தனிமைப்படுத்தல் ஊரடங்கு ஒக்ரோபர் 01 வரை நீடிப்பு

நாடளாவிய ரீதியில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் செப்ரம்பர் 21ஆம் திகதி தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில் எதிர்வரும் ஒக்ரோபர் முதலாம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 04 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் இன்று (17) முற்பகல் கூடிய கொவிட் ஒழிப்பு விசேட குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

செப் 21- 22ல் பாராளுமன்றம் கூடும்

பாராளுமன்றத்தை செப்ரம்பர் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடா ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இன்று (17) நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

இந்தியா – இலங்கை பயணிகள் கப்பல் சேவை விரைவில் தொடக்கம்: இலங்கை அமைச்சர் வியாழேந்திரன் பேச்சு

இந்தியா – இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க ஆயத்த பணிகள் நடைபெற்று வருவதாக இலங்கை அமைச்சர் சிவகங்கையில் தெரிவித்துள்ளார்.
இலங்கை பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டைமான் மற்றும் இலங்கை கிராம அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ஆகியோர் சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கு பின் ராமேஸ்வரம், நாகை, புதுக்கோட்டை மாவட்ட மீனவ சங்க பிரதிநிதிகள் இலங்கை அமைச்சர்களை சந்தித்து, ‘இந்திய இலங்கை மக்கள் வேற்றுமை இல்லாமல் உறவாக பழகி வருகிறோம். ஆனால், சமீப காலமாக தமிழக மீனவர்களை எதிரியாக நினைத்து இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதுடன், அந்நாட்டு கடற்படையால் பல மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். பலர் காணாமல் போயிருக்கிறார்கள்.
200-க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் சிறைபிடிக்கப்பட்டு விடுவிக்கப்படாமல் உள்ளன. அவற்றை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கிடப்பில் போடப்பட்டுள்ள இந்திய இலங்கை இரு நாட்டு மீனவ பேச்சுவார்த்தையை மீண்டும் நடத்தி இரு நாட்டு மீனவர்களும் பாரம்பரிய இடத்தில் மீன்பிடித் தொழில் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை பிரதம மந்திரியின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டைமான், இலங்கையில் உள்ள இந்திய படகுகளை விடுவிக்க வேண்டும், எதிர்காலத்தில் கடலில் நட்பு பயணம் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் இலங்கையில் அமைச்சர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி இரு நாட்டு மீனவர்களின் உறவுகளை மேம்படுத்தி அமைதியான முறையில் மீன்பிடி தொழில் நடத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

ராமேஸ்வரம் மீனவர்கள் குறுகிய கடல் எல்லைக்குள் மீன் பிடிப்பதால் எல்லை தாண்ட நேரிடுகிறது, இதனால் இரு நாட்டு கடற்படையினரும் நடவடிக்கை எடுக்கிறார்கள். எனவே இரு நாட்டு கடற்படையினர் பேசி சுமூக தீர்வு ஏற்பட இலங்கை அரசிடம் கோரிக்கை வைக்க உள்ளதாக தெரிவித்தார்.

இலங்கையில் துறைமுகப் பணிகளை சீனா ஏற்று நடத்துவதில் எந்த பாதிப்பும் இல்லை. சீனா துறைமுகம் கட்டவில்லை துறைமுக விரிவாக்கப் பணிகளை சீனர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் உள்ள உறவு எந்தவிதத்திலும் பாதிக்காது என்றார் செந்தில் தொண்டைமான்.

அதன் பின்னர் பேசிய இலங்கை கிராம அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், இலங்கை இந்தியா இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பிப்பது தொடர்பாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்து உரையாடினோம். இது குறித்து புதுச்சேரி முதல்வர் சாதகமான பதிலை தெரிவித்துள்ளார். அதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பித்துள்ள நிலையில் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது என்றார்.

“காரைக்காலில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கும்போது நிச்சயமாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கும், இலங்கையில் இருந்து இந்தியாவுக்கும் சுற்றுலாத்துறை, சமய நிகழ்வுகள், மருத்துவத்துறை உள்ளிட்ட உறவுகள் மேம்படும். இரு நாட்டுக்கும் இடையே கப்பல் போக்குவரத்து விரைவில் ஆரம்பிக்கப்படும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறோம்,” என்றார்.

இலங்கை அமைச்சருடனான சந்திப்பு குறித்து ராமேஸ்வரம் அனைத்து மீனவ சங்க தலைவர் ஜேசுராஜா பிபிசி தமிழிடம் பேசுகையில், கடந்த சில மாதங்களாக இலங்கை கடற்படையின் கடுமையான கெடுபிடியால் தமிழ்நாட்டு மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடிக்க முடியவில்லை எனவே கிடப்பில் போடப்பட்டுள்ள இரு நாட்டு மீனவர்கள் தொடர்பான பேச்சுவார்த்தையை விரைவில் நடத்திட வேண்டும்.

இலங்கை மீன் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏற்பாடு செய்வதாக இலங்கை அமைச்சர் உத்தரவாதம் தந்துள்ளார். இதனை தமிழக மீனவர்கள் முழுமையாக நம்புகிறோம்.

ஒவ்வொரு முறையும் மத்திய, மாநில அரசுகளிடம் மீனவ பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு பெற்று தரவும் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

தொடர்ந்து உயர்ந்து வரும் டீசல் விலையால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு மீனவர்களின் பாரம்பரிய தொழிலான மீன்பிடி தொழில் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது என ஜேசு ராஜா தெரிவித்தார்.

Thanks :- BBC Tamil

Posted in Uncategorized

இலங்கை நால்வரை விடுவிக்கவேண்டும்; ‘ஹெக்கர்ஸ்’ ன் மிரட்டல்

எதிர்வரும் 20 ஆம் திகதி தாக்குதல் ஒன்று நடத்தப்படலாம் என கிடைக்கப்பெற்றதாக கூறப்படும் தகவல் ஒன்றுக்கு அமைய, கட்டுநாயக்க – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தளை, மஹிந்த ராஜபக்க்ஷ சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த தகவல் தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் தேசிய உளவுச் சேவை விசேட அவதானம் செலுத்தி இரகசிய விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அறிய தெரிய வருகிறது.

அதன்படி தாக்குதல் குறித்த எச்சரிக்கை மின்னஞ்சலானது, பங்களாதேஷின் இராணுவத்துடன் தொடர்புடைய நிறுவனம் ஒன்றின் இணையத் தளத்தை ‘ஹெக்’ செய்து, அதன் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் கடந்த செவ்வாயன்று (14) இரவு விமான நிலையத்துக்கு கிடைக்கப்பெற்றதாக கூறப்படும் மின்னஞ்சலில், எதிர்வரும் 20 ஆம் திக்தி விமான நிலையங்கள் மற்றும் அரச கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தப் போவதாகவும், தாம் பெயரிடும் நால்வரை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரிய வருகிறது.

எவ்வாறயினும் உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்றாக குறித்த தகவல் கிடைக்கப்பெற்றிருப்பினும் முன்கூட்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளின் நிமித்தம் இவ்வாறு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளில், விமானப்படையினர் மற்றும் விசேட அதிரடிப் படையினர், பொலிஸ் குழுக்கள் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.

இந்த மின்னஞ்சலானது, ‘ஹெக்கர்ஸ்’ என அறியப்படும் இணையங்களை முடக்கும் திட்டமிட்ட குழு ஒன்றின் வேலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், உளவுத் துறை சிறப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன.

இலங்கையை நம்பக்கூடாது – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

ஐரோப்பிய ஒன்றியமும் சர்வதேச சமூகமும் இலங்கை அரசாங்கத்தின் பொய்யான வாக்குறுதிகளையும் அலங்கரிக்கப்பட்ட வரவேற்புக்களையும் நம்பி அமைதியடைந்துவிடக்கூடாது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கடந்த 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அநுராதபுரம் சிறைச்சாலைக்குச்சென்று, அங்கு தமிழ் அரசியல்கைதிகளை அழைத்து அவர்களில் இருவரை மண்டியிடச்செய்ததாகக் கூறப்படும் சம்பவம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இவ் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு, பலவருடகாலம் தண்டனையை அனுபவித்த சிறைக்கைதிகளைப் பொதுமன்னிப்பின்கீழ் விடுதலை செய்வதன்மூலம் சர்வதேச பங்காளிகளைத் திருப்திப்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது.

மாறாக பயங்கரவாதத்தடைச்சட்டத்தை மீளாய்விற்கு உட்படுத்துவதற்கான வலுவான அழுத்தத்தை வழங்கவேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

இரத்தினக்கல்இ தங்க ஆபரணங்கள் சார்ந்த கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கடந்த 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அநுராதபுரம் சிறைச்சாலைக்குச்சென்று, அங்கு தமிழ் அரசியல்கைதிகளை அழைத்து அவர்களில் இருவரை மண்டியிடச்செய்ததாகக் கூறப்படும் சம்பவம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கின்றது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

ஜீ.எஸ்.பி. குறித்துப் பேச இலங்கை வருகிறது  ஐரோப்பிய ஒன்றிய குழு

ஜீ.எஸ்.பி. வரிசலுகையை இலங்கைக்கு தொடர்ந்தும் வழங்குவது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் 27 ஆம் திகதி நாட்டுக்கு வருகை தரவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார்.

இன்று வியாழக்கிழமை இணையவழியூடாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

இவ்வாறு நாட்டுக்கு வரவுள்ள பிரதிநிதிகள் குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் உள்ளிட்ட பல உயர்மட்ட அரசியல் தலைவர்களை சந்திக்கவுள்ளது.

Posted in Uncategorized

யொஹான் ரத்தத்த விவகாரம் ; அரசியல் கைதிகளுக்கு நீதி கிட்ட வேண்டும் : அருட்தந்தை சத்திவேல்

பதவி விலகிய ராஜாங்க அமைச்சரின் செயற்பாடு அதிகார துஷ்பிரயோகம் மட்டுமல்ல அதனால் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட அரசியல் கைதிகளுக்கு நீதியும் கிட்ட வேண்டும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளுடைய தற்போதைய நிலவரம் குறித்து இன்று (16) அவரால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சிறைச்சாலை புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சரின் பதவி விலகல் நீதியை எதிர்பார்ப்பது கண்களில் மண்ணை தூவுவதாக அமைந்து விடக்கூடாது.
பதவி விலகிய ராஜாங்க அமைச்சரின் செயற்பாடு அதிகார துஷ்பிரயோகம் மட்டுமல்ல அதனால் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட அரசியல் கைதிகள் உள்ளனர். அவர்களுக்கும் நீதியும் கிட்ட வேண்டும்.
லொஹான் ரத்வத்த மீது மதுபோதையில் இருந்தமை, அரசியல் கைதி சுலக்சனை மண்டியிடச் செய்தமை, கை துப்பாக்கியை நெற்றியில் வைத்தமை, மண்டியிடச் செய்து கொலை அச்சுறுத்தல் விடுத்தமை, குடிபோதையில் இருந்தவர்களையும் சிறைச்சாலைக்குள் அழைத்து சென்றமை, அவசர தேவை இன்றி சிறைச்சாலைக்குள் அகால நேரத்தில் சென்றமை போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றது.
சம்பவம் நடந்தபோது சிறைச்சாலை அதிகாரிகள் அருகில் இருந்திருக்க வேண்டும். அவர்கள் சம்பவத்தை தடுத்திருக்கலாம் அதனையும் செய்யாது சம்பவத்தை பதிவு செய்து மேலிடத்துக்கு உடனடியாக அறிவிக்காதது போன்ற குற்றச் சாட்டுகளும் உள்ளன.குற்றச் சாட்டுக்கு உள்ளாகின்ற அத்தனை பேர் மீதும் உரிய விசாரணை முன்னெடுக்கப்படல் வேண்டும்.
அதிகார துஷ்பிரயோகம் செய்த அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவதோடு, லொஹான் ரத்வத்தயின் ஏனைய ராஜாங்க அமைச்சி பதவியும் பறிக்கப்படல்
வேண்டும். அதுவே நீதியை எதிர் பார்ப்போருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும். இதனையும் விட இச்சம்பவத்தால் அனைத்து அரசியல் கைதிகளும் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.
குறிப்பாக அனுராதபுர அரசியல் கைதிகள் அவர்களின் உள ரீதியான பாதிப்பு மதிப்பிட முடியாது அவர்களுக்கு நீதி கிட்டுவதன் முதல் அடையாளமாக அனுராதபுர சிறையில் இருந்து பாதுகாப்பாக யாழ்பாண சிறைக்கு அவர்களை மாற்ற வேண்டுமென அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு அவசர வேண்டுகோள் விடுக்கின்றது.
அத்தோடு உளவியல் ரீதியாக நேரடியாக பாதிக்கப்பட்ட அரசியல் கைதியான சுலக்சனை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அத்தோடு இதனால் பாதிக்கப்பட்டவருக்கு அவர் எதிர்பார்க்கும் நட்ட ஈட்டை வழங்க வேண்டும்.
ஐ.நா மனித உரிமை பேரவை கூட்டத் தொடர் நடந்து கொண்டிருக்கின்ற இக்கால கட்டத்தில் பயங்கர வாத தடுப்புச் சட்டம் நீக்கப்படும் காலமும் அரசியல் விடுதலை செய்வதற்கான கால உத்திரவாதமும் நிர்ணயிக்க வேண்டும்.
மேலும் அரசியல் கைதிகளுக்கும், ஏனைய கைதிகளுக்கும், பொதுவாக நாட்டில் அனைத்து அரசியல் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும், மனித உரிமை ஆர்வலர்களுக்கும் கருத்து சுதந்திரத்துக்கான பாதுகாப்போடு, வாழ்வு சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லொஹான் ரத்வத்த பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்த வேண்டும் – சர்வதேச மன்னிப்புச் சபை

லொஹான் ரத்வத்த அவரது நடவடிக்கைகளுக்காக பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்த வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசியா பசுபிக்கிற்கான இயக்குநர் யாமினி மிஸ்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் நுழைந்த இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கிமுனையில் கொலை செய்யப் போவதாக மிரட்டிய சம்பவம் குறித்து வெளியாகியுள்ள தகவல்களை சுட்டிக்காட்டி இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் யாமினி மிஸ்ரா மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் கைதிகள் நடத்தப்படுவது குறித்த எங்களது கரிசனைகள் குறிப்பாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை அதிகாரிகள் சித்திரவதை செய்வது மனிதாபிமானமற்ற விதத்தில் நடத்துவது குறித்த எங்கள் கரிசனைகள் உண்மையானவை என்பதை இந்த சம்பவம் குறித்த தகவல்கள் புலப்படுத்தியுள்ளன.

அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் உள்ளவர்கள் குற்றவியல் நடவடிக்கைளில் ஈடுபட்டால் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுவது காணப்படுவதை இது வெளிப்படுத்தியுள்ளது.

உடனடி பக்கச்சார்பற்ற பயனுள்ள விசாரணை அவசியம். அமைச்சரை அவரது நடவடிக்கைகளிற்காக பொறுப்புக் கூற செய்ய வேண்டும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அமர்வில், 16 முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் ஜனாதிபதியால் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டமை குறித்து அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் தம்பட்டம் அடித்தார்.

இவர்கள் ஏற்கனவே விடுதலை செய்யப்படவிருந்தவர்கள். லொஹான் ரத்வத்தயின் இந்த நடவடிக்கை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் நிலைமையை சரி செய்வதற்கு அரசாங்கம் நல்லிணக்கம் என்ற பெயரில் முன்னெடுக்கும் சிறிய நடவடிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற மிகமோசமான மனித உரிமை மீறல் குறித்த எதிர்கால பொறுப்புக்கூறும் நடவடிக்கைகளுக்காக ஆதாரங்களை சேகரித்து பாதுகாப்பதற்கான பொறிமுறையை இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் நிராகரித்துள்ளார்.

இந்த விவகாரங்களிற்கு தீர்வை காண்பதற்கு உள்நாட்டு செயற்பாடுகளே அவசியம் என குறிப்பிட்டுள்ளார். லொஹான் ரத்வத்தவை அவரது நடவடிக்கைகளிற்காக பொறுப்புக்கூறச் செய்தால் மாத்திரமே உள்நாட்டு செயற்பாடுகள் குறித்த வெளிவிவகார அமைச்சரின் இந்த சொற்கள் தீவிரமானவையாக கருதப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமையும் திட்டமிட்ட இன அழிப்பின் ஓர் அங்கம் – வலிந்து காணமால் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அமைப்பு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமையும் திட்டமிட்ட இன அழிப்பின் ஓர் அங்கம். வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் அதன் கனதியை நீர்த்துப்போகச் செய்யவே எண்ணிக்கையைக் குறைக்கும் விசமத் திட்டத்தில் ஈடுபடுகிறார். இதை மனித உரிமை உயர்ஸ்தானிகர் ஆமோதிப்பதா? கூடாது என பச்சலற் அம்மையாருக்குக் காட்டமான திறந்த மடல் ஒன்றை வலிந்து காணமால் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அமைப்பு எழுதியுள்ளது.

கடந்த 2000-2021 வரையான இருபது வருட காலப்பகுதியில் ஏறத்தாழ ஆறாயிரம் காணாமலாக்கப்பட்டோர் பற்றிய விபரக் கோவையைத் தற்போது ஒப்புநோக்கி உறுதிப்படுத்தி வெளியிட இருப்பதாக இலங்கை அரசின் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் ஜெனீவா ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகரின் வாய்மூல அறிக்கைக்கு முன்பதாகத் தகவல் வழங்கியிருக்கிறார்.

அதுவே குறைந்த ஒரு எண்ணிக்கை. அதைக்கூட நான்காயிரத்துக்கும் அல்லது அதற்கும் குறைவாகக் காட்ட முனையும் ஒரு கண்துடைப்பு நாடகத்தை அவர் ஆரம்பித்திருப்பதை எவ்வாறு மனித உரிமை உயர்ஸ்தானிகர் ஆமோதிக்க முடியும் என்று 2021 செப்ரம்பர் 15 ஆம் திகதி புதன்கிழமை காட்டமான திறந்த மடல் ஒன்றை வலிந்து காணமால் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அமைப்பு உயர்ஸ்தானிருக்கு அனுப்பிவைத்துள்ளது.

ஆங்கில மொழியில் இரண்டு பக்கங்களில் வரையப்பட்ட அந்த மடலில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டவையும், கோரிக்கையாக முன்வைக்கப்பட்டவையுமான விபரங்களின் சுருக்கம் வருமாறு:

இலங்கை அரசு திட்டமிட்ட இன அழிப்பையே வடக்கு – கிழக்கில் தமிழ் மக்களுக்கு எதிராகப் புரிந்துள்ளது. அதன் ஒரு அங்கமாகவே கடந்த இருபது வருடங்களுக்குள் மாத்திரம் குறைந்தது 15,000 தமிழர்கள் அரச படைகளினாலும் அவர்களால் இயக்கப்பட்டவர்களாலும் வலிந்து காணாமலாக்கப்பட்டனர்.

இவர்களில் பெரும்பாலானோர் அப்பாவிகள் என்பது மட்டுமல்ல 95 வீதமானோர் 16 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட ஆண்கள் ஆவர். இது ஒரு திட்டமிட்ட இன அழிப்புச் செயல். இந்தத் தொகையைக் குறைத்துவிட இலங்கை அரசு முயற்சிக்கிறது. இதை எவ்வாறு ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகர் பீரிஸை ஆமோதிப்பதன் மூலமும் காணாமல் போனோர் ஆட்கள் பற்றிய அலுவலகப் பொறி முறையை வரவேற்பதன் மூலமும் அங்கீகரிக்க முடியும்?

இதற்கும் அப்பால், ஆறு மாதங்களுக்கு முன்னர் உள்ளகப் பொறிமுறை படுதோல்வி கண்டுவிட்டது, எனவே ஐ.நா. உறுப்புரிமை நாடுகள் குற்றவாளிகளை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்று போன்ற சர்வதேச விசாரணைப் பொறிமுறைகள் ஊடாக விசாரிக்க ஆவன செய்யவேண்டும் என்று கடுமையாகப் பிரேரித்து விட்டு அடுத்த சில மாதங்களுக்குள் தீவில் மனித உரிமைகள் சீரழிந்து செல்லும் நிலையிலும் கொழும்பு அரசாங்கத்தின் உள்ளகப் பொறிமுறையை ஆமோதிக்கும் நிலையை உயர்ஸ்தானிகர் எவ்வாறு கைக்கொள்ளலாம்?

இலங்கை அரசிடம் ஐ.நா. தன்னிடமிருக்கும் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான முறையீடுகளை ஏன் ஒப்படைத்தது? இது உறவினர்களுக்கு ஆபத்தானது. இலங்கையின் வடக்கு-கிழக்கில் இருந்து இராணுவத்தை முற்றாக அகற்றவைத்து, ஐ.நா. மேற்பார்வையில் இங்கு பாதுகாப்பை உறுதி செய்தால் மாத்திரமே காணாமலாக்கப்பட்டோரின் விபரங்களை முழுமையாகத் திரட்டமுடியும்.

காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி சர்வதேச மட்டத்திலான சுயாதீன விசாரணை மூலம், அதுவும் இன அழிப்புக் குறித்த பார்வையுடனான விசாரணைக்கு உள்ளடக்கப்பட்டதாக, மியான்மார் மற்றும் சிரியா போன்ற நாடுகளுக்குக் கையாண்ட அதியுச்ச நிகழ்ச்சி நிரலுக்குள் வைத்து அணுகப்பட வேண்டும்.

எனவே, மனித உரிமைப் பேரவையின் அதியுச்ச நிகழ்ச்சிநிரல் நான்குக்குள் இலங்கையைக் கொண்டுவந்து அடுத்தகட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படவேண்டும் என்று தீர்க்கமாகக் கோருகிறோம்.

இன அழிப்புக் குறித்த உண்மையைக் கண்டறியும் பணிக்குழு ஒன்றை நியமிக்கவேண்டும் என்றும் கோருகிறோம் என குறித்த மடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

உள்ளகப் பிரச்சினைகளைத் தீர்க்க வெளிப்புறப் பொறிமுறை அவசியமில்லை – அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொழம்பகே

நாட்டின் உள்ளகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, வெளிப்புறப் பொறுமுறையொன்றின் தேவை ஒருபோதும் இல்லையென, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொழம்பகே தெரிவித்தார்.

அதேபோன்று, அவ்வாறான பொறிமுறை ஒன்றைத் தயாரிப்பதற்கு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டிய அவர், இலங்கையின் உள்ளக சட்டக் கட்டமைப்பின் கீழ், நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்கப்படும் என்றார்.

ஜனாதிபதி ஊடக மையத்தால் ஏற்பாடு செய்யப்படும் ஊடகச் சந்திப்பு, இன்று (வியாழக்கிழமை) முற்பகல், வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக நடத்தப்பட்ட போது, அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

“ஜெனீவா குற்றச்சாட்டுகள், ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடர் மற்றும் இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை” எனும் தலைப்புகளின் கீழ், இன்றைய ஊடகச் சந்திப்பு இடம்பெற்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இம்முறை கூட்டத்தொடரின் போது, அதன் ஆணையாளர் நாயகம் மிச்செல் பெச்சலட் அவர்களினால் முன்வைக்கப்பட்ட வாய்மொழி அறிக்கையின் போது, காணாமல் போனோருக்கு நட்டஈடு வழங்கல், எல்.டி.டி.ஈ சிறைக் கைதிகளை விடுவித்தல், பயங்கரவாத ஒழிப்புச் சட்டத்தைத் திருத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகளுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்திருந்தமை மகிழ்ச்சிக்குரியதென்று, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

மனித உரிமைகளுக்குள் மறைந்திருந்து, இலங்கையின் உள்ளக விடயங்களில் தலையீடு செய்வதை, சீனா, ரஷ்யா, ஜப்பான், வடகொரியா, தென்கொரியா, பாகிஸ்தான், ஈராக், வெனிசியூலா உள்ளிட்ட 15 நாடுகள் எதிர்த்து, இலங்கையுடன் கைகோர்த்து நின்றன.

மனித உரிமைகளைப் பாதுகாத்தல், நல்லிணக்கத்தைப் பின்பற்றல், பயங்கரவாதத்தை ஒழித்தல் போன்ற விடயங்களில் அரசாங்கம் கொண்டுள்ள பொறுப்புணர்வு, அவர்களின் விசேட பாராட்டுக்கு இலக்காகியுள்ளன என்றும், அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

வலயத்திலுள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்குமிடத்து, இலங்கையானது அமைதியான நாடாக விளங்குகிறது.

பயங்கரவாதத்தை ஒழித்தல், அடிப்படைவாதத்தைப் பரப்பும் தீவிரவாதத்தை ஒழித்தல் போன்றே, நாட்டு மக்களிடையே சமாதானம் மற்றும் இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையானது, சீரமைக்கப்பட்ட கொள்கையாகும் என்று எடுத்துரைத்த வெளிநாட்டு அலுவல்கள் செயலாளர், அந்தக் கொள்கையின் அடிப்படையில் செயற்பட்டு, அதிகாரப் போட்டிகளில் சிக்கிக்கொள்ளாது முன்னோக்கி நகர்வதே இலங்கையின் நோக்கமென்றும் இதன்போது, இந்நாட்டின் அமைவிடம் தொடர்பில் அதிக அவதானத்துடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என்றும் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை எதிர்கொள்வதற்கான இலங்கையின் தயார்ப்படுத்தல்கள் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த செயலாளர் ஜயநாத் கொழம்பகே, அரசாங்கத்தின் கொள்கை மிகத் தெளிவாக இருக்கின்றது என்றும் அது தொடர்பில், உலகின் பல நாடுகளுக்கு, கடந்த மாதங்களில் பல்வேறுபட்ட அறிக்கைகள் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளன என்றும், அவற்றின் பிரதிபலனாகவே, அந்நாடுகளின் ஒத்துழைப்பு இலங்கைக்கு தற்போது கிடைத்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, நீதி அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு போன்றன, இது விடயத்தின் பாரிய ஒருங்கிணைப்புடன் செயலாற்றியிருந்தன என்றும் அவர் எடுத்துரைத்தார்.

“கொவிட் சவாலை வெற்றிகொள்வது மற்றும் எதிர்காலத் திட்டங்கள்” என்ற உள்ளடக்கத்துடனேயே, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தொடரில் இம்முறை பங்கேற்கவுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அனைத்து நாடுகளினதும் அரச தலைவர்களதும் உரைகள் அமையவுள்ளன என்று, இந்த ஊடகச் சந்திப்பில் விசேட உரையாற்றிய ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்தார்.

தத்தமது நாடுகளின் பொருளாதாரம் மற்றும் சமூக அபிவிருத்திகள் தொடர்பான இணக்கப்பாடுகளுடன், கொரோனா சவாலை வெற்றிகொள்வதற்கு, இம்முறை கூட்டத்தொடர் பாரிய சந்தர்ப்பத்தை வழங்குமென்றும், அவர் தெரிவித்தார்.

அதேவேளை, இலங்கை தொடர்பில் சர்வதேச ரீதியில் காணப்படும் பல்வேறு தவறான அபிப்பிராயங்களைச் சீர்செய்வதற்கும், இம்முறை ஐ.நா கூட்டத்தொடரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பயன்படுத்திக்கொள்வார் என்று தான் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.