3 யுவதிகள் உட்பட 155 பேர் கொரோனாவுக்கு பலி!

நாட்டில் நேற்றைய தினம் (12) 155 கொவிட் மரணங்கள் பதிவாகி உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்…

இவர்களில் 30 வயதுக்கு உட்பட்ட 3 பெண்களும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,775 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 347,500 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 304,628 ஆக அதிகரித்துள்ளது.

Posted in Uncategorized

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கியதாக இந்திய ஊடகம் தகவல்!

31 வயதான தமிழகத்தின், மண்டபம் மீனவர் ஒருவர் புதன்கிழமை கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது இலங்கை கடற்படையின் தாக்குதலில் காயமடைந்துள்ளார் என த இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கோவில்வாடி பகுதியில் இருந்து நேற்று முன்தினம் 200 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் வடக்கு கடல் பகுதியான பாக்ஜலசந்திக்கு மீன்பிடிக்க சென்றனர்.

அவர்கள் இந்திய கடல் எல்லை அருகே மீன் பிடித்தபோது ரோந்துகப்பலில் இலங்கை கடற்படையினர் அங்கு வந்து, மண்டபம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தடுத்துள்ளனர்.

அத்துடன் இலங்கை கடற்படையினர் கண்ணாடி போத்தல்கள் மற்றும் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதுடன், சில படகுகளின் மீன்பிடி வலைகளையும் வெட்டி கடலில் வீசியதாக இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்கும் திட்டத்தை நிறுத்தியது ஸ்காட்லாந்து காவல்துறை!

உலகளாவிய கண்காணிப்பு குழுக்களின் விமர்சனங்கள் காரணமாக, இலங்கையின் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கான சர்ச்சைக்குரிய திட்டத்தை ஸ்காட்லாந்து காவல்துறை நிறுத்தியுள்ளது.

டைம்ஸ் யுகே இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

நியூயார்க்கை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம், பொறுப்பு மற்றும் சீர்திருத்தத்தில் முன்னேற்றம் ஏற்படும் வரை இலங்கைக்கான உதவித் திட்டங்களை நிறுத்தி வைக்க, கடந்த வாரம் ஸ்கொட்டிஷ் தேசியப் படையிடம் கோரியிருந்தது.

சட்டவிரோத கொலைகள், சித்திரவதைகள் மற்றும் தன்னிச்சையான தடுப்புக்காவல் உள்ளிட்ட தொற்றுநோய்களின் போது இலங்கையில், காவல்துறை துஷ்பிரயோகங்கள் அதிகரித்திருப்பதாக உலகளாவிய கண்காணிப்பு அமைப்பு, குற்றம் சுமத்தியிருந்தது.

நல்லூர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம்: மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல்

நல்லூர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம், இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமான குறைந்தளவானோர் மாத்திரமே பூஜைகளில் பங்கு கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நல்லூர் ஆலய முன்வாசலில், ஆலய நிர்வாகத்தினரின் உத்தரவில் பொலிஸாரின் பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கொடியேற்ற நிகழ்வினை, பொதுமக்கள் பார்ப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

ஆகவே, இந்த செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இன்று நள்ளிரவு முதல் 2 வாரங்களுக்கு மாகாணங்களுக்கு இடையேயான பயணக்கட்டுப்பாடு அமுல்

மாகாணங்களுக்கிடையேயான பயணக் கட்டுப்பாடுகள் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய இன்று நள்ளிரவு முதல் 2 வாரங்களுக்கு மாகாணங்களுக்கு இடையான பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய மாகாணங்களுக்கு இடையேயான பொதுப் போக்குவரத்து சேவைகள் இன்று நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மாகாணங்களுக்கு இடையேயான அத்தியாவசிய சேவைகள் மாத்திரமே முன்னெடுக்கப்படவுள்ளன.

Posted in Uncategorized

இன, மத பேதமின்றி கறுப்புக் கொடியை ஏற்றுங்கள் ; சர்வதேசத்தையும் நாட தயாரகவுள்ளோம் – பேராயர்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு சூழ்ச்சி நடைபெற்றது போலவே, அந்த தாக்குதலுக்கு தொடர்பானவர்களை தண்டிப்பதை தவிர்ப்பதற்கும் சூழ்ச்சி நடைபெற்று வருகிறது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான  விசாரணை நடத்திய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாது, அதனை ஆராய்வதற்கு ஒரே கட்சியைச் சேர்ந்த ஆறு அமைச்சர்கள் கொண்ட  உப குழுவொன்றை நியமித்திருப்பது நியாயமானது இல்லை என கொழும்பு மறை மாவட்ட ‍பேராயர் கர்தினால் மெல்கம்  ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

எதிர்வரும் 21 ஆம் திகதியன்று தேவாலயங்கள்,  வீடுகள், கடைகள்,  வாகனங்கள் ஆகியவற்றில் கறுப்பு கொடி ஏந்துமாறு இன,மத, மொழி பேதமின்றி சகலரையும் ஒன்றிணையுமாறு ஆண்டகை சகலருக்கும் அழைப்பு விடுத்தார்.

படிப்படியாக நாம் உள்நாட்டுக்குள்ளேயே எமது எதிர்ப்புக்களை தெரிவித்து வந்துள்ளபோதிலும், இனிவரும் காலங்களில் சர்வதேச ரீதியாக தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு நாம் தயாரகவுள்ளதாகவும்  ஆண்டகை குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில்  கொழும்பு பேராயர் இல்லத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின்‍போதே ஆண்டகை மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

” முழு நாட்டையும் சோகத்தில் ஆழ்த்திய உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று 2 ஆண்டு காலத்தை கடந்திருப்பினும் , அதன் பின்னாடியிருந்த சூழ்ச்சிக்காரர்களை இதுவரை கண்டறியாது இருப்பது கவலையளிக்கிறது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்த சுழ்ச்சி இடம்பெற்றது போலவே குற்றவாளிகளை தண்டிப்பதை தவிர்க்கவும் சூழ்ச்சி நடைபெற்று வருகிறது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான  விசாரணை நடத்திய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாது, அதனை ஆராய்வதற்கு ஒரே கட்சியைச் சேர்ந்த ஆறு அமைச்சர்கள் கொண்ட  உப குழுவொன்றை நியமித்திருப்பது நியாயமானது இல்லை.  இதன்படி பார்த்தால் ஜனாதிபதி ஆணைக்  குழுவையும் மீறிய ஓர் குழுவாகவே இந்த நியமனம் உள்ளது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள விடயங்களுக்கு அமைவாக குறிப்பிடப்பட்டுள்ள நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி கடந்த ஜூலை மாதம் 13 ஆம் திகதி ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தோம்.

இருப்பினும், அந்தக் கடிதத்துக்கு முறையான பதில் எமக்கு கிடைக்கவில்லை. அதற்கான தகுந்த மறுமொழி எமக்கு கிடைக்காமை எமக்கு வருத்தமளிக்கிறது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் எமக்கு திருப்தியில்லை.

முழு நாட்டையும் சோகத்தில் ஆழ்த்திய கொடூரச் சம்பவத்துக்கு ஜனாதிபதி பதிலளிக்காது, ஜனாதிபதி செயலகத்தின்  நீதி பிரிவின் பணிப்பாளர் பதில் அனுப்பியுள்ளமை வருத்தமளிக்கிறது. அந்த பதில் கடிதத்தில் ஜனாதிபதியோ, ஜனாதிபதி செயலாளரோ கையொப்பமிடாது,  ஜனாதிபதி செயலாளருக்காக என குறிப்பிட்டு ஜனாதிபதி செயலகத்தின்  நீதி பிரிவின் பணிப்பாளரான சட்டத்தரணி ஹரிகுப்த ரோஹனதீரவினால்  கையொப்பமிட்டு பதில் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை முறையானதல்ல.

மூன்று பக்கங்களைக் கொண்ட அந்த கடிதத்தில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின்  விசாரணை அறிக்கை எப்போது வெளியிடப்பட்டது, யார் யாருக்கு எந்தெந்த திகதிகளில் சமர்ப்பிக்கப்பட்டது என்பதே அதிகமாக குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, ஏற்றுக்கொள்ளக்கூடிய முறையான பதில் எதுவும் அந்த கடிதத்தில் குறிப்படப்படவில்லை. மேலும், அந்த கடிதத்தில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் கூறப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவது பற்றி‍யும் குறிப்பிடப்படவில்லை. ஆகவே, இந்த பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி போதிய கவனம் செலுத்தவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.

நாட்டில் கொரோனா  அச்சுறுத்தல் அதிகரித்த வருவதால் நாம் பாரியளவிலான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்த நினைக்கவில்லை.

எனினும், எதிர்வரும் 21 ஆம் திகதி ஆலயங்களில், வீடுகளில், வேலைத்தளங்களில், வாகனங்களில் கறுப்புக் கொடி ஏந்துவதற்கு இன, மத, மொழி தாண்டி சகலருக்கும் அழைப்பு விடுக்கிறோம்.

படிப்படியாக நாம் உள்நாட்டுக்குள்ளேயே எமது எதிர்ப்புக்களை தெரிவித்து வந்துள்ளபோதிலும், அவற்றுக்கு பதில் எமக்கு கிடைக்காமல் போனால் நாம் சர்வதேசத்தை நாடுவோம். எமக்கு கத்தோலிக்கத் திருச்சபையானது சர்வதேச  இவ்விடயம் தொடர்பில் பரிசுத்த பாப்ரசருக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளோம். தொடர்ந்தும்  இனிவரும் காலங்களில் சர்வதேச ரீதியாக தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு நாம் தயாரகவுள்ளோம்.

தற்போது நாட்டில் கொவிட் 19 கொரோனா தொற்று அச்சுறுத்தலை ஏற்பட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தால் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலை கட்டுப்படுத்த முடியாமல் போனது, மேலும், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் தொடர்புப்பட்டவர்களை கண்டறிந்து சட்டத்துக்க முன்பாக நிறுத்துவோம் என ஆட்சி பீடமேறிய இந்த அரசாங்கமானது உயிர்த்த ஞாயிறு தின குற்றவாளிகளை கண்டறிய முடியாமல் இருப்பது போலவே, கொரோனா தொற்றையும் கட்டுப்படுத்த முடியாதுள்ளது”என்றார்.

அரசு நல்லெண்ண நம்பிக்கையை வெளிப்படுத்தினாலே பேச்சுவார்த்தை ரெலோ வின் நிலைப்பாடு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற வேண்டுமாக இருந்தால் நிபந்தனையின் அடிப்படையில், ஒரு நல்லெண்ண முயற்சியாக அமைய வேண்டும் எனத் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று(12) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கத்திற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற உள்ளதாக அண்மைக்காலமாகச் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்குப் பின்னடைவை எதிர் நோக்கப்போவதில்லை.

ஆனால் கடந்த கால அனுபவத்தை வைத்துக்கொண்டு நாங்கள் அரசுக்கு சில நிபந்தனைகளை விதிப்பதன் ஊடாக, அரசாங்கம் எங்களுடன் பேசுவதற்கு ஒரு நல்லெண்ண முயற்சியாக சில விஷயங்களை முதலிலே மேற்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை நாங்கள் விதிப்பது நன்றாக அமையும் என உங்களுடைய கட்சி கருதுகிறது.

அந்த வகையில் இன்று ஐ.நா.தீர்மானங்கள் குறிப்பாக வடக்கு – கிழக்கில் நடைபெறுகின்ற நில அபகரிப்பு, மக்களின் அன்றாட வாழ்க்கை மிக மோசமான நிலை காணப்படுகின்ற நிலையில்,காணிகள் சொந்தமான நிலையில் இல்லை.

ஒவ்வொரு திணைக்களத்தினூடாகவும் எமது நிலங்களை பறிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள நினைக்கும் அரசாங்கம் முதன் முறையாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கின்ற போது நல்லெண்ண முயற்சியாக சில விடையங்களைச் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

13 ஆவது திருத்தச்சட்டத்தை அதிகாரங்களுடன் மாகாணசபை முறைமையில் இருக்கிற அதிகாரங்களுடன் செயற்படுவதற்கான ஆணையை அரசாங்கம் பிறப்பிக்க வேண்டும்.

அரசியல் கைதிகள் குறைந்த எண்ணிக்கையில் இருக்கிறார்கள். அவர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும். நில அபகரிப்பு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

அபகரித்த நிலங்களை விட்டுக் கொடுக்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பது எமது கோரிக்கையாக உள்ளது. அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைக்கின்ற போது நாங்கள் பேசத் தயாராக இருக்கிறோம்.

கடந்த கால அனுபவங்களைக் கொண்டு இன்று பலர் விமர்சிக்கிறார்கள். இலங்கை அரசாங்கத்திற்கு ஐ.நா.சபையிலே காலக்கெடு எடுத்துக் கொடுத்துள்ளதாகக் கூறுகிறார்கள்.

இவ்வாறு பல்வேறு விடயங்களைக் குற்றச்சாட்டாக, முன்வைக்கின்ற சூழ்நிலையில், உலக நாடுகள் இன்று உள்ள சூழ்நிலையில் எங்களுக்கு உள்ள பிரச்சினைகளைச் சாதகமாகக் கொண்டு வருகின்ற சூழலைக் கொண்டு வருகின்ற ஒரு நிலையோடு இந்த விடயத்தை நாங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.

பேச்சுவார்த்தை என்று வருகின்ற போது இந்திய அரசுடன் இணைந்த ஒரு செயல்பாட்டைச் செய்வதன் ஊடாகத்தான் வெளிப்படைத் தன்மை உருவாகும். அந்த அடிப்படையில் அரசாங்கத்திற்கு நிபந்தனை வைக்கின்றோம்.

முன் வைத்த விடயங்களில் நல்ல சமிக்ஞையைக் காட்ட வேண்டும். அவ்வாறு இல்லாமல் நாங்கள் சந்திப்பதன் ஊடாக இன்று இருக்கின்ற ஐ.நா சபை தீர்மானத்தின் நிபந்தனைகள் மழுங்கடிக்கக் கூடிய வகையில் அரசாங்கம் எதிர் கொள்ளுகின்ற உலக நாடுகளின் அழுத்தங்களை நாங்கள் இல்லாமல் செய்கின்ற சூழ்நிலையை ஏற்படுத்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் சந்தர்ப்பத்தை வழங்கக் கூடாது என்பதே எமது பிரதான நோக்கம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

வெளிவிவகார அமைச்சின் அனுமதியின்றி இலங்கையர்கள் நாடு திரும்ப முடியும்

வெளிவிவகார அமைச்சின் அனுமதியின்றி இலங்கையர்கள் நாடு திரும்ப முடியும் என சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இலங்கை வரும் வெளிநாட்டு பயணிகளுக்காக வெளியிடப்பட்டுள்ள புதிய வழிகாட்டல் கோவையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்ட இலங்கையர்கள் நாடு திரும்பும்போது, வெளிவிவகார அமைச்சு மற்றும் சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் அனுமதியை பெறவேண்டிய அவசியம் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அவர்கள் நாட்டை வந்தடையும்போது விமான நிலையத்தில் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

எச்சரிக்கை! புதிய உச்சத்தை தொட்ட கொரோனா மரணங்கள்!

நாள் ஒன்றில் பதிவான அதிகப்படியான கொவிட் மரணங்கள் நேற்றைய தினம் பதிவாகி உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 156 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் அவர் உறுதிப்படுத்தினார்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,620 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 344,499 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 302,455 ஆக அதிகரித்துள்ளது.

Posted in Uncategorized

கண்டி எசலா பெரஹரா நாளை முதல் ஆகஸ்ட் 23 வரை

2021 கண்டி எசலா பெரஹெரா நாளை தொடங்கி ஆகஸ்ட் 23 வரை கண்டி, தலதா மாளிகையில் நடைபெறும்.

இவ் ஆண்டு கண்டி எசலா பெரஹரா இலங்கையில் கொவிட் பரவல் காரணமாக பார்வையாளர்களின் பங்கேற்பின்றி நடைபெறும்.

100 யானைகள் மற்றும் நடனக் கலைஞர்கள் உட்பட சுமார் 5,600 பாரம்பரிய கலைஞர்கள் ஊர்வலத்தில் பங்கேற்க உள்ளனர். கண்டி எசலா பெரஹெரா ஊர்வலம் உலகின் பழமையான மத விழாக்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

கண்டி எசல விழாவின் முதல் ‘கும்பல் பெரஹரா’ ஆகஸ்ட் 13 ஆம் திகதி வீதிகளில் அணிவகுத்து, ஆகஸ்ட் 17 வரை ஐந்து நாட்கள் நடைபெறும்.

ஆகஸ்ட் 18 முதல் ‘ரந்தோலி பெரஹரா’ கண்டி வீதிகளில் அணிவகுத்துச் செல்லும். ஆகஸ்ட் 22 அன்று பிரம்மாண்டமான ரந்தோலி பெரஹரா நடைபெறும்.

தண்ணீர் வெட்டும் விழா மற்றும் பகல் ஊர்வலம் ஆகஸ்ட் 23 அன்று நடைபெறும், அதன்பிறகு இந்த ஆண்டின் கண்டி எசல பெரஹரா வெற்றிகரமாக நிறைவடைந்தது என்று அறிவிக்கும் நிருபம் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படும்.

கொவிட் காரணமாக அனைத்து ஊர்வலங்களும் பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெறும்.