திட்டமிட்ட சித்திரவதைகளை முன்னெடுத்துவரும் இலங்கை பொலிஸாருக்கான பயிற்சியை நிறுத்துங்கள்: யஸ்மின் சூக்கா கோரிக்கை

திட்டமிட்ட சித்திரவதைகளை முன்னெடுத்து வரும் இலங்கை பொலிஸாருக்கான பயிற்சிகளை வழங்குவதை பிரித்தானிய அரசாங்கமும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா கோரியுள்ளார்.

ஸ்கொட்லாந்து இலங்கை பொலிஸாருக்கு வழங்கும் பயிற்சிகளை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக விடுத்துள்ள அறிவிப்பிற்கு வரவேற்பு தெரிவித்தும், பிரித்தானிய அரசாங்கத்திடம் அதையொத்த தீர்மானத்தினை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கும் வகையிலும் வெளியிட்டுள்ள ஊடக அறிவிப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2016ஆம் ஆண்டு முதல் இலங்கையின் பொலிஸ் பிரிவுகளுக்கு பயிற்சிகளை வழங்குவதை நிறுத்துமாறு சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது.

அத்துடன், இலங்கையின் பொலிஸ் பிரிவுகள் பல்வேறு சமயங்களில் நிகழ்த்திய சித்திரவதைகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கைகளையும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கானசெயற்திட்டம் தயாரித்துள்ளது.

அத்துடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலும் இலங்கை பொலிஸ் பிரிவுகளின் சித்திரவதைகள் மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பிலான விடயங்கள் பற்றிய ஆதாரங்களுடன் சமர்ப்பணங்களும் செய்யப்பட்டுள்ளன.

இலங்கையின் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு பிரித்தானியா பயிற்சிகளை வழங்குவதை அடிப்படையாக வைத்து தம்மீதான குற்றங்களை இலங்கை பொலிஸ் பிரிவுகள் வெள்ளையடிப்புச் செய்வதற்கு முயற்சிக்கின்றன. ஐ.நா.வில் அவ்விதமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

மேலும், பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளின் பெயரில் அழைத்துச் செல்பவர்களை சித்திரவதைக்குட்படுத்தியமை தொடர்பிலான ஆதராங்களை சேகரித்து வைத்துள்ளது.

அதில் குற்றவாளிகளின் பெயர்களும் உள்ளடக்கமாக உள்ளன. பொலிஸாரின் மற்றொரு பிரிவாக இருக்கும் விசேட அதிரடிப்படையானது போரின் போதும், அதற்குப் பின்னரும் தமிழர்களை கடத்துதல், விசாரணைக்கு அழைத்துச் செல்லுதல், தடுத்து வைத்தல், அக்காலப்பகுதியில் சித்திரவதைக்கு உட்படுத்தல் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. விசேட அதிரடிப்படையின் அவ்விதமான செயற்பாடுகளுக்குரிய சாட்சியங்களும் பதிவாகியுள்ளன.

ஆகவே, இவ்விதமான குற்றங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் இலங்கையின் பொலிஸ் பிரிவுகள் பொறுப்புக்கூறும் வரையில் அவர்களுக்கான பயிற்சிகளை வழங்குவதை பிரித்தானியா நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம் என்றுள்ளது.

Posted in Uncategorized

யாழில் இராணுவத்திடமிருந்து விடுவித்தாக ஆளுநர் சுரேன் இராகவனால் சான்றிதழ் வழங்கப்பட்ட காணிகளை சுவீகரிப்பதாக வர்த்தமானியில் அறிவித்தல் – வேதனையில் வலி வடக்கு காணி உரிமையாளர்கள்

சுரேன் ராகவன் வடக்கு மாகாண ஆளுநராக இருந்த சமயம் விடுவித்ததாக கடிதம் வழங்கிய நிலங்களை சுவீகரித்துள்ளதாக அரசு வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளதாக காணி உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மைத்திரிபால சிறிசேனா அரசின் காலத்தில் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி பெரும் விழா எடுத்து நிலத்தை விடுவிப்பதாக படம் காட்டி

நவரட்ணம் விக்னேஸ்வரன் ஆகிய எனது 23 பரப்பு காணி உட்பட பலரின் நிலம் விடுவிப்பமாக அப்போதைய ஆளுநரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேன் ராகவன் சான்றிதழ் தந்தார்.

ஆனாலும் இன்றுவரை நிலம் விடுவிக்கப்படாமல் கடற்படையினர் ஆக்கிரமித்திருக்க எமக்கு எந்தவொரு அறிவித்தலும் வழங்காது திருட்டுத்தனமாக 2021-02-15ஆம் திகதியிடப்பட்டு காணி அமைச்சர் எஸ்.எம்சந்திரசேனா நிலத்தை சுவீகரிப்பதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளார்.

இந்த அரசின் உச்ச பட்ச அராஜகத்தின் வெளிப்பாடாகவே இதனைப் பார்க்கின்றோம். இதனால் இந்த விடயத்தை எங்கு எல்லாம் கொண்டு செல்ல முடியுமோ அங்கெல்லாம் கொண்டு செல்வேன் என்றார்.

தனது தலைவன் நெருக்கடியில் இருக்க, உரத்துப் பேச வேண்டிய முஷாரப் அரசுக்கு சாமரம் வீசுவது விந்தையளிக்கிறது

பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் அரசைக் கவிழ்க்க முயலாமல் நாட்டைக் கட்டியெழுப்ப வாருங்கள் என்கிறார். அரசு மூண்றிலிரண்டு பெரும்பான்மையுடன் உள்ள போது அரசை கவிழ்க்க முடியாது என்பது இவருக்குத் தெரியாமலில்லை. அரசிடமிருந்து ஏதோ ஒன்றைப் பெற இவர் இந்தக் கருத்தை கூறுகிறார் என்பது மக்களுக்குத் தெரியாது என்று இவர் நினைக்கிறார் போலும் என தேசிய காங்கிரசின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தரும் கடந்த பொதுத்தேர்தல் வேட்பாளருமான சட்டத்தரணி கே.எல்.சமீம் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி முஷாரப் அண்மையில் விடுத்திருந்த “அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சிகளை கைவிட்டு, நாட்டை கட்டி எழுப்ப கைகோருங்கள்” எனும் ஊடக அறிக்கைக்கு பதிலளிக்கும் நோக்கில் தேசிய காங்கிரசின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தரும் கடந்த பொதுத்தேர்தல் வேட்பாளருமான சட்டத்தரணி கே.எல்.சமீம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

தனது தலைவன் நெருக்கடிக்குள்ளாகியுள்ள நிலையில் உரத்துப் பேச வேண்டிய பாரிய பொறுப்பை மறந்து அரசுக்கு சாமரம் வீசுவது விந்தையளிக்கிறது. சமூகத்தில் தனது தலைவனுக்கான இவரது குரல் போதாது என்ற கருத்தும் உண்டு. தேர்தலின் போது கசத்த மஹிந்த இப்போது வெல்லமானது எப்படி? பொத்துவில் மக்களை முஹுது விகாரையை வைத்து அரசியல் இலாபம் அடைந்ததைப்போல் இன்னும் என்ன அடையப் போகிறாரோ. அரசைக் கவிழாமல் பாதுகாக்க அரசின் பங்காளி கட்சியான தேசிய காங்கிரசும் உண்டு. உங்களை போன்ற யாருடைய பங்கும் அரசுக்குத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.

விமானப்படையிலிருந்து விரட்டப்பட்டவர் இந்திய தூதுவராலயத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்!

இலங்கைக்கான இந்திய தூதுவராலயத்தின் மீது தாக்குதல் நடக்கப் போவதாக தூதுவராலயத்திற்கு தகவலளித்த குற்றத்திற்காக முன்னாள் விமானப்படை அதிகாரியொருவர் கொழும்பு குற்றவியல் விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாளை (15) இந்திய சுதந்திரத் தினம் கொண்டாடப்படவிருப்பதால், இந்திய தூதுவராலயத்தின் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்த இடமிருப்பதாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தகவல்கள் கூறுகின்றன.

இந்த நபர் வழங்கிய எச்சரிக்கை மீது கொழும்பு காலி வீதியில் அமைந்துள்ள இந்தி தூதுவராலய அதிகாரியொருவரால் கொள்ளுப்பிட்டி காவல் நிலையத்தில் நேற்று பதியப்பட்ட முறைப்பாட்டிற்கேற்ப, கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கீர்த்தி ரத்நாயக என்ற முன்னாள் விமானப்படை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் ஊடக செய்தியாளர் சிரேஷ்ட எஸ்.எஸ்.பி. சட்டத்தரணி அஜித் ரோஹன கூறுவதற்கேற்ப, பனாகொட பிரதேசத்தில் தற்காலிகமாக தங்கியிருந்து இந்த சந்தேக நபர் விமானப்படையிலிருந்து விரட்டப்பட்டவராவார்.

Posted in Uncategorized

தமிழகம், கேரளாவில் சிறப்பு தேடுதல்! – விடுதலைப் புலிகள் தொடர்பான புத்தகங்கள் மீட்பு

இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, ​​விடுதலைப் புலிகள் தொடர்பான புத்தகங்கள் உட்பட பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தேசிய புலனாய்வு முகமையால் இன்று தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கின்றன.

தமிழகம் மற்றும் கேரளாவில் ஏழு இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்திய தேசிய புலனாய்வு நிறுவனத்தின் தகவல்படி விடுதலைப் புலிகள் தொடர்பான புத்தகங்கள், கையடக்க தொலைபேசிகள், சிம் அட்டைகள் உட்பட ஏழு மின்னணு சாதனங்கள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டன.

ஏப்ரல் மாதத்தில், இந்திய கடலோர காவல் படையினர் 300 கிலோகிராம் ஹெராயின், ஐந்து துப்பாக்கிகளுடன் ஆறு இலங்கையர்களை கைது செய்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் முக்கிய சந்தேகநபர் பாகிஸ்தான் பிரஜை என்றும் அவருக்கு புலிகளுடன் நேரடி தொடர்பு இருப்பதாகவும் இந்திய பாதுகாப்பு படையினர் வெளிப்படுத்தியுள்ளனர்.

Posted in Uncategorized

மூன்றாவது நாளாக 150 ஐ கடந்த கொரோனா மரணங்கள்

நாள் ஒன்றில் பதிவான அதிகப்படியான கொவிட் மரணங்கள் நேற்றைய தினம் பதிவாகி உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 160 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் அவர் உறுதிப்படுத்தினார்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,935 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 350,693 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 307,345 ஆக அதிகரித்துள்ளது.

மதுரை ஆதீனம் சிவபதமடைந்தார்

மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் உடல் நலக்குறைவால் நேற்று வெள்ளிக்கிழமை(13-08-2021) இரவு சிவபதமடைந்தார்.

சுவாசக் கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த மதுரை ஆதீனம் கடந்த ஆகஸ்ட்- 09 ஆம் திகதியன்று மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் வியாழக்கிழமை(12) தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்ட அவருக்கு நேற்று(13) வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கைச் சுவாச சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில் நேற்று இரவு-9.15 மணியளவில் சிகிச்சை பலனின்றிச் சிவபதமடைந்தார்.

தமிழகத்தில் உள்ள மிகப் பழமையான சைவத் திருமடங்களில் ஒன்று மதுரை ஆதீனம்.மதுரை ஆதீனத்தின் 292 ஆவது குருமகா சந்நிதானமாக விளங்கியவர் மதுரை ஆதீனம்.

சிறந்த தமிழ்ப் புலமையும், பன்மொழிப் புலமையும், கணீர் என்ற குரல் வளமும், பேச்சாற்றலும் மிக்கவராக ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் திகழ்ந்தார்.

காஞ்சி சங்கர மடத்துக்கு நேர் எதிரான ஆதீனமாக ஓர் நவீன வரலாற்றைத் தொடங்கி வைத்த சைவப் பெரியார் குன்றக்குடி அடிகளாரைப் போல வடமொழி எதிர்ப்பு, வைதீக எதிர்ப்பு போன்ற தமிழ்மண்ணுக்கே உரிய சிந்தனைகளை கொண்டவராக இறை பணியாற்றியவர்.

தமிழ்மொழி, மண், மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்தவர் மதுரை ஆதீனம்.

இதேவேளை, கடந்த-2019 ஆம் ஆண்டு மதுரை ஆதீனத்தின் இளவரசராக ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகளால் முடிசூட்டப்பட்ட ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தான் மதுரை ஆதீன மடத்தின் 293 ஆவது மடாதிபதியாகப் பொறுப்பேற்கவுள்ளதாக மதுரை ஆதீன மட நிர்வாகிகள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

Posted in Uncategorized

செஞ்சோலை படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்: அஞ்சலி செலுத்த வந்த உறவினர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

முல்லைத்தீவு செஞ்சோலை பகுதியில் 2006 ஆம் ஆண்டு இதே நாளில் இலங்கை விமானப்படையினரின் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 54 மாணவிகள் உட்பட 61 பேரின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம் இடம்பெறும் நிலையில், அஞ்சலி செலுத்துவதற்காக படுகொலை இடம்பெற்ற செஞ்சோலை வளாகத்துக்கு சென்ற மாணவிகளின் பெற்றோர் இராணுவம் மற்றும் பொலிஸாரால் விசாரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இன்று காலை செஞ்சோலை வளாகத்துக்கு செல்லும் வள்ளிபுனம் இடைக்கட்டு வீதி முழுவதும் இராணுவம் ,பொலிஸார் ,புலனாய்வாளர்கள் பெருமளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில் வழமையாக நினைவேந்தல் இடம்பெறும் பகுதிக்கு படுகொலை செய்யப்பட்ட தங்கள் பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்த சென்ற பெற்றோர் சிலர் இராணுவம் ,பொலிஸாரால் விசாரிக்கப்பட்டு அஞ்சலி செலுத்த விடாமல் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதனால் பூக்கள், மாலைகளோடு அஞ்சலி செலுத்த வந்த பெற்றோர் ஏமாற்றத்துடன் திருப்பி சென்றுள்ளனர். மேலும் அந்த வீதியால் செல்பவர்கள் பொலிஸார் ,இராணுவத்தினரால் விசாரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டனர்.

Share

தமிழ்த் தலைமைகளின் பலவீனமே வெளித் தீர்மானங்களுக்கு காரணம்-ரெலோ இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ்

இலங்கையில் வடக்கு கிழக்கு தமிழ்த் தேசியம் சார்பு தலைமைகளின் ஒற்றுமை இன்மை காரணமாகவே தாயகத்துக்கு வெளியே தமிழரை மையப்படுத்திய தீர்மானங்கள் வெளிவருகின்றன. இது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி விட்டது. வருகின்ற தீர்மானங்கள் தொடர்பாக பொறுப்புக் கூற வேண்டியவர்கள் சம்பந்தன், கஐேந்திரகுமார், விக்கினேஸ்வரன் பேன்றவர்களே. இதுதான் தற்போதைய யதார்த்தம் என வடக்குமாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் தரப்பில் அரசியல் தலைமைகள் பலமாக ஒரு நிலைப்பாட்டில் இல்லை என்ற உண்மையை தாயகத்திற்கு வெளியே வருகின்ற தீர்மானங்கள் வெளிப்படுத்துகின்றன என்ற கசப்பான உண்மையை கூறித்தான் ஆகவேண்டும்.

திம்பு பேச்சுவார்த்தையில் தமிழர் தரப்பில் பல கட்சிகள் இயக்கங்களாக இருந்தாலும் தீர்மானத்தை ஒரே முடிவாக எடுத்தமையால் சிங்கள அரசாங்கத்தால் ஏமாற்ற முடியாது பின்வாங்க வேண்டிய நிலை உருவானது இது வரலாற்று உதாரணம். தற்போதைய சூழ்நிலையிலும் இவ்வாறான நிலை தமிழர் தரப்புக்கு அவசியமானது இதனை தமிழ்த் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும்.

அண்மையில் ரெலோ இயக்கம் இதனை மையமாகக் கொண்டுதான் ஒரு பொதுத் தளத்தில் அனைத்து தமிழ்க் கட்சிகளையும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேச வருமாறு அழைப்பு விடுத்தது இதனை அகில இலங்கை தமிழ் காங்கிரசை தவிர ஏனைய தரப்புக்கள் உத்தியோக பூர்வ கலந்துரையாடல்களை மேற் கொண்டுள்ளனர் ஆனால் இனத்தின் விடுதலைக்காக கஐேந்திர குமார் அணி பொதுத் தளத்திற்கு வரவேண்டும்.

விடுதலைப்புலிகள் பலமாக இருந்த போது வெளித் தீர்மானங்களுக்கு மாறாக புலிகளின் கோரிக்கையை மையப்படுத்திய பேச்சுவார்த்தைகளே முதன்மைப் படுத்தப்பட்டன. ஆனால் புலிகளின் ஆயுதபலத்தை விரும்பாத சக்திகள் மறைமுக நிகழ்ச்சி நிரலில் புலிகளை அழிக்க உதவினர்.

ஆனால் தற்போதைய சூழலில் தமிழ்த் தலைமைகள் ஐனநாயக பலத்தை திரட்டுவதன் மூலமே மீண்டும் அதிகார சக்திகளை தமிழர் விடையத்தில் திரும்பிப் பார்க்க வைக்க முடியும். அதற்கு முன்னோடியாக அனைவரும் பொதுத் தளத்திற்கு வந்து ஈழத் தமிழர்கள் சார்ந்த பொது நிலைப்பாட்டை தீர்மானமாக எடுத்து அதிகார சக்திகளுக்கு வழங்கி அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் இதுவே காலத்தின் கட்டாயம்.

தமிழ்த் தலைமைகள் விமர்சனங்களையும் ஏற்றத் தாழ்வுகளையும் விட்டு ஒரு பொதுத் தளத்தில் கலந்துரையாட முன் வரவேண்டும் இதனை தவிர்த்தால் வெளிச் சக்திகள் தங்களது நலன்களை மையமாகக் கொண்டு பல்வேறு தீர்மானங்களை கொண்டு வருவதை தடுக்க யாராலும் முடியாது .

Posted in Uncategorized

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அவசர அழைப்பு

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுக்கு அவசர கூட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் தலைமையில் எதிர்வரும் திங்கட்கிழமை (16) கட்சித் தலைவர்கள் கூட்டம் நடத்தப்படவுள்ளது.

தற்போதைய கொரோனா நிலைமையில் முன்னெடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது.