











ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயம் நியாயம் பெற்றுக் கொடுக்கப்படும். குற்றவாளிகள் சட்டத்தின் முன் முன்னிலைப்படுத்தப்படுவார்கள். பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட்டுள்ளது.
இலங்கையின் பொலிஸ் சேவை 155 ஆவது வருடத்தை பூர்த்தியாக்கியுள்ளது. சட்ட ஒழுங்கை பாதுகாக்க பொலிஸார் தங்களின் பாதுகாப்பை பொருட்படுத்தாமல் சேவையில் ஈடுப்படுகிறார்கள்.
வீதியில் சேவையில் ஈடுப்படும் பொலிஸாரின் மனநிலையை பொது மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். பொலிஸார் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்பதற்காக பொது மக்கள் பொறுப்பற்ற வகையில் செயற்பட முடியாது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
இலங்கையின் பொலிஸ் சேவை 155 ஆவது வருடத்தை பூர்த்தி செய்ததை முன்னிட்டு ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் வீதியில் சேவையில் ஈடுப்படும் பொலிஸாரின் மனநிலையை பொது மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.
பொலிஸார் பொறுப்புடன் செயற்பட வேண்டும். என்பதற்காக பொது மக்கள் பொறுப்பற்ற வகையில் செயற்பட முடியாது. இரு தரப்பினரும் ஒத்துழைப்புடன் செயற்பட்டால் எவ்வித பிரச்சினைகளும் ஏற்படாது.
ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணை நடவடிக்கைகளயில் பொலிஸார் திறம்பட செயற்படவில்லை. என எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம் பெற்று இரண்டு வருட காலப்பகுதியில் பொலிஸ் திணைக்களம் சிறந்த முறையில்செயற்பட்டு பல சாட்சியங்களை திரட்டியுள்ளது.
ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 32 பேருக்கு எதிராக 9 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.அத்துடன் 25 பேருக்கு எதிராக குற்றப்பத்திரம்தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணை நடவடிக்கைகளுக்காக மூவர் அடங்கிய நீதியரசர் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.
இவையனைத்தும் பொலிஸாரின் துரிதகர செயற்பாடுகளினால் சாத்தியமானது என்பதை குறிப்பிட்டுக் கொள்ள வேண்டும்.ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயம் நியாயம் வழங்கப்படும். குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிச்சயம் முன்னிலைப்படுத்தப்படுவார்கள். என்றார்.
அரசாங்கம் அறிவிக்கும் நிர்ணய விலையில் பொருட்களை விற்பனை செய்வதற்கான நடை முறையினை உரிய முறையில் மேற்கொள்ள வேண்டும். மக்களை ஏமாற்றுகின்ற செயற்பாடுகளை அரசாங்கம் செய்யக்கூடாது. மக்கள் தற்போதைய அரசாங்கம் மீது நம்பிக்கை இன்றி உள்ளனர் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் இன்று (3) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் அவசர காலச்சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ள அதே நேரத்தில் அவசரகாலச் சட்டத்தின் ஊடாக முழு அதிகாரங்களையும் பெற்றுக்கொண்ட ஜனாதிபதி அவசரகால சட்டத்தை கொரோனா தொற்றுக்கு அதை நீக்குவதற்காக சாட்டாக வைத்துக் கொண்டு சட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.
இராணுவத்தினருடைய அதிகாரங்களை இராணுவத்திற்கு வழங்கி இப்போது உள்ள போராட்டங்கள் ஜனநாயக ரீதியாக இடம் பெறுகின்ற போதும், போராட்டத்தில் ஈடுபடுகின்றவர்களை கைது செய்வதற்கான ஒரு அத்திவாரமாக இந்த சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
ஜனநாயக நாடு என கூறிக் கொண்டு ஒரு சர்வாதிகார ஆட்சியை நடத்துவதற்கான அத்திவாரத்தை இந்த சட்டத்தின் ஊடாக ஜனாதிபதி நிரூபித்துள்ளார்.
அண்மைக்காலமாக இந்த சட்டத்தின் ஊடாக ஓய்வு பெற்ற ராணுவ தளபதியை குறித்த குழுவிற்கு ஜனாதிபதி நியமித்துள்ளார்.
பொருட்களின் விலையை நிர்ணயம் செய்கின்ற சட்டம் உள்ளது. இந்த சட்டங்களை வழுக்காமல் அவசரகாலச் சட்டத்தை அரசாங்கம் கையில் எடுத்ததன் காரணம் ஜனநாயக போராட்டங்களை மழுங்கடிப்பதற்கான திட்டமாக அமைந்துள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தை பார்க்கிலும் அவசரகால சட்டம் அன்றாடம் குரல் கொடுக்கின்ற எமது மக்களின் குரல் வளையை நசுக்குகின்ற ஒரு சட்டமாக அமைந்துள்ளது.
எனவே மக்களை பாதிப்புக்கு உள்ளாக்குகின்ற அவசர காலச்சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும். ஜனநாயக நாட்டில் மக்கள் சுதந்திரமாக செயல்பட வழி முறைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
அவசரகாலச் சட்டம் மிக மோசமானது. ஜனநாயக ரீதியில் போராடுகிறவர்களை கைது செய்வதற்கான சட்டமாகவே இச்சட்டம் எதிர் காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் மேலும் அரசாங்கம் கூறுகிறது சதொச மற்றும் விற்பனை நிலையங்களில் பொருட்களை மலிவு விலையில் கொள்வனவு செய்ய முடியும் என்று.
வெளிப்படையாக ஊடகங்கள் கூடாக அரசாங்கம் அறியப்படுத்தி உள்ள போதும் உரிய முறையில் நடைமுறையில் இல்லை.மக்கள் ஏமாறும் நிலை காணப்படுகின்றது.
சதொச வில் 130 ரூபாவிற்கு சீனியை பெற்றுக்கொள்ள முடியும் என ஏற்கனவே அறிவித்த போதும், அதனை உரிய முறையில் மக்கள் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சீனி உரிய முறையில் மக்களுக்கு பகிர்ந்து வழங்கப்படவில்லை. வன்னி மாவட்டத்தில் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் மக்கள் உரிய முறையில் சதொச ஊடாக சீனியை பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்பட்டுள்ளது.
தற்போது அரசாங்கம் சீனி உட்பட அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றிற்கு நிர்ணய விலையை அமுல் படுத்தியுள்ளனர். எனினும் நிர்ணய விலைக்கு பொருட்கள் மக்களுக்கு வழங்கப்படுவது இல்லை.
அரசாங்கம் அறிவிக்கும் நிர்ணய விலையில் பொருட்களை விற்பனை செய்வதற்கான நடைமுறை உரிய முறையில் மேற்கொள்ள வேண்டும். மக்களை ஏமாற்றுகின்ற செயற்பாடுகளை அரசாங்கம் செய்யக்கூடாது. மக்கள் தற்போதைய அரசாங்கம் மீது நம்பிக்கை இன்றி உள்ளனர்.
எனவே அரசாங்கம் அமுல் படுத்தியுள்ள விலை நிர்ணயத்தை மக்கள் உரிய முறையில் பயனடைய அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
தற்போது நாட்டில் தங்கியுள்ள வௌிநாட்டவர்களின் அனைத்து விதமான விசாக்களினதும் செல்லுபடிக்காலம் ஒக்டோபர் 07 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கிணங்க, 2021 மே மாதம் 11 ஆம் திகதி முதல் 2021 ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் விசாக்களுக்கு அக்காலப் பகுதிக்கான விசா கட்டணங்கள் மாத்திரமே அறவிடப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன், எவ்வித தண்டப்பணமும் அறவிடப்படமாட்டாது என திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டிய தேவை இலங்கைக்கு இல்லையென நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
பொருளாதார தேவைகளை அடையாளம் கண்டு, அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நாட்டில் அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டினையும் அவர் நிராகரித்துள்ளார்.
இலங்கையில் தற்போது அமுலில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மேலும் ஒரு வார காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி செப்டம்பர் 13 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 20 ஆம் திகதி நாட்டில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இதற்கு முன்னர் செப்டம்பர் 6 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று காலை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கொவிட் தடுப்புச் செயலணிக் கூட்டத்தில், தற்போதைய கொவிட் தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு ஊரடங்கை மேலும் ஒருவார காலத்திற்கு நீடிக்க தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 6ம் திகதி தளர்த்துவதற்கு முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், வைத்தியர்களின் பரிந்துரைகளுக்கு அமைய, அதனை நீடிக்க தீர்மானித்ததாக கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாடு பூராகவும் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக மேலும் ஒரு வார காலத்திற்கு பயணத் தடை விதிக்கப்பட வேண்டும் என வைத்தியர்கள், கொவிட் – 19 தடுப்புக்கான கூட்டத்தில் இன்றைய தினம்(03) தெரிவித்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை தொடர்ந்து நீடிக்க பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரித்தானிய உள்துறை அமைச்சை மேற்கோளிட்டு இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் 2000 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், மேன்முறையீட்டு ஆணைக்குழுவின் தீர்மானத்தின் பின்னர் பிரித்தானியாவின் உள்துறை அமைச்சின் செயலாளரினால் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட உலகெங்கிலும் உள்ள 30 க்கும் மேற்பட்ட நாடுகளைப் போலவே, தமிழீழ விடுதலைப் புலிகளும் பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்ட அமைப்பாக உள்ளது.
உலகளாவிய மற்றும் பிராந்திய பாதுகாப்பை பாதிக்கும் பிற குற்றச் செயல்கள் காரணமாக இந்த நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை ஆரம்பத்தில் தடை செய்திருந்தனர்.
இந்நிலையில் உலகளாவிய மற்றும் பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் பயங்கரவாதம் மற்றும் வன்முறை தீவிரவாதத்தை கட்டுப்படுத்தும் அனைத்து முயற்சிகளிலும் பிரிட்டனுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
நியூசிலாந்தின் ஓக்லாந்திலுள்ள விற்பனை நிலையமொன்றில் மக்கள் மீது தாக்குதலை நடத்திய நபர் ஒருவர் அந்நாட்டு பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
குறித்த நபர், அங்குள்ள பிரபல சுப்பர் மார்கெட் ஒன்றுக்குள் நுழைந்து கத்திக் குத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன், இதில் ஆறு பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையர் ஒருவரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதுடன், அவர் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என, அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.
குறித்த இலங்கையர் 2011ஆம் ஆண்டு நியூசிலாந்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று காலை நகர சபைக்குரிய மண்டபத்தில், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ம.பற்றிக்டிரஞ்சன் தலைமையில் சுகாதார நடைமுறைகளுக்கு உட்பட்டு ஆரம்பமானது.
அமர்வில் சுயேட்சைக் குழு உறுப்பினர்கள் மூவரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் இருவர் என ஐந்து உறுப்பினர்கள் மாத்திரமே பங்கேற்றனர். இதனால் அமர்வு சுமார் 30 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் அமர்வு ஆரம்பிக்கப்பட்டபோதும் கோரம் போதாமையினால் திகதி குறிப்பிடப்படாமல் தலைவரை தெரிவு செய்வதற்கான அமர்வு ஒத்திவைக்கப்பட்டது.
வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவராக செயல்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த கோணலிங்கம் கருணானந்தராசா அண்மையில் கோவிட்-19 நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இதனால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கே புதிய தலைவருக்கான தெரிவு இடம்பெறவிருந்தது.
வல்வெட்டித்துறை நகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 7 உறுப்பினர்களும், சுயேட்சைக் குழுவில் 4 உறுப்பினர்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி என்பன தலா 2 உறுப்பினர்களையும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி என்பன தலா ஒரு உறுப்பினர்களையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வல்வெட்டித்துறை நகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 7 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
சுயேட்சைக் குழு 4 உறுப்பினர்களையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈபிடிபி என்பன தலா 2 உறுப்பினர்களையும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி என்பன தலா ஒரு உறுப்பினர்களையும் கொண்டுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு என கைது செய்யப்பட்டு, விளக்கமறியல் உத்தரவின் கீழ், மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனிடம் இருந்து சிறைச்சாலை அதிகாரிகள் கையடக்கத் தொலைபேசி ஒன்றினை மீட்டுள்ளனர்.
மெகசின் சிறைச்சாலையின் தலைமை சிறைக் காவலரும் மற்றொரு காவலரும், நேற்று (1) இரவு வேளையில், ரிஷாத் பதியுதீன் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை அறையின் பக்கம் மேற்பார்வைக்காக சென்ற போது, அவர் தொலைபேசியில் கதைப்பதை கண்டுள்ளதாகவும், பின்னர் அவர் அந்த தொலைபேசியை சிறை அறைக்கு வெளியே வீசிய நிலையில் அதனை கைப்பற்றியதாகவும் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் , சிறைச்சாலைகள் ஆணையாளர் ( நிர்வாகம்) சந்தன ஏக்கநாயக்க கூறினார்.
‘ வழமையான சிறை அறை மேற்பார்வையில் பிரதான பாதுகாவலரும் மற்றொருவரும் நேற்று இரவு ஈடுபட்டிருந்துள்ளனர்.
இதன்போது ரிஷாத் பதியுதீன் தொலைபேசியில் யாருடனோ உரையாடிக் கொண்டிருப்பதை அவர்கள் அவதானித்துள்ளனர்.
இந்த நிலையில், பிரதான சிறைக்காவலர் தான் தொலைபேசியில் கதைப்பதை அவதானித்ததை அறிந்த ரிஷாத் பதியுதீன், சிறைச்சாலைகள் ஜன்னல் வழியே தொலைபேசியை வீசி எரிந்துள்ளார். இதனையடுத்து, அந்த தொலைபேசியை உடனடியாகவே சிறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
எனவே சிறைச்சாலைகள் கட்டளை சட்டத்தின் பிரகாரம் ரிஷாத் பதியுதீனை கையடக்கத் தொலைபேசி வைத்திருந்தமை தொடர்பில் சிறைச்சாலைகள் தீர்பாயம் முன் நிறுத்தவுள்ளோம். ‘ என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன எக்கநாயக்க கூறினார்.
ஏற்கனவே சிறைச்சாலைகள் வைத்தியர் ஒருவரை அச்சுறுத்தியதாக, முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சிறைச்சாலைகள் தீர்பாய விசாரணையையும், பொலிஸ் விசாரணைகளையும் எதிர்க்கொண்டுள்ள பின்னணியிலேயே தற்போது தொலைபேசி வைத்திருந்த விடயமும் வெளிப்பட்டுள்ளது.