்துச் செல்கின்றாறர்களே தவிர, மக்கள் தொடர்பில் மக்களின் நிரந்தர தீர்வு இழைக்கப்பட்ட அநீதிகள், நீதி விசாரணை, போரின் பின்னர் சரணடைந்த கைதிகள், காணாமல் ஆக்கப்பட்டோர், போராளிகளின் மறுவாழ்வு, நீதி விசாரணைகள் தொடர்பில் எந்த முன்னேற்றத்தினையும் செய்யவில்லை. அதற்கு இந்த அரசாங்கத்துக்கு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க முன்வரவில்லை

‘போரில் சம்பந்தப்படாதவர்களுடன் விடுதலைப் போராட்டத்தின் எந்தத் தொடர்பும் இல்லாதவர்களுடன் மனித உரிமைகள் மக்களின் உரிமைகள் போராளிகளின் நிலைப்பாடு தொடர்பாக தொடர்ச்சியாக பேசுவதில் எந்தப் பயனும் இல்லை.

எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்திவிட்டு, சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்தைகளை நடத்தி, உண்மைகளை கண்டறிந்து நீதிக்கான பொறிமுறையினை உருவாக்குவதுதான் பொருத்தமானதாக இருக்கும்’ எனவும், கதிர் தெரிவித்தார்.

Posted in Uncategorized

நான்கு கட்டங்களாக ஆரம்பிக்கப்படவுள்ள பாடசாலைகள்

கொவிட் தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இதன்படி நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்படும் நோயாளர்கள் மற்றும் உயிரிழப்போரின் எண்ணிக்கை சடுதியாக குறைவடைந்துள்ளமையினால், பாடசாலைகளை திறக்க முடியும் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மாணவர்களின் கல்வித் தேவை மாத்திரமன்றி, அவர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவது அவசியமானது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆரம்ப வகுப்புக்களை சேர்ந்த மாணவர்கள் மன ரீதியில் பாரிய பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளமையினால், அந்த பிரிவுகளுக்கான வகுப்புக்களை முதலில் ஆரம்பிக்க வேண்டும் என சுகாதார அமைச்சு பரிந்துரை செய்துள்ளது.

இந்த பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான இணைய வழி கல்வி முறைமை வெற்றியளிக்கவில்லை எனவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி நான்கு கட்டங்களாக பாடசாலைகளை மீள திறக்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் நடைமுறை

முதலாம் கட்டம் :

முதலாம் தரம் முதல் 5ம் தரம் வரையான 200 மாணவர்களுக்கு குறைவான மாணவர்களை கொண்ட ஆரம்ப பிரிவுகள் முதலில் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

இரண்டாம் கட்டம் :

முதலாம் தரம் முதல் 5ம் தரம் வரையான 200 மாணவர்களுக்கு அதிக மாணவர்களை கொண்ட அனைத்து பாடசாலைகளும், அனைத்து பிரிவுகளிலும் 100க்கு குறைவான மாணவர்களை கொண்ட அனைத்து பாடசாலைகளும் திறக்கப்பட வேண்டும்.

மூன்றாம் கட்டம் :

அனைத்து பாடசாலைகளிலும் 10, 11, 12 மற்றும் 13ம் தர வகுப்புக்களும், 200க்கு குறைவான மாணவர்களை கொண்ட அனைத்து பாடசாலைகளும் திறக்கப்பட வேண்டும்.

நான்காம் கட்டம் :

அனைத்து வகுப்புக்களும் திறக்கப்பட வேண்டும். ஒரு கட்டம் ஆரம்பிக்கப்பட்டு, அடுத்த கட்ட கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமாயின், வைரஸ் தொற்று தொடர்பில் ஆராயப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள், பாடசாலை நிர்வாகனத்தினர் மற்றும் மாணவர்களுடன் ஒன்றிணைந்து செயற்படுவோர் தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், அவ்வாறு பெற்றுக்கொள்வதற்கு ஏதேனும் பிரச்சினை காணப்படுமாயின், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியை தெளிவூட்ட வேண்டும் எனவும் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

கொவிட் தொற்றுக்கான நோய் அறிகுறிகளுடனான மாணவர்கள் அடையாளம் காணப்படும் பட்சத்தில், மேலதிக சிகிச்சைகளுக்காக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் ஆலோசனைக்கு அமைய, சிறுவர் நோய் அல்லது தொற்று நோய் விசேட வைத்திய நிபுணர்களிடம் காண்பிக்க வேண்டும். இதையடுத்து, சிறார்களுக்கு அவசர சிகிச்சை வழங்கப்பட வேண்டுமாயின், உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு பரிந்துரை செய்துள்ளது

Posted in Uncategorized

அரச தலைவர் கோட்டாபயவின் அறிவிப்பை மீறி இருவர் கைது

பொதுமக்களின் போராட்டங்களுக்கு எந்த தடையும் ஏற்படுத்தப்படவில்லை என அரச தலைவர் கோட்டபாய ராஜபக்ச அறிவித்த நிலையில், நாட்டில் போராட்டங்களை நடத்த முடியாது எனக் கூறி கைது செய்யப்பட்ட இரண்டு சிறு வர்த்தகர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்றுமுன்தினம் ( 20) ஐக்கிய சுயதொழில் தொழிற்சங்கத் தலைவர் சார்ள்ஸ் பிரதீப் உள்ளிட்ட இருவரை தலா 50,000 ரூபாய் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டது.

அரச தலைவர் கோட்டபாய ராஜபகச் நியூயோர்க்கில் உள்ள ஐ.நா பொதுச்செயலாளரிடம் பொது மக்களின் போராட்டங்களில் தனது அரசாங்கம் தலையிடாது எனக் கூறியிருந்தார்.

நாடு முடக்கப்பட்டுள்ளபோதிலும் மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டதைப் போலவே தங்களையும் வியாபாரத்தில் ஈடுபட அனுமதிக்கவேண்டும் எனக் கோரி கோட்டை புகையிர நிலையம் முன்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) ஐக்கிய சுயதொழில் வர்த்தகர் சங்கம், ஆர்ப்பாட்டம் நடத்தியது.

தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இரண்டு சந்தேகநபர்களையும் கோட்டை பொலிஸார் கைது செய்தனர். தான் கொரோனா சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி போராட்டத்தை முன்னெடுப்பதாக பொலிஸாரிடம் சார்ள்ஸ் பிரதீப் குறிப்பிட்டபோதிலும், , “அவ்வாறு செய்ய முடியாது” என அங்கு வந்த பொலிஸ் அதிகாரி குறிப்பிடும் காணொளி ஊடகங்களில் வெளியாகியிருந்தது.

சந்தேகநபர்கள் இருவரும் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், குறித்த இருவரும் சுகாதார விதிகளையும், தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தையும் மீறி ஆரர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும், சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்களை கைது செய்ய விரும்புவதால் இரண்டு சந்தேகநபர்களையும் சிறை வைக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்தனர்.

சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தங்கள் வாடிக்கையாளர்கள் சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தை மீறாத வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

முன்வைக்கப்பட்ட வாதங்களை பரிசீலித்த பின்னர், இரண்டு சந்தேகநபர்களை பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார்.

நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைத் தலைமையகத்தில், பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டாரஸை சந்தித்த, அரச தலைவர் கோட்டபாய ராஜபக்ச போராட்டக்காரர்கள் மீது முன்னரைப் போன்று தடியடி, நீர்த்தாரைத் தாக்குதல் போன்றவற்றை நடத்த, தன்னுடைய ஆட்சியின் கீழ் ஒருபோதும் அனுமதியில்லை எனவும், போராட்டக்காரர்களுக்கென்றே, தன்னுடைய அலுவலகத்துக்கு முன்னால் தனி இடமொன்று ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

அரசாங்கம் சொன்னபடி உண்மையாகவும் நேர்மையாகவும் செயற்பட்டால் வரவேற்கத்தக்கது – சுரேஷ் பிரேமச்சந்திரன்

அரசாங்கம் ஐ.நா. பொதுச் செயலாளருக்கு சொன்னபடி உண்மையாகவும் நேர்மையாகவும் எதிர்காலத்தில் செயற்படுமாக இருந்தால் அது வரவேற்கத்தக்கது. ஆனால் அதனை அவர்கள் செய்யமாட்டார்கள். இதனை கடந்த கால வரலாறு தெளிவுபடுத்துகின்றது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று (21) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பொறுப்பேற்று 2 வருடங்களாகும் நிலையில் முதன்முறையாக ஐ.நாவின் பொதுச் செயலாளரை சந்தித்து பல்வேறுபட்ட விடயங்களை கலந்துரையாடியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.

இதன்போது தடுப்பில் உள்ள தமிழ் இளைஞர்களை விடுவித்தல், காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக துரிதமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஐ.நாவுடன் இணைந்து செயற்படுவோம் என்றும், காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக பல மில்லியன் ரூபா நஷ்டஈடாக வழங்குவது தொடர்பாகவும், அவர்களுக்கு மரணச் சான்றிதழ் கொடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் உள்ளக ரீதியாக புலம்பெயர் தமிழர்களை உள்ளடக்கி பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தவுள்ளதாகவும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்ச்சியாக ஜனாதிபதியில் இருந்து கீழ் மட்டம் வரை வெளிநாடுகளுக்கு கொடுக்கின்ற செய்திகள் என்பது மிக மிக தவறான பிழையான செய்திகளாகவே காணப்படுகின்றன.

காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக கடந்த 3 வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டங்களில் பங்கேற்ற பெற்றோர்கள் பலர் இறந்துவிட்டார்கள். ஆனால் இன்னும் கூட அவர்களை அழைத்து காணாமலாக்கப்பட்டவர்கள் இருக்கிறார்களா இல்லையா என்ன நடந்தது என்பது பற்றி பேசுவதற்கு ஜனாதிபதி தயாராக இல்லை.

அண்மையில் ஒரு விடயம் ஒன்றை ஜனாதிபதி கூறியிருந்தார். “காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான ஆய்வுகளும் விசாரணைகளும் இனிமேல் தேவையில்லை என்றார்” அவர் தான் மரணச் சான்றிதழ் கொடுக்க இருப்பதாகக் கூறுகின்றார். ஆகவே காணாமலாக்கப்பட்டவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு இருக்கிறார்கள் என்பதை மிக சூசகமாக கூறியுள்ளார் என்ற முடிவுக்கு நாம் வர வேண்டி இருக்கின்றது.

எனவே, ஜனாதிபதி ஐ.நாவின் செயலாளருடன் பேசிய விடயங்கள் இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக தெளிவாக அறிவிக்க வேண்டும். அவ்வாறு குறிப்பிட்டால் காணாமலாக்கப்பட்டோருடைய பெற்றோரின் போராட்டங்கள் சில சமயம் முடிவுக்கு வரலாம். இது தொடர்பாக சர்வதேச சமூகம் விசாரிக்க இருக்கிறதா இல்லையா என்பதை அறியலாம். ஏறத்தாழ 16,000 பேருக்கு மேற்பட்டவர்கள் காணாமலாக்கப்பட்டு இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவார்களா நடத்தமாட்டார்களா என்பதை அறியக்கூடியதாக இருக்கும்.

காணாமலாக்கப்பட்டவர்களை கூட்டிச் சென்றமைக்கு சாட்சிகள் உள்ளன. அவ்வாறானவர்கள் கொல்லப்படுவார்கள் என்பதற்கான சாத்தியங்கள் இல்லை என பல உறவினர்கள் நம்புகிறார்கள். இது சம்பந்தமாக ஜனாதிபதி நாடு திரும்பியதும் திட்டவட்டமாகவும் தெளிவாகவும் கூற வேண்டும்.

நஷ்டஈடு கொடுப்பதாக இருந்தால் அந்த நஷ்டஈடு என்பது ஒரு சர்வதேசத் தரத்துக்கு ஏற்ப கொடுக்கப்படுமா? அல்லது இலங்கையில் 1 லட்சம் 2 லட்சம் ரூபாவை கொடுத்து அவர்களை ஏமாற்ற போகின்றார்களா என்பதையும் தெளிவாக தெரிந்து கொள்ள விரும்புகின்றோம். நஷ்டஈடு கொடுக்கும் போது நிச்சயமாக காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் சர்வதேச தரத்துக்கு ஈடாக அது வழங்கப்படவேண்டும் என்பது முக்கியமான கோரிக்கை. ஆகவே, இந்த விடயங்களில் தெளிவுபடுத்தினால் நஷ்டஈடு வாங்க விரும்பக்கூடிய பெற்றோர்கள் அனைவரும் எங்களுக்கு எவ்வளவு நஷ்டஈடு கிடைக்கும் என்பதை அறியக்கூடியதாக இருக்கும்.

வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதியின் ஒரே விதமான கதைகளை சர்வதேச சமூகத்திற்கு தெரிவிக்கின்றனர். நாங்கள் இதனை பார்ப்போமானால் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்று அரசாங்கம் எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்காமல் பல்வேறுபட்ட நடவடிக்கைகளை எடுப்பதாக தோற்றப்பாட்டை காட்ட முயற்சிக்கின்றது.

சாதாரணமாக 2 நாட்டு ஜனாதிபதியோ வெளிவிவகார அமைச்சரோ சந்திக்கும் பொழுது கூட்டறிக்கை விடுவது என்பது ஒரு முக்கியமான விடயமாகும். அது 2 தரப்பும் பல்வேறுபட்ட விடயங்களை ஏற்றுக்கொண்டால் ஒத்துக் கொண்டால் அவற்றை கூட்டாக வெளியிடுவர்.

இங்கு இவர்கள் என்ன பேசினார்கள் என்ற விடயத்தை மாத்திரம் ஒரு தரப்பு மாத்திரமே சொல்கிறது. அதாவது இலங்கை ஜனாதிபதியின் தரப்பு, நாங்கள் என்ன பேசினோம் அவர் என்ன பதில் சொன்னார் என்ற விடயங்களை குறிப்பிடுகின்றது.

அரசாங்கம் தான் சொன்னபடி எங்களிடம் உண்மையாகவும் நேர்மையாகவும் எதிர்காலத்தில் செயற்படும் ஆக இருந்தால் அது வரவேற்கத்தக்கது. ஆனால் இதனை அவர்கள் செய்யமாட்டார்கள் என்பதை கடந்த கால வரலாறு தெளிவுபடுத்துகின்றது என்றார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படும் என ஐ.நா மன்றில் ஜனாதிபதி தெரிவிப்பு- உறவுகள் கண்டனம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படும் என ஐ.நா மன்றில் இலங்கை ஜனாதிபதி தெரிவித்த கூற்றை வன்மையாக கண்டிக்கின்றோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு கண்டனம் தெரிவித்துள்ளது.

குறித்த ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

Posted in Uncategorized

ராஐபக்ச அரசின் உள்ளக பொறிமுறையை தமிழர்கள் நம்பத் தயார் இல்லை – ரெலோவின் இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ்

சர்வதேச நெருக்கடிகளில் இருந்து விடுபடுவதற்காக போலி நாடகம் ஒன்றை அரங்கேற்றி மீண்டும் காலத்தை இழுத்தடிக்க முயற்சிக்கிறார்கள் இதனை பாதிக்கப்பட்ட தமிழர்கள் ஒரு போதும் நம்பத் தயார் இல்லை என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணி தலைவரும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான  சபா குகதாஸ் தெரிவித்தார்.

ஐக்கியநாடுகள் சபையின் பொதுச் செயலாளரை ஐனாதிபதி கோட்டபாய ராஐபக்ச சந்தித்த போது குறிப்பிட்ட உள்ளகப் பொறிமுறை குறித்து கருத்து வெளியிடும் போதே ரெலோவின் இளைஞர் அணித்த தலைவர் இக் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

கோட்டபாய ராஐபக்ச ராஐபக்ச ஐக்கியநாடுகள் சபையின் பொதுச் செயலாளரை 20/09/2021 சந்தித்த போது பல விடையங்களை வாய்மூல வாக்குறுதியாக கொடுத்துள்ளார். இவை அனைத்தையும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளத் தயார் இல்லை. காரணம் போர்க் குற்றங்கள் மனிதப் படுகொலைகள் இனப்படுகொலைக்கான பொறுப்புக் கூற வேண்டிய தரப்பு உள்ளகப் பொறிமுறையை கையாள முடியாது. அத்துடன் உள்ளகப் பொறிமுறை மூலம் தமிழர்களுக்கு நீதி கிடைக்காது என்பதாலே பாதிக்கப்பட்ட தரப்புக்கள் அனைவருமாக சர்வதேச பொறிமுறை ஊடாக நீதியான விசாரணை வேண்டுமேன கோரிக்கை முன் வைத்துள்ளனர்.

கோட்டபாய ராஐபக்ச பாதுகாப்பு செயலராக இருந்த போது உள்ளக விசாரணைப் பொறிமுறையை நிராகரித்தார்கள் தற்போது சர்வதேச நெருக்கடிகளில் இருந்து விடுபடுவதற்காக போலி நாடகம் ஒன்றை அரங்கேற்றி மீண்டும் காலத்தை இழுத்தடிக்க முயற்சிக்கிறார்கள் இதனை பாதிக்கப்பட்ட தமிழர்கள் ஒரு போதும் நம்பத் தயார் இல்லை.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவது என்பது எவ்வளவு மோசமான செயல் பொறுப்புக் கூறல் இன்றி உண்மைகளை மூடி மறைக்க முயல்கிறார்கள். அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகங்களில் இராணுவத்தினர் சிவில் உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டுள்ளமை நீதியை பெற்றுக் கொடுக்குமா? அத்துடன் உள் நாட்டில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழர் பிரதிநிதிகளுடன் பேச முடியாது காலத்தைக் கடத்தும் கோட்டாபய வெளிநாட்டு புலம் பெயர்ந்த தமிழர்களுக்கும் அமைப்புக்களுக்கும் தடை விதித்து விட்டு பேச்சுவார்த்தைக்கு அழைப்பது வேடிக்கையாக இல்லையா?

பாதிக்கப்பட்ட தமிழ் இனத்திற்கு உள்ளகப் பொறிமுறை மூலம் அதுவும் இந்த ராஐபச்க அரசாங்கத்தால் ஒரு போதும் நீதி கிடைக்காது சர்வதேச பொறிமுறைகள் மூலமே நீதி கிடைக்க வேண்டும். அதுவே நிரந்தர தீர்வுக்கான முடிவாக அமையும்.