இலங்கையின் நிலவரம் மோசமடைகிறது – ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் எச்சரிக்கை

இலங்கையில் கடந்த 18 மாத காலத்தில் மனித உரிமைகள் நிலவரம் மிகமோசமான சரிவைச் சந்தித்திருப்பதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.

உண்மை, நீதி, இழப்பீடு வழங்கல் மற்றும் மீள்நிகழாமையை உறுதி செய்தல் என்பன தொடர்பான ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் ஃபெபியன் சல்வியோலி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் நேற்று முன்தினம் உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 18 மாத காலத்தில் இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் மிகமோசமான சரிவைச் சந்தித்திருக்கின்றது.

அத்தோடு உண்மையைக் கண்டறியும் விடயத்தில் மிகவும் வரையறுக்கப்பட்ட அளவிலான நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

பொறுப்புக்கூறல், நினைவுகூரல் மற்றும் மீள்நிகழாமையை உறுதிப்படுத்தல் ஆகிய விடயங்கள் குறிப்பிடத்தக்களவிலான பின்னடைவைச் சந்தித்திருக்கின்றன.

அதுமாத்திரமன்றி இலங்கையின் தற்போதைய நிலவரங்கள் நிலைமாறுகால நீதிப்பொறிமுறையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவையாக இருக்கின்றதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Posted in Uncategorized

அனுராதபுர தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உடன் உறுதிப்படுத்துங்கள் அனுராதபுர தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உடன் உறுதிப்படுத்துங்கள்:சிவசக்தி ஆனந்தன் பகிரங்க கோரிக்கை ; சிவசக்தி ஆனந்தன் பகிரங்க கோரிக்கை!

அனுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு தமிழ்த் மக்கள் தேசிய கூட்டணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் இன்று (18) விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்

மேலும் அவ் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த ஞாயிற்றுக்கிழமை மதுபோதையில் அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் தனது சகபாடிகளுடன் பிரவேசித்த விடயதானத்திற்கு பொறுப்பாகவிருந்த இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் முழந்தாளிடச் செய்து இருவரை மிகமோசமாக அச்சுறுத்தியுள்ளார்.

அத்துடன் காலணிகளை நாக்கால் சுத்தம் செய்யுமாறு மனித விழுமியங்களுக்கு முற்றிலும் முரணான மிலேச்சத்தனமான செயற்பாடுகளை முன்னெடுத்திருப்பதாகவும் குரலற்றவர்களுக்கான குரல் அமைப்பின் தலைவர் கோமகன் குறிப்பிட்டிருக்கின்றார்.

இவ்விதமான செயற்பாடுகள் இந்த நாட்டில் சிறுபான்மையினத் தேசிய இனங்களை தற்போது ஆட்சியில் உள்ளவர்கள் எவ்வாறு நடத்துகின்றார்கள் என்பதை சர்வதேசத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. ஆகவே, இத்தகைய குரூரமான மனோநிலை கொண்டவர்களிடத்தில் நீதியை, நியாயத்தினை எதிர்பார்க்க முடியுமா என்பதும் அப்பட்டமாக வெளியாகியுள்ளது.

தற்போது இராஜாங்க அமைச்சர் சிறைச்சாலை விடயதானத்திலிருந்து மட்டும் பதவியில் இருந்து இராஜினாமாச் செய்துள்ளார். இந்த செயற்பாட்டை அரசாங்கம் குறித்த விடயத்திற்கான பொறுப்புக்கூறலாக படம் காட்டுவதற்கு முயற்சிக்கின்றது.

மேலும், சிறைச்சாலை நிர்வாகம் இவ்விதமான சம்பவம் ஒன்றே நடைபெறவில்லை என்கிறது. இராஜாங்க அமைச்சர் சிறைக்குச் சென்றேன் மதுபோதையில்லை என்று வாக்குமூலம் கூறுகின்றார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அனுமதிப்பத்திர துப்பாக்கியை வைத்திருந்தார் இராஜாங்க அமைச்சர் என்கிறார்.இவ்வாறு பல விநோதமான கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

இதனைவிட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை தீவிரமாக முன்னெடுப்பதாகவும் கூறுகின்றது. இந்த ஆணைக்குழு கடந்த காலங்களில் எத்தனை விடயங்களுக்க நீதியை நிலைநாட்டியிருக்கின்றது என்பது ஊரறிந்த உலகறிந்த விடயம். ஆக இந்த விசாரணைக்குழுவின் முடிவு இப்போதே தெரிந்ததொன்றே.

இந்த நிலையில் அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் மிகுந்த பாதுகாப்பு அச்சத்திற்கு உள்ளாகியிருப்பதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இலங்கையின் வரலாற்றில் வெலிக்கடை, மகசீன. அனுராதபுர கலவரங்களும் கைதிகள் படுகொலை விடயங்களும் தமிழர்களை மையப்படுத்தியே அரங்கேற்றப்பட்டிருக்கின்றது

அவ்வாறிருக்கையில், மிக சொற்பமான எண்ணிக்கையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு திரைமறைவில் தீட்டப்படும் திட்டங்களால் ஆபத்துக்கள் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் வெகுவாகவே ஏற்பட்டுள்ளது. இதனைவிட, அதிகாரத்தில் உள்ள இராஜாங்க அமைச்சர் ஒருவருக்கு எதிராக சாட்சியமளிக்கின்றபோது அவர்களின் பாதுகாப்பு நிச்சயம் கேள்விக்குறியாகும்.
காரணம், சிறை அதிகரிகளும் இந்த விடயத்தில் நியாயமாக நடந்துகொள்ளும் மனோநிலையில் இல்லை. ஆகவே வேறெந்த காரணங்களை வைத்தும் தமிழ் அரசியல் கைதிகள் பழிவாங்கப்படுவதற்கும் வாய்ப்புக்கள் இல்லாமல் இல்லை.எனவே, அவர்களின் பாதுகாப்பை உடன் உறுதிப்படுத்த வேண்டும். அதற்கு முதற்கட்டமாக அவர்களை வடக்கு கிழக்கில் உள்ள சிறைச்சாலைகளுக்கு இடமாற்ற வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன் என்றுள்ளது.

Posted in Uncategorized

கொலையாளிகளிடம் தமிழர்களிற்கு நீதி வழங்குவதற்கான பொறுப்பினை வழங்கமுடியுமா? காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கேள்வி!

நீதிக்காக ஏங்கும் தமிழ்மக்கள் விடயத்தில் அரசியல் வியாபாரத்தை புறந்தள்ளி நீதியை பெற்றுத்தாருங்கள் என வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் செயலாளர் சி.ஜெனிற்றா தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

ஓம் எம் பி அலுவலகம் ஒரு கண்துடைப்பிற்காகவே உருவாக்கப்பட்டது. அது சர்வதேசத்தினை ஏமாற்றுவதற்காக அரசின் தந்திரோபாயத்தால் உருவாக்கப்பட்டது. அந்த அலுவலகத்தின் மீது எமக்கு நம்பிக்கையில்லை. அதனை யாருக்காக திறந்தார்கள் என்பது எமக்கு தெரியாது. கொலையாளிகளிடம் தமிழர்களிற்கு நீதி வழங்குவதற்கான பொறுப்பினை வழங்கமுடியுமா என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை.

எனவே இனப்படுகொலையை செய்த இலங்கை அரசுக்கு மன்னிப்பு வழங்காமல் குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்தி எம் உறவுகளுக்கு சர்வதேசநீதி கிடைப்பதற்கு இணை அனுசரணை நாடுகள் உதவிபுரிய வேண்டும். இந்த நெருக்கடியான காலப்பகுதியிலும் எமது சங்கத்தின் அம்பாறை மாவட்ட தலைவியை பொலிசார் விசாரணைக்கு அழைத்துள்ளார்கள்.

மனிதஉரிமை அமர்வுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் சூழலில் கூட இந்த அரசு அத்து மீறல்களை அரங்கேற்றி வருகின்றது. அமைச்சர் தினேஸ் குணவர்த்தன உட்பட பலர் எமது நீதிக்கான போராட்டத்தினை மழுங்கடிப்பதற்காக பல்வேறு பொய்களை கூறி சர்வதேசத்தினை திசைதிருப்பி வருகின்றனர். நாம்12 வருடமாக தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறோம்.

எனவே சர்வதேச நாடுகள் தங்களது நலனுக்காக இலங்கை அரசை பாதுகாக்காமல் மனிதாபிமான அடிப்படையில் எமது பிரச்சனையை தீர்ப்பதற்கு முன்வரவேண்டும். இந்த அமர்விலாவது எமது உறவுகளுக்கு நீதி கிடைப்பதற்கு வழிசமைக்க வேண்டும். இன்று தமிழ்அரசியல்வாதிகள் தங்களது கதிரைகளை பாதுகாப்பதற்காக தங்களுக்குள் பேரம்பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.

அதனை தவிர்த்து மக்களின் விடுதலைக்காக அரசியல்வாதிகளும், பொதுமக்களும் ஒட்டுமொத்த குரலாக ஒலித்து ஒன்றாக செயற்படவேண்டும். அவர்கள் அனுப்பிய கடிதங்களை பார்த்தால் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பதிலாக உங்களது அரசியலுக்காக அனுப்பியிருக்கின்றீர்களா என்றே எண்ணத்தோன்றுகின்றது.

இலங்கை அரசு புள்ளிவிபர அடிப்படையில் கடிதங்களை அனுப்பியிருக்கின்றது. அது உங்களால் ஏன் முடியாது. நாடாளுமன்றம் சென்று வெற்று கதை பேசிவிட்டு வருகின்றீர்கள். எமக்காக குரல்கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் நாம் பயணித்தோம்.

எனவே தேசியம் பேசிக்கொண்டு பிரிந்து நின்று இனத்துரோகமாக செயற்படாதீர்கள். எமது நீதிக்காக உங்களது அரசியல் வியாபாரத்தை மறுபக்கம் வைத்துவிட்டு நீதியை பெற்றுத்தாருங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் ?

பல்கலைகழகங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சகல பல்கலைக்கழக கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்களில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு இரண்டு தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

30 வயதுக்கு குறைவான கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் அந்தந்த மாவட்ட சுகாதார சேவைகள் மத்திய நிலையத்தினை தொடர்பு கொண்டு விரைவில் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுமாறு சகல பல்கலைக்கழகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்தும் செயற்பாட்டின் முன்னேற்றம் குறித்து பல்கலைக்கழக சுகாதார துறையினர் மற்றும் துணைவேந்தர் உள்ளிட்ட தரப்பினருடன் கலந்துரையாடி பல்கலைக்கழகங்களை மீள திறப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்று 1530 பேருக்கு தொற்று ; நேற்று 84 கொவிட் மரணங்கள்

கொவிட் தொற்றுக்கு உள்ளான மேலும் 84 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதே நேரரம் கடந்த 24 மணித்தியாலங்களில்நாட்டில் மேலும் 1,530 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,022 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 501,302 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 431,036 ஆக அதிகரித்துள்ளது.

Posted in Uncategorized

கொரோனாவைக் காரணம் காட்டி  மீண்டும் ஒரு தடையுத்தரவு –  ரெலோ பிரசன்னா இந்திரகுமார்

மீண்டும் மீண்டும் இந்த அரசு கொரோனாவைக் காரணம் காட்டி எம் நினைவுகளைத் தடுக்க எண்ணுகின்றது. அடக்க அடக்க அதிகரிக்குமே தவிர எம் நினைவுகள் என்றும் அடங்காது. இவ்வாறானா செயற்பாடுகள் மூலம் மேலும் தமிழ் மக்களின் மனங்களைப் புண்படுத்தும் செயற்பாடுகளையே அரசு மேற்கொள்கின்றது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதித் தலைவரும், கிழக்கு மாகாணசபை முன்னாள் பிரதித் தவிசாளருமான பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.

திலீபன் நினைவேந்தலை நினைவு கூருவது தொடர்பில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட தடையுத்தரவினை இன்றைய தினம் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய அதிகாரியினால் கையளிக்கப்பட்டதன் பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழினத்திற்கான போராட்ட வரலாற்றின் நினைவேந்தல்களை அனுஸ்டிப்பதற்கு எதிரானவர்கள் என்று மட்டக்களப்பில் யாரும் இருக்கமாட்டார்கள். அப்படி இருக்க நினைவேந்தல்களுக்கு எதிரானவர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்பது பொய்யான அறிக்கையாகவே தோணுகின்றது. பொலிசாரினால் நீதிமன்றத்திற்கு பொய்யான தகவல்களைச் சொல்லி தடையுத்தரவுகள் பெறப்படுகின்றனவோ எனச் சந்தேகிக்கத் தோணுகின்றது.

அடுத்து கொரோனா, தமிழ் மக்களின் நினைவேந்தல்களுக்கு மாத்திரம் எவ்வாறுதான் கொரோனா பரவுகின்றதோ தெரியவில்லை. ஆளுங்கட்சி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எத்தனையோ விழாக்கள் செய்கின்றார்கள். திறக்கப்பட்ட களஞ்சியசாலைகளுக்கு இன்னுமொரு பெயர் வைத்து அதனை மீண்டும் திறக்கின்றார்கள். இந்த நிகழ்வுகளில் எல்லாம் அவர்களின் ஆதரவாளர்கள், அதிகாரிகள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்தும் கொள்கின்றார்கள். அப்போதெல்லாம் இல்லாத கெரோனா எமது நினைவேந்தல்களுக்கு மாத்திரம் எவ்வாறு வருமோ தெரியவில்லை.

மீண்டும் மீண்டும் இந்த அரசு கொரோனாவைக் காரணம் காட்டி எம் நினைவுகளைத் தடுக்க எண்ணுகின்றது. அடக்க அடக்க அதிகரிக்குமே தவிர எம் நினைவுகள் என்றும் அடங்காது. அரசு மக்களின் மனங்களை வெல்வதை விடுத்து மீண்டும் மீண்டும் இவ்வாறானா செயற்பாடுகள் மூலம் தமிழ் மக்களின் மனங்களைப் புண்படுத்துகின்றது என்று தெரிவித்தார்.

Posted in Uncategorized

ரிஷாட்க்கு முதலாம் திகதி வரை விளக்கமறியலில்; மனைவி, மாமனாருக்கு பிணை

16 வயது சிறுமியை துன்புறுத்திய சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் எதிர்வரும் முதலாம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, முன்னாள் அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனின் மனைவி மற்றும் மாமனாருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

ரிஷாத்தின் வீட்டில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த நிலையில் சிறுமி ஹிஷாலினி தீக்காயங்களுக்கு இலக்காகி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுக்கப்பட்டிருந்தது.

இதன்போதே ரிஷாத் பதியுதீனுடைய மனைவி மற்றும் மாமனாரை பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய இன்றைய தினம் பிறப்பித்துள்ளார்.

 

Posted in Uncategorized

மக்களுக்கு எப்போது நீதி கிடைக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது – பேராசிரியர் போல் நியூமன்

ஆணையாளருடைய அறிக்கையை வருடாவருடம் வரவேற்றுக்கொண்டு தான் இருக்கிறோம். வரவேற்பைத் தாண்டி அந்த அறிக்கைகள் எங்கே போகிறது என்பது ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது. மக்களுக்கு எப்போது நீதி கிடைக்கும் என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது என பெங்களூர் பல்கலைக்கழகத்தினுடைய மனித உரிமைகள் தொடர்பிலான பேராசிரியர் போல் நியூமன் தெரிவித்துள்ளார்.

48வது கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும் தீர்மானம் மிக்கதாக இல்லாத சூழ்நிலையிலும் இந்த கூட்டத்தொடரில் ஆணையாளரினுடைய அறிக்கையினை நீங்கள் எப்படி அவதானிக்கிறீர்கள் என ஊடறுப்பு நிகழ்ச்சியில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அறிக்கை வெளிவந்த அடுத்த நாளே வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பீரிஸ், வெளியிலிருந்து எந்த ஒரு அழுத்தமும் எமது நாட்டுக்கு வர முடியாது, வரவும் கூடாது. மனித உரிமை ஆணையகத்துக்கு அழுத்தம் கொடுக்க எந்த உரிமையும் இல்ல என தெளிவாகச் சொல்லியிருக்கின்றார்.

ஆணையாளருடைய அறிக்கையை வருடாவருடம் வரவேற்றுக்கொண்டு தான் இருக்கிறோம். வரவேற்பைத் தாண்டி அந்த அறிக்கைகள் எங்கே போகின்றது ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது.

மக்களுக்கு எப்போது நீதி கிடைக்கும் என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. இவ்வாறு இன்னும் எத்தனை வருடங்களுக்கு இருக்கப்போகின்றது என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது என தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

அப்பாவி தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்துவது வீரம் கிடையாது- சரத் பொன்சேகா

தமிழீழ விடுதலைப் புலிகளைக் கண்டு அஞ்சிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, அப்பாவி தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்துவது வீரம் கிடையாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் சரத் பொன்சேகா மேலும் கூறியுள்ளதாவது, “இந்த நாட்டை முன்னேற்ற வேண்டுமெனில், அதற்கு தகுதியானவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், துப்பாக்கிகளை வைத்து அச்சுறுத்தல்களை மேற்கொள்வோருக்கும் அமைச்சுப் பதவிகளைக் கொடுத்து, இந்த நாட்டை ஒருபோதும் முன்னேற்ற முடியாது.

லொஹான் ரத்வத்தவின் நடவடிக்கைகள் இன்று அனைவராலும் விமர்சிக்கப்படுகிறது. இவர் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் விடுதலைப் புலி உறுப்பினரின் பெயரைக் கேட்டாலோ அல்லது அவர்களைக் கண்டால்கூட ஒழிந்துக் கொள்வாராக இருக்கும்.

ஆனால், இன்று 15 வருடங்களுக்கு மேலாக சிறையில் வாடும் அப்பாவி தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்துகிறார். அந்தக் கைதிகள் இன்று அனைத்தையும் கைவிட்டுள்ளார்கள். அப்படியாவர்களை மண்டியிட வைத்து அவர்களின் தலையில் துப்பாக்கியை வைக்கிறார்.

இது எவ்வளவு கீழ்த்தரமான செயற்பாடு. இவ்வாறான செயற்பாடுகளை வீரன் ஒருவன் ஒருபோதும் செய்ய மாட்டான். குடிபோதையில் ஒருவன் துப்பாக்கித் தூக்கினால், அவன் வீரன் கிடையாது.

நானும் சிறைக்கைதியாக இருந்துள்ளேன். அவர்கள் அனுபவிக்கும் துன்பம் எனக்கும் தெரியும். இந்த நிலையில், நான் கைதிகளிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன். இவ்வாறான சண்டியர்கள் இனிமேல் சிறைச்சாலைக்குள் நுழைந்து அச்சுறுத்தினால், அவர்களுக்கு தகுந்த பாடத்தை கற்பியுங்கள்.

அரசாங்கம் லொஹான் ரத்வத்தவை, சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சுப் பதவியில் இருந்து மட்டும்தான் நீக்கியுள்ளதே தவிர, அவருக்கு ஏனைய அமைச்சுப் பதவிகள் அப்படியே தான் உள்ளன.

இவருக்கு எதிராக இன்னும் பல முறைப்பாடுகளும் உள்ளன. பாராளுமன்றிலும் நான் இதுதொடர்பாக ஏற்கனவே கூறியுள்ளேன்.

ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, இவ்வாறான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது” என அவர் குறிப்பிட்டள்ளார்.

நாங்கள் இறந்து விட்டால் சாட்சியங்கள் அழிந்து விடும் அதனையே அரசாங்கம் எதிர்பார்க்கின்றது- உறவுகள்

நாங்கள் இறந்து விட்டோம் என்றால் சாட்சியங்கள் அழிந்து விடும். அதனையே அரசாங்கம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் சங்கத்தின் இணைப்பாளர் மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார்.

https://youtu.be/Ssht2US5QhM

ஆகவே இலங்கை இராணுவத்தையோ அல்லது அரசாங்கத்தையோ நாங்கள் நம்பவில்லை. இதனால் எங்களுக்கு சர்வதேசம் ஒரு நல்ல பதிலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நாம் விடுக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மனுவல் உதயச்சந்திரா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஜெனிவா 48 ஆவது அமர்வு இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் நாங்கள் ஜெனிவாவிடம் கோரிக்கை ஒன்றை முன்வைக்கின்றோம். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு ஒரு தீர்வு தேவை. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக அம்மாக்கள் இன்று சுமார் 1500 நாட்களாக வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.

நாங்கள் வீதியில் இறங்கி எமது உறவுகளை மீட்க போராடுவது  உலக நாடுகளுக்கே தெரியும். நாங்கள் நீதிக்காக போராடி வருகிறோம் தவிர நிதிக்காக போராடவில்லை.

மன்னார் மாவட்டத்தில் முப்படையை நம்பியே நாங்கள் இருந்தோம். ஒன்றும் நடக்காது எமது பிள்ளைகள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நம்பி இருந்ததோம்.

இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்று இதுவரை எந்ததொரு தகவலும் இல்லை.

ஆகவே, நாங்கள் இறப்பதற்கு முன் எமது பிள்ளைகளின் நிலை என்ன என்று எமக்கு தெரிய வேண்டும். எமது பிள்ளைகளின் நிலை என்ன? அவர்களை எங்கே வைத்துள்ளீர்கள்? அவர்கள் இருந்தால் அவர்களை விடுதலை செய்ய உதவுங்கள் என்றுதான் நாங்கள் இன்று உலக நாடுகளிடம் கேட்கின்றோம்.

எமது பிள்ளைகளை வீதியில் நின்று தேடுகின்ற அம்மாக்களாக நாங்கள் இருக்கின்றோம். அவர்களின் கண்ணீரை உலக நாடுகள் பார்த்துக் கொண்டு இருக்கின்றது.

ஜெனிவா பேச்சுவார்த்தையில் எமக்கு ஒரு நல்ல முடிவு கிடைக்க வேண்டும். இலங்கை இராணுவத்தையோ அல்லது அரசாங்கத்தையோ நாங்கள் நம்பவில்லை.

எங்களுக்கு சர்வதேசம் ஒரு நல்ல பதிலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஜெனிவா 48 ஆவது அமர்வில் கோரிக்கை விடுக்கின்றோம்.

எங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்க வேண்டும். எங்களின் காலங்கள் இன்னும் அதிகம் இல்லை. நாங்கள் இறந்து விட்டோம் என்றால் சாட்சியங்கள் அழிந்து விடும். அதனையே அரசாங்கம் பார்த்துக் கொண்டு இருக்கின்றது.

ஒரு அம்மா உயிருடன் இருக்கும் வரை  பிள்ளைகளுக்கான போராட்டம் நடந்து கொண்டு இருக்கும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.